Tuesday, May 17, 2016

புதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள். குமாரவடிவேல் குருபரன்

அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9 ஆம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ள பிடி இந்த தாமதத்தில் இருந்தும் பிரேரணைக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்களில் இருந்தும் நன்றாக தெரிகின்றது. அண்மையில் சனாதிபதி சிறீசேனவுக்கு நெருக்கமான ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்தவொரு ஆலோசகர் குறிப்பிட்டது போல சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்குள் ஒரு எதிர்கட்சியாக இயங்கி வருகின்றது. சுதந்திரக் கட்சி பிரேரித்த திருத்தங்களையும் மகிந்த சார்பு ‘பொது எதிரணி’யின் திருத்தங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி முன் வைத்த திருத்தங்களில் பிரதானமானது ‘தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வவைக் கண்டடைதல் அரசியலமைப்பு அவையின் நோக்கங்களில் ஒன்று என பிரேரணையின் முகவுரைப் பந்தியில் குறிப்பிட்ட வாசகம் நீக்கப்பட வேண்டும் என்பது. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு. சுமந்திரன் அவர்கள் இனப் பிரச்சனையை தீர்த்தல் தனது நோக்கங்களில் ஒன்று என வெளிப்படையாகக் குறிப்பிட்டு தொடங்கப்படுகின்ற முதலாவது அரசியலமைப்பாக்க முயற்சி என பிரேரணையை பாராட்டியிருந்தார். இம்முகவுரைப் பந்தியை மாற்றக் கூடாது என்று ஜனவரி 12, 2016 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். கூட்டமைப்பின் கோரிக்கையை விட சுதந்திரக் கட்சியினரை திருப்திப்படுத்துவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானதாக இருந்திருக்கின்றது. இனப்பிரச்சனை ஒன்று தீர்க்கப்பட வேண்டும் என்ற அடையாளப்படுத்தலை எதிர்ப்பது என்பது இனப்பிரச்சனை என்று ஒன்று இல்லை. இருந்தது ஒரு பயங்கரவாதப் பிரச்சனை தான் என்று சொல்வதற்கு ஒப்பானது. இதனை பகிரங்கமாகவே மகிந்த ராஜபக்ச போர் முடிந்த கையோடு பாராளுமன்றில் கூறினார் என்பது ஞாபகம் இருக்கலாம். ஜனவரி 9, 2016 அன்று பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்ட போது பாராளுமன்றில் உரையாற்றிய சனாதிபதி பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் கிழித்தெறியப்பட்டது தொடர்பில் வருத்தம் வெளியிட்டார். ஆனால் அவர் சார்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சியினராலேயே அரசியலமைப்பாக்க அவை தீர்மானத்தின் முகவுரை பந்தியில் ‘தேசிய பிரச்சனையை தீர்ப்பது புதிய அரசியலமைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டுள்ள வாசகங்கள் நீக்கப்பட வேண்டும் என்று மும் மொழியப்பட்டுள்ளமை அந்த உணர்வின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. இன்றைய சனாதிபதியின் கீழ் செயற்படும் சுதந்திரக் கட்சியினரும் கடந்த ஜனாதிபதியின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர். மாற்றம் பேச்சில் உள்ளது செயலில் இல்லை.

பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டது. புதிய அரசியலமைப்பில் என்னதான் இருக்கப் போகின்றது என்பதே இப்போதுள்ள கேள்வி. மக்கள் கருத்தறியும் குழுவின் நாடாளாவிய சுற்றுலாவை ஒரு சடங்காகவே பார்க்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் என்ன உள்ளடக்கப்படவுள்ளது என்பது மக்களின் கருத்துக்களால் வடிவம் பெறாது. புதிய அரசியலமைப்பின் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழித்தலும் பாராளுமன்ற முறையிலான ஒரு அரசாங்கமுறைக்கு இலங்கையை மீளக் கொண்டு வருவதும் புதியதோர் தேர்தல் முறையை கொண்டு வருவதும் என்றளவில் மட்டுபடுத்தப் படவிருக்கின்றது என்பது தென்னிலங்கை அரசியலில் இருந்து புலப்படும் செய்தி. 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலிற்கு முன்னர், 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முன் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாத 20ஆவது திருத்ததின் உள்ளடக்கம் தேர்தல் மறுசீரமைப்பை பற்றியது தான். அது தான் புதிய அரசியலமைப்பின் முக்கிய உள்ளடக்கமாக இருக்கப் போகின்றது.

இவ்விடயத்தில் சனாதிபதி சிறிசேன, அவர் சார்பு சிறீலங்கா சுதந்திரக் கட்சி பொது எதிரணி மூன்றினதும் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறை நீக்கப்பட்டால் தேர்தல் முறை மறுசீரமைப்பானது பாராளுமன்றத்தையும் அதன் மூலமாக பிரதமரையும் பலமான அதிகார மையமாக மாற்றும் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே. அதாவது விகிதாசாரப் பிரதிநித்துவ தேர்தல் முறை நீக்கப்பட்டு தொகுதி வாரி தேர்தல் முறை மேலோங்கும் ஓர் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவ்வாறான தொகுதி வாரி தேர்தல் முறைமையே தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் ஏதோவொரு கட்சிக்கு பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும். மத்தியையும் மத்தியின் தலைவரையும் பலமாக வைத்திருப்பது தான் சிங்கள பௌத்த அரசிற்கு பாதுகாப்பு என்பது சிங்கள பௌத்த அரசியலமைப்பு சிந்தனை பாரம்பரியத்தில் (ஜாதிக சிந்தனையில்) அதி முக்கியமானதாக கருதப்படுகின்றது. 1972 அரசியலமைப்பு பாராளுமன்ற முறையை ஒட்டியதாக இருந்த போதிலும் வழமையான பாராளுமன்ற முறைமைகளில் போன்றல்லாது அதியுயர் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்தமையும் அதன் மூலம் பிரதமர் சகல அதிகாரமுள்ளவராக இருந்தமையும் நினைவில் கொள்ளப் பட வேண்டியது. ஆகவே இங்கு நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையா பாராளுமன்ற முறையா என்பது முக்கியமல்ல. எந்த முறையானாலும் மத்தியில் நடுமையமான நிறுவனம் ஒன்றில் அதிகாரங்கள் குவிந்து இருக்க வேண்டும். இந்த மரபில் தான் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை முழுமையாக நீக்க வேண்டுமென்றால் பலமான மத்திய அரசாங்கத்தை தர வல்ல ஒரு தேர்தல் முறை ஒன்றை உறுதிப்படுத்த வேண்டுமெனசிங்கள பௌத்த அறிவுஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் அடிப்படையில் இதே மரபை சேர்ந்தவர்கள் தான். ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட ஆட்சி அதிகார நடைமுறை சித்தாந்தமும் நடுமையத்தில் அதிகாரக் குவிப்பை விரும்பும் ஒன்று என்று தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். நவதாராள முதலாளித்துவ உலக ஒழுங்கிற்குள் இலங்கையை அழைத்துச் செல்ல மத்தியில் அதிகாரக் குவிப்பு அவசியம் என்ற சிந்தனையில் பிறந்தது தான் ஐக்கிய தேசியக் கட்சியின் 1978 நிறைவேற்று அதிகார சனாதிபதி முறை. சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறை ஒழிப்பு பற்றி விவாதிக்கப்பட்ட போது நிறைவேற்று அதிகார பிரதமர் முறையை தான் ஆதரிப்பதாக ரணில் விக்கிரமசிங்க நிலைப்பாடு எடுத்திருந்தமை ஞாபகம் இருக்கலாம். கொழும்பில் உள்ள அவரது சிவில் சமூக நண்பர்கள் விகிதாசார பிரத்நித்துவ முறை மேலோங்கும் ஓர் கலப்பு தேர்தல் முறையை விரும்பினாலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி பிளவு பட்டு நிற்கும் இச்சூழலில் கூடுதலாக தொகுதி வாரி பிரதிநித்துவம் மேலோங்கும் ஓர் கலப்பு பொறிமுறையை ரணில் விக்கிரமசிங்கவும் விரும்பலாம். அது ஐக்கிய தேசியக் கட்சி அடுத்தவோர் தசாப்தத்திற்கு ஆட்சியில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளிக்கும் என ரணில் சிந்திக்கக் கூடும். ஆகவே தேர்தல் முறை மறுசீரமைப்பு, அரசாங்க முறை தெரிவு ஆகிய விடயங்களில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் பெரிய கொள்கை வித்தியாசங்கள் இல்லை. குறுங்கால அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் தோன்ற வாய்ப்புள்ளன.

இவற்றிற்கு மத்தியில் இரண்டு கட்சிகளுக்குமே இனப்பிரச்சனையை தீர்ப்பதை பற்றி உண்மையான அக்கறை காட்டப் போவதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரபல ஆங்கில வார இறுதிப் பத்திரிகை ஒன்று தனது அரசியல் பத்தியில் கூட்டமைப்பிடம் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க வேண்டாம் எனப் பிரதமர் தம்மிடம் கூறியதாக பிரதமரை மேற்கோள் காட்டியிருந்தது. 13ஆம் திருத்தத்தில் இருப்பவை தக்க வைத்துக் கொள்ளப்படும் என்றும் ஆளுநரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படாலம் என்றும் வடக்கு கிழக்கு இணைப்பு நிச்சயம் சாத்தியமில்ல என்றும் தான் கூட்டமைப்பிற்கு சொல்லி விட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால் தொடர்ந்து சர்வதேச சமூகத்திற்கு ரணிலும் அவரது வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவும் புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று சொல்வதன் சூட்சுமம் என்ன? ஒன்றும் பெரிதாக கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் கூட்டமைப்பும் இச்செயன்முறையில் நம்பிக்கை வைக்குமாறு தமிழ் மக்களை தொடர்ந்து கோருவது எதற்காக?

ரணில், மங்களவை பொறுத்த வரையில் அரசியல் தீர்வு ஒன்று கொடுத்தாகி விட்டது என்பது தான் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான சிறந்த வழி. அரசியல் தீர்வு கிடைத்து விட்டால் பொறுப்புக் கூறலை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்கிய பின்னும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தினால் அரசியல் தீர்வு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சமாதானம் பாதிக்கப்படலாம் என வாதிடுவது தான் சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் திட்டம். இந்த வாதத்தை அண்மையில் சனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இயங்கும், சந்திரிக்கா அம்மையாரால் தலைமை தாங்கப்படும் மீளிணக்கத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கான நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ராம் மாணிக்கலிங்கம் சர்வதேச இணையத்தளம் ஒன்றிற்கு எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியல் தீர்வையும் பொறுப்புக் கூறலையும் பேரம் பேசும் பொருட்களாக மாற்றுவதில் உள்ள அசிங்கத்திற்கு அப்பால் நேர்மையான பேரம் பேசுதலாக அமையக் கூட இங்கு வாய்ப்பில்லை. அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக தமது கட்சியின் சிங்கள பௌத்த வாக்களர்களை அந்நியப்படுத்த ரணிலுக்கோ மங்களவுக்கோ சிறிசேனவுக்கோ துளியளவும் விருப்பமில்லை. அதன் காரணமாக தான் கடந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளிலும் புதிய அரசியலமைப்புக்கான கருத்தறியும் குழுவிற்கு முன் தோன்றிய தமிழ் மக்களின் சமர்ப்பணங்களிலும் மிகத் தெளிவாக சமஷ்டிக் கோரிக்கை மீள வலியுறுத்தப் பட்டுள்ள போதிலும் தென்னிலங்கை கட்சிகள் ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என மீள மீள வலியுறுத்துகின்றனர். இங்கு அடிப்படையில் மீளிணக்கம் செய்யப்பட முடியாத நிலைப்பாடுகளை சிங்களத் தரப்பும் தமிழ்த் தரப்பும் எடுத்துள்ளன. இந்தப் பிரச்சனைக்கான தீர்வு ஒற்றையாட்சியோ சமஷ்டியோ என்று அடையாளப்படுத்தாத ஒரு அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் எட்டப்படலாம் என்று மங்கள சமரவீரவும் திரு. சுமந்திரனும் உலகத் தமிழர் பேரவையும் அவர்களது சக பிரயாணிகளும் சிங்கப்பூரில் கடத்த வருடம் நடத்திய கூட்டமொன்றில் பேசி தீர்த்ததாக சொல்லப்படுகின்றது. ஒன்றை ஒன்றன் பெயரால் அழைக்காமல் விடுவதன் மூலம் அது அதுவாகி விட முடியாது என்று கூறுவது அறிவுடமையாகாது. போண்டாவை போண்டா என்றோ வாய்ப்பனை வாய்ப்பன் என்றோ அழைக்காமல் விட்டால் போண்டா போண்டாவாக இல்லமால் போகாது; வாய்ப்பன் வாய்ப்பன் என்றோ இல்லமால் போகாது. நிற்க.

இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்களிடம் இந்த இல்லாத அரசியல் தீர்வை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளச் செய்ய திட்டம் ஒன்று உள்ளது. அரசியலமைப்பு அவையில் 2/3 பெரும்பான்மை, பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தேவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக தமிழ் மக்களின் பெரும்பான்மையினரின் வாக்குகள் அரசியல் தீர்வு எயதப்பட்டு விட்டது எனக் காட்டுவதற்கு அவசியமானது. பாராளுமன்ற முறையின் கீழ் மாகாண முறைமை/ அதிகாரப் பரவலாக்கம் நன்றாக வேலை செய்யும் வாய்ப்புள்ளது, ஆளுநரின் அதிகாரம் சிலது குறைக்கப்படுதல் நன்மையே, இது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி என்று சொல்லி தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்டு 2016இல் தீர்வு தருவோம் என வாக்குறுதி தந்த எமது பிரதிநிதிகளே எம்மிடம் வருவார்கள். இவை எவையும் மக்களிடம் எடுபடா விட்டால் புதிய அரசியலமைப்பை மகிந்த ராஜபக்ச தரப்பு எதிர்க்கிறது ஆகவே தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள அக்காரணம் ஒன்றே போதும் என்று வாதிடப்படும். எப்படி மைத்ரிப்பால சிறிசேனவை கடந்த சனாதிபதித் தேர்தலின் போது விமர்சித்தவர்களை மகிந்த ஆதரவாளர்களாக காட்ட முயற்சிக்கப்பட்டதோ புதிய அரசியலமைப்பு தீர்வாகாது என்று கூறுபவர்களை மகிந்த ஆதரவாளர்களாக காட்ட முயற்சிக்கப்படும். மகிந்த எதிர்ப்பையே போருக்கு பிந்திய தமிழ்த் தேர்தல் அரசியலின் பிரதான முதலீடாக இருப்பதால் இந்த உத்தி வேலை செய்வதற்கான வாய்ப்பு உண்டு. இது நடந்தால் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள் ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக் கொனடதாகவும் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கத்தால் பரப்புரை செய்யப்படும். அத்தோடு பொறுப்புக் கூறல் செயன்முறையையும் மெல்ல மூடி விடுவார்கள். இந்த அணுகுமுறைக்கு இந்தியாவும் அமெரிக்காவினதும் பூரணஆதரவு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. இந்த அணுகுமுறைக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் அல்லது இருக்கக் கூடியவர்களது அரசியலை தமிழ் தீவிரவாத அரசியலாக அடையாளப்படுத்தி அவர்களை ஒதுக்கும் வேலைத்திட்டம் இந்த இடைஞ்சலை களையும் எண்ணத்தில் வெகு தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் முறியடிக்கப் பட வேண்டுமென்றால் தமிழ் மக்கள் மத்தியில் இவ்விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திறந்த விவாதக் களங்கள் உருவாக்கப் பட வேண்டும். இக்களங்கள் கட்சி அரசியலைத் தாண்டி ஒரு வெகுசன மக்கள் அணிதிரள் அரசியலை உருவாக்குவதற்கான வெளியை உண்டு பண்ண வேண்டும்.

(13 மார்ச் 2016 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை )

Read more...

Monday, May 16, 2016

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...

இன்றைய காலவோட்டத்துள் இசைந்த நம்மைக் கடந்தவொரு தலைமுறையைப் பார்க்கிறோம். அஃது, புலத்துள் மிக இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். தமிழ் மொழிசார்ந்த வாழ்வு இனியெப்படியிருக்கும் என்பதைத் தமிழகத்துக் கலை வடிவங்களிலிருந்து கணித்துவிடவும் முடியும். அவை, கட்டியமைக்கும் போலிப் பிரமாண்டகள், வர்ணங்கள் , மனிதர்கள் யாவும் நமக்கு அந்நியப்பட்டவர்கள். ஆனால் , புலத்தின் இரண்டாம் தலைமுறைக்கேற்ற மாதிரி மனிதர்கள் அவர்கள்.

