எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றவர்கள், ஆளுங்கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித்.பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய, பலமானதொரு கூட்டணியை ஸ்தாபிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில், அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்தரப்பினால் அமைக்கப்படும் புதிய கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி வலுவான கூட்டணியாக உருவாகும் என அஜித்.பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரத்தில், எந்த நேரத்திலும் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் காட்சிகளை பார்க்கலாம். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களிலும் மக்கள் தொழுகை நிமித்தம் கூடி இருந்தார்கள்.
இவ்வாறு பள்ளிவாசல்கள் நோக்கி தொழுகைக்காக வந்த அப்பாவி மக்களைக் கொடூரமாக சுட்டுக்கொலை செய்து, அந்த காட்சியை நேரலையாக முகப்புத்தகத்தில் பதிவேற்றிய மனித மிருகம் பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் தீயாய் பரவி வருகின்றன.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், இன்று நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் எனும் நகரிலுள்ள புகழ்பெற்ற மஸ்ஜித் அல் நூர் எனும் மசூதிக்கு தொழுகைக்காக சென்ற போது, பள்ளிவாசலே இரத்த பூமியாக தோற்றமளித்துள்ளது.
பீதியடைந்த வீரர்கள், பள்ளிவாசலில் இராணுவ உடையில் இருந்த ஒருவரை நோக்கி, மற்றுமொரு துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதை பார்த்ததும் செய்வதறியாது, தரையில் படுத்தனர். பின்னர் கிரிக்கட் வீரர்களை பாதுகாப்பாக அவர்களது விடுதிக்கு, நியூசிலாந்து போலீசார் அழைத்துச் சென்றனர்.
எனினும் பள்ளிவாசலில் இருந்த பொதுமக்களில் 49 பேரை, அந்த நாட்டு பொலிஸாரால் காப்பாற்ற முடியவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பலர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் முதல் கட்டமாக 6 பேர் பலியானதுடன், தற்போது பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது.
இந்த துப்பாக்கிசூட்டை அடுத்து, அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பள்ளிவாசலை சுற்றிவளைத்து பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து ஒரு பெண் உள்ளிட்ட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குறித்த துப்பாக்கிச்சூட்டை, கொலை குற்றவாளி நேரலையில் ஒளிபரப்பியமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி தனது உடலில் பொருத்தப்பட்ட கேமராவின் துணையுடன், இத்தாக்குதலை முகப்புத்தகத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளான். அத்துடன் சுமார் 73 பக்கங்களில் துப்பாக்கிதாரி தனது நோக்கங்களை எழுதியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த கொடூரம் பலகோடி பயனாளர்களின் கண்முன்னே, முழு சுதந்திரமாக நிகழ்ந்துள்ளமை, மனிதத்தின் மீது, மிகப்பெரும் வெறுப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென, ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, ஐ நா மாநாட்டில் இலங்கையின் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது மேற்படி தெரிவித்தார்.
ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 70ற்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனபோதிலும் இஸ்ரேல் அரசாங்கம் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட எந்த பிரேரணை தொடர்பிலும் குழம்பிக் கொள்ளவில்லை. ஆகவே இலங்கை தொடர்பில் ஐ நாவில் முன்வைக்கப்படும் எந்த ஒரு பிரேரணை தொடர்பிலும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று, ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 2015 ஆண்டு காலப்பகுதியில் ஐ நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்டு வந்த கலாநிதி பாலித கொஹன அப்பதவியில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வருகை தந்து சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து தொழில் ஈடுபட்ட 14 சீனப் பிரஜைகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒருவருக்கு தலா ஒரு வருட வீதம், சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த அனைவரும் 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணமும் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து காலி தடல்ல பிரதேசத்தில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்தநிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த 14 போரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசாங்கம், வடக்கில் உள்ள மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முறையான தீர்வை வழங்கும் என, மின்சக்தி வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட மாகாணத்திற்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள கட்சியின் ஆதராளர்கள், உறுப்பினர்களுடன் சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அரசாங்கம் வட மாகாண மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை தொடர்பில் கருத்து வெளியிட்டார். அத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில், பயங்கரமான சூழல் நிலவியதாகவும், ஆனால் இப்போது நிலைமை மாறி, அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை தமது அரசாங்கமான ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மிகவும் ஆபத்தான அத்தியாயம் ஒன்று பிரித்தானியாவினால் புதிதாகக் கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் அடங்கியுள்ளதாக, பூகோள இலங்கையர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியாமேந்திர விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவத்தினரை நாட்டில் கைது செய்வது குறித்தே பிரித்தானிய அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் புதிய அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த அத்தியாயம் மிகவும் ஆபத்தானதாகும் என்று, வியத்மக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ அலுவலகப் பிரதானியாக நியமிக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அண்மையில் கவலை வெளியிட்டுள்ளார். இவற்றை பார்க்கும்போது நாட்டின் உள்ளக விவகாரங்கள் எந்தளவு தூரத்திற்கு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றது என, சியாமேந்திர விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்தார்.
