Tuesday, January 29, 2019

இலங்கையின் அரசியல் தாக்கத்தினால், ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்துள்ள ஊழல் எதிர்ப்பு பொறிமுறை!

இலங்கையில் ஏற்பட்ட பல அரசியல் தாக்கங்களினால் 2018ஆம் ஆண்டில் தெளிவானதொரு அரசியல் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கெதிரான உலகளாவிய கூட்டமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி, 180 நாடுகளில் இலங்கை 89வது இடத்திலும் தென்னாசியாவில் 3வது இடத்திலும் உள்ளது. இது உலகளாவிய தரப்படுத்தலில் 25வது இடத்திலுள்ள பூட்டான் மற்றும் 78ஆவது இடத்திலுள்ள இந்தியா ஆகிய நாடுகளையும் விட பின்தங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஊழலுக்கெதிராக செயற்படுவதாக உறுதியளித்த போதிலும், ஊழலுக்கெதிரான செயற்பாடுகளில் ஓர் தளம்பல் நிலையிலேயே உள்ளது. இது 2013ம் ஆண்டிலிருந்து CPI சுட்டியில் 36 ற்கும் 38ற்கும் இடைப்பட்ட தளம்பல் நிலையையே காட்டுகிறது.

இதேவேளை TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர 2018ம் ஆண்டின் CPI பற்றி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

பொதுத்துறையில் ஊழல் அதுபற்றி கையாளக்கூடிய சட்ட பொறிமுறை உரிய நேரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான, விருப்பு அல்லது செயன்முறை என்பவை இலங்கையைப் பொறுத்தவரை பின்னடைவையே காட்டுகிறது.

சகல பொது அதிகார சபைகளும் பக்கச்சார்பின்றியும் சுதந்திரமாகவும் செயற்பட வேண்டியது அவசியம். சட்டத்தைப் பயன்படுத்தும் போது பக்கச்சார்பாகவோ அரசியல் நோக்குடனோ செயற்படின், அது ஊழலுக்கெதிரான பொறிமுறைக்கும் நீதி முறை கட்டமைப்புக்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர கூறினார்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் குறிப்பிட்டதன்படி, ஒரு நாட்டில் நிலவுகின்ற ஊழல் மட்டத்திற்கும், அந்நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்திற்குமிடையில் தொடர்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முழுமையான ஜனநாயகமுள்ள நாடுகள் அண்ணளவாக 75 புள்ளிகளை CPI யில் பெற்றதுடன், ஓரளவு ஜனநாயகம் உள்ள நாடுகள் அண்ணளவாக 49 புள்ளிகளையு,ம் கலப்பு முறையை கொண்ட நாடுகள் 35 புள்ளிகளையும், எதேச்சாதிகாரமான ஆட்சியுள்ள நாடுகள் 30க்கு குறைவாகவும் பெற்று CPI யில் இடம்பெற்றுள்ளது.

CPI பெறுபேறானது இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு சரிந்து போகும் ஜனநாயகம் மற்றும் கலப்பு ஆட்சிக்கான போக்கை காட்டுகிறது.

ஊழலுக்கெதிராக செயற்படுவதற்கும் உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சகல அரசாங்கங்களையும் பின்வருமாறு கோரியுள்ளது.

01 - அரசியல் ரீதியிலான அதிகாரத்திலிருந்து நடுநிலையாக செயற்படுவதற்காக நிறுவன ரீதியான வலுவூட்டலும், அச்சுறுத்தலின்றி செயற்படுத்துவதையும் உத்தரவாதப்படுத்தல்.

02 - ஊழலுக்கெதிரான சட்டம் அதன் பயன்பாடு நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் உள்ள இடைவெளியை நீக்குதல்.
குறிப்பாக உள்ளூர் மட்டத்தில் அரசியல் செயற்பாடுகள் மற்றும் அரசாங்க செலவீனங்களை கண்காணிக்கும் சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டல்.

03 - சுதந்திரமான ஊடங்களுக்கு ஆதரவளித்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் அல்லது தொந்தரவு இல்லாமல் பணியாற்றும் நிலையை உறுதிப்படுத்தல்.

Read more...

இராணுவம் அகற்றப்பட்டால் மட்டுமே, தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் உருவாகும் - ஐ.நா.

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் போதே, தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியும் என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிபுணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் போது மனித உரிமைகள் பின்பற்றப்பட்டதா? என்பது தொடர்பில் ஆராய்ந்து தயாரித்த அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்காக பென் எமர்ஷன் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கையின் படி, இலங்கையில் விரைவாக பயங்கரவாதம் நீக்கப்பட்டு அதற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற புதிய சட்டம் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டவையாக காணப்பட வேண்டும என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் தண்டனைகள் குறித்த பொறிமுறையொன்று அவசியமாகும்.

அதே போன்று சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அந்த வகையில் வடக்கிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்..ஆகையால் பாதுகாப்பு துறை முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம் என பென் எமர்ஷன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல், மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Read more...

கூட்டு களவானிகளுடன் இணைந்து, பிரதமர் செய்யப்பட்டமை, மிகப்பெரும் தவறு- சீறினார் மனோ கணேசன்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்த்த கூட்டு ஒப்பந்தக் களவானிகளுடன் இணைந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளமை, மிகப் பெரிய தவறு என, அரச கருமை மொழிகள், மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இறக்குவானை பகுதியில் இன்று இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார்.

அரசாங்கத்தைப் பாதுகாத்த எங்களை கேளாமல், பிரதமர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என்றும், பிரதமரின் இந்த செயல்பாட்டிற்கு தமது தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் குறித்த உடன்படிக்கை, நேற்று அலறி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும், பல போராட்டங்கள் வெடித்தன.

