Saturday, January 26, 2019

சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை - மனோ கணேசன்.

சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என, அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டங்களை, தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கடந்த தினம் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் கருத்து தொடர்பில் அரச கருமை மொழிகள் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் மனோ கணேசனிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் சுதந்திர தினம் என்பதை மாற்றுவதற்கான எவ்வித அவசியமும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பின் எட்டாம் சரத்தில் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக, தேசிய தினம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக, அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் விஜிர அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் இனிவரும் காலங்களில் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, தேசிய தினமாக கொண்டாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி, பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது, தேசிய தினமே அன்றி சுதந்திர தினமல்ல என, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்த்தன கூறியிருந்தார்.

எனினும் சுதந்திர தினத்தை, தேசிக்காய் தினமாக கொண்டாட வேண்டிய அவசியம் எதுவும் இல்ல என, அரச கருமை மொழிகள் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

இராணுவ வீரர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு ஐ நா சபையின் செயலாளர் நாயகம் கண்டனம்

இலங்கை இராணுவ வீரர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு காரணமான மாலி தாக்குதலுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். மாலியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த அசம்பாவிதம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்த அவர், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் பேச்சாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறான தாக்குதல் நாட்டின் சமாதானத்திற்கான உறுதிப்பாட்டை தடுக்காது என்று அறிகையில் தெரிவித்த அவர், ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின்கீழ் போர்க்குற்றங்களாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே நேற்றைய தாக்குதலில் புர்கினோ ஃபாசோவை சேர்ந்த அமைதி காக்கும் படை வீரர் ஒருவரும் உயிரிழந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Read more...

ஞாசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஐ.தே.க அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் வெவ்வேறாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி இந்தக் கோரிக்கைகளை தயவுடன் நோக்கி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more...

கோட்டாவிற்கு எதிரான வழக்கில் இருவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

D .A ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணப் பணிக்காக 33 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏழு பேருக்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் சாட்சிகள் மூவருக்கு, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சாட்சியாளர்கள் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மூவரடங்கிய நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

Read more...

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி - காரணம் இவைதான்

இலங்கை தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 04 மில்லியன் கிலோகிராமால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டு அது 04 மில்லியன் கிலோகிராமால் குறைவடைந்துள்ளது. இவ்வாறு தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு வறட்சி, இரசாயண பதார்த்தங்களின் பயன்பாடு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டங்கள் ஆகியன காரணமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு இருப்பினும் கடந்த ஆண்டு உலக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச ​தேயிலை குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, January 25, 2019

காதலியை கர்பிணியாக்கி , நிறை வயிற்றில் மண்வெட்டி பிடியால் போட்டு பிடித்த காதலன். சாவகச்சேரியில் சம்பவம்.

மண்வெட்டி பிடியினால் தாக்குதலுக்கு இலக்கான நிறைமாத கர்ப்பிணி வயிறு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று (24)மாலை குறித்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,

தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும் , தாக்குதல் நடத்தியவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் , குறித்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் பெண்ணை காதலன் கைவிட்டு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது , வழிமறித்த முன்னாள் காதலன் மண் வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் தாக்குதலாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read more...

கிழக்கின் காணிகளை ஊவாவுக்கு கொடுத்து புத்தளத்தை வடக்குடன் இணைக்க விக்கி ஆலோசனை.

தமிழ் தேசியக் கூட்டணி என்ற அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள விக்கினேஸ்வரன் வட-கிழக்கு இணைக்கப்படவேண்டும் என தான் விரும்புவதாகவும், அவ்வாறு அது இணைகின்றபோ கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை சிங்கள மாகாணங்களுடன் இணைத்து விடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது கட்சியை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில் மேற்படி ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வடகிழக்கை எவ்வாறு இணைக்கலாம்?

'நாம் எமது கட்சி அடிப்படையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கு தனியொரு அலகை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் அலகுடன் அல்லது முஸ்லிம் அலகுடன் சேரலாம். தமிழ் மொழிக்கே இரு அலகுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும். முஸ்லிம் தமிழ் அலகுகளுக்கிடையில் வரும் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குத் தேவையான அலகில் சேரவழிவகுக்க வேண்டும்.

இன்னுமொரு யுக்தியைக் கையாளலாம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் லகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் ஊவா மாகாணத்துடன் சேர்க்க வேண்டும்.

அதே போல் கோமரன்கடவல உதவி அரசாங்க அதிபர் பிரிவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரித்து வடமத்திய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த விதத்தில் கிழக்கில் குடிகொண்டிருக்கும் 75 சதவிகித சிங்கள மக்களை அவர்தம் மக்களுடன் சேர்த்து விடலாம். அதன் பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம்.

இதனால் ஏற்படும் காணி நஷ்டத்தைப் புத்தளம் மாவட்டத்தை வடமாகாணத்துடன் சேர்ப்பதன் மூலம் ஈடு செய்யலாம்.

கண்டிய மன்னர் காலத்தில் புத்தளம் தெமள ஹத்பத்து என்றே அழைக்கப்பட்டு வந்து. 'தமிழர் வாழ் ஏழு பற்றுக்கள்' என்பதே அதன் பொருள். புத்தளம் வாழ் மக்கள் தமிழ்ப் பேசும் மக்களே. இணைப்பின் பின் பொது எல்லைகள் இல்லாத ஒரு அலகாக பாரம்பரிய முஸ்லிம் இடங்கள் வடகிழக்கினுள் ஒரு அலகாக்கப்படலாம்
என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கினேஸ்வரனின் மேற்படி அறிக்கையானது யாழ் மேலாதிக்கத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளதுடன் இவர்களின் அதிகார வெறி கிழக்கு மக்களை விலைகூறி அடிமாட்டுக்கு விற்க தயார் நிலையில் உள்ளது என்பதை வெளிக்காட்டுகின்றது.

கிழக்கின் மக்களில் பெரும்பகுதியினர் வட-கிழக்கு இணைப்பை விரும்பவில்லை என்பது கடந்தகால ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புக்கள் காண்பித்துள்ளது.