இலங்கை இந்திய பக்தர்களை ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்பு மிகு கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று தொடங்கவுள்ளது. இந்த பெருந்திருவிழாவில் இலங்கை – இந்திய பக்தர்கள் 9000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா, நாளை வரை நடைபெறவுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு அந்தோணியார் தேர் பவனி, நாளை காலை 7 மணிக்கு திருப்பலி பூஜை என 2 நாட்கள் இந்தத் திருவிழா நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கேற்க வடக்கில் உள்ள கிறிஸ்தவ இந்து மற்றும் பௌத்த பக்தர்கள் ஆலயத்திற்கு படையெடுத்துள்ளார்கள். இதேபோன்று , ராமேஸ்வரத்தில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2,400க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று கச்சத்தீவிற்கு வருகை தந்துள்ளார்கள்.
இந்த திருவிழாவிற்காக அனைத்து ஏற்பாடுகளும் உரிய முறையில் நடைபெற வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந. வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இந்த வருட திருவிழா நிகழ்வில் பங்கேற்கும் இலங்கை – இந்திய பக்தர்கள் அனைவருக்குமான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர் .
முன்னதாக இந்தியாவில் இருந்து வருகைதரும் 2500 பக்தர்களுக்கு மேற்பட்டோர் அங்குள்ள ஆட்சியாளர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள். அதேநேரம் தமது நாட்டு படகுகளை கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்றும் மீனவ சங்கங்கள் தமிழ் நாட்டில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு அவர்களின் படகுகளை தரித்து வைப்பதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தடை செய்த பொருட்கள், வர்த்தக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்சென்றால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர், குற்ற வழக்குகள் உடையவர், இலங்கை அகதிகள் என தெரிய வந்தால் அவர்கள் படகில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இந்திய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2 நாள் விழா முடிந்து, கொடி இறக்கப்பட்டதும் நாளை காலை 11 மணிக்கு பின்னர் கச்சத்தீவில் இருந்து இந்திய பக்தர்கள் படகில் ராமேஸ்வரம் திரும்புகின்றனர். அத்துடன் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் நேற்று முதல் கச்சத்தீவு கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு இரண்டு நாள் திருவிழா காரணமாக பாதுகாப்பு கருதி மீன் பிடிக்க செல்லவதற்கு தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இதுவரை முன்னெடுத்த விடயங்களைச் சுட்டிக்காட்டியே மேலும் கால அவகாசம் கோருகிறது என்றும், இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லை எனவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகங்கள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதானஇரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்படி கூறினார். ஆகவே, அரசாங்கம் செயற்படுத்தும் வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு கால அவகாசத்தின் தேவை உள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போது நிலைமை மாற்றமடைந்துவிட்டது. மின்சாரக் கதிரை தொடர்பில் பணம் கொடுத்து பேச சொன்னால் கூட எவரும் பேசாத தயாராக இல்லை. அந்தளவிற்கு நாட்டின் நிலைமை மாற்றமடைந்துள்ளது. இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகளும் இலங்கை பிரஜை என்ற அந்தஸ்தும் கிடைக்கும் முறையான சூழலை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் சகல விடயங்களுடனும் உடன்பட மாட்டோம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பென தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பாக இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் மனித உரிமைகள் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமானது இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்ற வெளிநாட்டு சக்திகளுக்கு இடம்கொடுக்கின்றது எனத் தெரிவித்ததுடன், இதற்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கை யாது என்ற கேள்வியை எழுப்பியபோதே திலக் மாரப்பென மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர், மனித உரிமைகள் பேரணையின் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையில் உள்ள சகல விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஊதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், அந்த அறிக்கையிலே வடகிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த மக்களது காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் அந்தக்கருத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டோம். காரணம் நாம் இதுவரை அவ்வாறான காணிகள் 90 வீதத்தினை விடுவித்து விட்டோம். மிகச் சிறிய கொகை காணியே இன்னும் விடுவிக்கப்படவுள்ளது.
