Tuesday, January 1, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர தயாரில்லை, மரிக்கார் விளக்கம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுடன் இணங்கி ஒருபோதும் ஆட்சியை அமைக்க மாட்டோம் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு , கருத்து வெளியிட்ட போதே மரிக்கார் இவ்வாறு கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தைகள் ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை தமது கட்சியால் ஆட்சியை தொடர முடியுமென கூறிய அவர், ஐக்கிய தேசிய கட்சியால் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள முடியும் எனவும் கூறினார்.

தேர்தல் காலம் வந்தால் சுதந்திர கட்சியிலிருந்து குழுவொன்றை இணைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளதாகவும் மரிக்கார் கூறினார். அத்துடன் நாட்டின் அரசிய குழப்பங்களுக்கு நீதிமன்றம் ஊடாக சரியான ஜனநாயக தீர்வொன்று கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை தருவதாக மரிக்கார் கூறினார்.

மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கமே ஆதரவளிக்க உள்ளதாக கூறிய அவர், அடுத்து வரும் அத்தனை தேர்தல்களை சந்திக்க காத்திருப்பதாக கூறினார்.

Read more...

பிரத்தியேக வகுப்புக்கள் குறித்து அமைச்சரவை பத்திரம்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் மாணவர்களுக்காக பல பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நாட்களில் மாணவர்களுக்கான இந்த பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக புத்த சாசன, மற்றும் வாடா மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

மாணவர்கள், தமதுஓய்வு மற்றும் சுயகல்வியை விடுமுறை தினங்களிலேயே நடத்த முடியும். இந்த நாட்களில் அவர்களை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் தம்ம பாடசாலை கல்வியை ஞாயிற்றுக்கிழமைகளிலேயே நடாத்த முடியும். இந்த நாட்களில் அவர்கள் பிரத்தியேக வகுப்புக்களுக்கு அழைக்கப்படுவதால், தம்ம பாடசாலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலை பௌத்த மாணவர்களுக்கு மட்டுமன்றி, இந்து,கத்தோலிக்க முஸ்லிம் மாணவர்களுக்கும் இருப்பதால், தாம் இது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பூரணை தினங்களில் பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துவதற்கான, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் கையொப்பத்துடன் கூடிய பத்திரமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

Read more...

தொழிலாளர்களின் ஏமாற்றம் குறித்து, தொழிலாளர் முன்னணி கருத்து.

2018 முடிவடைந்து 2019 ஆம் ஆண்டும் வந்துவிட்டது. இந்த ஆண்டிலாவது தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென பலர் எதிர்பார்க்கின்றனர்.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணி, சம்பள உயர்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.

வேதன அதிகரிப்பு விடயத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணி , இந்த நிலையை தடுக்கும் விதமாக 2019 ஆண்டில் முனைப்புடன் செயல்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்து கருத்து வெளியிடும் போது ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணியின் தலைவர் நிரோஷான் தயானந்த இந்த விடயத்தை கூறினார்.

தொழிலாளர்களின் வேதன உயர்வு விடயத்தை தமது சுய அரசியல் லாபத்திற்காக பல அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். வறுமைக்கு கோட்டுக்குள் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் தேவைகளை புரிந்துகொண்டு, அவர்களை ஏமாற்றாமல் அனைவரும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் நிரோஷான் தயானந்த கோரிக்கை விடுத்தார்.

பல தொழற்சங்கங்கள் மக்கள் மீது அக்கறை கொள்ளாது வேதன விடயத்தில் தான்தோன்றி தனமாக நடந்து கொள்வதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இறுதியாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 3 மாதங்கள் ஆகி விட்டன. எனினும் இது குறித்து எந்தவித முன்னேற்றகரமான முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசியல் குழப்பங்களை காரணம் காட்டி, மக்களை ஏமாற்றும் தொழிற்சங்கங்கள் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தி வருகின்றன.

எனினும் பெருந்தோட்ட மக்கள் தமது ஒருநாள் சம்பளத்தையும் இழந்து, நாளுக்கு நாள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இருந்தபோதும் இந்த வேதன உயர்வு பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே இந்த நிலை தொடராமல் இருக்க, இந்த ஆண்டில் வேதன உயர்வு தொடர்பாக முனைப்புடன் செயல்படவுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர தொழிலாளர் முன்னணியின் தலைவர் நிரோஷான் தயானந்த குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஐந்து வருடங்களில் இத்தனை கைதுகளா?

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பாவனை குறித்து , சுமார் 15000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் நாயகம் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை முதலான மாவட்டங்களிலேயே அதிகளவிலான கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்,2018 ஆம் ஆண்டு வரை போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும் எதிர்வரும் காலங்களில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Read more...

அரசியல் யாப்பு மாற்றத்திற்கோ, மூன்றில் இரண்டிற்கு இடமளியோம். திலங்க சுமதிபால

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைத்துக் கெர்ள்வதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பாராளுமன்ற அமைச்சர் திலங்க சுமதிபால ஊடவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

'எதிர்கட்சி தலைமைத்துவத்தையும் எதிர்கட்சி காரியாலயத்தையும் இதுவரை எம்மிடம் ஒப்படைக்கவில்லை. இவ்வாறாக தமிழரசு கட்சியினர் செயற்படுவதை நாம் இலகுவாக நினைக்க முடியாது.

பாராளுமன்றத்தில் வெறும் 16 ஆசனங்களை மட்டும் கொண்டுள்ள சிறிய கட்சி ஒன்றிற்கு எதிர்கட்சி தலைமைத்துவத்தை வழங்க முயற்சிப்பது ஐக்கிய தேவிய கட்சியின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மறுபுறத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்று முயற்சிக்கின்றனர். அதன்மூலம் பெடரல் முறைமையிலான அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்தி வடகிழக்கை இணைத்து அதிகாரங்களை பெற்று மீண்டும் ஈழம் என்ற இலக்கை அடையவே ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றன.

அத்துடன் சுமந்திரன் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கிறார். எவ்வாறெனினும் பாராளுமன்றத்தில் 2/3பெரும்பான்மையை பெற நாம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை' என அவர் தெரிவித்திருந்தார்.

Read more...

இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து தீர்மானம்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் தயாரித்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த ஒதுக்கீட்டு சட்டமூலம் இந்த மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டு சட்டமூலம், அனைத்து அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். அத்துடன் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் யோசனைகளை குறித்தும் ஆராயப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முற்பட்ட முன்னாள் சவூதி மன்னர் அப்துல் அசீஸ். முகம்மத் இக்பால் (பகுதி 2)

வரலாற்றை பார்த்ததிலிருந்து புரிந்துகொண்ட சவூத் குடும்பத்தின் பசுந்தோல் போற்றிய அரசியல்

அமெரிக்காவுக்கு இராணுவ தளம் அமைப்பதற்கு சவூதி அரேபியா மறுப்பு தெரிவித்திருந்தால், மத்தியகிழக்கில் உள்ள எந்த அரபு நாடுகளும் அமெரிக்காவுக்கு இடம் வழங்கியிருக்காது.

கட்டார் உட்பட மத்திய கிழக்கில் மன்னர் ஆட்சி நடைபெறுகின்ற அனைத்து நாடுகளும் அப்போது சவூதி அரசுக்கு கட்டுப்பட்டே முடிவுகளை மேற்கொண்டது.

இன்று வரைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வருகின்ற எந்த அவலங்களும், இலட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் படுகொலைகளும் ஏற்பட்டிருக்காது. இந்த அனைத்து அழிவுகளுக்கும் சவூதி அரேபிய ஆட்சியாளர்களே காரணமாகும்.

யேமன் நாட்டில் ஹூதி (ஹௌதி) இஸ்லாமிய இயக்க போராளிகள் நடாத்திய தொடர் போராட்டத்தினால், யேமன் நாட்டை முழுமையாக கைப்பேற்ற இருந்த சந்தர்ப்பத்தில், ஹூதி போராளிகளின் நிலைகள் மீது சவூதி அரேபியா தொடர்ச்சியான விமான தாக்குதல்களை நடாத்தியது.

கடந்த வருடத்திலிருந்து நடைபெற்றுவருகின்ற இந்த கொடூரமான தாக்குதலினால், யேமன் நாட்டை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஏராளமான அப்பாவி இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் சர்வதேச ரீதியில் சவூதி அரேபியா பலத்த கண்டனத்தினை எதிர்கொண்டது.

