Friday, July 5, 2013

ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மீது NSA இன் பாரிய ஒற்றாடல்! By Patrick Martin

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளை ஒற்றுப்பார்த்துள்ளதோடு, அதன் கணினி வலையமைப்புக்களிலும் ஊடுருவி, பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யிலும், நியூ யோர்க் நகரத்திலும் இருக்கும் தூதரக அலுவலகங்களிலும் ஒற்று வேலை பார்த்துள்ளது என ஜேர்மனிய ஏடு Der Spiegel வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தகவல் தெரிவிப்பவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் பெற்றிருந்த இரகசிய ஆவணங்களில்இருந்து அது ஒற்றுப்பார்த்துள்ளது தெரிந்துள்ளதாக ஏடு கூறுகிறது, ஸ்னோவ்டென் இப்பொழுது அவர் மீது குற்ற விசாரணை நடத்தப்படலாம் என்னும் அச்சுறுத்தலையும், சட்டவிரோத அமெரிக்க அரசாங்கத்தின் ஒற்றுவேலையே அம்பலப்படுத்தியதற்காக மரண தண்டனையையும் எதிர் நோக்கி உள்ளார்.

செப்டம்பர் 2010 தேதியிட்ட NSA ஆவணம் ஒன்று, குறிப்பாக நியூ யோர்க்கில் இருக்கும், ஐரோப்பிய அதிகாரிகளின் ஐ.நா. தலைமையகம், ஒற்றாடலுக்கு “இலக்கு கொள்ளப்பட்ட இடம்” என்று கூறுகிறது.

இதையும்விட முக்கியமானது, ஐரோப்பிய ஒன்றிய மந்திரிகள் குழு மற்றும் ஐரோப்பிய குழு ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் பிரஸ்ஸல்ஸ் அலுவலகக் கட்ட எலக்ட்ரோனிக் ஒற்றாடல் ஆகும். கட்டிடத்தின் தொலைபேசி முறையில் இருந்து வெளியேறிய அழைப்புக்கள் ஐந்து ஆண்டுகள் முன்பு ஒரு பாதுகாப்பு விசாரணையின்போது கண்காணிக்கப்பட்டிருந்தன.

“பாதுகாப்பு அதிகாரிகள் பிரஸ்ஸல்ஸ் புறநகர் பகுதியான Evere இல் நேட்டோ தலைமையகத்தில் இருந்து அழைப்புக்கள் வந்தன என்று தடம் அறிந்தனர்” என Der Spiegel தகவல் கொடுத்துள்ளது. “தொலைத் தொடர்பு அமைப்பு மீதான தாக்குதல்கள், நேட்டோ தலைமையகத்தில் இருந்து சற்று ஒதுங்கி உள்ள NSA வல்லுனர்கள் பயன்படுத்திய கட்டிட வளாகத்தில் இருந்து வந்துள்ளன என ஒரு துல்லியமான பகுப்பாய்வு காட்டுகின்றது.”

இந்த வெளிப்படுத்தல் அமெரிக்க ஐரோப்பிய உறவுகளில் மிகவும் வெடிக்கும் தன்மையுடைய விளைவுகளை ஏற்படுத்தலாம்; ஏனெனில் அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பெயரளவிற்கு ஒரு இராணுவக் கூட்டாக நேட்டோ இருக்கையில், அமெரிக்கா அதன் நண்பர்கள் எனக் கூறும் நாடுகளில் ஒற்று பார்த்துள்ளதை தெரிவிக்கிறது. ஸ்னோவ்டேன் ஆவணங்கள், NSA கிட்டத்தட்ட அரை பில்லியன் அழைப்புக்கள், மின்னஞ்சல்கள், செய்திக் குறிப்புக்கள் ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் ஜேர்மனியில் இருந்து ஒற்றாடல் செய்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என Der Spiegel கூறியுள்ளது. இந்த ஏடு, ஒரு NSA ஆவணத்தை மேற்கோளிட்டு கூறுகிறது, “நாம் பெரும்பாலும் மூன்றாம் தர வெளிநாட்டுப் பங்காளிகளின் சமிக்ஞைகளை தாக்கலாம், நாம் அதைத்தான் செய்கிறோம்.”

