Thursday, March 7, 2019

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பிற்பகல், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கான போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சட்டத்துறையினருக்கு போக்குவரத்து கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டன. எனினும் அரச மருத்துவ அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவில், எந்தவித அதிகரிப்பும் இடம்பெறவில்லை.

எனவே தமக்கான போக்குவரத்து கொடுப்பனவை உடன் அதிகரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக, நாடாளுமன்ற செய்திகள் தெரிவித்துள்ளன.

Read more...

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை தரத் தயார் - சந்திரிகா

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால் தன்னுடைய ஒத்துழைப்பு முற்றுமுழுவதுமாக கிடைக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போது தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதுதொடர்பான யோசனையை முதலில் கொண்டுவந்ததே தான் என்றும், அதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது அன்றய எதிர்க்கட்சியினர் அதனை நிராகரித்தனர் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார். அதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில், வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டி பேசினார்.


Read more...

சட்டவிரோத மதுபான உற்பத்தியா ? -முறையிடுங்கள் - புதிய தொலைபேசி இலக்கம்

நாட்டில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் மதுபானம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், அவற்றை உடனடியாக தெரிவிக்க புதிய விசேட தொலைபேசி இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ் மா அதிபரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அதன்படி குறித்த சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி இலக்கங்களான 0113 024 820, 0113 024 848, 0113 024 850 என்பவற்றிற்கு முறைப்பாடுகள், தகவல்களை வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more...

ஹெரோயினுடன் ஒருவரும், சட்டவிரோத 30 புகலிடக் கோரிக்கையாளர்களும் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் பதுளை, பின்அராவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, விஷத் தனமையுடைய போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைதான சந்தேகநபரிடமிருந்து 15 கிராமும் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதனிடையே படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் கடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான வேறு தகவல்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் விடுதலை - கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் இன்று உத்தரவு

அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற குற்றம் தொடர்பிலான வழக்கை விசாரிப்பதற்கு, கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற காரணத்தால் குறித்த எழுவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு நீதிபதிகள், சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் ஆட்சேபனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு விசேட அவதான எச்சரிக்கை

இன்று நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என, காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், நிழலான இடங்களில் தங்குமாறும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகக் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், வீட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அதேபோன்று சிறுவர்களையும் மிகவும் அவதானத்துடன் கவனிக்குமாறு காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதிக வெப்பம் உள்ள இடங்கள், வெட்டையான பகுதிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடுமையான வெப்பம் காரணமாக, தோல் தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளமையினால், வெப்பமான பகுதிகளில் வசிப்போர், சிறுவர்களுக்கு அதிக நீர் அருந்தக் கொடுப்பதுடன், வெப்பநிலைமைக்கு ஏற்றவாறான ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் சிறுவர் விசேட மருத்துவ அதிகாரி தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

Read more...

மேலும் கால அவகாசம் எதற்கு? இலங்கை வெளிவிவகார அமைச்சு என்ன கூறுகின்றது?

இலங்கை தனது அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டினூடாக, நடைபெற்றுவருகின்ற 40வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரனையுடன் கூடிய உடன்பட்ட ஓர் தீர்மானத்தினூடாக, 30/1 ஒக்டோபர் 01 2015 தீர்மானத்திற்கான கால எல்லையை விஸ்தரிப்பதற்கு, இலங்கை எதிர்பார்க்கின்றது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், இந்த முயற்சி இலங்கையின் நடைமுறைப்படுத்தும் செயன்முறையை சான்றுறுதிப்படுத்துவதோடு, ஐ.நா. மற்றும் இருபக்க பங்குதாரர்களுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டுடன் கூடிய தொடர்ச்சியான அதனது கொள்கையையும் சான்றுறுதிப்படுத்துகின்றது.

2017 பெப்ரவரி-மார்ச் இல் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில், 30/1 ஒக்டோபர் 01 2015 தீர்மானத்திற்கான கால எல்லையை மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிகரித்துக் கொள்வதற்காக (அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் மெகடோனியா மொன்டனக்ரோ) முக்கிய குழுக்களுடன் இலங்கை அரசு ஒருங்கிணைந்து செயற்பட்டது.

