Monday, November 12, 2018

அரசியல் யாப்பினை மீறி பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றில் 10 மனுக்கள்.

வரலாற்றில் முதற் தடவையாக நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரின் தீர்மானத்திற்கு எதிராக பெருமெடுப்பில் உச்ச நீதிமன்றில் மனுக்கள் குவிந்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டத்திற்கும் அரசியல் யாப்பிற்கும் முரணானது என 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள் அதன் அவசரத் தேவையை உணர்ந்து இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர தனி நபர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினை சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளபோதும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் பாராளுமன்ற கலைக்கப்பட்டமை சட்ட விரோதமானது என மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் பாராளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும் குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நிராகரிக்குமாறும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் வரும் வரையில் பொது தேர்தலை ஒத்தி வைக்குமாறும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read more...

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் தூதுவர்களை வெளியேற்றுவீர். GSLF அரசிற்கு அழுத்தம்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் நாடுகள் தலையிடுவது ஐ.நா வின் 1965ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நாடுகளின் இறையாண்மையை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு எதிரானதாகும் என்றும் அவ்வாறு தலையிடுகின்ற நாடுகளின் தூதுவர்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக நாடு கடத்தவேண்டும் என்றும் உலக இலங்கையர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பேரவையின் தலைவர் தலைவர் சுனில் சந்திரகுமார :

சர்வதேச நாடுகள் தலையிடும் அளவிற்கு இங்கு எவ்வித அரசியல் பிரச்சினைகளும் இங்கு ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளதுடன் பாராளுமன்றம் கூட்டுவது தொடர்பாக தலையிடுவது அவர்கள் உரிமையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புலிகளின் பின்கதவு விளையாட்டை போட்டுடைத்தார் ரணில் விக்கிரமசிங்கே.

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை மற்றும் தன்மீது ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட விசேட உரையிலேயே அவர் இவ்விடயத்தை முதற்தடவையாக வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவையாவது, அரசியல்வேறு தனிமனித விருப்பு வெறுப்புக்கள் வேறு, எனது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நான் இரு தடவைகள் இருவேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடம்கொடுத்துள்ளேன். நான் ஜனாதிபதி வேட்பாளராக நின்றபோது புலிகள் இருதடவைகள் என்னுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தூது அனுப்பினர், ஆனால் எனது வெற்றிக்காக நான் நாட்டுக்கு துரோகி ஆக நினைக்கவில்லை.

நான் அவ்வாறு செய்தது இந்நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டவே என்றும் தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரம சிங்க.

Read more...

14 நாட்களில் 3 முறையாக மக்களுக்கு கதை சொல்கின்றார் மைத்திரிபால.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு கடந்த 14 நாட்களில் 3 வது முறையாக முயன்றுள்ளார் ஜனாதிபதி தை;திரிபால சிறிசேனா. நேற்று 11.11.2018 பிற்பகல் விசேட உரை ஒன்றினூடாக தனது நிலைப்பாட்டை அவர் மக்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு:

மும்மணிகளின் ஆசிகள், இறைவன் துணை, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரே, ஏனைய மதத் தலைவர்களே, பெற்றோர்களே, பிள்ளைகளே, நண்பர்களே,

தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும். முதலாவதாக கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன். இதன் முக்கியத்துவம் யாதெனில் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் உங்கள் முன் உரையாற்றுவதாகும். குறிப்பாக மிகச் சுருக்கமாகவேனும் பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கான காரணங்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

நமது நாட்டில் பாராளுமன்ற சம்பிரதாயம் அதாவது இலங்கை பாராளுமன்றம், இலங்கை தேசிய அரச பேரவை காலம் முடிவடைந்ததன் பின்னர் 1947 இல் முதலாவது பாராளுமன்றம் ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரை பொதுத் தேர்தல்களுக்கமைய அரசாங்கங்கள் மாற்றப்பட்டு புதிய அரசாங்கங்கள் பதவியேற்று இந்த நாட்டின் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக தற்போதைய பாராளுமன்றத்தின் நிலைமை கடந்த வாரமளவில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தன்மையின் அடிப்படையிலும் நன்னடத்தைமிக்க சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புமிக்க நாட்டின் உன்னத ஸ்தானமும் மக்களின் இறையாண்மையை வெளிப்படுத்தும் மிக உயரிய ஸ்தானமுமாகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது. நம் நாட்டின் பாராளுமன்றத்தினுள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் மாற்றங்கள் பற்றிய அனுபவத்தை நாம் பெற்றிருக்கின்றோம். 1964 ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் சட்டத்தை எதிர்க்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் இச்சமயம் எனது ஞாபகத்திற்கு வருகின்றது. அதன் மூலம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தது. ஆயினும் 47 முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கலைக்கப்பட்ட பாராளுமன்றங்கள் ஊழல் காரணமாக கலைக்கப்பட்டதாக அறிவதற்கில்லை. 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக்கியதை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. அது மிகவும் வருந்தத்தக்கதோர் நிலைமையாகும். உங்களது மதிப்பிற்குரிய வாக்குகளைப் பெற்று இந்த பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும் பிரதிநிதிகள் தமது வணிக பெறுமதியை அல்லது ஒரு விலையை நிர்ணயிப்பது எந்தளவிற்கு அரசியல் ரீதியில் மோசமான துரதிஷ்டமான நிலையாகும் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள்

இதுவே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாராளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன். அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பராவார். நம் நாட்டு பாராளுமன்ற சம்பிரதாயத்தினுள் நியமிக்கப்பட்ட சபாநாயகர்கள் அவர்களது நடுநிலைத் தன்மையையும் பக்கச்சார்பின்மையையும் மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நிலைமை 1947 முதல் இதுவரை இருந்து வந்தது. பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை, பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது ஜனாதிபதிக்குரிய விஷேட அதிகாரங்களுக்கமைய பிரதமரை நியமித்ததை ஏற்றுக்கொள்ளாத தன்மையை ஏற்படுத்தி சபாநாயகரினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் அவரது நடத்தையும் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான இரண்டாவது காரணமாக அமைந்ததென்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

இங்கே அரசியல் ரீதியான ஒரு நிலைமையினை கவனத்தில் கொள்ளும் வகையில் உங்களது ஞாபகத்திற்கு இவ்விடயத்தையும் கொண்டுவர விரும்புகிறேன். 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னர் அதற்கு மறுநாள் ஜனாதிபதியாக நான் பதிவியேற்ற மறுகணமே கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தினேன். அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களில் 225 பேரில் 162 உறுப்பினர்களின் பலம் இருந்த டி.மு.ஜயரத்ன அவர்களை நீக்கிவிட்டே 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்தினேன். இந்த நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

அச்சமயம் இன்று பலரும் பேசுகின்ற பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பற்றி எவரும் பேசவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். பெரும்பாலும் ஜனாதிபதியினால் நம்பிக்கை வைக்கத்தக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை வெல்லத்தக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பில் காணப்படுகின்ற உடன்படிக்கைகளுக்கு அமைய நியமிப்பதே சம்பிரதாயமாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நிலையியற் கட்டளை, அரசியலமைப்பின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும். இருப்பினும் ஒரு பிரதம மந்திரியை நியமித்து அவர் பாராளுமன்றத்திற்கு செல்லும் முதல் தினத்திலேயே அவர் மீதான நம்பிக்கை இருக்கின்றதா என்பதை பற்றிய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு எமது பாராளுமன்ற சம்பிரதாயத்தில் ஒருபோதும் நடந்ததில்லை. நிலையியற் கட்டளைகளுக்கு கீழும் அவ்வாறு நடப்பதில்லை.

இருப்பினும் பாராளுமன்றத்தின் அச் சம்பிரதாயத்தை மீறி கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். அவரது முதலாவது அறிக்கையில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக ஏற்று அவருக்கான உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் பாராளுமன்றத்தில் பெற்றுத்தருவதாக அறிவித்தார். அதாவது பாராளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனம், பாராளுமன்றத்தில் பிரதமருக்கான அலுவலகம் ஆகியன பெற்றுத்தரப்படும் என முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அதற்கு சில தினங்களின் பின்னர் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை முதலாவது அறிக்கையை விட முற்றிலும் வேறுபட்டவொரு அறிக்கையாக அமைந்தது. அதன்மூலம் அவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பிரதமராக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு ஏற்படும் நிலைமையைப் பற்றி நான் மிகுந்த கவனத்தை செலுத்தினேன். அத்தோடு இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.

அதை அவ்வாறு நடக்க விட்டிருப்பின் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி அதனைக் கலைக்காது அந்த மோதலை உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் மோதல்கள் ஏற்பட்டு நாட்டில் சாதாரண சிவில் மக்களுக்கிடையிலான மோதலாக பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்தேன்.

ஆகையால் இதற்கான சிறந்த தீர்வாக 225 பேருக்கிடையிலான மோதல் நாடு தழுவிய ரீதியிலான பாரிய மோதலாக மாறி இயல்பு நிலை சீர்குலைவதற்கு வழிவகுப்பதற்கு பதிலாக எனது பொறுப்புக்கும் கடமைக்கும் ஏற்ப ஜனநாயகத்தை மிக உயர்வாக மதித்து சுதந்திரமான நியாயமான தேர்தலொன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டின் வாக்குரிமை பெற்றிருக்கும் 150 இலட்ச வாக்காளர்களிடம் அவ்வதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதும் அதன்மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊழல்மிக்க தன்மையையும் சபாநாயகரின் செயற்பாட்டினால் ஏற்பட்ட முரண்பாடான நிலைமையின் உருவாக்கமுமாகிய அனைத்தையும் கருத்திற் கொண்டு உருவாகிய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய மிகவும் சிறந்த ஜனநாயக ரீதியிலான நியாயமான தீர்வாக அப்பொறுப்பினை பொதுமக்களிடம் கையளிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் உயரிய நோக்கங்களை அடையும் வகையிலேயே நான் பாராளுமன்றத்தைக் கலைத்து பொது தேர்தலை நடத்த தீர்மானித்தேன். அதன்மூலம் இப்போது ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினைக்கு தெளிவான நிலையான தீர்வு பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெறும் என்பதை இங்கு கூறவேண்டும்.