NSA பேச்சுவழக்கில், அமெரிக்காதான் ஒரே முதல்தர நாடு, பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை இரண்டாம் தர பங்காளி நாடுகள், மற்றும் அதிக விருப்பமற்ற பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் மூன்றாந்தரப் பங்காளிகள் ஆகும். அமெரிக்கத் தலைமையில் உலகம் முழுவதும் நடத்தப்படும் ஒற்று வேலைகளில் பங்கு பெறுகின்ற, வசதியளிக்கின்ற, இரண்டாம் தர பங்காளி நாடுகள் நான்கும் NSA கண்காணிப்பில் இருந்து மேம்போக்காக விலக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.

மூன்றாந்தர பங்காளி நாடுகளில் பல அமெரிக்காவுடன் தொடர்புகள் தவகலைப் பங்கு கொள்ளும் உடன்பாடுகளைக் கொண்டுள்ளன—இதில் டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்றவை அடங்கும் என பிரித்தானிய Observer செய்தித்தாளில் வந்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. எனினும் இந்நாடுகளில், NSA மிக அதிக அளவு கண்காணிப்பு நடத்துவதை நிறுத்திவிடவில்லை.

ஜேர்மனி மீது கண்காணிப்பு என்பது, பிரான்சை விட மிகவும் தீவிரமாக உள்ளது —ஏனெனில் அன்றாடம் 30 மில்லியன் இணைப்புக்கள் கண்காணிக்கப்படுகிறது 2 மில்லியனுடன் ஒப்பிடுகையில் — ஒற்றாடல் தரம், ஈராக், சௌதி அரேபியா மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் அதே தரத்தில்தான் உள்ளது.

உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரிகள் பலர் சீற்ற மற்றும் கண்டன அறிக்கைகளை வெளியிடுள்ளனர். ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் இப்பிரதிநிதிகள் அவர்கள் கூறும் அளவிற்கு வியந்தனரா என்பதை சந்தேகத்திற்கு உரியது; அவர்களது அமெரிக்க சகாக்களைப் போலவே, தமது சொந்த மக்கள் மீதும் அமெரிக்க மக்கள் மீதும் இதே போன்ற கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் விடையிறுப்பில் இருக்கும் ஒருமித்த உணர்வு, ஐரோப்பிய அரசாங்கங்கள், அமெரிக்க தொலைத்தொடர்பு மற்றும் இணைய தள வலை குறித்து வரும் பின்விளைவுகள் பற்றி கண்டத்தில் இருக்கும் மக்கள் கவலை கொண்டுள்ளனர்; அதேபோல் அமெரிக்க முயற்சிகளான ஒற்றாடலை பகிரங்கத்திற்குக் கொண்டுவந்தவர் மீது குற்ற விசாரணை என்பது குறித்தும் கவலை கொண்டுள்ளன.

ஜேர்மனியின் நீதித்துறை மந்திரி Sabine Leutheusser-Schnarrenberger, ஞாயிறன்று அமெரிக்காவிடம் இருந்து உடனடி விளக்கம் கேட்டார். “செய்தி ஊடகத் தகவல்கள் துல்லியமானவை என்றால், இது பனிபோர்க் காலத்தில் விரோதிகளுக்கு இடையே இருந்த நடவடிக்கைகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

லுக்சம்பேர்க்கின் வெளியுறவு மந்திரி Jean Asselborn, “இந்த அறிக்கைகள் உண்மையென்றால், பின்னர் இது வெறுப்பூட்டுவதாகும். இரகசியப் பணிகள் கட்டுப்பாட்டை விட்டு மீறியதைப் போல் தோன்றுகிறது. அமெரிக்கா அதன் நட்பு நாடுகளைவிட தன் சொந்த இரகசிய பணிகளை கண்காணிக்க வேண்டும்”. எனக் கூறினார்.