தொடர்ந்து மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில் இலங்கை மற்றும் பொது அபிப்பிராயத்தினால் உடன்பட்ட 34/1 மார்ச் 2 2017 தீர்மானத்திற்கேற்ப பேரவையின் 40வது அமர்வில் 3ஃ01 தீர்மானத்தின் நடைமுறை சம்பந்தமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் விரிவான ஓர் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு பணிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் செயற்பாடு மார்ச் 20/ 2019 அன்று பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற இந்த அறிக்கையை முழுமையாக தழுவியதாகவே இருக்கின்றது. இப்பின்னணியில் உடன்பட்ட ஓர் தீர்மானத்தினூடாக மேலதிக இரண்டு வருடங்கள் கால எல்லை அவசியப்படுகின்றது.

மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதும் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழுக்களில் கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் ஐக்கிய இராச்சியம் பிரதானம் வகிக்கின்றது.

எனவே இந்த உடன்பட்ட தீர்மானத்தில் இலங்கை முக்கிய குழுக்களின் தலைவரான ஐக்கிய இராச்சியத்துடன் கைகோர்க்கின்றது. இந்த மூலோபாயமானது பலமான நடைமுறைப்படுத்தல் செயன்முறையினூடாக இலங்கையர்களுக்கெதிராக தொடர்ந்து வளர்ந்து வந்த சர்வதேச போர்க்குற்றங்களை தடுக்கும்.

2015 இன் தீர்மானம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளும் 2009ம் ஆண்டு இலங்கையை தரிசித்த ஐ.நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அர்ப்பணிப்புக்களின் ஓர் விளைவாகும்.

கீழ்வருவது 2009 இல் இலங்கைக்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விஜயத்தின் முடிவில் இலங்கை அரசு மற்றும் ஐ.நா ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வமான அறிக்கையின் கடைசிப் பந்தியாகும்.

சர்வதேச மனித உரிமைகள் படித்தரங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச கடமைகள் என்பவற்றை பாதுகாப்பதோடு, இலங்கை அதனது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் அதன் உறுதியான அர்ப்பணிப்புக்களை மீள வலியுறுத்துகின்றது.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தை மீறுவதற்கான பொறுப்புணர்வுச் செயன்முறையின் முக்கியத்துவத்தினை செயலாளர் நாயகம் கோடிட்டுக் காட்டினார்.

அரசாங்கம் அக்குற்றச்சாட்டுக்களை நிவர்த்திப்பதற்கான அளவீடுகளை மேற்கொள்ளும்.

காணமல் போனோர் அலுவலகத்தினை ஸ்தாபித்தமை இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உருவாக்கும் நோக்கில் நஷ்டஈட்டுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தமை சுதந்திர ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தமை மற்றும் தகவல் அறியும் உரிமை உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவந்தமை போன்ற பல்வேறு உறுதியான எட்டுக்களை கடந்த சில வருடங்களில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது.

இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் உள்ளடங்களாக பல பொருளாதார இலாபங்களை இலங்கை மக்கள் அனுபவிப்பதற்கு வழிவகுத்தது. தொடர்கின்ற செயன்முறைகளை வலுப்படுத்துவதற்காக இன்னும் சில சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. முற்றுமுழுதுமான நல்லிணக்க செயன்முறை இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

போர் வீர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தவர்கள் மேற்கு ஆபிரிக்காவின் ஓர் மாநிலமான மாலி மற்றும் ஏனைய இடங்களில் சமாதானத்தை காக்க தற்போது எமது படைவீரர்கள் ஈடுபட்டிருப்பதனை மிக இலகுவாக மறந்து விட்டார்கள்.

இது எமது உடன்பட்ட தீர்மானத்தின் மூலம் சாத்தியமாகியது.

மேலும் இலங்கை படைவீரர்களுக்கான அதிக பயிற்றுவிப்பு வாய்ப்புக்களோடு சர்சதேசத்திற்கும் இராணுவத்திற்குமிடையிலான ஒத்துழைப்பு விரிவாக்கப்பட்டது. மனித உரிமைகள் பேரவையின் செயன்முறையினூடாக எமது போர் வீரர்கள் புகழ் பாதுகாக்கப்பட்டதோடு சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் பெறப்பட்டது. அண்மையில் சமாதானம் காத்த எமது இரு படைவீரர்களின் இறுதிச்சடங்குகளின் போது இதனை எம்மால் உணர முடிந்தது.

