Monday, March 18, 2019

கிளிநொச்சியில் நீச்சல் தாடாகத்துடன் கூடிய விளையாட்டு மைதான கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மாலை
3மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர்
கலந்து கொண்டிருந்தவர்கள். இந்தநிலையில் வடமாகாண விளையாட்டுத்தொகுதிகள் கட்டிடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி திறந்து வைத்தார்.

தொடர்ந்து குறித்த விளையாட்டு கட்டிடத்தொகுதியில் உள்ள நீர்ச்சல் தடாகத்தை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.

இதன்போது தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள் மற்றும் ,விளையாட்டு வீர வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர், துடுப்பட்டத்திற்கான பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டது. குறித்த விளையாட்டு மைதானம் வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைககள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த கட்டிட தொகுதிக்கான அடிக்கல் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2011ம் ஆண்டு நாட்டி வைக்கப்பட்டு, பின்னர் வேலைகள் நிறைவடைந்த நிலையில் நீண்ட வருடங்களின் பின்பு நேற்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















Read more...

Sunday, March 17, 2019

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படாமைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே காரணம் - சினம்கொள்கிறார் மஹிந்த

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மீது எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு விரோதமானது என்றும், இந்த வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் பறிபோனதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே எதிர்க்கட்சித்தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு சரிசமனான அபிவிருத்திகளை தனது அரசாங்கம் மேற்கொண்டதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கடன்களுக்கு ஏற்ப அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுப்பதை காணக்கூடிய விதத்தில் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Read more...

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சரித்திர சான்றுகள், அழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான பல சான்றுகள் உள்ளன. எனினும் அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்படுவதுடன், அழிக்கப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடராத வண்ணம், அந்த பகுதிகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை சங்கமன் கண்டி பிரதேசத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் எண்ணிலடங்காத பல புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அச் சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அத்துடன் குறித்த பகுதியில் உள்ள சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ். பத்மநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பகுதிகளில் உள்ள இடங்களை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்திய போதும், அவற்றினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.









Read more...

யாழில் போலி பயணச் சீட்டு முகவர். கட்டுநாயக்கவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பயணிகள் யாழ் பொலிஸ் நிலையத்தில்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சுமார் 14 பயணிகள் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக நேற்று யாழ் பொலிஸ் நிலையத்தில் விமான பயணச் சீட்டு முகவர் ஒருவருக்கு எதிராக சுமார் 35 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேசன் பொப்புயூலர் ட்ரவல்ஸ் என்ற பெயரில் யாழ் நகரில் இயங்கி வந்த குறித்த விமான பயணச் சீட்டு முகவரிடம் வீமானச் சீட்டுக்களை வாங்கிய பயணிகளே இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பணத்தை பெற்று பயணச் சீட்டுக்களை வழங்கிய முகவர் நிலையம், ஆசனப்பதிவுகளை உறுதி (உழககநைஅ) செய்யாது வழங்கியுள்ளது. இவ்வாறு உறுதி செய்யப்படாமைக்கான காரணம் , முகவர் நிலையம் சம்பந்தப்பட்ட ஏயார் லைன்ஸ் களுக்கு பணத்தை செலுத்தாமையேயாகும் என தெரியவருகின்றது.

இதேநேரம் கடந்த இருவாரங்களாக பயணச் சீட்டுக்களை விற்பனை செய்த பயண முகவர் இறுதி நேரத்தில் வாடிக்கையாளருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் ஆசனத்தை உறுதி செய்ய முடியாது போயுள்ளது. எனவே புதிய விமானச் சீட்டுக்கான பணத்தை செலுத்தி விமானச் சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வழங்கிய பணத்தை ஒரு வார காலத்தில் மீள கையளிக்கின்றோம் என தெரிவித்து பல வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாகவும் அறியக் கிடைக்கின்றது.

இவ்விடயம் சம்பந்தமாக பொலிஸார் பயணச் சீட்டு முகவர் நிலையத்திற்கு சென்றபோது, அதன் உரிமையாளர் இல்லாத நிலையில் அங்கு தொழில்புரிந்த யுவதி ஒருவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

பிந்தி கிடைத்த தகவல்களின் பிரகாரம் உரிமையாளரான முகிலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.


Read more...

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தமைக்கான அனைத்து சாட்சியங்களும் உள்ளன - நீதவான் எம்மா ஆர்புத்நட்

கடந்த வருடம் பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்ட பேரணியில் வைத்து, தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பிரிகேடியர் ப்ரியங்க பெனாண்டோ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணை அதிகாரியாக கடமையாற்றிய ப்ரியங்க பெனாண்டோ, கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு சமிக்ஞை காட்டியதாக கூறப்பட்டதுடன், அது குறித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்தன.

இது குறித்து ஏற்கனவே வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு ப்ரியங்க பெனாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது. எனினும் அந்த தீர்ப்பில் பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு இரத்து செய்யப்பட்டது.

எனினும் மேற்படி வழக்கிற்கு தேவையாகவுள்ள அனைத்து சாட்சியங்களும் தன்னகத்தே உள்ளதாக தெரிவித்த நீதவான் எம்மா ஆர்புத்நட், எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Read more...