இன்று, கனேடியத் தமிழர்களைக் குறித்து நோக்குவோமானால் அவர்கள் இந்தப் பிரமாண்டங்களது சாட்சியான போலி மனிதர்களாக வாழ்வதும் , நுகர்வதும் - அதைத் தேடுவதிலும் , திணிப்பதிலும் கோடம்பாக்கப் போலிப் பிரமாண்டத்துக்கு நிகராய் நகர்வது கண்கூடு!

தமிழ் வாழ்வு , அவ் மொழிசார்ந்த வாழ்வு எவருக்கு ? "தமிழ் இன" விடுதலை , தேசம் என்பதெல்லாம் எவருக்கானது?

புலத்து வாழ்வானது அந்தத்தத் தேசத்து மொழிகளோடு சங்கமித்த பின் நினைவுக் கோலமாக "மாதிரி மனிதர்களை" உருவாக்கி வைப்பதற்கும் , சடங்குகள் செய்வதற்கும் கோடம்பாக்கப் பிரமாண்ட மாதிரிகள் மிகப் பெரும் கருத்தியல் மனதை புலத்து மனிதர்களுக்கு ஏற்படுத்தி விட்டது.

எனக்குத் தெரிந்தவொரு பெண்மணி கூறினார் : தற்போது, ஒரு விழாவுக்கு வேண்டிய புதிய சாறியை ஒரு முறை அணிந்துவிட்டு நாம் அதை எறிந்து விடுவோம். அடுத்த முறை, அதைக் கட்ட முடியாது. புதிய டிசையின் வரும். அதைத்தாம் கட்ட வேண்டும். " எனக்கு, இது முற்றிலும் புதிய விடையமாத் தெரிந்தது. பின்புதாம் நம் போலிப் பிரமாண்டத்தின் கோடம்பாக்கச் சூழ்ச்சி புரிந்தது. இதுதாம் இன்றைய யதார்த்தம்.

போராட்டம் , விடுதலை என்பதெல்லாம் வந்தடைந்த கோலமும் இப்படித்தாம் பிழைப்புவாதமாச்சு.

"தமிழீழ விடுதலை" சொல்லி , இலட்சக் கணக்கான பிணங்களாக மக்களை ஆக்கிவைத்து நிதி சேகரித்தவர்கள் எல்லோரும் தற்போது புலத்தில் பெரும் வணிகக் குடும்பங்களாக வலம் வருகிறார்கள். பிரமாண்ட மனிதர்களாகத் தம்மை உருவாக்கி வைத்து, நம்மை மனோவியல் ரீதியாகத் தாக்கி அழிக்கின்றார்கள்! தமக்கு முன் நம்மைச் செல்லாக் காசாக்கியும் விட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் , ஒரு தோற்பையோடு விமானம் ஏறி, அகதியாகப் பிழைக்கப்பட்ட வாழ்வு மக்களிடம் கொள்ளையிட்ட பணத்தின் மூலம் தொடைத்தெறியப்பட்டுப் பிரமாண்ட போலி மனிதர்களை -தனிநபர்வாத உச்சக் கொம்பர்களை ; கொம்பிகளை உருவாக்கியதுள் தமிழீழவிடுதலைப் போராட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது.அதையொட்டி இன்றைய இரண்டாந் தலைமுறை மகிழ்ந்துவிடலாம்!
அவர்கள் , கனடாவில் வைத்தியக்கும் நிதியானது மட்டும் பல இலட்சம் கோடி அமெரிக்க டொலாராக இருக்கிறது.

இவையெல்லாம் அப்பாவிகளிடம் "தமிழீழ விடுதலை" சொல்லித் தட்டிப்பறித்தவை என்பதுள் சந்தேகமில்லை!

இவர்களது விளம்பரப் பிரமாண்டங்கள் உருவாக்கும் கருத்தியலும் ( Tamil Entertainment Television (TET) )அதுசார்ந்த மனித மாதிரிகளும் மிக அற்பத்தனமான மனிதர்களை நமக்குள் உலாவிட்டுள்ளது.

"போராட்டம் -விடுதலை " என்பதெல்லாம் இந்த மனித மாதிரிகளுக்கு அவசியமற்றது. இவர்களது நாவில் போலித்தனமாக உறவாடும் இந்தக் கோசங்களைக் கடந்து, நிலத்தில் மனிதர்கள் இலங்கைத் தேசத்தின் வாழ்வுக்குள் நுழைந்தே தீருவார்கள்.

அவர்கள் , இலங்கையின் இறைமைக்குட்பட்ட வாழ்வையும் , அத்தேசத்துக்குள் பொருண்மிய வாழ்வுக்கானவொரு பொது மொழியாகச் சிங்களத்தையும் பேசித் தம்மை இலங்கையராக்கியே தீருவார்கள். இதுதாம் 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத் தேவையும் கூட.

பேர்லின் (Berlin) கணேச மூர்த்தி அவர்கள் கூறியமாதிரி :" இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் குடியேறிகளாகச் சென்ற தமிழ்தேசியவாதிகள் ,அந்த நாட்டுப் "பிரசைகளாக" ஆகிவிட்ட கொழுப்பெடுத்த யாழ்.மத்தியதர வர்க்கத் தமிழர்கள் , சோத்துக்கு வழி தேடக் கிழக்கில் குடியேறிய ஏழைச் சிங்கள மக்களை தமிழர்களின் நிலத்தைப் பறிக்க வந்தவர்களாகக் கற்பித்தனர். புகலிடத் தமிழர்கள் தாம் குடியேறிய நாடுகளில் ஐரோப்பியர், ஆபிரிக்கர், ஆசியர், லத்தீன் அமெரிக்கர் என்று உலகெல்லாம் உள்ள முன் பின் கேட்டுக் கண்டறியாத மக்களுடன் எல்லாம் வாழ்வார்கள். பல்லினக் கலாச்சாரத்துக்கு ஆட்படுவார்கள் ஆனால் , இலங்கையுள் சொந்த நாட்டுக்குள் மட்டும் சிங்களவர்களுடன் வாழ மறுக்கின்றார்கள். தொட்டால் , பட்டால் தீட்டு என்கிறார்கள். இந்த அநாகரீகர்களை மனித நாகரீகம் திருத்தியெடுக்க இன்னமும் எத்தனை சகாப்தங்கள் தேவை? ; "நாம் இலங்கையர் " என்று சிந்திப்பது என்ன , அத்தனை பெரிய துரோகமா? தமிழர், முஸ்லிம், சிங்களவர், பறங்கியர், வேடர் என்று எல்லா மக்களும் இலங்கையர் என்ற கூட்டுள் ஐக்கியப்படாமல் எப்படி சோசலிசம் வரும்? "

நிலத்து மக்கள் இலங்கைத் தேசியவின உருவாக்கத்துக் கேற்ப வாழ்வைத் தெரிவார்கள் -இனிப் போராட்டம் , விடுதலை என்பது இலங்கையில் தொழிலாளரது உரிமை சார்ந்த பொருளாதார வாதமாகவே இருக்கும்.
தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye சொல்லிச் சிங்களச் சமுதாயத்தோடு கலந்து -இசைந்து ,இணைந்து இலங்கைத் தேசிய இனமாகவும் , பொதுமொழியான சிங்களத்தை முதன்மை மொழியாகவும் ஏற்றுக் கொள்வர். இது. ஒரு வகையில் சரியானதும் , நேர்மையானதும் -அவசியமானதுங்கூட இந்தப் புலத்துத் "தமிழர்கள்" தம் போலிப் பிரமாண்டத்தின் முன்!

ப.வி.ஶ்ரீரங்கன்
16.05.2016


Read more...

Thursday, May 12, 2016

இலங்கை அரசாங்கம் IMF ன் சிக்கன கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்குகிறது. By Saman Gunadasa

சர்வதேச நாணய நிதியம் (IMF), கடந்த வாரம் 1.5 பில்லியன் டாலர் பிணையெடுப்பு கடன் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்தது. நாட்டின் ஆபத்தான அந்நிய செலாவணி நெருக்கடியை தடுப்பதற்காக மூன்று ஆண்டுகள் நீடிக்கப்பட்ட நிதிவசதி கடனைப் பெற கொழும்பு முயற்சித்திருந்தது.

ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழு ஒப்புதல் தர வேண்டிய இந்த உடன்படிக்கை, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் பிரதான சமூக சிக்கன வெட்டுக்களுக்கு கீழ்ப்பட்டதாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குழுவின் தலைவர் டாட் ஸ்னைடர், ஊடகங்களுக்கு கூறும் போது, இந்த உடன்படிக்கை "முன் நடவடிக்கைகளை நிறைவு செய்வதுடன்" பினைந்துள்ளது, என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், சர்வதேச நாணய நிதியத்தின் ஜூன் கூட்டத்திற்கு முன்னதாக வங்கியின் கோரிக்கைகளை செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே கொழும்புக்கு கடன் கிடைக்கும்.

உத்தியோகபூர்வ சர்வதேச நாணய நிதிய ஒப்புதல், "ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன்களில் மேலதிகமாக 650 மில்லியன் டாலர் கடனை கிடைக்கச் செய்யும், இதன் மூலம் சுமார் 2.2 பில்லியன் டாலர்கள் மொத்த உதவி (நடப்பில் உள்ள நிதி ஏற்பாடுகளுக்கு மேலாகவும் அதிகமாகவும்) கிடைக்கும் என்று ஸ்னைடர் கூறினார். "ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு கடன்கள்” உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கையின் உடனடி அந்நிய செலாவணி நெருக்கடி அபாயத்தை எளிதாக்கினாலும் கூட, நாட்டின் B+/ எதிர்மறை தரமிடலில் மாற்றம் இருக்காது என்றும் ஃபிட்ச் தரமிடல் முகவரமைப்பு செவ்வாயன்று எச்சரித்திருந்தது. "வெளி மற்றும் பொது நிதி நடவடிக்கைகளில் நிலவும் நீண்டகால பலவீனங்களை அகற்றுவதற்கு" அரசாங்கத்தின் பக்கம் "நீடித்த அர்ப்பணிப்பு" அவசியப்படுகின்றது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளைப் பற்றி கலந்துரையாட கடந்த மாதம் வாஷிங்டன் சென்ற பிரதிநிதிகளுக்கு தலைமை வகித்தனர். இந்த நடவடிக்கைகளில், பெறுமதி சேர் வரி (VAT); ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை துரிதமாக தனியார்மயப்படுத்துவது உட்பட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்துவது; மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை சந்தையை நிர்ணயிக்க விடுவது; மற்றும் ஒரு நெகிழ்வான நாணய மாற்று விகிதத்தை பராமரிப்பதும் அடங்கும்.

கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.4 சதவீதத்தை எட்டிய வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை அரசாங்கம் கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கை ஆகும். அது இந்த ஆண்டு 5.4 சதவீதமாகவும் 2020ம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும் குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.

திங்களன்று அரசாங்கம் பெறுமதி சேர் வரியை (வாட்) 11ல் இருந்து 15 சதவீதம் வரை அதிகரித்த அதே வேளை மின்சாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற சேவைகளுக்கும் அரிசி, பாண், கோதுமை மா, பால், மசாலா மற்றும் மருந்துகளுக்கும் இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது. எனினும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளதும் அதிக விலை உயர்வு, விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைவாசியையும் உயர்த்தும். பெறுமதி சேர் வரியானது தனியார் கல்வி மற்றும் தனியார் மருத்துவ பராமரிப்பின் மீது சுமத்தப்படுவதானது, இலங்கையின் ஏற்கனவே சீரழிந்து தொங்கிப்போயுள்ள சுகாதாரம் மற்றும் கல்வி முறை மீது மேலும் அழுத்தத்தை திணிக்கும்.

அரசாங்கம் 2 சதவீத தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் மசகு எண்ணெய்க்கும் விதிக்கப்படும். பெறுமதி சேர் வரி மற்றும் இதர வரிகளும் அரசாங்க வருவாயை 100 பில்லியன் ரூபாய்கள் (685.6 மில்லியன் டாலர்கள்) வரை அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் கருணாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கொழும்பில் வெளிவரும் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய ஆய்வு குறிப்பிட்டுள்ளதாவது: "தொலைபேசி, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு மேலாக, பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்பதையும் கணக்கில் எடுத்தால், ஒரு சராசரி குறைந்த வருமானம் பெறும் அல்லது மத்தியதர வர்க்க குடும்பத்திற்கு [மாதத்திற்கு] 10,000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அதிகமாக செலவிட நேரும்."

ஞாயிறன்று தனது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் "தனியார் மயமாக்கப்படாமல் இலாபம் தரும்" ஸ்தாபனங்களாக ஆக்கப்படும் என்று அறிவித்தார்.

அரச வங்கிகள் உட்பட இந்த நிறுவனங்கள், ஒரு “பொது சொத்து நம்பிக்கையின்” கீழ் கொண்டுவரப்பட்டு "மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும்" என்று அவர் கூறிக்கொண்டார். விக்கிரமசிங்கவின் "மக்களுக்கே சொந்தமானது" என்ற கூற்று, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மூடிமறைப்பதற்கான மற்றொரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

சில காலம் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் டாமாசெக் (Tamasek) மாதிரி என்று அழைக்கப்படுவதை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை நிர்வகிக்க பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். டாமாசெக் ஹோல்டிங் லிமிடெட், அரச நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் அவற்றை வணிக அடிப்படையில் இயக்குவதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.

பிரமாண்டமான கடன் சுமை மற்றும் வளரும் அந்நிய செலாவனி நெருக்கடியின் கீழேயே கொழும்பு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற முயன்றது. திருப்பி செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்கள் இந்த ஆண்டு 4.56 பில்லியன் டாலர்களாக அதிகரித்ததுடன் கடந்த ஆண்டு அந்நிய செலாவணி பற்றாக்குறை 1.5 பில்லியன் டாலர்களை அடைந்ததோடு 2015ல் வெளிநாட்டுக் கடன்கள் 44.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன. வெளிநாட்டு நாணய இருப்பு, ஜனவரி முதல் 1 பில்லியன் டாலர் கீழிறங்கி 6.3 பில்லியன்களுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

வெளிநாட்டு இருப்புக்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை குறைத்துவிட்ட உக்கிரமடைந்து வரும் உலக பொருளாதார பின்னடைவே ஆகும். ஒரு மில்லியனாக மதிப்பிடப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் வருமானம், மத்திய கிழக்கில் பெருகி வரும் போர் நிலைமை காரணமாக தொடர்ந்து வீழ்ச்சியடைகின்றது. இந்த வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு உயர்ந்த அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டித் தருபவையாக உள்ளன.

மத்திய வங்கியின் சமீபத்தில் வெளியான ஆண்டு அறிக்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2014ல் 4.9 சதவீதமாக இருந்து கடந்த ஆண்டு 4.8 சதவிகிதமாக குறைந்துவிட்டதை காட்டுகிறது. மூலதன பொருளாதாரம் ஆய்வாளர் கிறிஸ்டல் டான், அது இந்த ஆண்டு சுமார் 4.5 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று முன்கணித்துள்ளனர். இந்த "வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் மந்தகதியாகும் வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறினார்.

இலங்கையின் பெரும் வர்த்தகர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு பற்றி களிப்படைந்துள்ளனர். உத்தியோகபூர்வ அறிவிப்பால் கொழும்பு பங்குச் சந்தை 1 சதவீதம் எழுச்சி கண்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அரசாங்க அமைச்சர்கள், கடன் நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இராஜபக்ஷ போன்ற, தற்போதைய அரசாங்கமும் பெருகிவரும் வெளிநாட்டு கடன்கள் சிலவற்றை செலுத்த, கடந்த ஆண்டு நாணய பேரம்பேசல் மூலமும் அரசு இறைமை முறிகளை விற்றும் 6 பில்லியன் டாலர்களை கைமாற்றாகப் பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டில், இராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்த போது, அவரது அரசாங்கம் அந்திய செலாவணி நெருக்கடியை தடுப்பதற்காக 2.6 பில்லியன் டாலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனாகப் பெற்றது. சர்வதேச நாணய நிதியம் கடும் தாக்குதல்களை கோரியது. இதனால் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வை இராஜபக்ஷ முடக்கி வைத்ததோடு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது வரிகளை திணித்தார்.