இவ்வாறு மக்கள் விரும்பாத, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட, பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கு, பிரதமர் அனுமதி வழங்கியிருக்க கூடாது.

அத்துடன் அரசின் பங்காளி கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் இது குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை.

இந்த செயல்பாடு மாபெரும் தவறு என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீதும், தமது கண்டனத்தை வெளியிட்டார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஆரம்பத்தில் இருந்தே, பெருந்தோட்ட மக்களைத் தவிர்த்து, கம்பனிகளின் நலனுக்காகவே செயல்பட்டு வந்துள்ளார்.

இப்போது அமைச்சர் நவீன் திஸாநாயக்க பெருந்தோட்ட மக்களை ஏமாற்றியதுடன், கம்பெனிகளுக்கு பெரும் உதவி செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Read more...

கடற்படையிடமிருந்து தப்புவதற்காக கடலில் குதித்த இரு மண்கொள்ளையர்கள் ! கிண்ணியாவில் பதட்டம்.

திருமலை கிண்ணியா கங்கைப்பாலம் பகுதியில் மண்கொள்ளை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. இதனை தடுப்பதற்கான முயற்சிகள் பல்வேறு இடம்பெறுகின்றபோதும், அரசியல்வாதிகள் மற்றும் பலம்பொருந்தியோரின் தலையீட்டினால் இவை சாத்தியமற்றுப்போகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இன்று குறித்த பிரதேசத்தில் மண்கொள்ளை கும்பல் ஒன்று மண் அகழ்வில் ஈடுபடுகின்றது என கடற்படையினருக்கு தகவல்கிடைத்ததை தொடர்ந்து படையினர் அங்கு விரைந்தபோது, கைதிலிருந்து தப்புவதற்காக மூன்று மண்கொள்ளையர்கள் கடலில் குதித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கரையொதுங்கியுள்ளபோதும் இருவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேத்தில் தேடுதல் தொடர்வதாக தெரியவருகின்றது.

இதே நேரம் இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் ஒருவகை பதட்ட நிலை உருவாகியுள்ளதுடன் கடற்படையினுக்கும் மண்கொள்ளைக்காரர்களின் உறவினர்களுக்குமிடையே முறுகல் நிலை தோண்றியுள்ளது. இந்நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மோசடிப்பேர்வழிகளையும் கொள்ளையர்களையும் கட்டுப்படுத்தும் கடமைகளை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியவர்கள் செய்கின்றபோது, பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூறு விளைவிக்கின்ற செயற்பாடுகள் மிகவும் கண்டனத்திற்குரியதாகும். பொதுமக்களின் பொறுப்புணர்சியற்ற இச்செயற்பாடுகளினூடாகவே இலங்கையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றது.




Read more...

ஜூன் மாதத்துக்கு முன்னர், மாகாண சபை தேர்தல் இடம்பெறும் - அமைச்சரவை அனுமதி.

இந்த வருடம் ஜூன் மாதத்திற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை முன்னர் நடத்த, அமைச்சரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்திருந்த நிலையில், இன்று இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில், ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் அவை அனைத்தும் தற்போது இயங்கி வருகின்றன.

இதேவேளை மாகாண சபை தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நடத்தவில்லை என்றால், தாம் பதவி விலகப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று கருத்து வெளியிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடத்துவதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து ஆரம்ப காலங்களின் சிறுபான்மை தேசிய கட்சிகளுக்கும், பெரும்பான்மை கட்சிகளுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

எனினும் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. பெரும்பாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்தக் கோரி, ஆரம்பத்தில் பல சிறுபான்மை தேசிய கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

முன்னதாக அமைச்சர் பைசர் முஸ்தபா புதிய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைப்பாட்டை எட்டியிருப்பதாகவும், சுதந்திரக்கட்சியும் அதனையே விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் புதிய முறைமையில் நடத்தவதற்காக செய்யப்பட்ட எல்லை நிர்ணய செயற்பாட்டில் குழப்ப நிலைமைகள் காணப்படுவதால் அவற்றை திருத்தம் செய்வதற்கு காலத் தாமதம் ஏற்படும் என்பதால், பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சிறுபான்மை தேசிய கட்சிகள் கோரியதால் அது தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்று
நியமிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல், பழைய முறையிலேயே நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண, மேலும் கால அவகாசம் அவசியம் - தேசிய சமாதானப் பேரவை.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கு, மேலும் கால அவகாசம் தேவை என இலங்கை தேசிய சமாதானப் பேரவை குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம், தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமாயின், அது நல்லாட்சிக்கான வழிகோலாக அமையும்.

அத்துடன் இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசமானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கும், நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்வதற்கும் பெரிதும் உதவும்.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கும், இந்த கால அவகாசமானது துணை புரியும் என
தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு குறித்த முன்னெடுப்புக்கள் மந்த கதியிலேயே உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிட்டிருந்தது.

கடந்த முறை இடம்பெற்ற ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் பல, இன்னும் நிறைவேற்றப்படாமலும், சில மந்த கதியில் நிறைவேற்றப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்து இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை குறித்து இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

எமது ஜனாதிபதி வேட்பாளர் தயார் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்து விட்டதாக, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த வேட்பாளர் மொட்டுச் சின்னத்தை அங்கத்துவப்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில், அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினர், கேள்வி எழுப்பி வந்த நிலையில், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது எமது வேட்பாளரின் குடியுரிமைப் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கம் ஆட்சி பீடத்தில் ஏறிய காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தான் இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்து வழிநடத்திச் சென்றார். அந்த வகையில், இந்த அரசியல் போராட்டத்திற்கு உரிய தரப்பினர் உரிய நேரத்தில் களமிறங்குவர்.