தொண்டமான் கொக்கைன் பாவிப்பவர். இரத்தத்தை பரிசோதியுங்கள். ரஞ்சன் ராமநாயக்க

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் போதைப் பொருள் பாவிப்பதாகவும் அவர்களின் இரத்தம் பரிசோக்கப்படவேண்டும் என்றும் தொடர்ச்சியாக சர்ச்சையை கிளப்பி வரும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் கொக்கைன் பாவிப்பதாகவும் அவரது இரத்தத்தை சோதனை செய்யுங்கள் என்றும் வேண்டுதல் விடுத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற விவாதங்கள் இடம்பெற்றபோது, பாராளுமன்றிலுள்ள கொக்கைன் பாவிப்பவர்களின் பெயர்களை ரஞ்சன் வெளிவிடவேண்டும் என்று உறுப்பினர்கள் கேலி செய்தபோது, இங்கே முன்னால் இருக்கின்ற தொண்டமானின் இரத்தத்தை பரிசோதியுங்கள் என தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்றில் அமர்ந்திருக்கின்ற 4 பேர் எதனோல் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் என்றும் அவர் கூறினார். அதன்போது அவர்களின் பெயரை வெளியிடுமாறு உறுப்பினர்கள் சதமிட்டபோது, மூவர் பொது எதிரணியினர் என்றும் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறினார்.

பெயர்களை கூறுங்கள் என உறுப்பினர்கள் சத்தமிட்டபோது, எதிரணியை சேர்ந்த வசந்த, ஜோன்சன் பெர்ணாண்டு மற்றும் அருந்திக்க ஆகியோரின் பெயரை வெளியிட்ட அவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரின் பெயரை வெளிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சவேந்திர சில்வா உள்ளிட்ட 67 இராணுவ அதிகாரகளை கைது செய்ய உலக நாடுகள் ஆழுத்தம் கொடுக்க வேண்டுமாம். ஐ.நா ஆணையாளர்

இலங்கையில் இடம்பெற்ற முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறியுள்ளமைக்கான ஆதாரங்கள் உறுதியாகியுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு காரணமான இலங்கை இராணுவத்தின் அப்போதைய தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா, சாகி கால்லகே, கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட 67 இராணுவ உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

இது குறித்து 17 நாடுகளுக்கு அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன் குறித்த நாடுகள், ஒன்றாக இணைந்து மேற்குறிப்பிட்டவர்களை கைது செய்ய, இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் கோரினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை மீது முன்வைத்த பிரேரணையில் இது குறித்த விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் கோரிக்கையை ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா முதலான நாடுகள் புறக்கணித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலில் இலங்கையின் யுத்த விதிமுறைகளை மீறிய அனைவரும், சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த முறையில் விசாரிக்கப்பட வேண்டும். பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more...

வெகு விரைவில் மீன்களுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்படும்

மீன்களுக்கான நிர்ணய விலையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள சந்தைகளில் மாறுபட்ட விலைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுவதைக் அவதானித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள குறிப்பிட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சாதாரண விலையில் மீன்களை விற்பனை செய்வது இதன் நோக்கமாகும்.

Read more...

133 இலட்சம் பெறுமதி கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் பருத்தித்துறை கடற்கரையோரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 88 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 47 மற்றும் 60 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா தொகை, சில நாட்களுக்கு முன்னர், கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இந்த நிலையில் கைதான இருவரிடமும் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


Read more...

அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் - JVP காட்டம்

அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குருநாகல் – தொடம்கஸ்லந்த தொகுதிக்கூட்டத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க , ரணிலின் கொள்ளைக்கு எதிராக மஹிந்தவை நாட்டு மக்கள் நியமிப்பது சரியா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Read more...

நாட்டில் கிட்டத்தட்ட 50 வீதமான போலி ஆவணங்கள் - இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம்

40 முதல் 50 வீதமான காணி உறுதிப்பத்திரங்கள் போலியானவை என கண்டறியப் பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரத் தகவலை
இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம் கண்டறிந்துள்ளது. மக்களின் அத்தியாவசிய உறுதிப்பத்திரங்களான பிறப்புச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் ஐந்தில் ஒன்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் என் சி விதானகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த போலியான பாத்திரங்கள் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பது வங்கிக்கடன்களை பெறுவது உள்ளிட்ட பல தேவைகளுக்காக தயாரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த போலி ஆவணங்களை கண்டறியும் மட்டும் முற்றாக இல்லாது ஒழிக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து காணி, பிறப்புச் சான்றிதழ்களை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கணினி மயமாக்கும் நடவடிக்கை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இதன்படி, பிறக்கும் குழந்தைகளுக்கு இலக்கமொன்று வழங்கப்படுவதுடன், அதனையே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பயன்படுத்துவதற்கும், தேசிய அடையாளஅட்டையை பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுத்தவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

பல மாகாணங்களில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் - இடர்முகாமைத்துவ நிலையம்

நாடுமுழுவதும் நிலவும் வறட்சி காரணாமாக சில மாகாணங்களில் நீருக்கான தட்டுப்பாடு நிலவும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக, இடர்முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. வரட்சியுடனான வானிலையால் பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள், கால்நடைகள், விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல மாவட்டங்களிலும் வரட்சியுடனான வானிலை நிலவுகின்ற நிலையில், இந்த நிலைமை நீடிக்கும் பட்சத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் என இடர்முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் 42 வீதமாக குறைவடைந்துள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 40 அடி வரை குறைவடைந்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில்,குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இடர்முகாமைத்துவ நிலையம் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Read more...