இதன்போது பொதுத் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது. ஆதலால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாம் எமது முழுமையான தேவையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தேர்தல் சட்டதிட்டங்களைப் பாதுகாத்து நாட்டில் தேர்தல் ஆணைக்குழுவினால் ஜனநாயக ரீதியிலான நியாயமான நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு நாம் அனைவரும் நமது உயரிய ஒத்துழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பொலிஸ் உள்ளிட்ட முப்படையினருக்கும் பெற்றுக் கொடுப்போம் என்ற வேண்டுகோளை மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் உங்களுக்கு விடுக்க விரும்புகின்றேன். நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்போம். அதேபோன்று ஊழல் மிக்கவர்களை அகற்றி அரச நிர்வாகத்திற்காக தூய்மையான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது மதிப்புக்குரிய உங்களது பொறுப்பாகும். குறிப்பாக ஜனநாயக அடிப்படையில் மக்களின் கருத்துக்கு தலை வணங்கி பொதுத் தேர்தலை நடத்துவது அனைவராலும் பாராட்டப்படும் ஒரு முடிவாகும் என்றே நான் கருதுகின்றேன்.

நாட்டின் முக்கிய பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு, சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், உள்நாட்டு உற்பத்திகளை கட்டியெழுப்புதல், தூய்மையான வெளிநாட்டு முதலீடுகளை ஊழலின்றி பெற்றுக் கொள்ளுதல், ஒழுக்கமும் நன்னடத்தையும்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் இத்தேர்தலை நடத்தி உங்களது தீர்மானத்திற்கு அமைய ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதே ஆகும். ஆகையால் எமது அன்புக்குரிய தாய் நாட்டை புதிய பாதையில் நாம் கொண்டு செல்வோம். இன்று இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் புதிய தொழிநுட்ப உலகில் ஒழுக்கமிக்க நமது பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அறிவை முதன்மைப்படுத்திய ஒரு சமூகத்தையும் அறிவும் ஆற்றலுமிக்க அனுபவமிக்க அரச நிர்வாகிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு மிகச் சிறந்ததோர் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஆகையால் தேர்தலை நடத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தலுக்கமைய தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானங்களுக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். இத்தருணத்தில் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் எமது முன்னைய அனுபவங்களையும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதற்கு ஏதுவாக அமையும் காரணங்களைப் பற்றியும் இங்கு நான் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்காகவும் ஆபேட்சகர்களின் தேர்தல் செயற்பாடுகளுக்காகவும் அரச உடைமைகளை துஷ்பிரயோகம் செய்வதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், அரச வாகனங்களை உபயோகப்படுத்துவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுதல், கடந்த அரசாங்கத்திலும் தற்போதைய காபந்து அரசாங்கத்தில் செயலாற்றும் தற்போதைய நிலைமையிலும் அந்தந்த அமைச்சுகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்காக வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போதைய அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ் காபந்து அரசாங்கம் என்ற வகையில் வேட்புமனு தாக்கல் பற்றிய அறிவித்தலிலிருந்து பாராளுமன்றம் கூடும் வரையிலான காலப்பகுதியில் அமைச்சரவை, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட காபந்து சபைக்கே அதிகாரம் இருக்கின்றது. ஆகையால் அந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை தவிர்ந்த வேறு எவருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் அரச வாகனங்கள் மற்றும் அரச பொது உடைமைகளை தேர்தல் பிரசார பணிகளுக்காக உபயோகப்படுத்துவது சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அவர்கள் வசமிருக்கும் அரச வாகனங்கள், வளங்கள், ஆகிய அனைத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் கையளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் எவராக எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஆகையால் அரச வாகனங்களை உபயோகப்படுத்துதல், அரச பொது உடைமைகளை உபயோகப்படுத்துதல் ஆகியன இத்தருணத்தில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறான உபயோகம் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுக்கு நான் மிகுந்த தயவுடன் ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆதலால் இத் தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு நான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். தேர்தல் காலப்பகுதியில் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாது அமைதியாகவும் மிகுந்த புரிந்துணர்வுடனும் செயற்படுவதன் மூலம் அமைதியான ஜனநாயக வழியிலான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நாட்டு மக்களாகிய அனைவரும் ஏற்க வேண்டிய மிகப் பரந்த பொறுப்பாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இங்கே ஞாபகப்படுத்திய இந்த விடயங்களுடன் உன்னதமான எமது இந்த தாய் நாட்டை முன்னெடுத்து செல்வதற்கும் சுபீட்சமிக்க பொருளாதாரத்தையும் நவோதமிக்க உயரிய தேசத்தையும் உலகில் சிரேஷ்ட உன்னதமான அரச நிர்வாகத்தைக் கொண்ட ஒழுக்கமும் அமைதியும் நற்பண்புமிக்க சுதேசத்துவத்தை முதன்மைப்படுத்திய பெறுமானங்கள் உள்ளிட்ட எமது கலாசாரத்தையும் நாட்டுப் பற்றையும் முதன்மையாகக் கொண்ட அரச நிர்வாகத்திற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் மிகுந்த தயவுடனும் கௌரவத்துடனும் கேட்டு நிற்கின்றேன்.

தர்மத்திற்கமைய நடப்பவரை தர்மமே பாதுகாக்கும்
குரோதத்தால் குரோதம் தனியாது
குரோதமின்மையாலேயே குரோதம் தனியும்
இதுவே உலக நியதியாகும்.

Read more...

Sunday, November 11, 2018

இந்நாட்டின் அரசியல்வாதிகளை உச்ச நீதிமன்றில் முழங்காலிட - வைப்பேன்! சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு சபதம்.

இலங்கையில் இடம்பெறும் அரசியல் யாப்பு மீறல்கள், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக தனி மனிதனாக செயற்பட்டு வருகின்றார் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு. தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபல்யம் அற்ற அவர் மக்களின் உரிமைகள் சார்ந்து உச்ச நீதிமன்றில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அதற்காக போராடி வருகின்றார்.

அண்மையில் ஜனாதிபதி பாராளுமன்று 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டபோது, அரசியல் கட்சிகள் எதுவும் அவ்விடயம் தொடர்பில் நீதிமன்றை அணுகாதபோது நாகானந்த தனி மனிதனாக ஜனாதபதியின் செயற்பாட்டை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

அவ்வேளையில் நீதிமன்றில் ஆஜராகிய சட்ட மா அதிபர் இந்நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாட்டை நீதிமன்றில் எவராலும் கேள்விக்குட்படுத்த முடியாது என நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார். சட்ட மா அதிபதிரின் அவ்வறிவித்தலை செய்தியாக்கிய ஊடகங்கள் சட்டத்தரணி நாகானந்த சட்ட மா அதிபரின் விளக்கத்தை மறுத்துரைத்த விடயத்தை கண்டுகொள்ளவில்லை.

அரசியல் யாப்பின் 19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி உட்பட இந்நாட்டின் எந்தப் பிரஜையையும் நீதிமன்றுக்கு கொண்டுவரும் உரிமை இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மறுத்துரைத்ததுடன் வழக்கு விசாரணை செய்யப்படவேண்டும் என வாதிட்டிருந்தார். அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை 12.11.2018 வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்திருந்தனர்-

பாராளுமன்று பிற்போடப்பட்டது தவறு என்ற வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையிலேயே பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்று கலைக்கப்பட்டது தவறு என நாளை மீண்டுமொரு வழக்கை தாக்கல்செய்யவுள்ளார் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், அரசியல் யாப்பின் 19ம் திருத்தத்தின் பிரகாரம், ஜனாதபதி தான் விரும்புகின்ற நேரத்தில் பாராளுமன்றை கலைப்பதற்கு அவருக்கு எவ்வித அதிகாரங்களும் கிடையாது. 19 ன் பிரகாரம் நான்கரை வருடங்கள் செல்லும்வரை ஜனாதிபதியால் பாராளுமன்றை கலைக்க முடியாது. எனவே அவர்கள் தற்போது செய்துள்ளது, முற்றுமுழுதாக அரசியல்யாப்பை மீறும் செயலாகும்.

எனவே நாளை இது தொடர்பில் உச்ச நீதிமன்றுக்கு செல்கின்றேன். அத்துடன், வேட்பாளர் மனுக்களை பாரமெடுக்கும் செயல்களை சபாநாயகர் ஊடாக நிறுத்தி வைப்பதற்குரிய கட்டளை ஒன்றையும் நீதிமன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளேன்.

மேலும் நாட்டில் அரசியல் குழப்பம் ஒன்று ஏற்பட்டு அசமந்த நிலை ஏற்பட்டிருந்தபோது, சம்பிக்க ரணவக்க மற்றும் சுஜீவ சேரசிங்க போன்றோர் நீதிமன்றை விட மேன்மையான இடம் பாராளுமன்ற என்றும் இவ்வாறான விடயங்களுக்கு பாராளுமன்றுக்கு நாங்கள் போகமாட்டோம் என்றும் கூறியிருந்தார்கள்.

ஆனாலும் அவர்கள் அத்தனைபேரும் உச்ச நீதிமன்றுக்கு வந்து முழங்காலிடும் ஒரு நிலையை நான் உருவாக்குவேன். இந்நாட்டு மக்களின் இறைமையை பாதுகாக்கும் அரசியல் யாப்பினை எவரும் மீறுவதற்கு இடமளியேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

விக்கி குழுவும் பாராளுமன்றுக்கு தயாராகின்றது.

இலங்கையின் 9 வது பாராளுன்றுக்கு விக்கி குழுவும் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றால் கதவடைப்பு செய்யப்பட்டுள்ள, அனந்தி சசிதரன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரை இணைத்துக்கொண்டே முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இம்முயற்சியில் இறங்கியுள்ளார்.

இவர்கள் இத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாக அறியமுடிகின்றது. ஈபிஆர்எல்எப் இல் போட்டியிடலாம் என சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்மொழிந்தபோதும் அதற்கு விக்கியின் சகாக்கள் இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ளனர். இந்திய இராணுவம் இலங்கையில் குடிகொண்டிருந்த காலத்தில் பல்வேறு கொலைகளுக்கு பொறுப்பான அக்கட்சியின் சின்னத்தில் மக்கள் மத்திக்கு செல்லமுடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து இக்குழு சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் ஆகியோர் களமிறங்குவதென நேற்றிரவு முதற்கட்டமாக முடிவாகியுள்ளதுடன் வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் பணியையும் ஆரம்பித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

Read more...