கடந்தகால நிகழ்வுகள் கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம். அத்துடன் அந்த கசப்பான அனுபவங்களின் ஊடாக கிழக்கு மக்கள் கிழக்கில் தங்களுக்கு சிங்கள மக்களே அதிக பாதுகாப்பு என நம்புகின்றனர். கிழக்கில் சிங்கள மக்களின் சிங்கள மக்கள் பலவீனமாகும்போது தமிழரும் மிகப்பலவீனமாக்கப்படுவர் என்பது அவர்களது கணிப்பினூடான அச்சம்.

இந்நிலையில் கிழக்கு தமிழ் மக்களின் காணிகளை பிறமாவட்டங்களுடன் இணைத்து அவர்களை மிகச் சிறுபாண்மையாக்கி நலிவுறச் செய்யும் விக்கினேஸ்வரனின் நயவஞ்சகத் சிந்தனை கண்டனத்திற்குரியதாகும்.

வடக்கு தனியே போதாது வட-கிழக்கை இணைத்து அதற்கு ஒருமுறை முதலமைச்சராக வரவேண்டும் என பேராசைகொள்ளும் விக்கினேஸ்வரன் கிழக்கின் காணிகளை பிற மாகாணங்களுக்கு வழங்கிவிட்டு அதற்கு ஈடாக புத்தளத்தை வடக்குடன் இணைக்க முற்படுவது விக்கினேஸ்வரனின் கிழக்கு மக்கள் தொடர்பான ஏளனப்போக்கை வெளிக்காட்டி நிற்கின்றது. கிழக்கு மக்கள் முட்டாள்கள், யாழ்பாணத்து மேதாவிகளின் பாட்டுக்கு கிழக்கான் ஆடவேண்டும் என நினைக்கும் விக்கினேஸ்வரனுக்கு கிழக்கின் காணிகளை மாற்றானுக்கு கொடுக்கவேண்டும் என சிபார்சு செய்வதற்கு என்ன அருகதை இருக்கின்றது.

விக்கினேஸ்வரனுக்கு கிழக்குடன் சம்பந்தி உறவுதானும் உண்டா என கிழக்கு மக்கள் வேண்டுகின்றனர். அவ்வாறான உறவுகள் விக்கினேஸ்வரனுக்கு கொழுப்பு மாவட்டத்துடனேயே உண்டு.

இதற்கும் அப்பால் கிழக்கிலுள்ள சிங்கள மக்களை அவர்களின் உறவுகளுடன் இணைக்க வேண்டும் என்று விக்கினேஸ்வரன் சிபார்சு செய்யும்போது, கொழும்பில் வாழும் தமிழ் மக்களையும் உடனடியாக வடகிழக்குக்கு அனுப்புமாறு சிங்களவர் கூறுவார்களாயின் என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது.



குறித்த படம் விக்கினேஸ்வரன் காமச்சுவாமி பிரேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் கோவில் அமைத்து பூசை செய்யும் காட்சி

Read more...

சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த இரண்டாவது அறிக்கை ஒப்படைப்பு - விசாரணைக்குழு.

சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த இரண்டாவது அறிக்கை இன்று அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் விசாரணை அறிக்கையே இன்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்துக்கு சென்று, பல விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளது.

சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து மேற்படி விசாரணை குழு தமது விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான குழுவின் அறிக்கை, கடந்த திங்கட்கிழமை அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த இரு அறிக்கையையும் ஒப்பிட்டு பார்த்து, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

அர்ஜுன் அலோசியஸ், மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு.

பெர்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்டவர்கள், மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

11 மாதங்களின் பின்னர் கடந்த முதலாம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் முன்னலைப்படுத்தப்பட்ட போது, இவர்களுக்கு
பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர்களை தற்போது மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

5000 ஏற்றுமதி கிராமங்களை அமைக்க நடவடிக்கை - தயா கமகே.

ஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை அமைக்க தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் தயா கமகே இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் நலன் கருதி இந்த அரசாங்கம், பல்வேறு சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் எதிர்காலத்திற்கு சிறந்த பயனைத் தரும் என அவர் கூறியுள்ளார்.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் சேவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தெளிவூட்டும் முகமாக இந்த மாநாடு இடம்பெற்றது.

Read more...

கொழும்பின் புறநகர் பகுதிகளில், நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் - நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை.

கொழும்பின் புறநகர் பிரதேசங்களில், நாளைய தினம், 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளைக் காலை 08.00 மணிமுதல், நாளை மறுதினம் காலை 08.00 மணி வரை, இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமகம, மீப்பே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே, நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தகுந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read more...

மாலியில் பணியாற்றிய, இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் மரணம் - இலங்கை இராணுவம்.

மாலியில் பணியாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதி சக்தி வாய்ந்த வெடிபொருள் ஒன்று வெடிதத்தனால், இந்த அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளதாக, இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனமே, இந்த அனர்தத்தில் சிக்கியுள்ளது.

மாலி நேரப்படி இன்று காலை 6.30 அளவில் இந்த பாரிய விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக இலங்கை இராணுவத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை- சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் நிலவுகின்றன- ஜனாதிபதி.

இலங்கை- சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் நிலவுவதாக ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா மற்றும் தொழிற்துறை உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் வைத்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் வைத்து இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையே கைச்சாத்தாகியுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த ஒப்பந்தத்தை தயாரிக்கும் போது ,இலங்கை தரப்பில் ஒரு சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குறைபாடுகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை ஆசிய வலயத்திற்கு மாத்திரமன்றி உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் சவாலை வெற்றி கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பில், இதன்போது இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.

போதைப் பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு, தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.

சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்காகவும், அந்த நாட்டில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் நலன்புரி தேவைகளுக்காகவும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

Read more...