2015 ஜனவரியில் பதவிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேன, வாஷிங்டன் ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை அடுத்து, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் ஜனநாயக உரிமைகளை மீண்டும் ஸ்தாபிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்து, இராஜபக்ஷவுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொண்டார்.

ஆட்சிக்கு வந்து 16 மாதங்களுக்குள், சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களின் பரந்த தட்டினரின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீது முன்னெப்போதும் இல்லாதளவு தாக்குதலை கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளது. இந்த சமூக தாக்குதல்கள், தொழிலாள வர்க்கப் போராட்டங்களும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பும் வெடிப்பதை காணும்.

Read more...

Wednesday, May 11, 2016

வடக்கிலுள்ள விதவைகளின் சோகக்கதை - டிலிஷா அபேசுந்தர

யுத்த விதவைகள்

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் முல்லைத்தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள war widowsநந்திக்கடலேரியில் உள்ள தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நாங்கள் செல்வராஜியின் இருப்பிடத்துக்குச் சென்றோம். அலங்கோலமான நிலையில் இருந்த அவரது சிறிய வீட்டின் சுவர்களினூடாக, ஒரு சோகமான கடந்தகாலத்தின் இருண்ட நிழல்களை முற்றாக காணக்கூடியதாக இருந்தது. “போரின் உச்சக்கட்டத்தின்போது ஒரு ஷெல் தாக்குதலில் எனது கணவரும் மற்றும் எனது பிள்ளைகளில் மூவரும் கொல்லப்பட்டார்கள். இப்போது மீதமாக உள்ள மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் எனது வாழ்க்கையை கொண்டு நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன.” என்று செல்வராஜி தெரிவித்தாள்.

தனது மூன்று பிள்ளைகளுடன் முல்லைத்தீவு, கோப்புலவில் வாழும் 47 வயதான செல்வராஜி (உண்மைப் பெயரல்ல) போர் முடிவடைந்ததின் பின்னர் இரண்டரை வருடங்களுக்கு மேலாக உள்ளக இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களிலேயே (ஐ.டி.பி) வாழ்ந்துள்ளாள். போரின்போது அவளது கணவர் வலியமுள்ளிவாய்க்காலில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் பதுங்கு குழிகளுக்குள் இனிப்பு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினார். துரதிருஷ்டவசமாக 29 மே 2009ல் அவளது கணவருடன் சேர்ந்து மூன்று பிள்ளைகளும் ஒரு ஷெல் தாக்குதலில் அழிந்துபோனார்கள். அந்த தாக்குதலில் உயிர்பிழைத்த மற்ற இரண்டு பிள்ளைகளும் அங்கவீனர்களாகி விட்டார்கள். தற்போது செல்வராஜி இந்த இரண்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுடனும் மற்றும் இன்னொரு பிள்ளையுடனும் சேர்ந்து வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளாள். இந்த சுமையான வாழ்க்கையும் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வரப்போவதில்லை.

“எனது பிள்ளைகளில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது. மீன்பிடித் தொழிலின் மூலம் அவன் சிறிது பணம் சம்பாதிக்கிறான். அவனது உழைப்பிலேயே எங்களது முழுக் குடும்பமும் தங்கியுள்ளது. அவன்கூட தனது வேலையை அதற்கான எந்தவித வசதியும் இல்லாமலே செய்து வருகிறான். அரசாங்கம் எங்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குவதாக வாக்களித்துள்ள போதிலும் இதுவரை எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. விசேட தேவையுடைய எனது பிள்ளைகளால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னால் அவர்களை எங்கும் அனுப்பவும் முடியாது. ஒரு இடைநிறுத்தலும் இல்லாமல் செல்வராஜி தனது சோகத்தை கொட்டித் தீர்த்தாள்.

“வாழ்வதற்கு எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. பிள்ளைகளுக்கு மருந்து வாங்க எங்களுக்கு பணம் அவசியமாக உள்ளது. முன்னர் இராணுவம் அவர்களுக்கான சிகிச்சையை வழங்கியது. கிராமத்தவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்து நானும் கூட சிறிதளவு பணம் சம்பாதிக்கிறேன். எங்களை வறுமை வாட்டுவதால் அதைக்கொண்டு தொடர்ந்து வாழ்வதுகூட கடினமாக உள்ளது.”

இந்த அவலநிலை முல்லைத்தீவுக்கு மட்டும் என்று வரையறுக்கப் படவில்லை. பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களால் நடத்தப்பட்ட புலனாய்வில் கிட்டத்தட்ட 40,000 – 60,000 வரையான பெண்கள் வடக்கில் விதவைகளாக மாறியுள்ளார்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 50,000 குடும்பங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துவதாக தெரியவந்துள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் 2012 – 13 குடும்ப பிரிவு வருமானம் மற்றும் செலவு அறிக்கையின்படி, பெரும்பான்மையான பெண்கள் தலைமையிலான குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்கள் 49 – 50 வயதைச் சேர்ந்த குழுவினராக உள்ளார்கள். அவர்களில் பாதிப்பேர் விதவைகள்.

30 வருட யுத்தம் வடக்கிலுள்ள விதவைகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. “யுத்தம் முடிவுற்றதின் பின்னரும் யுத்த விதவைகளின் பிரச்சினை ஒரு தீவிரமான விடயமாகிவிட்டது. இப்போதுதான் அதன் உண்மையான தாக்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. பொருளாதார ரீதியில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்” இவ்வாறு சொன்னார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. எம். மோகன்தாஸ். இதில் nரும் பிரச்சினையாக இருப்பது இந்தப் பெண்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கான போதிய வழிகள் இல்லாமலிருப்பதுதான். யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு சில உட்கட்டமைப்பு முன்னேற்றங்களுக்கு சாட்சியாக இருந்தபோதும், அது செல்வராஜியைப் போல வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. “போரின்போதுகூட எங்களுக்கு வேலைக்கான எந்த வழியும் கிடைக்கவில்லை. அதனால்தான் எனது கணவர் இனிப்பு விற்க முயற்சித்தார். இப்போது கூட பணம் சம்பாதிப்பதற்கு சாதகமாக எந்த நிலையும் இல்லை. அயலவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பதின் மூலமே என்னால் சிறிதளவு பணம் தேட இயலுமாக உள்ளது” என செல்வராஜி சொன்னார். அதேபோல வடக்கிலுள்ள பெண்களின் மத்தியிலுள்ள வேலையில்லா பிரச்சினையை மோகன்தாஸ் அவர்களும் கூட உறுதிப் படுத்தினார்.

விதவைகளுக்கான அரசாங்கத்தின் உதவி போதுமானதா?

2014 அரசாங்க புள்ளிவிபரங்களின்படி ஸ்ரீலங்காவிலுள்ள பெண்களின் மத்தியில் வேலையின்மை 65 விகிதமாக உள்ளது. பெரும்பான்மையான பெண்கள் வேலையற்று இருக்கும் முதல் நான்கு மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே முன்னிலை வகிக்கின்றன. தற்சமயம் இங்குள்ள யுத்த விதவைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான ஒரு திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு யுத்த விதவைகளுக்கு சுய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 5.43 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 181 குடும்பங்களுக்;கு மாதாந்த உதவித் தொகையாக ரூபா 30,000 கிடைக்கக்கூடும். மேலும் யாழ்ப்பாணத்தில் 54,000 குடும்பங்கள் சமுர்த்தி நலன்களை பெற்று வருகின்றன. எனினும் எத்தனை யுத்த விதவைகள் சமுர்த்தி உதவிகளைப் பெறுகிறார்கள் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக அலுவலகத்தில் உள்ள சமுர்த்தி அதிகாரியிடம் விசாரித்தபோது, அந்த எண்ணிக்கை தனக்குத் தெரியாது என அவர் சொன்னார். இதற்கு அப்பால் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்கும் ஒரு திட்டத்தையுமகூட ஆரம்பித்துள்ளது.

எனினும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியது, இந்த திட்டம் யுத்த விதவைகளில் கவனம் செலுத்தப்பட்டதைப் போன்ற ஒன்று அல்ல, மற்றும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்” என்கிற பிரிவின் கீழ் எந்த வகையான குடும்பங்களை அனுமதிப்பது என்று அரசாங்க அதிகாரிகள் மத்தியில் ஒரு தெளிவான யோசனை இல்லாமலுள்ளது என்று.

கையில் போதுமான நிதி இருந்தும் அதிகாரிகள் தேவையானவர்களுக்கு அதை வழங்காமல் உள்ளார்கள். அவர்கள் ஏன் நிதியை கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று வினாவியபோது, பல்வேறு தேவைகள் உள்ள குழுக்களை அவர்கள் இன்னமும் அடையாளம் காணவில்லை என அவர்கள் தெரிவித்தார்கள். எப்படி அவர்கள் பணத்தை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று கேட்டபோது, குடும்பங்கள் தனிப்பட்ட முறையில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

அப்போது அவர்களிடம்; மக்கள் ஒருபோதும் அப்படியானவற்றை செய்ய மாட்டார்கள் என அவர்களுக்கு நான் விளக்கினேன்” என விக்னேஸ்வரன் சொன்னார். தான் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தேவையுள்ள குடும்பங்களை கண்டறிவதற்காக களப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதாகச் சொன்னதுடன் அவர் மேலும் தெரிவித்தது, இந்த உதவித் தொகையை 6,000 ருபாவாக அதிகரிக்கும்படி தான் முன்வைத்த கோரிக்கைக்கு பிரதம மந்திரி கூட செவிமடுத்துள்ளார் என்று. “ஒருங்கிணைந்த நிதியிலிருந்து எங்களுக்கு கிடைத்துள்ள 6 மில்லியன் ரூபா நிதியையும் யுத்த விதவைகளின் நலன்களுக்காக ஒதுக்கத் தீர்மானித்துள்ளோம். சமீப காலம்வரை வட மாகாண சபையில் பெண்கள் விவகாரங்களுக்காக ஒரு அமைச்சு இருக்கவில்லை. இப்போது நாங்கள் அப்படியான ஒரு அமைச்சை உருவாக்கி உள்ளோம். இதற்காக அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எந்த நிதியையும் பெறவில்லை. சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து இதற்கான நிதியை கோரியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவிக்கும்போது வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே சொன்னது, அரசாங்கமும் மற்றும் சர்வதேச நிறுவனங்களும் வடக்கை மீள் கட்டுமானம் செய்வதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டுள்ள போதிலும், அதனால் இன்னமும் போரினால் எற்பட்ட வடுக்களை குணமாக்க முடியவில்லை என்று. “வடக்கிலுள்ள யுத்த விதவைகளின் பிரச்சினையில் இரண்டு பிரதான காரணங்கள் நிலமையை மோசமாக்கி வருகின்றன. முதலாவது இந்த பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை விகிதத்தில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக உள்ளது. யுத்தத்தில் ஏராளமான உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளதால், நிலமை இன்னும் மோசமடைந்துள்ளது.

இரண்டாவது காரணம் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வருமானம் தேடவேண்டிய war-widowsஅதேவேளை பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுதல், கல்வி கற்பித்தல் போன்ற மேலதிக சுமைகளும் விதவைகள் மீது விழுந்துள்ளன. இந்தக் காரணங்கள் பெண்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என ஆளுனர் தெரிவித்தார். இதற்கிடையில் யுத்த விதவைகளுக்கான தேசிய குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி சாந்தா அபிமன்னசிங்கம், சுட்டிக்காட்டுவது, யுத்த விதவைகளின் நலன்களுக்காக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஆரம்பித்துள்ள சிறிய அளவிலான திட்டங்கள், அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்க போதுமானதாக இல்லை என்று. “எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியின்போது இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க மற்றும் ஏனைய கைவிடப்பட்ட நிலங்களில் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலான நிலங்கள் இராணுவம் மற்றும் அதேபோல நீண்ட காலங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த உரிமையாளர்கள் கைகளுக்கு சென்றது முதல், அவர்களின் வாழும்வழி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் தங்கள் வீடுகளைக்கூட இழந்து விட்டார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இன்னும் உயர்வடைந்துள்ளதால், அவர்கள் உயிர்வாழ்வதற்கு பல சிரமங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இது அவர்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை தடுத்துள்ளது. புத்தகங்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவை அவர்களால் கொடுக்க இயலாமல் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கல்வி அறிவற்ற இளைஞர்கள் ஆபத்தான வழிகளில் விழுந்துவிடுவதற்கான ஒரு ஆபத்து ஏற்படுகிறது” என்று அபிமன்னசிங்கம் சொன்னார்.

தற்போது ஒரு பெண் தனியாக சமூகத்தில் வாழ்வது நடுக்கடலில் தவிக்க விடப்பட்டதை போன்ற ஒரு நிலை. விசேடமாக தனது குடும்பத்தை காப்பாற்றும் சுமையை எற்றுக்கொண்டுள்ள பெண்கள் நாதியற்றவர்களாக விடப்பட்டுள்ளார்கள், அநேகமாக அக்கிரமக்காரர்களுக்கு இலகுவான இரையாக அவர்கள் மாறிவிடுகிறார்கள். மறுமணம் புரிவது ஸ்ரீலங்கா கலாச்சாரத்துக்கு, விசேடமாக வட பகுதியில் அவ மரியாதையான செயலாகக் கருதப்படுகிறது. அதனால் வடக்கில் உள்ள விதவைகள் உயிர்வாழ்வதற்கு எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வேலையின்மை, பொருளாதார சிரமங்கள், பிள்ளைகளின் கல்வி, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை இந்தப் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கிளிநொச்சியில் மாத்திரம் 1237 யுத்த விதவைகள் உள்ளனர். 4967 விதவைகளில் 1442 பேர்களின் விதி, யுத்தத்தின் காரணமாக பாதிப்பு அடைந்துள்ளது. 40 வயதுக்கு குறைவான பெண்களின் தலைமையில் 985 குடும்பங்கள் உள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் தலைமையிலான 13,000 குடும்பங்கள் உள்ளன.

பரமேஸ்வரியின் கதை

34 வயதான பரமேஸ்வரியின் கணவன் 2009ல் ஒரு கண்ணிவெடியில் அகப்பட்டு மரணமடைந்தார். நான்கு பிள்ளைகளின் தாயாக இருந்த அவள் ஒரு கஷ்டமான வாழ்க்கை வாழ்கிறாள்.”எனது கணவர் மரணமானபோது எனது கடைசி மகளுக்கு வயது இரண்டு மாதங்கள் மட்டுமே. எனது கணவர்தான் எனது குடும்பத்தை காப்பாற்றி வந்த ஒரே ஆள். அவர் ஒரு மீனவர். நான் எனது 16ம் வயதில் திருமணம் செய்தேன். எனது தந்தைகூட கடலில்தான் மரணமடைந்தார். எனது கணவரின் மரணத்தின் பின் எப்படி தனியாக உயிர் வாழ்வது என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அப்போது பல பிரச்சினைகள் இருந்தன. எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப நான் விரும்பியபோதிலும் அது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. உயிர்வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் நான் கைவிட்டு விட்டேன் ஆனாலும் எனது பிள்ளைகளுக்காக நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். 2010 ல் ஒரு தொண்டு நிறுவனம் எனது உதவிக்கு வந்தது. இப்போது நான் இனிப்பு விற்று எனது வாழ்க்கையை கொண்டு செல்கிறேன், ஆனால் எனது பிள்ளைகளை காப்பாற்ற அது போதுமானதாக இல்லை. இப்போது எனது மூத்த மகன் ஒரு கூலியாளாக வேலை செய்கிறான்”. பரமேஸ்வரி மன அழுத்தத்துடன் வாழ்கிறாள். அவளது உறவினர்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் கிடைத்த போதிலும் ஒரு தந்தையையும் மற்றும் கணவனையும் இழப்பது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சினை. மறுமணம் செய்வதில் அவளுக்கு உள்ள வெறப்பை அவள் வெளிக்காட்டினாள்.

மறுமணம் செய்வதைப் பற்றி நான் யோசித்தேன் ஆனால் எனது பிள்ளைகள் என்னைச்சுற்றி உள்ளபோது என்னால் அதைச் செய்ய முடியவில்லை. திரும்பவும் திருமணம் செய்த அப்படியான ஒரு பெண் எங்கள் கிராமத்தில் இருக்கிறாள், ஆனால் கிராமத்தவர்கள் அளைப்பற்றி தரக்கறைவாக பேசினார்கள். அத்தகைய அவமானங்களால் பாதிப்படைய நான் விரும்பவில்லை. பிள்ளைகளுக்கு அது நல்லதல்ல. திருமணம் செய்த பின்னர் என்னால் அவர்களைக் கவனிக்க முடியாமல் போனால் அவர்களுக்கு என்ன நடக்கும்?”