மஹிந்தருடன் இணைகின்றார் மைத்திரியின் மகள் சத்துரிகா!

ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகள் சத்துரிகா சிறிசேன, மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ள பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன தனியானதோர் கூட்டு அமைக்க முயன்றுள்ள இத்தருணத்தில் சிறிலங்காக சுதந்திரக் கட்சி பாரிய தோல்வியை தழுவும் என அவரது ஆலோசகர்கள் தெரிவித்ததையடுத்து அவர் இம்முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

மைத்திரிபாலவின் அரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவில் இணைந்து பொலநறுவையில் தேர்தலில் குதிப்பதன் ஊடாக தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.

Read more...

சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச்சேரவே மாட்டாராம் டக்ளஸ்!

ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள கட்சிகளுடன் கூட்டு வைக்காது என்றும் அது தனது வீணையிலேயே போட்டியிடும் என்றும் அதன் தலைவர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தங்களுக்கு போதிய ஆணையை தந்தால் 13 திருத்தத்தின் ஊடான அரசியல் தீர்வுக்கு மத்திய அரசிற்கு அவர் அழுத்தம் கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி கூட்டிலிருந்து வெளியேறுமா என்பது தொடர்பில் அவர் வெளிப்படையாக இதுவரை எக்கருத்தும் கூறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், வடகிழக்கில் கூட்டு ஒன்றினை அமைப்பதற்கு டக்ளஸ் மேற்கொண்டிருந்த முயற்சிகள் தோல்விகண்டுள்ளது என்றும், அதற்கான காரணம் ஈபிஆர்எல்எப் இன் வரதரணியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கே பெரிதும் நாட்டம் காட்டி வருகின்றனர் என்றும் தெரியவருகின்றது.

Read more...

எல்லா நாம்பனும் ஓடுதென வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடத்தொடங்கும் வயிற்று நாம்பன் றிசார்ட்.

எல்லா நாம்பனும் ஓடுது என்று வயிற்று நாம்பன் குட்டியும் வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடுதாம் என்ற ஓர் நகைப்பு உண்டு. அவ்வாறான நகைப்புக்கு உள்ளாகியுள்ளார் றிசார் பதுயுதீன். நாட்டில் அரசியல் நிலைமைகள் மோசமடைந்தபோது, பாராளுமன்றில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருக்கும் நோக்கில் மஹிந்தவின் பணத்தை பெற்றுக்கொண்டு உம்ராவுக்கு சென்றிருந்த றிசார்ட், பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடையவர்களாகவும், பணத்திற்கு விலைபோகாதவர்களாகவும் இருந்திருந்தால், நாடு மோசமான அரசியல் சூழ்சிகளுக்குள் தள்ளப்பட்டிருந்தவேளை நாட்டிலிருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது பெருவாரியானவர்களின் நிலைப்பாடாகும்.

Read more...

மஹிந்தரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறினார். தாமரை மொட்டு.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (11) காலை 11 மணியளவில் விஜேராமயில் உள்ள பிரதமரின் இல்லத்தில் வைத்து அவர் அங்கத்துவத்தை பெற்றுகொண்டுள்ளார். மஹிந்தவை தொடர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் கை மேலோங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

விம்பங்கள், நிஜ உருவங்கள் அல்ல. விஜய பாஸ்கரன்

தமிழர்களில் பலர் இன்னமும் புலிகளை நேசிக்கிறார்கள். பிரபாகரனை ஒரு வீரனாக, சிறந்த தலைவனாக, புரட்சியாளாராகவும் பார்க்கிறார்கள். அவர் முப்பது வருடங்களாக தனக்கென ஒரு படை அமைத்து யுத்த சாகசங்களை செய்திருக்கிறார். அதற்காக அவரை ஒரு புரட்சியாளனாக, முற்போக்காளனாக சித்தரிப்பது, சித்தரிக்க முயல்வது வரலாற்றுத் தவறாகும்.

பிரபாகரன் கள்ளக்கடத்தல் கலாச்சார பின்னணியில் இருந்து வந்தவர். ஒரு விதமான புரிதல்களும் இன்றி வெறும் இனவாத சிந்தனைகளுக்கு இரையாகி ஆயுதம் ஏந்திய ஒருவர். வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பிய மனிதர். தமிழ் தேசியத்தின் பெயரால் போராட்டம் , நடத்தியபோதும் தமிழ் தேசியத்தையே சீரழித்த ஒரு மனிதர். இவரைச் சிலர் புரட்சிவாதியாக, முற்போக்காளராக ஏன் இன்னும் சிலர் பிடல் காஸ்ரோ, சேகுவேரா போன்றவர்கள் போல் ஒரு விம்பத்தைக் காட்ட முற்படுகின்றார்கள்.

உண்மையில் பிரபாகரன் ஒரு இந்திய பாணியிலான கட்டப் பஞ்சாயத்து தலைவர். இத்தாலிய தென் அமெரிக்க மாபியாக் கும்பலைப் போன்ற ஒரு அமைப்பையே வைத்திருந்தார். அதற்கே அவர் தலைவர். அந்த அமைப்புக்கோ அவருக்கோ கொள்கைகள் என்ற ஒன்று இருந்ததில்லை. இனத்தின் பேரால் யுத்தங்கள் நடந்தன. அந்த யுத்தத்தின் பெயரால் சொந்த மக்களையே வதைக்கு உள்ளாக்கியவர் பிரபாகரன்.

ஒரு போராளி, தலைவன் என்பவன் மக்களுக்காக வாழவேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களை எசமானாக நினைக்கவேண்டும். புலிகளோ, பிரபாகரனோ அப்படி நடக்கவில்லை. அவர் ஒரு சொந்த மக்களையே அச்சுறுத்தும் நபராக, சொந்த மக்களையே அச்சப்பட வைக்கும் ஒரு அமைப்பை வைத்திருந்தார்கள். சொந்த சகாக்களைக் கூட நம்பாத ஒருவர் எப்படி மக்கள் தலைவனாக போராளியாகவும் புரட்சியாளனாகவும் கருதமுடியும்?

ஆரம்பம் முதலே துப்பாக்கிமீது காதல் கொண்டவராகவும், சந்தேகம் அச்சம் நிறைந்தவராகவும் வாழ்க்கையைக் கடத்தியவர். வன்மம் தீர்க்கும்குணம் கொண்ட ஒருவரை எப்படி போராளியாக புரட்சியாளனாக கருதுவது? எந்த சரியான காரணம் எதுவுமின்றி சக போராளிக் குழுவின் மேல் திடீர் தாக்குதல் நடாத்தி அந்த அமைப்பை செயலிழக்க வைத்தார். முன்னூறுக்கும் அதிகமான சொந்த இன இளைஞர்களையே வீதிகளில் சுடலைகளில் உயரோடு நெருப்பில் எரிக்க உத்தரவிட்ட ஒருவன் சரியான தலைவனா? போராட்ட வீரனா? இவரை பிடல் காஸ்ரோவுக்கும், சேகுவேராவுக்கும் ஒப்பிடுவது அந்த தலைவர்களை கேவலம் செய்வது போலாகும்.

ஒரு போராளி என்பவன் மக்கள் உயிர்களைக் காக்கவேண்டும். ஆனால் புலிகள் அப்படி அல்ல. தம்மைக் காக்க மக்களை பலிக்கடா ஆக்கினார்கள. மக்கள் உணவுகளைக் கொள்ளையடித்தார்கள். கப்பம் கேட்டு கொடுமைகள் செய்தார்கள். வசதியான வீடுகள் ஆடம்பர வாகனங்களைப் பறித்து அவர்களே சுகபோகம் அனுபவித்தார்கள். இந்தக் கும்பலிற்கு தலைவனான பிரபாகரனை உலகப் புரட்சியாளர்களோடு ஒப்பிடுவதும் உலக மகாவீரனாக கருதுவதும் ஒரு பொய்யான விம்பத் தோற்றமே.

சமாதானம் என்ற ஆயுதத்தை வஞ்சம் தீர்க்கப் பயன்படுத்தியவர் பிரபாகரன். ஆரம்பம் முதலே எதிரிகளோடு சமாதானமாக நடித்தே கொலை செய்தார். இது மைக்கல் பற்குணம் ஆகியோரிடம் இருந்து இந்த வரலாறு தொடங்குகிறது.

யுத்த காலங்களில் மக்களைப் போல வெள்ளைக்கொடி ஏந்திநின்று வீதிகளில் கண்ணிவெடி புதைப்பது , கர்ப்பிணி வேசம் போட்டு தற்கொலை குண்டுதாரிகளை அனுப்புவது, பொதுமக்கள் வாழிடங்களில் குண்டுகளை வெடிக்க வைப்பது இவை எல்லாம் யுத்த தந்திரமா? இல்லை கொலை வெறியா? பொது மக்கள் உயிர்களைப் பற்றி கொஞ்சமேனும் கவலைப்படாத ஒருவனை தலைவன், மாவீரன் என பலர் கொண்டாடுகிறார்கள்.

அனுராதபுரம் படுகொலைகள், காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள் எல்லாம் புலிகளின் மிருகத்தனத்தின் ஆவண சாட்சியங்களாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இஸ்லாமிய மக்களை இரவோடு இரவாக பிறந்த மண்ணைவிட்டு துப்பாக்கி முனையில் வெளியேற்ற உத்தரவிட்ட பிரபாகரனை ஒரு புரட்சியாளனாக வீரனாக கொண்டாடுவது மிக கேவலமானது.

சிலர் சொல்கிறார்கள். புலிகள் காலத்தில் சாதிகள் இல்லையாம். துப்பாக்கி முனையில் சாதிப்பிரச்சினைகள, உறங்க வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக புலிகளுக்கோ பிரபாகரனுக்கோ எந்த அக்கறையும் இருந்தது இல்லை. இந்தியாவில் ஒன்பது பிரிவுகளாக இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை பிரபாகரன் இணைக்க விரும்பவில்லை. சமூகப் பிரச்சினைகளை காணாமலே கடந்து போனார்கள். எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரும்பவே இல்லை.