எம்மிடமுள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது வேட்பாளர் தொடர்பில் இப்போது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் குடியுரிமை இருப்பதால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பஷில் ராஜபக்ஷவுக்கும் போட்டியிட முடியாது என்று கூறுகிறார்கள். இதனை அடுத்து எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாடு முழுதும் அதிக கேள்விகள் எழுந்துள்ளன.

எனினும், எமது தரப்பின் குடியுரிமைப் பிரச்சினையும், வேட்பாளர் பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன. எனினும் யார் வேட்பாளர் என்று இப்போதே நாம் கூற மாட்டோம். யார் சரியான நபரோ, அவர் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படுவார் என, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து, தற்போது மௌனம் காத்து வருகின்றது. எனினும் பல்வேறு தரப்பினர் தற்போதைய வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பரிந்துரைத்து வருகின்றனர். இதேவேளை அடுத்த பிரதமராக சஜித் பிரேமதாச பதவி ஏற்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், பல செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி, தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தோ, அடுத்த தேர்தல் குறித்தோ இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.

Read more...

மன்னாரில் இராணுவம் வசமிருந்த, மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிப்பு - இராணுவம்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் ஒருதொகுதி காணிகள், இன்றைய தினம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளுக்கான உரிய ஆவணங்களை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக, இன்றைய தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் கையளித்துள்ளனர்.

மன்னார்-தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கீழ் இருந்த காணி, மற்றும் இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கீழிருந்த 16 ஏக்கர் காணிகள் என்பன இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.

மன்னார் தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் அதிகாரி பிரிக்கேடியர் சேனாரட்ன பண்டார மற்றும் இராணுவத்தின் 61 ஆவது படை பிரிவு அதிகாரி ஜேம திலகரட்ன ஆகியோர் குறித்த காணிகளுக்கான ஆவணங்களை மக்களிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை, தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவிக்கு கீழுள்ள மேலும் சில காணிகளும், இனிவரும் காலங்களில் விடுவிக்கப்படவுள்ளதாக, இராணுவ படைப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், தம்மிடம் குறிப்பிட்டதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கூறினார்.

இதன்படி, பேசாலையில் 11 ஏக்கர் காணிகளும், கூராய் பகுதியிலுள்ள 26 ஏக்கர் காணிகளும், ஜீவ நகரிலிள்ள 5.6 ஏக்கர் காணிகளும் அடுத்ததாக விடுவிக்கப்படவுள்ளன

இதற்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதன் பின்னர், குறித்த காணிகள் மக்கள் நலன் கருதி, உடனடியாக விடுவிக்கப்படும் என, தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி, எழுத்து மூலமாக சமர்ப்பித்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஜனாதிபதியுடன் இணைந்து, ஊழலை மறைக்க, ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கிறது - ரொஷான் ரணசிங்க.

ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் குறித்து, இடம்பெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் இருந்து தப்பிக்கவே, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அரசாங்கத்தை அமைத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சமஷ்டி அரசியலமைப்பொன்றை கொண்டு வரவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் தான், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய அரசாங்கத்தை நிறுவியது.

ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது அச்சத்தில் தான் உள்ளது.இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக விசாரணைகள் இடம்பெற்றால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எவருக்கும் களமிறங்க முடியாது போய் விடும்.

இதனாலேயே, மீண்டும் ஜனாதிபதியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகிறது. அத்துடன் அரசியலமைப்பு தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க, தற்போது ஊடகங்கள் மத்தியில் பரவலாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

அத்துடன் புதிதாக ஒற்றையாட்சி எனக் கூறி, சமஷ்டி அரசியல் அமைப்பையே இவர்கள் ஸ்தாபிக்கவுள்ளனர்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டித் தன்மை இருப்பதாக சம்பந்தனே கூறியுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சி தான் எனக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றார்.

இத்தகைய போலியான கட்சியொன்றுடன் இணைந்து மீண்டும் ஜனாதிபதி, தேசிய அரசாங்கம் ஒன்றை ஒரு போதும் ஸ்தாபிக்க மாட்டார் எனம் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

வடக்கில் உயர்தரத்துடன் கூடிய ரயில் மற்றும் பஸ் சேவைகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதம் - அர்ஜுண ரணதுங்க

வடக்கில் போக்குவரத்துப் சேவை தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகள், ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை விரைவில் பெற்றுத் தருவதாக அவர் அங்கு குறிப்பிட்டார். வடக்கு மற்றும் தென்பகுதி மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய முறை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவடக்கின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

உயர்தரத்துடன் கூடிய ரயில் மற்றும் பஸ் சேவைகளை வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Read more...

போதைப்பொருள் தொடர்பில் முறைப்பாடு அளிக்கும் தொலைபேசி அழைப்பிற்கு இதுவரை அதிக அழைப்புக்கள் - பொலீசார்

எதிர்வரும் 2 வாரங்களில் நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையைத் தடுப்பதற்காக சிறப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட போதை பொருள் தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்கும் பிரத்தியேக தொலைபேசி இலக்கத்திற்கு இதுவரையில் 60ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் நடப்பாண்டின் ஜனவரி 20ஆம் திகதி வரை இலங்கையில் 800 KGற்கும் அதிக ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல்கள் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்ட 5,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 பேர் வௌிநாட்டுப் பிரஜைகள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Read more...

கொள்ளுப்பிட்டி விவகாரம் - ஆப்கானிஸ்தான் பிரஜை தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொள்ளுபிட்டி பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்டோர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இதுவரை நாளும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆப்கானிஸ்தான் பிரஜை பிரதான சந்தையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலருக்கு குறித்த ஆப்கானிஸ்தான் பிரஜையே போதைப்பொருட்களை வழங்கி வந்தமை விசாரணைகளை மூலம் வெளிவந்துள்ளது.

