Sunday, July 14, 2013

கேட்டயளே, கேட்டயளே.. கொண்டம் பிடிபட்ட கதையை போட்டுடைத்தா மருத்துவச்சி!

வந்தேன்டா பால் காரேன்.. பசும்.. மாட்டப்பற்றிப் பாடப்போறேன்.. சீ சீ சீ கொண்டம் எம்பி யைப் பற்றிப்பாடப்போறேன்..

கேட்டயளே.. நம்பட முள்ளிவாய்கால் முடிவுக்குப்பிறகு சும்மா சொல்லக்கூடாது சனங்களின்ர நடத்தைகளில சரியான மாற்றம் பாருங்கோ..

என்னைத் தெரியுந்தானே விடிஞ்சொளும்பி மாட்டிலை கறந்து கறந்து பழக்கப்பட்டு மனிசரக்கண்டாலும் என்னால கறக்காம இருக்க முடியிதில்ல..

நம்மட பொடியள் இருக்கேக்க நான் சனங்களிட்ட கறக்க வெளிக்கிட்டால் பாலை வாங்கின கையோட காசைத் தந்துபோட்டு படலையை இழுத்தடைச்சுட்டு போயிடுவினம்..

ஏனடி ஆத்தே நான் பால்காரனெட்டே உப்படி என்றால்.. ஐயோ அண்ணே நாங்கள் தின்றத்துக்கும் குடிக்குறதுக்கும் மாத்திரந்தான் வாய் திறக்கிறநாங்கள் என்பினம்...

ஆனால் இன்று நிலைமை வேற.. கதையை கொடுத்தால் வாங்கின பால் தயிராகும்வரை நின்று கொட்டுயினம்..

நான் முந்தாநேற்று பாருங்கோ நம்மட கொண்டம் எம்பியின்ர வீட்டுப்பக்கம் பால் கொடுக்கப்போனன்.. பக்கத்து வீட்டு மருத்துவிச்சி அக்காவோடை கொஞ்சநேரம் கதையை கொடுத்தன்.. எங்க எம்பியின்ர சிலாவினையை காணம் என்றதான் தாமதம் ஐயோ வருகுது வருகுது எண்கணக்கிலை..

அக்கா சரியான கடுப்பாகத்தான் இருக்கிறா.. நம்மட எம்பி வீட்டிலை கொண்டம் கொண்டேனர் கணக்கிலை பிடிபட்டதெல்லே.. அப்ப இந்த மருத்துவிச்சி அக்கா எம்பியிட்ட.. "தமிழ் மக்களின்ர பிரச்சினைகளை உலகிற்கு சொல்லப்போறன் என்று தம்பட்டம் அடித்து வெளிநாடுகளுக்கு போய் விதம் விதமா வாங்கிக்கொண்டு வச்சிருக்கிறயள்.. இது என்ன வேலை வாத்தியார்.." என்று கேட்டிருக்கா..

நம்மட கொண்டம் எம்பி என்ன சொல்லிருக்கிறார் தெரியுமே.. தான் வந்து பாலா அண்ணைக்கு தலைவர் கொடுத்த பட்டம் இருக்கெல்லே பட்டம்.. அந்தப்பட்டத்தின்ர பெயரிலை பத்திரிகை ஒன்ற அடித்து புதுப்பட்டம் விட லோசித்தாராம்.. அதுக்கு தம்பி பொன் காந்தன் தானாம் சகலதும்.. இந்த எடுப்பு உதயனை கவுழ்கிறத்துக்குத்தான் என்று சப்ரா கள்ளன் கணக்கு போட்டுட்டாராம்.. தன்ர பட்டம் உதயன் என்கின்ற பட்டத்தை முந்திடும் என்ற பயத்திலை சப்ரா கள்ளந்தானாம் மஹிந்தரோடை உள்ள கள்ள உறவை வைத்து தன்னை மாட்டிவிட்டதாக சொல்லியிருக்கின்றார் மிஸ்ரர் கொண்டம்...

நானும் சும்மா வாயை வைத்துக்கொண்டிருக்காம சிலநேரம் இருக்கும்தானே அக்கா அரசியலில உப்புடி குழிபறிப்புக்கள் நடக்கிறது சகசம்தானே என்றேன்.. மனிசிக்கு வந்திச்சி கோவம் கண்டயளே கோபம் என்றா கோவம்.. போட மடயா என்டு போட்டா.. ஏன் அக்கா என்றேன் ..

உவன் உப்புடி தன்ன சப்ரா எம்பி தான் போட்டுக்குடுத்தது எண்டுபோட்டு உப்பென்னடா என்றால் அதே சப்ராவோட இணைந்து கனடாவுக்கு போயிருக்கான் வரட்டும் வேசமோன் எண்டா..

ஐயோ காணும் என்று மனதுக்குள்ள நினைசுக்கொண்டு.. அக்கா பால் தயிராகுது.. நாளைக்க கதைப்பம் என்ன.. என்று ஒருமாதிரியா கழண்டுட்டன்..

Read more...

