Monday, April 1, 2019

தண்ணீரில் இருந்து வெளிவந்த தூபி -மக்கள் படையெடுப்பு…!

கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளது.

அண்மைக்காலமாக மலையகத்தில் வரட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியமை யாவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் தற்போது நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுவதுடன் அதனை பார்வையிட பொது மக்கள் வருகை தருகின்றனர்.
















Read more...

Sunday, March 31, 2019

சர்வதேச போர் விதிமுறைகளை படையினரிலும் பார்க்க புலிகளே மீறியுள்ளனர். சுமந்திரன்

ஐநாவின் அறிக்கையில் படையினர் மீது 5 குற்றச்சாட்டுக்களும் புலிகள் மீது 6 குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளதாகவும் போாின் இறுதியில் சிறிலங்கா இராணுவம் மட்டுமல்ல தமிழீழ விடுதலை புலிகளும் போா் குற்றங்கங்களை செய்துள்ளமையினாலேயே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவேண்டும், என தாம் கேட்பதாக சிறிலங்காவின் நாடமாளுன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா்.

மேலும், இந்த விடயத்தில் உண்மை நிலவரம் சர்வதேச விசாரணையின் ஊடாகவே வெளிவரும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,“இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ள நிலையில், ஏன் ஒரு தரப்பினர் மீது மற்றும் குற்றம் சுமத்த வேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளன. அது சரியானது, நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு அறிக்கையில், இராணுவத்துக்கு எதிராக 5 குற்றங்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக 6 குற்றங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதாவது, சர்வதேச போர் விதிகளை மீறியதாகவே இந்தக் குற்றங்கள் சுமத் தப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் ஒரு சில தலைவர்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனாலேயே, நாம் உண்மை அறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதன் ஊடாக உண்மை வெளிவந்தால் பாதிக்கப்பட்ட இரண்டு தரப்பினரும், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்வொன்றை மேற்கொள்ள முடியும். இந்த குற்றச்சாட்டானது இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானது என தமிழர்கள், நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது அப்படியானதல்ல. உண்மை வெளிவந்தால் மட்டுமே யார் குற்றவாளிகள் என்பதை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். இதனை நாம் வடக்கிலும் தெரிவித்துள்ளோம். யுத்த காலத்தின்போது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளமை உண்மையான ஒரு விடயமே.

இறுதி யுத்த காலத்தின்போது, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இராணு வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து இதுவரை எந்தவொரு விசாரணைகளும் இடம்பெறவில்லை. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மட்டும்தான் தற்போது விசாரணைகள் நடக்கின்றன. குறித்த 11 பேரும் விடுதலை புலி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால்தான் இந்த விசாரணை நடக்கிறது என சிலர் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடயத்திற்கு தீர்வென்ன? இதற்காகத் தான் நாம் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Read more...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3 வை எல் எஸ் ஹமீட்

Counter Terrorism Bill - குற்றங்களின் வரையறை- பிரதான அம்சங்கள்

இலகு வாசிப்பிற்காக தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம் -PTA என்றும் கொண்டுவரப்பட இருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் CTA என்றும் குறிப்பிடப்படும்.

தற்போதைய PTA யில் குறைவான எண்ணிக்கையான குற்றச் செயல்களே பயங்கரவாத குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனாலும் அவை விரிவான அர்த்தமுடையனவாக இருப்பதால் அதற்குள் பலவகைக் குற்றங்களும் உள்ளடங்கும் சூழ்நிலை அதை எதிர்ப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

புதிய CTA குறிப்பிடுகின்ற சொற்பதங்கள் ஓரளவு விரிவு குறைந்த நேரடியானவை என்பது சற்று முன்னேற்றகரமானபோதும் அதிகமான செயல்கள் பயங்கரவாத செயல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் பிரிவுகள் 3,6,7,8,9,10, 13,14 என்பன முக்கியமானவைகளாகும். அதேநேரம் தெளிவு குறைந்த விரிவான குறிப்பிடுதல்கள் CTA இல்லை என்பதல்ல.

இங்கு புரிந்துகொள்ள வேண்டியது விரிவும் தெளிவின்மையும் அதிகரிக்கும்போது ஆபத்து கூடுகின்றது. குறையும்போது குறைகின்றது. காரணம் விரிவின் காரணமாக அல்லது தெளிவின்மை காரணமாக பல சந்தர்ப்பங்களில் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ உண்மையில் அந்த வரையறைக்குள் வராத குற்றங்களையும் பயங்கரவாத குற்றங்களாக கருதி கைதுசெய்யப்படலாம்.