புலிகள் தங்கள் சுயலாபங்களுக்காக மாகாண சபை முறையை நிராகரித்தனர். பாராளுமன்றில் டக்ளஸ்

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார். மாகாணசபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இதனிடையே விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மாகாணசபை முறை மக்களுக்கு பெறுமதியான ஒரு சந்தர்ப்பமாகும் என்று குறிப்பிட்டார். அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அம்மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களின் குறுகிய நோக்கத்திற்காக மாகாணசபை முறையை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்தவொரு தேவைப்பாடும், ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரட்ன தெரிவித்தார். தனிப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தாது, நாட்டிற்கு தேவையான வகையில் தேர்தலை நடத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதில் சிக்கல் இருக்குமாயின் பழைய முறையிலாவது தேர்தலை நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். உள்ளுராட்சி தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மேலும் அந்த முறையை வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை தேர்தலை பிற்போடுவதற்கு தான் ஒரு போதும் முயற்சி எடுக்கவில்லையென, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.

இன்று கூடிய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார். இதன்போது, தனது அமைச்சுப் பதவிக் காலத்தில் முன் உதாரணமான இரண்டு சட்ட மூலங்களை முன் வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மாகாண சபைகளை நடைமுறைப்படுத்தாவிடின், பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அத்துடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாதமையினால் பொதுமக்களுக்கான சேவைகள், தடைப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்த தெரிவித்துள்ளார்.

தேர்தலை காலம் தாழ்த்துவதானது, ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடு என்று, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Read more...

கடந்த நான்கு வருடங்களில் கல்விக்காக, பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன- அகிலாவிராஜ்.

கடந்த நான்கு வருட காலப்பகுதியில் கல்வித் துறையில் பௌதீகம் மற்றம் ஆளணி வளங்களை பெற்றுக் கொடுத்து பாரியளவிலான வேலைத் திட்டங்களை செய்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலி சங்கமித்தா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் கல்வித்துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பாரிய பொறுப்பு உள்ளது. ஒரு நாட்டின் சிறந்த வளம் கல்வியே.

அந்த கல்வியை மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்க கல்வி அமைச்சு சிறப்பான வேலைத்திட்டங்களை வகுத்து, அவற்றை நடைமுறையப்படுத்தி வருகின்றது.

அதன்படியே கடந்த நான்கு வருட காலப்பகுதியில் கல்வித் துறையில் பாரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Read more...

நாடக அரங்கேற்றங்களுடன், மலையகத்தில் பாரிய போதை ஒழிப்பு ஊர்வலம்.

போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று, நாட்டின் பல பகுதிகளில் போதை ஒழிப்பு பேரணிகளும், விழிப்புணர்வு செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன

அதன்படி மலையகத்தில் ஹட்டன், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களால் நோர்வூட் நகரில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான பாதாதைகளை ஏந்தி, நகரில் ஊர்வலமாக சென்றதுடன். நகரின் இரண்டு இடங்களில் வீதி நாடகங்களையும் அரங்கேற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள், அதனைத் தடை செய்வதற்கு மாணவர்கள் எடுக்க வேண்டிய முதன்மை நடவடிக்கைகள் தொடர்பாக, இந்த வீதி நாடகங்களின் மூலம் சமூகத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது.

போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பெருந்தோட்ட மக்கள் எவ்வாறான சமூக, பொருளாதார, சுகாதார பாதிப்புகளை எதிர்நோக்குகின்றன என்பது பற்றியும் இந்த பேரணியின் போது, தெளிவுப்படுத்தப்பட்டது.

இதேவேளை போதைப்பொருளுக்கு எதிராக நயினா தீவுப்பகுதியில் இன்றைய தினம் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நயினா தீவு மகா வித்தியாலய மாணவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணி நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பாடசாலையைச் சூழவுள்ள வீதிகளில் பேரணியாக சென்றது. இதன்போது மாணவர்களால் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மாணவர்கள் பேரணியாகச் செல்லும்போது போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று தீவுப்பகுதியில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Read more...

தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் அதிகரிப்பு - 28 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனைத்தை அதிகரிக்க, முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பது குறித்து, இன்று முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம்,தொழில் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு முதலானவற்றின் முக்கிய பிரதிநிதிகள், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வேதனைத்தை, 700 ரூபாவாக உயர்த்த முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டதாக, ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அத்துடன் நாளொன்றுக்கு மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்காக, 40 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பலரும் எதிர்பார்த்துள்ள இந்த கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்க்கிழமை ,கைச்சாத்திடப்படும் எனவும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பெருமளவான வெடிபொருட்கள், மன்னார் காட்டுப் பகுதியில் இருந்து மீட்பு.

பெருமளவு வெடிபொருட்கள், மன்னார் காட்டுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார், பேசாலை நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்தே இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டுப் பகுதியில் மர்மப் பொருட்கள் காணப்படுவதாக,பொதுமக்களில் ஒருவர் பேசாலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற பேசாலை காவல்துறையினர், கிளைமோர் 1, ஜெரற்னைட் 04, துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட பேசாலை காவல்துறையினர், இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.


Read more...

தேர்தல் முறையிலுள்ள சர்ச்சையை ஆயுதமாக்கி, அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு வருகின்றது. - விஜித ஹேரத்.

தேர்தல் முறையிலுள்ள சர்ச்சையை ஆயுதமாக்கிக் கொண்டு, தற்போதைய அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு வருவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கெடுத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதே, அரசாங்கத்தின் உண்மையான தேவையாகவுள்ளது. அரசாங்கத்திற்கு உண்மையான தேவை என்ற ஒன்று இருந்தால், உடனடியாக தேர்தலை நடத்தலாம்.

ஆனால், தேர்தல் முறையை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு தற்போதைய அரசாங்கம், தேர்தலை பிற்போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் எந்த முறையிலான தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்வ தாம் தயாராகவே உள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் எவ்வித தொழில்நுட்ப ரீதியான பிரச்சினையும் இல்லை. முதலில் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள். அதை விடுத்து மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவது நாட்டிற்கு நல்லதல்ல.

அரசியல் அதிகார போராட்டத்தில் மூழ்கி, மக்களின் வாக்குரிமையை மறுக்க வேண்டாம். தேர்தலை துரித கதியில் நடத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் தாமதமடைவதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Read more...

காலநிலை மாற்றம், மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது- ஜனாதிபதி.