''இலங்கையின் சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கு ஒரு சோதனையான வழக்கு'' - பழமைவாய்ந்த சிந்தனையாளர்

ஹெரிரேஜ் பவுண்டேசனின் ஆய்வாளரும், பழமைவாய்ந்த சிந்தனையாளருமான ஜெப் ஸ்மித் தயாரித்துள்ள ''இலங்கையின் சுதந்திரமான திறந்த இந்தோ- பசுபிக் மூலோபாயத்துக்கு ஒரு சோதனையான வழக்கு'' என்ற தலைப்பிலான அறிக்கையின் படி, இலங்கையில் மீண்டும், ராஜபக்ஸக்கள் ஆட்சிக்கு வந்தால், இலங்கை - அமெரிக்க உறவில் பாரிய முறிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையுடன் பல்வேறுபட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ தொடர்புகளுக்கு அமெரிக்கா அதிகரித்த முன்னுரிமையை அளிக்க வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷ வெளியேற்றப்பட்டதில் இருந்து, இலங்கை – அமெரிக்க உறவுகள், நிமிர்ந்த நடையில் இருந்தன.

இந்த நிலையில் இலங்கையின் ஆட்சியில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து, மீண்டும் ராஜபக்ஸக்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழ்நிலை உருவாகலாம்.

2015 இல் ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியடைந்தாலும், அடுத்து வரவுள்ள தேர்தல்களில் செல்வாக்குமிக்க, பலம் பொருந்திய ராஜபக்ஷ குடும்பத்தினர், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என, பல அரசியல் சிந்தனையாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இது நிறைவேறினால், கடந்த 2015 ஆட்சி மாற்றத்தை அடுத்து ஏற்படுத்தப்பட்ட இலங்கை - அமெரிக்க நல்லுறவில் பல முறிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ராஜபக்ஸக்களின் ஆட்சி அதிகாரம் இல்லாமல் ஆக்கப்பட்ட நாள் முதல், இலங்கை சுதந்திரமான, திறந்த நாடாக மாறியதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில் இலங்கையின் அடுத்த ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றினாலும், இலங்கை - அமெரிக்க நல்லுறவை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஆர்வம் காட்ட வேண்டும் என, தனது அறிக்கையின் மூலம், ஜெப் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

மன்னார் புதைகுழி குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 22 ஆம் திகதி எடுக்கப்படும் - சமிந்த ராஜபக்ச

இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மன்னார் மனித புதைகுழி விவகாரம், அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பெறப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கையின் பின்னர் சற்று, தணிந்துள்ளது. மேற்படி கார்பன் பரிசோதனையின் படி, அவை 1400ம் ஆண்டு முதல் 1650ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மரணித்தவர்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு விடயங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என, பல தொல்பொருள் ஆய்வாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கூறி வருகின்றனர்.

அத்துடன் குறித்த கார்பன் அறிக்கையானது மன்னார் மனித புதைகுழி விடயத்தில் இறுதி முடிவை மேற்கொள்வதற்கான ஒரு ஆவணமாக எந்த சந்தர்ப்பத்திலும் அமையாது என, சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 22ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என, சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே தடயவியல் பரிசோதனைக் குழு ஒன்றும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும், மன்னார் நீதவானை சந்தித்து இதுதொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளனர் என, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more...

யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்காவிட்டால், அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்திருக்கும் என்பதே நிதர்சனம் - மஹிந்த

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். சர்வதேசம் முழுவதும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பற்றிய பேச்சுக்களும், பீதியும் அதிகரித்த வண்ணமிருந்தன.

இவ்வாறான சூழலில், கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் அபபாவிகளின் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்திருக்கும் என, முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளை - முவன்தெனியவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தம் 2009 ஆம் ஆண்டு வெற்றிகொள்ளப்பட்டது. மக்கள் அன்று முதல் நிம்மதியாகவும், அச்சமின்றியும் வாழ்கின்றனர். எனினும் மக்களுக்காக போராடிய இராணுவத்தினர் இன்று குற்றமிழைத்தவர்களாக கருதப்பட்டு, தண்டிக்கப்படுகின்றனர்.

எமது நாட்டின் 9 இராணுவத்தினருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில இராணுவத்தினர், எமது நாட்டுக்குள் வருவதற்கான அனுமதியில்லாமல் வெளிநாட்டில் உள்ளனர்.

இந்த செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இடம்பெறுகின்றது என, மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

Read more...

சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் 24 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் குறைந்தது 24 பேர் பலியானதாக அந்த நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது. அத்துடன் சூறாவளியால் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிமணிமணி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அனர்த்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

மொசாம்பிக்கின் எல்லைப் பகுதியான சிமணிமணி மாவட்டத்தில் சூறாவளியை அடுத்து, வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்கள் உட்பட பெறுமதிவாய்ந்த பொருட்கள், மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சிம்பாப்வே நாடாளுமன்ற உறுப்பினர் சாக்கோ தெரிவித்துள்ளார்.