NSA ஒற்றாடல் செய்வதற்காக நடத்தும் செயற்பாடுகளுக்கும் சமீபத்திய வெளிப்பாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் தூதர், “அமெரிக்கா பயங்கரவாத த்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி என்று அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் தூதர்களும் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்லர்” என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவரும், ஜேர்மனிய ஆளும் வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய கட்சியை சேர்ந்தவருமான எல்மார் புறூக், Der Spiegel இடம் “ஒற்றாடல், ஒரு ஜனநாயக நாட்டில் முடியும் என நினைக்க முடியாத பரிமாணங்களை அடைந்துள்ளது. இத்தகைய நடத்தை நட்பு நாடுகளுக்கு இடையே பொறுத்துக் கொள்ள முடியாதது ஆகும். இவை முற்றிலும் சமச்சீர்த்தன்மையை இழந்துவிட்டன. ஜோர்ஜ் ஓர்வெல் இத்தோடு சற்றும் ஒப்பிடமுடியாதவர்.” எனக் கூறினார்.

இதே போன்ற அறிக்கைகள்தான், கன்சர்வேட்டிவ் வலதில் இருந்து பசுமைவாதிகள் வரை ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசியல் வண்ணம் முழுவதில் இருந்தும் வெளியிடப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறை, அடிப்படை உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான ஆணையர் விவியான் ரெடிங், லுக்சம்பேர்க்கில் ஒரு கூட்டத்தில் ஒற்றாடல் பற்றிய வெளியீடுகள் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வணிக உடன்பாடு குறித்த பேச்சுக்களை பாதிக்கலாம் என்றார்.

“பங்காளிகள் ஒருவர் மீது ஒருவர் ஒற்றாடல் வேண்டாம்”. “எமது பேர அலுவலக நடவடிக்கைகள், நம் பங்காளிகளால் ஒற்றுக்கேட்கப்படுகிறது என சிறிது சந்தேகம் இருந்தாலும், ஒரு பெரிய அட்லான்டிக் கடந்த சந்தையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது” என்று அந்த அம்மையார் கூறினார்.

Read more...

பண மேசடியில் ஈடுபட்ட பெண் பிரதி முகாமையாளர் கைது.

மாத்தளையைசச் சேர்ந்த இருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து, அதற்கு பிரதியுபகாரமாக குறித்த இருவரிடமும் இருந்து தலா 5 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட பெண் பிரதி முகாமையாளர் ஒருவரை, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தர விட்டுள்ளார்

கொழும்பிலுள்ள அரச வங்கியொன்றின் பிரதி முகாமையாளரை இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

நீங்கள் இராணுவத் தளபதியாக இருந்தபோது தான் எனது மகன் காணாமல் போனான். யாழில் சரத் பொன்சேகாவிடம் தாயொருவர்.

காணமல் போன எனது மகளை கண்டுபிடித்து தருமாறு முன்னாள் ராணுவத்தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத்பொன் சேகாவிடம் தாயொருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று வெள்ளிக் கிழமை யாழிலுள்ள தனியார்விடுதியில் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலின்போதே மேற்படி வேண்டு கோளை குறித்த தாய் விடுத்துள்ளார் .

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் எனது மகன்களில் ஒருவர் இனம்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார.; அதைதொடர்ந்து எனது இரண்டாவது மகனும் காணமல் போயுள்ளார் இவ்வாறு காணமல்போன எனது மகன் தற்போது ராணுவத்தினருடன் இருப்பதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.

இது தொடர்பாக நான் பல அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் முறையிட்ட பொழுதும் எனக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததை அறிந்து உங்களை நம்பி இங்கு வந்துள்ளேன் நீங்கள்தான் எனது மகனை கண்டுபிடித்து தர உதவவேண்டும்!! என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Read more...

வழிபாட்டுக்கு சென்ற மக்களுக்கு அனுமதி மறுப்பு!!!