ஆயிரக்கணக்கில் அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரில் கொலை செய்யப்பட்டபோது அம்மக்களை பாதுகாக்கும்பொருட்டு அந்த நாட்டு இராணுவ நிலைகள் மீது சவூதி விமான தாக்குதல் நடாத்தியிருந்தால் உலக முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். சவூதியின் செல்வாக்கு அதிகரித்திருக்கும்.

அல்லது இஸ்லாமியர்களின் புனித பிரதேசமான பாலஸ்த்தீனை ஆக்கிரமித்து இருக்கின்ற யூதர்களுக்கு எதிராக இவ்வாறு தாக்குதல் நடாத்தியிருந்தால் உலக முஸ்லிம்களின் கதாநாயகர்களாக இவர்களை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கும்.

ஆனால் யேமன் நாட்டில் தனது பொம்மை ஆட்சியாளரை பாதுகாக்கும் பொருட்டு விமான தாக்குதல் நடாத்தி அப்பாவி இஸ்லாமியர்களை சவூதி அரசு கொலை செய்தது.

தனது குடும்ப ஆட்சியை விமர்சித்து கட்டுரைகள் எழுதிய ஜமால் கசோக்கி அவர்கள் இலக்குவைக்கப்பட்டு அவரை கொலை செய்வதற்கு மிகவும் நுட்பமான முறையில் திட்டம் தீட்டப்பட்டு இறுதியில் அது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் சவூதி ஆட்சியாளர்களுக்கு பாரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

ஜமாலின் கொலை விவகாரத்தில் துருக்கி அதிபரின் பகிரங்க குற்றச்சாட்டுக்களை சவூதி அரசு சவாலுக்குட்படுத்தவில்லை. மாறாக துருக்கி அதிபரை சமாளிப்பதற்கே முயற்சித்தார்கள்.

இரண்டு புனித ஸ்தளங்கள் அங்கு இருப்பதனால் உலக அரங்கில் சவூதி அரேபியா தன்னை பசுந்தோல் போற்றிய புலியாக காண்பித்துக்கொன்டு மத்தியகிழக்கில் தன்னைவிட யாரும் மிஞ்சிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துவருகின்றது.

அவ்வாறு தலையெடுக்கும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக தனது நண்பரான அமெரிக்காவைக்கொண்டு படை நடவடிக்கைகள் மூலமாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் எப்போதும் சவூதி அரேபியா இருந்து வருகின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈரான் மீது படையெடுப்பினை மேற்கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் தெரிவித்த இரகசிய விவகாரம் ஊடகங்களில் வெளியானதனால், சர்வதேச ரீதியில் சவூதி அரேபியா வசமாக மாட்டிக்கொண்டது.

சவூதியின் இவ்வாறான அனைத்து செயல்பாடுகளுக்கும் கட்டார் தவிர்ந்த ஏனைய மன்னராட்சி நடைபெறுகின்ற அரபு நாடுகள் தங்களது குடும்ப ஆட்சியை பாதுகாப்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றது.

எனவேதான் ஜமால் கசோக்கி மட்டுமல்ல மத்தியகிழக்கில் நடைபெற்ற ஏராளமான கொலைகள் மற்றும் இஸ்லாமிய தலைவர்களுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிரான அமெரிக்காவின் படையெடுப்புக்களுக்கு பின்னணியில் அரச குடும்பத்தினர்கள் உள்ளார்கள் என்பது சவூதி அரேபியாவின் சவூத் குடும்ப வரலாற்றை புறட்டிப் பார்த்ததிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

முற்றும்.

இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முற்பட்ட முன்னாள் சவூதி மன்னர் அப்துல் அசீஸ். முகம்மத் இக்பால் (பகுதி 1)


Read more...

Monday, December 31, 2018

மஹிந்தவின் கனவு புஷ்வானமாகி போகும்... காவிந்த ஜயவர்தன

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என நினைப்பது, புஷ்வானமாகி போகும் என, ஐக்கிய தேசிய கட்சி அடித்து கூறுகிறது.

மஹிந்த ராஜபக்ச இன்று, பாராளுமன்ற உறுப்பினர் என்பது கூட சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார். 2015 தொடக்கம் மஹிந்த ராஜபக்ச எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற பரவலாக முயன்று வருவதாக கூறிய அவர், மஹிந்தவின் சதி திட்டம், பலிக்காமலேயே போகும் என குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி எடுத்த அவசர முடிவால், நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் போராடி, நீதிமன்றத்தின் மூலம் சகலருக்கும் பாடம் புகட்டியுள்ளதாக காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

அத்துடன் வரப்போகும் புத்தாண்டு, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெற்றிகள் கிட்டும் ஆண்டாகவே அமையுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Read more...

புத்தாண்டில் அரசாங்கம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும்.. வாசுதேவ நாணயக்கார..

நாளை பிறக்கவுள்ள 2019 ஆம் ஆண்டு, அரசாங்கத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் எதிர்ப்பார்க்கும் சலுகைகளை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை. நாளுக்கு நாள் நாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த வருடம் தேர்தலுக்கு தயாராகும் ஒரு வருடமாகவே இருக்கிறது.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டும் என பெரிதும் முயற்சிக்கிறார். அந்த அரசியலமைப்பு நிச்சயம் பெரும்பான்மையினத்தவர்களின் சம்மதத்தை பெறுவது சாத்தியமற்றது.

அத்துடன் தேர்தலை நடத்தாமல் இருக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இது குறித்து பல ஊடகங்களுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்து விட்டு, ஜனநாயகத்தை வென்று விட்டதாக மார்த்தட்டிக்கொள்கிறது.

எனினும், மக்கள் ஆணைக்கு எதிராக நீதிமன்றத்தின் தீர்ப்பையே இவர்கள் வென்றுள்ளார்கள் என்பதுவே உண்மையாகும்.

இந்த நாட்டில் இன்று ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாது போயுள்ளது.
ஜனநாயகம் தொடர்பில் அனைத்துத் தரப்பிடமும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

இதனாலேயே, மக்கள் அனைவரும் பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்று, வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என, வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

Read more...

உயர் நீதிமன்ற வெற்றிடங்கள் விரைவாக பூர்த்தியாக்கப்பட வேண்டும்...

உயர்நீதிமன்ற வெற்றிடங்களை பூர்த்தியாக்க வேண்டுமென, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைகள் இன்றி, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், ஈவா வணசுந்தர ஆகியோர் ஓய்வு பெற்றதை அடுத்து, பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டார். எனினும் உயர் நீதிமன்றத்தில் இன்னும் 3 வெற்றிடங்கள் நிலவுவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல வழக்குகள் நிலுவையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Read more...

மகனை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளாராக்கினார் மாவை சேனாதிராஜா.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கான நிர்வாகத் தெரிவு நேற்று முன்தின் 29.12.2018 அன்று கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மிகக்குறைந்த இளைஞர்களுடன் மாவை சேனாதிராஜாவின் பிரசன்னத்தில் நிர்வாக தேர்வு நடைபெற்றபோது இளைஞர் அணிக்கான செயலாளராக மாவையின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக கந்தசாமி பிருந்தாபனும், பொருளாளராக சாவகச்சேரி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சுதர்சனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் தெரிவு செய்யப்பட்டமைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ம் ஆண்டு இந்தியாவில் குடியேறிய மாவையின் குடும்பத்தினர் 2015ம் ஆண்டுவரை இலங்கைப் பக்கம் வரவே இல்லை என்றும் மாவையின் புதல்வர் புதல்வியர் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காக இந்தியாவில் வழங்கப்பட்ட கல்லூரிச் சலுகைகளை பெற்று முற்று முழுதான உயர் கல்வியை பெற்று சுகபோக வாழ்வு வாழ்தவர்கள் என்றும் தெரிவு நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர்களால் பலத்த எதிர்ப்பு காட்டப்பட்டபோதும் தமிழரசுக் கட்சியிலுள்ள மாவையின் எடுபிடிகளின் ஒத்தாசையுடன் மாவையின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் தனது குழந்தைகளை நாட்டுக்கு அழைத்துவந்த மாவை மகனுக்கு அரசியல் தளம் அமைத்துக்கொடுத்துள்ளதுடன் மகளுக்கு மைத்திரிபாலவின் சிபார்சில் இலங்கை மத்திய வங்கியில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

நாடு முழுவதும் இன்று இரவு விசேட வேலைத்திட்டம்...

இன்று இரவு மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என, காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியச்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறானவர்களுக்கு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த மாதம் 15 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 6 ஆயிரத்து 21 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த காவல்துறைமா அதிபர், இந்த விசேட நடவடிக்கையின் அடுத்த கட்டமாக இன்று இரவு நாடு முழுவதும் மது போதையில் வாகனம் செலுத்துவர்களை கைது செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.