மறுமணம் பற்றிய பிரச்சினையை பரமேஸ்வரி இப்படித்தான் பார்க்கிறாள். ஒரு விதவைக்கு மறுமணம் எல்லை தாண்டிய ஒன்றா? வடக்கிலுள்ள பெரும்பாலான விதவைககளுக்கு அது தங்கள் மதக் கலாச்சாரத்தக்கு விரோதமான செயல் மற்றும் அவர்கள் தொடர்ந்து தனியாகவே வாழ்ந்து வாழ்க்கையின் சிரமங்களை தாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு மேல் புதிய கணவர் விசுவாசமானவராக இருப்பாரா மற்றும் பிள்ளைகள் நன்கு கவனிக்கப் படுவார்களா என்கிற சந்தேகங்களும் அவர்களுக்கு உள்ளது.

யாழ்ப்பாண பெண்கள் அபிவிருத்தி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 52 வீதமான பெண்கள் மறுமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் ஆனால் 42 விகிதமானவாகள் அதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்கள். துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவது பற்றி அநேகர் பேசவில்லை. அதனால் தமிழ் சமூகம் இந்த யுத்த விதவைகளிடத்தில் அதிகம் பரிவும் மற்றும் மனிதாபிமானமும் காட்ட வேண்டும்.

சீதனப் பிரச்சினையும் கூட பல விதவைகளை மறுமணம் செய்வதைப்பற்றி சிந்திப்பதிலிருந்து தடுத்துள்ளது என்று மையம் தெரிவிக்கிறது. அழிவுக்குப் பின் எஞ்சியவற்றில் இருந்து தனது வாழ்க்கையை உருவாக்கிய ஒரு பெண்ணுக்கு சீதனத்தை தேடுவது என்பது அடுப்பிலிருந்து நெருப்புக்குள் விழுவதைப் போன்றதாகும். இந்தப் பெண்களுக்கு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான ஆரோக்கிய வசதிகளை வழங்கவேண்டியது அவசரமான ஒரு தேவையாகும். விதவைகள் மட்டுமன்றி அவர்களது உறவினர்களுக்கும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

“பெரும்பான்மையான யுத்த விதவைகள் இளம் பெண்கள். அவாகளது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக கலாச்சார கட்டுப்பாடுகளில் தளர்வு காட்ட வேண்டும்” என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும் மற்றும் சமூக விஞ்ஞ}ன துறையின் தலைவருமான பேராசிரியர் ஆர். சிவச்சந்திரன் கூறுகிறார். ரி.என்.ஏ உட்பட தமிழ் அரசியல் தலைவர்கள், இந்த விதவைகள் மறுமணம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்கிற ஒரு வேண்டுகோளை பொதுமக்களிடம் விடுக்கவேண்டும். “ போரின் உச்சத்தின் போதுகூட இந்தப் பெண்களுக்கு வருமானத்திற்கான ஒரு வழி இருந்தது. தங்கள் உறவினர்கள் எல்.ரீ.ரீ.ஈ யில் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கூட சிலர் பெருமைப்பட்டார்கள், மற்றும் அப்படியான எல்லா விடயமும் இப்போது துடைத்தழிக்கப்பட்டு வருவதினால் அவர்கள் தீவிரமான மனக்குழப்பத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். இவை வெளிக்காட்டப் படாவிட்டாலும் கூட சில விதவைகள் விபச்சாரம், போதைமருந்து பாவனை மற்றும் தற்கொலையில்கூட ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதற்கு இவைகள்தான் காரணமாக உள்ளன”.

“யுத்தம் காரணமாக சிறு வயதில் திருமணம் செய்தது, துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவது, மற்றும் கலாச்சாரத் தடைகள் என்பன இந்தப் பெண்கள் மத்தியில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று சொல்கிறார் முல்லைத்தீவு வைத்திய சாலையின் உளவியல் நிபுணர் மருத்துவர். சி.விஜேந்திரன். பல அரசியற் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்பன இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் விபச்சாரத்தைப் பற்றி தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளார்கள். இதுவரை இதபற்றிய துல்லியமான தரவுகள் கிடைக்கவில்லை. இந்த முடமான சமூக அமைப்பின் கீழ், இந்தப் பெண்கள் ஏன் இந்த இருண்ட வழிக்கு திரும்பினார்கள் என்பதில் அதிசயம் எதுவுமில்லை. வடக்கில் வாழும் ஆயிரக்கணக்கான விதவைகள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் ஆகியோரின் வாழ்க்கையை வெறும் பணப் பைகளினால் மட்டும் குணமாக்க முடியாது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Read more...

Monday, May 9, 2016

இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் நடேசனின் பகிரங்க மடல்.

என்னை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நீங்கள் வந்தசமயம் சந்தித்த போது, கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைக்க 65 வீதமான இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள்; ஆதாரிக்காத போது எப்படி 77இல் வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தை தமிழ் ஈழம் எனக் காண்பித்து எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள்?; என்று கேட்டபோது, தாங்கள் “48ஆம் ஆண்டில் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள்” என்றீர்கள். அப்பொழுது நான், “அப்படியானால் இறந்த ஆவிகளிடம்தான் நாங்கள் சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றேன். நீங்கள் என்னை சிங்களவர் போல் பேசுவதாக குறிப்பிட்டுவிட்டு முகத்தை திருப்பி கொண்டீர்கள். உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகளுக்கப்பால் அறிவுசார்ந்த தர்க்கத்துக்கும் உங்களுக்கும் வெகு தூரம் என்றாலும் மக்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துகளை பரிமாற வேண்டிய வரலாற்றுக் காலத்தில் நாம் இருக்கிறோம். இதைத்தான் பிரபல இலங்கைத் தமிழ் ஏடும் வலியுறுத்துகிறது.
விடயத்துக்கு வருகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் தெரிவுக் குழுவின் அறிக்கையை வரவேற்று நீங்கள் விட்ட பதில் அறிக்கையைப் பார்த்தேன்.

இலங்கை அரசபடைகளும் விடுதலைப்புலிகளும் போர் குற்றங்கள் புரிந்தார்கள் என இந்த அறிக்கையில் இருக்கிறது. இதை நம்மவர்களுக்குத் தெரிவிக்க ஐக்கிய நாடுகள் தெரிவுக் குழுதான் வேண்டுமா?
இலங்கையில் உள்ள சுப்பனும் கந்தனும் சொல்வார்களே. பண்டா, சில்வா இஸ்மயிலைக் கேட்டாலும் தெரியும்.

போர்க் குற்றம் புரிந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். மற்றைய தரப்பான இலங்கை இராணுவமும் அதன் தலைவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுதான் உங்களதும் இந்த அறிக்கையை ஆதரிப்பவர்களதும் கருத்தும் அல்லவா?

கடந்த முப்பது வருடங்களாக விட்டு விட்டு நடந்த போரையும் இறுதியாக மூன்று வருடகாலம் தொடர்ந்து நடந்த போரையும் சிறிது திரும்பிப் பார்ப்போம்.

தமிழ்த் தலைவர்களான செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரின் கனவுகள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற பெயரில் தனிநாட்டுத் தீர்மானமாக தமிழ் இளைஞர்கள் தலையில் சுமத்தப்பட்டது. அந்தக் கனவுகளை சுமந்து வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன். இளைஞர்கள் ஆயுதத்தால் இலங்கை இராணுவத்தை விரட்டி விட்டு உங்களை ஆட்சி பீடத்தில் அமர்த்துவார்கள் என கனவு கண்டீர்கள்.
ஆனால் நடந்துது என்ன?

தான் கஷ்டப்பட்டு ஏன் அமிர் அண்ணைக்கு கிரீடம் கொடுக்க வேண்டும் என பிரபாகரன் நினைத்ததால் அமிர் அண்ணையையும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரையும் கொலை செய்தார்கள். அத்துடன் தனக்கு எதிராக வேறு போட்டி வரக்கூடாது என நினைத்து அக்காலத்தில் மேலும் பலரையும் வைகுண்டம் அனுப்பிவிட்டார். நீங்களும் உங்கள் தலைவர்களும் வைத்த நெருப்பு உங்களை மட்டுமல்ல எல்லோரையும் எரித்தது. முடிவில் உங்கள் கதவை தட்டும்போது அதாவது போர்நிறுத்த காலத்தில் உயிர்தப்பிய எல்லோரும் துப்பாக்கி முனையில் ஒன்று சேர்க்கப்பட்ட போது பிரபாகரனை மேதகு தலைவராக்கி விட்டு பாராளுமன்ற அங்கத்தவராகிவிட்டீர்கள்.

இப்படியே போனால் எதிர்காலத்தில் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன நடக்கும் என எண்ணிப்பார்க்கும் தூரப்பார்வை அல்லது துணிவு உங்களுக்கு 2002இல் இல்லை. மாவிலாறில் விடுதலைப்புலிகள் போரைத் துவங்கிய போதும் இல்லை. அல்லது தம்பி போனால் திண்ணை காலியாகும் என மனதுக்குள் கணக்கு போட்டீர்களா?

அதன்பின்பு உலகத்திலேயே பெரிய மோசடியான தேர்தல் நடந்தது. அதில் விழுந்த கள்ள வாக்குகளில் பலர் தெரிவு செய்யப்பட்டார்கள். (நீங்கள் இல்லை) அதன் பின் நீங்கள் எல்லோரும் போருக்கு ஆதரவாக உலகம்பூராவும் விமானத்தில் பறந்து ஆதரவு தேடியதை மறந்து விட்டிர்களா?

பொங்கு தமிழ்காலத்தில் போரை ஆதரித்து புறநானுறு படைத்த புலவர்கள் அல்லவா உங்கள் பாராளுமன்ற அங்கத்தவர்கள். அவர்களுக்கு நீங்கள் தலைவர். அதாவது இலங்கை இராணுவத்திற்கு ஜனாதிபதி மாதிரி இல்லையா?

குறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்தில் இராணுவம் வெற்றிபெற்ற போது உங்களுக்கு போரின் விளைவை ஊகிக்க முடியவில்லை. அப்பொழுதும் மேதகு பிரபாகரனின் தலைமையை நம்பியிருந்தீர்கள். சரி, வடக்கில் போர் தொடங்கிய போது மன்னார் புளியங்குளம் முதலிய இடங்களில் இருந்து மக்களை மந்தைகள் போல் விடுதலைப்புலிகள் கொண்டுவந்த போது மக்களைப் பாதுகாக்க கொண்டு வருகிறார் என மவுனமாக இருந்தீர்கள். ஆனந்தசங்கரி, டீ.பிஎஸ். ஜெயராஜ் மற்றும் என்னைப் போன்றவர்கள் அதற்கு எதிராக குரல்கொடுத்த போது நீங்கள் போருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தீர்கள்.

உங்களுக்கு சில சம்பவங்களை பிரத்தியேகமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வன்னியில் நடந்த போரில் மக்கள் உயிரிழப்பு தொடங்கியது. முல்லைத்தீவு மாவட்டத்தில், அதாவது A9 பதையின் கிழக்குப் பகுதியில் புதுக்குடியிருப்புக்கு அண்டிய பிரதேசத்தில். அப்பொழுது இராணுவம் சுதந்திரபுரத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய போது அங்கு மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அங்கே செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நலன் அமைப்பினரும் சென்றார்கள். அந்த இடத்தில் அரசாங்க சேவை அமைப்புகள் சென்றபோது 200 மீட்டர் தூரத்தில் புலிகளின் குரல் வானொலியின் (container) கொள்கலத்துடன் சென்றனர் . இவர்களது முயற்சியை முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் பார்த்திபனும் ஐக்கிய நாடுகள் அகதி அமைப்பின் பிரதிநிதியும் ஆட்சேபித்தபோது வானொலிக்கு பொறுப்பாக இருந்த தமிழன்பன் நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று கூறினார். இதன்பின் விடுதலைப்புலிகளின் ஆட்டிலரி அணியும் சுதந்திர புரத்திற்கு இடம் பெயர்ந்தது. அங்கிருந்து இராணுவத்தை தாக்கினார்கள். அந்தத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவம் என்ன செய்யும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இன்னுமொரு சம்பவம் உங்கள் கவனத்திற்கு:
2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி இரவு விடுதலைப்புலிகளிடம் இருந்து ஈரோஸ் பாலகுமார் குடும்பத்துடன் கடல்மார்க்கமாக வள்ளத்தில் முல்லைத்தீவில் இருந்து தப்பி ஓட முற்பட்டபோது விடுதலைப்புலிகளால் சுடப்பட்டார் . அப்பொழுது பாலகுமாரின் மகள் காயமடைந்தார். இன்னும் அந்த பிள்ளையின் எலும்புகள் குணமடையவில்லை.

பாலகுமாரின் குடும்பத்தை தாக்கிய விடுதலைப்புலிகள் எத்தனை தமிழ்மக்களின் இறப்புக்கு நேரடியாக காரணமாக இருந்தார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கடைசியாக ஒரு சம்பவம். உங்களுக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை.
உக்கிரமான போர் நடந்த போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் நானும் ஒருவன். 2008 மார்ச் மாதம் 28ஆம் திகதி என்னுடன் வந்த மெல்பன் சட்டத்தரணி ரவீந்திரனிடம் ‘உங்களிடம் சம்பந்தரின் தொலைபேசி இலக்கம் இருந்தால் யுத்தத்தில் அகப்பட்ட மக்களைப் பற்றி அரசாங்கத்திடம் வந்து பேசச் சொல்லுங்கள’ என்றேன். அவர் தொலைபேசியில் பேசி விட்டு வந்து சொன்னார் ‘சம்பந்தர் இந்தியாவுக்கு போவதால் தனக்கு நேரமில்லை என்கிறார்’.

பெரும்பாலான மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் இறந்த போது அரசாங்கத்தோடு அல்லது புலிகளோடு பேச முற்பட்டீர்களா? அந்தவேளையில் நீங்கள் இந்தியாவுக்கு பிரயாணம் செய்தீர்கள்.
நான் கூறிய சம்பவங்கள் உண்மையானவை. இதில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி உறுதிப்படுத்தலாம்.

இந்த வயதில் சுய விமர்சனம் செய்யவிட்டால் வேறு எக்காலத்தில் செய்யமுடியும்? அரசியலை விலக்கிப் பார்த்தால் விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தில் மட்டுமல்ல அப்பாவி மக்களின் இரத்தம் உங்களது கைகளிலும் படிந்துள்ளது.

இனி நீங்கள் வரவேற்றது ஐக்கிய நாடுகள் செயலாளரின் அறிக்கையை மட்டுமே. இது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அறிக்கையாக மாற பலபடிகள் உள்ளன.

இந்த அறிக்கையின் எதிர்காலத்தைப் பார்ப்போம்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் எந்த ஒரு நாடும் முக்கியமாக சீனா அல்லது ரஷ்ஷியா வீட்டோ பண்ணாமல் இருந்தால் மட்டுமே மேற்கு நாடுகளின் ஆதரவில் வரையப்பட்ட அறிக்கையின் படி இலங்கையில் போர்க் குற்ற விசாரணைக் கமிஷன் வருவது சாத்தியம். சீனாவுக்கு தீபெத்திலும் ரஷ்ஷியாவுக்கு செச்செனியாவிலும் இதே போன்ற விசாரணையை தொடங்குவதற்கான சகல சாத்தியம் உண்டு. இதை விட அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கில் ஏற்படுத்திய போர் அழிவுகள் குறைந்தவையல்ல. நமது பக்கத்து நாடான இந்தியாவின் இராணுவத்தால் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட காஸ்மீரிகள் கடந்த சில வருடங்களில் இறந்து விட்டார்கள். அது இன்னும் முடிவடையாத தொடர்கதை.

இப்படியாக எல்லோர் உடம்பிலும் சிரங்குப் படை உள்ளது. யாருக்கு யார் தைலம் போடுவது? இந்த நிலையில் இந்த நாடுகள் இலங்கை மீது எங்வளவு தாக்கத்தை பிரயோகிக்கும் என்பது கேள்விக்குரியது.
மறுபுறத்தில் அதிக தாக்கத்தை பிரயோகிக்கும் போது இலங்கை அரசாங்கம் இரண்டு வகையாக செயற்படலாம்.