யாழ் மயிலிட்டியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை சென்ற மக்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மயிலிட்டியில் உள்ள முருகன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகி அம்மன் ஆலயம் என்பவற்றுக்கு தரிசனத்திற்காக மக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்துள்ளது

இம்முறை உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இவ் அறிவித்தலை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் நடைபெறவுள்ள ஆலய வழிபாடொன்றிற்கு செல்லவதற்காக 20 பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களில் 1500 இற்கும் மேற்பட்ட மக்கள் மயிலிட்டிக்கு சென்றுள்ளனர்

இவ்வாறு வருகைதந்த பக்தர்கள் இன்றையதினம் ராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுளளனர் என்று மயிலிட்டி முருகன் ஆலய தர்மகரத்தா வடிவேல்கரசன் தெரிவித்துள்ளார்.

Read more...

கே-பி, தயா மாஸ்ரர் , தமிழினி ஆகியோரை தேர்தலில் இறக்குவது அரசின் சூட்சும். யாழ்பாணத்தில் பொன்சேகா.

முன்னாள் ராணுவத்தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத்பொன்சேகா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தார். யாழில் உள்ள விடுதியொன்றில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையில் கே-பி, தயா மாஸ்ரர் , தமிழினி ஆகியோரை தேர்தலில் இறக்குவது அரசின் சூட்சும் என்றார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் : கடந்தகால யுத்தத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது நாட்டிலுள்ள அனைத்து மக்களுமே பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளனர். யுத்தம் நடந்தபோது யுத்தத்தின் முடிவில் மக்களின் சகல பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என கூறி யுத்தத்தை நடத்திய அரசாங்கம் இப்போது அதை செய்யாமல் வேறுவிதமாக நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தோற்றுவித்து மக்களை திசைதிருப்பிவருகின்றது.

மக்களை எவ்வாறு நடத்துவது என்று அரசாங்கத்திற்கு தெரியவில்லை. அயல் நாடான இந்தியாவுடன் ஒற்றுமையாக இருக்கவும் அரசிற்கு தெரியவில்லை. வடமாகாண சபைதேர்தல் நடைபெறவுள்ள இந்த சமயத்திலும் அரசு வடபகுதியில் புதிதாக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கின்றது.

குறிப்பாக அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் கேபி, தயாமாஸ்ரர், தமிழினி ஆகியோர் போட்டிடவுள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது இதுவும் அரசின் ஒரு சூட்சுமத்தையே காட்டுகின்றது.

தமிழ் மக்கள் நன்கு அறிந்தவர்களை தேரிதலில் நிறுத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அரசாங்கம் நினைத்துள்ளது அனால் அவர்களால் வெற்றிபெற முடியாது.

வடமாகாண சபை தேர்தலில் எனது கட்சியும் போட்டிடவுள்ளது நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததன் நோக்கம் எனது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவுசெய்யவே, எனது கட்சியில் இணைய விரும்புபவர்கள் தாராளமகாக இணையலாம்.

எனது நோக்கம் நாடடிலுள்ள சகல மொழிபேசுகின்ற மக்களுக்கும் நிம்மதியான வாழ்ககையை உருவாக்குவதேயாகும் பெற்றுத்தருவதேயாகும்.
ஆகவே இந்த தேர்தலில் என்னை வெற்றியடைய செய்யுங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Read more...

சோகத்தில் கரைந்தது காதல்! இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா?

தர்மபுரியை சேர்ந்த நாகராஜனின் மகள் திவ்யாவும் (21வயது ) நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் (19) என்பவரும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல பிரச்னைகளை கடந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும், பாதுகாப்பு கேட்டு சேலத்தில் உள்ள உதவிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். உடனே உரிய பாதுகாப்பை அளித்து நாயக்கன் கொட்டாய் நத்தம்காலனிக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜன், நவம்பர் 7ம் திகதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜனின் உறவினர்கள், அவரது சடலத்தை சேலம், திருப்பத்தூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பதற்றம் ஏற்பட்டது.

அன்றையதினம் இரவு, நத்தம்காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கினர். குடிசைகளுக்கு தீயும் வைத்தனர். இதில், 150க்கும் மேற்பட்ட குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அப்போது இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் கலவரம் வெடித்தது. குடிசைகளுக்கு தீ வைத்ததாக 500 பேர் மீது கிருஷ்ணாபுரம் பொலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களால் தாக்கி சேதபடுத்துதல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் இருதரப்பை சேர்ந்த 142 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது திட்டமிட்டு வீடுகளுக்கு தீ வைத்ததாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது. அதனால் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த நவம்பர் 15ம் தேதி, சேலம் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார், 2ம் கட்டமாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த 150 பேரை கலவர வழக்கில் கைது செய்தனர்.

