Monday, March 4, 2019

கண்டியில் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்

கண்டி நகரத்தில் நேற்று முதல் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. கட்டம்பேயில் இருந்து, புதிய வீதி ஊடாக கண்டிக்குள் பிரவேசித்து பழைய வீதி ஊடாக வெளியேறும் வகையில் இந்தப் புதிய போக்குவரத்துத் திட்டம் அமுலாகிறது.

இந்த புதிய போக்குவரத்து நடைமுறையின் மூலம் . கண்டி நகரத்திற்கு வருகை தரும் மற்றும் வெளியேறும் நேர காலம் ஒன்றரை மணித்தியாலத்தில் இருந்து 25 நிமிடங்களாகக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

Read more...

நடிகை உள்ளிட்ட 17 பேர் கொக்கேய்னுடன் சிக்கினர்

மாத்தறையிலுள்ள ஹோட்டலொன்றில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகை உள்ளிட்ட 17 பேர் கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்கள்.

குறித்த 17 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் 13 இளைஞர்களும் உள்ளடங்குவதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் 18 முதல் 24 வயதுடைய, கொழும்பைச் சேர்நதவர்கள் என்று பொலீசார் தெரிவிக்கின்றனர். கைதான 17 பேரிடமும் சுமார் 20 gக்கும் அதிக கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மதியம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

பொலிஸ் விசேட குழு, பங்களாதேஷூக்கு பயணம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் அதிகாரியொருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பங்களாதேஷூக்கு 5 நாட்களை உள்ளடக்கிய பயணம் ஒன்றை மேற்க்கொண்டுள்ளார்கள்.

பொலிஸ் விசேட குழு, அந்நாட்டின் பொலிஸ்மா அதிபர் மற்றும் போதைப்பொருள் பிரிவின் தலைவரையும் சந்திக்கவுள்ளது.அண்மையில் தெஹிவளை – இரத்மலானை பகுதிகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலான விசாரணைகளுக்காக குறித்த இருவரும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடத்தின் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்று 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயினுடன் பங்களாதேஷ் பெண்ணொருவரும் அனைத்து தொடர்ந்து 31 ஆம் திகதி தெஹிவளையில் 278 கிலோகிராம் ஹெரொயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர், தெஹிவளை – இரத்மலானை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் 5 பேர் அண்மையில் பங்களாதேஷ் பொலீஸாரினால் கைதாகினர். குறித்த 5 பேரிடம் அந்நாட்டு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த போதிலும், தற்போது சென்றுள்ள விசாரணையாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்று பொலீசார் கூறுகின்றனர்.


Read more...

Sunday, March 3, 2019

அநுராதபுரம் வைத்தியசாலையில் தீ - நூதனமான முறையில் லட்சக்கணக்கில் பணத்திருட்டு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மிகவும் நூதனமான முறையில் சுமார் 63 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டடத்தொகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஒருவர் வைத்தியசாலையின் பணப்பெட்டில் இருந்த குறித்த பணத்தொகையை கொள்ளையிட்ட அதேநேரம், வைத்தியசாலையின் முக்கிய ஆவணக்கோப்புக்கள் சிலவற்றையும் தீயில் எரித்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் துலான் சமரவீர பொலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

இந்தியத் தரப்பில் இருந்து 2200 பேரளவில் கச்சதீவு திருவிழாவிற்கு வர அனுமதி

இலங்கை இந்திய பக்தர்களை இணைக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் இந்த வருட திருவிழா நிகழ்வுகளுக்கு பக்கதர்களுக்கான சேவையை வழங்கும் பொருட்டு உள்நாட்டு படகுகளுக்கும், மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்குவதற்கு அனுமதி வழங்க, தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

கச்சதீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா இந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், இந்திய பக்தர்களின் வருகை தொடர்பில் ‘த ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல மீனவ குழுக்கள் தமக்கான அனுமதியை தமிழக அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வருடா வருடம் முவைத்து வருகின்றபோதிலும், மட்டுப்படுத்தப்பட்ட மீனவர்களும் படகுகளும் இலங்கை இந்திய தரப்பில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறு இருப்பினும் இந்த வருடம் திருவிழாவிற்காக 2,215 யாத்திரிகர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ள நிலையில், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலில் எத்தனை படகுகளை விடுவிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டுமா? - அமைச்சர்கள் கபீர் ஹாஷிம் , ரவூப் ஹக்கீம் கருத்து

யுத்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவாகவே செயற்பட்ட போதிலும், நடப்பு நாட்களில் ஜனாதிபதி முறைமை குறித்து பொருத்தமான ஒரு தீர்மானத்தை தமது கட்சி எடுக்கும் என அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்தநிலையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் நாட்டுக்கு முக்கியமான காலப்பகுதியில் அதனை நீக்கவேண்டும் என்று கூறியவர்கள், இப்போது அந்த அந்த அவசியம் இல்லாதபோது நிறைவேற்ற ஜனாதிபதி முறைமை வேண்டும் என்கிறார்கள்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி முறைமை குறித்து பொருத்தமான ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையேயே தற்போதைய சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று, உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கிறார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தச்சட்டம் குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அப்படி பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரங்கள் மூலமாக தீர்வுகள் குறித்து திருத்தங்கள் கொண்டுவந்தால் அதற்கு நாம் நிறைவான உடன்பாட்டை வழங்குவோம். மாறாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இது சரியான நேரம் இல்லை.

தற்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒரு சிலரது தனிப்பட்ட தேவைக்காக மட்டுமே கையாளப்படுகின்றது. இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுவரும் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பது பொருத்தமானது இல்லை.

ஆகவே, முதலில் அதிகார பகிர்வு முக்கியம். அதன் ஊடாக அரசியல் முரண்பாடுகளுக்கு தீர்வை அடைய நினைத்தால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கின்றோம் என்றுஅமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

Read more...

கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் ஒருவர் தீயிட்டு தற்கொலை

கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் தன்னைத்தானே தீயிட்டு கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பக்தர் ஒருவர் தன்னை தானே தீயிட்டு, கதிர்காமம் ஆலயத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குள் நுழைந்துள்ளார். இதனால் ஆலயத்தினுள்ளும் தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை கவனித்த மற்றைய பக்தர்கள் தீ பரவலை கட்டுப்படுத்தி, தீக்காயங்களுக்கு உள்ளான நபரை ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள். எவ்வாறு இருப்பினும் குறித்த நபர் எதற்காக தன்னைத்தானே தீயிட்டு விஷ்ணு ஆலயத்தினுள் வந்து தற்கொலை செய்துள்ளார் என்ற விடயம் தொடர்பில், இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


Read more...

இலங்கையில் திடீர் வைரஸ் தொற்று - சுகாதார துறை

அண்மைக்காலமாக நாடு முழுவதும் மர்மமான வைரஸ் காய்ச்சலொன்று பரவி வருவதாக, சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று காரணமாக உடலிலுள்ள வெண்குருதி சிறு துணிக்கைகள் மற்றும் குருதி சிறுதட்டுக்களின் அளவு குறைவடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்று இளம் வயதினரை தாக்கியிருந்தாலும், தற்போது சிறுவர்களுக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இருமல், சளியுடன் காய்ச்சல் நீடித்தால், உடலின் வெண்குருதிக் கலன்களை பரிசோதித்து, உரிய மருத்துவ ஆலோசனைகளின் படி செயல்பட வேண்டும் என, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, அதிக ஓய்வெடுப்பதுடன் நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என, விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடு! பத்த வச்சாப் பத்திக்கோ , வாய் வெடித்த மொட்டுகாரி.....