ஒருவிதத்தில் விசாரணைக்கு அனுமதித்து விட்டு உள்நாட்டில் பல முட்டுக்கட்டைகளை போடமுடியும். இதைவிட இலங்கை இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகாவின் தலைமையில் தான் போர் நடந்தது. போரியல் சட்டப்படி மனிதாபிமனமற்ற உத்தரவை அரசியல் தலைமை இட்டாலும் இராணுவத் தலைவர் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. கடைசிப் போரின் நடவடிக்கைகள் மட்டுமல்ல கொழும்பில் நடந்த கொலைச் சம்பவங்களைக் கூட வேறு பலர் பொறுப்பேற்க வேண்டி வரும். அது மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் விசாரணையில் எத்தனை தமிழர்களால் துணிந்து சாட்சியம் அளிக்கமுடியும்?

மறுபுறத்தில் இந்தக் கமிசன் இலங்கை இறைமைக்கு எதிரானது என சொல்லி விட்டு எதிர்த்து நிற்கலாம். கியூபா 60 வருடங்கள் அமெரிக்காவையும் உலகத்தையும் எதிர்த்து நிற்கவில்லையா?

இந்த இருநிலையிலும் நட்டமடையப் போவது தமிழர்கள்தான். சிங்கள அரசியல்வாதிகளை புறந்தள்ளிவிட்டாலும் இலங்கையின் பதினைந்து மில்லியன் சிங்கள மக்களது நட்புறவு இல்லாமல் தமிழர்கள் வாழ்வது கடினமானது.

இதைவிட முக்கியமான விடயம் போர் நடக்கும் போது பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையும் மேற்குலகமும் தற்போது விழித்தெழுந்து இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் குற்றம் சாட்டினால் இதன்மூலம் இலங்கைத்தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தமிழீழம் கிடைக்கும் என முப்பது வருடம் நம்பியதை விட படு முட்டாள்தனமானது. தமிழர்கள் எதைப் பெற்றாலும் சக இலங்கை மக்களோடுதான் சேர்ந்து பெறமுடியும். இந்த போர்க் குற்றசாட்டில் இலங்கைக்கு மிகவும் அதிக பட்ச தாக்கம் வருவதாகில் அது இலங்கையில் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடைகளாகும். இதனால் நிச்சயமாக முழு இலங்கை மக்களும் துன்பப்படலாம் ஆனால் சமூகத்தில் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கூடிய அளவில் இதன் சுமையை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

இதை விட இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் தான் இனவாதம் உண்டு தமிழ் இஸ்லாமிய மக்களிடம் இல்லை என ஒருவராலும் கூறமுடியாது. ஆனால் இந்தியாவில் இந்து-முஸ்லீம் மக்கள் இடையே உள்ள பிளவையோ பாகிஸ்தானில் ஷியா- சுன்னி மக்களிடம் இருக்கும் வேறுபாடுகள் ஏன் பாலஸ்தின- யூத மக்களது உறவுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்தது. இலங்கை இனவாதம் இரு பக்கத்து அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினால் சிங்கள மக்கள் மத்தியில் மேலும் இனத்துவேசத்தை உருவாக்க வழிவகுக்கும். 83 ஜுலை காலங்கள் எமது மனதில் இருந்து இன்னும் அகலவில்லை. இன வெறுப்பு இரு பக்கத்து அரசியல்வாதிகளுக்கும் வாக்குகளை அதிகரிக்க உதவும். ஆனால் சாதாரண கந்தையாவுக்கும் சில்வாவுக்கு நன்மை பயக்காது.

இந்த அறிக்கையில் அதிக புளகாங்கிதம் அடைவது வெளிநாட்டு புலி ஆதரவாளர்கள்தான். ஆனால் இந்த அறிக்கை திட்டவட்டமாக வெளிநாட்டுத் தமிழரின் கனவான தமிழீழத்தை நிராகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த நிபந்தனையற்ற ஆதரவை கண்டிக்கிறது. இதைவிட விடுதலைப்புலிகளுக்காக இவர்கள் சேர்த்த பணத்தை போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிட பரிந்துரைக்கிறது.

ஆனால் ஆனைக்கால் வியாதிக்காரன் தனது வீங்கிய காலை பலமென்று நினைப்பது போல்தான் இவர்களும் எதிரியின் சகுனப் பிழைக்கு சந்தோசப்படும் பிரகிருதிகள்.

இறுதி யுத்தகாலத்தில் வெளிநாட்டு தமிழனை நம்பி விடுதலைப்புலிகள் மோசம் போனார்கள். அமெரிக்கத் தமிழன் பராக் ஒபமாவின் கப்பல் வரும் என்றான். அவுஸ்திரேலிய தமிழன் பசுபிக்நாடுகள் தமிழீழத்தை ஆதரிக்கிறது என்று கயிறு கொடுத்தான். நோர்வேத்தமிழன் போரை நிறுத்தாமல் போரிடுங்கள். இந்தியாவில் காங்கிரஸ் அரசு தோற்று மத்தியில் ஆட்சிமாறும் என கூறினான்.

ஐயா சம்பந்தனே தமிழனுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர் பக்கம் தலைவையாதீங்கோ.

பிற்குறிப்பு:
பேச்சுவார்தைகளை எப்படி நடத்துவது என்ற பயிற்சி எடுக்க சிங்கப்பூர் போனீர்கள் என தகவல் வந்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகத்தின் அறிக்கையை வரவேற்றுவிட்டு அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தமுடியும் என நினைக்கிறீர்களா?

நடேசன் – அவுஸ்திரேலியா

Read more...

Saturday, May 7, 2016

கௌரவ பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்

தவிசாளர் பசீர் சேகுதாவூத் சேருக்கு....- A.W.M. ஹிஷாம் சம்மாந்துறை-
அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு..


வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ். எமது கட்சிக்கும் இந்த சமூகத்தும் நீங்கள் புரிந்து வரும் மகத்தான சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்தவனாக இதை எழுதுகிறேன்.

நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர்களுக்கு எழுதிய திறந்த மடலை படிக்க கிடைத்தது. தாங்கள் எழுதிய மடலுக்கு பதில் மடல் எழுதும் அளவு நான் பெரியவனல்ல. உங்கள் அனுபவத்தின் அரைவாசி தான் எனது வயதாகும். நீங்கள் இந்த சமூகத்திற்காக சிந்திய ஒரு வியர்வைத் துளிக்கேனும் நான் ஈடாகுவேனா என்று கூடத்தெரியாது. இருந்தாலும் எனது சிந்தனைக்கு பட்டதையும் எனது ஞாபகங்களின் அடிப்படையிலும் இந்தக்கட்சியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவனாக உங்களிடம் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

உங்களது திறந்த மடலில் இக்கட்சியில் கடந்த காலங்களில் எழுந்த பல முரண்பாடுகளையும் அந்த பிரச்சினைகளின் போது நீங்கள் தலைவர் றஊப் ஹகீம் இன் பக்கமே நியாயம் இருந்ததனால் தலைவருக்கு ஆதரவாக நின்றதனையும் நினைவு கூர்ந்தீர்கள். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் உயிரைக்கூட பணயம் வைத்து போராடியதாக கூறி இருந்தீர்கள். அது நிச்சயமான, மறுக்க முடியாத உண்மையாகும். அந்தந்த உட்பூசல்களின் போது தலைவரின் பக்கம் நியாயம் இருந்ததனாலும் கட்சியைப் பாதுகாக்க வேண்டியதற்காகவும் அவ்வாறு நியாயமாக நடந்து கொண்டதாக கூறி இருந்தீர்கள். ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினையில் செயலாளரின் நீதிக்காக செயலாளருக்கு ஆதரவாக குரல்கொடுப்பதாக கூறுகிறீர்கள்.

இங்கு நீங்கள் கூறவரும் விடயத்தின் மூலம் மற்றவர்கள் எதைப் புரிந்துகொள்வார்கள் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஒரே ஒரு விடயம் புரிகிறது. நீங்கள் தலைவரையும், செயலாளரயும் மட்டுமே பிரச்சனைக்குரியவர்களாக காட்ட முனைகிறீர்கள். நீங்கள் எப்போதும் பிரச்சினைளுடன் சம்பந்தப் படாதவராகவும், முரண்பட்டுகொள்ளும் இருவரில் நியாயம் யார் பக்கம் உள்ளதோ அவருக்கு ஆதரவாக நின்று நியாயத்திற்காக குரல் கொடுப்பதாய் கூறி இருக்கிறீர்கள். இம்முறையும் அதைத்தான் செய்கிறேன் எனக்கூறி உங்களுக்குள்ள பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டீர்கள். மேலும் கட்சியில் இதுவரை காலமும் இடம்பெற்ற முரண்பாடுகளை ஒவ்வொன்றாக கூறிய நீங்கள், கட்சிக்குள் நீங்கள் முரண்பட்ட எந்தவொரு சம்பவத்தையும் கூறாது இருட்டடிப்பு செய்து விட்டீர்கள். இதன் மூலம், ஒரு போதும் முரண்பாடுகளில் சிக்கிகொள்ளாத உத்தமராக உங்களை நீங்களே காட்டிக்கொள்வதாய் அறிகிறேன்.

உண்மையில் நீங்கள் கூறுவது போன்று கடந்த காலங்களில் தலைவருக்கு ஆதரவாக செயற்பட்டதற்கு காரணம் தலைவரின் பக்கம் நீதி இருந்தது மட்டும் தானா? அவ்வாறு நீதிக்காக மட்டும் செயற்பட்டிருந்தால் இதை ஏன் அப்போதே கூறவில்லை? அதே போல இம்முறை செயலாளரின் நீதிக்காக செயலாளருக்காக குரல் கொடுப்பதாக கூறுகிறீர்கள். உண்மையில் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? செயலாளருக்கு ஆதரவாக என்றா? அல்லது தலைவருக்கு எதிராக என்றா? ஆனால் தேர்தல் முடிந்த கையோடு ஒரு தேசியப்பட்டியல் உங்களுக்கும் வழங்கப் பட்டிருந்தால் நீங்கள் எதற்காக, யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பீர்கள் என்பது தெரிய வந்திருக்கும்.

மேற்படி மடலில், செயளாரின் அதிகாரம் குறைக்கப்பட்டதனை குறையாகக் கொள்ளும் நீங்கள், பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் செயலாளராக இருந்த தற்போதைய தலைவர் அவர்களுக்கும் இவ்வாறு அதிகாரக்குறைப்பு செய்யப்பட்டிருந்தால் தற்போதைய தலைவரின் நிலை என்னவாகியிருக்கும்? என்று கேட்டிருந்தீர்கள். ஆனால் இப்படியான ஒரு தலைவனை பெற்றுக் கொள்ளாத இந்த சமூகத்தின் நிலை எங்கே சென்றிருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? பெருந்தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின் ரவூப் ஹகீம் அவர்களைத் தவிர வேறு யாரவது ஒருவரது கைக்குச் சென்றிருந்தால் இக்கட்சியின் நிலை என்னவாயிருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா ?? கட்சி இன்று உயிரோடு இருந்திருக்குமா?? கட்சியை விற்றுத் தின்றிருப்பார்கள். அவ்வாறுதான் கட்சி உயிரோடு இருந்தாலும், இந்தக்கட்சிக்கு ரவூப் ஹகீம் அல்லாத வேறு ஒருவர் தலைவராக இருந்திருந்தால் உங்களுக்கு மூன்று முறை தேசியப்பட்டியல் கிடைத்திருக்குமா ?? அவ்வாறு மூன்று முறை தேசியப்பட்டியல் கிடைக்காமல் போயிருந்தால் உங்களது நிலை இப்போது என்னவாயிருக்கும்?? நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பீர்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தீர்களா?

அதேபோல மேற்படி பேராளர்களுக்கான உங்களது மடலில் கட்சியில் இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பேசியிருந்தீர்கள். கட்சிக்குள் உங்களுக்கு இத்தனை பிரச்சினைகள், உட்பூசல்கள் இருந்த போதிலும் கட்சியினதும் சமூகத்தினதும் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் உங்கள் பெரிய மனதை இந்த இடத்தில் பாராட்டியே ஆகவேண்டும். மேற்படி இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதற்காவே உங்களுக்கு கடந்த வருடம் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் படவில்லை என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக உங்களின் இதற்கு முந்தைய அறிக்கை ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். நீங்கள் கட்சியின் முடிவை மதிக்கும் ஜனநாயக அரசியல்வாதியாக இருந்தால்; நீங்கள் சுயநலமற்ற ஒரு அரசியல்வாதியாக இருந்தால் கட்சியால் நிறுத்தபட்ட எந்த வேட்பாளருக்காக களத்தில் இறங்கி வேலை செய்தீர்கள் ? மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியின் வெற்றிக்காக என்னென்ன பங்களிப்புக்கள் செய்தீர்கள்...?? அதைவிட கடந்த பொதுத்தேர்தலில் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் உங்களது பங்களிப்பு எவ்வ்வாறாக இருந்தது என்பதனை விளக்க முடியுமா..??எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டும் செயல்படுவதாக கூறும் நீங்கள் இதில் உள்ள நியாத் தன்மையை கூறுங்கள்.

மேலும் எப்போதும் நீதிக்காக மட்டும் போராடி வருவதாக கூறும் உங்களிடம் இன்னொரு விடயம் பற்றிப் பேசுவதிலும் தப்பில்லை என்று நினைக்கிறேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நமது கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவினையும் தாண்டி மகிந்த ராஜபக்சவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கி பிரார்த்தனை செய்து அறிக்கைகள் விட்டிருந்தீர்கள். இவ்வாறு மகிந்தவுக்கு ஆதரவு வழங்கியதில் என்ன நியாயம் இருந்தது என்பதனை அறிய ஆவலாக உள்ளேன். எப்போதும் நியாயத்தின் பக்கமே ஆதரவு வழங்குவதாக கூறும் நீங்கள் மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் நடந்த தேர்தலில் எந்த நியாயத்தின் அடிப்படையில் மகிந்தவை ஆதரிக்க முன்வந்தீர்கள்.?

அதிலும் அல்லாஹ்வுக்கு அடுத்ததாக இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு மகிந்தவை மட்டுமே நம்புவதாக கூறியிருந்தீர்கள். இவ்வாறு கூறியதின் அடிப்படை நியாயம் என்ன என்பதை தெளிவு படுத்தக்கோருகின்றேன். இவ்வாறு கூறுவதன் மூலம் யாரை சந்தோசப் படுத்த முனைந்தீர்கள்? மகிந்தவின் கடந்தகால நடவடிக்கைகளில் எதை காரணமாக வைத்து இப்படியொரு நம்பிக்கை உங்களுக்கு வந்தது? எப்போதும் கட்சியின் நலனை மட்டும் முன்னிறுத்தியே முடிவெடுப்பதாக கூறும் நீங்கள் அத்தேர்தலில் இவ்வாறு முடிவெடுத்ததில் கட்சிக்கும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் என்ன நன்மை இருந்தது என்பதனை நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள்.

அதேபோல் கடந்த முறை உங்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் ஒரு சாதனையே செய்தீர்கள். கட்சியின் தவிசாளராக இருந்து கொண்டு தலைவருக்குத் தெரியாமல் கேபினட் அமைச்சர் பதவியொன்றினை பெற்றிருந்தீர்கள். இதில் என்ன நியாயம் உள்ளது ?

மன்னிக்கவும்; இக்கேள்வி ஏற்கனவே உங்களிடம் ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளரினால் கேட்கப்பட்டு அதற்கு நீங்கள் வழங்கிய பதில் இப்போது தான் ஞாபகத்துக்கு வருகிறது. “ஒரு மனிதன் தனது வாழ்விலே எப்போதும் வளர்ச்சியை எதிர்பார்ப்பான். அதே அடிப்படையில் தான் நானும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக இருந்து, இன்று இந்த அமைச்சர் பதவியை ஒரு வளர்ச்சியாகவே காண்கிறேன்” என்று அப்போது காரணம் கூறி இருந்தீர்கள் (எனது ஞாபகம் சரியாக இருக்கும் என நம்புகிறேன்)

அவ்வாறு தான் நீங்கள் அந்த அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வதென்றாலும் தலைவருக்கு தெரியாமல் பெற்றுக் கொண்டதன் நியாயம் என்ன? காரணம் என்ன? எமது கட்சிக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதை அன்று நீங்களே மறந்து போயிருந்தீர்கள். அன்று இந்தக் கட்சியை விட இந்த தலைவனை விட நீங்கள் அமைச்சுப் பதவியை பெரிதாக நினைத்ததன் நியாயம் என்ன? நீங்கள் தான் எப்போதும் நியாயத்தின் பக்கம் மட்டுமே இருப்பவராச்சே... ஒரு சிறுபான்மை கட்சியின் முக்கிய பதவியை வகிக்கும் நீங்கள் மக்களின் பாரிய பொறுப்புக்களை உங்களின் தோள்களில் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள் இவ்வாறான தீர்க்கமான முடிவுகள் எடுக்கின்ற போது, உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டும் தான் கவனத்தில் எடுப்பீர்களா? அல்லது அதுவும் நியாயம் தான் என்று கூறப்போகிறீர்களா??