இந்த உருண்ட தீர்மானத்தின் வரைபு கடந்த வருடம் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நிலமையை சமாதான முறையில் தீர்ப்பதில் ஜனநாயக நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட உறுதிமிக்க செயற்பாட்டை பறைசாற்றுகின்றது. அது எமது தேசிய நிறுவனங்களின் சுதந்திரம் நம்பகத்தன்மை மற்றும் நெகிழ்திறன் என்பவற்றுக்கான உறுதியான சாட்சியமாகும்.

இலங்கை அரசின் உடன்பட்ட உருண்ட தீர்மானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொது மக்களை பிழையான முறையில் வழிநடாத்துவதற்கும் அரசியல் இலாபங்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்டவையே.

எனினும், 2015ம் ஆண்டு அரசு எப்படி ஆட்சிக்கு வந்தது என்றும் அந்நேரம் உடன்பட்ட தீர்மானத்தின் மூலம் மிகப்பெறும் பேரழிவை தடுப்பதற்கு அது எவ்வாறு உதவியது என்றும் இந்நாட்டு பொது மக்கள் மிகவும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

தற்போதைய முயற்சி ஒன்றுமில்லை. மாறாக நல்லிணக்க சமாதான தேசிய ஒருமைப்பாடு சாரந்த அம்சங்களுக்காக இலங்கை அரசாங்கம் இன்னும் மேலதிக நேரம் எதிர்பார்க்கின்றது.

எனினும் 2018 ஒக்டோபர் 26 இன் அரசியலமைப்பு சதியின் காரணமாக சில அவசியமான சட்டவிடயங்களை இலங்கை அரசால் முடிவெடுக்க முடியாமல் போனது. நாடு மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலைமையில் வெட்கமின்றி அற்பமான அரசியல் இலாபங்களை அடைய முனையும் இவர்கள்தான் நம் தாய் நாட்டின் உண்மையான துரோகிகள் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம் நீடிப்பு

இன்றுடன் நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் காலம் , எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி
ஆணைக்குழுவிற்கு, இதுவரை 450க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றில் 270 முறைபாடுகளில் 15 முறைப்பாடுகள், ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக, விசேட பொலிஸ் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவை, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read more...

வரவு செலவுத்திட்டம் மங்கள சமரவீரவின் கனவுக்கோட்டை - நனவாக்க விடமாட்டோம் - கங்கணம் கட்டுகிறார் தயாசிறி ஜயசேகர

வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக, ஸ்ரீ ல.சு. கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இது தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ள வரவு- செலவு திட்டம். இந்த வரவு செலவுத் திட்டத்தை தாம் ஆதரிக்கப் போவதில்லை. ஆகவே, சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து இதனைத் தோற்கடிக்க ஸ்ரீ ல.சு. கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.

தேர்தலுக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கட்டியெழுப்பட்டுள்ள கனவுக்கோட்டை இந்தவருட வரவு செலவுத்திட்டம். இதனை நனவாக்க முனைவது யதார்த்தமல்லவென்றும் அவர் கூறினார்.

Read more...

மரண தண்டனை நிறைவேற்றத்தில் எந்தவித மாற்றமும் இல்லை - ஜனாதிபதி உறுதி

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று, ஜனாதிபதி உறுதிபட தெரிவித்துவருகின்றார். ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஜனாதிபதி இந்த விடயத்தை மீண்டும் தெரிவித்துள்ளார்.

எந்த எதிர்ப்பு வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்றும் விடயத்தில் மாற்றம் இல்லை. ஐரோப்பியா சங்கத்தினதோ, வேறு நிறுவனங்களினதோ எதிர்ப்புக்கள் வந்தாலும், நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி மேலும் உறுதியளித்தார்.

அதேநேரம் போதை பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் தினம் தனக்கு தெரியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, சிறையில் இருக்கும் போதைபொருள் வியாபாரிகள் போதைபொருள் விநியோகத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இதனிடையே கடந்த 1976 ம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றியதன் பின்னர், இற்றைவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்

ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். களுத்துறையிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Read more...