உலகமெங்கும், குறிப்பாக எமது பிராந்தியத்தின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் காலநிலை மாற்றம் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவுவதற்கான வளமானதொரு நிதியளிப்பு பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விசத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு இன்று இடம்பெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை நிறுவனங்களின் மூன்றாவது மாநாட்டில் முதன்மை உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை, 2019 பூகோள காலநிலை இடர் சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு சமச்சீரான காலநிலையைக் கொண்ட தீவான இலங்கை, அதன் நிலப் பிரதேசத்தின் 70 வீதம் உலர் வலயத்திற்கு சொந்தமாக இருப்பதுடன், வருடத்தில் 1500 மில்லிமீற்றரை பார்க்கிலும் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்றுவருகிறது.

காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அண்மையில் அதன் பாரிய பசுமை முதலீடாக மொரகஹகந்த – களுகங்கை பல்நோக்கு நீர்வள திட்டத்தை ஆரம்பித்தது. இது தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புக்களை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.

அதிகரித்து வரும் பூகோள வெப்பமாதல் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு, பசுமை சூழலை பாதுகாப்பதற்கான இந்த திட்டங்களை பார்ப்பதற்கு எமது நாட்டுக்கு வருகை தருமாறு, ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, காலத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் புதிய நடவடிக்கைகளை எடுக்கவும், சுற்றாடல் மாநாடுகளை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றாடல் மாநாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட அர்ப்பணிப்புகளை வெற்றிகரமாக அடைந்துகொள்வதற்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிக்கின்ற ஒரு முறைமையை ஸ்தாபிக்க வேண்டும் .

மேலும், கைத்தொழில், ‘தூய சமுத்திரம்’ வேலைத்திட்டம் போன்ற துறைகளை பலப்படுத்தும் வகையில் அபிவிருத்தியடைந்த நாடுகளினதும், பிராந்திய கூட்டுறவு அமைப்புகளினதும் ஒத்துழைப்பு விரிவாக்கப்பட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது விசேட உரையில் குறிப்பிட்டார்.

Read more...

ஜனநாயகத்தை மீறியவர்களே இப்போது அரசாங்கத்தை பற்றி விமர்சிக்கின்றனர் – ரணில்.

நாட்டில் 18 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக ஜனநாயகத்தை மீறியவர்களே இப்போது அரசாங்கத்தை பற்றி விமர்சித்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றில் விவாதமொன்றுக்கும் செல்லத் தாம் தயார் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, பிரதமர் இதனை கூறினார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு என்ன நடந்தது என எம் அனைவருக்கும் தெரியும். 17 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தான் கொண்டு வந்தோம்.

ஆனால், மஹிந்த அரசாங்கம் 18 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து அனைத்தையும் மாற்ற முயற்சித்தார்கள். இதன் விளைவாகவே, மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வியடைந்தார்.

தற்போது உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து வருகிறார்கள். யார் இதற்கெல்லாம் காரணம்? ஜனநாயகத்தை மீறியவர் யார்?

அனைத்துக் குற்றங்களையும் செய்து விட்டு நீதித்துறையையும் சட்டத்தரணிகளையும் விமர்சிப்பதில் என்ன பயன்? இதற்கு நாம் இடமளிக்க முடியாது.

அத்துடன் தற்போது அரசியலமைப்புச் சபையினாலேயே அனைத்து நியமனங்களுக்கும் சுயாதீனமாக வழங்கப்பட்டுள்ளன“ என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Read more...

திரு குமாரதுரை அவர்களின் இழப்பு முழுத் தமிழினத்துக்குமானது. சித்தார்த்தன்.

திருமலையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் கடந்த 22.01.2019 அன்று திடீர் மரணமடைந்துள்ளார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை சனிக்கிழமை 26.01.2019 இடம்பெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

நீண்டகால அரசியல் சமூக செயற்பாட்டாளரான திரு. குமாரதுரை அவர்களது இழப்பையிட்டு பல்வேறு கட்சிகளும் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

அந்த வரிசையில் யாழ் மாவட்ட பாராளுமன்று உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தலைவருமான சித்தார்த்தன் விடுத்துள்ள அறிக்கையில்,

எமது நினைவுகளில் அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்கள்....

திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், பின்னாளில் டென்மார்க்கில் வசித்து வந்தவருமாகிய திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு ஆழந்த துயரும், வேதனையும் அடைகின்றோம்.

அன்னார், தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவரும் அனைவராலும் மதிக்கப்பட்டவருமான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

மிகத் தீவிர தமிழ்த் தேசியவாதியாகவும், தமிழ்இனப் பற்றாளராகவும் திகழ்ந்த குமாரதுரை அண்ணர் அவரது துணிச்சல் மிக்க செயற்பாடுகளினால் மக்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டவர். விடுதலைப்போராட்ட காலத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்காளானதுடன் மூன்று வருடங்களுக்குமேல் சிறைவாசம் அனுபவித்திருந்தார்.

எங்களுடைய தலைவர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களுடனும், எங்கள் இயக்கத்துடனும் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியவர். கழகத்திற்கு ஆரம்பகாலந்தொட்டு பல வழிகளிலும் உதவி வந்தவர். கழகத்திற்கு மாத்திரமல்ல, ஏனைய தமிழ் இயக்கங்களுக்கும் பல்வேறு உதவிகளைப் புரிந்தவர்.

விடுதலைப்பற்றாளனாக, மிகச் சிறந்த சமூகத் தொண்டனாக பல பொதுப்பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த அருணாசலம் குமாரதுரை அவர்களின் இழப்பு தமிழினத்துக்கான இழப்பு.

அன்னாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர்கள் உட்பட்ட அனைவருடனும் எமது துயரினை பகிர்ந்துகொண்டு, அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.


த. சித்தார்த்தன் (பா.உ)
யாழ். மாவட்டம்.
தலைவர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
25.01.2019.



Read more...

திக்கம் வடிசாலையில் பனம் சாராயத்துடன் களவாக கலக்க கொண்டுவந்த எதனோல் விசேட அதிரடிப் படையிடம் இடம் மாட்டியது.