இன்று காலை, யாழ்ப்பாணம் சென்றேன். போகும் வழியில், வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் நாதஸ்வர இசைக்கேற்ப மயிலாட்டம், குதிரை ஆட்டம் ஆடும் கலைஞர்கள் நடனம்மாடி வந்தனர். தெருக்கரையோரம் விடுப்புப் பார்த்தவரை விசாரித்தபோது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் மாநாடு நடக்கவிருப்பதாகவும், அதையொட்டியே இந்த மேளதாளங்களுடனான மகளிர்பேரணி வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நிற்பதாக கூறினார். நாதஸ்வர வித்வான்கள் "ஒட்டகத்தைக் கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ, வட்ட வட்டப் பொட்டுக்காரி...... பத்த வச்சாப் பத்திக்கும், வாய் வெடித்த மொட்டுகாரி..... அதி காலை சேலை சொல்லுமடி மிச்சத்தை " என்ற தமிழ் பெண்களின் சர்வதேச கீதத்தை உச்சஸ்தாயில் வாசிக்க, குயில் ஆட்ட கலைஞர்களும், குதிரை கலைஞர்களும் துள்ளித்துள்ளி ஆடினார்கள். மகிழ்ச்சி பொங்க, பெருமையாக நூற்றுக்கணக்கான பெண்கள் இசைக்கேற்ப அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

சனக் கூட்டத்துக்கு இடையில், உற்று கவனித்த போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணன், குதிரைக் கஜேந்திரன் போன்ற தலைவர்களுக்கு மண்டபத்தின் வாசலுக்கு அதி உச்ச மரியாதையாக அழைத்து வந்தார்கள் சில பெண்கள். கட்சியின் கொடியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றிவைத்தார். பெண்கள் மாநாடு என்றால், அதுவும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மாநாடு என்பதால், அம்மாநாட்டில் பேசப்படும் உரைகளை கேட்கும் ஆர்வத்தில் நானும் உள்ளே நுழைந்தேன்.

உள்ளே மேடையில் மேற்படி தலைவர்களின் தலைமையில்- அவர்களாலேயே மாலை அணிவித்தல், விளக்கு ஏற்றுதல், போன்ற சம்பிரதாயங்கள் நிகழ்த்தப்பட்டன. ஆண் தலைவர்கள் முன்னணியில் வீற்றிருக்க மாநாடு ஆரம்பித்தது. தலைமை உரையாற்றிய அக்கா ஒருவர் கவிதை நடையில் " இந்தியன் ஆமி தொடக்கம், ஓட்டுப்பட்டை, ஒத்தோடிகள், தமிழ் தேசியம், துரரோகிகள் " எல்லாரும் எவ்வாறு தமிழ் பெண்களை மானபங்கம் செய்தார்கள், கற்பழித்தார்கள் என ஆக்ரோஷமாக விவரித்தார். இங்கு "கற்பழித்தார்கள்" என்று கூறப்படும் சொல் எனது சொல்லல்ல. அங்கு அவர்களால் உபயோகிக்கப்பட்ட சொல்.

இது மாதிரிதான், கடந்த வருடம் யாழ்ப்பாண நூல் நிலையத்தில் NGO-களின் கூட்டமைப்பினால் சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட போது, அங்கும் கற்பழிப்பு என்ற சொல் சரளமாக உபயோகிக்கப்பட்டது. தமிழ் பெண்களின் கற்பு பற்றிய கவலை எல்லோர் உரையின் அடி நாதமாகவிருந்தது. பெண்களுக்கான ஒழுக்கம்- அதாவது பாலியல் ஒழுக்கம் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் போரின் பின் இல்லாமல் அழிக்கப்பட்டுள்ளது என்று அதில் பங்கு பற்றிய பேச்சாளர்கள் எடுத்துரைத்தார்கள். ஒட்டு மொத்தத்தில், பெண்கள் திருந்த வேண்டும், என்பதே அந்த மாநாட்டின் ஆரம்ப நாள் உரைகளின் உள்ளடக்கமாக விரிந்தது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூட தனது உரையில் கற்பு பற்றி அதிகமாக பேசினார். அதற்குமேல், பொறுக்க இயலாத நான், இதையெல்லாம் ஆட்சேபிக்க முனைந்து கிட்டத்தட்ட அழாத குறையாக - அடிவேண்டாத குறையாக மாநாட்டை விட்டு வெளியேறினேன். அல்லது வெளியேற்றப்பட்டேன். ( அம் மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மைத்ரி விக்ரமசிங்க அவர்கள் மட்டுமே போரின் பின்னான தமிழ் பெண்களின் நிலை- மற்றும் பெண்ணொடுக்கு முறையின் அடித்தளம் என்பது பற்றி மார்சிஸ பெண்ணிய பார்வையில் உரையாற்றினார்.)

இது ஒரு பக்கம் இருக்க, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் மாநாட்டின் இரண்டாவது உரை முடிந்தபின் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாசலில் வந்து நின்று, கொஞ்சம் சத்தமாக மாநாட்டைப் பற்றி முணுமுணுத்தேன். "இது என்ன ஆண்கள் மாநாடா அல்லது அவர்களுக்காக வைக்கப்படும் பெண்கள் மாநாடா.?" "... கற்பழிப்பு என்ற சொல்லே சமூகத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது என்று நினைத்தேன், இங்கு அடிக்கடி பாவிக்கிறார்கள்."? . "கஷ்டப்பட்ட வன்னி பெண்களைக் கொண்டு வந்து, அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்" ... "இதெல்லாம் நியாயமில்லாத வேலை"..... " தமிழ் தேசியம் முக்கியம்தான், ஆனால், அதற்கு முன், நமது சமூகத்தால்- நமது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், ஒடுக்குமுறை, வன்முறை, பாலியல் சுரண்டல் பத்தி பேச வேண்டும்.... " .... இங்க என்ன நடக்குது...... . ??

இந்த இந்த முணுமுணுப்பு முடிவதற்கு முன்பேயே, வாசலில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் படை-ஆண்கள் படை என்னை முறைத்துப் பார்த்தது. மரியாதையாக வெளியேறினேன்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈ பி ஆர் எல் எப், புல்லட் போன்ற இயக்கங்கள் பெண்ணொடுக்குமுறை பற்றி பேசின. EPRLF இயக்கம் அன்று பெண் விடுதலைக்கான, "செந்தணல்" என்ற மாதாந்த இதழை வெளியிட்டதாகவும் நினைப்பு. "எழுந்து வருகிறோம், அடுக்களையிலிருந்து, தீப்பிழம்பாக" என்ற தலைப்பிலான கவிதை ஒன்றை அவ்விதழில் வாசித்ததாக நினைவிருக்கிறது. அரசியற் குறை நிறைகளுக்கு அப்பால், மேற்படி இயக்கங்கள் இரண்டும், தேசிய விடுதலை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, சமகாலத்தில் பெண் விடுதலைக்கான போராட்டமும் நடைபெற வேண்டும். (ஈ பி ஆர் எல் எப், இதே போலவே சாதி ஒழிப்பு போராட்டமும் சமகாலத்தில் நடைபெற வேண்டும்) என்று பிரச்சாரம் செய்தார்கள். தமிழ் தேசியம் என்பது மிடுக்குடன் பலமாக இருக்க வேண்டுமெனில் அகமுரண்பாடுகள் களையப்படல் வேண்டுமென்பது இவ்வியக்கங்களின் கருத்தாக இருந்தது.

அதே காலத்தில், எனக்கு தெரிந்தமட்டில் புலிகள் இயக்கமும், உண்மையான மார்க்சிச லெனினிய இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக் கொண்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும், பெண் விடுதலைக்கான முன்னெடுப்பை கொச்சைப் படுத்தினார்கள். பெண்கள் தமது சுதந்திரத்துக்காக போராடுவதென்பது, தமிழ் சமூகக் கட்டமைப்பைக் குலைத்து விடும். சில குறைபாடுகள் தமிழ் கலாச்சாரத்தில் இருந்தாலும், அதை நாங்கள் தமிழீழம் உருவாகிய பின் சீர் செய்வோம், எனக் கூறினார்கள். சில இடதுசாரிகள், அதற்குமேல் போய், சோசலிச தமிழீழம் பெண்களுக்கு விடுதலை கொடுத்து விடும், இப்போ நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. பெண்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளத் தேவையில்லை, என்று பெண் விடுதலை பற்றிய தம் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தினார்கள்.