பிரபாகரன் பற்றி சமூகம்,தமிழர்கள் கொண்டுள்ள விம்பங்களை இல்லாது செய்யவேண்டும். இனவெறி என்ற போர்வையால் புலிகள், பிரபாகரன் தவறுகள் மூடப்படுகின்றன. பிரபாகரனைப் பொறுத்தவரை யுத்த வெறிபிடித்த மனநோயாளி. எதிரிகளின் பிணங்களை எண்ணி சந்தோசப்படும் கொலைக்கும்பலின் தலைவன்.

தன்னைப் பாதுகாக்க பல இலட்சம்மக்களை துப்பாக்கி முனையில் கேடயமாக்கி முள்ளிவாய்க்கால்வரை கொண்டுபோன ஒருவன் வீரனா? கோழையா? இல்லை நல்ல தலைவனா?

இந்தக் கொலைகார கூட்டத்தை பிரபாகரனை நினைவு கூருவது முட்டாள்தனமானது.அருவருப்பானது.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கையை விரித்த மஹிந்த தேசப்பிரிய.

ஜனாதிபதியால் பாராளுமன்று கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் நேற்று தேர்தல் கொமிஷன் சபை க்கு சென்று ஆணையக தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின்போது, தேர்தல் அறிவித்தல் அரசியலமைப்பிற்கு முரணானது என அவர்கள் கூற, தேர்தல் அறிவித்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்வது எனது வேலை இல்லை எனவும், உங்கள் அனைவருக்கும் தேர்தல் தொடர்பாக முறைப்பாடு காணப்படுமாயின் உயர் நீதிமன்றத்தினை நாடுவது உசிதம் என தான் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வேளை யாரேனும் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து தீர்ப்பு வருமாயின் அதன் படி செயற்பட தான் தயங்க போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தேசப்பிரியவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டதரனி அஜித் ஜீ பெரேரா, அரசியல் அமைப்பிற்கு புறம்பாக தேர்தல் நடாத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்ற கருத்தை தாம் தேர்தல் கொமிஷன் சபைக்கு தெரித்ததாகவும் அதற்கு அச்சபை தங்கள் கருத்துக்களை செவிமடுத்தனர் எனவும் தெரிவித்தார்.

இத்தேர்தல் அறிவித்தல் தொடர்பாக தேர்தல் கொமிஷன் சபை ஏதேனும் கருத்து தெரிவித்ததா? என்ற கேள்வியை ஊடகவியலாளர்கள் தொடுத்தபோது, „அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது' எனக் கூறினார் அஜித் பி பெரேரா.

ராதித சோனாரத்ன, பாடலி ஷம்பிக ரனவக, கயந்த கருனாதிலக, அகில விராஜ் காரிய வசம், பேராசிரியர் வறர்ஷத சில்வா, வறிருனிக பிரேமசந்திர ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


Read more...

ஓய்வூதியம் அற்றுப்போன 71 பாராளுமன்ற உறுப்பினர்களும் யார் தெரியுமா?

பாராளுமன்றின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள். அவ் ஐந்து வருடங்களையும் பூர்த்தி செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆயுட்காலம் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

இம்முறை எதிர்பாராத விதமாக நான்கு வருடங்கள் கூட நிறைவேறாத நிலையில் பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்முறை புதிதாக பாராளுமன்றுக்கு தெரிவாகியிருந்த 71 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இவர்களில் 45 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள். சிலரது பெயர் விபரம்

S.M. Marikkar,
Hirunika Premachandra,
Chathura Senaratne,
Mayantha Dissanayake,
Ananda Aluthgamage,
Ranjith Aluwihare,
Bandulala Bandarigoda,
Daya Gamage,
J.C. Alawathuwala,
Nalin Bandara,
Hector Appuhamy,
Chandima Gamage,
Chaminda Wijesiri,
Hesha Withanage,
Karunaratne Paranavithana,
Jayampathi Wickramaratne,
Ashu Marasinghe
Ashoka Priyantha,


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் 17 உறுப்பினர்களின் சிலர் பெயர் இங்கே

Udaya Gammanpila,
Prasanna Ranatunga,
Prasanna Ranaweera,
NImal Lansa,
Sisira Jayakody,
Piyal Nishantha,
Anuradha Jayaratne,
Niroshan Premaratne,
D.V. Chanaka,
Sanath Nishantha
Malith Jayathilaka
Angajan Ramanathan


மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்

Nalinda Jayatissa

தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

காதர் மஸ்தான்,
கோடீஸ்வரன் ,
எஸ். சிவமோகன் ,
வியாழேந்திரன் ,
ஸ்ரீநேசன் ,
சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ,
சார்ள்ஸ் நிர்மலநாதன்

ஏனைய கட்சிகள்

எம். முகம்மத் இஸ்மாயில்,
ஏ அரவிந்த்குமார் ,
வேலுகுமார் ,
ம.திலகராஜா ,
முகம்மத் நஸீர் ,
முகம்மத் மன்சூர் ,
எஸ்.எம் . மரிக்கார் ,
இம்ரான்மஹ்ரூப் ,
இஷாக் ரஹ்மான் ,
முஜிபுர் ரஹ்மான் ,

Read more...

ரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை. தயான் ஜெயதிலக

உலகளாவிய கூட்டாட்சி தலைமைக்குள் இழுத்துக்கொள்ளப்படும் முயற்சிகளில் இலங்கை தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க கூறினார்.

உலகின் சில தலைநகரங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் சில கொள்கை பிரசாரங்களையிட்டு இலங்கை மகிழ்ச்சியாக இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

“உலகின் சில பகுதிகளில் உள்ள எமது நண்பர்களிடம் இருந்து கேட்கும் குரல்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இல்லை. ஏனெனில் உலகின் சில தலைநகரங்களில் இருந்து வரும் கொள்கை பிரசாரங்களாக அமைந்துள்ளன. ஒருசிலர் உண்மையிலேயே ஊடக மாநாடுகளை நடத்துகின்றனர். அவை பல மைல் தூரம் கடல்களுக்கு அப்பால் நடப்பவை. அவை என்ன சொல்கின்றன. எமது தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ன செய்ய வேண்டும். அதனை எப்போது செய்ய வேண்டும் என்று சொல்பவையாக அவை உள்ளன என்று அவர் கூறினார்.

“ஆனால் நாம் என்ன செய்யவேண்டும் என்று எமது ஜனாதிபதிக்கு கூறும் நாட்டில் வசிக்கிறோம். எனவே எமது ஜனாதிபதி எங்கள் நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவோர் சொல்வது எமக்கு வியப்பைத் தரவில்லை. அவ்வாறு சொல்பவை ஒரே குரல்களாகவே உள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் நண்பர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கப்படவேண்டும் என்று கூறுகின்றனர். நாட்டின் அதிஉயர் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அவர் முழு நாட்டுக்கும் ஜனாதிபதியாக தெரிவானவர். அத்துடன் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்றே அவர் அந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இன்று நடப்பது என்ன என்று புரிந்துகொள்வது கஷ்டமானது அல்ல. உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்தும் 1990 இல் இருந்து உலகத்தின் அனுபவம் மூலமாகவும் அதனை தெரிந்துகொள்ள முடியும். ரஷ்யாவில் 1990ல் இருந்த நிலை பற்றி அனுபவத்தில் இருந்து பார்க்குமிடத்து அங்கு ரஷ்யா ஒரு குறிப்பிட்ட திசையில் சென்றுகொண்டிருந்ததை உணரலாம். ஆனால் அப்போதுமக்கள் அந்த திசையை மாற்றி தேசிய மற்றும் ரஷ்ய மாநிலங்களுக்கு சரியான பாதை எது என்ற பாதைக்கு மாறினர்.


“அவ்வாறான ஒரு அனுபவத்தையே நாங்கள் இப்போது கடந்து செல்கிறோம். அத்துடன் அது இப்போது அரசியல் சிக்கலாகவும் அரசியல் பதற்ற நிலையிலும் உள்ளது. இரு தரப்பினருக்கு இடையிலான இந்த அரசியல் போராட்டம் 1990 ல் 21 ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் நீங்கள் அனுபவித்ததை போன்றதாகும்.

ஒருசிலரின் முயற்சிகளின் பங்களிப்பையே இலங்கையில் இன்று காண்கிறோம். இது நிறப் புரட்சி மற்றும் அரேபிய புரட்சி எப்படியிருந்தது என்பதை ஞாபகமூட்டுவதாக உள்ளது.

எங்கள் ஜனாதிபதி கடந்த வருடம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தார். அத்துடன் ஜனாதிபதி புட்டீனுடன் வெற்றிகரமான சந்திப்பையும் மேற்கொண்டார். இந்த நிலையில் நாம் எமது நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்று ரஷ்யா இப்போது எதுவும் சொல்லாததையிட்டு நான் ரஷ்யாவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ரஷ்யா எப்போதும் எம்மை மதித்துவந்துள்ளது. எமது தேசிய சுதந்திரத்தை பாதுகாக்க உதவியும் தந்துள்ளது. எமது தேசிய இறைமை மற்றும் ஒருமைப்பாட்டு மற்றும் எமது ஒற்றுமையை பாதுகாக்க உதவியுள்ளது.

ரஷ்யாவின் இவ்வாறான பங்களிப்பை 1917 நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னரே இலங்கையர்களான நாம் அங்கீகரித்திருந்தோம்.

ரஷ்யாவும் செம்படையும் நாம் சுதந்திரம் பெற உதவியதை மறுப்பதற்கில்லை என்று அவர் மேலும் கூறினார்.

நன்றி தினகரன்

Read more...

ஜனாதிபதியின் அதிகாரங்களினூடாக அடுத்த ஆண்டுக்கு நிதி ஒதுக்கப்படுமாம்.. சுசில் பிறேமஜெயந்த

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாட்டின் நிர்வாக செலவுக்கான இந்த வருடத்திற்கான நிதி ஏற்கனவே வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதன்போது நாட்டின் நிர்வாக செயற்பாடுகளுக்கான செலவுக்கான நிதி குறித்து விளக்கம் அளிக்கையில், ஜனவரி மாதத்திற்கான தேவையான நிதியை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்யவார். கையிருப்பிலுள்ள நிதியில் இருந்து இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதிக்கு உள்ள யாப்பு ரீதியாக உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி ஒதுக்கீட்டுகான நடவடிக்கையை மேற்கொள்வார்

அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி இருப்பில் உள்ள நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Read more...