இலங்கையில் தடை செய்யப்பட்ட எதனோல் சட்டவிரோதமாக பாரவூர்தி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பெரும் தொகை எதனோலானது திக்கம் வடிசாலையில் பனம் சாராயத்துடன் கலக்க களவாக கொண்டுவரப்பட்டது என முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

ஏழாலைப் பகுதியில் நேற்று (24) வீதி ரோந்தில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 371 எதனோல் போத்தல் கல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஒவ்வொரு கலனும் 20 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்தமாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட எதனோல் சுன்னாகம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொணடு இப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறு சட்டவிரோதமாக பல தடவைகள் எதனோல் கொண்டுவரப்பட்டு முறையற்ற விதத்தில் கலக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து பாரவூர்த்தில் கொண்டுவரப்பட்ட குறித்த ஏதனோல் தொகை சிறிது சிறிதாக இரவு நேரங்களில் திக்கம் வடிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பனம் சாராயத்துடன் கலக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகளவு எதனோல் கலப்படம் செய்யப்பட்ட பனம் சாராயம் திக்கம் வடிசாலையில் வைத்து மீளவும் போத்தலில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை சுமார் 2 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திக்கம் வடிசாலை ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதுதொடர்பில் ஆராய்ந்து அவ்ஊழியர்கள் மல்லாகம் இராணுவ முகாமுக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் ஏழாலைப் பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்த சிறப்பு அதிரடிப்படையினர் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றைச் சோதனையிட்டு 20 லீற்றர் கொள்ளவுடைய 371 கலன்களில் எதனோல் (தூய மதுசாரம்) கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Read more...

யாழ் வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடுவதில் புதிய நடைமுறை. ஒரே நேரத்தில் இருவரே பார்வையிட முடியும்:

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான புதிய அனுமதியட்டை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி நேற்று(24) தெரிவித்தார். இந்த நடைமுறை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்கள், பார்வையாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களும் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தாதியர்கள் மற்றும் நோயாளர்களின் கருத்துக்களுக்கு இணங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட புதிய நடைமுறையை அமுல்படுத்தவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 1250 இற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. நோயாளர்கள் விடுதிகளில் சிகிச்சை பெறுகின்ற போது மூன்று வேளைகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில வருடங்களாக ஒரு நோயாளர்களைப் பார்வையிட அதிகமானவர்கள் வருவதனால், நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதுடன், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், கடுமையான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க சிரமப்படுகின்றனர். அத்துடன், ஒரு நோயாளரைப் பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வந்து அந்த நோயாளரைச் சுற்றி நிற்கும்போது, அருகில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனவே, இவ்விடயங்களை வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் தீவிரமாக ஆராய்ந்ததன் அடிப்படையில் ஒரு நோயாளியைப் பார்க்க நோயாளிக்கு அருகில் இருவர் மாத்திரமே செல்லமுடியும். பலர் வைத்தியசாலைக்கு வருகை தந்தாலும், அவர்கள் வைத்தியசாலையின் ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து, நோயாளியைப் பார்க்கச் சென்றவர் வந்ததன் பின்னர், இருவராகச் சென்று பார்வையிட முடியும்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கப்படும் அனுமதி அட்டையை பார்வையாளர்கள் கொண்டுசென்று இருவராக பார்வையிடுமாறும், அவ்வாறு பார்வையிடுவதனால், நோயாளர்களுக்கு ஏற்படும் கிருமித் தொற்றுக்கள் மற்றும் காற்றோட்டத்தை வழங்க முடியுமென்பதுடன், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நோயாளிக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்

Read more...

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- (பாகம்-2) . வை எல் எஸ் ஹமீட்

முந்திய பதிவில் குறித்த பிரச்சினையின் ஆழ, அகலத்தை அளவிட 20 கேள்விகளை அடையாளம் கண்டோம். அவற்றிற்குரிய விடையை ஆராய்வோம்.

(1) குறித்த ஆடைகளை அணிவது அவ்வாசிரியைகளின் உரிமையா?

தனிமனித சுதந்திரம்

1972ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கை ஒரு “ சோசலிச ஜனநாயக குடியரசாகும். தற்போதைய யாப்பின்கீழ் அது ஒரு “ ஜனநாயக சோசலிச குடியரசாகும்”. அதாவது தனிமனித சுதந்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தற்போதைய யாப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

உயிர்வாழும் உரிமை

ICCPR சரத்து 6 மனிதன் “ உயிர்வாழும் உரிமையை” ( right to life) உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது இலங்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.

UDHR சரத்து 3 உம் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது ஆரம்பத்தில் நாடுகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு ஆவணமாக இருக்கவில்லை. காரணம் இது ஒரு declaration. ICCPR ஒரு treaty. ஆனால் தற்போது UDHR ஆனது Customary International Law என்ற அந்தஸ்த்தை அடைந்திருப்பதால் அதுவும் இலங்கையைக் கட்டுப்படுத்துகின்றது.

சுருங்கக்கூறின் ஒவ்வொருவரினதும் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்கின்றது. அது இலங்கைமீது கடமையாகும். ஆனாலும் 40 வருடங்களுக்குமுன் உருவாக்கப்பட்ட இலங்கை யாப்பு இந்த உரிமை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சட்டப்படியேயல்லாது ஒருவரின் உயிரைப்பறிக்கமுடியாது; என்று யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய யாப்பிலும் உயிர்வாழும் உரிமை வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் சட்டப்படியேயல்லாது உயிர் பறிக்கப்படக்கூடாது; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு யாப்பிலும் அடிப்படையில் ஒரே விசயம் வெவ்வேறு சொற்பதங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்களை வைத்து இந்திய உச்ச நீதிமன்றம் “ உயிர்வாழும் உரிமையை” இந்திய யாப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக பல வழக்குகளில் வியாக்கியானப்படுத்தி உள்ளது.

உயிர்வாழும் உரிமையென்றால் என்ன?


இந்திய உச்சநீதிமன்றம் இந்த உயிர்வாழும் உரிமையை மிகவும் விரிவாக வியாக்கியானப் படுத்தியுள்ளது. அவ்வாறு வியாக்கியானப்படுத்தும்போது, ஒரு வழக்கில் “ மனித நாகரீகத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் அது உள்ளடக்குகின்றது” என்று தெரிவித்திருக்கின்றது. ( P நல்லதம்பி என்பவரது வழக்கில்).