Read more...

தேர்தலின் போது அனைவரும் எம்முடன் இணையுங்கள்.... அழைப்பு விடுத்தது சுதந்திர கட்சி

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளவென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பாரியதொரு கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர்,பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டணியில் இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறுகிறார். இந்த பேச்சுவார்த்தை, மஹிந்த தரப்பினர், இடதுசாரி கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகள் என்பவற்றுக்கு இடையில் இடம்பெறும் என ரோஹன லஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சுதந்தர கட்சியுடன் இணைய விரும்பும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்ட போது, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் அனைவரும் ஏற்கிறோம். அத்துடன் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிக்க தயாராக உள்ளோம். அண்மைக் காலமாக சில குழப்பம் விளைவிக்கும் சக்திகள், சுதந்திர கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் பலர், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை . அத்துடன், சுதந்திர கட்சியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டவர்களுக்கு, அமைச்சு பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி கூறியதாக, ரோஹன லக்ஸ்மன் பியதாக குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எமது கட்சி எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச செயல்படுவதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என கூறிய பொதுச் செயலாளர், அரசாங்கத்திற்கு ஆதரவளித்து கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் எந்தவித அடிப்படையும் இல்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

Read more...

மத்திய வங்கி குறித்து அவதானம் தேவை.. எச்சரிக்கின்றார் ரவி கருணாநாயக்க

மத்திய வங்கியிலுள்ள சில மறைமுக சக்திகள், நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதாக, மின்சக்தி,சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய வங்கியிலுள்ள இந்த சக்திகள், ரூபாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு, பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை தர முயற்சித்து வருவதாக, அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் உருவாகும் போது ரூபாவின் பெறுமதி, வீழ்ச்சியடைகிறது. மஹிந்த ராஜபக்ச குறுகிய காலத்தில் பிரதமராக செயல்பட்ட நேரம் திடீரென ரூபாவின் பெறுமதி அதிகரித்து, மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னர் இருந்தவாறே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது.

இந்த மாற்றம், மத்திய வங்கியிலுள்ள சிலரின் சூழ்ச்சியே என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அந்த சூழ்ச்சிக்காரர்களை உடன் இனங் கண்டு, அவர்களை பதவி விலக்காவிடின்,, நாட்டிற்கு மிகப்பெரும் ஆபத்து வந்துவிடும் என அவர் எச்சரித்தார்.

Read more...

‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சியா? சுமந்திரன், ரணில் - யார் கூறுவது சரி - வை எல் எஸ் ஹமீட்

அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார்.

பிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

தற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றுதான் எழுதிவைத்திருக்கிறார்கள். அப்படியானால் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ‘ ஒற்றையாட்சி’ தானே! அந்த அர்த்தத்தில்தானே பிரதமர் மகாநாயக்கர்களிடம் கூறியிருப்பார். எனவே, தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பது சரிதானே! அவ்வாறாயின் சுமந்திரன் ஏன் மாற்றிக் கூறுகின்றார்?

ஆம், சுமந்திரன் சந்தேகமில்லாமல் மாற்றித்தான் கூறுகின்றார். ஆனாலும் சுமந்திரன் சரியாகவே கூறுகின்றார். தற்போதைய புதிய யாப்பு வரைவதில் முக்கிய பங்காற்றுகின்ற கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்னவும் பிரதமர் கூறுவதுபோல்தான் கூறுகின்றார். எனவே, இதில் உள்ள குழப்பம் என்ன? இதில் நமது எதிர்காலமும் தங்கியிருக்கின்றது. எனவே, இது என்னவென்று நாமும் தெளிவாக அறியவேண்டும்.

சட்டத்தில் ஒரு சொல்லை வியாக்கியானப்படுத்தல்

சிலநேரம் ஒரு சொல்லுக்குரிய வியாக்கியானத்தை அந்த சட்டத்திலேயே குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிடப்பட்டால் அதுதான் அதன் பொருள், அகராதியில் எவ்வாறு இருந்தபோதிலும்.

மேலே உள்ள குழப்பநிலைக்கு பொருத்தமான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். சிங்கள மொழியில் ‘ கார்’ என்பதற்கு “X” என்றும் ‘ பஸ்’ என்பதற்கு “Y” என்றும் சாதாரணமாக அழைக்கப்படும் என வைத்துக்கொள்வோம்.

சட்டத்தில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் செய்வதற்கு ‘ கார்’ தான் பாவிக்கப்படவேண்டும்; என்றுதான் இதுவரை இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் ‘கார்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘பஸ்’தான் பாவிக்கப்படவேண்டும்; என்று கோருகிறார்கள்.

அரசாங்கமும் அதற்கு உடன்பட்டுவிட்டது. ஆனால் சிங்கள மக்கள் ‘பஸ்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்பொழுது அரசாங்கம் ஒரு உத்தியைப் பாவிக்கிறது. அதாவது சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் ‘கார்’ என்பதற்கு சிங்களத்தில் பாவிக்கப்படுகின்ற “X” என்ற சொல்லையே பாவிக்கின்றது. ஆனால் “X” என்பது “சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம்” என்று அதற்குரிய வியாக்கியானத்தையும் அருகே எழுதிவைக்கின்றது.

தற்போதும் சட்டத்தில் ‘காரை’க் குறிக்கின்ற “X” என்ற சொல்லே இருப்பதால் சிங்கள மக்கள் சந்தேகப்பட மாட்டார்கள். நம்பவைக்கலாம்; என அரசு எண்ணுகிறது.

சிங்களத்தில் ‘ காரி’ ற்கு “X” என்ற சொல் பாவிக்கபடலாம். ஆனால் ஆங்கிலத்தில் அது ‘car’ தானே. தற்போதைய சட்டத்திலும் car என்ற சொல்தான் இருக்கின்றது. ஆனால் ஆங்கிலத்தில் car என்று எழுதாமல் அங்கும் “X” என்ற சிங்களச் சொல்லையே எழுதி அருகில் “X” என்பது சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம்; என்ற வியாக்கியானத்தையும் எழுதிவைக்கிறார்கள். அதன்பின் சிங்கள மக்களிடம் சென்று இது கார்தான் என்கிறார்கள்.

சுமந்திரன் கேட்கின்றார்; ‘ பிரதமர் கார் என்றா சொன்னார்?’ ‘“X” என்றுதான் சிங்களத்தில் சொல்லியிருப்பார். “ X” என்பது கார் இல்லை; என்று நூறு தடவைகள் சொல்லிவிட்டேன். தமிழ் ஊடகங்கள் இன்னும் கார் என்றே எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சிங்களத்தில் “X” என்பது கார் அல்லது அது பஸ்’ என்கின்றார்.

தமிழ் ஊடகங்களோ, சிங்களத்தில் “X” என்பது கார்தான். அப்படித்தான் தற்போதைய சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே அர்த்தத்தில்தான் பிரதமரும் கூறுகின்றார். எனவே, சுமந்திரனின் கதையை எவ்வாறு நம்புவது? என்ற நிலையில் இருக்கின்றன.

இது எதனைக் காட்டுகின்றதென்றால், தமிழ் ஊடகங்களும் அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கையை வாசிக்கவில்லை. அவர்களும் வெளியில் பிரதமர் போன்றவர்கள் பேசுவதையே கேட்டு எழுதுகின்றார்கள். அதேநேரம் சிங்கள மக்களும் வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் காரைக் குறிக்கின்ற “X” என்ற சொல்லே குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்கள் சந்தேகப்படமாட்டார்கள்; கார் என்றே நம்புவார்கள்; என்று ஆட்சித்தரப்பு நம்புகின்றது.

மறுபுறம் ஆங்கிலத்தில் car என்ற சொல்லைப் பாவித்தால் அதற்கு அருகில் 60 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று வியாக்கியானம் எழுதினால் சர்வதேச சமூகம் சிரிக்கும். எனவே, சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத சிங்கள சொல்லான “X” ஐ ஆங்கிலத்தில் எழுதுகின்றார்கள்.

அதேநேரம் நம்மவர்களில் ஒருவர் பிரதமர் கூறுவதுபோல் இது கார்தான் என்கிறார். இன்னொருவர் ‘ காரை’ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; என்கின்றார். ஆனால் எழுதி இருப்பது காரா? பஸ்ஸா? என்று தெரியாமல் அவரும் கையொப்பம் வைத்துவிட்டார். இதுதான் நிலைமை.