பிற்காலத்தில் காலத்தில், புலிகள் மற்றும் Telo போன்ற இயக்கங்களும், இடதுசாரியம் கதைத்த NLFT இயக்கமும் தமது அரசியல் -இராணுவ தேவைகளுக்காக பெண்களை இணைத்துக் கொண்டார்கள்.

எது எப்படி இருப்பினும்,தமிழ் தேசிய இயக்கங்களின் ஆரம்பகாலத்தில், பெண்களை, ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட தமது இயக்கங்களில் இணைத்து கொண்ட விடயமானது ஒப்பீட்டளவில் முற்போக்கானது. பெண்னொடுக்கு முறை பற்றிய, இன்றுள்ள தமிழ் அரசியற் கட்சிகளின் அரசியற் -சமூக -பொறுளாதார போக்குடன் ஒப்பிடுகையில் புரட்சிகரமானது.

2009-க்கு பின்னான காலகட்டத்தில் வடக்கு-கிழக்கு தமிழ் சமுதாயத்தை உற்று நோக்குவோமெனில், பெண்களின் நிலையானது மிகவும் பிற்படுத்தப்பட்டதாக- தாழ்த்தப்பட்டதாக-ஒடுக்கப்பட்டதாகவே உள்ளது. சாதனைகள் பல செய்த பெண் போராளிகளின் சமூகப் பொருளாதார நிலை மிகவும் கவலைக்குரிய விடயமாக- இரத்தம் சொரியும் சமூகக் காயமாக இருந்து வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், போராளிகள் , குழந்தைகளின் ஒடுக்கப்பட்ட- ஒதுக்கப்பட்ட நிலையானது, இன்று, என்ஜிஓக்கள் மற்றும் தமிழ் தேசியம் கதைக்கும் அரசியல் கட்சிகளின் பொருளாதார, அரசியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்?, எத்தனை பெண்கள் விதவையாக வாழ்கிறார்கள்?, எத்தனை பெண்கள் குடும்ப பொருளாதார தலைமை வகிக்கிறார்கள்? போன்ற தரவுகள், NGO - கள் பாரிய நிதியை மேற்கு நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள வழி செய்கிறது. அதேபோன்று, மேற்படி தரவுகளை தமிழ் தேசியக் கட்சிகள் என்று தம்மை கூறிக் கொள்பவர்கள், "இலங்கை அரசாங்கத்தை சர்வதேச தேசத்தின் முன்நிறுத்தி முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்கு நியாயம் கோர" உபயோகிக்கப் படுவதாக கூறப்படுகிறது. என்னை பொருத்த அளவில், போர்க்காலத்தில் நடைபெற்ற பெண்கள் சார்ந்த பாதிப்புக்களை- வன்கொடுமைகளை தமது அரசியல்- சமூக இருப்பை காப்பாற்றுவதற்காகவும்- தமிழ் மக்களை அரசியல் அடிப்படையில் ஏமாற்றுவதற்காகவும் மேற்படி தமிழ் தேசியக் கட்சிகள் உபயோகிக்கின்றன. எனது இக் கருத்து சரியானது தான் என்பதனை, நான், இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் மாநாட்டின் இரண்டாவது உரை முடிவுற முன்னமேயே - அவ் உரைகளினூடாக உறுதிப்படுத்திக் கொண்டேன்.

எண்பதுகளில் ஆரம்பத்தில், தமிழ்தேசிய விடுதலை சார்ந்த போராட்ட காலத்தில் முன்னெழுந்து வந்த பெண் விடுதலைக்கான சிந்தனை நிலை கூட, இன்று நம் தமிழ் சமூகத்தில் இல்லை. பெண்கள் சார்ந்த சமுதாய வளர்ச்சி - போராட்டத்திற்கான சிந்தனை வளர்ச்சி- அது சார்ந்த செயற்பாடுகளின் முன்னெடுப்பு பல பத்து வருடங்கள் பின்தங்கியுள்ளனர்.

எந்த சக்தி ஒரு சமூகத்தில் ஆதிக்கத்தில் உள்ளதோ, அதன் சிந்தனை அடித்தளமே, அச்சமூகத்தின் ஆதிக்க சிந்தனையை இருக்கும். கிட்டத்தட்ட இப்படியான ஒரு வசனத்தை , ஐரோப்பிய தத்துவ ஞானி ஒருவர் கடந்த நூற்றாண்டில் கூறியதாக எங்கோ வாசித்ததாக ஞாபகம்.

பெண் விடுதலைக்கான முன்னெடுப்பின், பின்தங்கியுள்ள நிலையை மாற்ற வேண்டுமெனில், சமூக மாற்றத்திற்காக சிந்திக்கும் அனைவரும் எமது சமூகத்தில் புரையோடியுள்ள "ஆணாதிக்க சைவ சனாதன சிந்தனை முறையை" ஒழிப்பதற்கு முன்வர வேண்டும். இந்த ஆணாதிக்க சைவ சனாதன சிந்தனைக்கு எதிரான போராட்ட முன்னெடுப்பானது, இன்றுள்ள நிலையில் பெண்களின் விடுதலைப் போராட்டத்திற்கான ஆரம்ப புள்ளியாக உள்ளது.

நீயுட்டன் மரியா மைந்தன்.






Read more...

வரவு - செலவு திட்ட தயாரிப்பு பணிகள், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன - மங்கள சமரவீர

வரவு - செலவு திட்ட தயாரிப்பு பணிகள், முடிவடையும் தருவாயில் உள்ளதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். இந்த பணிகளை விரைவாக நிறைவு செய்ய, மனோ தித்தவெல்ல மற்றும் டெஸ்ஹால் டி மெல் ஆகியோர் தமக்கு பெரிதும் உதவியதாக அமைச்சர் மங்கள குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு பணிகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த வரவு செலவுத்திட்டத்தில், இலங்கையில் வறுமை கோட்டுக்குள் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்களும் உள்ளடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறும்.

பின்னர் மார்ச் 13ஆம் திகதி முதல், ஏப்ரல் 5 ஆம் திகதி வரை வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். அத்துடன் அன்றைய தினமே வரவு - செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

அபிநந்தனின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியானது

அண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கடந்த தினம் விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் படி, விமானி அபிநந்தனின் எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையை அண்மித்த போது, விமானி அபிநந்தன் செலுத்தித் சென்ற விமானத்தின் மீது, பாகிஸ்தானிய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதன்போது அபிநந்தன் பரசூட்டின் உதவியுடன் கீழே குதித்துள்ளார். இதன்போதே அவருக்கு முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிநந்தனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய அதிகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அபிநந்தனிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனநாயக நாட்டில் மக்கள் வாழமுடியாதுள்ளது. பொலிஸார் கொலைகாரர்களாக மாறியுள்ளனர். மஹிந்தர்

நாட்டில் பொலிஸாரின் செயற்பாடுகளால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் இரு வர்த்தகர்களை கடத்திச் சென்ற பொலிஸார் அவர்களை கொன்று எரித்துள்ளதுடன் அவர்களது சாம்பலைக்கூட எஞ்சவிடவில்லை என்று சாடியுள்ளார். இந்த நிலைமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பெடுக்கவேண்டும் என்றும் இவை 1987 , 88 களில் இடம்பெற்ற வன்செயல்களை ஒத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வர்த்தக சங்கத்தினருடான சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் தொடர்ந்து பேசுகையில் : சங்கைக்குரிய தேரர்களே! இந்நாட்டில் மக்களின் உயிருக்கு பாரிய அஞ்சுறுத்தல் நிலவுகின்றது. அண்மையில் மனிதன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு காட்டினுள் வீசப்பட்டிருந்தது. அந்த தலையை நாய் ஒன்று கொண்டுவந்தபோதே கொலை விடயம் வெளிவந்தது. அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையின் பின்னணியில் பொலிஸ் காரன் ஒருவன் இருந்துள்ளது அறியவந்துள்ளது. இவ்வாறு இரு பொலிஸார் இருந்தால் முழுபொலிஸாரினதும் நற்பெயருக்கும களங்கம் ஏற்படுகின்றது.