Saturday, November 10, 2018

மஹிந்த தேசப்பிரியவின் முன்னுக்கு பின் முரணான கருத்து. அடிப்பாரா பல்டி?

பாராளுமன்று நேற்று கலைக்கப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று லங்காஈநீயுஸ் இணையத்தளத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்ததாக அவரது தம்பி சுனந்த தேசப்பிரிய தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அதேவேளை, இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை நாடுவீர்களா என மகிந்த தேசப்பிரியவிடம் 'தி ஹிந்து' நாளிதழ் நேற்றிரவு கேள்வி எழுப்பிய போது, அது குறித்து கருத்து வெளியிட மறுத்திருந்தார்.

எனினும், அவர் '; தேர்தலுக்கான நாளைக் குறிக்கும் அதிகாரத்தை சிறிலங்கா அதிபர் கொண்டிருக்கிறார். தேர்தலை நடத்துவது குறித்த நிலைப்பாடு தொடர்பாக, ஆணைக்குழு கலந்துரையாடும்.' என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்றிரவு கருத்து வெளியிட்டிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய:

'நாடாளுமன்ற கலைப்பு குறித்த அரசிதழ் வெளியானதும், தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கூட்ட வேண்டும்.

நாங்கள் தீயணைப்பு படைப்பிரிவு போல, எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்.' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

நாமல் ரெடியாம், தமிழர் தான் ரெடியில்லையாம்.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம் ஆனால் துரதிஸ்டவசமாக அவர்கள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடேயின் கீதா மோகனிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் கட்சிகள் தங்கள் நலனை மையமாக வைத்தே செயற்படுகின்றன அவர்கள் மக்களின் நலன் குறித்த அக்கறையுடன் செயற்படவில்லை.

பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் தங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு நெருக்கமானவர் என இந்தியா கருதுவது குறிப்பிடுகையில் :

நாங்கள் சிறந்த எதிர்காலத்தையே எதிர்பார்க்கின்றோம், நாங்கள் வலுவான இந்திய இலங்கை உறவுகளை விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, நாங்கள் அயலவர்கள் இன்றைய உலகில் பொருளாதார உறவுகளே முக்கியமானது சீனாவுடான எங்கள் உறவுகள் முற்றுமுழுதாக முதலீடுகளை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

பல்கலைக்கழக மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று பெலிகுல்ஓயாவில் குளிப்பதற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் மூவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட மூன்று பேரும் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் மூன்றாம் வருட மாணவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் இணுவில் பாலாவொடையை சேர்ந்த செல்வரட்ணம் திசான் (வயது 25), வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சரவணபவன் கோபிசன் (வயது 23), நல்லூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சாரங்கன் (வயது 25) ஆகிய மூன்று மாணவர்களுமே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read more...

TNA , JVP and UNP தனித்தனியாக நீதிமன்று செல்கின்றது.

பாராளுமன்று கலைக்கப்பட்டது நீதிக்கு விரோதமானது என்றும் அரசியல் யாப்பினை மீறுவது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் , மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் வழக்கு தொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், 19வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்.

இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது எனவும் நான் மட்டுமல்ல இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர

தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்துரைத்துள்ள மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு அலரி மாளிகையில், நடந்த கூட்டத்துக்குப் பின்னர், 'தி ஹிந்து' நாளிதழுக்கு தகவல் வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'நிச்சயம் நாங்கள் நீதிமன்றத்தில் இதனைச் சவாலுக்கு உட்படுத்துவோம்.

இதன் விளைவாக சிறிலங்கா அதிபருக்கு எதிராக ஒரு குற்றவியல் பிரேரணையையும் கொண்டு வருவோம். ஏனென்றால் அவரால் நாட்டுக்கும் நாட்டின் ஜனநாயக மரபுகளுக்கும் ஆபத்து உள்ளது.

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால், இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல். எனவே, இந்தக் கலைப்புக்கு எதிராக சவால் விட வேண்டிய தேவை உள்ளது.' என்றும் அவர் கூறியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜேவிபி யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாகவும் இது முற்றாக அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

Read more...

அரசியல் விபச்சாரிகள் மற்றும் நகைச்சுவை நடிகர்களிடம் நாங்கள் எங்கள் நாட்டை இழந்துவிட்டோம் , லக்மல் ஹரிஸ்சந்திரா

நான் எனது பிரியமான நாட்டினை இழந்துவிட்டதைப் போல உணருகிறேன், இந்து சமுத்திரத்தில் ஒரு முத்தினைப்போலத் திகழும் இந்த நாட்டினை, ஒரு தெருவோரsrilanka citizenக் கடையைக்கூட நிருவகிக்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைத்த முட்டாள்தனத்தினை ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் என்னால் முடியவில்லை. துரதிருஷ்டவசமாக ஜனநாயகம் என்கிற பெயரால், வெவ்வேறு கட்சிகளின் கூட்டணி ஒன்று மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி அதை குழப்பத்தில் தள்ளிவிட்டுள்ளது. சமீபத்தைய அரசியல் நெருக்கடியுடன் நாடானது ஆழமான அரசியல் முறிவான யுகத்துக்குள் திரும்பவும் பிரவேசிக்கிறது, சர்வாதிகாரத்தை வளர்த்துவிட்ட காலநிலை மற்றும் கடந்த காலத்தின் அனைத்து மோசமான துஷ்பிரயோக வேலைத்திட்டம் ஆகிய அனைத்தும் புதுப்பிக்கப்படலாம். நான் ஒரு தொழில்முறை எழுத்தாளன் இல்லை ஆனால் எனது ஏமாற்றம் மற்றும் விரக்தி என்பனவற்றின் காரணமாக நான் எனது சிந்தனைகளை வெளிப்படுத்துவதை தெரிவு செய்தேன் மற்றும் நெறிகெட்ட எங்கள் விபச்சார அரசியல் நடவடிக்கை மற்றும் காமெடியன்கள் மற்றும் மாடுமேய்ப்பவர்களைப் போன்றவர்களினால் எங்களது அரசியல் கலாச்சாரத்துக்கு ஏற்பட்டுள்ள ஊழல் என்பனவற்றுக்கு எதிராகப் எதிர்த்து எழவேண்டும் என்று எனது சக நாட்டுக்காரனை தூண்டிவிடவும் எண்ணினேன். அடிமட்டத்தில் உள்ளவர்கள் இந்த துரதிருஷ்டமான முன்னேற்றங்களைக்கண்டு வாயடைத்துப்போய் கவலையுடன் நடப்பதைக் கவனித்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் எங்கள் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் வேகமாக எங்களைக் கடந்து செல்லுகையில் நாங்கள் மட்டும் உற்பத்தி மற்றும் திறமை ஆகிய இரண்டிலும் தன்னைத்தானே நிருவகிக்க முடியாத ஒரு தேசமாக ஏன் மாறியுள்ளோம் என்கிற பொருத்தமான கேள்வியை ஏன் கேட்கக்கூடாது?

ஸ்ரீலங்காவில் பல ஜனநாயகச் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன. 1948ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு தட்டில் வைத்து தரப்பட்ட பல வரலாற்று வாய்ப்புகளை நாங்கள் இழந்துள்ளோம். வேகமாக முன்னேறுகையில் மற்றுமொருமுறை தவறான ஒரு குழுவுக்கு வாக்களித்த பின்னர் நாங்கள் கிட்டத்தட்ட எங்களைக் கட்டிவைத்துள்ள ஒரு கயிற்றின் முடிவுக்கு வந்துள்ளோம். அதன் காரணமாக இன்று எங்கள் சொந்த மதியீனத்தினால் ஏற்பட்டுள்ள தவறான விளைவுகளைச் சமாளிப்பதற்கான நிர்ப்பந்தத்தில் சிக்கியுள்ளோம். ஒரு நகைச்சுவை வீட்டுக்குத் தலைமைதாங்குவதற்கு பொருத்ததான ஒரு ஜனாதிபதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இரண்டு பிரதமர்கள் உள்ள ஒரு கோமாளிகளின் பாராளுமன்றத்தில், ஒரு கூட்டம் திருடர்கள், பாலியல் துஷ்பிரயோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள், மோசடிக்காரர்கள், தங்கள் ஆத்மாவைக்கூட காசுக்கு விற்கும் கீழ்தரமான கொள்கையற்ற கட்சிமாறிகள் மற்றும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கடமையாற்றும் கடைநிலை பணியாளனை விட குறைவான கல்வித் தகுதியுடைய படிக்காதவர்கள் இடம்பிடித்துள்ளார்கள். ஒரு பேராசிரியர் முன்பு ஒருமுறை சொன்னது, பாராளுமன்றத்தில் எங்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்களில் பலர், முதியோர் இல்லத்திலும் பறவைகள் சரணாலயத்திலுமே இருக்கத் தகுதியானவர்கள் என்று. ஓ என்ன காலம்! ஓ என்ன சம்பிரதாயம்!