இவை எல்லாவற்றையும் குறிப்பிடுவது புரிதலுக்கும் சிரமமாக இருக்குமென்பதால் அப்பாவிகள் சிக்கவைக்கப்படக்கூடிய முக்கியமான ஒரு சில பிரிவுகள் மாத்திரம் இங்கு குறிப்பிடப்படுகின்றன.

CTA, s 3 (1) இல் உப பிரிவு (2) இல் குறிப்பிடப்பட்ட செயல்களை

a)ஒரு மக்கள் தொகையை பயமுறுத்தும் எண்ணத்துடன் - with the intention of intimidating a population
b) இலங்கை அரசாங்கத்தை பிழையாக அல்லது சட்டவிரோதமாக ஒரு செயலைச் செய்விப்பதற்காக அல்லது செய்யாமல் இருக்கவைப்பதற்காக வற்புறுத்தும்/ பலவந்தப்படுத்தும் நோக்கத்துடன் ......

இவ்வாறான பல நோக்கங்களுடன்

3(2)- a) கொலை, கொலை முயற்சி, பாராதூரமாக காயப்படுத்தல்.......
b) ஒரு மனிதனின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் - endangering the life of any person.....
C) தனியார் அல்லது பொதுச் சொத்துக்கு, பொது இடங்களுக்கு, அரச/ தனியார் போக்குவரத்திற்கு பாரதூரமான சேதம் விளைவித்தல்....
e) அரச/ தனியார் சொத்துக்களை கொள்ளையடித்தல், பறித்தல், திருடுதல்
f) பொதுமக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல்.


இவ்வாறு மேற்சொல்லப்பட்ட பிரிவுகளில் பல குற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அடுத்தடுத்த தொடர்களில் இன்னும் சிலவற்றைப் பார்க்கலாம். இக்குற்றங்களைக் கையாள்வதற்கு நாட்டில் சுமார் 15 சட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறிருந்தும் இந்த சட்டம் எதற்காக? இதுதான் இங்கு எழுகின்ற பிரதான கேள்வி.

இந்த சட்டம் தேவைப்படுவதற்கான காரணம் அந்த சட்டங்களின்கீழ் இவைகள் சாதாரண குற்றங்களாக கருதப்பட்டு சாதாரண அல்லது குறித்த சில விசேட நடைமுறைகள் பின்பற்று தண்டனைகள் வழங்கப்படும். ஆனால் அச்சட்டங்களின்கீழ் இவற்றை பயங்கரவாதமாக கருதமுடியாது. எனவே, இவற்றைப் பயங்கரவாதமாக கருதி விசேட நடைமுறை பின்பற்றப்பட்டு விசேட தண்டனை வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் தேவைப்படுகிறது.

பயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத சட்டம் எதற்கு? அவ்வாறு என்றாவது ஒருநாள் மீண்டும் பயங்கரவாதம் தோன்றினால் அப்பொழுது ஏன் இந்த சட்டத்தைக் கொண்டுவரமுடியாது? அவ்வாறாயின் இச்சட்டத்தைக் கொண்டுவருவதன்பின்னால் அடக்குமுறை வேறுநோக்கம் அரசுக்கு இருக்கின்றது; என்பதுதான் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் இதனை எதிர்ப்பதற்கு காரணம்.

பயங்கரவாதம் இல்லாத ஶ்ரீமாவின் ஆட்சிக்காலத்திலேயே பல ஆண்டுக்காலம் இந்தநாடு அவசரகால சட்டத்தின்கீழ் ஆட்சிசெய்யப்பட்டிருக்கின்றது. அதன்பின் பயங்கரவாதத்தின் பெயரால் பல ஆண்டுகள் அவசரகால சட்டத்தின்கீழ் ஆட்சிசெய்யப்பட்டிருக்கின்றது.

தற்போது நீண்டகாலம் காரணம் இல்லாமல் அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்த முடியாது. உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் பல எதிர்ப்புகளை அரசு சம்பாதிக்கவேண்டி வரும். குறிப்பாக இலங்கை அரசு ஏற்றுக்கொண்டிருக்கின்ற ICCPR இன்கீழ் அவசரகால சட்டம் தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பாக பல கடுமையான விதிமுறைகள் இருக்கின்றன.