எமது ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் இந்த அளவில் இருக்கவில்லை. பாதாள உலககுழுக்களை நாம் அழித்திருந்தோம். ஆனால் தற்போது அவர்கள் தலைதூக்கியுள்ளார்கள்.

நாட்டிலே கொக்கைன் பாவிக்கின்ற அமைச்சர்கள் உள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார். இந்த தூள் விவகாரத்தால் அரசாங்கமே தூளாகிச் செல்கின்றது.

Read more...

அதிகார பகிர்வு குறித்து, அடுத்த வாரத்திற்குள், அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடப்படும் - லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டில் அதிகார பகிர்வு குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அதிகார பகிர்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அடுத்த வாரத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி, அதிகார பகிர்வு குறித்து சிறந்த யோசனை ஒன்றை தாம் முன்வப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையிலும், தேர்தல் முறையிலும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றில் எந்த இணக்கப்பாடுகளும் கட்சி ரீதியில் எட்டப்படவில்லை.

எனினும் அதிகார பகிர்வு குறித்து பல கட்சிகள், ஒருமித்த போக்கை காட்டியுள்ளன. இது குறித்து நாடாளுமன்றத்தில் செயல்படும் பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எனவே அதிகார பகிர்வின் அடுத்த கட்டமாக, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, தீர்க்கமான யோசனையொன்றை அடுத்த வாரத்திற்குள் முன்வைப்பதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

கண்டி - கலகெதர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

Read more...

மதம் சார் சுதந்திரத்திற்கு, அதிக முன்னுரிமை வழங்கப்படும் - கோட்டாபய ராஜபக்ச

இலங்கையர்களின் மதம் சார்ந்த சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற எளிய அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்து இடம்பெறும் தேர்தலில் பின்னர், எமது தரப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள். அதன் பின்னர் அனைவருக்கும் மத ரீதியிலான சுதந்திரம் அதிகமாக வழங்கப்படும்.

நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள், எம்மைப் பார்த்து இனவாதிகள் என்று அழைக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இனவாதிகள் அல்ல. எந்த இனம் அல்லது மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தாய்நாட்டை நேசிப்பவர்களாக இருப்பதே முக்கியமானது.

எமது ஆட்சிக் காலத்தின் போது, இலங்கையர்களின் தனித்துவமான கௌரவத்திற்கு மரியாதை செலுத்தி, சகலருக்கும் சம உரிமையை வழங்குவதே, எமது இலக்கு என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்த செயல்பாடுகளும், பொது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டே அமைந்தன. எனினும் எமக்கெதிராக பொய்ப்பிரசாரங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், தற்போது இலங்கையர்களுக்கு, உண்மையான அரசியல் தலைவர்கள் யார் என்பது புரிந்திருக்கும் என, அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இலங்கையின் யுத்த சூழலில், ஒருபோதும் எமது தரப்பினர் வெள்ளை வான் கலாசாரத்தில் ஈடுபடவில்லை என, கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் வென்று மக்களை பாதுகாப்பதற்காக, சில நுண்ணறிவு செயற்பாடுகளை மாத்திரமே நாங்கள் மேற்கொண்டோம். அதனை விடுத்தது மக்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான எந்தவித செயல்பாடுகளையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை என அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்றிருந்த யுத்தத்தை வெற்றி கொண்டு, அனைத்து மக்களுக்கும் நிம்மதியான வாழ்க்கையை கொண்டு செல்வதைக்கான ஏற்பாடுகளை செய்தார். இதனை எவரும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். .

Read more...

இரண்டு மாதங்களில் மட்டும், தொடரூந்து விபத்தில் சிக்கி 64 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன - தொடரூந்து திணைக்களம்

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம், தொடரூந்துகளில் மோதி 64 பேர் பலியாகியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாள் ஒன்றுக்கு தொடருந்து விபத்தில் சிக்கி இரண்டு பேர் வீதம் மரணிப்பதாக, தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த அவலத்தை போக்க, தொடரூந்து விபத்துக்களை முடிந்தவரை தடுக்க வேண்டும். அதற்கான முக்கியமான நடவடிக்கைளை தற்போது தொடரூந்து திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக தொடரூந்து தண்டவாளத்தில் நடை பயணம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, எழுதப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த, தொடரூந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த சட்டத்தின் படி, தண்டவாளத்தில் நடை பயணம் மேற்கொள்கின்றவர்களை உடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் இறுக்கமான முறையில் இடம்பெறும் என, தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்தில் நடை பயணம் மேற்கொள்வதன் மூலம்,அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த, சட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தண்டவாளத்தில் பயணித்தல் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தியவாறு பயணித்தல், முறையற்ற விதத்தில், தண்டவாளத்தில் வாகனத்தை செலுத்துதல், தொடரூந்து முன் சுயப்படம் எனப்படும் செல்பி எடுத்தல் போன்றன தொடருந்து விபத்துக்களுக்கான முதன்மைக் காரணங்களாகும்.

இதேவேளை தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய இயந்திர தொடரூந்துகள், அதிக சத்தங்களை எழுப்புவதில்லை. தண்டவாளத்தில் பயணிப்பவர்களுக்கு கூட, தொடருந்தின் சத்தம் கேட்காது. எனவே இத்தகைய தொடரூந்து விபத்துக்களின் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்துக் கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த தொடரூந்துகளுக்கான சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என,

இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தொடரூந்து பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

Read more...

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், மைத்திரிபால சிறிசேனவே - சுதந்திர கட்சி திட்டவட்டம்

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுவார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கிடையிலான பரந்த கூட்டணி தொடர்பாக, இதுவரை உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

எனினும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில், போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிக்க எத்தனித்துள்ள ஏனைய சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியை அமைக்கும் எண்ணம் தமக்கு உள்ளது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தேங்காய் ஏற்றுமதியின் மூலம், 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது - தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

தேங்காய் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடம் மட்டும், 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய், வருமானமாக ஈட்டப்பட்டிருப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்த தொகையை இரு மடங்காக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பொருட்டு, புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்த தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த பல வருடங்களில் தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் பவுடர் போன்ற உற்பத்திகள் பாரிய அதிகரிப்பைக் காட்டியுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சைப் பழங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என, திராட்சை பழச் செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தம்மிடமிருந்து ஒரு கிலோ திராட்சை பழம் 750 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், வியாபாரிகள் அதனை சந்தையில் இரண்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், திராட்சை பழச் செய்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தாம் முன்னெடுக்கும் திராட்சை பழச் செய்கை உற்பத்திக்கு, உரிய நிர்ணைய விலையை தருமாறு, திராட்சை பழச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more...

சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான நடவடிக்கைகள், பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் - கரு ஜெயசூரிய

சட்டம் மற்றும் ஒழுங்கிற்காக பாராளுமன்றத்தால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பான காரியாலயத்தின் கிளையொன்று, மாத்தறையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு என்பன ஒருநாட்டின் மிக முக்கியமான விடயங்களாகும். அதனை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் கடமையாகும். அதன்படி, அவற்றுக்காக பாராளுமன்றத்தில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இந்த நடவடிக்கைக்கு எவரேனும் தடையாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

Read more...