இதற்கிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்ட நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சியினர் உண்மை அறிவதற்காக நேரில் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டது. டெல்லியில் இருந்து வந்த தேசிய மனித உரிமைய ஆணையத்தினர் கலவரம் நடந்த கிராமங்களுக்கு நேரில் வந்து விசாரணை நடத்திச் சென்றனர்.

மேலும் தமிழக அரசால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள், உதவித்தொகை வழங்கப்பட்டது. அதில், கலவரத் தால் சேதம் அடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தலா இந்திய ரூபா50 ஆயிரம் வீதம் ரூபா1.34 கோடியை தமிழக அரசு முதல்கட்டமாக வழங்கியது. குடிசைகள் தீயில் எரிந்ததில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரை ஆனதால் அவை புதிதாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் படி மார்ச் மாதத்தில் இளவரசனும், திவ்யாவும் நீதிபதிகள் முன்பு ஆஜராகினர். அப்போது திவ்யா, ''நான் கணவனுடன் செல்ல விரும்புகிறேன் எனக்கூறினார். அதன்படி அவரை கணவருடன் நீதிமன்றம் அனுப்பி வைத்தனர். அப்போது இந்த வழக்கு வரும் ஜூன் 6ம் திகதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இதற்கிடையே ஜூன் 5ம் திகதி திவ்யா திடீரென மாயமானார். மனைவி மாயாமானது குறித்து கிருஷ்ணாபுரம் பொலீசில் இளவரசன் புகார் செய்தார். பொலீசார் திவ்யாவை தேடி வந்தனர். அந்த நேரத்தில், ஜூன் 6ம் தேதி திவ்யா, தனது தாய் தேன்மொழியுடன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இளவரசனும் வந்தார். அன்றைய தினம் திவ்யா, ''தனது தந்தை இறந்ததால், தாய் தனியாக இருக்கிறார். அவருடன் செல்ல விரும்புகிறேன். அதனால் கணவனுடன் செல்ல விரும்ப வில்லை' என நீதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து திவ்யா, தாய் தேன்மொழியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அடுத்த விசாரணை ஜூலை 1ம் திகதி நடக்கும் என கூறப்பட்டது. அதன்படி விசாரணை நடத்தது. அன்றைய தினமும் தாயுடன் செல்வதாக திவ்யா கூறினார். இதனால் வழக்கு 3ம் திகதி (நேற்று முன்தினம்) ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி நேற்று முதன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா, தனது தாயுடன் வந்து ஆஜரானார். இளவரசனும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திவ்யா சார்பில் வக்கீல் பாலு ஆஜராகி, ''தாயுடன் மகள் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால், அவரது தாய் தேன்மொழி சார்பில் மகளை ஒப்படைக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுகிறோம் என்றார். இதற்கு இளவரசனின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் 4ம் தேதி (நேற்று) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில் பாதையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தர்மபுரி ரயில்வே பொலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தர்மபுரி ரயில்வே பொலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரயில் பாதை ஓரத்தில் வெள்ளை சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் ஒரு வாலிபர் தலை சிதறி பிணமாக கிடந்தார். அவர் காதல் திருமண சர்ச்சையில் சிக்கிய இளவரசன் என தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த இளவரசனின் தந்தை இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்தது தனது மகன் தான் என்பதை உறுதி செய்தார். சாவில் மர்மம் இருப்பதாகவும், திவ்யாவின் உறவினர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டதாகவும் கூறி, பொலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