முஸ்லிம் பெண்கள் கட்டாயமாக அவர்களுடைய முகத்தை காட்ட வேண்டும் - மஹிந்த தேசப்பிரிய

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்கள் தமது ஆள் அடை யாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டையினை கொண்டு வரும் அதேவேளை, கட்டாயமாக அவர்களுடைய முகத்தையும் அங்குள்ள அதிகாரிகளுக்கு காண்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இவ்வாறு நிகாப் அணிந்து வரும் முஸ்லிம் பெண்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி சோதனையிடுவதற்கென சகல வாக்குச்சாவடிகளிலும் பெண் உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித் தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வாக்களிக்க வரும் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதனை தடை செய்யுமாறு நாம் கோரவுமில்லை. ஆனால் வாக்குச்சாவடிகளில் இருக்கும் பெண் உத்தியோகத்தர்களிடம் தேசிய அடையாள அட்டையினை காண்பிக்கும் போது முகத்தையும் காண்பிக்க வேண்டும்.

தேர்தல் சமயத்தில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் வீண் அசம் பாவிதங்களைத் தவிர்ப்பதற்குமே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதேவேளை குறித்த மூன்று மாகாணங்களிலும் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினை தாக்க தீவிரவாதிகள் திட்டம்

சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகரா லயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் மேற்கொ ள்ளப்படுவதாக கூறப்படும் கடிதமொன்று, நேற்று முன் தினம் தமக்கு கிடைத்ததாக சென்னையிலுள்ள இலங் கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாட் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதென பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு தமக்கு கிடைத்த கடிதம் இந்திய பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமீர் அஜ்வாட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தியாவிலுள்ள இலங்கை நிறுவனங்கள் மற்றும் அதில் கடமை புரியும் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக தெரிவித் துள்ளார். இதற்கமைய இந்திய பொலிஸார் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more...

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் உயிரிழப்பு - ஆலையடிவேம்பில் சம்பவம்

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் மருமகனின் தாக்குத லுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறை சமரசப்படுத்த முற்பட்டபோது பொல்லால் தாக்கப்பட்ட குறித்த பெண், கடந்த மாதம் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான மருமகன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்துள்ளனர்.

Read more...

நெதர்லாந்து பெண் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரால் கொடூரமாக கற்பழிப்பு!

நெதர்லாந்தை சேர்ந்த 21 வயது பெண் கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார் அப்போது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலபியோ அந்தோணி கிரனடா (46), ஜெனீபர் பீஸ்டன் (32), ஆகிய 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுடன் நட்பாக பழகினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர்கள் அப்பெண்ணை கடத்தி சென்று மெல்போர்னில் உள்ள மற்றொரு ஓட்டலில் அடைத்து வைத்தனர். பின்னர் அவரை 2 மாதமாக 60 தடவைக்கும் மேல் கற்பழித்துள்ளனர். அங்கிருந்து தப்பிக்க முயன்ற அப்பெண்ணை அடித்து உதைத்துள்ளதுடன் கியாஸ் லைட்டரால் சூடு வைத்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே அங்கிருந்து தப்பிய பெண் பொலீசில் புகார் செய்ததையடுத்து பொலீசார் வழக்கு பதிவு செய்து குறித்த 2 பேரையும் கைது செய்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more...

மதுரைக்கு வந்த சோதனை: தமிழில் வாதாடினால், வழக்குகள் தள்ளுபடி!

மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இரு வழக்குகளில் வழக்கறிஞர் தமிழில் வாதாடியதால், அந்த வழக்குகளை நீதிபதி தள்ளுபடி செய்த சம்பவம், வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புலவர் சுந்தர்ராஜன் என்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியர், தனது புதிய வீட்டிற்கு பிளான் அப்ரூவல் வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இதுபோல், மதுரையை சேர்ந்த ஆயிஷா பானு என்ற பெண்மணி மெக்காவில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தனது கணவரை மீட்டுத்தர கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளிலும் வழக்கறிஞர் பகத்சிங் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்தார்.

இந்த வழக்குகளின் விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் பகத்சிங் தமிழில் வாதாடியபோது, நீதிபதி மணிக்குமார் “ஆங்கிலத்தில் வாதாடுங்கள்” என்று கூறினார்.

வழக்கறிஞர் பகத்சிங், “எனக்கு தமிழில் வாதாடுவதுதான் சுலபமாக இருக்கிறது. அத்துடன், எனது கட்சிக்காரருக்கும் நான் என்ன சொல்கிறேன், எப்படி வாதாடுகிறேன் என்று புரியும்” என்று கூறினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

மதுரையிலேயே தமிழில் வாதாட முடியாதா? தமிழில் வாதாடிய ஒரே காரணத்துக்காக வழக்கை தள்ளுபடி செய்வதா என்று தமிழ் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பகத்சிங், “ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு அனுமதி கோரி, தமிழக சட்டமன்றத்தில் 2006-ம் ஆண்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது சம்பந்தமாக நடவடிகை எடுக்கப்படவில்லை.

2010-ம் ஆண்டு, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராடியதைத் தொடர்ந்து ‘தமிழில் வாதாடலாம். அதற்கு தடையில்லை’ என்று நீதிபதிகள் வாய்மொழி உத்தரவு கொடுத்தனர். இதை வைத்து கடந்த 2 வருடங்களாக தமிழில் வாதாடி வருகிறோம். இந்த நிலையில் நீதிபதி மணிக்குமார் இவ்வாறு செய்திருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழில் வாதாடுவதற்கு சட்டபூர்வமாக அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்” என்றார்.



Read more...

பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் வழியில் எரிபொருள் நிரப்பக் கூடாது!