தொழிற்கல்வி குறித்து, இளைஞர்கள் அக்கறை கொள்ள வேண்டும் - கருணாரத்ன பரணவிதான

தொழிற்கல்வி தொடர்பில் இளைஞர் சமுதாயம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டுமென, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். கொடக்கவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வருடாந்தம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரத்தின் பின்னர் பெருமளவிலான மாணவர்கள் தொழிலையோ, மேற்படிப்பையோ தொடராமல் உள்ளனர். இதன் காரணமாக தமது இளமைப் பருவத்தை இழக்கும் இளைஞர், யுவதிகள் பிற்காலத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே காலம் தாழ்த்தாது, இளைஞர் சமுதாயம், உரிய காலத்தில் தொழிலையோ, மேற்படிப்பையோ தெரிவு செய்து, பொருளாதாரத்தை உயர்திக் கொள்ள வேண்டும் என, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான குறிப்பிட்டார்.

Read more...

சர்வதேச விசேட தேவையுடையோர் தினம், இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிறப்பிலேயே விசேட தேவையைக் கொண்ட பிள்ளைகள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும்.

வருடம் தோறும் இவ்வாறான குழந்தைகள் ஐயாயிரத்து 800 பேர் பிறக்கின்றனர். இவர்களுள் 650 பேர், ஒரு வருட காலப்பகுதியில் உயிரிழக்கின்றனர். 200 பேர் மிகவும் மோசமான நிலையில் பிறப்பிலேயே விசேட தேவை கொண்ட நிலையில் பிறப்பதுடன், பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.

பிறப்பிலேயே விசேட தேவை கொண்ட நிலையில் பிறக்கும் பிள்ளைகள் தொடர்பில், பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது பல்வேறு பொதுநல அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான விசேட தேவைகளை கொண்டவர்களை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விசேட தேவை கொண்ட நிலையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை, இரண்டு வீதத்தினால் குறைப்பற்கான தேசிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சர்வதேச வன ஜீவராசிகள் தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலையை பேணுவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி இடம்பெற்ற 68வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில், அரிய வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தக சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, சர்வதேச வனவிலங்கு தினமாக மார்ச் 3ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்த தினத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச வன ஜீவராசிகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஜோன் அமரதுங்க ஐக்கிய நாடுகள் அமைச்சிற்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக, அமைச்சின் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

Saturday, March 2, 2019

மஸ்தானுடன் இணைந்து யாழில் முஸ்லீம் சனசமூக நிலையம் திறந்து வைத்தார் அங்கஜன்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் சனசமூக நிலையம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜூம்மா தொழுகையின் பின்னர் இல 126 முஸ்லீம் கல்லூரி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட இச்சனசமூக நிலையத்தை பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

கடந்த கால யுத்தத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான குறித்த சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சனசமூக நிலைய திறப்பு விழாவில் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான ஏ.சி.எம் மூபின் யாழ் மாநகர சபை உறுப்பினர் என்.எம் நிபாஹீர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Read more...

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீச்சர திருத்தலத்தின் முன்னேற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட செயலகமும் ஆலய நிர்வாகமும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளன.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், இம்முறை திருக்கேதீஸ்சர ஆலயத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கேதீச்சர ஆலய புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாக பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ளமையால், சுவாமியின் வெளி வீதி ஊர்வலம் இடம்பெறாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் சிவராத்திரிக்கான நான்கு கால பூஜைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிபாடுகளை சிறப்பிக்கும் பொருட்டு வேத பாராயங்கள், திருமுறை பாராயங்கள், நாம அர்ச்சனைகளும் இடம்பெறும். நான்காவது கால பூஜையின் போது வசந்த மண்டப தீபாராதனை நடைபெறும். கேதீஸ்வர பெருமாள் வீற்றிருக்கும் பாலாவியில் பக்தர்கள் தீர்த்தம் ஆடுவதற்கான விசேட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து, சுகாதாரம், அன்னதானம், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மாணவர்கள் தமது அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை, எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

இந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவிருப்பதாக, ஆட் பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் முதல் ஆட்பதிவுத் திணைக்களம் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படத்தை இணையத் தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளவுள்ளது. ஆட்பதிவு திணைக்களம் இதற்காக இரண்டாயிரம் புகைப்பட நிறுவனங்களை பதிவு செய்துள்ளது. பரீட்சார்த்திகளும் புகைப்படங்களை மேற்படி பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிறுவனங்களில் மாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

புகைப்பட நிறுவனங்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தளத்தின் ஊடாக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த புகைப்படங்களை பெற்றுக் கொள்வோர், புகைப்பட நிறுவனத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை தமது பாடசாலை அதிபரினால் உறுதி செய்து, தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, ஆட் பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Read more...

வடக்கு, கிழக்கின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் - வே. சிவஞானசோதி

வடக்கு கிழக்கில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், சிறந்த கல்வித் தரத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள முதல்கட்ட பணிகளில், மூன்று பாடசாலைகளுக்கான கட்டடங்கள், உபகரணங்கள், விஞ்ஞான ஆய்வுகூடங்கள் என்பன கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சித் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனை தெரிவித்தார்.

இந்த அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வின் போது, மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்று கையளிக்கப்பட்டது.

அதேவேளை கொம்மாதுறை சித்தி விநாயகர் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதி மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதேபோன்று நெடியமுனை பாடசாலைக்கும் புதிய கட்டடத் தொகுதி ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியின் தலைமையில் இடம்பெற்றன.

இந்தத் திட்டங்களுக்காக 26 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக .
வே.சிவஞானசோதி குறிப்பிட்டார்.

Read more...

இலங்கை விமானப்படையின் பணிகள் குறித்து, ஜனாதிபதி பாராட்டு

68 வருட காலமாக தாய் நாட்டின் இறைமையையும், பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக, இலங்கை விமானப்படை மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் கோலாகலமாக இடம்பெற்ற இலங்கை விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடம் விசேட கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுடன் இடம்பெறும் இந்த ஆண்டு நிறைவு விழாவில், இலங்கை விமானப் படைப் பிரிவினர், தாய்நாட்டிற்காக மேற்கொண்ட முக்கிய பணிகளை பாராட்டி ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

தொழில் திறன்கள், தொழிநுட்ப அறிவு, ஒழுக்க பண்பாடு, அர்ப்பணிப்பு ஆகிய உயர்ந்த பண்புகளுடன் உலகின் முன்னணி விமானப் படைகளுக்கு நிகராக செயற்படும் இயலுமையும், தொழிநுட்ப திறன்களும் எமது விமானப் படையினரிடம் உள்ளதென்று ஜனாதிபதி; நிகழ்வில் வைத்து தெரிவித்தார்.

அத்துடன் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது அனுதாபத்தையும், நன்றியையும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சென்ற ஜனாதிபதியை, விமானப் படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு விசேட அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மலையக கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, இன்றுடன் 204 ஆண்டுகள் பூர்த்தி

மலையக கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, இன்றுடன் 204 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கைக்கு சுதந்திரத் தன்மை இழக்கப்பட்ட தினமாக இத் தினம் கருதப்படுகிறது.

1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி, கண்டி மகுல் மடுவ என்ற மேடையில் வைத்து, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், ஆங்கிலேயரின் கொடியை ஏற்றுவதற்கு எதிராக, சங்கைக்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கள தேரர் செயல்பட்ட நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நாட்டின் தேசிய சுதந்திரத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு அடிப்படையாக, சங்கைக்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கள தேரரின் மேற்படி எதிர்ப்பு காணப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Read more...