இந்நிலையில் தேவைப்படும்போது அடக்குமுறை ஆட்சிசெய்வதற்கு இச்சட்டம் தேவைப்படுகிறது. அமெரிக்க செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் அமெரிக்காவால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதம்தான் Counter-Terrorism Law. இப்பொழுது எல்லோரும் PTA ஐ நீக்கச் சொல்கிறார்கள்.

இப்பொழுது PTA ஐ நீக்கிவிட்டு சிலகாலம் கழித்து அடக்குமுறை ஆட்சி நடத்தத் தேவைப்படும்போது CTA கொண்டுவந்தால் சர்வதேச/ உள்நாட்டு விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும், பயங்கரவாதம் இல்லாதபோது இந்த சட்டம் எதற்காக என்று.

எனவே, PTA ஐ நீக்குகின்ற கையோடு CTA ஐ கொண்டுவந்துவிட்டால் விசயம் இலகுவாகிவிடும்; என அரசு நினைக்கிறது. சமூகங்களை நீதியாகவும் சமமாகவும் நடத்தும் மன உறுதி அரசிடம் இருந்தால் இந்த சட்டம் எதற்காக?

இந்த சட்டத்தை அரசு நினைத்தால் எப்படியெல்லாம் மக்களை அடக்கியாள பாவிக்கலாம்; இரண்டொரு உதாரணங்கள்.

ஒரு மனித உரிமைகள் அமைப்பு சுட்டிக்காட்டும்போது, மஹிந்த ஆட்சியில் தண்ணீர் மாசுபடுத்தெலுக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் படையினர் துப்பாக்கி சூடு நடாத்தி உயிரிழப்புகள் ரதுபஸ்வெல எனும் இடத்தில் நடந்ததை அறிவீர்கள். இந்த சட்டத்தின்கீழ் அந்த எதிர்ப்பு நடவடிக்கையையும் பயங்கரவாத செயலாக கருதமுடியும். அதேபோல் மீதோட்டமுல்லையில் குப்பைகொட்டுவதற்கெதிராக நடந்த எதிர்பு நடவடிக்கைகளையும் பயங்கரவாதமாக கருதமுடியும்; என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமல்ல, உதாரணமாக, அண்மையில் சாய்ந்தமருதில் ஒரு கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் வாகனம் சேதப்படுத்தப்பட்டமை, அமைப்பாளரின் வீடு தாக்கப்பட்டமைகூட பயங்கரவாத செயற்பாடாக கருதமுடியும். ஏனெனில் ஒரு அரசை ஒரு செயலைச் செய்யவைப்பதற்கு வற்புறுத்துவதற்காக தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை; என்று அதற்கு நியாயம் கூறமுடியும்.

பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்தவரை இச்சட்டம் பெரிதாக பாவிக்கப்படாவிட்டாலும் ஆட்சியாளர் ஒரு இனவாதியாக இருந்தால் சிறுபான்மைகளின் சாதாரண குற்றங்களும் பயங்கரவாதமாக கருதப்படலாம்.

குறிப்பாக, முஸ்லிம்களுக்கு மத்தியில் ஜிஹாத் இருக்கின்றது, அல்கைடா இருக்கின்றது, ஆயுதங்கள் இருக்கின்றன, சம்பிரதாய முஸ்லிம்கள், தீவிரவாத முஸ்லிம்கள் என ஏற்கனவே பிரச்சாரம் செய்கிறார்கள். அந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் எவ்வாறு பாவிக்கப்படலாம்; என சிந்தித்துப் பாருங்கள்.

ஒரே செயல் ஒரு பெரும்பான்மையைச் சேர்ந்தவர் செய்யும்போதும் ஒரு முஸ்லிம் செய்யும்போதும் எவ்வாறு வித்தியாசமாக அணுகப்படலாம்; என்பதற்கு திரு ஜிஹான் குணதிலக அவர்கள் கூறியிருக்கின்ற உதாரணத்தை அடுத்த பதிவில் பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ்.


தொடரும்

Read more...