கடந்த எழுபது வருடங்களாக, ஸ்ரீலங்காவானது ஆசியாவின் பிரதான குழுமமாக பெருமையுடன் உயரத்தில் எழுந்து நின்றது, சிங்கப்பூரின் லீ குவான் யுங் ஒரு உதாரண மாதிரியாக எடுக்க விரும்பிய ஒரு நாடு, இன்று வேகமான பாதையில் சென்று கீழ்மட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கீழ்த்தரமான நாடாக மாறியுள்ளது. எல்லாவற்றிலும் மோசமாக ரௌடி அரசியல் வகுப்பினர் எங்கள் மக்கள் மத்தியில் இனவாதம் மற்றும் வகுப்புவாதம் எனும் அழியாப் பிளவுகளை கொண்டுவந்துள்ளதுடன் அதிகாரத்திற்கு வருவதற்காக அல்லது அதில் நிலைத்திருப்பதற்காக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். நான் நினைக்கிறேன் ஸ்ரீலங்கா கிரிக்கட் அணிதான் ஸ்ரீலங்காவின் அரசியல் தரங்களைச் சீரழிப்பதில் மிகவும் பிரதிநிதித்துவம் வகிக்கிறது என்று. எங்கள் அடுத்த தலைமுறைக்கு எந்த மாதிரியான ஒரு நாட்டுக்கு நாம் மரபுரிமை வழங்கப் போகிறோம்? ட்ரம்ப் கேலிக்கிடமான மேற்கத்தைய பாணி ஜனநாயகத்தை உருவாக்கும் நேரத்திலும், கீழ்தரமான இனவாத அரசியலை நிலைநிறுத்துவதற்காக மோடி மகா பாரதத்தை அனுமதிக்கும் நேரத்திலும், சிறிசேன தனது முட்டாள்தனமான பலவினமான அரசியலாலும் ஃமகிந்த தனது திருப்தியடையாத அதிகாரப் பேராசையாலும்ஃரணில் தனது திறமையின்மை மற்றும் சுயநலம் ஊடாக அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்கும் ஆகமொத்தம் எல்லாம் கூடி இந்த அரசியலமைப்பு நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன் ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி முழு உலகமும் அதைப்பார்த்து கேலி செய்யும் நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்தமாதிரி ஆட்களை எங்கள் நாட்டுக்குப் பொறுப்பாக இருக்கவும் நாட்டை இரத்தம் சிந்தி மரணிக்கவும் அனுமதிப்பது? ஏழு தசாப்தங்களாக நாங்கள் நீலத்துக்கும் பச்சைக்குமாக அல்லது இரண்டும் சேர்ந்த கலவைக்குமாக மாறி,மாறி வாக்களித்துள்ளோம், அவர்கள் அனைவரும் ஊழல், திறமையின்மை, இனவாதம் மற்றும் அற்ப அரசியல் என்பனவற்றுனுடாக நாட்டை உறிஞ்சிக் குடித்து அதை வரட்சியடையச் செய்துள்ளார்கள். மக்களின் சம்மதமின்றி ஸ்ரீலங்காவின் சொத்துக்களை ஜனநாயக நாட்டில் நிறைவேற்று மற்றும் சட்ட அதிகாரம் என்பனவற்றின் பெயரால் விற்பனை செய்வதற்கு அவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? ( உள்ளக கட்டமைப்பு என்ற பெயரால் ஒரு தொடர்ச்சியான வெள்ளை யானைகளை கட்ட வைத்ததின் மூலம், சீனக் கடன்பொறியில் சிக்கி பாதிக்கப்பட்ட முதல் நாடு ஸ்ரீலங்காவாகும்). பாராளுமன்றத்தில் அவர்களின் வாக்குகளை தங்கத்துக்கு விற்க அவர்களை யார் அனுமதித்தது? வீடுகள், ஆடம்பர வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதேபோல நம்பமுடியாத இலவச வசதிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை தமதாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? வாக்குறுதி அளித்ததுபோல இந்த மோசடிக்காரர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க ஏன் முடியாமற்போனது? கட்சி தாவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான இவ்வளவு பெருந்தொகைப் பணம் எங்கிருந்து வந்தது? அவர்களைப் பற்றி விசாரணை செய்வதற்கு தகுதி இல்லையா? மற்றைய துறைகளில் பொறுப்புக்கூற வைப்பதுபோல, விசித்திரக் கதைகளில் வருவதுபோல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தேர்தல் முடிந்ததும் அதைப்பற்றி மறந்து விடுபவர்களை ஏன் பொறுப்புக் கூற வைக்க முடியாது? எங்கள் பொதுப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அடிப்படைக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க கல்வித் தகுதி மற்றும் அரசியல் அறிவு என்பன தேவை என்கிற ஒரு முறையை நாம் ஏன் கொண்டுவரக் கூடாது?

21 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாட்டின் தலைவர்கள் தவறான வழியில் பணம் திரட்டுபவர்களாகவும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பவர்களாகவும் வருவதற்கு நாம் ஏன் அனுமதித்தோம்? அனைத்து ராஜதந்திர விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு வெளிநாட்டு அரசாங்கங்கள் எங்கள் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதற்கு நாம் ஏன் அனுமதி வழங்குகிறோம்? இவைகள்தான் மக்கள் இன்று கேட்கும் சில கேள்விகள் ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர்கள் இந்த அழுக்கு மூட்டையை சுத்திகரித்து தூய்மையானதும் திறமையானதுமான அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு பரந்த இயக்கத்தின் பங்காளிகளாக மாறாமல் இன்னும் வெறுமே பார்வையாளர்களாக மட்டுமே இருக்க விரும்புகிறார்கள்.

ஜனநாயகம் என்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் ஸ்ரீலங்காவில் இந்த மாதிரியான கீழ்மட்ட அரசியல் வகுப்பினரின் கைகளில், அது பரந்த ஒரு பெரிய கேலிக்கூத்தாக மாறியுள்ளது. ஒவ்வொரு கணமும் மக்களின் பங்களிப்பு இடம்பெறும்போதுதான் ஜனநாயகம் பிரசாசமாக மாறுகிறது. மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு விஷயத்தைப்பற்றியும் அறிவித்து, கலந்துரையாடி, விவாதிப்பதற்கு நாங்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றவேண்டும். மேலும் ஒரு ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிட்ட இன, மத அல்லது குறிப்பிட்ட ஒரு மக்கள் குழுவினரின் நலன்களுக்கு வேண்டி மட்டுமே செயற்படும் கட்சிகள் இருப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையான ஜனநாயகத்தில் எல்லாக் கட்சிகளும் எல்லா மக்களையும் பிரதிநிதிப்படுத்த வேண்டும். எனினும் ஸ்ரீலங்காவில் உள்ள அரசியற்கட்சிகள் அனைத்துவிதமான இன, மொழி மற்றும் மதக் கலவரங்களை உருவாக்குவதற்கு முற்றிலும் பொறுப்பாக உள்ளன. தரதிருஷ்டவசமாக ஊழல் என்பது கிட்டத்தட்ட நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா சமூகத்தினுள் வேரூன்றியுள்ளது. தங்களின் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் வாழ்வின் அனைத்து நிலையிலுள்ள மக்களும் தங்கள் வசதிக்காக அல்லது சட்ட விரோதமாக செல்வம் சேகரிப்பதற்காக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நாட்டில் ஊழலின் அச்சுறுத்தல் ஒரு தொற்றுநோயின் விகிதாச்சாரத்தில் வளர்ந்துள்ளது, மற்றும் அது ஒரு அதிவேக வளர்ச்சி வரைவின் உச்சத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது. இது தனிநபருக்கு அல்லது ஒரு குழுவுக்கு மற்றவர்களின் செலவில் தேவையற்ற அனுகூலங்களை பெற்றுக்கொள்ள இடமளிப்பதால் அது ஜனநாயகத்துக்கு பெருந் தடையாக உள்ளது.

நமது அரசியல் செயற்பாட்டில் சிறிதளவு நல்லொழுக்கங்களைக் கொண்டுவருவதற்கான ஒரே வழி சிவில் மற்றும் பொது செயற்பாட்டினை அணி திரட்டுவதேயாகும். சமீபத்தில் கொழும்பு ரெலிகிராப்பில் ஜயதேவ உயன்கொட ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பது, ‘2015 அனுபவம் குழப்பமான ஒரு புதிய அரசியல் பாடத்தை நமக்கு கற்பித்துள்ளது: அரசியல் கட்சிகள் மற்றும் தொழில்முறை வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆகியோர் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் நம்பகமான கூட்டணியினராக இனிமேலும் இருக்கப் போவதில்லை. அவர்களுக்கு மக்களின் ஜனநாயக அவா மற்றும் அபிலாசைகள் என்பன அதன் மதிப்பில்வெறும் ஒரு கருவி மட்டுமே. அவர்களின்; சொந்த ஜனநாயக தொகுதிகளில் உள்ள விசுவாசம் மற்றும் நம்பிக்கை என்பன தற்காலிகமான, சந்தர்ப்பவாதமான மற்றும் இழக்கத்தக்கதானதாகவே உள்ளன…. எங்கள் சமூகத்தில் ஜனநாயக பாதுகாப்பையும் தடைகளையும் வலுப்படுத்தி கட்டியெழுப்ப ஒருவேளை இயலுமாக உள்ள ஒரே வழி மாலைதீவின் மற்றுமொரு பதிப்பாக ஸ்ரீலங்கா சீரழிவடையாமல் எதிர்ப்பதே ஆகும். ஜனநாயக எதிர்ப்பின் அமைப்புக்களான ஸ்ரீலங்கா அரசியல் கட்சிகளின் சரிவின் கண்ணோட்டத்தில் எதிர்ப்புக்கான பொறுப்பின் பெரும்பகுதி குடிமக்களின் தோள்களின் மீதும் மற்றும் அவர்களின் தன்னாட்சி அணிதிரட்டலின் மீதும் விழுகிறது.

அவர் மேலும் தெரிவிப்பது, ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் அவைகளின் அளவு சிறியதாக இருந்தாலும், இந்தக் குழுக்களில் சிலதுதான் ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சியின்மீது முதலில் ஆங்காங்கே எதிர்ப்புகளை வெளியிட்டன மற்றும் அப்போது நீடித்த எதிர்ப்புகளுக்கான நிலமைகள், அரசியற் கட்சிகளின் புதியதொரு கூட்டணி உதயமாகி ஜனநாயக மறுமலர்ச்சிக்கான ஒரு புதிய இடைவெளியை திறப்பதற்கு உதவியது. இந்த குடியியல் குடியரசுக் குழுக்கள் இப்பொழுது பெருமளவில் செயலற்ற நிலையில் உள்ளன. அவைகள் ஒரு புதிய கட்ட அணிதிரட்டலுக்காகக் காத்திருக்கின்றன மற்றும் அவற்றுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளும் மற்றும் செயற்பாடுகளும் தேவையாக உள்ளன. சிதறிக்கிடக்கும் ஸ்ரீலங்காவின் ஜனநாயக சமூக அமைப்பான இந்த பிரதான குழுக்களுக்கு நிறுவன ரீதியான தலைமைத்துவத்தை வழங்கவேண்டியது ஒருவேளை செயலூக்கமானதும் மற்றும் வளம் நிறைந்ததுமான சிவில் சமூகக் குழுக்களின் உடனடிப் பணியாகும்.