தொடரூந்தில் மோதுண்ட மாணவனும், மாணவியும் ஸ்தலத்திலேயே மரணம் - உடல் துண்டங்களாகின.

நாவலப்பிட்டியில் தொடரூந்தில் மோதுண்டு, பாடசாலை மாணவனும் மாணவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தொடரூந்து பாதையில் நடந்து செல்லும் போது, இவர்கள் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் வேளையில் இடம் பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த இரு மாணவர்களுக்கும் முன்பாக பிறிதொரு மாணவி, கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு தொடரூந்துப் பாதையில் நடந்து சென்றுள்ளார். இதன்போது தொடரூந்து அருகில் வருவதை அவதானித்த மாணவர், நடந்து கொண்டிருந்த மாணவியை பாதையிலிருந்து தள்ளிவிட்டு முன்னால் சென்ற மாணவியைக் காப்பாற்ற முயன்ற போது, இவ்விருவரும் தொடரூந்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்திலேயே இவர்கள் மோதுண்டுள்ளனர்.

இந்த விபத்தில் 16 வயதான ஹர்ஷ குமார எனும் மாணவனும், 15 வயதான பியூம பாக்யா செவ்வந்தி எனும் மாணவியுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இம்புல்பிட்டிய மற்றும் தெகித ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி மாவட்ட நிதீமன்ற நிதவான் சம்பவ
இடத்திற்கு வருகை தந்து, விசாரணைகளை மேற்கொண்டார். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக, சடலங்கள் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனையின் பின்னர், இரு சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை, நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது











Read more...

ஐஸ் ரக போதைப்பொருளுடன், கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் கைது

ஐஸ் ரக போதைப்பொருளையும், ஆயுதங்களையும் தம்வசம் வைத்திருந்த ஒருவர், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இவர், அண்மையில் டுபாய் காவல்துறை அதிகாரிகளால் கைதான கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் என்று, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இன்றைய தினம் காவல்துறை அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து சில மின்சாதன பொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

48 வயதான குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இவர் காவல்துறை பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு நிறுத்தப்பட்டது

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புழுவால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய அமைச்சினால் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கமநல சேவை சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த தினம் படைப்புழுவின் தாக்கத்தால், சோளம், குரக்கன், வாழை உள்ளிட்ட பல பயிற்செய்கைகள் முற்றாக அழிவடைந்ததை அடுத்து அந்த பயிற்செய்கைகளை உடன் நிறுத்துமாறு, விவசாய அமைச்சு, உரிய விவசாயிகளிடம் கோரிக்கை முன்வைத்தது.

படைப்புழுவால் ஏற்பட்ட பாதிப்புக்களின் தன்மையை கருத்தில் கொண்டு, தகுந்த இழப்பீடுகளை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், தற்போது அந்த செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கமநல சேவை சம்மேளனத்தின் பணிப்பாளர் வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்த வீரகோன், விவசாய அமைச்சு காலம் தாழ்த்தாது, மக்களுக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

இதேவேளை படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்தவாறு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இந்த இழப்பீடு வழங்கும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த நாமல் கருணாரத்ன, மக்கள் இது குறித்து, விவசாய அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Read more...

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் திடீர் தீப்பரவல்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிப்பகுதியில் அமையப் பெற்றுள்ள டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில், இன்றைய தினம் திடீர் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.30 அளவில் பரவிய இந்த தீப்பரவலால், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

மலைநாட்டில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவுகின்றமையால், நீரை பெற்றுக் கொள்ள மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். நீர் நிறைந்து காணப்படும் பகுதிகளில், இனந் தெரியாத குழுவினர் தீ வைப்பதாக, காவல்துறையில் பொது மக்களும் முறைப்பாடு செய்துள்ளனர்.

வட்டவளை, தியகல, நோர்வூட் உள்ளிட்ட மலையகத்தின் பெருமளவான பகுதிகளுக்கு அண்மைக்காலமாக தீ வைக்கப்படுவகாகவும், இதனால் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி வரும் நிலையிலேயே, இன்று இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதிகளை இலக்கு வைத்து தீ வைக்கப்பட்டால், தமக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு, திம்புள்ள பத்தன காவல்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Read more...

தமிழ்த்தரப்பு உடன்படாத எதையும் நாம் சாதிக்கமுடியாதா? வை எல் எஸ் ஹமீட்

ஆளும் கட்சியில் பங்கேற்கும் ஒரு சிறிய அல்லது சிறுபான்மைக் கட்சியின் பலம் என்பது ஆட்சியின் பிரதான கட்சியின் பாராளுமன்றப் பலம் அல்லது பலயீனத்தில் தங்கியிருக்கின்றது. உதாரணமாக மஹிந்தவின் ஆட்சியில் சிறுபான்மைக் கட்சிகளின் பலம் குன்றியதாய் இருந்தது. காரணம் அவரின் சொந்த பாராளுமன்றப் பலம் தேவைக்கதிகமாகவே இருந்தது. மறுபுறம் சந்திரிக்காவின் ஆட்சி முஸ்லிம் காங்கிரசில் தங்கியிருந்தது. அதனால்தான் மறைந்த தலைவரால் சாதிக்கமுடிந்தது.

இலங்கை வரலாற்றில் ஆளும்கட்சி இம்முறை இருந்ததுபோன்று பலகீனமாக ஒருபோதும் இருந்ததில்லை. அதன்முழுப்பலமும் சிறுபான்மைக் கட்சிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம்கட்சிகள் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. அது அண்மையில் கவிழ்க்கப்பட்ட ஆட்சியை மீண்டும் தூக்கி நிறுத்துவதில் மிகவும் துல்லியமாகப் புலப்பட்டது. ஆனாலும் சாதித்ததெதுவுமில்லை.

ஒரு அடையாளத்திற்காவது அகற்றப்பட்ட ஒரு அலுவலகலகத்தைக்கூட மீளக்கொண்டுவர முடியவில்லை.

மறுபுறம், ஆட்சியின் ஆரம்பத்தில் த தே கூ இன் தேவை அரசாங்கத்திற்கு இருக்கவில்லை; காரணம் ஶ்ரீ சு கட்சியும் ஆட்சியில் பங்காளியாக இருந்தது. ஆனாலும் அரசியல் ராஜதந்திரியான ரணில், மைத்திரியை நிரந்தரமாக நம்பமுடியாது; என்பதை ஆட்சியின் ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டார். அதனால் எண்ணிக்கையின் அடிப்படையில் அன்று அவசியமில்லாதபோதும் த தே கூ ஐயும் ஒரு பங்காளிக்கட்சியாகவே நடாத்தினார்.

ஆட்சி தொடங்கி ஒரு வருடம் செல்வதற்குள்ளேயே மைத்திரி, ஐ தே கட்சியை விமர்சிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தனது மைத்திரி தொடர்பான சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட ரணில் த தே கூட்டமைப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

மறுபுறம், மீண்டும் ஜனாதிபதியாகும் கனவில் மிதக்க ஆரம்பித்த மைத்திரி த தே கூட்டமைப்பை அனுசரித்துப் போகத்தொடங்கினார். இதன்விளைவாக பல தசாப்தங்களாக இராணுவம் கையகப்படுத்திய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டன. இவ்வாறு த தே கூ இருபுறமும் சாதனை அரசியலில் கோலோச்ச ஆரம்பித்தார்கள்.

நாம் நேரடி ஆதரவு கொடுத்தும் இதுவரை சாதித்ததெதுவுமில்லை. இழந்தவற்றின் பட்டியல்தான் நீண்டுகொண்டு செல்கின்றது.

இந்தப்பின்னணியில்தான் சாய்ந்தமருது உள்ளூராட்சி கோரிக்கை விவகாரமும் பார்க்கப்பட வேண்டும்.