இந்த சூறாவளிக்கு ‘இடை’ என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த சூறாவளி, மொசாம்பிக், மலாவி மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைப் பாதித்துள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் உலகம் முழுவதிலும் உள்ள 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Read more...

Saturday, March 16, 2019

3 வயது முஸ்ஸாட் இப்றாஹிமையும் விட்டு வைக்காத பயங்கரவாதி

நேற்று நியூசிலாந்து கிறிஸ்சேர்ச் பகுதியிலுள்ள இரு பள்ளிவாயல்களில் இடம்பெற்ற மதவெறித்தாக்குதலில் உயிரிழந்துள்ள 49 பேரில் 3 வயதுடைய முஸ்ஸாட் இப்றாஹிமும் அடங்குகின்றார்.

இத்தாக்குதலை நாடாத்திய பயங்கரவாதி 36 நிமிடங்களில் 49 உயிர்களை எடுத்துள்ளான். இறந்தவர்களில் மேலும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குகின்றான்.



36 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் 11 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2, 4 வயதுடைய சிறார்கள் இருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக நியுசிலாந்து முழுவதுமாக தெருக்களிலும் திறந்த வெளிகளிலும் மக்கள் மலர்களை வைத்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



நியுசிலாந்தின் பிரதமர் தனது நாடு கொலையாளிகளுக்கான நாடு அல்ல என்று கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றார்.

நியுசிலாந்திலுள்ள அகதிகள் முகாம் ஒன்றுக்கு கறுப்பு உடையணிந்து முஸ்லிம் பெண்கள் போன்று முக்காடு அணிந்து சென்ற அவர் ஆறுதல் செலுத்துவதை காணலாம்.





இதேநேரம் கொலையாளியான அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய Brenton Harrison Tarrant என்பவன் கொலைக் குற்றச்சாட்டுடன் நேற்று பிற்பகல் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளான்.



இவன் முதலாவது பள்ளிவாயலில் தாக்குதல் நடாத்திவிட்டு 5 கிலோமீற்றர் தொலைவில் இருந்த இரண்டாவது பள்ளிவாயலுக்கு 7 நிமிட நேரத்தில் சென்றுள்ளான் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படும் காட்சி.



Brenton Harrison Tarrant குறித்த பயங்கரவாத தாக்குதலை நடாத்துவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் தனது விஞ்ஞாபனத்தை நியுசிலாந்து , அவுஸ்திரேலிய பிரதமர்களுக்கும் பிரபல ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளான்.



73 பக்கங்களை கொண்ட அந்த விஞ்ஞாபனம் The Great Replacment என தலைப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆவனத்தை அவன் பள்ளிவாயல் வாசலுக்கு வந்திறங்கிய பின்பே அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பயங்கரவாதி கடந்த கார்த்திகை மாதம் 27ம் திகதி துப்பாக்கிக்கான அனுபதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஒரு மாதத்தின் பின்னர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்துகொண்ட அதேநேரம் துப்பாக்கி சூட்டு கழகம் ஒன்றில் இணைந்து குறிபார்த்துச் சுடும் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளிலிந்து தெரியவந்துள்ளது.

இவ்விடயத்தை கருத்திலெடுத்த நியுசிலாந்து பிரதமர் துப்பாக்கி (semi-automatic weapons) அனுமதிப் பத்திரங்களுக்கான சட்டத்தில் உடனடி மாற்றத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், மாற்றம் உடனடியாக மேற்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் உறுதி செய்துள்ளார்.

இதேநேரம் குறித்த தாக்குதலின்போது பள்ளிவாயல் ஒன்றினுள் இருந்து உயிர் தப்பிய சினாபா என்ற நபர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் , பிரித்தானியா என்று நம்மவர்கள் தாக்கும்போது என்றோ ஒருநாள் நாமும் தாக்கப்படுவோம் என்பதை உணர்ந்திருந்தாக கூறுகின்றார்.



Read more...

இலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அதிர்ச்சியில் மக்கள்

மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கர சத்தத்துடன் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதுடன், பதுளை மாவட்ட மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் இருப்பதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

எனினும், இந்த நில அதிர்வு குறித்து எந்தவித அச்சம் கொள்ளத் தேவையில்லை என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நில அதிர்வு ஏற்படும்போது, பாறைகள் உரசப்படுவதால் சத்தம் எழுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிக்கின்றார்.

குறித்த நில அதிர்வு நிலப்பரப்பை அண்மித்து ஏற்பட்டுள்ளமையினால், சத்தத்தின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், நிலஅதிர்வுகளின்போது சத்தம் ஏற்படுமாயின், அது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதன் அவசியம் கிடையாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்க குறிப்பிட்டார்.

இந்த பகுதியில் மீண்டும் நிலஅதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உ்ளளதா என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்கவிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.

நிலஅதிர்வுகள் ஏற்படுகின்றமை குறித்து முன்னதாகவே கணித்து கூற முடியாது எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிக்கின்றார்.

நன்றி பிபிசி தமிழ்

Read more...

இலங்கையின் கரையோர பகுதிகளில் அமைக்கப்பட்ட சட்டவிரோத கட்டடங்களுக்கு வந்தது சோதனை

இலங்கையின் கரையோர பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. நாட்டை சூழவுள்ள கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் சட்டதிட்டங்களை மீறி நிர்மாணிக்கப்பட்ட 1400 கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் காலி மற்றும் தெஹிவளை கரையோரங்களை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் இதன்போது, குறிப்பிட்டார்.