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் இயக்கம்

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் ​ மற்றும் வணிக விஞ்ஞான பீடங்களின் கற்றல் நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக்கத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி முதல் மூடப்பட்ட நிலையிலேயே, இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முன்னதாக குறித்த பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து கற்றலை தொடரும் மாணவர்களை நேற்று மாலை வேளைக்குள் விடுதிக்கு சமூகமளித்திருக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அனைத்து மின்சார பாவனையாளர்களுக்குமான முக்கிய அறிவிப்பு

தினசரி மின்சாரப் பாவனையின்போது சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அண்மைய நாட்களில் நிலவிய வரட்சியுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வலுவாக குறைவடைந்துள்ளது. இந்த வறட்சி காரணமாக, காசல் ரீ, மௌசாகலை, கொத்மலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனலவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 41.8 வீதமாக குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக மின்சார பாவனையாளர்கள் அனைவரும் மிகவும் சிக்கனமான முறையில் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்த வருடத்தில் மாத்திரமன்றி வருடா வருடம் மார்ச் மற்றும் ஏப்பரல் மாதங்களில் வறட்சி காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைவதனால், நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இதனால் குறித்த இரண்டு காலப்பகுதியில் அனைவரும் மின் பாவனையை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read more...

Wednesday, March 6, 2019

சொந்த காணிகளை விடுவித்த ஜனாதிபதிக்கு, வலிகாமம் வடக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமது சொந்த காணிகளை விடுவித்த ஜனாதிபதிக்கு, மனமார்ந்த நன்றிகளையும், மகிழ்ச்சியும் வலிகாமம் வடக்கு மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணி கடந்த மார்ச் 4 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில், அங்கு தற்போது குடியேறியுள்ள பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பகுதிகளான வலி.வடக்கு, பலாலி கிழக்கு, ஜே.253 கிராம சேவையாளர் பிரிவில் 1 ஏக்கரும் 120 குழியும் மயிலிட்டி துறை வடக்கு ஜே.251 கிராம சேவையாளர் பிரிவில் 3 ஏக்கரும் ஜே.246 கிராம சேவையாளர் பிரிவில் 13 ஏக்கரும் 155.6 குழியும், அதன் பாதையுமாக மொத்தம் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் பொதுமக்கள் தற்போது சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் விடுவிக்கப்பட்ட பகுதியில் மயிலிட்டி துறை வடக்கில் கிராம சேவகர் பிரிவான ஜே-251 சில பகுதிகளும் உள்ளடங்குகிறது.மேலும் மயிலிட்டி கடற்கரையோரமாக விடுவிக்கப்பட்ட மக்களின் காணியில் தென்னங்கன்றுகளை இராணுவத்தினர் நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கில் உள்ள காணிகளில் மயிலிட்டி வடக்கில் வீதியில் ஒருபக்க மக்களின் வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் மற்றைய பக்கம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

அத்துடன் இராணுவத்தினர் ஏற்கனவே அங்கு பயன்படுத்திய சில வீடுகள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளதுடன் இராணுவத்தினரால் புதிதாக கட்டப்பட்டவை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















































Read more...

மரண சடங்கிற்காக, நான்கு நாட்கள் வீதி மூடப்பட்டது.

மரண சடங்குகளின் நிமித்தம் நான்கு நாட்களாக பகல் இரவு முழுவதும், பிரதான வீதியொன்று மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி நற்பிட்டிமுனை கிராமத்தை இணைக்கும் வீதியே, இவ்வாறு மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மரண வீட்டு நிகழ்வொன்றிறற்காக, நிழல் குடை அமைக்கப்பட்டது.

எனினும் தற்போது வரை நிழல் குடை அகற்றப்படாமையினால் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் அவ்வீதியினால் பயணம் செய்வோர் மாற்று வீதியை பயன்படுத்துகின்றனர்.

அங்குள்ள இளைஞர்கள் சிலர், குறித்த நிழல் கூடையில் கரம் விளையாடி வருவதாகவும், வீதியால் செல்வோரை மாற்று வீதியால் செல்லுமாறு அச்சுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர காரணமாக அமையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, மக்களின் கோரிக்கையாகும்.




Read more...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு குறித்த விசாரணைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு - சவுக்கடி பகுதியில் வைத்து மர்மமான முறையில் எலும்புக் கூடு ஒன்று மீட்க்கப்பட்டிருந்தது.

அப்பகுதியில் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு முயற்சிக்கப்பட்ட போதே, குறித்த மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டது. இதனை அடுத்து,
மட்டக்களப்பு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு சென்ற வந்த காவல்துறையினர் எலும்புக் கூடை மீட்டதுடன், இது குறித்த விசாரணங்களை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே மன்னார் மனித எலும்பு கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கையின் வன்பிரதி, மன்னார் நீதவானிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் மந்த எலும்பு கூடுகளின் அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச இதனை உறுதிப்படுத்தினார்.

Read more...