கொள்ளுப்பிட்டி விவகாரத்தின் போது கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜைகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் போதைப்பொருள் கொள்வனவிற்காக இவர்களிடம் ஒரு இலட்சத்திற்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

பாதுகாப்புச் செயலாளரின் பதவியில் மாற்றம்?

பாதுகாப்புச் செயலாளரின் பதவியில் எந்த வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதியின் செயலாளர் தர்மசிறி ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளராக ஹேமசிறி பெனான்டோ பதவி வகித்து வருகின்றார். அவர் படையினரை விமர்சித்து கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறிய கருத்துக்கள் ஊடகங்களில் தவறாகப் வெளியிடப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தர்மசிறி ஏக்கநாயக்க விளக்கம் அளித்தார். ஹேமசிறி பெனான்டோவை பதவி நீக்க வேண்டும் என எழுந்துள்ள விமர்சனங்களை அடிப்படையாக வைத்து அவர்மீது எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுவதற்கிணங்க பாதுகாப்புச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என தர்மசிறி ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பொய் சொல்வதை பிரதமர் நிறுத்தவேண்டும் - கம்மன்பில

இனியாவது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சாடியுள்ளார்.

நாம் இன்னும் அரசியலமைப்பு சட்ட மூலம் அமைக்கவில்லையெனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சி முறைமைக்கு சம்மதம் தெரிவித்துள்ளமை அரசாங்கம் பெற்ற பெரும் வெற்றியாகும் என்று பிரதமர் நேற்றும் கூட கருத்துத் தெரிவித்திருந்தார் என கம்மம்பில எம்.பி. சுட்டிக்காட்டினார். ஆனால் பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலாவது வசனமே புதிய அரசியலமைப்பு சட்ட மூலத்தில் என தொடங்குகின்றது என்று கம்மம்பில சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பில் பிரிபடாத நாடு எனக் குறிப்பிட்டு விட்டு, பிரிவதற்குரிய அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தால், நாடு பிரிக்கப்படும் என்பது ஸ்பெய்னின் வரலாறு எமக்கு கற்றுத் தரும் பாடமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அமரிக்கா தயார்

இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தமது அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய சமயங்களுக்கான மாநாடு இடம்பெற்றபோது மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் யொஹான் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மாகாண சபைத் தேர்தல் ஒரே நாளில் நடத்தவேண்டும் - மேல் மாகாண முதலமைச்சர்

ஒரே நாளிலேயே அனைத்து மாகாண சபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, பாதுக்க பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுக்க தயார் என்று கூறிய மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, குறிப்பாக தென், ஊவா மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் மாகாண சபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற ஒருமித்த கருத்தில் உடன்பட்டு இருப்பதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

Read more...

2 வராங்களுக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அமைச்சர் ஹரின் கோரிக்கை

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பிலான தடவியல் அறிக்கையை சமர்பிக்குமாறு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை 2 வராங்களுக்குள் சமர்பிக்குமாறு அவர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.

Read more...

கலாபூசணம் அரச விருது விழா இன்று - கலைஞர்கள் 200 பேர் தெரிவு

கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைகளை ஆற்றிய கலைஞர்களைப் பாராட்டி கெளரவிக்கும் கலாபூசணம் அரச விருது விழா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 4 மணி அளவில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

34 ஆவது வருடம் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளை கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. 9 மாகாணங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் 200 பேர் இதன்போது விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இசை, நடனம், இலக்கியம், கட்புல கலைகள், நாடகம், புகைப்படக் கலை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாட்டார் கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை ஆற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மேலும் 3 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் - 19 ஆவது திருத்தச் சட்டதை மீறும் அரசாங்கம்

தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் உத்தியோகபூர்வ முறையில் இணையாமல், கட்சியிலுள்ள சிலரை இணைத்துக் கொள்வதன் மூலம் இலக்கை அடைய முடியாது என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுவதே. அதற்காக சிறு கட்சிகளுடன் இணைந்து கொள்வதன் ஊடாக தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது. அதுமாத்திரமன்றி இவ்வாறு செயற்பட அரசாங்கத்துக்கு சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது. ஆனால் மூன்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது.

19 ஆவது திருத்தச் சட்ட வரையறையின்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 எனவும், பிரதி, இராஜாங்க, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 70 எனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறியுள்ளார். இதன் மூலம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரையறையிலிருந்து அரசாங்கம் வெளியேறுவதற்கே முயற்சிக்கின்றது என்று அவர் கூறினார்.

Read more...

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான ஆடைகள் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வீர்!

அண்மையில், கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பிரத்தியேக ஆடை பரிந்துரைக்கப்பட்டது. குறித்த ஆடைகள் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடும் அதிபர்கள் இருந்தால் கல்வி அமைச்சுக்கு அறிவுக்கும்படி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வருடம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கர்ப்பிணி ஆசிரியர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, குறித்த கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இலகுவான மற்றும் பொருத்தமான ஆடையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி 2018/21 சுற்றறிக்கையினூடாக கல்வி அதிகாரிகளுக்கு தௌிவூட்டப்பட்டது. ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிரத்தியேக ஆடைகளுடன் கர்ப்பிணி ஆசிரியைகள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள சில அதிபர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த தகவல் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க விரும்புவோர் கல்வி அமைச்சின் 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்யமுடியும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Monday, January 28, 2019

யாழ்பாணத்தில் கற்பழிப்புக்களும் கறுப்புச் சட்டைகளும். பீமன்.