Saturday, March 30, 2019

தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்ததும் அமைச்சரவை மறுசீரமைப்பு! தேசிய அரசமைக்கும் யோசனை ‘அவுட்’

தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளில் மாற்றம் இடம்பெறாவிட்டால்கூட, விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. ஒரு சில அமைச்சர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் (அரச நிறுவனங்கள்) வழங்கப்பட்டுள்ளன.

மீண்டும் தேசிய அரசமைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்தால்கூட அமைச்சுப் பதவி வழங்கமாட்டார் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எனவே, ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசமைத்தால்கூட, ஐ.தே.க. பக்கமுள்ள சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால், தேசிய அரசமைக்கும் யோசனையை ஐ.தே.க. கைவிட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.தே.க. பக்கமுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலரும், சு.க. உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

“தேசிய அரசு அமைக்கப்படாது. எனினும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஐ.தே.கவால் முன்மொழியப்படும் பெயர்ப்பட்டியலை ஏற்கவேண்டும்” என்று இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

இதன்படி பியசேன கமகே, விஜித் விஜதமுனி சொய்சா, சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது. இந்திக்க பண்டார, மனுஷ நாணயக்கார உள்ளிட்ட மேலும் சிலருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி கையளிக்கப்படவுள்ளது.

இதற்காக தற்போது இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பதவிகளை வகித்திருப்பவர்களிடமிருந்து விடயதானங்கள் கழற்றப்பட்டு, அவை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீளப்பெறும் வகையிலேயே ரிஷாத் பதியுதீனுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நல்லிணக்கத்தை வாழ வைக்கும் மனிதர்கள் வாழாத தீவு.

இராமேஸ்வரத்துக்கும் - இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் அமைந்த மக்கள் வாழாத ஒரு தீவுதான் கச்ச தீவு. ஆனால் மக்கள் வாழாவிடினும் ஆண்டுக்கு ஒரு முறை இங்கு மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அதுதான் இங்குள்ள சிறப்பம்சமும் கூட.

நாடு கடந்து, இனம், மொழி பேதம் மறந்து இங்கு ஒன்று கூடுகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

ஐசக் ஸ்டீபன்

“ஐந்து வருடங்களாக இங்கு நான் வந்து போகிறேன். ஒவ்வொரு வருடமும் இங்கு வருதால் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆலயத் திருவிழா ஏற்பாடுகள் எல்லாம் நல்ல முறையில் இருக்கிறது. இலங்கை கடற்படை, பொலிஸ் எல்லாரும் எங்களுக்கு நல்ல உதவி செய்றாங்க. இலங்கை மக்கள் சாப்பாடு, குடிநீர் எல்லாம் தந்து எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். உதவி செய்யும்சிறந்த மனப்பான்மை இவர்களுக்கு இருக்கிறது.எங்களுக்கிடையே நல்ல உறவு இந்த இரண்டு நாட்களிலும் வளர்ந்திருக்கிறது.”

என்று கூறுகிறார் இந்தியா, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐசக் ஸ்டீபன். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ள வந்தவரே இவ்வாறு தெரிவித்தார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த மார்ச் 15 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அன்று மாலை சிலுவை பாதையும் இடம்பெற்றது. அத்துடன் சனிக்கிழமை (16) காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகள் நடைபெற்றதுடன் கொடி இறக்கமும் இடம்பெற்றது.

சொகைனா பெஸ்லிக்கா

“திருநாள் காலங்களில் கடற்படையினர் எங்களுக்கு நல்ல உதவி செய்து கொண்டு வருகிறார்கள். போன வருடம் கச்சத்தீவு திருநாளுக்கு வந்த இந்திய நண்பர்கள் இந்த வருடமும் வந்திருந்தார்கள். அவர்களோடு கதைப்பதற்கான வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் போன வருடம் இலங்கையர்களுக்கு அந்த அளவு செக் பண்ணல. ஆனால் இந்த வருடம் செக்கிங் கொஞ்சம் கூடுதலாக இருந்ததாகத்தான் நான் உணர்கிறேன். போன வருடத்தைவிட இந்த வருடம் சனம் கூடுதலாக வந்ததாலோ என்னவோ தெரியாது இந்த வருடம் செக்கிங் கூடுதலாக இருந்தது.” என்று கூறினார் பேசாலை, மன்னாரைச் சேர்ந்த சொகைனா பெஸ்லிக்கா என்பவர்.