மக்கள் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழப்பதற்கு முன்பாக ஸ்ரீலங்கா மற்றொரு கட்ட ஜனநாயக மறுமலர்ச்சியை ஆரம்பிக்க வேண்டும். இந்த அரசியல் ஒட்டுண்ணிகள் நாட்டை நித்திய மறதி மற்றும் நரகத்திற்குள் தள்ளுவதற்கு முன்பாகவே மக்கள் பேசுவதற்கும் மற்றும் எதிர்ப்புக் காட்டவும் ஆரம்பிக்க வேண்டும். எனினும் நேரம் எங்களுக்குச் சாதகமாக இல்லை.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

கனேடிய வர்த்தக வங்கி இணையத் திருடர்களின் இலக்காக மாறியுள்ளது!

வட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை தளமாக கொண்ட மின்னஞ்சல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மாத்திரம் குறித்த வங்கி மீது போலி மின்னஞ்சல் மூலமான தாக்குதல் முயற்சிகள் 600 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமது தனிப்பட்ட தரவுகளைக் கொண்டு இணையம் மூலம் கையாளும் முக்கியமான முதல் நிலையில் உள்ள 25 நிறுவனங்களுள், இந்த வங்கி மட்டுமே இந்தளவிற்கு இணைய தாக்குதல் முயற்சிகளை அதிகம் எதிர்கொண்டுள்ளது.

குறித்த இந்த வங்கிக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 5.3 புதிய இணைய ஊடுருவல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 622 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை CIBC வங்கியின் இணையத் தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அனுப்பப்படுவதாகவும், இதன்மூலம் பயனாளிகளின் இரகசியத் தகவல்கள் திருடப்பட்டு மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

ஒரே கொள்கையில் பயணிக்கின்றபோது பல கட்சிகள் எதற்கு ? இதயசுத்தியுடன் ஒற்றுமைப்படுவார்களா ? முகம்மத் இக்பால்

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒன்றாக இருக்கின்ற புகைப்படமே இன்று சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

இவ்வாறு ஒன்றாக இருந்து புகைப்படம் எடுப்பது இதுதான் முதல் முறையல்ல. ஆனாலும் புனித உம்றா கடமைக்காக சென்று புனித மண்ணில் எடுத்த புகைப்படம் என்ற ரீதியில் இது முதல் முறையானதுதான்.

சமூகம் ஒற்றுமைப் படுவதென்றால் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தலைவர்கள் பிரிந்திருக்கின்ற நிலையில் சமூகத்தினால் ஒற்றுமைப்பட முடியாது.

தலைவர்கள் ஒற்றுமை படுவதென்பது வெறும் புகைப்படம் பிடிப்பதில் மட்டும் நின்றுவிடக் கூடாது. அது சமூக நோக்கு என்ற ஒரே கொள்கையின் அடிப்படையில் இதயசுத்தியுடன் இருக்க வேண்டும்.

இந்த இரு கட்சிகளும் தேர்தலில் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிட்டாலும், ஏனைய அனைத்து நடவடிக்கைகளிலும் ஒன்றாகவும், ஒரே கொள்கையின் அடிப்படையிலுமே செயல்பட்டு வருகின்றார்கள்.

அதாவது கடந்த மகிந்தவின் அரசாங்கத்தினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினாலும் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களுக்கும் இந்த இரு கட்சிகளும் ஆதரவாகவே வாக்களித்தார்கள்.

இவர்கள் ஊவா மாகாணசபை தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டபோதும் இந்த ஒற்றுமையை பற்றி பலரும் அன்று வாய் நிறைய புகழ்ந்து பேசினார்கள். ஆனாலும் அந்த ஒற்றுமை இதயசுத்தியுடன் இல்லாத காரணத்தினால் அதன் ஆயுள் நீடிக்கவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் இந்த இரு கட்சி தலைவர்களும் ஒன்றாக பேசி இறுதி நேரத்தில் மகிந்தவுக்கு பாடம் படிப்பிக்க எண்ணியிருந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுபோல் மாகாணசபை திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் அவசரமாக அரசாங்கம் சமர்பித்து வாக்கெடுப்புக்கு விட இருந்த நேரத்தில் அதனை தடுக்கும்பொருட்டு பாராளுமன்றத்தில் தலைவர் ரவுப் ஹக்கீமின் காரியாலயத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி அரசாங்கத்துக்கு படிப்பினைகளை மேற்கொள்ள இருந்த இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதும் நாங்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.

இறுதியில் மாகாணசபை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு முஸ்லிம் காங்கிரசின்மீது மட்டும் பழியை போட முயற்சித்த விவகாரமும் யாவரும் அறிந்தது.

இந்த இரு கட்சிகளும் தேர்தலில் மட்டும் பிரிந்து நின்று போட்டியிட்டு மக்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்திவிட்டு, மற்றைய அனைத்து நடவடிக்கைகளிலும் ஒன்றாகவே செயல்படுகின்றார்கள். அப்படியென்றால் வெவ்வேறு கட்சிகள் எமக்கு எதற்கு ?

இரு கட்சிகள் என்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கும். ஆனால் ஒரே கொள்கையில் பயணிக்கின்றபோது பல கட்சிகள் எதற்கு ?

எனவே எமது சமூக நோக்கினை கருத்தில்கொண்டு ஒரே கொள்கையில் பயணிக்கின்ற அனைவரும் ஒரே கட்சியில் பயணித்தால் சமூக ஒற்றுமை வலுப்பெறுவதோடு பிரிவினைகளை தடுக்க முடியும்.



Read more...

பாராளுமன்றை கலைத்தது தவறு என்போரும் , சரி யென்போரும் என்ன சொல்கின்றார்கள் என கேட்டுப்பாருங்கள்..

நேற்றிரவு இலங்கை பாராளுமன்று கலைக்கப்பட்டது தொடர்பில், பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. எதிர்தரப்பினர் பாராளுமன்ற கலைக்கப்பட்டது ஜனநாயக விரோம் என கூக்குரலிடும் அதேநேரம் ஆழும் கட்சியினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் நிமிர்த்தமே பாராளுமன்று கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் முக்கிய அரசியல் புள்ளிகள் தெரிவித்துள்ளமை வருமாறு :

ராஜித சேனாரத்ன (ஐதேக)

சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது சட்டவிரோதமான செயல். சிறிலங்கா அதிபர் முதலில், அரசியலமைப்புக்கு மாறாக, பிரதமரைப் பதவிநீக்கம் செய்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தை முடக்கினார்.

நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலையில், அவர் இரண்டாவது சட்டவிரோத செயலாக, நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார்.

எனினும், ஐதேக பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது.

லக்ஷமன் யாப்பா - அமைச்சர்

மக்களின் தீர்மானத்திற்கு விடுவது என முடிவு செய்து ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தினை நாட வேண்டியது இல்லை. மக்களே இனி அரசாங்கத்தை தீர்மானத்திப்பர். இதையும் அரசியல் யாப்பிற்கு முரணானது என கூற முடியாது.

கபினட் அமைச்சரவை தொடர்ந்தும் செயற்படும் ஏனைய அமைச்சரவை இரத்து செய்யப்படும் என்றும் தேர்தல் அறிவித்தலின் பின் அரசாங்கம் காபந்து அரசாங்கமாக தொழிற்படும்.

குசல் பெரேரா (அரசியல் ஆய்வாளர்)

சிறிலங்கா அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான ஜனநாயக விரோதச் செயல்களின் ஆகப் பிந்திய நடவடிக்கை தான், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் செயல்.

இந்த அரசியலமைப்பு மீறல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது.

எமக்கு நல்லாட்சி தேவையென்றால், ஜனநாயகத்தை நிறுவி அதனைப் பலப்படுத்த வேண்டும்.

அஜித் பெரேரா – (ஐதேக)

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்த போராடுவோம். மக்களின் உரிமைகளையும், ஜனநாயகத்தையும் சிறிலங்கா அதிபர் கொள்ளையிட்டு விட்டார்.

ஐதேக இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்தித்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் சட்டபூர்வ தன்மை குறித்து கலந்துரையாடும்.

சிறிலங்கா அதிபரின் சட்டவிரோத செயலுக்கு எதிராக, தேர்தல்கள் ஆணையாளர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருவார் என்று ஐதேக எதிர்பார்க்கிறது.

இப்போது, ஐதேகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் முடிவுக்கு சவாலை ஏற்படுத்துவது தான் முதல் பிரச்சினை. அடுத்த கட்டமாகவே, பிரதமர் வேட்பாளர் யார் என்று ஐதேக கலந்துரையாடும்.

ரில்வின் சில்வா (ஜேவிபி) –


சிறிலங்கா அதிபர் இரண்டாவது தடவையாக அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் தேவையான 113 பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தான் அவர் இதனைச் செய்துள்ளார்.

இதன் மூலம் அவர் நாட்டைப் படுகுழிக்குள் தள்ளி விட்டுள்ளார். நாட்டில் முதல் முறையாக, அதிபர் ஒருவர், நாட்டின் அரசியலமைப்பை மீறி தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினேஸ் குணரட்ண (தலைவர் மகாஜன எக்கத் பெரமுன)

முன்னால் பிரதமரதும் சபாநாயகரினதும் பிழையான அரசியல் செயற்பாடுகளினாலேயே பாராளுமன்றை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இனி மக்களே பாராளுமன்றத்திற்கான 225 பிரதிநிகளையும் தெரிவு செய்வர்.

அத்தோடு நல்ல அரசாங்கத்தை மக்களே அவர்களின் ஜனநாயக உரிமை மூலம் தெரிவு செய்வர்.

ஹரின் பெர்னான்டோ (ஐதேக)-

இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியலமைப்பு என்னவென்று தெரியவில்லை.

இதன் எதிர்விளைவுகளைப் பற்றியோ தனது நடவடிக்கைகளினால் நாட்டில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தே அவருக்குப் புரியவில்லை.

ஹர்ஷ டி சில்வா (ஐதேக) –

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன போலிப் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து சிறிலங்காவின் அரசியலமைப்பை கழிவறைக் கடதாசிக்கு சமமானதாக்கி விட்டார்.

சிறிலங்கா அதிபர் அவர்களே எங்கள் நாட்டின் அதிகாரபூர்வ பெயரிலிருந்து ஜனநாயகம் என்பதை நீக்குவதற்கான இன்னொரு அரசிதழ் அறிவித்தலை வெளியிடுங்கள்.