இப்பொழுது நேரடி விடயத்திற்கு வருவோம்.
தற்போதைய அரசியலமைப்பில்,

தமிழில், “ இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும்” என்றும்

சிங்களத்தில், “ ஶ்ரீலங்கா ஜனரஜய ஏக்கிய ரஜயகி” என்றும்

ஆங்கிலத்தில், “ The Republic of Sri Lanka is a Unitary State” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.

இடைக்கால அறிக்கையில் பின்வருமாறு பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

“ Sri Lanka is a......Republic which is an aekiya rajyaya/ Orumitha nadu, consisting of institutions of the Centre and of the Provinces....”

இதன் பொருள் ‘ இலங்கைக் குடியரசு என்பது மத்தியினதும் மாகாணத்தினதும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு ஏக்கிய ராஜயாய/ ஒருமித்த நாடாகும்.

இங்கு ‘ நிறுவனம்’ என்பது சாதாரண நிறுவனமல்ல. அரசதுறைகளாகும். ஒற்றையாட்சி என்பதன் பொருள் ஒரு அரசாங்கம் என்பதாகும். அதாவது மத்தியில் இருப்பது மாத்திரம்தான் அரசாங்கம். எனவே, ஒற்றையாட்சி என்பது மத்திக்கு உரிய நிறுவனங்களை ( சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறை) மாத்திரம்தான் உள்ளடக்கும். மாகாணத்தில் இருப்பவை ‘ உப’ அந்தஸ்த்தில் இருப்பவை. அவை மத்திய நிறுவனங்களுடன் இணையாக , சமாந்தரமாக கொண்டுவரமுடியாது.

இங்கு இலங்கைக்குடியரசு மத்திய, மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது; என்று கூறுவதன்மூலம் மத்திய அரசும் மாகாண அரசும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படுகின்றது. இதுதான் ‘சமஷ்டி’யின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் சமஷ்டி என்ற சொல்லை வெளிப்படையாகப் பாவிக்காமல் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சியைக் குறிக்கும் சொல்லைப் பாவித்து அதற்கு சமஷ்டிக்குரிய மத்தியும் மாகாணமும் ஒரே அந்தஸ்து என்ற தன்மை எவ்வளவு நாசூக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

சமஷ்டிக்குரிய சட்டவிளக்கம் தெரியாவிட்டாலும் ஆங்கில பிரதியில் ஏன் ஆங்கிலச் சொல்லான ‘ Unitary State’ என்று குறிப்பிடாமல் சிங்களச் சொல்லான ஏக்கிய ராஜ்ய குறிப்பிடப்பட்டிருக்கின்றது; என்று சாதாரண சிங்கள, முஸ்லிம் மக்கள் சிந்திக்கமாட்டார்களா?

அதேநேரம் தமிழர்களைத் திருப்திப்படுத்த ‘ ஒருமித்த நாடு’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒன்று என்றால் ‘ஒருமித்தல்’ என்ற ஒரு விடயம் எழாது. ஒன்றுக்குமேற்பட்டவை இருக்கும்போதுதான் அவைகள் ‘ஒருமித்த’ என்றொரு விடயத்தைக் குறிப்பிடலாம்.

இதன்பொருள், ‘ ஆண்ட சமூகம் ஆள நினைப்பது தவறா?’ என்ற அவர்களின் கோசத்தின்பின்னால் உள்ள ஒரு காலத்தில் ஈழம் தனி ராஜ்யமாக இருந்தது. எனவே, அவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளாக இருந்தவை இன்று ஒன்றுபட்டு ஒருமித்த நாடாக இருக்கின்றது’ என்ற அர்த்தத்தில் அந்தசொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

அவர்கள் கோருகின்ற சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தனிநாடு பிரகடனப்படுத்தப்படுமானால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் ‘இந்த ஒருமித்த நாடு’ என்பதை இலங்கை அரசு யாப்பிலேயே கொண்டுவர இணங்கியது ஒரு முக்கிய அம்சமாக மாறும்.

அதேநேரம் முஸ்லிம் தலைவர்களும் இந்த இடைக்கால அறிக்கைக்கு கையொப்பம் வைத்ததன்மூலம் தமிழர்களின் இந்த நிலைப்பாட்டை அங்கீகரித்தவர்களாக மாறியிருக்கின்றார்கள். இந்நிலையில் சர்வதேச உதவியுடன் தனிநாடு அமையுமானால் நாங்கள் ஒரு தனித்துவ சமூகமாக வேறாக உரிமை கோருவது சர்வதேச கவனத்தை ஈர்க்காது.

இன்ஷாஅல்லாஹ், ‘ சுயநிர்ணய உரிமை தொடர்பான ஒரு விரிவான கட்டுரை எழுதும்போது இந்தவிடயங்களை மீண்டும் நுணுக்கமாகப் பார்ப்போம்.

எது எவ்வாறு இருந்தபோதிலும் புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வருமோ, இல்லையோ, ஆகக்குறைந்தது ஒரு முழுமையான சமஷ்டி அலகை இடைக்கால அறிக்கையில் அரசின் சம்மதத்துடன் பிரேரிக்க வைத்தது, இந்த அரசில் த தே கூ இன் சாதனைதான். ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களைப் பாதுகாக்க எதுவுமில்லை; இழப்பதற்கு நிறையவே இருக்கின்றது? என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நம் சமுகத்தை நினைத்தால்தான் கவலை.

Read more...

மருந்து தட்டுப்பாடு குறித்து இன்று விசேட கலந்துரையாடல்...

நாட்டில் தற்போது மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக, அண்மையில் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனம் குற்றம் சுமத்தியிருந்தது.

விசேடமாக புற்று நோய்க்குரிய அதிமுக்கியமான 200 வகை மருந்துகள் மற்றும் இருதய நோய்க்குரிய மருந்துகள், தற்போது நாட்டில் இல்லையென மருந்தக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கில் இந்தகலந்துரையாடல் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத சில அத்தியாவசிய மருந்துகளை இனிவரும் காலங்களில் இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையும், வெகு விரைவில் முன்னெடுக்கப்படும், என அமைச்சர் ராஜித சேனாரத்ன, நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் மருத்துவ துறையில் காணப்படும் ஏனைய பிரச்சனைகளும் தாம், உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

Read more...

சிறிமெவன் ரணசிங்க பதவி விலகலை அறிவித்தார்.... புதிய கடற்படை தளபதி நியமனம்..

இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்து வந்த வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க, தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க, இன்று நண்பகல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடம், தாம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து நாட்டுக்காக உன்னத சேவையை வழங்கிய சிறிமெவன் ரணசிங்கவிற்கு, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சிறிமெவனின் பதவி விலகலை அடுத்து, அந்த பதவிக்கு பியல் D சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பியல் D சில்வா, இன்று நியமனம் பெற்றுக்கொண்டார். அத்துடன் நாளைய தினத்திலிருந்து வைஸ் அட்மிரல் பியல் D சில்வா, தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

கேப்பாபுலவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்..

கொடுத்த வாக்குறுதிக்கிணங்க தமது காணிகளை ராணுவம் விடுவிக்கவில்லை என்று தெரிவித்து, முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

675 வைத்து நாளாக முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான உரிய பதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லையென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டனர். 2018 டிசம்பர் 31 ஆம் திகதியான இன்று, தமது காணிகள் மீள தரப்படும் என முன்னர் வாக்குறுதி அளித்தவர்கள், இன்று மௌனம் காத்து வருகின்றமை மீண்டும், ஏமாற்றத்தையே தந்து விட்டதாக, கேப்பாபுலவு மக்கள் தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

அத்துடன், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தராத அனைத்து தரப்பினருக்கும் எதிராக இவர்கள் முல்லைத்தீவு இராணுவ முகாமின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேநேரம் மக்களின் ஆர்ப்பாட்டத்தை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், எதிர்வரும் 25 திகதி வரை தமக்கு கால அவகாசம் வழங்குமாறு ஆர்பாட்டக்காரர்களிடன் கோரிக்கை முன்வைத்தார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் கவனம் எடுக்கப்படுமா?

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகின்ற பிரச்சினை இருப்பது, கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஷினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி வடக்கு மாகாணத்தில் கல்வி பறிலும் மாணவர்களின் தொகை மற்றும் அவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தொடர்பில் வினவப்பட்டபோதே, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் வடக்கு மாகணத்தில் பல்வேறு கல்வி வலையங்களில் நிலவும் ஆசிரயர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில், மேலும் சில விபரங்கள், குறித்த தகவல் அறியும் சட்டம் மூலம் ஊடாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இந்த தகவல் அறியும் சட்டம் ஊடாக வடமராட்சி , தென்மராட்சி , தீவகம், கிளிநொச்சி மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்கள் குறித்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளன.