இவ்வாறு பல காரணிகள் உள்ளது அவற்றை நாம் அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே கால அவகாசத்தையும் கேட்டுள்ளோம் என்றார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தின் ஊடாக, பிணைமுறி விவகாரம் குறித்த தீர்வு வழங்கப்படும். அத்துடன் நாட்டிலுள்ள பாரிய பிரச்சனைகளுக்கான சிறந்த தீர்வு காணப்படும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும், ஊழல் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஏற்கனவே விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த வழக்குகளுக்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கான இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனை கூறினார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட நீதிமன்றத்தின் ஊடாக, நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு காணப்பட வேண்டும். அது பிணைமுறியோ அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்.
நாட்டிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, அதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட பணிகளை மேற்படி விசாரணைகளை செய்யும் நிறுவனங்கள், நீதிமன்ற ஆணைக்குழு, ஊழல் ஆணைக்குழு என்பன முன்னெடுக்கும்.
இதனிடையே பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளுக்காக வெளிநாட்டிலிருக்கும் சந்தேக நபரை ஒருபோதும் என்னால் இலங்கைக்கு கொண்டு வர முடியாது. அது தொடர்பாக விசாரணை செய்யும் குழுவினரே, தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குவதாக தெரிவித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் கடந்த நான்கு ஆண்டு காலமாக இந்த அரசாங்கம் இலங்கை மக்களை முற்றாக ஏமாற்றி முட்டாள்களாக்கியுள்ளதாக, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பாதீடு குறித்த குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது, நாமல் ராஜாக்ஸ இதனை குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்கான சிறந்த சேவைகள், இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் வடக்கு மக்களின் பொருளாதாரம் பெருமளவு சீரழிந்துள்ளது. அதனை மீட்க இதுவரையிலும் அரசாங்க தரப்பினரால், குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே ''என்டர்பிரைஸ் சிறிலாங்கா'' வேலைத்திட்டம் என்ற போர்வையில் இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக கடன்சுமையை திணித்துள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
என்டர்பிரைஸ் சிறிலாங்கா கடன் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வீடு கட்ட கடன் கொடுக்கின்றீர்கள். ஆனால் மக்கள் காணி இல்லாமல், காணி உறுதிகள் இல்லாமல் தத்தளித்து வருவது குறித்து, அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச சீனாவிடம் கடன் வாங்கியதாக, அரசாங்க தரப்பினர் ஒருகாலத்தில் குற்றம் சுமத்தினார்கள். ஆனால் இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் ஒருபோதும் சிக்கவில்iலை
எனினும் தேர்தல் காலத்தில் மீண்டும் சீனாவின் கடன் குறித்து இந்த அரசாங்கம் பேசி வருகின்றது. இவ்வாறு கடந்த நான்கு வருடங்களாக இலங்கை மக்களை அரசாங்கம் முட்டாள்கள் ஆக்கி விட்டதாக , பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐந்தாம் தர மாணவர்கள் 18 பேரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - பூநொச்சிமுனை பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களே, தமது ஆசிரியரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து குறித்த மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தம்மால் வழங்கப்பட்ட வீட்டுப்பாடங்களை சரிவரச் செய்யவில்லை என்று தெரிவித்து, குறித்த ஆசிரியர் வகுப்பறையில் வைத்து 18 மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மட்டக்களப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் ஆசிரியர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
அத்துடன் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த ஆசிரியரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒருதொகுதியினர் காலாகாலமாக அரசியல்வாதிகளின் அடிவருடிகளாகவே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். தமது எஜமானர்களின் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு, தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்படி போராட்டத்தில் தமது தரப்பினர், கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக, குறித்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வன் இதனை தெரிவித்தார்.