யாழ் மாவட்டத்தில் கொள்ளையர்கள் மற்றும் காமுகர்களின் கைவரிசை அதிகரித்துள்ளமை யாவரும் அறிந்தது. பகற்கொள்ளைகள் இடம்பெறுகின்றது. கொள்ளையர்கள் தமக்கு தேவையான விதத்தில் கொள்ளைகளை மேற்கொண்டுவிட்டு கணவன் முன் மனைவியை கற்பழித்துவிட்டு செல்கின்றனர். ஆனால் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனம்தெரியாத நபர்களால் 'சுட்டுக்கொலை' என்ற பாங்கிலேயே இவ்விடயங்களை இன்று எவரும் கண்டு கொள்வதில்லை.

முன்னொரு காலத்தில் புலிகள் பட்டப்பகலில் நபர்களை சுட்டுக்கொன்றுவிட்டு செல்கின்றபோது, சுட்டுச்சென்றவனின் பரம்பரை தொடர்பான விபரம்கூட மக்களுக்கு தெரிந்திருந்தது, ஆனாலும் ஊடகங்கள் 'இனம் தெரியாத நபர்களால் வயோதிபர் சுட்டுக்கொலை' என முந்தியடித்து செய்திகளை வெளியிட்டு நீதிக்கு தடையாக நின்றனர். கொலையாளியின் பக்கத்துவீட்டுக்காரனும், நமிட்டு சிரிப்புடன் இனம்தெரியாத நபர் என்பதை ஏற்றுக்கொள்வார். அவ்வாறு ஏற்றுக்கொள்வதன் ஊடாக அவர்கள் சமூகத்தின் தியாகிகளாக கணிக்கப்படுவார்கள்.

அநியாயம் புரிந்தவனை எவராவது காட்டிக்கொடுத்தால் அவர்கள் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். ஏன் துரோகிகள், ஏன் காட்டிக்கொடுத்தார்கள், யாரை காட்டிக்கொடுத்தார்கள், எதற்காக காட்டிக்கொடுத்தார்கள், காட்டிக்கொடுத்தது சரியா என்ற கேள்வியெல்லாம் எழுப்பப்படாது. காட்டிக்கொடுத்தால் துரோகிகள். இவ்வாறுதான் கொலைகளுக்கு அன்று பச்சைக் கொடி காட்டப்பட்டது. இன்று கொள்ளைகளுக்கும் கற்பழிப்புக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இவ்வாறே பச்சைக்கொடி காட்டப்படுகின்றது.

யாழ்பாணத்தில் நன்கு அறியப்பட்ட கொள்ளையர்களை, காமூகர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை, தெருச்சண்டியர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதில் பொலிஸார் இரு பெரிய சவால்களை எதிர்கொள்ளுகின்றனர். ஒன்று தகவல்கள் பொதுமக்களிடமிருந்து கிடைப்பதில்லை. இரண்டாவது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கென்று ஒரு கறுப்புச் சட்டை கூட்டமே இருக்கின்றது.

அண்மையில் இளவாலைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு கொள்ளைக்குச் சென்ற இருவர் வீட்டிலிருந்த பணம் நகைகளை அரிதட்டினால் அரித்தெடுத்துவிட்டு, தாயை அறையொன்றில் பூட்டிவைத்துவிட்டு 17 வயது மகளை தங்களுக்கு வேண்டியவாறு இருவரும் வன்புனர்வு கொண்டுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யுவதியை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மிரண்டு நின்றனர். சாதாரண மனிதர்களால் இவ்வாறு நடந்து கொள்ள முடியாது என்று முழிகளைப் பிதுக்கும் அளவுக்கு அகோரம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கொள்ளையர்களுக்கான வேவுக்காரன் தனது வேவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடைப்படையில் பொலிஸாரினால் மடக்கிப்பிடிபட்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தெல்லிப்பளையைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் (28 வயது) மற்றும் ஏழாலையைச் சேர்ந்த இராஜகோபல் கிருஷ்ணகுமார் (30 வயது) என்ற இரு காமுகர்களே மேற்படி செயலை மேற்கொண்டனர் என்ற விடயம் அம்பலமாகியதுடன் மேலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

ரூபன் மற்றும் கிருஷ்ணகுமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, இவர்களை இயக்கும் பிரதான நபர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. அத்துடன் அந்த நபர் குறிப்பிட்ட நேரத்தில் கிளிநொச்சி பிரதேசத்திற்கு சென்றுள்ள காரணத்தினால் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் என்பன கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவிடம் வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கோள்ளைகோஷ்டி தலைவனின் மனைவியிடம் பொலிஸார் நகைக்களை மீட்க சென்றபோது, தனது வீட்டில் சீசீரிவி கமராவில் பொலிஸார் உள்நுழைவதை அவதானித்துக்கொண்டிருந்த கொள்ளைக்கோஷ்டி தலைவி பொலிஸாரை உட்கார வைத்து சட்டப்புத்தகங்கள் சிலவற்றை தூக்கி மேசையில் போட்டு கைது செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை முதலில் படிக்குமாறு வேண்டியுள்ளார்.

17 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு கொள்ளையடித்து வரும் நகைகளை உங்கள் வீட்டில் வைத்திருக்க உங்களுக்குள்ள உரிமையாது என்று பொலிஸார் கேட்டபோது, அதை பற்றி உங்களிடம் எனது சட்டத்தரணி சர்மி பேசுவார் என்று பதிலளித்துள்ளார் கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவி.