வேறுபாடுகள் மறந்து எல்லோரும் அங்கு ஒன்று கூடுவதை சொகைனா பெஸ்லிக்காபோன்றோர்விரும்புகிறார்கள்.

இந்திய இராமேஸ்வரத்துக்கும் - இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் அமைந்த 285 ஏக்கர் பரப்புள்ள ஒரு தீவுதான் கச்சத்தீவு. 1974 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த கச்சத்தீவு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு சொந்தமாகியுள்ளது.

அந்தோனியார் ஆலயம்

இந்த தீவில் மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. புகழ்பெற்ற அந்தோனியார் ஆலயம் ஒன்று இங்கு உள்ளது. இங்கு மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட தேவாலயம் தான் இது.

இலங்கையில் யுத்தம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இருநாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சதீவு 1974 ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு சொந்தமானபின் வழமைபோல் கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இந்தியர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. எனினும் யுத்தம் முடிவுற்ற பிற்பாடு கச்சத்தீவு ஆலய திருவிழா மிகவும் சிறப்பாக படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜேசு மரியான்

“ஒவ்வொரு வருடமும் அந்தோனியார் கோயிலுக்கு வருகிறோம். போன வருடத்தை விட இந்த வருடம் ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்னும் பல மக்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் மிகவும் விரிவாகவும் சிறப்பாகவும் தொடங்கியிருக்க வேண்டும் என்பதுதான் எங்களது அவாவாகும்.” என்று கூறுகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜேசு மரியான்.

கச்சத்தீவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 2,135 பேர் கலந்துகொண்டதாக கடற்படை தெரிவித்தது. 200க்கும் மேற்பட்ட மதகுருமார்களும் அருட் சகோதரிகளும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.



“கச்சதீவு அந்தோனியர் ஆலயத்துக்கு 65 விசைப் படகுகள் வழியாகவும், 15நாட்டுப் படகுகள் வழியாகவும் திருவிழாவைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வருகை தந்தோம். இத் திருவிழாவுக்கு கிறிஸ்த்தவர்கள், கிறிஸ்த்தவர் அல்லாதவர்கள், தமிழ் மொழி பேசுபவர்கள், சிங்கள மொழி பேசுபவர்கள் என எல்லா பிரிவினர்களும் வருகை தந்து சிறப்பிக்கிறார்கள். இங்கு ஒற்றுமை மென்மேலும் வளர்வதற்கான சூழல் ஏற்படுகிறது. அதற்கு கச்சதீவு அந்தோனியார் ஆலயம் ஒரு தளமாக இருக்கிறது என்பதில் பெருமைப் படுகிறோம்.” என்று இந்தியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.

கடற்படையின் அதிவேக படகான டோராவின் மூலம் காங்கேசன்துறையில் இருந்து கச்சதீவுக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் உட்பட விசேட பிரமுகர்கள் அழைத்துவரப்பட்டனர். ஆயர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையைத் தொடர்ந்து திருப்பலி பூஜை இடம்பெற்றது. இலங்கை சார்பில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்தியாவின் சார்பில் இராமேஸ்வரம் சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் லூதர் ராஜாவும், விசேடமாக அருட்தந்தை ரொபின்சன் விஜயசிங்க சிங்கள மொழியிலும் திருப்பலி பூசையை நடத்தினர்.

சானக்க குடும்பத்துடன்

“நான் முதன் முதலாக அந்தோனியர் ஆலயத்திற்கு வருகிறோன். மன்னாரில் உள்ள ஒரு தமிழ் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி அவருடைய ஒத்துழைப்புடன் தான் இங்கு வந்தோம். இந்தப் பயணம் எமக்கு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. தமிழ், சிங்களம், இந்தியர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக இந்த இடத்தில் ஒன்று கூடியிருப்பதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த ஒற்றுமையை பார்க்கும் போது இது எப்போதோ நம்மிடத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற கவலை எனக்கு இருக்கிறது.” என்று கூறினார் நீர்கொழும்பைச் சேர்ந்த சானக்க.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து 6,500பேர் வந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள பக்தர்கள் கூடுதலாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுசானி பெரீனா

“நாங்கள் மன்னாருக்கு வந்து அங்கிருந்து சிறிய படகொன்றில் இங்கு வந்தோம். இங்கு எல்லோரையும் காண்கின்ற போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த நிகழ்வு எங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துகிறது. எல்லோரோடும் நன்றாக பலகும் சந்தர்ப்பம் இங்கு ஏற்படுகிறது.” என்று கூறினார் சிலாபத்தைச் சேர்ந்த சுசானி பெரீனா.