ஏனைய யாழ்ப்பாணம், வலிகாமம், முல்லைத்தீவு, மன்னார், மடு, வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு ஆகிய ஏழு கல்வி வலயங்களிடம் வினவிய போதிலும், இன்னும் உரிய தகவல்வெளிப்படுத்தல் கிடைக்கப்பெறவில்லை.

இதன்படி யாழ்ப்பாணத்தின் - தீவகக்கல்வி வலயத்தில் 152 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்ற நிலையில், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 06 ஆசிரியர்கள் உள்ளதாக தீவக கல்வி வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்தில் 42 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 08 ஆசிரியர்கள் உள்ளனர் என சம்மந்தப்பட்ட அதிகாரி தகவல் வெளிப்படுத்தியுள்ளார். வடமராட்சி கல்வி வலயத்தில் 48 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி புகட்ட, 08 பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் உள்ளதாக வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் யோ. ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தென்மராட்சி கல்வி வலயத்தில் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கின்றபோதில் அவர்களுக்கான கற்பித்தலை 05 ஆசிரியர்கள் முன்னெடுக்கிறார்கள்.

இதனிடையே யுத்தம் மற்றும் பிறவியில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் எண்ணிகை சமீமகாலமாக அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

Read more...

கேப்பாப்புலவு மக்கள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை !

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை படையினரிடம் இருந்து எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, மிக நீண்ட நாட்களாக பல்வேறு முறைகளில் நில மீட்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மக்களின் போராட்டங்கள் நியாயமாக இருக்கின்ற போதிலும், இவர்களது வாழ்விடங்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை இன்னும் வெற்றி பெறவில்லை. அத்துடன் அரசியல் தலைவர்கள் தமிழ்ப் பிரதிநிதிகள் என ஒட்டுமொத்த உயர்மட்டங்களும் மக்களது சொந்த நிலங்களை, மீண்டும் மக்களிடம் கையளிக்கும் செயற்பாட்டில் சிரத்தைஎடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் பகிரங்கமாக கூறி வருகிறர்கள்.

இதனிடையே, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மக்களது காணிகளை இந்த வருடத்திற்குள் வழங்குவேன் என்று கொடுத்த வாக்குறுதியும் பொய்த்து போய்விட்டதா? என்ற ஆதங்கத்தில் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்றை கேப்பாப்புலவு மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக்கடிதம் பின்வருமாறு அமைகின்றது..................

கேப்பாப்புலவை பூர்வீகமாகக் கொண்ட நாம், நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ்நிலங்களை இராணுவத்தினர் அபகரித்திருப்பதால், அவற்றினை விடுவிக்கக்கோரி 670 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது எமது சொத்துக்களை இழந்து நிர்க்கதியான நிலையில், எங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தோம். பின்னர் யுத்தம் நிறைவடைந்ததும் கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டோம்.

அரசினால் ஜனநாயக வழியில் மீள் குடியமர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் எமது கிராம சேவையாளர் பிரிவுக்குள்ளேயே 10 வருடங்களுக்கு மேல் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.
எம் பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டுமென பல வடிவங்களில் உரிமைக் குரல் கொடுத்தோம். அரசு பாராமுகமாக இருக்க, எமது வாழ்விடத்தை நாமே பெற்றெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

கடந்த 2017.03.01 அன்று " எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும்'' என அகிம்சை வழிப் போராட்டத்தை தொடந்தோம். ஆனால், நல்லாட்சி அரசாங்கம் எமது போராட்டத்திற்கான முழுமையமையான நிரந்தர தீர்வை இதுவரை பெற்றுத்தரவில்லை என்பது எமக்கு மிகவும் வேதனை தருகிறது.

நாம் அரசிற்கோ இராணுவத்தினருக்கோ தேசிய நல்லிணக்கத்திற்கோ எதிரானவர்கள் இல்லை. எமது வாழ்விடங்களில் மீள்குடியேறி நின்மதியாக சுதந்திரமாக எங்களால் வாழமுடியவில்லை என்பதால், இந்த போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதை தாங்களும் சர்வதேசமும் அறிந்த உண்மை.

எமது போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 303 நாட்கள் ஆனபோது, 104 குடும்பங்கள் அவர்களுக்கு உரித்தான காணி மற்றும் பொது உரிமைகளோடு மீள்குடியேற்றப்பட்டனர். இதற்கு எங்களது நன்றிகள்.

ஆனபோதிலும், மேலும் 104 குடும்பங்களின் சுமார் 71 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்தக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி மழை, வெய்யில், பனி, நுளம்புத்தொல்லை என எதையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் தெருவோரத்தில் கிடக்ககும் எமக்கு ஒரு தீர்வும் இல்லை.

இந்தநிலையில், ஜனாதிபதி இந்த வருடத்தின் இறுதிநாளான டிசெம்பர் 31க்குள் சகல மக்களின் காணிகளும் கையளிக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். அத்துடன் கேப்பாப்புலவு மக்களின் காணிகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

எமது வாழ்விடங்களில் மீள்குடியேற்றப்படுவோம் என்று காத்திருந்தபோதும் காணிகள் விடுவிப்பு பட்டியலில் எமது வாழ்விடம் தொடர்பில் குறிப்பிட்டிருக்கவில்லை !

எனவே, இனியும் காலம் தாழ்த்தவோ பேராடக்கூடிய நிலையிலோ நாம் இல்லை என்பதை மன வருத்தத்தோடு அறித்தருகிறோம்.

ஆகவே அடுத்துவரும் நாட்களில் எமது பூர்வீக நிலங்களில் எமது சொந்த விருப்பத்துடன் மீள்குடியேறவுள்ளோம். இதன்போது இராணுவத்தினரால் எமக்கு இடையூறு ஏற்பட்டால், நாட்டின் தலைவரும் முப்படைகளின் தலைவருமான ஜனாதிபதியே பொறுப்புக்கூறவேண்டும் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

வேடிக்கை கருத்தை வெளியிட்ட கமகே - நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார்? - தொடரும் நகைச்சுவைகள் .....

நாட்டில் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தொடர்பிலான குழப்பம் நிலவுகின்றமை காரணமாக, அதற்குரிய முடிவு வெளியிடப்படாத சூழலில், அப்பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கப் பெறவேண்டும் என்று வலியறுத்தபட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பியசேன கமகேயும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் சமீபகாலமாக நாட்டில் நடைபெறும் அரசியல் தந்திரங்கள், கல்வி நிலையில் வெகுவாக பின்தள்ளி இருப்பவர்கள் மத்தியில்கூட மிகுந்தவிசனத்தை உருவாக்கியுள்ளது. நாட்டின் அரசியல்வாதிகள் ஆளுக்கொரு கருத்தை கூறிவருவதனால் மக்களிடையே இந்த நாடு எங்கே போகிறது? என்ற நம்பிக்கையீனம் உருவாகியுள்ளது.

ஒரு நாட்டின் தலைவர் அங்கத்துவம் கொண்ட கட்சியினருக்கே எதிர்கட்சி பதவியும் வழங்கப்படவேண்டும் என்று கூறுவது, உலக வரலாற்றிலேயே வேடிக்கையான கருத்தாகும்.

இது இவ்வாறு இருக்க, நிமல் சிறிபால டி சில்வாவையோ அல்லது துமிந்த திஸாநாயக்கவையோ எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறுகோரி சபாநாயகருக்கு பிரேரணையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக பியசேன கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிப் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கப் பெற வேண்டும் என்றும் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அப்பதவியை வழங்குவது சட்டவிரோத நடவடிக்கை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷ உறுப்புரிமையை பெறவில்லை என்று, மஹிந்த அணியினர் கூறிவருவது மேலும் ஒரு வேடிக்கை மிகு கருத்து என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ எதிர்கட்சி தலைவர் தொடர்பான சிக்கல்பாடு ஜனநாயக முறையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.

Read more...

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கவனத்திற்கு

2018ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய தகவல்களை இங்கே தருகிறோம்.

கடந்த வருடத்திலும் பார்க்க பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், பொறியியல் முதலான பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த, ஒப்பீட்டு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேபோன்று, பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 64.68 சதவீதத்தினால் அதிகரிப்புஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. கலை, வர்த்தகம், மற்றும் தொழில்நுட்ப கற்கை நெறிகளில் ஆகக்கூடுதலான பெறுபேறுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் முறைகேடுகள் மற்றும் விசேட கண்காணிப்பு போன்ற காரணங்களால் 119 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மாணவர்கள் தமது பரீட்சைகள் தொடர்பிலான மீள் பரிசீலனைகளை, ஜனவரி மாதம் 16 ம் திகதிக்குள் மேற்கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை தமது அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் அதேநேரம், இன்றைய அரச பத்திரிகைகள் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த கூறியுள்ளார்.

அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்குகமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் இவற்றை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வாய்புள்ளது. பல்கலைகழக நுழைவிற்கான விளக்கங்கள் அடங்கிய கையேட்டை, மாணவர்கள் உரிய முறையில் உள்வாங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டார்.

மேலும்; 2 அல்லது 3 கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பொருத்தமான கற்கை நெறி இல்லாமல் போகின்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் கற்கை நெறியை தெரிவு செய்யும்போது மிகவும் அவதானமான முறையில், தெளிவாக விண்ணப்பிப்பார்களாக இருந்தால், அவர்கள் தகுந்த பல்கலைக்கழக கல்விவாய்பை பெறமுடியும் .

சிறப்பாக 2019ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக கல்வியில் புதிதாக சில கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை அவதானிக்கத்தக்கது.
இந்தத் தடவை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 3,21,469 பரீட்சாரத்திகள் தோற்றியிருந்த நிலையில், 1,67,907 மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாடசாலை பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படவுள்ள அதேநேரம், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்களது சொந்த முகவரிகளுக்கு தபாலிடப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read more...

தங்களுக்குள்ளேயே எதிரியை தேடுவார்கள் - சூளுரைத்தார் மஹிந்த அமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோல்வியுறவைப்பதற்கு புதிய கட்சியில் கூட்டு சேர்ந்தவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டால் மாத்திரமே முடியும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய நாளில் பங்கெடுத்த நிகழ்வொன்றில் அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்தார்.

பாராளுமன்றத்தில் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 6பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் இழக்க வேண்டி நேர்ந்தது. நாம் எதிர்க் கட்சியில் அமர்ந்தால், ஏனைய அனைவரும் எம்முடன் இணைந்து கொள்வதாகவே முன்னர் கூறப்பட்டது. ஆகவே சம்மந்தப்பட்ட
உறுப்பினர்கள் மீண்டும் எமது கட்சியில் இணைந்துகொள்வார்கள் என்பது கட்சியின் எதிர்பார்பாகும். நாம் புதிய கட்சியை நாடவேண்டியது இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் நாம் ஆதரிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் தமது அங்கத்துவத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சிலர் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டபின்னர் தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் என்று கூறிவருகின்றார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்கள் எவரும்; மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தல் ஒன்றில் போட்டியிடப் போவதில்லையென பல இடங்களில் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் எதிர்வரும் தேர்தலில் இந்த வேறுபாடு தெளிவாக விளங்கப் போகின்றது. இப்போது பொது எதிரியை எதிர்ப்பதற்காக ஒன்று திரண்டுள்ளவர்கள் தேர்தலின்போது தங்களுக்குள்ளேயே எதிரியைத் தேடும் நிலைமை உருவாகும். இதுதான் உண்மையான நிலைப்பாடாகும் என்றும் மஹிந்த அமரவீர மஹிந்த அணியினரை விமர்ச்சித்துள்ளர்.

Read more...

சிறிதரனின் கஞ்சிக்குள் மண்ணைத்தூவிய கிளிநொச்சி மக்கள்.

வன்னியில் வெள்ளபெருக்கினால் பாதிப்புற்று பாரமரிப்பு நிலையங்களில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் சிறிதரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.

முகாம்களிலிருந்த மக்களை வைத்து பல்வேறு வழிகளில் அரசியல் லாபம் தேடிவந்த சிறிதரன் தனது திட்டங்கள் நிறைவேறும்வரை மக்களை தொடர்ந்தும் அம்முகாம்களில் தங்கவைத்துக்கொள்ளவே முயற்சித்துள்ளார்.

அவ்வாறு அவர்களை வைத்து அரசிடமும் புலம்பெயர் தமிழ் மக்களிடமும் நிவாரணத்தை பெற்று அதில் ஒரு தொகுதியை தனது பொக்கட்டினுள் போட்டுக்கொண்டு மிகுதியை மக்களுக்கு வழங்கும்போது சகலதும் தான்தான் என்ற படம் காட்டுவதே அவரது நோக்கமாக இருந்துள்ளது. ஆனாலும் மக்கள் சற்று வெயில் வந்தவுடன் முகாம்களை விட்டு வெளியேறி விட்டனர். இதைக்கண்ட சிறிதரன் படம் தோற்றுவிட்டதென பெரிதும் ஏமாற்றத்துடன் காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அம்மக்களை மேலும் ஒரிரு நாட்கள் தங்கியிருக்குமாறு தனது எடுபிடிகளான பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டு பல்வேறு வழியில் முயற்சித்தபோதும், மக்கள் தாம் நிவாரணத்திற்காக முகாமுக்கு வரவில்லை, வெள்ளம் காரணமாக வந்தோம், வெயிலெறிக்கின்றது போகின்றோம் என முஞ்சயில் அறைந்தாற்போல் பதில் அளித்துள்ளனர்.


Read more...

இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முற்பட்ட முன்னாள் சவூதி மன்னர் அப்துல் அசீஸ். முகம்மத் இக்பால்

சவூதி அரேபியா என்னும் பரந்த நிலப்பரப்பினைக்கொண்ட தேசத்தினை கட்டியமைத்தவர்களில் மன்னர் அப்துல் அசீஸ் பின் சவூத் அவர்கள் முதன்மையானவர். சிதைந்து கிடந்த பல பிரதேசங்களை ஒன்றாக்கி ரியாத்தினை தலைநகராகக்கொண்டு ஆட்சி அமைத்தார்.

இவர் நல்லவைகள் பல செய்திருந்தாலும் அமெரிக்காவுக்கு முழு இஸ்லாமியர்களையும் அடகுவைத்து அடிமையாக மாற்றி அமைத்த பெருமை மன்னர் அப்துல் அசீஸ் பின் சவூத்தையே சாரும்.

இவரது ஆட்சிக்காலம் 1932 தொடக்கம் 1953 ஆண்டு வரைக்குமாகும். இந்த காலகட்டங்களில்தான் மத்திய கிழக்கில் பல முக்கிய சம்பவங்கள் நடந்தேறியது.

அதாவது பாலஸ்தீனில் அதிகமான யூதர்கள் குடியேறியமை, இஸ்ரேல் என்னும் யூத ராஜ்ஜியம் பாலஸ்தீனில் உருவானது என்பதனை பிரதானமாக குறிப்பிடலாம்.

எதிர்காலங்களில் பரம்பரை பரம்பரையாக சவூதி அரேபியாவை தனது சவூத் குடும்பமே ஆட்சி செய்யவேண்டும் என்று சிந்தித்தாரே தவிர, சியோனிஸ்டுக்களின் ஆக்கிரமிப்பிலிருந்து அராபிய தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.

தூரநோக்கில் சிந்தித்து தனது குடும்பம் சவூதி ராஜ்ஜியத்தினை ஆட்சி செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்ததுடன், அண்டைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும், இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக அமெரிக்காவையே நாடினார்.

அத்துடன் யூதர்களை இவர் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. யூதர்களுக்கு எதிராக செயல்பட்டால் அது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் நட்பினை பாதிக்கும் என்ற காரணத்தினால் அமெரிக்காவுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தாரைவார்த்துக் கொடுத்த பெருமை மன்னர் அப்துல் அசீசையே சாரும்.

அமெரிக்காவை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக அன்றைய அமெரிக்க ஜனாதிபதியுடன் அப்துல் அசீஸ் அவர்கள் ஓர் பெற்றோலிய ஒப்பந்தத்தினை செய்து அதன் மூலம் சவூதி அரேபியாவின் எண்ணை வளத்தினை முழுமையாக அமெரிக்காவிடம் ஒப்படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் டொலர் நாணயத்துக்கு மட்டுமே மசகு எண்ணையினை சவூதி அரேபியா விற்பனை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்று டொலருக்கே சவூதி அரேபியா எண்ணையை விற்பனை செய்ய ஆரம்பித்தது.

இதற்கு நன்றிக்கடனாக சவூதிக்குரிய ஆயுத விநியோகம் மற்றும் இராணுவ பாதுகாப்பினை அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்டது. இது முழு சவூதிக்குமான பாதுகாப்பு என்பதனைவிட அரச குடும்பத்துக்கான பாதுகாப்பு என்பதே பொருத்தமானது.