இன்னுமொரு வழக்கில் “ உயிர்வாழும் உரிமை என்பது “ கௌரவமாக வாழுகின்ற உரிமை “ (the right to live with human dignity) என்று தெரிவித்திருக்கின்றது. இதன் அடிப்படையில் வாழ்வின் பல அம்சங்களை பல வழக்குகளில் இந்த உரிமைக்குள் உள்வாங்கியிருக்கின்றது.

அந்த வகையில் தன் உடலை மறைப்பதற்காக மனிதன் அணியும் கண்ணியமான ஆடையும் உயிர்வாழும் உரிமையின் ஓர் அங்கமான “கௌரவமாக வாழ்வது” என்கின்ற வரையறைக்குள் வரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, சுருங்கக்கூறின் “ கண்ணியமான ஆடை” என்பது மனிதன் உயிர்வாழும் உரிமையாகும்.

மதசுதந்திரம்


UDHR சரத்து 18, மதசுதந்திரத்தையும் அதனை வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்றது.

இதே சுதந்திரத்தை ICCPR சரத்து 18ம் உறுதிப்படுத்துகின்றது. அதேநேரம் அரசியலமைப்பு சரத்து 10ம் இந்த சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. ( ஆனால் வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற என்ற வார்த்தைகள் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை).

ஒரு முஸ்லிம் பெண்ணின் ஆடை


ஒரு முஸ்லிம் பெண்ணைப் பொறுத்தவரை முகத்தையும் மணிக்கட்டு வரையான கையையும் விடுத்து ஏனைய பாகங்களை மறைப்பதற்கு இஸ்லாம் கட்டளையிட்டிருக்கின்றது. எவ்வகையான ஆடையக்கொண்டு மறைக்கவேண்டும்; என்பது அவளது தனிமனித சுதந்திரம். மறைப்பது என்பது இஸ்லாம். அவளது மார்க்கம் இட்ட கட்டையின் பிரகாரம் ஆடை அணிவது அவளது மதசுதந்திரத்திற்குட்பட்டது.

அதனை மறுக்கின்ற உரிமை இந்த நாட்டு அரசுக்கே இல்லை. ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியுமா?

இந்த ஆடையை அணிய தடைவிதிப்பதென்பது இரு வகையான உரிமையில் கைவைக்கின்றது. ஒன்று மதசுதந்திரம். அடுத்தது உயிர்வாழுவதற்கான சுதந்திரம்.

ஐரோப்பிய நாடுகளில் போராட்டம்

இன்று மனித உரிமையின் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த உரிமையில் கைவைக்க முனைந்து அந்நாட்டு நீதிமன்றங்களால் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாடுகளில் இஸ்லாமிய சகோதரிகள் எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியில் இந்த உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடசாலையில் போய் அந்த உரிமையை இழக்கமுடியுமா?

(2) அந்த ஆடை அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் தடைகள் ஏதும் உள்ளனவா?


அவ்வாறு தடைகள் ஏதும் இல்லை. தடைகள் இருந்தால் இது சண்முகா பிரச்சினையாக இருந்திருக்காது. மாறாக கல்வியமைச்சின் விதிமுறையை மீறிய பிரச்சினையாக இருந்திருக்கும். ஆனால் நாட்டின் பல பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகள் இந்த ஆடையை அணிகிறார்கள். எதுவித பிரச்சினையும் இல்லை.

(3) இல்லையெனில் பாடசாலையின் மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் தடைவிதிக்க முடியுமா?

இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டமும் இந்நாட்டு அரசாங்கமும் அனுமதித்த ஒரு ஆடையை மறுக்கின்ற உரிமை எவ்வாறு ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியும்? பாடசாலையிலும் சமஷ்டி ஆட்சி நடைபெறுகின்றதா? ஒரு ஆசிரியையின் அடிப்படை உரிமையை அதிபர் மறுத்தது; எவ்வளவு பெரிய குற்றம். அதற்கு தண்டிக்கபடவேண்டியவர் அந்த அதிபர் இல்லையா?

மாறாக தனது அடிப்படை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, தனது மதசுதந்திரத்தில் கைவைக்க அனுமதிக்க முடியாது. தான் உயிர்வாழும் சுதந்திரத்தைத் தட்டிப்பறிக்க இடம்கொடுக்க முடியாது; என்று தனது உரிமையை நிலைநாட்ட முயன்ற ஆசிரியைகளுக்குத் தண்டனை; அவ்வுரிமையைப் பறிக்கமுயன்றவருக்கு அதிகாரிகளே ஆதரவு! இது எந்தவகையில் நியாயம்?

இந்நாட்டில் சண்முகா மாகாவித்தியாலயம் மாத்திரம் ஒரு இந்துப் பாடசாலை அல்ல. இன்னும் எத்தனையோ இந்துப் பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில் பலவற்றில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கற்பிக்கின்றார்கள். இந்தப் பாடசாலையில் மட்டும் ஏன் பிரச்சினை?

இது ஒரு இனத்துவேசம்கொண்ட அதிபரின் பிரச்சினை. இதற்குத் சில தமிழ் அரசியல் சக்திகள் துணைபோயின. இந்த ஆசிரியைகள் அவர்களது கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டாம்; என்றார்களா? ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரி அபாயாவுக்கு நிகரான ஓர் ஆடையை அணிந்துகொண்டு இதே பாடசாலைக்கு கற்பிக்க சென்றிருந்தால் இதே துவேசத்தை வெளிப்படுத்தியிருப்பார்களா?

எனவே, இது முழுக்க முழுக்க துவேசத்தை அடிப்படையாகக் கொண்டதேதவிர நிய்யப்படுத்தக்கூடியவை அல்ல. இந்த அடிப்படை விசயம்கூட இந்த அதிகாரிகளுக்கு ஏன் புரியாமல் போனது? குற்றவாளிக்குத் தண்டனை வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனைவழங்கியது ஏன்? ஆகக்குறைந்தது இந்த ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றப்பட்டபோது அந்த அதிபரும் தற்காலிகமாக ஏன் இடமாற்றப்படவில்லை. ஏன் அவர்களின் மக்கள் பிரதிநிதிகள் பலம்வாய்நதவர்கள்; என்பதனாலா?

( தொடரும்).

பகுதி 1 தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது

Read more...