பயணிகளை ஏற்றுவதற்கு முன்னர் தேவையான எரி பொருளை நிரப்பிய பின்னரே பஸ்கள் சேவையை ஆரம் பிக்க வேண்டும் எனவும், பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, மேல் மாகாண தனியார் பஸ் போக்குவரத்து போக்கு வரத்து அதிகார சபையின் தலைவர் அமில ரண்மண்டல தெரிவி த்தார்.

பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணிக்கும் போது எரிபொருள் நிரப்பு நிலை யங்களில் வாகனத்தை நிறுத்தி எரிபொருளை நிரப்புவதன் மூலம் பயணிகளை அசௌகரியப்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு தனியார் பஸ் சேவை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்குள்ள நேர கண்காணி ப்பாளர் அந்த பஸ்ஸில் எரிபொருள் இருக்கின்றதா, ரேடியேட்டருக்கு நீர் நிரப்பப் பட்டுள்ளதா, டயர்கள் நல்ல நிலையில் இருக்கின்றதா என்று பரீட்சித்த பின்னரே பஸ்கள் அங்கிருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.

Read more...

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தென்கொரியாவில் புதிய வீசா அறிமுகம்!

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக ஈ10 என்ற பெயரில் புதிய வீசா முறையொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாக வெளி நாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தென்கொரிய கடற்றொழில் தகவல் தொலைத்தொடர்பு திணைக்களத்தின் பொது முகாமையாளர் லீ சியோங் ஜொங், தென்கொரிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இருவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இத்தகவலை அமைச்சர் தெரிவித்தார்.

ஈ10 புதிய வீசா முறையினூடாக தென்கொரியாவில் மீன்பிடித்துறையில் இலங்கையர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப் புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக சட்டரீதியான நடைமுறைச்சாத் தியமான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அதுவரை தற்பொழுது நடைமுறையில் ஈ9 வீசா முறை அமுலுலில் இருக்கும். ஈ9 வீசா முறையினூடாக தென்கொரிய பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

Read more...

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் சரத் பொன்சேகாவுக்கு நடந்த பரிதாபம்!!

கடந்தவாரம் நடைபெற்ற அமெரிக்க தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு வந்த சரத் பொன்சேகா கவனிப்பாரற்ற நிலையில் மற்றவர்களைத் தேடிச் சென்று பேசுவதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஹில்டன் ஹோட்டல் கிரான்ட் போல் ரூம் அறைக்குள் நுழைந்தவுடன் சரத் பொன்சேகா பலரிடம் சென்று பேச முயற்சித்தபோதும் அவருக்கு எவரும் முகங்கொடுக்கவில்லையென்றும் கூறப் படுகிறது. அங்கு பானங்களையும் சிற்றுண்டிகளையும் பகிர்ந்துகொண்டிருந்த ஹோட்டல் ஊழியர்களைத் தவிர வேறு எவரும் சரத் பொன்சேகாவைப் பொருட்படுத்தவில்லையென்று அவர்கள் கூறினார்கள்.

இவ்விதம் தன்னந்தனியாகத் தத்தளித்துக் கொண்டிருந்த சரத் பொன்சேகாவுக்கு உதவும் முகமாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவருக்கு அருகில் வந்தார். இருவரும் சில நிமிடங்கள் ஏதேதோ பேசினார்கள். இவர்கள் இருவரும் பேசுவதை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உள்ளிட்ட வேறு சிலரும் அவதானித்துக் கொண்டிருந்த தாகக் கூறப்படுகிறது.

இதனால் தர்மசங்கட நிலையை அடைந்ததைப் போன்று அமைச்சர் பிரேமஜயந்த, பொன்சேகாவுடனான பேச்சைத் துண்டித்துக்கொண்டு தனது இரு சக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வந்தார். இவர்களில் ஒருவர் நீங்கள் என்ன கதைத்தீர்கள் என்று கிண்டலாகக் கேட்டபோது, மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு அவரது கட்சிக்கு நான் ஓரிடத்தைப் பெற்றுக் கொடுத்ததற்கு சரத் பொன்சேகா தன்னிடம் வந்து நன்றி தெரிவித்தார் என்று கூறிய அமைச்சர் பிரேமஜயந்த, நான் அவரிடம் பேசப் பயப்படவில்லையென்றும் சொன்னார்.

இதையடுத்து சரத் பொன்சேகா எவராவது ஒருவருடன் ஒட்டிக்கொள்ள வேண்டுமென நினைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவிடம் சென்று பேச ஆரம்பித்தார். நீண்டநேரம் பேசினார். திருமதி குமாரதுங்க அரசியலிலிருந்து இளைப்பாறப் போவதாகப் பல தடவை அறிவித்த போதிலும் தான் வேறெந்த அரசியல் கூட்டணியுடன் சேர மாட்டேன் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இணைந்து அரசியல் நடத்துவேன் என்றும் கூறினார். இதிலிருந்து சந்திரிகா குமாரதுங்க இப்போது பகல் கனவு கண்டுகொண்டி ருக்கிறார் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Read more...