கோத்தாபய ராஜபக்ச (முன்னாள் பாதுகாப்புச் செயலர்)

இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே.

மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் உறுதித்தன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்க வேண்டும்.

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

விமல் வீரவன்ச (தலைவர், தேசிய சுதந்திர முன்னணி)

ஏதாவது தவறு நேர்ந்திருப்பின் அது தொடர்பாக நீதிமன்றத்தினை நாடுவதை விடுத்து நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவது தவறாகும்.

நாமல் குமாரவின் மூலமாக வெளியாகியுள்ள தகவலின் படி ஜனாதிபதி மீதான கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் அலரி மாளிகையில் சுதந்திரமாக இருந்தனர்.

இந்நிலையில் கூட மிக நிதான மான முறையில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை ஜனாதிபதி அறித்துள்ளார்.

Read more...

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி தாமரை மொட்டை கையிலெடுக்கின்றார் நாமல்.

ஹம்பாந்தோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, சிறிலங்க சுந்திரக் கட்சியிலிருந்து முடிந்த சீக்கிரம் வெளியேறி சிறிலங்கா பொதுஜன பெரமுன வில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்று நேற்ரிரவு கலைக்கப்பட்டு, எதிர்வரும் 05ம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த நிலையில் தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பரந்தளவிலான கூட்டணியொன்றை உருவாக்கி, தேர்தலை சந்திக்கவுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி யானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஓர் அங்கமாக இருந்த நிலையில், புதியதோர் முன்னணி உருவாகும் என்ற அறிவிப்பு பல்வேறுபட்ட அரசியல் மாற்றங்களுக்கான முன்னறிவிப்பாக கருதப்படுகின்றது.

Read more...

அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் கவலையாம்! ஐ.நா அவதானிக்கின்றார்களாம்!

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாகவும் இச்செயற்பாடானது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உறுதியான பங்காளர் என்ற வகையில், ஸ்திரத்தன்மை, சுபீட்சத்தை உறுதிபடுத்த ஜனநாயக நிறுவனங்கள், நடவடிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று நாம் கருதிகிறோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. .

பிரித்தானியா

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடா்பில் இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள, பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ஃபீல்ட் (Mark Field), தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

அத்தோடு, இலங்கையின் ஒரு நண்பராக அரசியலமைப்பை நிலைநாட்டவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் ஐக்கிய இராச்சியம் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா

இதேநேரம் இலங்கை தொடர்டபில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஐ.நா பொதுசெயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தவகையில் இலங்கையில் அரசியலமைப்பிற்கு ஏற்பவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென உறுதியாக நம்புவதாகவும் இதனால் இலங்கை அரசியல் நிலைமைகள் தொடர்பில் எந்நேரமும் அவதானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Friday, November 9, 2018

அரச வங்கிகள் நிதியமைச்சின் கீழ்; பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ்.

சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழும், அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த அரச வங்கிகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்பன நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 43 ஆம் பிரிவுக்கு அமைய, நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவர்களின் கீழ் வருகின்ற விடயங்களும் தொடர்பான 2096/17 எனும் இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலுக்கு அமையவே ஏற்கனவே இருந்த ஒரு சில அமைச்சுகளுக்கான விடயங்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் கடந்த அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழுள்ள, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் பயிற்சி படையணி, கடற்கரை பாதுகாப்பு திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் உள்ளிட்ட 17 நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழிருந்த அரச வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்கள் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் இருந்த, இலங்கை மத்திய வங்கி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழுள்ள நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன மீண்டும் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழுள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வெளியே வந்தார் சந்திரிகா அம்மையார். சோபித தேரரின் உருவப்படத்தில் வீழ்ந்து அஞ்சலி.

இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் ஏற்ப்பட்டுள்ள இந்நிலையில் வெளியே வராமலிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை முதன் முறையாக பார்க்க முடிந்தது.

கொழும்பு புதியநகர மண்டபத்தில நேற்று நடைபெற்ற சோபித்த தேரரின் 3வது சிரார்த்த தின விழாவில் அவர் கலந்து கொண்டு தேரருக்கு தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

2014ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக விளங்கிய மைத்திரிபால சிரிசேன, ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிடுவார் என இதேமண்டபத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

வெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண பேராளர் மாநாடு

வரலாற்றில் முதல்முறையாக வடமாகாணத்தில் கால்பதித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறுகிய காலத்தில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வடமாகாண பேராளர் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

இம்மாநாட்டிற்கு சிறப்பு அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துன்நெத்தி, வாழ்நாள் பேராசிரியர் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும, உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமாகாண செயலாளர் ஸ்ரீ கந்த நேசன் மற்றும் வலய செயலாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஆசிரியர் சங்கம் பெற்றுக்கொடுத்த உரிமைகள் எதிர்காலத்தில் போராடி பெற வேண்டிய உரிமைகள் தொடர்பாகவும் விசேடமாக பேசப்பட்டது வடமாகாண ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாநாட்டு முன்மொழிவுகளும் மேற்கொள்ளப்பட்டது.






Read more...

பாராளுமன்று கலைகின்றது. வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்.

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவுடன் வெளியாகவுள்ளது. இதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாராளுமன்றினை கூட்ட முற்பட்டிருந்தபோதும், சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் மிடையிலான முரண்பாடு வலுத்தமையினால் இவ்வாறன திடீர் முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அரசியல் யாப்பின் 33(2) சரத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு பாராளுமன்றினை கலைக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் , பாராளுமன்று கலைக்கப்படுவதாக அவ்வாட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றது.

அத்துடன் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடுவதை இடைநிறுத்தும் அறிவுறுத்தல் பத்திரத்திலும் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் புதிய பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் தயாராகவேண்டியுள்ளது. தேர்தல் எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறலாம் என்று கூறப்படுகின்றது.

Read more...

ரணிலை எவ்வாறு நியமித்தாரோ அவ்வாறே மஹிந்தவையும் நியமித்துள்ளாராம். டியு

2015ம் ஆண்டின் ஜனாதிபதியும் இவ்வாறே ரணில் விக்கிரமசிங்க அவர்களை நியமித்தார். அது போலவே இன்றைய ஜனாதிபதியும் அவ்வாறான செயற்பட்டையே மேற்கொண்டார் என இலங்கை கம்யூனிஷ் கட்சியின் பொதுச் செயலாளர் டி. யு. குணவர்தன தெரிவிததார்.

அன்று விவசாயி ஒருவரின் மகனான திமு. ஜயரத்ன அவர்களை அநீதியான முறையில் பதவி நீக்கும்போது அமைதி காத்த அனைவரும், இப்பொழுது கொந்தளிக்கின்றனர். அவர் கொன்சர்வேட்டிவ் உறுப்பினர் என்றதினலேய என்ற கேள்வியோடு இங்கு நிலவுவது வர்க்க முரண்பாடே எனக் கூறினார்.

19வது அரசியல் யாப்பு திருத்தத்தின் பிரகாரம் ஒரே நேரத்தில் இருவர் பதவி நியமனம் ஆனது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் படி உள்ளது எனவும் அதற்கு சவால் விடுக்க முயாது என அவர் தெரிவிததார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :
நம்பிக்கையிலா பிரேரனை கொண்டு வந்திருந்தால் ரணில் அன்றைய தினமே பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் பிரதமர்{க்கு இல்லை. அவர் மந்திமார்களுள் ஒருவர் மட்டுமே. இங்கு சிந்திக்க வேண்டியது என்னவென்றால் ரணில் விக்கிரம சிங்க இன்னும் உயர் நீதிமன்றத்திற்கு செல்லாதது ஏன் ? என்பதாகும்.

ஜே.ஆர் ஜயவர்தன தொடக்கம் மஹிந்த வரை எல்லா ஜனாதிபதியும் செய்த விடயங்களை தற்போதைய ஜனாதிபதி செய்ய மாட்டார் என நாம் நிச்சயமாக கூறமுடியாது.

மொலமூரே முதல் கருஜயசூரிய வரை இருந்த சபாநாயகர்களில் அநுர பண்டாரநாயக்க அவர்களுக்கு காணப்பட்ட தற்துணிவு யாருக்கும் இது வரை இல்லை எனக்கூறினார்.

Read more...

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்! ஹர்ச ட்வீற்

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சத்திய கூறுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினா் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளாா். அரசாங்கத்திற்கு 113 பெரும்பான்மை இன்மையால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக twitter ல் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு காரணத்திற்காக இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் வரும் 48 மணித்தியாலயத்தில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க வாய்ப்பு உண்டு என தெரிவிக்கப்படு கிறது என அவா குறிப்பிட்டுள்ளாா்.

Read more...

முரளிதரனை கோத்தபாய பாராட்டுகையில் அவன் ஒரு முட்டாள் என்கின்றார் மனோ கணேசன்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றனர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என கேள்வி எழுப்பியிருந்தார் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன்.

லண்டன் பிபிசி யின் சிங்கள சேவைக்கு நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து பிரத்தியேகமாக வழங்கிய பேட்டியொன்றில் மேற்கண்ட கேள்வியை எழுப்பிய அவர், நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை, மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கின்றனர் என்றும் முத்தையா முரளீதரன் தெரிவித்திருந்தார்.

முத்தையா முரளிதரனின் மேற்படி கருத்து பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களை உருவாக்கியுள்ள நிலையில், „முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்" என கோத்தபாய ராஜபக்ச தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளீதரனின் கருத்து அமைந்துள்ளது எனவும் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் குறித்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.

'மூன்று வேளை சாப்பாடு' என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.

Read more...

எதிர்கட்சிக் தலைவர் கதிரைக்கு என்னவாகும்?

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனே அவர்களின் வர்த்தமானி அறிவித்தலின்படி பிரதமர் உட்பட் அமைச்சர்களின் ஆசனங்களை ஒதுக்க சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் கட்சி தலைவைர்கள் முன்னிலையில் ஓத்துக் கொண்டதன் பின்னரே இத்தகையை சர்ச்சை கிளம்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எதிர் கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியே காணப்படும்.

அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சி எனும் அந்தஸ்த்தை இழந்து விடும்.

இவ்வாறான பின்னணியில்தான் புதிய பிரதமரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி தயக்கம் காட்டி வருகின்றனர் என தென்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com