எஞ்சியுள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பில் உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, கரையோரங்களை அண்மித்து சட்ட விரோத குடியேற்றங்கள் காணப்படுகின்றன. குறித்த வீடுகளை அகற்ற இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Read more...

அரசியல் கட்சிகளில் சொத்து விபரங்களை அடுத்த வாரம் அறியலாம்

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் வாரம் தமது இணைய வலைத்தளத்தில் இலங்கையில் செயற்பட்டுவரும் சகல அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை வௌியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் இந்த புதிய யோசனைக்கு சில அரசியல் கட்சிகளிடமிருந்து சிறந்த பதில் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். அதன்படி கட்சியின் யாப்பு, கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கை மற்றும் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் சபை உள்ளிட்ட தகவல்கள் வௌியிடப்படவுள்ளன.

Read more...

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய குற்றத்திற்காக பறிபோனது தலைவர் பதவி

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே அமிலவை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் பதவி நீக்கம் தொடர்பான கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே அமில தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய எம்.கே. அமில, தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன் சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய, நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். மேலும், எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் பதவிக்கான மாற்றீடு தொடர்பில் பரிந்துரைக்குமாறும் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் மித்தெனிய பகுதியிலுள்ள காவலரணில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மோட்டார் சைக்கிளொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவரால் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அடுத்தவாரம் இலங்கையில் செயற்கை மழை

செயற்கை மழையை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மின்வலு அமைச்சு கூறியுள்ளது. இலங்கையில் வறட்சியான காலநிலை நீடிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. செயற்கை மழையை உருவாக்குவதற்கு தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்றுள்ளதாக, இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கூறினார்.

இந்த நிலையில் செயற்கை மழையை உருவாக்கும் வேலை திட்டம் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படும் என்று மின்வலு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அண்மைய நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக மின்வலு அமைச்சு கூறியுள்ளது.


Read more...

15 லட்சம் பெறுமதி கஞ்சாவுடன் ஒருவரும், சட்டவிரோத போதைப் பொருளுடன் 1790 பேரும் கைது

ஓமந்தை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளார்கள். பஸ் பயணி போன்று கஞ்சாவை எடுத்துச் சென்றபோது குறித்த சந்தேக நபர், பொலிஸார் மேற்கொண்ட திடீரென சோதனையின்போது கைதாகியுள்ளார்.

சந்தேகநபரின் பயணப் பொதியை சோதனையிடப்பட்டபோது சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று இரவு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

குறித்த அனைவரும் சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read more...

ஐ நாவின் கவனத்தை ஈர்த்திருக்குமா யாழ் ஆர்ப்பாட்டம் ?

யாழ்ப்பாணத்தில் இன்று ஐ நாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மாலை நிறைவடைந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் காலை 10 மணிக்கு இந்த மக்கள் எழுச்சி பேரணி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மக்கள் எழுச்சி பேரணி, போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் முன்னெடுக்கப்பட்டது.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த எழுச்சிப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணியில், இலங்கைக்கு இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாது, சிறைகளில் மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை பேரணியில் முழங்கின. சர்வதேசத்திற்கு வலியுறுத்தலை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் என கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியவாறு பேரணியை முன்னெடுத்தார்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது.

இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை ஏந்தி, ‘மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்’ என கோசம் எழுப்பியவாறு, மக்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் ஒரு இனத்துக்கு மாத்திரமே தண்ணீர் வழங்குகின்றார். கோடீஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், அமைச்சர் ரவூஃப் ஹக்கீமின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாளுக்குரிய குழுநிலை விவாதம் நேற்றைய அமர்வில் நடைபெற்றபோது, அமைச்சர் ஹக்கீமின் மீதான அதிருப்தியை அவர் வௌிப்படுத்தினார்.

அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களுக்கு எவ்வகையான உதவிகளைச் செய்தார்? என க.கோடீஸ்வரன் கேள்வி எழுப்யுள்ளார்.

அங்குள்ள தமிழ் மக்கள் குடிநீர் பிரச்சினையில் உள்ளபோது அமைச்சர்
குறிப்பிட்ட ஒரு இனத்தவருக்கு மட்டுமே தண்ணீர் விநியோகம் மேற்கொண்டுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குற்றம் சுமத்தினார்.

”நீங்கள் குறிப்பிட்டதொரு இனத்திற்கு அமைச்சர் அல்ல. நீங்கள் இந்நாட்டிற்குரிய அமைச்சர்,” என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உள்ளிட்ட11 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்

நியுஸிலாந்தில் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசு இந்த மிலேச்சத்தனமான காரியத்தை கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமுல்படுத்துவதற்கு நியூசிலாந்து அரசை வலியுறுத்த வேண்டும்

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள டீன் அவென்யூ அடுத்ததாக லின்வூட் அவென்யூ பகுதியில் உள்ள இரு பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில்,"நியூஸிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்” என்று கூறினார்.

மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூஸிலாந்து சமூகத்தில் இடமில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான கொடூர செயல்பாட்டை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமல்படுத்துவதுடன், இது போன்ற காரியங்கள் இனியும் நடைபெறாமல் உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Read more...

“END OF MY LIFE GOOD BYE GOD” என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞன் தற்கொலை.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இளைஞர் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த எம். கிலின்டன் எலஸ்ட் என்ற 24 வயதானவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் திடீர் என நீர்தேகத்தில் பாய்வதனை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் சடலத்தினை சுமார் 4.30 மணியளவில் மீட்டுள்ளனர்.

நீர்தேகத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பு குறித்த இளைஞன் மேற்படி பாய்ந்த நீர்தேகத்திற்கு முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என எழுதி புகைப்படத்தையும் பதிவிட்டு நீர்தேகத்தில் பாய்ந்துள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரம் காரணமாக இவர் தற்கொiலை முயற்சியில் ஈடுப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Read more...

உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப் பிரிவின் உருவாக்கத்தில் என்ன தவறு? ஏன் இந்த இழுத்தடிப்பு?

கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது,

" கல்முனை உபபிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்த வேண்டும்" என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக திங்கட்கிழமை, மார்ச் 11, 2019வீரகேசரியில் (பக்கம் 02) செய்தி வெளியாகியுள்ளது.

இச் செய்தியை முழுமையாக படித்தபோது அதன் உள்ளடக்கம் அம்பாறை மாவட்ட தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக கல்முனை பிரதேச தமிழர்களைப் பொறுத்தவரை "இனிப்பு தடவிய பாகற்காய்" ஆகும்.

உண்மையில் இந்த விடயத்தில் நிலத்தொடர்பின்மை என்ற பிரச்சனையோ அல்லது எல்லை மீள் நிர்ணயம் என்ற சிக்கலோ இல்லை.

உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப்பிரிவின் நிலத்தொடர்போடு கூடிய வரையறுக்கப்பெற்ற தெளிவான எல்லைகள் வருமாறு

வடக்கு : மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லை (பெரியநீலாவணைக் கிராமம்)

தெற்கு : கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதி

கிழக்கு: வங்காள விரிகுடாக் கடல்

மேற்கு : கிட்டங்கி வாவி

மேற்கூறப்பெற்றவாறு எல்லைகள் வரையறுக்கப்பெற்ற நிலப்பரப்புக்குள் கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் உள்ளடங்குகின்றன.

அப்படியாயின் இதில் நிலத்தொடர்பின்மை, எல்லைகள் மீள் நிர்ணயம் என்ற சிக்கல்கள் எழத்தேவையில்லை. ஆனால் அமைச்சர் ஏன் அவ்வாறு கூறியுள்ளார் என்பதை வைத்துப் பார்க்கும் போது 1989ம் ஆண்டிலிருந்து தமிழர்கள் விடுத்துவரும் இக்கோரிக்கையின் நிறைவேற்றத்தை மேலும் இழுத்தடிப்பதற்கான அல்லது இக் கோரிக்கையைத் தமிழர்களுக்குப் பாராபட்சமான முறையிலே நிறைவேற்றி வைப்பதற்கான தந்திரோபாயமோ என சிந்திக்க வேண்டியுள்ளது.

முன்பு நிர்வாக அலகுகளாக இருந்த பிரிவுக் காரியாதிகாரி முறைமை (D.R.O'S Division) க்குப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ஏற்படுத்தப்பெற்றபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் " கரவாகுப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு" எனும் ஒற்றை நிர்வாக அலகாக உருவாக்கப்பெற்று இந்த ஒற்றை நிர்வாக அலகுக்குள் சாய்ந்தமருது,கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு,மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி,மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் அடங்கியிருந்தன.

கல்முனைத் தமிழர்களை பொறுத்த வரை இந்த ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஏற்படுத்தப்பெற்ற காலத்திலிருந்தே இதனை கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாக கொண்டு இரண்டு நிர்வாக அலகுகளாக (உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாகப்) பிரித்து கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது கிராமங்களை உள்ளடக்கிய தெற்குப்பகுதியை கரவாகு தெற்கு அல்லது கல்முனைத் தெற்கு எனும் பெயரில் முஸ்லீம் பெரும்பான்மை நிர்வாக அலகாகவும் (100% முஸ்லீம்) கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை கிராமங்களை உள்ளடக்கிய வடபகுதியை கரவாகு வடக்கு அல்லது கல்முனை வடக்கு எனும் பெயரில் தமிழ் பெரும்பான்மை அலகாகவும் (தமிழர்கள்,முஸ்லீம்கள், சிங்களவர்கள் உள்ளடக்கியது) ஆக்கித்தரும்படி அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களிடமும் அரசாங்க உயர் அதிகாரிகளிடமும் தமிழர்தம் அரசியல் தலைமையான தமிழர் விடுதலைக்கூட்டணியிடமும் (தற்போது தமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு) கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பின்னர் பிரதேச செயலகப் பிரிவுகளாக தரமுயர்த்தபெற்றன அல்லது பெயர் மாற்றப்பெற்றன.