மஹிந்தவையும் கோட்டாவையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்பே எனக்கு நித்திரை வரும் - மக்ரே

மஹிந்தவும் கோட்டாவும் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை - ஸ்ரீதரன்

மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்பே எனக்கு நித்திரை வரும் என "சனல் 4" தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் மக்ரே தெரிவித் துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு அங்கு குழுமியிருந் தவர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லையென்று கனடாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் கனடாவிலுள்ள்ள அமைப்பே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாகவும், இந்த நிகழ்வில் உலகெங்கிலுமுள்ள எல்.ரி.ரி.ஈ அமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது எல்.ரி.ரி.ஈ யின் தலைவராகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் பிரிட்டனில் இருக்கும் வணக்கத்துக்குரிய பிதா இமானுவேல் விசேட அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

தன்னை ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் என்று காட்டிக்கொள்ளும் மக்ரே, எப்போதும் எல்.ரி.ரி.ஈக்கு ஆதரவாக அவர்களின் டொலர்நோட்டுகளுக்காக இலங்கை அரசாங்கத்தை தான் செல்லும் இடமெல்லாம் கண்டித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களை மேற்கொண்டதாக விரிவான கடிதமொன்றை எழுதியிரு ப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

Saturday, July 13, 2013

ஆச்சரியம் நிறைந்த இலங்கை

இலங்கையை சிங்கப்பூராக மாற்றும் கனவை ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1970களில் பிரபலமாக்கினார். பதவிக்கு வந்த பிறகு அவருக்கு, போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற வீம்பு முக்கியமாகி சாண் ஏற நினைத்து முழம் சறுக்கிக் கொண்ட அவலகதி நேர்ந்தது. நாட்டின் பொருளாதாரத்தை யுத்தக்கறையான் அரிப்பதற்கான ஆரம்ப வசதிகளைச் செய்துகொடுத்தவராக அவர் அமைந்தார்.

யுத்தத்தை முடித்து வைத்த இன்றைய அரசும், இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குவோம் என்று சொல்லும்போது, பழையபடி சிங்கப்பூர்க் கனவே மனதுக்குள் இருப்பதை உணர முடிகிறது. இந்தியாவில் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கெதிரான போராட்டத்தின் போதும், ஊழலை ஒழித்துவிட்டால் நாட்டை முன்னேற்றி விடலாம் என்னும்போது சிங்கப்பூர் உதாரணமே அங்கும் சொல்லப்பட்டது.

சிங்கப்பூர் பலருக்கும் ஒரு இலட்சிய சமூகமாக இன்று தோன்றுவதற்குக் காரணங்கள் உண்டு. ஊழலைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக அங்கு மக்கள் வாழ்வில் பெரும் வளம் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்கூடான செய்தியாக இருக்கிறது. அண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் போது இப்படி ஒரு குறுஞ்செய்தி சுற்றுக்கு விடப்பட்டது.

1982ஆம் ஆண்டு சிங்கப்பூரில் லோக்பால் மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரே நாளில் 142 ஊழல் மந்திரிகளும் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இன்று சிங்கப்பூரில் நூற்றில் ஒருவரே ஏழை. அரசுக்கு யாரும் வரி செலுத்துவதில்லை. அங்கு 92 வீத கல்வியறிவு நிலவுகிறது. சிறப்பான மருத்துவ வசதிகளும் மிகக் குறைந்த விலைவாசியும் உள்ள சிங்கப்பூரில் கறுப்புப் பணத்தின் அளவு பத்து சதவிகிதம் மட்டுமே. அங்கு நூற்றில் ஒருவரே வேலையில்லாமல் இருக்கிறார்.

சிங்கப்பூர் அரசு ஊழலுக்கு எதிரான அமைப்பை நடைமுறைப்படுத்துவதில் எப்படி வெற்றி பெற்றது என்பதே கவனிக்க வேண்டியதாகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய, பிரிட்டிஷ் காலனியாக இருந்த சிங்கப்பூரில் ஊழல் மலிந்து இருந்ததற்குக் காரணிகளாக இருந்தவை குறைந்த ஊதியம், ஊழலுக்கு தகுந்த தண்டனையின்மை என்றார் நவீன சிங்கப்பூரின் சிற்பியாகச் சொல்லப்படும் லீ க்வான் யூ. 1959ல் சிங்கப்பூர் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

ஒரு தூய நிர்வாகத்தை அளிப்போம் என்று உறுதியளிக்கும் வகையில், பதவிப் பிரமாணத்தின்போது ஆளும் பிஏபி கட்சியின் உறுப்பினர்கள் முழுக்க முழுக்க வெண்ணிற ஆடைகள் அணிந்து வந்தனர். அரசுக்கு கிடைத்த ஒவ்வொரு டொலர் வருமானமும் ஒழுங்காக அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டு, வழியில் மடைமாற்றப்படாது கடைநிலைக் குடிமகனுக்கு அதன் முழுப் பலனும் கிடைப்பதை நாங்கள் ஒவ்வொரு நாளும் உறுதி செய்தோம், என்கிறார் லீக்வான்யூ.

இன்று, நேர்மையான நிர்வாகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. லஞ்சமாகப் பணம் வாங்கியது உறுதி செய்யப்படாதபோதும், ஊழல் செய்யும் எண்ணத்துடன் செயல்பட்டதாக நிருபிக்கப்பட்டால் போதும், சிறைத் தண்டனை அளிக்கப்படும்.