ரணில் பதவிக்காகவே போராடினார்-ஜே. வி. பியின் சந்திரசேகர் விசனம்.

52 நாட்கள் இடம்பெற்ற சதித் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அதுவரை காலமும் ஜனநாயகத்துக்குப் போராடிய ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதேயில்லை. எனவே, சதித் திட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்துக்காகப் போராடவில்லை. தன்னுடைய பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அவர் முயற்சித்து வருகிறார் என ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ஒக்ரோபர்-26 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றமும் அதன் பின்னரான எதிர்பார்ப்புக்களும்” எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கு ஒன்று கடந்த திங்கட்கிழமை(21) யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் சாதனைத் தமிழன் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைத்திரிபால சிறிசேனவும், ஏனைய அரசியல் வாதிகளும் தங்களுடைய அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும் எவ்வாறான அரசியல் செய்ய முடியுமோ, எவ்வாறான அரக்கத்தனங்களைக் கட்டவிழ்த்து விட முடியுமோ அனைத்தையும் செய்வதற்குத் தயாரான நிலையில் காணப்படுகின்றார்கள் என்பது கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி ஏற்பட்ட குழப்ப நிலைக்குப் பின்னர் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஆட்சியதிகாரத்தை மீளவும் வழங்கக் கூடாது. குறித்த ஆட்சியதிகாரத்தை ஜனநாயக வாதிகளான மக்கள் விடுதலை முன்னணி தங்கள் கையிலெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் செயற்பட்டோம். தற்போதைய நிலையில் நாட்டுக்கும், மக்களுக்கும் புதிய பாதை, புதிய பயணமொன்று தேவைப்படுகின்றது.

அந்தப் புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புத்திஜீவிகள், கல்விமான்கள், உண்மையில் மக்களை நேசிக்கின்ற அரசியல்வாதிகளுக்கு கூடுதலான சக்தியும், வலுவும் கிடைக்க வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஆரம்பமானது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் மாநகர சபை முன்றலில் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமாகி உள்ள சர்வதேச வர்த்தக பிராமண கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக 10வது தடவையாகவும் கண்காட்சி ஏற்பாடாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண வைபவம் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்த வருட கண்காட்சியிலும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் குளிரான காலநிலையே தொடர்ந்தும் நிலவி வருகின்ற நிலையில், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

வெள்ளவத்தையில் தனிப்பட்ட காரியாலயமொன்று இல்லை - மிலிந்த ராஜபக்ச மறுப்பு

கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வெள்ளவத்தையில் தனிப்பட்ட காரியாலயமொன்று அமைக்கப்படுவதாக வெளியாகிய செய்தியில் எந்ததொரு உண்மையும் இல்லையென அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு, காரியாலயம் அமைக்க எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் காரியாலயம் அமைப்பது தொடர்பில் வேறு எவருக்கும் பொறுப்புக்களை கையளிக்கவில்லை எனவும் மிலிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷவின் பெயரில் வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் காரியாலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிலர் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.


Read more...

மீண்டும் தலைவரானார் பிரதமர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக அடுத்த ஆண்டுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நீடிப்பார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தின் போதுதே இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.


Read more...

பிரதமரை நோக்கி சவால் விட்ட அனுர

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு ஊழலைக் குறைக்கும் எண்ணம் இருந்தால் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு பிரதமருக்கு எதிராக கேள்வி எழுப்பினார்.


Read more...

விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு விசேட அனுமதி

ஹொரவ்பொத்தானையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்தமை காரணமாக தொல்பொருள் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


புராதன விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்தமி காரணமாக கைது செய்யப்பட்டுள்ள 8 தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனினும் குறித்த மாணவர்கள் எண்மரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதி வருட மாணவர்களாக இருக்கும் நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு கெப்பத்திகொல்லாவை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Read more...

Thursday, January 24, 2019

அன்ரன் பாலசிங்கம்! அறியாத வரலாறு. பகுதி (02) (By நட்சத்திரன் செவ்விந்தியன்)

பாலசிங்கம் பற்றி மிகத்தவறான மதிப்பீடுகள் பத்திரிகையாளர்களிடமுண்டு. அவர் அசலான சுயாதீனமான இடதுசாரி புத்திஜீவி. ஆனால் தார்மீகமில்லாத மோசமான மனிதர். தன்னை வஞ்சித்த சமூகத்தில் காழ்ப்புகொண்ட பெரும் Ego கொண்ட மனிதன் அதே சமூகத்தில் தன்னை அறத்தை அடகுவைத்து நிலைநிறுத்துவதே அவரை இயக்கிய தத்துவம்.

கரவெட்டியில் அவரை வஞ்சித்த வறுமையையும் பிரதேச ஜாதீய பாரபட்சத்தையும் வென்று 70 களின் ஆரம்பத்தில் லண்டன் சீமையில் பல்கலைக்கழக மாணவனாக கரையேறிய பாலசிங்கம் லண்டனில் மறுபடியும் ஒரு பரம வைரியை காண்கிறார். அவர் வேறுயாருமல்ல. யாழ் வெள்ளாளரும், என்ஜினியரும், கட்டுப்பெட்டி மார்க்சியருமான EROS ரட்ணசபாபதி.

ரட்னா தன் லண்டன் பலஸ்தீன PLO தொடர்புகளால் ஈழப்புலிபோராளிகளையும் தன் EROS போராளிகளையும் லெபனானுக்கு பயிற்சிக்கு அனுப்புகிறார். ரட்ணா மார்க்சியத்தை வெறும் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக மட்டுமே அறிந்தவர். பாலசிங்கமோ மார்க்சியத்தை தத்துவ வரலாற்றுப்பின்னணியில் மேலும் மேவி அறிந்தவர்.

ரட்னாவுக்கு தன் மேதமையை புரியவைக்கும் அவா பாலாவுக்கு வருவது இயல்புதானே. தானும் ஏதாவது செய்யவேண்டும். இதன் விளைவுதான் 1979ல் பாலாவின் இந்தியபயணம். தன் பூர்வாங்க புலனாய்வுகளின் விளைவாக பிரபாகரன் என்ற புலிகளின் தலைவரையே நேரே அணுகி அவரை protege/சீடன் ஆக்கலாம் என்ற திட்டத்தோடு புதிய ஆஸ்திரேலிய காதல் மனைவியோடு சென்னை வருகிறார்.