இது விடயமாக முன்னாள் உள்ளுர் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண, முன்னால் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமரர் . கே. டபிள்யூ. தேவநாயகம் , பொத்துவில் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.ரங்கநாயகி பத்மநாதன் ஆகியோர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியின் விளைவாக12.04.1989 தனியான தமிழ் பெரும்பான்மை உதவி அரசாங்கப் பிரிவு உப அலுவலகமாகத் திறக்கப்பெற்றும் பின்னர் 28.07.1993 ல் அமைச்சரவை தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பெற்ற 28 உப அலுவலகங்களுள் கல்முனைத் தமிழ் பிரிவும் அதாவது கல்முனை வடக்கு (தமிழ்)உள்ளடக்கப்பட்டது.

ஆனால் நாடளாவிய ரீதியில் தரமுயர்த்தப்பெற்ற 28 உப அலுவலகங்களுள் கல்முனை தமிழ் பிரிவு தவிர்ந்த ஏனைய 27 உப அலுவலகங்களும் நிறைவேற்றப்பெற்ற சமகாலத்தில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் அரசியல்வாதிகளினால் குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் முன்னால் தலைவர் அமரர். எம். எச் . எம் அஸ்ரப் அவர்களின் அரசியல் தலையீடு காரணமாக கல்முனை தமிழ் பிரிவு நிறைவேற்றப்பெறாமல் பின்னர் வந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் விருப்பமின்மை காரணமாக இன்று வரை உப அலுவலகமாகவே வெறுமனே கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகம் எனும் பெயர்ப்பலகை மட்டும் மாட்டிக் கொண்டு இயங்கி வருகின்றது.

கடந்த முப்பது வருட காலமாகக் கல்முனைத் தமிழ்ப்பிரிவு விடயம் கிடப்பில் போடப்பட்ட சமகாலத்தில், முஸ்லிம் பெரும்பான்மை சம்மாந்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப் பெற்று புதிதாகத் தனியான இன்னுமொரு முஸ்லிம் பெரும்பான்மை இறக்காமம் பிரிவும், அதேபோல் கரவாகு (கல்முனை ) உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்மபட்டு புதிதாக தனியான இன்னுமொரு முஸ்லிம் பெரும்பான்மை சாய்ந்தமருதுப் பிரிவும் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளின் முயற்சியாலும் செல்வாக்கினாலும் ஏற்படுத்தப்பட்டன. இவை அவர்களது தேவை. இதைக் குறைகூறத் தேவையில்லை.

இவை தேவை கருதியும் மக்களின் அபிலாஷை கருதியும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போது கல்முனைப் பிரதேசத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையான கல்முனைத் தமிழ்ப்பிரிவை தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தத் தடை ஏன்? நியாயமான இக்கோரிக்கைக்கு இப்போது வயது 30 ஆகிறது.

எனவே, உத்தேச கல்முனை வடக்கு(தமிழ் ) பிரிவின் உருவாக்கம் அல்லது தரமுயர்த்தல் என்பது புதிதாக எடுத்த கோரிக்கை அல்ல என்பதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுவது போல இதனை நிறைவேற்றி வைப்பதில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ அல்லது எல்லைகள் மீள் நிர்ணயச் செயற்பாட்டுப் பிரச்சினையோ எதுவுமில்லை. இவை வேண்டுமென்றே இழுத்தடிப்பதற்காக அல்லது கல்முனைத் தமிழர்களுக்குப் பாதகமான வகையிலே நிறைவேற்றி வைப்பதற்காகச் செயற்படும் சக்திகளின் தந்திரோபாயம் ஆகும். இந்த விடயத்தில் தமிழர் தரப்பு கல்முனைப் பிரதேசத் தமிழர்கள் மிகவும் விழிப்பாகவும் நுட்பமாகவும் செயலாற்ற வேண்டியது அவசியம்.

மேலும், முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசப் பிரிவு என்பது 100%முஸ்லிம்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை. அதேபோல் தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவு என்பது 100% தமிழர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை.

தற்போது நடைமுறையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வட்டிவெளி, குண்டுமடு, தாமரைக் குளம், இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஊறணி,கனகர் கிராமம், கோமாரி, சங்கமன்கண்டி போன்ற தமிழ்க் கிராமங்கள் அடங்கியுள்ளன.

அதேபோல் முஸ்லிம் பெரும்பான்மை அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் திராய்க்கேணி எனும் தமிழ்க் கிராமம் அடங்கியுள்ளது. அதேபோல் நிந்தவூர்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் எனும் பழந்தமிழ்க்கிராமம் அடங்கியுள்ளது.

அதேபோல் முஸ்லிம் பெரும்பான்மை சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வீரமுனை, மல்வத்தை, கலைதி நகர் புதுநகர், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு போன்ற தமிழ்க்கிராமங்கள் அடங்கியுள்ளன.

மறுதலையாக தமிழ்ப் பெரும்பான்மை காரைதீவுப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் மாவடிப்பள்ளி எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. தமிழ்ப் பெரும்பான்மை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கணிசமான முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவு2001 இல் ஏற்படுத்தப்படும் வரை இப்பிரதேசம் முஸ்லிம் பெரும்பான்மைச் சம்மாந்துறைப் பிரதேசப் பிரிவின் கீழேதான் நிர்வகிக்கப்பட்டது.