ஆசியாவில் ஊழல் ஒழிப்பில் முன்னிலையில் நிற்கும் சிங்கப்பூர், ஏனைய தேசங்களுக்கு சில பாடங்களை உணர்த்துகின்றது. ஊழலுக்கு எதிரான சட்டம் இருந்தாலும், ஊழலைக்களையத் தேவையான ஆள் பலம் மற்றும் அமைப்பு இருந்தாலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெறவேண்டுமானால் உறுதியான அரசியல் தலைமை அவசியம் என்பதே அது.

Read more...

வடமாகாண இராணுவ முகாங்களுக்கு நிரந்தர கட்டடம்!

வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நேற்றைய தினம் கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

கிளிநொச்சி படைத்தளத்தை வந்தடைந்த இராணுவத் தளபதியை கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா வரவேற்க்கப்பட்டதுடன் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டபின் அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட அனைவரும் உறுதிபூண வேண்டும். வட மாகாணத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், வட மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Read more...

அம்மன் கோயில் உடைத்து 75 பவுண் நகை கொள்ளை!

கரணவாய் கிழக்கு புவனேஸ்வரி உச்சியம்மன் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு வேளை கோயிலின் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தின் பணப் பெட்டகத்தை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் உடைத்து அங்கிருந்து 75 பவுண் நிறையுடைய தங்க நகைகளை களவாடிக்கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் களவாடப்பட்டுள்ளது. பூசகர் அதிகாலை பூசைக்காக கோயில் கதவைத் திறந்து பார்த்தபோதே நகைகள் களவாடப்பட்டமையும், ஆலய பின் கதவு திறந்திருந்தமையும் தெரியவந்தது.

இக்கோயில் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்கதாகக் காணப்படும் நிலையில் இவ் ஆலயத்தில் களவு நடைபெற்றமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Read more...

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவரின் வீட்டை உடைத்த கள்வர் லப்டொப்பை எடுத்துச் சென்றனர். உள்வீட்டு சதியா?

ரகசியத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்படுமாம்.

வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நிர்வகிக்கப்படுகின்றது. இதன் தலைவராக ஆனந்தராசா உள்ளார். நேற்றிரவு இவரது தெனியம்ப வீட்டினுள் நுழைந்த கள்வர் அவரது லப்டொப்பை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனந்தராசா கொழும்பு சென்றிருந்த தருணம்பார்த்து நுழைந்த கள்வர் இவ்வாறு செய்துள்ளதாக ஆனந்தராசா வின் சகோதரன் நடராஜா ராஜேஸ்வரா வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

நடராஜா ராஜேஸ்ரா வின் முறைப்பாடு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் GCIB 123/43 எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திருட்டானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்வீட்டு முரண்பாடுகளின் ஒரு அங்கம் என தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை மாநகர சபையின் உறுப்பினராகவுள்ள ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்திற்கும் ஆனந்தராஜாவிற்குமிடையே அடிக்கடி தகராறுகள் இடம்பெறுவது வழமை. சிவாஜிலிங்கத்தின் ஆட்களே இவ்வாறு செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேநேரம் திருடப்பட்ட லப்டொப்பிலுள்ள ரகசியகத்தகவல்கள் சமூக வலையமைப்புகள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் என மிரட்டல்கள் வருவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

Read more...

USக்கு எதிராக எழும் ஸ்னோடென்! புதிய ரகசியம் அம்பலம்

மாஸ்கோவில் தங்கியிருக்கும் ஸ்னோடென், சர்வதேச அமைப்புகள் தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், உலகின் மனித உரிமை அமைப்புகளை சந்திக்க கோரிக்கை அனுப்பியுள்ளார். அம்னெஸ்டி இன்டெர்னேசனல், ஹுமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட முக்கிய மனித உரிமை அமைப்புகளுக்கும் இமெயில் மூலம் இந்த கோரிக்கையை அனுப்பியுள்ளார்.

இந்த சந்திப்பு ரஷ்ய நேரப்படி இன்று மாலை 5 மணியளவில் விமான நிலையத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இன்று ஸ்னோடென் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்னோடென் வழங்கிய மேலும் ஒரு ரகசியத் தகவலை, கார்டியன் பத்திரிக்கை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் எவ்வாறு அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனத்தின் வேவு வேலைகளுக்கு ஒத்துழைத்தது என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.

புலனாய்வு நிறுவனங்கள், அவுட்லுக் டாட் காம் இணையத்தில் நடந்த பாதுகாப்பான தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் எவ்வாறு தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை செய்தது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

Read more...

மருத்துவ அறிக்கையில் குழப்பம்! இளவரசன் மரணச்சடங்கில் கலந்து கொள்ள திருமாவளனுக்கு அனுமதி மறுப்பு!

தர்மபுரியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளவரசன் கடந்த 4 ஆம் திகதி மர்மமான முறையில் ரயில் தண்ட வாளம் அருகே இறந்து கிடந்தார். இதனையடுத்து அம்மா வட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. ஏற்கனவே நடந்தது போன்று மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளவரசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்க கோரி, விடுதலை சிறுத்தை இயக்க தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், திருமாவளவனுக்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், திருமாவளவன் தர்மபுரியில் நுழைய தடை விதித்து கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொது அமைதிக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் இளவரசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க திருமாவளவனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

இதேவேளை தனது மகனின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இளவரசனின் தந்தை இளங்கோ உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதுகுறித்த வழக்கில், நீதிமன்றம் நியமித்த 2 வைத்தியர்களும் இளவரசன் உடலை ஆய்வு செய்து தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

குறித்த இரு வைத்தியர்களினதும் மருத்துவ அறிக்கை ஒத்துப்போகாததால் இளவரசன் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வைத்தியர்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென நிதிமன்றம் உத்தரவிட்டது அதன்படி, டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் பரத்வாஜ், மில்லோடர்பின், சுதிர் குப்தா ஆகியோர் விமானத்தில் இன்று காலை 9.25க்கு பெங்களூர் வந்தனர். அவர்களை தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமர் மற்றும் தர்மபுரி காவல்துறையினர் நேரில் சென்று அழைத்து வந்தனர்.