சர்வதேச சமுதாயம், இலங்கைக்கு இனியொருபோதும் காலநீடிப்பை வழங்கக்கூடாது என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத் தினத்தில், தமது தரப்பினர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதுடன், அன்றைய தினம் கறுப்புகொடிகளை பறக்க விட்டு ஆதரவளிக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த விதிமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளை இந்த அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது.
இந்த விடயத்தில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரசாங்கத்தோடு இணைந்து கொண்டிருக்கின்றமை தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வே.தவச்செல்வன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் மக்கள் நலன் சார்ந்து பல தசாப்தங்களாக உழைந்துவந்த திரு வைரமுத்து வரதகுமார் அவர்கள் நேற்று மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மரணமானது தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என்றும் நேற்றைய நாள் தமிழ் மக்களின் வரலாற்றில் கறுப்பு நாள் என்றும் நியூகாம் நகர சபைக்கான முன்னாள் பிரதி மேயர் திரு போல் சத்தியநேசன் தெரிவித்துள்ளார்.
திரு. வரதகுமார் அவர்கள் மனித உரிமைகளின் காவலனாக, அரசியல் ஆய்வாளனாக, அகதிகளுக்கான சட்டத்தரணியாக தமிழ் மக்களுக்கு அளப்பெரும் சேவைகளை செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள திரு. சுத்தியநேசன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலரின் தேவைகள், இதுவரையிலும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் நிறைவேற்றப்படவில்லை என, கல்வி இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான பாதீடு குறித்த குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்:
தமிழ் மக்களின் பிரச்சினைகள் எதையும் தீர்த்து வைக்காத அரசாங்கத்தில், அமைச்சு பதவி என்ற எலும்புத் துண்டை சூப்பியவாறே மண்ணெண்ணை மகேஸ்வரனின் மனைவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்ளுக்கு வழங்கப்படும் சகல வரபிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள புலிப்பயங்கரவாதிகள் 7 பேருக்கும் விடுதலை வழங்கவேண்டும் என்று புலி ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
இக்கோரிக்கைக்கு இந்திய மக்களிடமிருந்த நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்ப்பு காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான இறுதி முடிவை நீதிமன்றே எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ரஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி.
இது தொடர்பாக இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சனையா...? ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்ட பிரச்சினை தொடர்பானது.
நீதிமன்றம் தான் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. 7 பேர் விடுதலை குறித்து உரிய காலத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். பிரதமர் யார் என்பதை மக்களிடம் திணிப்பதை அடாவடி செயலாக காங்கிரஸ் கருதுகிறது. நரேந்திர மோடி அரசை முடிவுக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிகள் வலிமையாக இணைந்துள்ளன.
இலங்கை படுகொலை விடயத்திற்காக காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு கோபம் இல்லை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை.
தமிழக மக்கள் மீது காங்கிரஸ் கட்சி மிகுந்த அன்பு கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட பல மாநில கலாச்சாரங்கள் பாஜக அரசால் சீரழிக்கப்பட்டுள்ளன. நாக்பூரை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசு இயங்க முடியாது.
தமிழகம் சீனாவுடன் போட்டி போடும் அளவிற்கு உற்பத்தி துறையில் திறமை காண்பித்துள்ளது. தமிழகத்தை இந்தியாவின் உற்பத்தித் துறை மையமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மாற்றிக் காட்டுவோம்.