இந்த காலகட்டத்தில்தான் ஜேர்மனியிலிருந்தும், உலகின் பல பாகங்களிலிருந்தும் யூதர்கள் பெருமளவில் பலஸ்தீனை நோக்கி குடியேற தொடங்கினார்கள். இதனை பாலஸ்தீன மக்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

பாலஸ்தீன் நோக்கிய யூதர்களின் வருகைக்கு சவூதி மன்னர் அப்துல் அசீஸ் அவர்கள் பாலஸ்தீன மக்களுடன் சேர்ந்து தனது பலமான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தால் யூதர்களின் வருகை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இஸ்ரேல் என்னும் தேசம் மத்தியகிழக்கில் உருவாகுவதற்குரிய சாத்தியங்கள் குறைவாகவே இருந்திருக்கும்.

ஆனால் மன்னர் அப்துல் அசீஸ் அவர்கள் யூதர்களின் வருகைக்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தார்.

இருந்தாலும் அதிகமான யூதர்களின் வருகையினை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராட ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த பாலஸ்தீனர்களின் போராட்டத்தினை பிரித்தானிய அரசினால் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், மன்னர் அப்துல் அசீஸ் மூலமாக பாலஸ்தீனர்களை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியா முயற்சி செய்தது.

சலுகைகளை வழங்கி உரிமை போராட்டத்தினை கைவிட செய்கின்ற நடவடிக்கைகளில் மன்னர் அப்துல் அசீஸ் செயல்பட்டார். பின்னாட்களில் புனித ஸ்தளங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் யூதர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களில் இவர் முதன்மையானவர்.

தொடரும்..............

Read more...

ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்களின் சொத்துவிபரத்தை கேட்டு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செல்லும் சட்டத்தரணிகள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆகிய பின்னர் பல்வேறு வகையில் சொத்து சேர்த்துக்கொண்டுள்ளதாகவும், அச்சொத்துக்களை அவர் தனது உறவினர்கள் பெயரில் சேர்த்து வைத்துள்ளதாகவும் எதிர்தரப்பினர் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர்களின் சொத்து விபரம் பற்றி கணக்கெடுப்பு நடத்தும் படி வழக்கறிஞர்கள் சிலர் லஞ்ச ஊழல் விசாரணை கொமிசனுக்கு முறைப்பாடு செய்வதற்கு தயாராகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இவ்வழக்கறிஞர் குழுவினர் ஜனாதிபதியின் உறவினர்களின் அசையா சொத்து மற்றும் அசையும் சொத்துகள் தொடரபான சில விடயங்களை லஞ்ச ஊழல் கமிஸனுக்கு சம்ர்ப்பிக்க உள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

Sunday, December 30, 2018

றக்பி வீரரின் மரணம் குறித்து, பல்வேறு கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்படும்...

கொழும்பில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் வைத்து, றக்பி வீரர் ஒருவர் மரணித்தமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் மேற்படி கேளிக்கை விடுதியில் பளு தூக்கியொன்று முறிந்து வீழ்ந்த நிலையில், அங்கிருந்த றக்பி வீரர் பலியானார். கேளிக்கை விடுதியின் கவனயீனத்தாலேயே இந்த மரணம் சம்பவித்ததாக தெரிவித்த காவல்துறை ஊடக பேச்சாளர், இந்த மரணத்தின் விசாரணைகள் பல்வேறு கோணங்களில் இடம்பெறும் என கூறினார்.

அத்துடன் பளு தூக்கியை பராமரிக்கும் நிறுவனத்திடம், இது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

Read more...

கிளிநொச்சி கிணற்றுக்குள் பிரதி அமைச்சர். சிறிதரனுக்கு செருப்படி

சீரற்ற வானிலைகாரணமாக வெள்ளம் பெருக்ககெடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேசங்களில் காணப்படும் கிணறுகள் வெள்ள நீரால் நிரம்பியதால் மக்கள் தூய குடி தண்ணீருக்கு அல்லல்படுகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் இன்று மதியம் கிளிநொச்சி சென்றடைந்த வழ்வாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தும் பணியில் நேரடியாக இறங்கியுள்ளனர்.

பரந்தன் பிரதேசத்திலுள்ள கிணறுகள் இவ்வாறு அமைச்சர் குழுவினரால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நேரடியாக பணியில் இறங்கிய பிரதி அமைச்சர் பிற்பகல் 6 மணிவரை தானே கிணறுகளுள் இறக்கி கருமத்தில் ஈடுபட்டிருந்தார்.

தமது உடலுழைப்பை மக்களுக்கு வழங்கும் முன்னுதாரணமாக பிரதி அமைச்சர் தென்படுகின்றார். ஆனால் மக்களை பார்வையிடச் சென்ற எமது பாராளுமன்ற உறுப்பினர்களது உடம்பில் மழைத்துளி பாடாதிருக்க மெய்பாதுகாவலர்கள் குடைபிடித்துச் சென்ற காட்சிகளை இலங்கைநெட் இத்தருணத்தில் நினைவூட்டுகின்றது.

200 நீர் இறைக்கும் இயந்திரங்களை தந்தாலே கிணறுகளை சுத்தம் செய்யமுடியும் என கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அடம்பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் 400 கிலோ மீட்டர்தூரம் பயணித்துவந்து கிளிநொச்சியில் இப்பணியை செய்து சிறிதரனுக்கு செருப்படி போட்டுள்ளார் என்பது பாராட்டத்தக்கதாகும்.








Read more...

வரப்போகும் ஆண்டில் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்... எச்சரிக்கை விடுத்தார் பந்துல..

எதிர்வரும் 2019 ஆண்டில் நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இவ்வாறு கூறினார். இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சிப் பாதைக்குள் செல்கிறது. இது குறித்து எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பந்துல குணவர்தன குற்றம் சாட்டினார்.

இவ்வாறான நிலையில், வரப்போகும் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, அனைவரும் எம்முடன் இணைந்து பயணிக்குமாறு கேட்டு கொண்ட பந்துல குணவர்தன, தேர்தலை நோக்கி பயணிக்க அனைவரும் தயாராகுமாரும் கோரினார்.

Read more...

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்திருப்பதில், எந்தவித பயனும் இல்லை... மஹிந்த..

ஐக்கிய தேசிய கட்சியின் அண்மைய செயல்பாடுகள், அக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே கடும் கோபத்தைத் தோற்றுவித்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையின் செயல்பாடுகளாலேயே, தற்போது நாட்டில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைப் போவதாக எதிர்வு கூறிய மஹிந்த ராஜபக்ச, அக்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியில் இருப்பது குறித்து, சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த கருத்தை வெளியிட்டார்.

Read more...

பதவியை துறக்கப் போகிறாரா கிரியெல்ல?

அரச நிர்வாக மற்றும் மரபுரிமை துறை அமைச்சரான லக்ஸ்மன் கிரியெல்ல, தமது அமைச்சுப் பதவியை துறக்கப்போவதாக செய்திகள் கசிந்துள்ளன.

நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் கீழ், எந்தவொரு அரச நிறுவனங்களும் பாரமளிக்கப்படவில்லை. இதனால், தமது ஆதரவாளர்களை லக்ஸ்மன் கிரியெல்ல சமாளிக்க முடியாத நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் விமான சேவை, ஹில்ட்டன் ஹோட்டல் முதலான முன்னணி நிறுவனங்கள் என்பன மரபுரிமை அமைச்சின் கீழிருந்தன. எனினும் தற்போது அவையனைத்தும் கைநழுவி போயுள்ள நிலையில், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தமது பதவியை துறக்கும் நிலை உருவாக்கலாம் என,சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read more...

மதமும் ஒர் அரசியல், அரசியலும் ஒரு மதம். வ.அழகலிங்கம்

புதிய அரசியல் அமைப்பில் பௌத்தமதத்திற்கு முதன்மையான இடத்தை உறுதிப்படுத்துவதோடு ஓற்றை ஆட்சி முறையை மாற்ற மாட்டேன் என்றும் சிறிலங்கா பிரதமர் றணில் விக்கிரமசிங்கா உறுதி அளித்துள்ளளார்.