போல் ஜோசப்

இதேவேளை ஆலய திருவிழாவுக்கு நீர்கொழும்பில் இருந்து வருகை தந்த இன்னுமொருவரான போல் ஜோசப் இவ்வாறு கூறுகிறார்; “கடற்படை எங்களுக்கு போதிய வசதிகளை செய்து தந்த்து. நல்லமுறையில் ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் இங்கு போதியளவு வசதிகளை இன்னும் அதிகரிக்கவேண்டியுள்ளது. மக்கள் அதிகம் பேர் வந்து தங்கி தங்களுடைய கடமைகளைச் செய்வதற்கான வசதிகள் குறைவு. வந்தவுடனே வழிபாடுபளைச் செய்து விட்டு உடனே போக வேண்டிய நிலைமைதான் இங்கு காணப்படுகிறது. மடுவில் அவ்வாறு இல்லை. மூன்று நாள் நிற்பார்கள். திருநாள் முடிந்து அடுத்த நாள் தான் போவார்கள். ஆனால் இங்கு முடிந்தவுடனே போக வேண்டும். ஏனென்றால் வசதிகள் குறைவு என்ற படியால் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்நிகழ்வுக்குகடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய அதேநேரம் பிரதேச செயலகம், பிரதேச சபை இவ் விடயத்தில் கவனமெடுத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.” என்றார்.

யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற இந்த கச்சதீவு, காங்கேசன்துறையிலிருந்து 90 கிலோமீற்றர் தொலைவிலும் நெடுந்தீவிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவிலும் சர்வதேச கடல் எல்லையிலிருந்து 1.8 கிலோமீற்றர் தொலைவிலும் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 19.3 கிலோமீற்றர் தொலைவிலுமே இந்தத் தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா

"கச்சத்தீவு நிகழ்வு வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு பங்களிப்பு செய்ததில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இம்முறை 8,500 யாத்திரிகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடற்படை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்கள் இதன் மூலம் பூரண பயனை பெற்றிருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தீவுக்கு வருவது தொடக்கம் அவர்கள் மீண்டும் கரைக்கு செல்லும் வரையான வசதிகளை கடற்படை ஏற்படுத்தி கொடுத்துள்ளது."

"2010ஆம் ஆண்டில் இருந்து கச்சத்தீவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2015ஆம் ஆண்டில் ஆலயத்திற்கு தேவையான புதிய கட்டிடங்களை கடற்படை நிர்மாணித்து கொடுத்திருக்கிறது. கடற்படையின் உதவியில்லாமல் நிலப்பரப்பிலிருந்து நெடுந்தூரத்திலுள்ள இந்த தீவுக்கு பக்தர்கள் வருகை தருவது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த உற்சவத்துக்காக 5.1 மில்லியன் ரூபா நிதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கிடைக்கப் பெற்றது. இந்த நிகழ்வுக்காக கடற்படை பாதுகாப்பு நடவடிக்கை, சுத்தப்படுத்துதல், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என பல வேலைத்திட்டங்களை பல குழுக்களாக நின்று மேற்கொண்டனர். இங்கு குடிநீர் உட்பட பல தேவையான பொருட்களை நாம் வெளியில் இருந்து கொண்டு வர வேண்டி உள்ளது. இந்த நிகழ்வுக்காக கடற்படை அதிகாரிகள் உட்பட 500 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்." என்றார்.

மூன்று தசாப்தங்ளாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் இவ்வாறான நிகழ்வுகளில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்று அம் மக்கள் தடைகளின்றி தங்களிடையே பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகியிருக்கின்றன. இவ்வாறான சமய நிகழ்வுகள், இன, மத வேறுபாடுகளின்றி மக்கள் ஒன்று கூடுவதற்கும் மக்கள் மதங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.












Read more...

Friday, March 29, 2019

ஐ.தே.கவின் அந்த மூவரில் யார் ஜனாதிபதி வேட்பாளர்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை அக்கட்சிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது. பின்வரிசை மந்திரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் தலைவர் ரணிலை எதிர்க்கும் அதேநேரத்தில் சஜித் பிறேமதாஸவை தெரிவாக முன்வைக்கின்றனர்.