எது எவ்வாறாயினும் வீட்டை சோதனையிட்டு நகைகளை மீட்ட பொலிஸார் அவளை கைதுசெய்து பொலிசுக்கு கொண்டு சென்றபோது பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய சர்மி அவளை பிணையில் எடுத்துச் சென்றுள்ளாள். அத்துடன் பிணையில் செல்லும்போது சிறைக்கூடுகளுக்கு அருகாமையில் சென்ற கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவி கொள்ளையர்களுக்கு 'நீங்கள் பயமில்லாமல் இருங்கள் சர்மி உங்களை வெளியே கொண்டுவருவா' என்று சொல்லிச் சென்றதாக அறியமுடிகின்றது.

யாழ்பாணத்தில் இடம்பெறும் மேற்படி கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களின் பின்னணியில் கறுப்பு சட்டை போட்ட கயவர்களே உள்ளனர் என்பது பரவலாக பேசப்படுகின்றது. இவ்வாறானவர்கள் கைது செய்யப்படுகின்றபோது, அதே நிமிடத்தில் ஆஜராகும் கறுப்புச் சட்டை காரர்கள் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாணியில் விசாரணைகளை மேற்கொள்ள தடையாக நிற்கின்றனர் என்பதுடன் கொள்ளையர்களுக்கு உத்வேகத்தையும் கொடுக்கின்றனர்.

இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சமூக விரோதிகள் தொடர்பான 90 வீதமான வழக்குகள் யாழ்பாணத்தில் சிறிகாந்தாவினால் கையாளப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியற்காவலர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழ் இயக்கம் ஒன்றின் முதல்வர்தான் இந்த சிறிகாந்தா.

சட்டத்தை காக்கவேண்டியர்கள் இவ்வாறு சமூகவிரோதிகளை சட்டத்திலுள்ள ஓட்டைகளினூடாக வெளியே கொண்டுவர கங்கணம்கட்டி நிற்கின்றபோது சமூகவிரோத செயற்பாடுகள் என்றுமே ஒழியப்போவதில்லை.

மேற்படி யுவதியை கற்பழித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில கைது செய்யப்பட்டுள்ள காமுகர்களின் படங்கள் இதோ, இதை பகிர்ந்து இவர்களது சகாக்களை இனம்காண உதவுங்கள். அல்லது களவு கொடுத்த மக்கள் இப்படத்தினை கண்டால் தங்களுடைய வீடுகளில் கொள்ளையடித்தது இவர்கள்தான் என்று அடையாளம் கண்டால் பொலிஸ் நிலையத்தில் முறையிடமுடியும்.



Read more...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிச்சை.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) இன்றைய தினம் (28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியான எலும்பு முறிவு சிகிசை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இச் சாதனை அறுவை சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட முடநீங்க சத்திரசிகிச்சையியல் நிபுணர் (ConsultantOrthopedic Surgeon) மருத்துவர் எஸ். சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினர் மூத்த மயக்கமருந்தியல் மருத்துவர் பா.நாகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனைச் சரித்திரத்தினைப் புரிந்துள்ளனர்.

மூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் பணிப்பாளர் காண்டீபன் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோரது ஒத்துழைப்பினைப் பெற்று இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அத்தோடு இவர்கள் அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.காண்டீபன்

கிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 லட்சம் ரூபா வரை செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு பாரிய சத்திரசிகிச்சையாகும். எனவே பல வளப் பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிசைக்கான தனியான சத்திர சிகிசை கூடம் இல்லாது பொதுவான சத்திரசிகிசை கூடத்தில் வைத்தே இச் சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சத்திர சிகிசைக்கான வைத்தியஉபகரணங்கள் கூட மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே பல வளப் பற்றாக்குறைகளுடனும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை காலமும் முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சைக்காக யாழப்பாணம் போதான வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.




Read more...

மக்களை காட்டிக்கொடுத்த உங்களுக்கெல்லாம், வெட்கமே இல்லையா? - அருட்தந்தை சக்திவேல் அடிகளார்.

மக்களை காட்டிக் கொடுத்த தொழிற்சங்கங்கள் இனியாவது மக்களுக்காக செயற்பட வேண்டும் என, சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக 1000 இயக்கத்தினால் பாரிய போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை சக்திவேல் அடிகளார், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் கிடைக்காவிட்டால் தமது பதவியை துறப்பதாக,கடந்த நாட்களில் வாக்குறுதி வழங்கியது போன்று ஆறுமுகன் தொண்டமானும், திகாம்பரமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தமது அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து மக்களுடன் இணைந்து போராட வேண்டும் எனவும் சக்திவேல் அடிகளார் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Read more...

அரசியல்வாதிகளும்,அரச அதிகாரிகளும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புபட்டுள்ளனர்.- ஜனாதிபதி.

நாட்டில், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வலுப்பெற்றுள்ளதாகவும், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

போதைப் பொருளற்ற நாடு’ என்ற தொனிப்பொருளை சாத்தியமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் விசேட திறமைகளை வௌிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகளைக் கௌரவிக்கும் ஜனாதிபதி விருது வழங்கும் விழா, இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தலில், சமூகத்தின் பிரமுகர்களே  தொடர்புபட்டுள்ளனர். இதனால் அதனை ஒடுக்குவதற்கு முன்னெடுத்த நடவடிக்கைளை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கைகள் தாமதமடைவதைத் தடுப்பதற்காக 2015ஆம் ஆண்டு முதல் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை, பொலிஸ், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பாளர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அந்த யுத்தத்திற்கு இணையாகவுள்ள போதைப் பொருளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு, நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு முதலில் தௌிவுபடுத்த வேண்டும். என ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இதேவேளை, இந்த நிகழ்வில், 2015 ஜனவரி 14ஆம் திகதி முதல் 2019 ஜனவரி 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு  பங்களிப்பு வழங்கிய அதிகாரிகள், கட்டமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கு பங்களிப்பு வழங்கிய விசேட செயலணியின் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரத்து 34 பேருக்கு ஜனாதிபதியினால் இன்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மூன்று பிரிவுகளின் கீழ் பாராட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், 15 பேருக்கு ஜனாதிபதி காவல்துறை வீர பதக்கங்களும், 59 காவல்துறை திறமை பதக்கங்களும், ஏனையோருக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