இராஜவரோதயம் சம்பந்தனாலும் ஆபிரகாம் சுமந்திரனாலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் எதுவும் கேளாமல் தமிழ் மக்களின் ஆசை அபிலாசை இன்ப துன்பங்களைப் பற்றி எதுவும் சட்டை செய்யாமல் தன்மூப்பில் மீண்டும் பிரதமராக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 28.12.2018 இல் தான் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போதோ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பை திருத்தும் போதோ புத்தமதத்தின் முன்னுரிமையையும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு முறையையும்; செத்தாலும் மாற்ற மாட்டேன் என்று புத்த பீடாதிபதிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சியைத்தராது. அப்படி இல்லாமல் விட்டால்தான் அதிர்ச்சியாகும். எப்போதும் சிவசின்னங்களாகிய திருனூறு சந்தணம் தவறாமல் பூசிக்கொண்டு 'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்' என்றதைப் பழிப்பதே வாழ்க்கையாகக் கொண்ட சம்பந்தன் 'நம்பி நட, நம்ப நடாவாதே' என்பதன் பிரகாரம் தான் றணில் விக்கிரமசிங்காவோடு சேர்ந்து எந்த உறுதி மொழி ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று வழமைக்கு மாறாக முழு உலகத்திற்கு முன்னால் சத்தியஞ் செய்து தலையாலே கிடங்கு கிண்டிக் காப்பாற்றிய யூ.என்பி பிரதமரது கூற்று இது.

வார்த்தையே கடவுள். சொன்ன சொல்லை மறந்திடுவாரோ? அவர் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ. இன் அமுதைப் போல் பேசிய றணிலின் இனிய வார்த்தை எம் உடலை வாட்டுதே என்கின்றன நாறும் பிணங்களான தமிழ்தேசியக் கூட்டணி.

நேற்றுமுன்தினம் (28.12.2018) பிரதமர் தான் மீண்டும் எந்தவித சுயநலமோ தமிழ் நலமோ இல்லாத, அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று தெரியாத தமிழ் தேசிக் கூட்டணியின் ஈடு இணையற்ற உதவியால் பிரதமரான பின் கண்டியில் உள்ள ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்று மல்வத்தை பீடாதிபதி மகாநாயக்க தேரர்;. அதிவணக்கத்திற்குரிய. தீபோட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடாதிபதி; வண.வாரகாகொட ஸ்ரீ கன்னரநாத தேரர் ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

பிரதம மந்திரி விக்கிரமசிங்கவை அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் அழைத்து அரசியலமைப்பையும் மக்களுடைய இறையாண்மையையும் பாதுகாத்துக் கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
பிரதமர் கூறினார்: 'ஐக்கிய தேசியக் கட்சி பல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடி விவாதித்து புத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலமைப்பின் 9 வது பிரிவை மாற்றாமையை ஒப்புக்கொண்டர்கள்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசு கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் ஒத்துக் கொண்டார்கள்.' மீண்டும் பழைய கிளடி கதவைத் திறவடி.

அரசியலும் ஒரு மதம். மதமும் ஒர் அரசியல். ஜனநாயக அரசு என்பது மத சமத்தவ அரசு. 1972 மட்டும் இலங்கை மத சமத்துவ அரசாக இருந்தது.

உலகின் முதன் முதல் 1776 இல் எழுதப் பட்ட அமெரிக்கச் சட்டத்தில் மதசமத்துவம் இருந்தால்தான் அந்தச் சட்டம் ஜனநாயகச் சட்டமாக இருக்கும். அந்த ஜனநாயகச் சட்டத்தை எழுதிய ஜெபர்சன் சொன்னார்:-'எங்கே அரசு மதத்தில் தலையிடுகிறதோ அன்றில் எங்கே மதம் அரசியலில் தலையிடுகிறதோ அந்த நாடு வெகு சீக்கரத்தில் அழிந்து போகும்.' இதை அடியொற்றியே உலகில் தம்மை ஜனநாயக நாடென்று பிரகடனப் படுத்தும் எல்லா நாடுகளுமே தமது அரசியல் சட்டத்தில் மத சமத்துவத்தை உறுதியாகவே பிரகடனப் படுத்தி இருக்கின்றன.

ஓர் அரச மதமுள்ள நாடு ஜனநாயக நாடே அல்ல. அது நிலப் பிரபுத்துவ அமைப்பு முறைக்கு முந்திய காட்டு மிராண்டி நாடு. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு முழுப் பொறுப்பும் மல்வத்தை பீடாதிபதிகளும் அஸ்கிரிய பீடாதிபதிகளும்தான்.

புத்த மதம் ஆயிரம் வருசம் தமிழை வளர்த்த மதம். புத்த மதம் காஞ்சியிலே இருந்தே உலகம் முழுவதும் பரவியது. இலங்கைக்கும் தமிழ் புத்த துறவிகளே புத்த சமயத்தைக் கொண்டு வந்தனர். மகாவம்சத்தைத் தமிழ் புத்த துறவியான தர்மகீர்த்தியே பாளியில் எழுதினார். சிங்களத்திற்கும் தமிழிற்கும் பொதுவான பல ஆயிரக்கண்கான சொற்கள் பாளியிலிருந்து புத்த சமயத்தோடு தமிழுக்கு வந்தவை.

மூன்று தமிழ்ச் சங்கங்களும் புத்த சங்கங்கள். மணிமேகலை புத்தத்தின்
முன்னோடியான சமணத்தை 'கொல்லா நல இயக்கம்,, என்கிறது.
சிலப்பதிகாரம் புத்தனை 'தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்,, என்கிறது.
தமிழிலக்கியம்; முழுவதிலும் இதற்கு இணையாக எதையுமே காட்ட முடியாது. மானிட வாழ்வியலைப் புத்தம் அந்த மட்டத்திற்கு உயர்த்தியது.

சைவத்தின் மூல நூலான சிவஞான சித்தியார் புத்தனை 'போதியில் பொலிந்த புனிதன'; என்கிறது.

திருக்குறளில் வரும் 'அறவாளி அந்தணன்,, என்பது புத்தனையே குறிக்கிறது என்பர் பல தமிழ் புலமையாளர்கள். ஆனால் இலங்கையில் உள்ள புத்தமதத் துறவிகள் மாத்திரமல்ல எல்லா மதத்தறவிகளும் 30 வருட யுத்தத்தில் கொலையை ஆதரித்த கொடூரர்கள்.

'வரலாறு சில தனிப்பட்ட நபர்களைப் போன்றது அல்ல. வரலாறு அதன் இலக்கை அடைவதற்கு சில மனிதர்களைப் பயன்படுத்துகிறது. வரலாறு என்பது மனிதர்களின் இலக்கை அடைவதற்காக ஈடுபடும் செயல்களே தவிர வேறில்லை., -புனிதக் குடும்பம் கார்ல் மார்க்ஸ்

இலங்கையிலே சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதே இல்லை. இலங்கையிலே 'பயங்கரவாதத்தடைச் சட்டத்தின், ஆட்சியே நடைபெறுகிறது. தனித்து அக்டோபர்26, 2018 மாத்திரம் சட்டம் மீறப்படவில்லை. ஒவ்வொரு செக்கனும் சட்டம் ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஓர் இடத்தில், ஏதோ ஒரு வடிவத்தில் மீறப்படுகிறது.

அதிகமாகச் சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தை இயற்றுகின்ற பாராளுமன்ற அங்கத்தவர்களும் அவர்களில் தங்கிவாளும் மானிட ஒட்டுண்ணிகளுமாகும். ஆதலால் பாராளுமன்றைத்தைத் தூக்கியெறிந்து அதனிடத்தில் மானிடத்துன்பங்களை உண்மையிலே உணரும் திறன்வாய்ந்த ஒரு அமைப்பைப் பிரதியிட வேண்டும்.

Read more...

சுமந்திரனும் - ஹக்கீமும் நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் செயற்படுகின்றனர். சாடுகின்றார் ரம்புக்கல

நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் செயல்பட்டு வருவதாக, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையை பிளவுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவர்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் தற்போது நாட்டு மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். இவர்களது அமைச்சரவை தனிப்பட்ட தேவைக்காக அமைக்கப்பட்டது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நாட்டின் அரசியல் குழப்பத்தின் போது, உயர்நீதிமன்றம் அரசியலமைப்புக்கு அமைய தீர்ப்பை அறிவித்திருந்தாலும், நாடாளுமன்றில் இன்று வரை பிரச்சினை நிலவி வருகிறது என்று, அவர் கூறினார்.

இந்த அரசாங்கம் அரச சொத்துக்களை சர்வதேசத்துக்கு விற்றுக்கொண்டிருப்பதோடு, இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அத்தோடு, சுமந்திரன்,ஹக்கீம் முதலான அரசியல் தலைவர்கள், சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவர தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினாலும், அரசமைப்பில் அவ்வாறு இடம்பெறப்போவதில்லை என்பதுவே, மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு தமிழ்- சிங்கள- முஸ்லிம்களை பிரச்சினைக்குள்ளாக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

இந்த செயல்பாடுகளுக்கு சுமந்திரன் மற்றும் ஹக்கீம் ஆகியோர் பாரியளவில் துணை புரிவதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com