மாநிலங்கள் நடுவே வேற்றுமை பாராட்டுவது தான் தேசவிரோதம். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் உண்டு. பஞ்சாயத்து முதல் பிரதமர் வரை அதிகாரங்கள் பகிர்வு என்பதே எம்முடைய முதல் விருப்பம்.
தமிழக அரசு புது தில்லியிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. புது தில்லியிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் ஆகும். தேர்தலுக்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை உருவாக்கி உள்ளது.
காங்கிரஸ் போதிய கூட்டணிகளை ஏற்படுத்தவில்லை என்பது பொய்யானது. பீகார், ஜார்கண்ட், ஜம்முவில் நாங்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். பாஜகவுக்கு தான் புதிய கூட்டணிகள் அமையவில்லை.
சமூக நல்லிணக்கம் தான் எங்களது நோக்கம். பொருளாதார வளர்ச்சி குறைவது மக்களின் கோபத்தை உணர்த்துகிறது. பாஜக இதை புரிந்து கொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நாடு முன்னேற்றமடையும். அதிக வேலை வாய்ப்பு தரக்கூடிய சிறு நடுத்தர தொழில்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன. சிறு நடுத்தர தொழில் துறையில் முன்னேற்றம் அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
நாட்டின் பயங்கரவாதத்தை விட வேலையின்மை தான் பெரிய பிரச்சினையாக மக்கள் கருதுகிறார்கள். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. விவசாயிகளும் விவசாயமும் இல்லாத இந்தியா வலிமையாக இருக்காது என்பது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க முயற்சிப்போம்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டோம். மொழி பண்பாடு ரீதியாக சிலரை புறக்கணித்துவிட்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தை நடத்தும் போது, பிரதமர் அலுவலகமும் பேசியது தான் பிரச்சனை. ரஃபேல் விவகாரத்தில் விசாரணை நடந்தால் அனில் அம்பானியும் பிரதமரும் குற்றவாளிகள் ஆவார்கள்.
அனில் அம்பானிக்கு 30,000 கோடி ஒப்பந்தம் கிடைக்க பிரதமர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
ஒப்பந்தத்தில் உள்ள முறைகேடுகளை தான் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. ரஃபேல் விவகாரத்தில் விமானத்தின் தரம் செயல்பாடு பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போது ரஃபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.” என்றார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால், தாம் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக, இலங்கை சுயதொழில் புரிவோருக்கான சாரதிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் தமக்கான எரிபொருள் மானியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சுயதொழில் புரிவோருக்கான சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை குறிப்பிட்டார். தாம் கோரியபடி எரிபொருளுக்கான உரிய மானியம் வழங்கப்படவில்லை எனில், முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டிருக்கும் மீற்றர் கருவிகளை அகற்றபோவதாக குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எழுத்து மூலம் இது குறித்த சரியான தெளிவுபடுதலை வழங்கவுள்ளதாக, இலங்கை சுயதொழில் புரிவோருக்கான சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சற்றுமுன்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான முதலாவது பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பை ஏற்று சென்றுள்ள ஜனாதிபதி, இன்று ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார். நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி கென்யாவிற்கு விஜயம் செய்துள்ளார். கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு, நாளை வரை நடைபெறும்.
இந்த அமர்வு சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வருகின்றன. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
இதனிடையே, 1970ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் கென்யாவிற்குமான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நட்பு ரீதியான தொடர்புகளே இதுவரை பேணப்பட்டு வருகின்றன.
எவ்வாறான போதிலும் பொதுநலவாய அமைப்பு மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளின் அமைப்பு (IORA) ஆகியவற்றில் இவ்விரு நாடுகளும் அங்கம் வகித்து வருகின்றன. கென்யா இலங்கையின் விசேட வர்த்தக பங்காளராக காணப்படாவிடினும், பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை காணப்படாத பொருளாதார தொடர்புகள் தொடர்பில் இரு நாடுகளும் தற்போது ஆர்வம் செலுத்தி வருகின்றன.