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் - சட்டமா அதிபர் திணைக்களம்

கொழும்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்ற பத்திரம் தாக்கல் ஒன்று செய்யப்படவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்கள தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில், தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர். இது குறித்த தொடர் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகொடவிடம், கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பொருட்டு விசாரணை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர்.

எனினும் அதிகாரிகள் சென்ற வீடு, முன்னாள் கடற்படைத் தளபதிக்கு சொந்தமானதல்ல என்பதுடன், அது போலியாக வழங்கப்பட்ட முகவரி என்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கவும், அவரை உடன் கைது செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

Read more...

பசு மாடுகள் இறக்குமதியில் மோசடி - பால் பண்ணையாளர்கள்

பால் பண்ணையாளர்கள் 25 பேர் கையெழுத்துடன், பசு மாடுகளின் இறக்குமதி குறித்து பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பசு மாடுகள், அவுஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்படும் போது, பல மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவித்து, பால் பண்ணையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு 20,000 பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்ய,கிராமிய பொருளாதார அமைச்சினால் உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்டு தமக்கு வழங்கப்பட்ட பசுக்கள் அனைத்தும், தரக்குறைவானவை என பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தரக்குறைவான பசு மாடுகளை வளர்ப்பதால், வருமானம் போதியளவு கிடைப்பதில்லை என்றும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக, கடும் வாகன நெரிசல்.

பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக, கொழும்பில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று திரண்டு, கொழுப்பு நகரமண்டப வீதியில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் காவல்துறையினரால், கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என, ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, ஆர்ப்பாட்டம் இடம்பெறும் கொழுப்பு நகர மண்டப வீதியில், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள், மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

பாகிஸ்தான் தூதரகம் இலங்கையில் நடாத்தும் செயலமர்வு 11ல்

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பௌத்த மற்றும் காந்தார நாகரீகம் என்ற தலைப்பில் செயலமர்வு ('Buddhist and Gandhara Civilization) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செயலமர்வு ஹொமாகமயிலுள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 11ஆம் நடைபெறவுள்ளது. இந்த செயலமர்வில் சீனா ஜேர்மன் பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

Read more...

நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் ரஞ்ஜன் ராமநாயக்க

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களை திடீர் மருத்துவப் பரிசோதனையொன்றுக்கு உட்படுத்தினால், பலருடைய உடம்பில் போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கலாம் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று தெரிவித்து மீண்டும் ஒரு அமளி துமளியை ஏற்படுத்தி இருந்தார்.

வரவு செலவுத் திட்ட நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். கொக்கைன் பயன்படுத்துபவர்களை இன்றும் நாடாளுமன்றத்தில் சந்தித்தீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் கேள்வி எழுப்பியதற்க்கே, அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருந்தார். கொக்கைன் விவகாரத்தில் ரஞ்ஜன் ராமநாயக்க அண்மையில் வாக்கு மூலம் அளித்திருந்த போதிலும், அந்த அறிக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Pride of Asia விருதை பெற்றார் சபாநாயகர்

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்திய அரசாங்கத்தினால் Pride of Asia என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் நிறுவனம், Pride of Asia என்ற கௌரவ விருதை சபாநாயகருக்கு வழங்கியது. இந்த நிறுவனத்தின் நிர்வாகம், இந்தியாவின் கீர்த்தி மிக்க ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரிலான இந்த விருதை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான விஞ்ஞானி பாரத் விஜய உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.


Read more...

இராணுவ நினைவு வருடம் பிரகடனம்

இறுதி யுத்தம் நடைபெற்று 10 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்நீத்த, காணாமற்போன மற்றும் அங்கவீனமற்ற இராணுவத்தினருக்குத் தேசத்தின் கௌரவத்தினை செலுத்துவதற்கும் நினைவுகூருவதற்கும் வருட வருடம் இராணுவ நினைவு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டு, பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இராணுவ வெற்றிக்கு பத்து வருடங்கள் பூர்த்தியையும் இந்த 2019ஆம் ஆண்டில் இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி, பரந்தளவிலான வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலில் ரணவிரு சேவாஅதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்தி அதனுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டுள்ள முத்தாலாவது இராணுவ கொடி, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜம்மிக்க லியனகேவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது.


இந்தநிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, விஜேயதாச ராஜபக்ஷ, மகிந்த அமரவீர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள். மாகாண முதன்மை செயலாளர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகள் பங்குபற்றினர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com