போதை ஒழிப்பு தேசிய செயற்திட்டங்களின் கீழ் ஜனவரி 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி, விரிவான பல வேலைத்திட்டங்கள் கடந்த தினங்களில் இடம்பெற்று வருகின்றன

மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை படிப்படியாக குறைப்பதற்கும், அவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதன் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கும், நாட்டின் சுகாதார நிலையை உணர்த்துவதற்கும், உற்பத்தி வினைத்திறனை அதிகரிப்பதன் ஊடாக வறுமையிலிருந்து விடுபடுவதற்கும், இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

Read more...

ஒழுங்கயீனமாக செயல்பட்டவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட தகுதியற்றவர்கள். - மார்ச் 12 அமைப்பு

கடந்த வருடம் இடம்பெற்ற பாராளுமன்ற கலவரம் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாராளுமன்றத்தினதும், மக்களினதும், நாட்டினதும் கௌரவத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரசியல் நெருக்கடி நிலைமை காணப்பட்ட போது பாராளுமன்றத்திற்குள் ஒழுங்கீனமாக செயற்பட்ட 59 உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாராளுமன்றத்திற்குள் பேணப்பட வேண்டிய அடிப்படைகள், சம்பிரதாயங்கள் என்பவற்றை கடைப்பிடிப்பதற்குத் தவறியவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்கு எவ்வகையிலும் தகுதியுடையவர்கள் அல்ல என, மார்ச் 12 அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் சிக்கல் நிலையின் போது பாராளுமன்றத்தில் 
ஒழுங்கயீனமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மார்ச் 12 அமைப்பு, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்து ஒழுங்கயீனமாக 
செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Read more...

அன்று ஒன்றை கூறிய தொண்டமான், இன்று ஒன்றை கூறி விட்டார்- மீண்டும் கானல்நீராகிய பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

ஆரம்பத்தில் தமக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத் தருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், தற்போது தமது வாக்குறுதியை மீறி விட்டதாக பெருந்தோட்ட மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த தினத்தில், பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா அடிப்படை வேதனைத்தை பெற்றுத்தர முடியாவிட்டால் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக தெரிவித்த தொண்டமான், அதன் பின்னர் அமைச்சு பதவியை பொறுப்பேற்றார்.

பின்னர் ஆட்சி அதிகாரம் மாறியதை அடுத்து மீண்டும் மக்களுக்கு 1000 ரூபாய் வேதனத்தை பெற்றுத் தருவதாக தெரிவித்த தொண்டமான், அதற்காக பொது மக்களை பல போராட்டங்களில் ஈடுபடுத்தினார். எனினும் அன்று ஒன்றைக் கூறிய, ஆறுமுகன் தொண்டமான், இன்று ஒன்றை கூறி வருவதாக பெருந்தோட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன்  பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம், இன்று கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, மக்கள் பல்வேறு கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என் பெருந்தோட்ட மக்கள், தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் வடிவேல் சுரேஷ்  உள்ளிட்டவர்கள் கைச்சாத்திட்டனர்.

அலரி மாளிகையில் வைத்து இந்த ஒப்பந்தம் தொழில் அமைச்சரின் முன்னிலையில்,  இன்று கைச்சாத்திடப்பட்டது. இதன் பின்னர் அந்த ஆவணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

அவர் அதனை தொழில் அமைச்சரிடம் கையளித்தார்.

எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான கூட்டுக் குழு இந்த முறை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் புதிய சரத்துக்கள் சிலவற்றை உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்து, ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளதாக அந்தக்குழுவின் தலைவர் இராமநாதன் குறிப்பிட்டார்.

இதேவேளை பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்யில் இன்று கைச்சாத்திட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட மலையக மக்கள், இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டன் - பொகவந்தலாவ, நோர்வூட், சாமிமலை, மற்றும் மஸ்கெலிய பகுதிகளில் 90 சதவீதமான மக்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலவாக்கலை, லிந்துலை, மன்றாசி மற்றும் டயகம பகுதிகளின் சில தோட்ட மக்கள் பணிக்கு சென்றிருந்த போதிலும் அநேகமான மக்கள் பணிக்கு செல்லவில்லை.

ஹப்புத்தளை பகுதியிலும் மக்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் பதுளையின் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கோப் குழுவின் அமர்வுகளில், இனி ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளலாம்.

கோப் (COPE) குழுவின் அமர்வுகளில் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்க்ளும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிலையியல் கட்டளையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இற்கமைய விரைவில் கோப் குழுவால் முன்னெடுக்கப்படும் அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றதின் அனைத்து குழுக்களின் அமர்வுகளிலும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில்,  தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

Read more...

நாட்டுக்குள் நாய் வந்தால் விரட்டியடிக்கலாம், புலி வந்தால், நாம் தான் நாட்டை விட்டு ஓட வேண்டும் - உதய கம்மன்பில.

நாட்டுக்குள் நாய் வந்தால் விரட்டியடிக்கலாம். ஆனால் புலி வந்தால், நாம் தான் நாட்டை விட்டு ஓட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி, இலங்கைக்குள் அமெரிக்க முகாமொன்றை ஸ்தாபிக்க, அமெரிக்கத் தூதரகத்தால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலகத்தின் ஊடாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமது சொந்த நாட்டில் அமெரிக்காவின் முகாமை அமைக்க அனுமதியளித்து, அதனால் ஏற்பட்ட விளைவை நாம் பனாமா சம்பவத்தின் ஊடாகவே நன்றாக உணர்ந்து விட்டோம் .