இந்த தருணத்தில் பாலா சிறிது பொறுமை காத்திருந்தால் அவசரப்படாமல் தன் கலாநிதிப்பட்ட ஆய்வை செய்துமுடித்து ஒரு தத்துவப்பேராசிரியராக வந்திருந்தால் வரலாற்றில் பாலாவுக்கு நல்ல இடம் வசமாகியிருக்கும். பிரபாகரனதும் புலிகளதும் Hegemony கூட வரலாற்றில் இல்லாமலிருந்திருக்கும். இக்காலத்தில் கொடிகட்டிப்பறந்த சித்தாந்த கைலாசபதியைவிட அசலான புத்திஜீவி கோட்டைவிட்ட துரதிஸ்ட தருணமிது. ஆனால் விதி? பாலா ஏற்கெனவே புகைக்கும் மதுவுக்கும் அடிமை. இடையில் ஜேம்ஸ் பாண்டின் "blonde" காதலிகள் மாதிரியான ஒரு ஓஸ்றேலிய நாட்டுப்புறக்காதலியான அடேல் ஊர்வசி மேனகா ரம்பை போல அவர் தவத்தை கலைக்க வந்திருப்பதையும் பாலா அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

பிரபாகரனை பாலா சந்தித்த முதல் 1979 பயணத்தில் புலிகளிலிருந்து உமாமகேஸ்வரன் அணி பிரிந்து PLOTE உருவாகியிருக்கவில்லை. ஆனால் பாலாவுக்கு உமாவை பிடிக்கவில்லை. ரட்ணாவைப்போல உமா ஒரு மேட்டுக்குடி வெள்ளாளன். ஆங்கிலம் அறிந்த உமா பிரபாகரனைவிட 10 வயது அதிகமான Surveyor. விவாதித்து கேள்வியெழுப்பும் உமா பாலாவின் Protege ஆக வாய்ப்பில்லை. தலமைப்போட்டியில் உமாமீது ஊர்மிளாவின் காதல் தொடர்பு பாவிக்கப்படுகிறபோது பாலா பிரபாகரன் சார்பு எடுப்பதன் காரணம் இதுதான்.

1979 ல் பிரபாகரனை முதலில் பாலா சந்திக்கிறபோது பிரபாகரனுக்கு இருந்த ஒரே மெடல் அவர் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்றது என்பதுதான். இது வலதுசாரி அமிர்தலிங்கம் ஏவி நடந்து கொண்டாடிய விருது. துரையப்பா மேட்டுக்குடி அங்கிலிக்கன்/மெதடிஸ்து வெள்ளாளன் என்றாலும் அவர் ஒடுக்கப்பட்ட தலித் யாழ்நகர மாந்தரின் விருப்பு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி என்பதை நன்கு அறிந்தவர்தான் பாலா.

வரலாற்றில் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையிலான ஒத்த உறவை தேடி ஆராய்ந்தபோது கிடைத்தது ஸ்ராலினுக்கும் போல்செவிக்குகளின் இரண்டாவது உளவுத்தலைவன் Vyacheslav Menzhinsky(படம் 2) க்குமிடையிலான உறவுதான்.

ஸ்ராலின் மண்டையில் போடாத ஒரேயொரு உளவுப்படைத்தலைவனும் மென்சின்ஸிகிதான். பாலாவும் மென்சின்ஸிடகியைப்போல இயற்கை மரணமடைந்தவர். மென்ஸின்ஸிகியின் வரலாற்றைப்படித்தால் இவருக்கும் பாலாவுக்குமான பல ஒற்றுமைகள் புலப்படும். மனிதரைப்பற்றியும் தகவல்களைப்பற்றியும் மிகக் கறாரான மதிப்பீடுகளை செய்யக்கூடியவராக இருந்தமைதான் மென்சின்ஸ்கியின் மிகப்பெரிய பலம். இதுதான் பாலாவின் பலமும்.

பாலசிங்கம் ஏறத்தாழ தன்னை ஒரு Tallyrand ஆகவும் பிரபாகரனை நெப்பொலியன் ஆகவும் உருவகித்து காய் நகர்த்தினார். இது அடிப்படையில் தப்பாக இருந்தாலும் சில ஒற்றுமைகள் இருந்தன. தப்பு எங்கு இருநததென்றால் வரலாற்றில் முறையாக இராணுவனாகப் படித்து வந்த புத்திஜீவித்தன்மைகள் கொண்ட நெப்போலியனையே Tallyrand சுத்தினார். ஈழச்சூழலில் படிக்காத பிரபாகரன் பிச்சைக்காரன் பாலாவை சுத்தினார். பிரபா பாலா முதல் சந்திப்பு நடக்க லண்டன் பாலா தம்பதியர் சென்னை வரும்போது சென்னையில் நல்ல ஓட்டலில் தங்க தாம் வசதியற்றிருந்ததை அடேல் அம்மையார் தன் விடுதலை வேட்கை புத்தகத்தில் பதிந்துள்ளார். பிரபாகரனை மாற்றுவதற்குபதிலாக பிரபாகரன்தான் பாலாவை உருமாற்றினார். பிழைப்புக்காக ஒரு இடதுசாரி தத்துவ அறிஞர் வலதுசாரி பாசிஸ்ட் பிரபாகரனின் Theoretician ஆகவும் பேச்சாளராகவும் மாறினார். உண்மையில் பாலா புலிகளின் அறம்மிகு ஆலோசகர் என்பதைவிட ஒரு உளவுப்படைத்தலைவர் போலவே இருந்தார். கூட்டமைப்பை புலிகளின் ஊதுகுழலாக மாற்றிய திட்டத்தை வகுத்து அதனை உளவுப்படைத்தலைவர் பொட்டனிடம் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை கொடுத்தது பாலாதான்..

Tamil Tigress: The fake memoirs எனும் முகப் புத்தகத்திலிருந்து

அன்ரன் பாலசிங்கம்! அறியாத வரலாறு. பகுதி 01 ஐ வாசிக்க



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com