இன்று பிற்பகல் 3 மணி அளவில் இளவரசனின் உடலை டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்வார்கள் என்று அரசு வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன்பின், இளவரசனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

பர்வேஸ் முஷரபுக்கு எதிராக மற்றொரு வழக்கு! இக்கட்டான கட்டத்தில் முஷரவ்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரபுக்கு எதிராக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹாரூன் ரசீத் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 3-ந் திகதி முஷரப்பின் உத்தரவின் பேரில் லால் மஜீத்தில் இராணுவம் நடவடிக்கை எடுத்ததில் எனது தந்தை மற்றும் பாட்டி கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

ரசீதின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி நூருல் ஹக் குரோஷி இது தொடர்பாக முஷரப் மீது வழக்கு பதிவு செய்யவும் என உத்தரவிட்டார். எனவே அடுத்தடுத்த வழக்குகளால் முஷரப்புக்கு கடும் நெருக்கடி உருவாகி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரபுக்கு எதிராக, பெனாசிர் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

மன்னம்பிட்டியில் கோரவிபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு!

மன்னம்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்ட பஸ்வண்டியின் நடாத்துனரான கோட்டக்கல்லாறைச் சேர்ந்த சிவராசா சீவலக்சன் (23) என்பவர் கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

கொழும்பில் செயலமர்வொன்றை முடித்துக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இவர்கள் பயணித்த தனியார் மினி பஸ் மன்னம்பிட்டியில் வைத்து மரமொன்றுடன் நேற்று அதிகாலை மோதுண்டு விபத்துக்குள்ளானது இதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படு காய மடைந்துள்ளனர். ஐந்தாவது நபர் கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

இந்த விபத்தில் ஏற்கெனவே சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிப் போதனாசிரியர் வேலுப் பிள்ளை, சீவரெத்தினம் (ஜீவா) அந்த பஸ் வண்டியின் சாரதியுமாக நான்கு பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தனர். காயமடை ந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read more...

புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் புகைப்படத்துடன் மேர்வின் சில்வா யாழில்.

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி யாழ் முஸ்லிம்கள் மர்வினிடம் மனு!

தெற்கில் தெருச்சண்டியன் என அறியப்பட்டவர் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா. வடக்குக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ் தேர்தல் நிலைகளை கண்காணிக்க களமிறங்கியுள்ளார் நமது மக்கள் தொடர்பாடல் அமைச்சர். இவர் இன்று காலை கல்லூரி வீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பணிமனை ஒன்றையும் உத்தியோக பூர்வமாக திறந்துவைத்தார்.

யாழ் மாவட்டத்திலுள்ள மூலை முடுக்கெங்கும் நுழைந்து வெளியேறிய மர்வின் சில்வா , புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் உருவப்படத்தினைத் தாங்கியவாறே அங்கு காட்சி தந்தார்.

நிகழ்வொன்றில் பேசிய மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மல்வின் சில்வா, 30 வருடங்களாக கொடிய யுத்தத்தால் வட பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் இதற்கு காரணம் பிரபாகரனே என்றும் தென் பகுதியை எப்படி ஜே.வி.பி.யினர் வைத்திருந்தார்களோ, அதே போன்று வடக்கை பிரபாகரன் வைத்திருந்தார் என்றும் கூறினார். இவ்வாறான பிரதேச வாதம் இன்று முற்றுப்பெற்று விட்டது என்ற அமைச்சர் இனி நாங்கள் அபிவிருத்தியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றதுடன் அதற்கு அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.சிராஸ் , முடியப்பு ரெமிடியஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடிய மர்வின் சில்வா குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

இதேநேரம் யாழ் முஸ்லீம்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து யாழ் முஸ்லீம் சிவில் சமூக பிரதிநிதிகளால் சின்ன முகைதீன் ஜீம்மா பள்ளி வாயலில் வைத்து மர்வின் சில்வாவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

மகஜரினை பெற்றுக்கொண்ட மர்வின்; முஸ்லீம் மக்களின் தேவைகளை இயன்ற வரை நிறை வேற்றித்தருவதாகவும் இதற்கு தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






























































Read more...

மாநிலம் வேண்டாமாம் ! மத்தியிலேயே இருக்கப்போகின்றாராம் டக்ளஸ்!

„மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்பது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சுலோகம். அக்கட்சியின் செயற்பாட்டுக்கும் சுலோகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத போதும், இச்சுலோகத்தை நாங்கள் குப்பபையில் போட்டுவிட்டோம் என ஈபிடிபி இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2009 மே மாதம் பிரபாகரன் மண்டியிட்டு மண்டையில் கொத்து வாங்கிய காலகட்டங்களில், பாரிஸிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த டான் ரீவி யில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்சி ஒன்றில் தொலைபேசி ஊடாக பங்கெடுத்த ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண சபைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவ்வாறு அறிவிக்கப்படும்போது மாநிலத்திற்கு சேவை செய்வதற்காக தான் மத்தியில் அமைச்சுப்பதவியை துறப்பேன் என்றும் கூறினார். அத்துடன் மக்கள் தன்னை முதலமைச்சர் ஆக்கினால் „ஓவர் த நைட் ஐ வில் சோல்வ் த ரமில்ஸ் பிறப்பிளம்' „ஒரு இரவில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன்' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் உரக்கவும் கூறினார்.