அமெரிக்காவின் இராணுவம், இலங்கையில் முகாமிட்டால் பனாமாவில் ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும். எமது வீட்டுக்குள் நாயொன்று நுழைந்தால் இலகுவில் விரட்டி விடலாம். ஆனால், புலியொன்று உட்புகுந்தால் நாம் தான் வீட்டை விட்டு ஓட வேண்டும்.

இந்த விடயத்தில் அமெரிக்கா என்பது புலியைப் போன்றது என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதனை அரசாங்கம் ஒரு எச்சரிக்கையாகக் கருத வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.


Read more...

700 ரூபாய் சம்பளம் என்பது, ஓர் ஆக்கப்பூர்வ தீர்மானமாகும் - கொந்தளித்துள்ள மக்களை, மீண்டும் கொதிக்க வைத்த வ.சுரேஷ்..

700 ரூபாய் என்ற அடிப்படைச் சம்பளமானது, தோட்டத் தொழிலாளர்களுக்காக, ஆக்கப்பூர்வமாக எடுத்த முடிவாகும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இன்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்தை முன்வைத்தார்.

தோட்டத் தொழிலாளர் மீதான அக்கறையில் ஆக்கப்பூர்வமாக எடுத்த முடிவால் 500 ரூபாய் சம்பளம் தற்பொழுது 700 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும் ஒருநாள் சம்பளம், மேலதிக சலுகைகள் உள்ளிட்ட கொடுப்பனவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என, இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு, மலையகம்  உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுடன், பல இளைஞர்களும் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 700 ரூபாய் அடிப்படை வேதனைத்தை பெற்றுக் கொடுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என வலியுறுத்தி, 1000 இயக்கம் இன்று ராஜகிரியவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு விட்டதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த நடவடிக்கைக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்க போவதில்லை என தெரிவித்த பெருந்தோட்ட தொழிலாளர்கள், இது குறித்து தமது கண்டனத்தை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டனர்.

Read more...

பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் சிதைந்த குரல் பதிவை உள்ளடக்கிய இறுவட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு.

பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் சிதைந்த குரல் பதிவை உள்ளடக்கிய இறுவட்டு, இன்று நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய குரல் பதிவை பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம் இன்று நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த இறுவட்டை  அரச இரசாயன திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்வதாக நீதவான் உத்தரவிட்டார்.

Read more...

விடுதலை புலி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை அமைக்க அனுமதி இல்லை. - நகரசபை.

வல்வெட்டித்துறை தீருவில் பூங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் நினைவுத் தூபிகளை அமைப்பதற்கான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

தீருவில் பூங்காவில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு அழிக்கப்பட்ட நினைவுத் தூபியை, மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என்பதுடன்,  அங்கு வேறு தூபிகள் அமைக்க வேண்டாம் என்ற பிரேரணை, சுயேட்சைக்குழு மற்றும் முன்னணி உறுப்பினர்களால் வல்வெட்டித்துறை நகர சபையில் இன்று முன்வைக்கப்பட்டது.

இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதை அடுத்து, சபையில் பெரும் குழப்ப நிலமை ஏற்பட்டது. அதனால் பிரேரணை தவிசாளரால் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதனை அடுத்து  பிரேரணைக்கு ஆதரவாக 8 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

முடிவு சம நிலையில் இருந்ததால், தவிசாளர் தனது வாக்கினை பிரேரணைக்கு எதிராகப் பதிவு செய்தார். அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பிடியாணை உத்தரவை விலக்கிக் கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கடும் கண்டனம்.

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை விலக்கிக் கொள்ள முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை தமது தரப்பு வன்மையாக கண்டிப்பதாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சர்வதேச இனப் படுகொலையை தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பான நிலையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதால், குறித்த உத்தரவை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தளர்த்த, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனினும் இந்த நடவடிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதது என்று, சர்வதேச இனப் படுகொலையை தடுப்பது மற்றும்  தண்டிப்பது தொடர்பான நிலையம் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டது. இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த பிரச்னை பரவலாக வெளிவந்தது.

இதேவேளை இலங்கை அரசாங்கமானது பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமது சமர்ப்பித்தல்களை, பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்களுக்கு முன்வைத்துள்ளது என, இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சரோஜா சிறிசேன தெரிவித்தார்.

இருப்பினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இராணுவப் பேச்சாளர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆகியோர், பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்ற தவறான கருத்தை மக்கள் மத்தியில் முன்வைத்துள்ளனர். இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க வெட்கக் கேடானது.

அத்தோடு குறித்த உத்தரவு தொடர்பில் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்கள் நீதிமன்றத்துடன் தொடர்பு கொண்டதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.

இருப்பினும் நீதிமன்ற விடயங்களில் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்கள், எவ்வாறு வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்ற தீர்ப்பில் தலையீடு செய்ய முடியும்?” என்று தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக, கடந்த 7ஆம் திகதி அமைக்கப்பட்ட குழுவில் அறிக்கை, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கை விமான சேவையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 12 பேர் அங்கம் வகிக்கின்றனர். குறித்த 12 பேர் கொண்ட குழுவினர் இலங்கை விமான சேவையில் ஏற்பட்டுள்ள நட்டங்களைக் குறைத்து எதிர்காலத்தில் இலாபங்களை ஈட்ட எடுக்க வேண்டிய பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தயாரிக்கப்பட்ட குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com