1989இலிருந்து பார்த்தாலும் கடந்த 30வருடமாக முஸ்லிம் பெரும்பான்மைக் கரவாகுப் பிரதேச செயலகப் பிரிவின் ஆளுகையின் கீழேதான் கல்முனை ,பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக் குடியிருப்பு ,கிட்டங்கி , பெரிய நீலாவனை வாழ் தமிழர்கள் இருந்தனர். ஆனாலும் கல்முனைப் பிரதேசத் தமிழர்களுக்கென தனியானதொரு தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகை கடந்த 30வருடகாலமாக அவர்கள் கோரி வருகிறார்கள் என்றால் அது அவர்களது சமூக , பொருளாதார , அரசியல் அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்டதே என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உணராவிட்டாலும் கூட முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே உத்தேச கல்முனைத் தமிழ்ப் பிரிவின் கீழ் கல்முனை நகர், நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு , மருதமுனை வாழ் முஸ்லிம்கள் கணிசமான அளவில் அமைவது தவறற்றதும் தவிர்க்க முடியாததுமாகும்.

கரவாகு ( கல்முனை ) பிரதேச செயலகப் பிரிவிலிருந்து சாய்ந்தமருது தனியான பிரதேச செயலகப் பிரிவாக உருவானது நியாயம் என்றால், சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து இறக்காமமும், நாவிதன்வெளியும் தனியான பிரதேச செயலகப் பிரிவுகளாக உருவானது நியாயம் என்றால் தற்போது நடைமுறையிலுள்ள கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மேற்கூறப்பட்டவாறு கல்முனைத் தரவைப் பிள்ளையார் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு அதன் வட பகுதி தனியான பிரதேச செயலகப் பிரிவாக (கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு ) உருவாவதும் நியாயம்தானே. இதில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ எல்லை மீள் நிர்ணயச் செயற்பாட்டுப் பிரச்சினையோ எழ நியாயமில்லை.

28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின் அமுலாக்கமே இன்றும் வேண்டப்படுவதாகும்.

செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் - அரங்கம்

Read more...

மோசடியில் ஈடுபட்ட பிக்குவின் காவியுடையை களைந்து, மரத்தில் கட்டிவைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த விகாராதிபதி.

கொடகம பிரதேசத்திலுள்ள பிக்கு ஒருவர் தவறான முறையில் மக்களிடம் நிதிவசூலிப்பில் ஈடுபட்டபோது, ஸ்தலத்திற்கு சென்று குறித்த பிக்குவை கையும் மெய்யுமாக பிடித்த விகாராதிபதி ஒருவர் அவரது காவியுடையை களைந்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிக்குவை பொலிஸாரிடம் பாரமளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொடகம விகாரையின் விகாராதிபதி கூறுகையில் :

குறித்த பிக்கு மோசடிக்காரன் ஒருவனுடன் இணைந்து கிராமங்களுக்கு சென்று மக்களிடம் பணம் வசூலிப்பதாக எனக்கு கடந்த 3 மாத காலமாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை தொலைபேசியில் அழைந்த ஒருவர் குறித்த பிக்கு கிராமம் ஒன்றில் பணம் வசூலிப்பதாக கூறினார். உடனடியாக அங்கு சென்று அவரை அழைத்து வந்தேன். அவர் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாகவும் சிறுநீரக மாற்று சந்திர சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்றே பணம் வசூலித்துள்ளார்.

இவரது இச்செயற்பாடானது பௌத்த தர்மத்திற்கும் , கிராம வாசிகளுக்கும் , எனக்கும் அவமானமாகும். எனவே அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன் என்றார்.

பொலிஸாரிடம் ஒப்படைத்தபோது காவி உடை களையப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த பிக்கு காணப்பட்டார். பொலிஸார் அவரிடம் காவி உடையை வழங்க முற்பட்டபோது, காவி உடையை கொடுக்கவேண்டாம் என விகாராதிபதி பொலிஸாருக்கு உத்தவிட்டதை அவதானிக்க கூடியதாகவிருந்தது .






Read more...

பிணை முறி மோசடி, எனது தவறு இல்லை - பிரதமர்

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி, தனது தவறு இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தாக நேற்றைய ''டெய்லி மிரர் பத்திரிகை'' செய்தி பிரசுரித்திருந்தது. அண்மைக்காலமாக முறி மோசடி தொடர்பில் பிரதமர் தன்னை பாதுகாக்கு செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் மத்திய வங்கியில் முறிகள் கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெறவில்லை எனவும் பிரதமர் தெரிவித்து வருவதாக விமர்ச்சிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் இந்த முறி மோடி தொடர்பில் அழுத்தம் அதிகரித்த நிலையில் இது குறித்து வௌிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ஆராயுமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி செயற்படும் முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சிக்குள் நெருங்கிய மூன்று சட்டத்தரணிகள் உள்ளடங்கிய குழுவை நியமித்தார்.

காமினி பிட்டிப்பன, மகேஸ் களுகம்பிட்டிய மற்றும் சந்திமால் மென்டிஸ் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. ஆனால், பிரதமரால் நியமிக்கப்பட்ட மூன்று சட்டத்தரணிகளுக்கும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித தௌிவும் இல்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், மோசடி இடம்பெறவில்லை என்றால் முறிகள் தொடர்பில் தௌிவுள்ள ஒரு குழுவை நியமித்து இது தொடர்பில் ஆராய்வதில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com