தற்போது மாகாண சபைத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் முட்டி மோதிக்கொள்கின்றது. ஆனால் நான் மாகாண சபை தேர்தல் வந்தால் அத்தேர்தலில் போட்டியிடப்போகின்றேன் என கதை விட்டுக்கொண்டிருந்த டக்கிளஸ் தேவானந்தா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறியக்கிடைக்கின்றது.

வட மாகாண சபைத் தேர்தலில் ஈபிடிபி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளது. இக்கட்சிக்கு சுமார் மூன்றில் இரண்டு பங்கு வேட்பாளர்களை கூட்டமைப்பு ஒதுக்கியுள்ளது. இந்த வேட்பாளர்கள் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்ற தவராசாவின் தலைமையிலேயே போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றது. கடந்த திங்கட் கிழமை ஜனாதிபதியை சந்தித்த டக்ளஸ் இது விடயத்தில் தனது குள்ளநரிக்கொள்கையை தெளிவு படுத்தியதாகவும் அதற்கு சாதகமான சமிக்கை கிடைக்காத நிலையில் எதிர்வரும் 15ம் திகதி அடுத்த சந்திப்பு ஒன்று நிகழவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சக்கி மிக்க வேட்பாளர்கள் எனத் தாங்கள் கருதுகின்றவர்களை நிறுத்தி தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிகளை மேற்கொள்கின்றபோது , தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து நிற்கக்கூடிய சக்தியை கொண்டிருக்கின்ற (டக்களஸ் மக்கள் சேவையின் ஊடாக பெற்ற சக்தி என அர்த்தம் கொள்ளக்கூடாது , தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு அடித்ததால் கிடைத்த சக்தி) டக்ளஸ் அதிலிருந்து பின்வாங்க முயற்சிப்பது பல்வேறு சந்தேகங்களை தருகின்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியிலிருக்குமபோது அவர் வந்தால் நான் வழிவிட்டு சென்றுவிடுவேன் என சொல்லிக்கொண்டிருந்த டக்ளஸ் அவரில்லாத இடத்திற்கு அவரது அடிவருடிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழிவிடுவதற்காக இந்த முடிவை எடுக்கின்றாரா? அன்றில்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாது என்றும் , தோல்வியை தழுவினால் , பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோவணத்தை இழந்த கதையாக கபினட்டு மந்திரிப்பதவி போய்விடும் என்ற பயமா? அன்றில்

கபினட்டு மந்திரிப்பதவி போனால் தம்பியின் பெயரிலுள்ள பிசினசுகள் ஒன்றையும் முறையாக கொண்டு செல்ல முடியாது என்ற பயமா?

என்ற எம்மிடமுள்ள ஏகப்பட்ட கேள்விகளுக்கு டக்ளசிடம் நேரடியாக பதிலினை பெற்றுக்கொள்ள தொடர்பு கொண்டபோது, „ஆசுபத்திரிக்கு போய்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் செல்ல எடுங்கோ' என்றார். தேர்தல் என்று வந்துவிட்டால் அடிக்கடி ஆசுபத்திரிக்கு போகவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் சுகதேகிகளிடம் மக்கள் பணியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குவது சிறப்பு.

எது எவ்வாறாக இருந்தாலும் தற்போது, ஈபிடிபி யின் முக்கியஸ்தர் ஒருவர் யாழில் சட்ட விரோத , மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் டக்ளஸ் யாழ் தேர்தலில் மக்களை சந்திப்பதிலிருந்து தன்னை விடுவித்து அந்த இடத்திற்கு நியமிக்க திட்டமிட்டுள்ள நபரான தவராஜா கடந்த காலத்தில் எல்ரிரிஈ பயங்கவாதிகளுக்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் தேடப்பட்டபோது பிரித்தானியாவுக்கு தப்பி ஓடியவர். தேவை ஏற்பட்டால் ஏற்பட்டால் தவராஜாவை நான் தருவித்து தருவேன் என டக்ளஸ் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு ஒத்தாசை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் எந்த நேரமும் கைது செய்யப்படக்கூடியவரான ஒருவரை தேர்தலில் நிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமானதோர் நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்க டக்ளஸ் முனைவதன் மர்மம் என்ன?

Read more...

சிகரெட் பிடிப்பதை நிறுத்தவேண்டுமா?

சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவர், அதனை நிறுத் துவதால், உடல் நிலை அதிக முன்னேற்றம் அடைகிறது. சிகரெட் பிடிப்பதை விடுவதால் நீங்கள் ஆரோக்கியமான வராக வாழப் போகிறீர்கள் என்பதை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.

சிகரெட்டைப் பொறுத்தவரை உடனடியாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தினால், ஒரு கட்டத்தில் மீண்டும் சிகரெட் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். எனவே, ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடித்து வந்தீர்களானால், ஒரு வாரம் 4 ஆகக் குறைத்து, அடுத்த வாரம் 3 என தொடர்ந்து குறைத்து கடைசியாக சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதே சிறந்த வழியாகும்.