அவற்றில் ஆடை உற்பத்தி, நீர் மின் உற்பத்தி, தோட்டக்கலை மற்றும் மோட்டார் வாகன பயிற்சி துறைகளில் தற்போது இலங்கையர்கள் கென்யாவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரச நிறுவன வளாகங்களில் வெற்றிலை மற்றும் பாக்கு போன்றனவற்றை பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பிரகாரம் அரசாங்க நிறுவன வளாகங்களுக்குள் வெற்றிலை மெல்வதும் புகைப்பதும், வெற்றிலை அல்லது சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்வதும் தடைசெய்யப்படுகின்றது.
வெற்றிலை புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்பின் காரணமாக வாய்புற்று நோய் ஏற்படக்கூடிய நிலைமையை அவதானித்து இந்த தீர்மானம் எட்டப்பபட்டுள்ளது. நாட்டின் அரசாங்க ஸ்தாபனங்களில் கடமைபுரியும் பணியாளர் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு வருகைத்தரும் பொதுமக்கள், வெற்றிலை பாக்கு மற்றும் புகைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
இதற்கான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதற்காக அரச நிர்வாக சுற்று நிருபத்தை வெளியிடுவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை சார்பில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க, திலக் மாரப்பன தலைமையிலான குழு பிரதிநிதித்துவம் செய்வதே, சரியாக அமையும் என்று ஜனாதிபதி நம்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் குழு ஒன்றை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதித் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஜெனிவா பயணத்தில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வடமாகாண ஆளுநர்ஆகியோர் ஜெனீவா செல்வரென்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான சந்திப்பு ஜானதிபதியுடன் நடைபெற்ற நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் குழுவின் தலைவராக செயற்படும் நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனீவாவில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்கள் அடங்கிய கூட்டறிக்கையை இலங்கை சார்பில் முன்வைப்பாரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் எழுத்துமூலம் நேரடியாக கையளித்தனர். மேலும் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கவேண்டிய தமது கோரிக்கைகளை வழங்கி இருந்தார்கள்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றினர்.
இன்று காலை 9.30 மணி அளவில் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாள் நடவடிக்கைகள், நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று முக்கியமாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
குறித்த அமைச்சுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார். காலை 9.30 மணியளவில் சபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளதுடன், காலை 10 மணியளவில் விவாதங்கள் தொடங்கும் என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஜனாதிபதி, பிரதமரின் செயலகம், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள் மற்றும் அரச சேவைகள், நீதிச்சேவை, பொலிஸ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
எவ்வாறான போதிலும் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளைத் தோற்கடிப்பதாக, ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீப காலமாக கருத்து வெளியிட்டு வந்தநிலையில், அவர்கள் வாக்கெடுப்பொன்றையும் கேட்டிருந்தார்கள். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினார்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்கெடுப்பை கோரிய நிலையில், அமைச்சரும் சபை முதல்வருமான லக்மன் கிரியெல்ல மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாக்கெடுப்பை நிராகரித்தார்கள்.
இந்த நிலையிலேயே ஆட்சேபனை மாத்திரம் பதிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் (Facebook), மிகக் கடுமையான செயலிழப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது, இதுவரை பேஸ்புக் வரலாற்றில் பதிவான பெரியளவிலான செயலிழப்பு என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, பேஸ்புக்கின் பிரதான செயலிகளான வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியனவும் செயலிழந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. எவ்வாறான போதிலும் வட்ஸ்அப் சேவை இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008ஆம் ஆண்டு, பேஸ்புக்கில் இவ்வாறானதொரு தடங்கல்நிலை ஏற்பட்டிருந்தமை பயனாளர்கள் அறிந்திருப்பார்கள். அந்தக் காலப்பகுதியில் பேஸ்புக்கை பயன்படுத்திய 150 மில்லியன் பயனாளர்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பேஸ்புக் பாவனையாளர்கள் ஒருநாளைக்கு 2.3 பில்லியனாக அதிகரித்து காணப்படுகிறார்கள்.