காட்டிக்கொடுப்பும், கழுத்தறுப்புகளும் மிக மலிவாகவே காணப்படும் இலங்கை அரசியல் களத்தில் உங்களது அந்த அமைச்சுப்பதவிக்கும் பேரம் பேசப்பட்டிருக்கும் என்பதனை சாதாரண அரசியல் அவதானியால் கூட அப்போது ஊகிக்க முடிந்திருந்தது.

தவிசாளர் அவர்களே நீங்கள் இக்கட்சிக்கும் இச் சமூகத்துக்கும் செய்த, செய்து கொண்டு வரும் அளப்பரிய பணிகளை குறைத்து மதிப்பிடுதல் இம்மடலின் நோக்கமல்ல. ஆனாலும் ஒரு ஜனநாயக அரசியல் வாதியாக இதுவரை உங்களைக்காணும் நான், தொடர்ந்தும் அதே நிலையிலே உங்களைக் காணவேண்டும் என்று ஆசைபடுவதாலேயே இவ்வாறு எழுதினேன்.

நன்றி.
இப்படிக்கு A.W.M. ஹிஷாம் சம்மாந்துறை.

Read more...

Monday, May 2, 2016

உதயத்துள் உதயம் : கிழக்கிலங்கை இளையோர் அமைப்பு.

கிழக்கிலங்கையை மையப்படுத்தி கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக உதயம் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரழிவினை தொடர்ந்து உதயமாகிய உதயம் அமைப்பு கிழக்கிலங்கை மக்களின் துயர்துடைப்பதில் ஒர் குறிப்பிடத்தக்கதும் குறைகாணமுடியாததுமான பங்காற்றியிருக்கின்றது.

உதயம் அமைப்பின் வளர்ச்சி ஓர் புதிய பரிணாமத்தை எட்டியிருக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 01.05.2016 தொழிலாளர் தினமன்று கிழக்கின் இளையோரை ஒர் குடையின்கீழ் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்த அமைப்பு , இளையோரிடம் அதன் பணிகளை கையளித்துள்ளது.

இந்நிகழ்வு நேற்று பிற்பகல் Telli, Girixweg 12, 5000 Aarau எனும் விலாசத்திலுள்ள சனசமூக நிலையத்தில் திரு.சுந்தரலிங்கம், திரு.பரமேஸ்வரமூர்த்தி மற்றும் திருமதி இந்திரா ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

வரலாறு கண்டிராதவகையில் மண்டபத்தில் ஒன்று திரண்டிருந்த கிழக்கிலங்கை இளையோர் முன்னிலையில் தலைமையுரையாற்றிய திரு. தேவசகாயம் அவர்கள், உதயம் ஆரம்பித்து ஓர் யுகத்திற்கு பின்னர் ஓர் புதிய அத்தியாயமாக இளையோர் அமைப்பினை உருவாக்கியுள்ளோம். உங்கள் பணியினை நீங்கள் முன்னெடுத்துச்செல்ல நாம் பின்னிருப்போம் என உறுதியளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய உதயத்தின் மூத்த உறுப்பினர் திரு. சுந்தரலிங்கம் பேசுகையில், மட்டு-அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்திய சேவையினையே உதயம் செய்து வந்தது. காலப்போக்கில் திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை விஸ்தரித்ததன் ஊடாக கிழக்கிலங்கைக்கானதோர் தனி அமைப்பு என்ற பரிணாம வளர்ச்சியை கண்டது. அவ்வளர்ச்சியின் வரலாற்றில் ஓர் புதிய பக்கமாக இன்று கிழக்கின் இளையோராகிய உங்கள் கைகளில் உங்களுக்கான பணிகளை கையளிப்பதில் உதயம் மட்டற்ற மகிழ்சி அடைகின்றது என்றார்.

மேலும் அங்கு உரையாற்றிய செயலாளர் திரு.வே.ஜெயக்குமார் உதயத்தின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் இளையோருக்கு விளக்கமளித்ததுடன் கிழக்கிலுள்ள தேவைகளையும் இளையோர் செய்யவேண்டிய சேவைகளையும் பட்டியலிட்டுக் கூறினார். மேலும் அத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வளங்களை இளையோர் அமைப்பு எவ்வாறு திரட்டிக்கொள்ள முடியும் என்ற ஆலோசனையை வழங்கியதுடன், இளையோர் அமைப்பு சுயாதீனமாக செயற்பட்டு நவீன அறிவு மற்றும் ஆற்றல்களை ஒன்றுகுவித்து கிழக்கு மக்களின் குறைகளை தீர்க்கும் ஆற்றல்மிகு கருவியாக உருப்பெறவேண்டும் என்றும் கிழக்கு மண்ணின் மைந்தர்களின் பெருமையை காக்கவேண்டும் என்றும் வேண்டுதல் விடுத்தார்.

அங்கு அவதானிக்கப்பட்ட உதயத்திற்கே உரித்தான பணியாதெனில், பொருலாளர் அவர்களால் 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுக் கணக்கறிக்கை இளையோரிடம் கையளிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் பிரபல இசைக்குழுவொன்றின் இசைக்கச்சேரியும் அங்கு திரண்டிருந்த இளையோர் பெற்றோரை மகிழ்வூட்டின.

இளையோர்கள் குழுக்கள் குழுக்களாக எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நாடாத்திக்கொண்டிருந்தமை அவர்களது ஆர்வத்தை எடுத்தியம்பியது.

உதயம் அமைப்பானது அரசியல் கட்சிகளின் ஆழுகையில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி வந்திருக்கின்றது என்பது அதன் தனிச்சிறப்பம்சமாகும்.
















Read more...

Sunday, May 1, 2016

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தூவானம் கலை விழா.

தமிழ் முஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் வகையிலும் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கலை இலக்கியப் பகுதியின் ஏற்பாட்டில் தூவானம் கலை விழா எதிர்வரும் மே 02 திங்கட்கிழமை மாலை 04.45 க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தலைவர் எம.எல்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கௌரவ அதிதிகளாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜீ. இராஜகுலேந்திரா, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ் ஆகியோரும் கலந்து கொள்வதுடன் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். மன்ஸூர் சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்வில் இன மத பேதமின்றி அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0772101202 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.


இவ்வண்ணம்,
றுடானி ஸாஹிர்
பொதுச் செயலாளர்
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்




Read more...

Friday, April 29, 2016

சிவராமின் கைகளில் எவ்வாறு இரத்தக்கறை படிந்தது என நினைவூட்டுவோம்.

புளொட் எனப்படுகின்ற தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் முக்கிய உறுப்பினரான சிவராம் கொலைசெய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்களாகின்றன. சிவராம் தனது சுயலாபங்களுக்காக புலிப்பாசிசத்தை நியாயப்படுத்தி வந்திருந்தார். இதற்கு கைமாறாக இன்று புலிகளின் ஊதுகுழல்கள் சிவராமை நினைவு கூறுகின்றன.

சிவராமின் இரத்தக்கறை படிந்த கரங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பலர் அம்பலப்படுத்தியிருந்தனர். அவ்வாறான கட்டுரைகளில் ஒன்றை இந்நாளில் மீள் பிரசுரம் செய்வதன் ஊடாக சிவராமின் உண்மை முகத்தையும் புலி-வியாபாரிகள் இன்று சிவராமை நினைவு கூறுவதன் நோக்கத்தையும் உணர்த்துவோம்.

சிவராம்: இரத்தக் கறைபடிந்த கரங்கள் -- நட்சத்திரன் செவ்விந்தியன்.

விடுதலைப் புலிகளால் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின் இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது. தர்மரத்தினம் சிவராம் 1984 ல் PLOTE ல் போய்ச் சேர்ந்த போது புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் உச்ச நிலையிலிருந்தன. PLOTE இல் இருந்த நேர்மையான அசலான போராளிகளில் PLOTE இனாலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த மற்ற நேர்மையான போராளிகளான தீப்பொறி குழுவினர் முதலியோர் இக்காலப் பகுதியில் புளட்டிலிருந்து தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர். தீப்பொறி குழுவின் மூலவர்களில் ஒருவரான உன்னதப் போராளி நொபேட் புளட்டின் கொடூரச் சீரளிவுகளை வைத்து எழுதிய ‘புதியதோர் உலகம்’ என்ற நாவல் 1985 இன் தான் வெளிவருகிறது.

சிவராம் முதலில் விடுதலைப் புலிகளில் தான் சேர விண்ணப்பித்தார். எனினும் மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் தனித்தனியே விடுதலைப் புலிகளில் சேருவதற்கு நம்பகமற்றவர் என்று சிவராம் திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பின்னரே சிவராம் புளட்டில் அசோக் எனப்படுகிற யோகன் கண்ணமுத்துவின் “அணைவோடு” இணைக்கப்பட்டார். இக்காலத்தில் தான் உமா மகேஸ்வரன் எல்லோரையும் அடிப்படையின்றி சந்தேகிக்கின்ற paranoid மனோவியாதிக்குட்பட்டிருந்தார். தன்னுடைய ஆங்கிலப் புலமையையும் மகேஸ்வரனின் பலவீனங்களையும் சாதுரியமாகப் பயன்படுத்தி சிவராம் தலமைக்கு மிகநெருக்கமாக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். இதன்போது புளட்டின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்கும் உட்கட்சி சித்திரவதைகளூக்கும் படுகொலைகளுக்கும் விசுவாசமாக உடந்தை போனார்.

(1) 1984, 1985 காலப் பகுதியில் ஒரு தடவை யாழ்ப்பாணம் குருநகரில் சிவராமும் தீபனேசனும் வீதியில் தற்செயலாக தீப்பொறி குழுவினரைச் சேர்ந்தவர்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உடனடியாகவே சிவராம் தனது பையிலிருந்து SMGயை எடுத்து load பண்ணி அவர்களை நோக்கி சுடத்தயாரானார். அதிஸ்ரவசமாக பொது மக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதால் கொலை எதுவும் நடக்காமல் இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.

(2) பேராதனைப் பல்கலைக்கழக பல்மருத்துவத்துறை மாணவனான செல்வம் என்பவர் தனது பட்டப்படிப்பையே தியாகம் செய்து போராட வந்திருந்தார். இந்த செல்வமும் அகிலன் என்கிற இன்னொருவரும் சந்ததியாரோடு சேர்ந்து PLOTEஇன் உட்கட்சிப் படுகொலைகள், ஜனநாயகமின்மை என்பவற்றிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். மட்டக்களப்பிலிருந்து கைதேர்ந்த கொலையாளியான வெங்கட் ஐயும் அழைத்துக்கொண்டு சிவராம் தலமையில் ஒரு குழு மூதூருக்கு அகிலன் செல்வத்தைத் தேடிப் போனது. மூதூரில் ஒரு வீட்டிற்குள் சென்ற சிவராமும் வெங்கட்டும் அங்கிருந்த அகிலன் மற்றும் செல்வனையும் PLOTEஇன் மகளிர் பிரிவுத் தளபதியான கரோலினையும் கண்டனர். சிவராமும் வெங்கட்டும் கரோலினை தவிர்த்து அகிலன் செல்வனைக் கடத்திச் சென்று மூதூரில் ஒரு வயல் வெளியில் கொன்று அவ்வயல் வெளியிலேயே இருவரையும் புதைத்துத் திரும்பினர்.

மேற்கூறிய இரண்டு தகவல்களையும் நம்பகரமான மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. PLOTE உறுப்பினர்களுக்கு சிவராமின் அகிலன் செல்வன் கொலைகள் நீண்ட காலமாகத் தெரிந்த திறந்த இரகசியமே. இதனைவிட தலமைக்கு எதிராகக் அகிலன் செல்வம் கிளர்ச்சி செய்தமையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பெண் விவகாரம் முதலியன சம்பந்தப்பட்ட கோப தாபங்களுக்காக இவ்விருவரும் சிவராமினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சிவராமைப்பற்றி நல்ல அபிப்பிராயம் அவருடன் பழகிய நல்ல மனிதர்களிடம் கிடையாது. அவர்கள் சொல்லுகிற குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவராம் பிறரை “அள்ளி வைப்பதில்” வல்லவர் என்பது.

1. மாலைதீவுக்கு படையெடுத்துச்சென்ற தன்னுடைய சக தோழர்களான புளட் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் “அள்ளி வைத்தவர்” சிவராமே என்பதை சிவராமுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த இப்போது அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக இருக்கும் கார்ட்றி இஸ்மாயில் தான் லைன்ஸ் (www.lines-magazine.org) சஞ்சிகையில் எழுதிய ‘Mourning Sivaram’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதே “அள்ளி வைப்பு” தகவலை பாரிஸ் ஈழமுரசுவில் 90 களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரான ‘காந்தி தேசத்தின் மறுபக்கம்’ என்ற புளட் வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலும் காணலாம்.

2. முன்னைநாள் வீரகேசரி பத்திரிகையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தனை (பின்னர் இவர் புலிகளில் இணைந்து ஒரு சமரின் போது இறந்து விட்டார்) புலி என்று புளட் மோகனிடம் காட்டிக் கொடுத்தது சிவராமே என்ற தகவலை நித்தியானந்தனே தனது நண்பரான இப்போது ஆஸ்திரேலியாவில் புலிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டிருக்கும் நாகராஜா என்ற பத்திரிகையாளரிடம் தெரிவித்தை நாகராஜா சிவராமைப் பற்றி தேனீ இணையத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக புளட் மோகனால் சுடப்பட்ட நித்தியானந்தன் காயமடைந்தார் எனவும் பின்னர் நித்தி புலிகளில் இணைந்து கேணல் கருணாவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட காலத்தில் சிவராமால் கருணாவை நெருங்கவே முடியவில்லை என்பதையும் நித்தியின் மரணத்தின் பின்னரே சிவராமும் கருணாவும் நெருக்கமாயினர் என்றும் நித்தி சிவராமை இந்திய உளவுப் பிரிவான ரோ வின் ஒற்றன் என்று தன்னிடம் கூறியதையும் நாகராஜா அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நித்தி காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்சிவராம், டி.பி.எஸ் ஜெயராஜ், நித்தி ஆகிய மூவரும் பல தடவைகள் கொழும்பில் ஒன்றாகச் சந்தித்து மது அருந்திக் குலவியதை ஜெயராஜ் தன்னுடைய Sunday Leader கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

(புளட் மோகன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் மோகன் பற்றி ஒரு நீண்ட செய்திக் கட்டுரையை சிவராம் தமிழ் நெற் இல் எழுதினார். அதில் நித்தியானந்தன் என்ற பத்திரிகையாளரை புளட் மோகன் கொல்ல முயற்சித்ததாகவும் எழுதினார். கொலையை ஏவி விட்டது யார் என்ற உண்மையைச் சொல்ல மோகனும் நித்தியானந்தனும் உயிரோடு இல்லை. சிவராமும் தமிழ்நெற் உம் எழுதுவதுதானே வரலாறும் நாடகமும்.)

3. சிவராமைப் பற்றி டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய நீண்ட கட்டுரையில் ஒரு கட்டத்தில் சிவராம் negative reputationஐப் பெற்றதாகவும் இது தொடர்பாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிவராமோடு பழகுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதற்கமைய தானும் அக்காலத்தில் சிவராமோடு நெருங்கிப் பழகவில்லை என்பதையும் ஜெயராஜ் எழுதுகிறார்.