சிகரெட்டை விடும் போது, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்கள். ஆப்பிள், இனிப்பு, சிப்ஸ் என எதுவாக இருந்தாலும், எப்போது எல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள்.

சிகரெட்டை நிறுத்த முடிவு செய்த பிறகு, அடுத்த ஒரு வேலையையும் நாம் செய்தே ஆக வேண்டும். அதுதான் உடற்பயிற்சி, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அறவே ஒழிக்க இந்த உடற்பயிற்சி உதவும்.

சிகரெட்டுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்களை படிக்கலாம். இது உங்களுக்கு நிச்சயம் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்.

நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உங்களுடன் இருக்கும் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உற்சாகமூட்டி அதற்கு உதவியும் செய்வார்கள். மேலும், சிலரும் உங்களோடு சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யலாம்.

சிகரெட் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், அதற்கான காசை எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். அந்த பணம் சேர்ந்து கொண்டிருக்கும் போது, அதனை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம், உங்களை சிகரெட் வாங்குவதில் இருந்து தடுக்கலாம். அந்த பணத்தை ஏதேனும் இல்லத்துக்குக் கொடுத்து உதவி செய்யுங்கள்.

சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதும், அதனை நினைவு கூறும் பொருட்களை தூக்கி எறியுங்கள். உங்களிடம் உள்ள ஆஷ் ட்ரே, லைட்டர் போன்றவற்றை சந்தோஷமாக தூக்கி எறியுங்கள்.

சிகரெட் பிடிப்பதை நிறுத்தி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆன பிறகு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். வெகு நாட்களாக வாங்க நினைத்து வாங்காமல் இருந்த பொருளை வாங்குங்கள். அவ்வப்போது அதற்காக பெருமையும், சந்தோஷமும் அடைவீர்கள்.

சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட தற்போது ஏராளமான மருந்துகள் வந்துவிட்டன. மருத்துவரின் உதவியோடு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெறாமல் அதைச் செய்ய வேண்டாம்.

பலருக்கும் குடிப்பழக்கம் தான் பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கு காரணமாக இருக்கும். எனவே, சிகரெட் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள், குடிப்பழக்கம் இருந்தால், அதையும் விட்டுவிடுங்கள்.

Read more...

தடையை மீறி கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தியதனால் இரு குழந்தைகளின் தாய் கல்லால் அடித்துக்கொலை

பாகிஸ்தானில், கிராமமொன்றில் ஊர்த் தடையை மீறி கையடக்கத்தொலைபேசி வைத்திருந்தமைக்காக, இரு குழந்தைகளின் தாய் ஒருவர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவது, அந்நாட்டின் தேரா காசி கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆரிபா என்ற பெண் ஒருவர், ஊராருக்குத் தெரியாமல் கையடக்கத் தொலை பேசியை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது ஒருநாள் இது ஊராருக்கு தெரிய வந்ததால், உடனடியாக பஞ்சாயத்துக் கூட்டப்பட்டுள்ளது. ஊர் விதிமுறைகளை மீறி கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தியதற்காக, இரு குழந்தைகளுக்கு தாய் என்ற இரக்கம் கூட காட்டாமல், அவரை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவிட்டனர் பஞ்சாயத்தார்.

அப்பெண்ணின் மாமா மற்றும் உறவினர்களாலேயே அத்தண்டனை நிறைவேற் றப்பட்டுள்ளது. சமீபத்தில் இது சம்பந்தமாக அவரது உறவினர்கள் இருவர் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் கொடுத்த செவ்வியின் மூலம் இக்கொடூர தண்டனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்தார் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

21 ஆவது திருத்தமானது அரசியலமைப்பிற்கு முரணானது இல்லை! ஜாதிக ஹெல உறுமயவின் மனு நிராகரிப்பு.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமானது, அரசியலமை ப்பிற்கு முரணானது இல்லையென்று தெரிவித்து, 21 ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரி த்துள்ளது.

13 ஆவது திருத்தத்தை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட 21 ஆவது திருத்தத்திற்கு எதிராக, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுதொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபைநாயகர் சந்திம வீரக்கொடி நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

Read more...

வட மாகாண சபைத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் சிறி ரெலோவும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்றன

வட மாகாண சபைத்தேர்தலில், ஈழ மக்கள் ஜனநாய கட்சியும் சிறி ரெலோவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தொரி வித்துள்ளார்.

அத்துடன் இடதுசாரி கட்சிகள் சிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Read more...

Friday, July 12, 2013

யாழில் வீதிவிபத்தைத் தடுப்பதற்காக துவிச்சக்கர வண்டிகளில் ஒளிரும் ஸ்ரிக்கர் ஒட்டுகின்றனர் பொலிஸார்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேர வீதிவிபத்தினை தடுக்கும் வகையில் யாழ். போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா தலைமையில் துவிச்சக்கரவண்டிக்கான ஒளித்தெறிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது வீதியில்வைத்து துவிச்சக்கரவண்டிகள் பலவற்றுக்கு போக்குவரத்து பொலிஸார் ஸ்டிக்கர் ஒட்டுவதை படங்களில் காணலாம்.



(பாறூக் சிகான்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com