எவ்வாறான போதிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் செயலிழப்பிற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், பேஸ்புக்கின் செயலிழப்பை இயன்ற வரையில் விரைவாக சீர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு – புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று திறக்கப்படவுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் தலைமையில் இதன் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம், பாரிய ஊழல் மோசடிகள் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட, மூன்று விசேட நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக முதலாவது விசேட மேல் நீதிமன்றம், கடந்த வருடம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த விடேச மேல்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொது ஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளுக்குமிடையேயான உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இங்கு எதிர்வரும் தேர்தலை இருகட்சிகளும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக தீவிரமாகவும் இதய சுத்தியுடனும் பேசி இறுதி முடிவெடுக்க இரு கட்சிகளின் தலைமைப் பீடங்களும் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்தபொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபச்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவெடுப்பார் என்றும் அவர் ராஜபச்சர்கள் அல்லாத ஒருவரை நிறுத்துவது என்று தீர்மானித்தாலும் அதற்கு தங்களது பூரண ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கோட்டபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது, கோட்டபாய ராஜபக்ச தானாக முன்வந்து தயார் என்று கூறியிருப்பது வரவேற்க தக்கது என்றும் அவ்வாறு யாருக்காவது விருப்பம் இருந்தால் அவர்களும் வெளிப்படையாக கூறவேண்டும் என்றும் வேண்டினார்.
இலங்கையில் தொடரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.
எனினும் அவரால் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க முடியவில்லை என, ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டு பாதீட்டுக்கான ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குரிய நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்கப்போவதாக குறிப்பிடும் ஜனாதிபதி, தனது மகளுக்கு வழங்கியுள்ள மதுபான சாலைக்கான உரிமத்தை முதலில் இரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரபச்சந்திரன் குறிப்பிட்டார்.
கையூட்டலுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு தற்போது வலுவிழந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜேவிபி, அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில், இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜேவிபியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்கியமைக்கான காரணத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.
குறித்த ஆணைக்குழுவானது அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக, போதியளவான கவனம் செலுத்துவதில்லை.
எனினும் இந்த நிலைமை தொடரக்கூடாது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயமாக பொறுப்புக்கூற வேண்டும் என அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி, குரல் கொடுத்த பல்கலைக்கழக மாணவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என, பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பாகங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்றதொரு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது கண்ணீர் புகை, மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அவசரமாக களைந்து சென்றனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில், குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மாலி பண்டார கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 - 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் குறித்து, அப்போதைய கடற்படை தளபதியாக இருந்த வசந்த கரன்னாகொடவிடம் தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம், .கடந்த தினம் வசந்த கரன்னாகொடவிடம் தொடர்ந்து 8 மணிநேரம் விசாரணை நடத்தியதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் 6 மணிநேரம் தீவிர விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் விவகாரத்தை காரணம் காட்டி, எந்த நேரத்திலும் தாம் கைது செய்யப்படுவதையோ, அல்லது தடுத்து வைக்கப்படுவதையோ தடை செய்ய உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் பிரகாரம் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்படுவதையோ, அல்லது தடுத்து வைக்கப்படுவதையோ உயர் நீதிமன்றம் தடை செய்தது.
இந்த நிலையில் மேற்படி கடத்தல் சம்பவம் குறித்த விசாரணைகள் நிமித்தம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிடம் இன்று 6 மணிநேரம் தொடர் விசாரணை நடத்தியதாக, குற்ற புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையில் மொத்தமாக 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இந்த பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல், 18 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்பரீட்சை இலங்கை முழுவதுமாக 4 ,461 மத்திய நிலையங்களில் நடைபெற்றது.
இந்தநிலையில், நடந்து முடிந்த சாதாரண தர பரீட்சசை பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த மாத இறுதிக்குள் அனைத்து கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோக தாக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து குறித்த மானவர்கள் மீது, காவல்துறையினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், தற்காலிகமாக அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், உடன் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் பங்கெடுப்பதற்காக, வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவொன்று ஜெனீவாவிற்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரதி மன்றாடியார் நாயகம் நெரின்பிள்ளை ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்து கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்து, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
40 ஆவது ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
சர்வதேச சமூகத்திடம் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் நகர்வுகள் குறித்த அறிக்கை, எதிர்வரும் 20 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான பரிந்துரை தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.