கல்முனைப் பட்டினசபையுடன் அன்று இணைக்கப்பட்ட மூன்று கிராமசபைகளில் ஒன்றைப் பிரிப்பதால் ஏற்படும் சமூக சமநிலை மாற்றம்காரணமாக அவ்வாறு இணைக்கப்பட்ட மூன்று சபைகளையும் கல்முனையில் இருந்து ஏககாலத்தில் வேறாக்குமாறு கல்முனை மக்கள் கோருகின்றனர். இதற்கு யாரும் எதிர்ப்பு இல்லை.

அதாவது சாய்ந்தமருதுக்கு தனிச்சபை வழங்கவும் யாரும் எதிர்ப்பு இல்லை. நான்காகப் பிரிக்கவும் யாரும் எதிர்ப்பு இல்லை. தமிழ்தரப்புகூட எதிர்ப்பு இல்லை.

அவ்வாறாயின் என்ன பிரச்சினை?

பிரச்சினை நான்காகப்பிரிப்பதில் அல்ல. மாறாக அவ்வாறு பிரிக்கும்போது முன்னாள் கல்முனைப்பட்டின சபையின் எல்லையில் தாளவட்டுவானில் இருந்து கடற்கரைப்பள்ளி வீதிவரை 2/3 பங்கு தூரத்தை முழுசாக தமக்கு வழங்கவேண்டும்; என்கின்ற தமிழ்தரப்பின் நியாயமற்ற கோரிக்கையாகும்.

1987ம் ஆண்டு திரு பிரேமதாச பிரதேசசபைத் திட்டத்தைக் கொண்டுவந்து இவற்றை இணைக்கமால் இருந்திருந்தால் இன்றுவரை அதே எல்லைகள்தான் இருந்திருக்கும். சாய்ந்தமருது மக்கள் எவ்வாறு அன்றிருந்த கிராமசபையை தமக்கு மீண்டும் கோருகின்றார்களோ அது எவ்வாறு சகலருக்கும் நியாயமாகத் தெரிகின்றதோ அதேபோன்றுதான் கல்முனை மக்கள் அன்றைய பட்டின சபையைக் கோருகின்றார்கள். ஆனால் கல்முனை மக்களின் 2/3 பகுதி கரவாகு வடக்கு கிராமசபைக்கு புதிதாக வரவேண்டுமென்ற தமிழ்த்தரப்பின் கோரிக்கைதான் பிரச்சினையாகும்.

முதலாவது தமிழ்த்தரப்பின் இந்த நியாமற்ற கோரிக்கை தொடர்பாக அவர்களுடன் பேசுவதே தவறு. (துரதிஷ்டவசமாக நம்மவர்கள்தான் அவர்களுடன் பேசவேண்டுமென்று பிரேரித்திருக்கின்றார்கள்; என்பது மிகவும் அதிர்ச்சியானது.) அவர்கள் வழமைபோல் அவர்களது தடைக்கற்களை போடுகின்றார்கள். நாங்களும் கையாலாகதவர்களாக கூட்டம் போட்டுப் பேசுகின்றோம். போதாதென்று குழு அமைத்து இன்னும் பேசப்போகின்றோம்.

நாம் புதிதாய் ஏதாவது கேட்கின்றோமா? இந்த ஆட்சியில் பங்காளிகள் நாங்கள். கவிழ்ந்த ஆட்சியை மீட்டுக்கொடுப்பதில் பிரதான பங்களித்தவர் நாங்கள். இன்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நாங்கள். எங்களை வைத்தே தேசிய அரசாங்கம் அமைக்கமுடியுமா? என்று சிந்திக்கின்ற அளவு அரசில் பலம்பொருந்தியவர்கள் நாங்கள். ஆனால் எங்களால் எதையும் சாதிக்கமுடியாது.

தயாகமகே எதிர்த்தால் பறிபோன ஒரு அலுவலகத்தைக்கூட கொண்டுவரமுடியாது; இராணுவம் பிடித்த காணிகளே அடுத்த பக்கம் விடுவிக்கப்படும்போது தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான வாகனத் தரிப்பிடத்தற்காக கொடுத்த ‘கரங்கா’ காணிகளையே மீட்கமுடியாதவர்கள் நாங்கள்.

இந்த இலட்சணத்தில் அன்றிருந்த சபையைக் கேட்கின்றோம். தமிழ்தரதரப்பினர் எதிர்க்கின்றார்கள். எனவே, எங்களால் எதுவும் செய்யமுடியாது. 100% முஸ்லிம்கள் வாழும் வீதிக்கு தமிழர் எதிர்க்கின்றார்கள்; என்பதற்காக தாம் விரும்பும் பெயரையே வைக்கமுடியாதவர்கள் நாங்கள்.

முஸ்லிம் முதலமைச்சருக்காக கோசமெழுப்பினோம். முஸ்லிம் முதலமைச்சரும் வந்தார். ஒரு வீதியின் பெயர்மாற்றத்திற்கு ஒரு கையொப்பம் வைக்க கைப்பலம் இல்லாத முஸ்லிம் முதலமைச்சுப் பதவி.

முஸ்லிம் ஆளுநர் வந்ததும் சந்தோசத்தால் ஆர்ப்பரித்தோம். அவருடைய பேனையும் இவ்வீதிப் பெயர்மாற்றத்திற்காக கையொப்பம் வைக்கத்தயங்குகிறது. ஏற்கனவே ஆளுநருக்கெதிராக பல ஹர்த்தால்களைச் செய்து ஆளுநருக்கு செய்தியைச் சொல்லிவிட்டார்கள். “ கவனம் , நாம் விரும்பாத எதையும் நீங்கள் செய்யமுடியாது” என்று.

சண்முகா வித்தியாலய ஆசிரியை விவகாரம்; மனித உரிமை ஆணைக்குழு அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்ததன்பின்னும் அந்த ஆசிரியைகளின் அடிப்படை உரிமையைக்கூட உறுதிப்படுத்த முடியாத அரசியல் பலவீனர் நாங்கள்.

அவ்வாறாயின் தமிழர் எதிர்க்கின்ற எதையும் நாம் சாதிக்கமுடியாதா? எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மறைமுக ஆதரவை வழங்கிக்கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றை சாதித்துக்கொண்டு தாம் விரும்பாதவற்றை முஸ்லிம்கள் சாதிப்பதைக்கூட தடுக்குமளவு பலம் அவர்களுக்கிருக்கும்போது நேரடி ஆதரவ வழங்கும்நாம் கல்முனைப் பட்டின சபையைக்கூட மீண்டும் பெற்றுக்கொள்ள வக்கற்ற நிலையில் இருக்கின்றோமே! எந்த முகத்துடன் வந்து அடுத்த தேர்தல் மேடையில் வீரவசனம் பேசப்போகின்றோம்.

புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றுவது தொடர்பாக இரண்டொரு நாட்களுக்குமுன்பு த தே கூ, ஜனாதிபதியைச் சந்தித்திருக்கின்றது. அச்சந்திப்புக்கு பிரதமரையும் நமது இரு பெருந்தகைகளையும் அவர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.

அங்கு த தே கூ குறிப்பிட்டிருக்கின்றார்கள். புதிய யாப்பில் மூன்று விடயங்கள் இருக்கின்றன. அவை: அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதிப்பதவி ஒழிப்பு. இதில் தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி பதவி ஒழிப்புத் தொடர்பாக சில எதிர்ப்புகள் இருக்கின்றன ஆளுந்தரப்பிற்குள். ஆனால் அதிகாரப்பகிர்விக்கு யாரும் எதிர்ப்பு இல்லை. எனவே, அதனை முதலில் நிறைவேற்றுவோம்; என்று பிரேரித்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாக நால்வர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. அதில் ஒருவர் சுமந்திரன், மூவர் சிங்களவர். ஒரு முஸ்லிம்கூட இல்லை. அவசியமில்லையே! புதிய நகல்யாப்பிற்கு யாரும் எதிர்ப்பில்லை; என்று அவர்கள் சொன்னபோது அதற்கு அங்கீகாரமளிக்கத்தானே நமது பெருந்தகைகள் சென்றிருக்கின்றார்கள். நகல்யாப்பு அதிகாரப்பகிர்வில் நமக்கு பிரச்சினையே இல்லையா?