விடுதலைப் புலிகளிலிருந்து கருணா தான் பிரியப்போவதாக அறிவித்த ஆரம்பத்தில் சிவராம் கூட கரிகாலன் மற்றும் ரமேஷ் ஆகியோரைப் போல கருணாவின் பக்கமே இருந்ததாக இப்போது பரவலாக நம்பப்படுகிறது. சிவராம் புளட்டிலிருந்த ஆரம்ப காலங்களில் இருந்தே கிழக்கு மாகாணத்தின் நலன்களிலும் முக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவாராக அறியப்பட்டவர். வன்னிப் புலிகளூம் இதனடிப்படையில் சிவராமே கருணாவைத் தூண்டி விட்டிருக்கலாம் என்று சிவராமை சந்தேகித்தனர். பிளவு ஏற்பட்டபோது கருணாவின் சார்பாக சிவராமே தங்களை முதன் முதலாகத் தொடர்பு கொண்டார் என்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சியின் வட்டாரமொன்று தெரிவித்ததையும் கரிகாலனும் ரமேஷம் வன்னித் தலைமைப் பக்கம் கட்சி தாவியபோதே சிவராம் “இனிக் கருணா நிலைக்க முடியாது” என்ற முடிவுக்கு சிவராம் வந்ததையும் UTHR (J) அறிக்கை குறிப்பிடுகிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை.

தமிழ் நெற்றுக்கு நிதி செலவளிப்பவர்களில் வன்னிப் புலிகளின் ஆதிக்கமே இருக்கும். புலிகளின் வெளிநாட்டு அமைப்புக்களிலும் கிழக்கு மாகாணத்தவரின் செல்வாக்கு இல்லை. வடக்கு மாகாணத்தவரினதும் வன்னிப் புலிகளினதும் அதிக்கமே. தமிழ் நெற்றின் ஆசிரியாராக தொடர்ந்தும் இருக்க வேண்டும் புலிகளின் பணத்தில் உலகச் சுற்றுலாப் பயணங்களும் செய்ய வேண்டும் என்றால் (பிரித்தானிய சாம்ராச்சியம் கோலோச்சிய காலத்தில் ஒருவர் உலகம் சுற்ற வேண்டுமென்றால் அவர் பிரித்தானியக் கடற்படையில் சேர வேண்டும் என்பதைப்போல) வன்னித் தலைமைப் பக்கம் சாய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. கருணாவை மிகக் கடுமையாகக் கிண்டலடித்து கருணாவுக்கான ஒரு பகிரங்கக் கடிதத்தை வீரகேசரியில் எழுதினார். சிவராமின் பெருமளவிலான கட்டுரைகளைப் போலவே அதுவும் ஒரு கட்டணம் செலுத்தாத விளம்பரமே.

சிவராம் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் கடந்த காலங்களில் மிகக் கவனமாகவே இருந்துள்ளார். 1986 ம் ஆண்டு ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர் மற்றைய இயக்கங்களையும் அழிக்கத் தொடங்கினர். அடுத்ததாக புளட் மீது புலிகளால் யாழ் குடாநாட்டில் தாக்குதல் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கடைசி நேரத்தில் புளட்டின் உறுப்பினர்களாக யாழ் நகரில் தங்கி இருந்தவர்கள் சிவராமும் மெண்டிஸ் என்கிறவருமே. இருவருமே நிலமையின் உக்கிரத்தைத் தணிக்கும் பொருட்டு ராஜதந்திரமான ஒரு நடவடிக்கையைச் செய்தனர். புளட் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக ஒரு பத்திரிகை அறிக்கையை தயார் செய்து அதனை யாழ்ப்பாணத்தின் நான்கு பத்திரிகைகளிலும் வெளிவருமாறு செய்தனர். அறிக்கையைப் பார்த்த விடுதலைப் புலிகளின் திலீபன் ஏன் இவ்விதமான நடவடிக்கையை அவசரப்பட்டுச் செய்ததாக இரண்டு புளட் உறுப்பினர்களிடமும் நேரடியாகவே வந்து கேட்டார். இதற்குப் பதிலாக திலீபனிடம் சிவராம் நேரடியாகவே சொன்னார் “உங்களை நம்பேலாது மச்சான்”

இதனோடு மட்டும் சிவராம் நின்றுவிடாது விரைவிலேயே ஒரு படகில் தமிழ் நாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டார். மெண்டிஸ் கிட்டுவோடு நட்பு பாராட்டுகிறவர். கிட்டு மெண்டிஸின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதை நம்பி யாழ்ப்பாணத்திலேயே மெண்டிஸ் தங்கியிருந்தார். எனினும் சிவராம் வெளியேறிய சில தினங்களிலேயே மெண்டிஸ் புலிகளால் “கைது செய்யப்பட்டு” சில நாட்களின் பின் கொல்லப்பட்டார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து புலிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவென்று வாசுதேவா தலமையிலான ஒரு குழு கிழக்கு மாகாணத்தில் புலிகளைச் சென்று சந்திக்கவிருந்தது. புலிகளை இது தொடர்பாக வாசுதேவா நம்புவதை கடுமையாக எச்சரித்த சிவராம் தானும் அக்குழுவில் செல்வதைத் தவிர்த்தார். முடிவில் பேசவென்று அழைத்து வாசுதேவா முதலியோரை புலிகள் கொன்றது எலோருக்கும் தெரிந்ததே.

இவ்வகையாக தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிகச்சரியான மதிப்பீடுகளைச் செய்த சிவராம் தனது இறுதிக் காலத்தில் தனது பாதுகாப்பு சம்பந்தமாக மிக அசட்டையாக இருந்தது அதிசயமே. அதுவும் புளட்டின் உட்கட்சிப் படுகொலைகளின் இரத்தக்கறைகளை காவிக்கொண்டும் தனது சக புளட் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டும் கருணாவோடு கொழுவிக்கொண்டும் வன்னிப் புலிகளின் உத்தியோகப் பற்று அற்ற பிரச்சாரச் செயலாளராக கொழும்பில் இயங்கிக்கொண்டும் இன்னமும் கொழும்பில் வைத்து ஒரு “பத்திரிகையாளரான” தான் கொல்லப்படமாட்டேன் என்று சிறீலங்காவின் ஜனநாயகம் நீதி சட்டம் ஒழுங்கு என்பவற்றில் நம்பிக்கை வைத்து இருந்ததானது ஒரு முரண் நகையே.

சிவராமைப் பற்றி தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர் ஒரு துப்பாக்கி தாங்கிய போர் வீரர் என்ற மாதிரியான பிரமைகளை கட்டமைத்துள்ளன. உண்மையில் சிவராம் ஒரு சமரில் (battle) கூட பங்குபற்றியதில்லை. அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் யாரையாவது கொன்றது என்றால் அது அவரது சக புளட் இயக்கத் தோழர்களான அகிலனும் செல்வனுமே.

மாமனிதர் விருது வழங்கப்பட்டதை அடுத்து தமிழ் பத்திரிகைகளில் பலர் சிவராமுக்கு அதிபுனையப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளை போட்டிபோட்டுக்கொண்டு எழுதினர். அவர் ஒரு உன்னதமான பத்திரிகையாளராகவும் புத்திஜீவியாகவும் கட்டமைக்கப்பட்டார். இப்படி எழுதியவர்கள் விடுதலைப் புலிகளையும் புலிப்பாசிசத்தையும் அண்டிப் பிழைப்பு நடத்தும் ஊடக “யாவாரிகள்”. இவர்களில் பலர் சிவராமின் உண்மை வரலாற்றை அறிந்தவர்கள் என்பது போக கடந்த காலங்களில் சிவராமை கடுமையாக விமர்சித்தவர்கள். தெரிதல், காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்களிலும் அஞ்சலிகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்மீக மற்றும் சோதிட மாத இதழ்கள், மங்கையர் மஞ்சரி, அம்புலிமாமா என்பவற்றிலும் சிவராமுக்கு அஞ்சலிகள் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.

ராஜ்பால் அபேயநாயக்கா சிவராமை யேசு கிறிஸ்து அளவுக்கு ஆக்காத குறைதான். Sunday Times இல் வெளிவந்த சிவராமின் அஞ்சலிக் கூட்ட அழைப்பில் சிவராமின் ‘விசிறிகள்’ (fans) எலோரும் வரலாம் என்று வெட்கமின்றி எழுதப்பட்டது. அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக உருவாக்கப்பட்டார். சிவராமின் அடிமுதல் நுனி வரை அறிந்த நடுநிலமையான பத்திரிகையாளரான டி.பி.எஸ் ஜெயராஜே சிவராமின் மறுபக்கங்கள் பற்றி அடக்கி வாசித்தார். ஜெயராஜ் எழுதிய நீண்ட தொடரில் புனைவுகளே அதிகம் என்பது போக அதில் அதிகளவான தரவுப்பிழைகள் இடம் பெற்றன.

அகிலன் செல்வம் கொலையைப் பற்றி எழுதுகிற ஜெயராஜ் “எனினும் விசாரணையின் போது சிவராம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக” புனைந்து பல்டி அடிக்கிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட புளட்டின் கங்காரு நீதிமன்றங்களில் ஜெயராஜுக்கு எப்போது உடன்பாடு வந்ததோ தெரியாது. தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத பேரா. சிவத்தம்பி, சிவராமை ” நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று எழுதினார்.

மாத்தையாவினாலும் கிட்டுவினாலும் நம்பகரமற்றவர் என்று மிகச் சரியாகவே மதிப்பிடப்பட்ட சிவராம் தனது குறுகிய கால வாழ்க்கையினாலும் அதனை உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார்.

(தேசம் சஞ்சிகை இதழ் 25 (நவம்பர் – டிசம்பர் 2005))

Read more...

Wednesday, April 27, 2016

நாட்டின் இறைமைக்கு எதிரான எந்தவொரு தீர்மானமும் இங்கு செல்லுபடியாகாது. வடமாகாண சபைக்கு மைத்திரி.

நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் எந்தவொரு வரைவுக்கும் அனுமதியோ அல்லது ஆதரவோ வழங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபருக்கும் எந்தவொரு பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிமை இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிரிக்கும் பிரேரணைகளை செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.

இன்று காலை ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்திப் பணிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாறான பிரேரணகைள் நிறைவேற்றப்பட்டவுடன் பதற்றமடையத் தேவையில்லை என்றும் கூறினார்.

தேர்தல் ஒன்று நெருங்கும் போது இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாகவும், ஜெயலலிதாவும் இவ்வாறு செய்றபட்டு இலாபம் அடைவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

வெட்வரி அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் வினவப்பட்ட போது, பொது மக்களை பாதிக்கும் விதமாக எவ்விதத்திலும் வெட் வரி அதிகரிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறினார்.

வர்த்தக துறையினருக்கே வெட் வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக வீணாக அச்சம் அடையத் தேவையில்லை என்றும் கூறினார்.

அத்துடன் சிலர் அரசாங்கத்தை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சதிகாரர்களாக செயற்படுவதாகவும், அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் தான் இடமளிப்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

தானும் பிரதமரும் இணைந்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாகவும், அந்தப் பயணத்தை நாசவேலை செய்வதற்கு எவருக்கும் இடம் வழங்குவதில்லை என்றார்.

கடந்த 48 ஆண்டுகளாக தான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியேற காரணம் கடந்த அரசாங்கத்தின் நிர்வாகமே என்றும், கடந்த அமைச்சரவையில் இருந்தவர்களுக்கும் இவை நன்கு தெரியும் என்றும் கூறினார்.

சாப்பாட்டு மேசைக்கு சென்றால் அங்கு முதலில் குடும்ப உறுப்பினர்களின் தீர்மானங்கள் மாத்திரமே பேசப்படுவதாகவும், குடும்பத்தின் 05 உறுப்பினர்கள் மாத்திரம் தீர்மானம் எடுக்கும் இடமாக அது இருந்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

முன்னர் இருந்த மோசமான ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு அறியக் கொடுக்காமல் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களுக்காக முன்நிற்பது குறித்து தான் வருத்தமடைவதாக கூறினார்.

ஊடகங்கள் எப்போதும் சமநிலை தன்மையுடன் செயற்பட வேண்டிய போதும் சில ஊடகங்கள் மோசடிக்காரர்களின் தேவைக்கு ஏற்றவாறு செயற்படுவதாக கூறினார்.



Read more...

ஜனா மீதான தாக்குதலும் பூசாரியின் காவாலித்தனமும்.

கடந்த புதன் கிழமை இரவு வாழைச்சேனை கருணைபுரம் குழந்தையேசு கிறவுண் விளையாட்டு மைதானத்தில், கிறவுண் விளையாட்டு கழகத்தின் 27 வது வருட நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண சபையின் த.தே.கூ உறுப்பினரும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான கோவிந்தன் கருணாகரன் என்கின்ற ஜனா உரையாற்றுகையில், மக்கள் முன் அவரது ஒலிவாங்கி பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் தெரியவருவது யாதெனின்:

கிறவுண் விளையாட்டுக்கழகத்தினரால் கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வுக்காக கடந்த சில வருடங்களாக பூசாரியான யோகேஸ்வரன் எம்பி நிதியுதவி செய்து வந்துள்ளார். அந்நிதியுதவிக்கு பிரதிபலனாக நிகழ்வின் பிரதம விருந்தினர் இருக்கையையும் பூசாரி அலங்கரிந்து வந்துள்ளார்.

ஆனால் இம்முறை விளையாட்டுக்கழகத்தினர் யோகேஸ்வரன் எம்பி யிடம் நிதியுதவி கேட்டு சென்றபோது, பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதைதொடர்ந்து ஜனாவிடம் சென்ற விளையாட்டுக்களத்தினருக்கு நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. தொடர்ந்து நிகழ்விற்கு ஜனா பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

பிரதம அதிதி கதிரை பறிபோனதை சகித்துக்கொள்ள முடியாத எம்பி யோகேஸ்வரன், பிரதேசத்தை சேர்ந்த மதுவுக்கு அடிமையான இளைஞன் ஒருதனுக்கு சாராயப்போத்தலை வாங்கி கொடுத்து மேற்படி இழிசெயலை நடாத்தியுள்ளார்.

மதுவுக்கு அடிமையான சிவகுமார் என்ற இளைஞன் கடந்த 23 ம் திகதி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு ஜனாவை தாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 25 ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கதிரைக்காக, மேடைக்காக, பதிவிகளுக்காக, ஒலிவாங்கிக்காக தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இச்சம்பவம் சிறந்து உதாரணமாகும்.

பூசாரியின் இக்குழிபறிப்பு தொடர்பில் கூட்டமைப்பு விசாரணை மேற்கொண்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மக்கள் வினவுகின்றனர்.

Read more...

Tuesday, April 26, 2016

உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பாலஸ்தீன மக்கள். எம்.ஐ.முபாறக்

பாலஸ்தீன நிலத்தில் யூத நாடொன்றை உருவாக்கும் திட்டம் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டு நிறைவேறியது.பாலஸ்தீன மக்களுக்கே தெரியாமல்-அவர்களிடம் கேட்காமல் ஐ.நா பாலஸ்தீனின் 55 வீத நிலத்தை யூதர்களுக்கு பறித்துக் கொடுத்தது.அது போதாது என்று அன்றிலிருந்து இன்று வரை யூதர்கள் பாலஸ்தீன் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றனர்.

இஸ்ரேல் கைப்பற்றிய அதிகமான நிலங்களுள் அதிகமான நிலங்களில் யூத குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; இஸ்ரேலிய தொழில்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன; யூதர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சிக்கான பெரும் பங்களிப்புகள் இந்த நிலங்களில் இருந்துதான் பெறப்படுகின்றன. மறுபுறம் இந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் இந்த நிலங்களிலேயே இஸ்ரேலின் கை கூலிகளாக-அடிமைகளாக பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு பொருளாதாரக் கட்டமைப்பை-யூத குடியிருப்புகளை சிதைத்து விட்டு அந்த நிலங்களை பாலஸ்தீனிடம் இஸ்ரேல் மீள ஒப்படைக்கும் என்பது கனவிலும் நடக்காத ஒன்று.அவற்றைக் கைப்பற்ற பாலஸ்தீன மக்கள் இன்னும் போராட வேண்டும்.

யூதர்களால் பறிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில்1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சியோனிச தலைவர் டேவிட் பேங்கியூரியனால் இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது.மறு நாளே யூதர்கள் சுமார் 500 பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து 7 லட்சம் முஸ்லிம்களை வெளியேற்றி அந்த நிலங்களைக் கைப்பற்றினர்.அதே கால பகுதியில் பல நாடுகளில் இருந்து 7 லட்சம் யூதர்கள் வரவழைக்கப்பட்டு அந்த நிலங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இதனால்,இஸ்ரேலுக்கும் அதனைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது.அந்த யுத்தத்தின் பின் பாலஸ்தீனின் காஸா பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும்-அல்-அக்ஸா பள்ளிவாசல் உள்ளிட்ட மேற்குக் கரை ஜோர்தானின் நிர்வாகத்தின் கீழும் வந்தன.