இந்த இருவரையும் எதிர்ப்போரும் கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என நினைப்போரும் கரு ஜெசூரியவை விரும்புகின்றனர்.

எது எவ்வாறாயினும் வழமைபோல் இம்முறையும் பரந்தரப்பட்ட கூட்டணியின்கீழ் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கே ஐக்கிய தேசியக்கட்சி தயாராகிவருகின்றது. மேதினக் கூட்டத்தின்போது கூட்டணி குறித்த அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது பொதுவேட்பாளரை களமிறங்குவதற்காக விட்டுக்கொடுப்புகளைசெய்த ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை தியாகத்துக்கு தயார்நிலையில் இல்லை.

தமது கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்க வேண்டும் என்பதில் ஐ.தே.க. எம்.பிக்கள் உறுதியாக நிற்கின்றனர். தமது கோரிக்கைக நியாயம்தான் – அதில் மாற்றம் செய்யமுடியாது என்பதற்கு பொதுவேட்பாளராகக் களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரியை உதாரணம் காட்டுகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என அவருக்கு சார்பானவர்கள் அறிவிப்பு விடுத்தாலும், அதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே, சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரிய ஆகிய இருவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடும் என கூறப்பட்டாலும், ரணிலே களமிறங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்பதை சஜித் பிரேமதாச வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். சபாநாயகர் கருஜயசூரிய தனது நிலைப்பாட்டை மறைமுகமாக கண்டியில் வைத்து அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இறுதிநேரத்தில் வியூகம் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கதை அடிபடுகின்றது.

Read more...

வடக்கில் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 14 பேருக்கு ஜனாதிபதியினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, (29) இன்று, ஜனாதிபதியின் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோகபூர்வமாக நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் மாவட்ட தலைவர்களுக்கான நியமனத்தின் போது, யாழ் / கிளிநொச்சி மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் யாழ் மாவட்ட தலைவரும், வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினருமான, பொன்னம்பலம் ஆதவன் மற்றும் திருஞானம் ஞானசீலன் ஆகியோர் காங்கேசன்துறை தொகுதியின் இணை அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயராஜா கிங்ஸ்லிஜெயஜீவ், மாரிமுத்து சீவரட்ணம் ஆகியோர் மானிப்பாய் தொகுதியின் இணை அமைப்பாளராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

செல்வநாயகம் கஜந்தன், சாவகச்சேரி தொகுதி அமைப்பாளராகவும், யாழ் மாநகரசபை உறுப்பினர் பாலசிங்கம் சாந்தரூபன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண தொகுதி அமைப்பாளராக செயற்படுவதற்கு, அமைப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வல்லிபுரம் கணேசமூர்த்தி, குணசேகரம் றஜீகரன், சின்னத்துரை உதயசீலன், மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் தில்லைநாதர் தங்கவேலு, ஆகியோருக்கும் யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம் வழங்கப்பட்டிருந்ததோடு, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கந்தையா வைத்தியநாதன், அவர்களுக்கு யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின், கிளிநொச்சி தேர்தல் தொகுதி அமைப்பாளராக சதாசிவம் இராமநாதன் அவர்களும், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் ஹஜ் முகமது ஹபீர்,அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ளனர்.










Read more...

தீவகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இந்தியர்கள் இருவர் கைது. நகைகள் மீட்பு.

வர்த்தக வீசாவில் நாட்டினுள் நுழைந்து பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இரு இந்தியர்களை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் நாரந்தனை பகுதிகளிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் முறைப்பாடுகளை அடுத்து மண்டைத்தீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை பலப்படுத்திய பொலிஸார் இவர்களை மடக்கி பிடித்துள்ளனர்:

புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற இரு இந்திய பிரஜைகள் வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றதை தொடர்ந்து பிரதேச மக்கள் மண்டைத்தீவு பொலிஸ் காவல் அரணுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர். அதையடுத்து செயற்பட்ட பொலிஸ் குழுவினர் இக் கைதினை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வங்கி அட்டைகள் கடவுச்சீட்டுகள் கடவுள் விக்கிரகங்கள் இந்திய நாணயங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

வடபகுதியில் கொள்ளைகள் அதிரித்துள்ள நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாதிருந்த பொலிஸாருக்கு புதிய சவால் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com