அது ஒரு புறமிருக்கட்டும். அதிகாரப்பகிர்வை நிறைவேற்ற ஜனாதிபதியின் சம்மதத்தைப்பெற பிரதமரையும் உங்களையும் அவர்களால் அழைத்துச்செல்ல முடிந்திருக்கிறது. இந்த முசலியில் பறிபோன ஒரு இலட்சம் ஏக்கர் காணியை மீட்க பிரதமரை ஜனாதிபதியிடம் அழைத்துச்செல்ல உங்களால் முடிந்ததா? ஆகக்குறைந்தது அமைச்சரவையிலாவது பேசமுடிந்ததா?

இவ்வாறு தேர்தல் மேடைகளில் வீரவசனம். சாதித்ததெதுவுமில்லை; என்கின்ற வரலாறு தொடரமுடியுமா? தொடர அனுமதிக்க முடியுமா?

இனியும் கூட்டங்கள் வைத்து கோமாளித்தனம் செய்வதை நிறுத்துங்கள். ஐந்து வருடங்கள் ஏமாற்றிவிட்டு இப்பொழுதான் பேச ஆரம்பத்திருக்கின்றீர்களா? பம்பாத்துக்கள் இனியும் வேண்டாம்.

த தே கூ எதிர்த்தால் இந்த அரசில் முஸ்லிம்களுக்கு எதுவித நியாயமும் கிடைக்காதா? என்று அரசிடம் கேளுங்கள். உடனடியாக கல்முனை மாதகரசபையை 1987 இருந்ததைப்போன்று நான்காகப் பிரகடனப்படுத்தச் சொல்லுங்கள்.

சண்முகா பாடசாலையில் அவ்வாசிரியைகள் மீண்டும் கடைமையாற்றுவதற்கான உத்தரவை உடனடியாக விடுக்கச்சொல்லுங்கள். கரங்கா காணியை இனியும் தாமதியால் விடுவிக்கச்சொல்லுங்கள். பறிபோன அலுவலகங்களை அவசரசமாக திருப்பித்தரச்சொல்லுங்கள். ஏனைய பிரச்சினைகளையும் தீர்க்கச் சொல்லுங்கள்.

இவை எதையும் சாதிக்க உங்களுக்குத் திறன் இல்லையாயின் தயவுசெய்து இனியும் தாமதியாமல் அரசை விட்டு வெளியேறுங்கள். மக்கள் அசமந்தமானவர்கள். இவற்றையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்; என்று தொடர்ந்தும் தப்புக்கணக்குப் போடாதீர்கள்.

வீறுகொண்டெழும் சமூகத்தின்முன் வீணராகிவிடாதீர்கள். எழுச்சிகாணப்போகும் சமுதாயத்தை என்றென்றும் ஏமாற்றமுடியுமென கனவு காணாதீர்கள். சாதுவான சமூகம் மிரண்டால் காடு தாங்காது; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சமூகத்தின் விலாசத்தை உறுதிப்படுத்துங்கள்; தவறின் நீங்கள் விலசமற்றுப்போய்விடுவீர்கள்.

த தே கூ இற்கு கூறுகின்றோம்

நீங்கள் ஒரு புறம் பேரினவாத்திற்கெதிராக போராடிக்கொண்டு மறுபுறம் இன்னுமொரு சமூகத்தை தொடர்ந்தும் நசுக்க முற்படாதீர்கள். அன்று ஆயுத இயக்கங்கள் பேரினவாத்திற்கெதிராக தூக்கிய துப்பாக்கியை அப்பாவி முஸ்லிம்களுக்கெதிராக நீட்டினார்கள். அப்போது தற்காப்பிற்காக 500 முஸ்லிம் பொலிஸாரைக்கூட நியமிப்பதை எதிர்த்தீர்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்களைத் தேவைப்படும்போது தமிழ்பேசும் சமூகமாக குறிப்பிடுவதும் சாத்தியமானபோதெல்லாம் அவர்களை நசுக்குவதுமான உங்கள் சிற்றினவாதத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். தேசிய அரசியலில் தமிழர் எப்பக்கமோ அதற்கெதிரான பக்கத்திற்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும்; என்கின்ற கட்டாய சூழ்நிலையை முஸ்லிம்கள் விதியாகக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தாதீர்கள்.

இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் உங்களது முஸ்லிம்விரோத நிலைப்பட்டிற்குமுன்னால் கையாலாகதவர்களாக இருக்கலாம். அதற்காக காலம் மாறாது; என நினைக்காதீர்கள். காலம்மாறி காத்திரமானவர்களை நீங்கள் சந்தித்தால் கடந்தகாலத் தவறுகளுக்காக்கவும் நீங்கள் கவலைப்பட நேரிடும்.

இன்னும் நாம் உங்களுக்கு “ஒலிவ்” கிளையையே நீட்டுகிறோம். இந்த இரு சமூகங்களும் சமாதானமாக வாழ வழிவிடுங்கள். “ வாழ்! வாழவிடு!!

1987ம் ஆண்டு இருந்ததுபோன்று கல்முனையை இருக்க விடுங்கள்!

எங்கள் பெண்களின் கௌரவமான ஆடையை சண்முகா பாடசாலையில் அணிய அனுமதியுங்கள்!!

நாங்கள் வாழும் வீதிக்கு நாங்கள் விரும்பும் பெயர் வைக்கும்போது வீணாய் மூக்கை நுழைக்காதீர்கள். முஸ்லிம்கள் அடுத்த சமூகங்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்ததுமில்லை. செய்யவேண்டிய அவசியமுமில்லை. அதேநேரம் அடுத்தவர்களால் அநியாயம் செய்யப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது; என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

Read more...

மஹிந்த – அனுர சந்திப்புக்கான புண்ணியநேரம் எதிர்வரும் 6ம் திகதி 4 மணி.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் ஜேவிபி யினரின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் எதிர்வரும் 6ம் திகதி பிற்பகல் நான்கு மணிக்கு உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பானது எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக ஜேவிபி யின் பிரச்சார செயலாளர் பா.உ விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார , பா.உ விஜித ஹேரத், பா.உ சுனில் ஹந்துநெத்தி , பா.உ நளின் ஜெயதிஸ்ஸ மற்றும் கே.டி லால்காந்த ஆகியயோர் கலந்து கொள்வர் என்றும் தெரியவருகின்றது. இதேநேரம் கே.டி லால்காந்த மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாயின், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என்றும் அந்த நடைமுறையை கொண்டு செல்வதற்காக பலகோடி பணம் செலவிடவேண்டியுள்ளதாகவும் ஜேவிபி தெரிவிக்கின்றது.

Read more...

இந்த மாதத்திற்குள் சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகும் - பரீட்சைகள் திணைக்களம்

2018 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் முடிவுகளை வெளியிடுவது தொடரில் பரீட்சைகள் திணைக்களம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம், நடைபெற்ற முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மார்ச் மாதத்திற்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். ஆகவே கடந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள், தங்கள் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்திற்குள் தெரிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை பரீட்சாத்திகள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை கடந்த 25 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள அதேநேரம், நேற்றுடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தனியார் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு இந்த வருடத்தில் இனி மேல் கால நீடிப்பு சந்தர்ப்பம் இல்லையென்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com