1967 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது யுத்தத்தின் முடிவில் காஸா,அல்-அக்ஸா உள்ளிட்ட மேற்குக் கரை,எகிப்துக்குச் சொந்தமான சினாய் பாலைவனம்,ஜோர்தானுக்கு சொந்தமான ஜோர்தான் பள்ளத்தாக்கு,சிரியாவுக்குச் சொந்தமான கொலன் ஹெய்ட்ஸ்,லெபனானுக்கு சொந்தமான ஷெபா விவசாய நிலங்கள் போன்றவை இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டன.

1978 ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்தின் சினாய் பாலைவனத்தை எகிப்திடம் மீள ஒப்படைத்தது.2005 ஆம் ஆண்டு காஸாவை விட்டும் வெளியேறியது.காஸாவில் நிறுவப்பட்டிருந்த யூத குடியேற்றங்களை மேற்குக் கரைக்கு மாற்றியது.

மேற்குக் கரை,ஜோர்தான் பள்ளத்தாக்கு,சிரியாவின் கொலன் ஹெய்ட்ஸ்,லெபனானின் செபா விவசாய நிலங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.

கைப்பற்றப்படட அந்த நிலங்களை மீட்டெடுக்க அந்தந்த நாடுகள் ஏதோவொரு வகையில் முயற்சித்துக் கொண்டு இருக்கின்ற போதிலும் மேற்குக் கரையை மீட்கும் போராட்டமே முக்கியமானதாகும்.

மேற்குக் கரையை-அல்-அக்ஸா பள்ளிவாசலை மீட்கும் போராட்டம் விரைவில் வெற்றி பெற வேண்டும் என்பதே உலக முஸ்லிம்கள் அனைவரினதும் விருப்மாகும்.இதை மீளக் கைப்பற்றும் பாலஸ்தீன போராட்டத்துக்கு கை கொடுக்க வேண்டியது உலக முஸ்லிம் நாடுகளின் கடமையாகும்.இந்தக் கடமை சரியாக நிறைவேற்றப்பட்டால் பாலஸ்தீன் இஸ்ரேலிடமிருந்து மிக விரைவில் முழுமையாக மீட்கப்படும் என்பது நிச்சயம்.

ஆனால்,இந்த விடயத்தில் உலக முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் காட்டும் அசமந்தப் போக்கால் பாலஸ்தீன் தினம் தினம் அழிவைச் சந்தித்து வருகின்றது.இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொலைகளும் நில ஆக்கிரமிப்புகளும் நாளுக்கு நாள் தொடரவே செய்கின்றன.

உலக முஸ்லிம்களின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்கின்ற ஆயுதக் குழுக்களும் சரி.முஸ்லிம் நாடுகளும் சரி பாலஸ்தீன் விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றன.முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கின்றன.இது மேற்கு நாடுகளின் திட்டமிட்ட சதியாகும்.இது விரிவாக ஆராயப்பட வேண்டியது.

பலஸ்தீனின் நிலத்தில் 55 வீதமான நிலத்தைத்தான் ஐ.நா சபை 1947 இல் யூதர்களுக்குப் பறித்துக் கொடுத்து.ஆனால்,அந்த நிலம் போதாது என்று கூறி மறு நாள் முதலே அவர்கள் மேற்கொண்ட நில ஆக்கிரமிப்பின் விளைவாக இப்போது 85 வீதமான நிலங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

அந்த நிலங்களில் வசித்து வந்த பாலஸ்தீன மக்களை விரட்டியடித்துவிட்டு அங்கு தொழில்சாலைகளும் யூதக் குடியுருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன;அமைக்கப்பட்டு வருகின்றன.அண்மைக்காலமாக நில ஆக்கிரமிப்பும் யூதக் குடியிருப்புக்கள் அமைப்பதும் தீவிரமடைந்துள்ளன.சர்வதேசத்தின் எதிர்ப்புகளையும் மீறி இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டே இருக்கின்றது.

தினமும் பாலஸ்தீன மக்கள் அகதிகளாகிக் கொண்டே இருக்கின்றனர்.தினமும் யூதக் குடியிருப்புக்கள் இருக்கின்றன.மேற்குக் கரையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள 60 வீதமான நிலங்களுக்குள் பாலஸ்தீன அதிகார சபையால் கூட நுழைய முடியாதுள்ளது.கிழக்கு ஜெருசலத்தின் நிலைமையும் படு மோசமானது.அங்கும் வீடுகள் உடைக்கப்படுவதும் யூதக் குடியிருப்புகள் அமைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன.

2009 முதல் 2014 வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 23 வீதமான யூதக் குடியிருப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.இன்னும் 55,548 வீடுகளை அமைப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.2013 ஆம் ஆண்டு மார்ச் முதல் இப்போது வரை தினமும் சராசரி 460 வீடுகள் என்ற அடிப்படையில் வீடுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.2014 இல் 3100 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டன.ஜெருசலத்தில் மிக விரைவில் 90,000 மக்கள் விரட்டப்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு இஸ்ரேலின் யூதக் குடியிருப்பு விஸ்தரிப்பும் நில அபகரிப்பும் தொடர்ந்த வண்ணமேதான் உள்ளன.சர்வதேச நாடுகளும் முஸ்லிம்களும் இதற்கு எதிராகக் கண்டனங்களை மாத்திரம் தெரிவிக்கின்றதே தவிர இவற்றுக்கு எதிராக-இவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து அவர்களுக்கு மத்தியில் யூதக் குடியிருப்பை நிறுவி பாலஸ்தீனர்களின் பலத்தை வெகுவாகக் குறைத்துவிடும் வேலையை இஸ்ரேல் கட்சிதமாகச் செய்து வருகின்றது.இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பாலஸ்தீனர்களின் ஜனநாயகப் போராட்டத்தை வெகுவாகக் குறைப்பதே இஸ்ரேலின் ஒரே நோக்கம்.

அது மாத்திரமன்றி,''அகன்ற இஸ்ரேல்'' என்ற இஸ்ரேலின் அந்த நாசகாரத் திட்டத்துக்குள் பாலஸ்தீன் உள்வாங்கப்பட்டு பாலஸ்தீன் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும்.அதன் பின் பாலஸ்தீனர்கள் அவர்களின் மண்ணுக்காகப் போராட முடியாமல் போய்விடும்.இதனால்,இஸ்ரேல்-பாலஸ்தீன் என்ற இரு நாட்டுத் திட்டம் வலுவிழந்து போய்விடும்.

உலக நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் தொடர்ந்தும் இவ்வாறு பாராமுகமாக இருந்தால் பாலஸ்தீன் என்ற நாடு விரைவில் இல்லாமலே போய்விடும்.இனிமேலாவது முஸ்லிம் நாடுகள் சிந்தித்து முடிவெடுக்குமா?











Read more...

Monday, April 25, 2016

ஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி. செ.கார்கி

அரசியலில் நாம் எவ்வளவோ வக்கிரம் பிடித்த பேர்வழிகளை எல்லாம் பார்த்திருக்கின்றோம். எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை அவர்களின் கடந்த கால செயல்பாடுகளைச் சொல்லி சில பேர் விமர்சிப்பார்கள், சில பேர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாக்கி விமர்சனம் செய்வார்கள். ஆனால் யாரும் தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை இழிவுபடுத்த மாட்டார்கள். ஒரு கட்சியின் பலம் என்பதே அந்தத் தொண்டர்கள் தான்.

ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தரும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை நம்பி தொண்டர்கள் இந்த முறையாவது தமது வாழ்க்கையில் நல்லது ஏதும் நடக்காதா என எதிர்பார்ப்போடு வாக்களிக்கின்றனர். வழக்கம் போல அவர்கள் ஏமாற்றப்படும் போதும் கட்சியின் மீது கொண்ட தீவிர விசுவாசத்தால் தன்னுடைய தலைவரின் பெயர் கெட்டு விடக்கூடாதே என தான் ஏமாந்தாலும் தலைவனின் மானத்தைக் காப்பாற்ற மல்லுக்கட்டும் பல தொண்டர்களை இன்னமும் நீங்கள் பார்க்கலாம். தொண்டர்களின் இந்த வெள்ளந்தியான மனம் தான் அரசியல் தலைவர்களை இன்னமும் இங்கு செல்வாக்கோடு வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது.

நம்மைப் போன்ற குறைந்த பட்ச அரசியல் அறிவு உள்ளவர்கள் தலைவன் தப்பு செய்தான் என்றால் அவனை ஏகத்துக்கும் எடுத்து எறிந்து பேசிவிடுவோம். ‘போடா நீயும் உன் கட்சியும்’ என தூக்கி எறிந்துவிட்டு ஒத்துவரும் கட்சியில் ஐக்கியம் ஆகிவிடுவோம். ஆனால் காலங்காலமாக தலைவனின் முகத்திற்காகவும் அவன் எப்போதோ செய்த ஏதோ ஒரு நல்லதிற்காகவும் அவனை இன்னும் அன்போடு நினைத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான அரசியல் அற்ற மக்கள், தலைவன் என்னதான் ஊழல் செய்தாலும் ஊதாரித்தனம் செய்தாலும் அதை பெரிது படுத்தாமால் அதே கட்சியிலேயே கடைவரை தன்னுடைய உயிர் மூச்சு அடங்கும் வரை காலத்தை தள்ளுகின்றனர். இது போன்ற மக்களை உலகின் வேறு பகுதியில் எங்காவது பார்க்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தமிழ்நாட்டில் நாம் பார்க்க முடியும்.



தனக்குப் பிடித்த தலைவியின் பேச்சைக் கேட்க மாட்டோமா, அவரை நேரில் ஒருமுறையேனும் வாழ்க்கையில் பார்க்க மாட்டோமா என தன்னுடைய குடும்பப் பிரச்சினை, வேலை என அனைத்தையும் ஒரு நாள் தள்ளிவைத்துவிட்டு கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்துதரும் மினி ஆட்டோக்களிலும், லாரிகளிலும் ஆட்டு மந்தைகளைப்போல ஏறிக்கொண்டு மகிழ்ச்சியில் ஏதோ சுற்றுலாவுக்குப் போகும் மனநிலையில் வரும் அந்தத் தொண்டனை ஒரு கட்சியின் தலைவி எப்படி நடத்தியிருக்க வேண்டும்? ஒன்றுமே இல்லாமல் அன்னக்காவடியாக, ஆட்டக்காரியாக தமிழகம் வந்த தன்னை இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக்கிய அந்த அரசியலற்ற அற்பப் பிறவிகளை, உள்ளங்களையில் வைத்தல்லவா தாங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் அவர்களை ரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் உள்ள ஒரு மனிதப் பிண்டமாகவேனும் கருதியிருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் நாம் இதையெல்லாம் யாரிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்? குறைந்த பட்ச நேர்மையையாவது தம்வாழ்நாளில் கடைபிடிக்கும் ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஆண்டாண்டு காலமாக ஊறிப்போன பார்ப்பனத் திமிரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மிருகத்திடம் இருந்து இதை நாம் எப்படி எதிர்பார்க்க முடியுமா? சுயமரியாதை அற்ற, முதுகெலும்பற்ற கூழைக்கும்பிடு போடும் ஒரு அடிமைக் கூட்டத்தை தன்னுடைய பரிவாரமாகக் கொண்டிருக்கும், சாமானிய மக்களை தான் கொடுக்கும் நூறு ரூபாய்க்கும், பிரியாணிக்கும், ஆசைப்பட்டுவரும் பஞ்சை பராரிகளாக பார்க்கும், கொழுத்துப்போன பணத்திமிரில் ஆட்டம் போடும் ஒரு மனநோயாளியிடம் இருந்து இதை நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த உலகத்தில் தான் மட்டுமே வாழ்வாங்கு வாழ்வதற்குத் முழுத் தகுதியானவள்; மற்ற அனைவரும் தான் அப்படி வாழ்வதற்காக குற்றேவல் புரிய கடவுளால் படைக்கப்பட்டவர்கள் எனக் கருதும் ஒரு சுயமோகிதான் இந்த மனநோயாளி ஜெயலலிதா. அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் அதற்காக வேதனைப்பட வேண்டும்; அவர் சிறைக்குச் சென்றால் அவரது தொண்டர்கள் தீக்குளிக்க வேண்டும்; பொதுமக்களை கடைகளை மூடச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும்; பேருந்துகளை எரிக்க வேண்டும்; முடிந்தால் உள்ளே இருக்கும் மாணவிகளையும் சேர்த்தே எரிக்க வேண்டும்; கோவிலில் பால்குடம் எடுக்க வேண்டும்; அலகு குத்திக் கொள்ள வேண்டும்; மண்சோறு தின்க வேண்டும்; மொட்டை போட்டுக் கொள்ள வேண்டும்; மீசை எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கெல்லாம் ஜெயலலிதாவிற்குத் தொண்டர்கள் வேண்டும்; கழகக் கண்மணிகள் வேண்டும். மற்றபடி தன்னுடைய வேலை முடிந்துவிட்டதென்றால் அவன் எக்கேடு கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன என்பதுதான் ஜெயலலிதாவின் மனுநீதி!

தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் அடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய தேர்தல் பரப்புரையை வேண்டுமென்றே மதியம் 3 மணிக்கு ஜெயலலிதா வைக்கின்றார் என்றால், தன் தொண்டர்களைப் பற்றி என்ன மாதிரியான எண்ணத்தில் ஜெயலலிதா இருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். வெயில் 104 டிகிரி முதல் 106 டிகிரி வரை இருப்பதால் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பல மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். தினமும் நாளிதழ்கள் கூட படிக்காத, நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத, யாரோ எழுதிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல அப்படியே பேசும் ஜெயலலிதாவிற்கு இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்?

தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை மறந்து ஒரு மகாராணியைப்போல ஹெலிகாப்டரில் வந்து, குளுகுளு வசதி செய்யப்பட்ட மேடையில் அமர்ந்து, அதுவும் மனுதர்ம சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட மேடையில் அதாவது பார்ப்பனன் உயர்ந்த இடத்திலும் சூத்திரன் கீழ்நிலையிலும் உள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து ‘மக்களுக்காக நான்’, மக்களால் நான்’ என ஏதோ சினிமா பட பாணியில் பிதற்றும் இந்த சர்வாதிகாரியின் பேச்சுக்கு உச்சி வெயிலில் மண்டையைப் பிளக்க அரைமயக்கத்தில் அமர்ந்துகொண்டு மக்கள் கைதட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடுமை வேறு எங்காவது நடக்குமா?




ஜெயலலிதாவின் இந்த கேவலமான கேடுகெட்ட பேச்சை கேட்பதற்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்த தொண்டர்கள் ஏறக்குறைய ஐந்துபேர் இதுவரை இறந்துள்ளனர். விருத்தாசலத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பரப்புரையின் போது மூன்று பேரும், 20-ம் தேதி சேலத்தில் நடந்த பரப்புரையின் போது இரண்டுபேரும் வெயிலின் கடுமை தாங்காமல் இறந்துள்ளனர். ஆனால் இந்த மரணங்கள் எல்லாம் ஜெயலலிதா என்ற பாசிச மனநோயாளியின் மனதை மாற்றிவிடப் போதுமானவை அல்ல.

ஜெயலலிதாவைப் பொருத்தவரை அடுத்தவனின் உயிரை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பவர். 1992 ஆம் ஆண்டு மகா மக குளத்தில் ஜெயலலிதா குளிக்கச் சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 60 பேர் பலியானார்கள். அப்போதும் அதே அலட்சிய மனநிலையில்தான் ஜெயலலிதா இருந்தார்; இப்போதும் அதே அலட்சிய மனநிலையில் தான் இருக்கின்றார். அதனால் தான் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இறந்தவர்கள் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார்கள் என அவரால் பேச முடிகின்றது.

தமிழ்நாட்டில் 2011 முதல் 2015 வரை 9948 கொலைகள் நடந்துள்ளன; மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான கொள்ளையும் மற்றும் திருட்டுச் சம்பவங்களும் நடந்துள்ளன என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஜெயலலிதவோ தமிழ்நாடு ‘அமைதிப் பூங்காவாக’ இருப்பதாக சொல்கின்றார். ஜெயலலிதா போன்ற பாசிச வக்கிரம் பிடித்த மனநோயாளி இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டார் என்றால் நிச்சயம் தமிழ்நாடு முழு ‘அமைதிப் பூங்காவாக’ மாறிவிடும். ஆம் நிச்சயம் ‘அமைதிப் பூங்காவாக’ மாறிவிடும்.

- செ.கார்கி

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com