சேலம் சரக டிஐஜி சஞ்சய்குமார், தர்மபுரி எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளவரசனின் உறவினர்களை சமாதானம் செய்தனர். மாலை 5 மணிக்கு இளவரசனின் உடலை ரயில்வே பொலிசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இளவரசன் திடீர் மரணத்தையடுத்து தர்மபுரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர் இளவரசன் தண்டவாளம் அருகே மரணம் அடைந்திருப்பது குறித்து ரயில் ஓட்டுநரிடம் விசாரிக்க ரயில்வே காவல்துறை முடிவு செய்துள்ளது. நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மருத்துவக் குழுவினரும் வந்தனர். ஆனால், வழக்குரைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கே பரபரப்பு எழுந்தது. பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி பொலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இளவரசன் உயிரிழந்திருந்த நேரத்தில் அவ்வழி யாக சென்ற கோவை - மும்பை குர்லா விரைவு ரயிலின் ஓட்டுநரிடம், விசாரணை நடத்துவது, இளவரசன் மரணம் அடைந்திருப்பதில் உள்ள மர்மத்தை விலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளவரசனின் கைபேசியை வைத்து, இறப்பதற்கு முன்பு, அவரது கைபேசி எங்கெல்லாம் இருந்துள்ளது என்பதை டவர் மூலம் கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இளவரசனின் மரணம் செயற்கை மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் சந்தேகத்தை, இது போன்ற விசாரணையின் மூலம் தெளிவுபடுத்தலாம்.

அதேவேளை இளவரசனின் மரணத்தை தொடர்ந்து, இளவரசனின் பெற்றோரு க்கும், திவ்யாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்துயுள்ளார். இது குறித்து திருமாவளவன் புதுவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தர்மபுரி இளவரசன் சாவில் மர்மம் உள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுள்ளனர். தமிழக அரசு இது தொடர்பாக பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.3 மாதத்தில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்பதற்காக இதை திசை திருப்ப முயற்சிக்ககூடாது. தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை எதையும் கேட்க விரும்பவில்லை. இளவரசனை காதல் திருமணம் செய்துகொண்ட திவ்யா கடைசி வரை அவருடன் சேர்ந்து வாழவே விரும்பி இருக்கிறார். கடந்த 3 ஆம் தேதி அவரை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி இளவரசனுடன் இனி சேர்ந்து வாழ மாட்டேன் என்று பத்திரிகையாளர்களிடம் சொல்ல வைத்துள்ளனர்.

இதற்குப் பிறகும் கூட இளவரசன் மனம் தளரவில்லை. தனது தந்தையிடம் இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றே கூறி இருக்கிறார். இந்த நிலையில் அவர் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் திவ்யா, அவரது தாயார், அவருடைய தம்பி ஆகியோருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. மேலும் இளவரசனின் பெற்றோருக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். இளவரசன் சாவுக்கு பின்னணியில் ஒரு கும்பல் இருந்துள்ளது. அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி பகுதியில் இளவரசன் மற்றும் திவ்யாவின் காதல் திருமணத்தால் தலித் மக்கள் மீது வன்னியர்கள் செய்த கொலைவெறித் தாக்குதல்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. இவர்களின் திருமணத்தால் ஒரு கிராமமே எரிந்து சாம்பலானதை யாரும் மறக்க முடியாது.

நேற்று பிற்பகலில் இளவரசன் ரயில்பாதை அருகில் இறந்து கிடந்தது தற்கொலை என்று பெரும்பாலான ஊடகங்களும், காவல்துறை யினரும் கூறி வருவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்கொலை என்பதற்கு எந்த ஒரு தடையமும் இல்லை என்பதே உண்மை. இப்படியிருக்க தற்கொலைதான் என்று ஊடகங்களும், காவல்துறையினரும் கூறுவது உண்மைக்குப் புறப்பானதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இளவரசன் திவ்யா திருமணத்தின் போது வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் இளவரசனின் கிராமத்தையே தீக்கிரையாக்கினர், அப்படியிருக்கையில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது எப்படி தற்கொலை தான் என்று ஆணித்தரமாக கூற முடியும் என்று அனைவரின் மனதிலும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் உண்மையை கண்டறிய அரசும், நீதித் துறையும், காவல்துறையும் தீவிரமாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் வேண்டுகோலாக உள்ளது.

தர்மபுரி காதல் ஜோடியான திவ்யா-இளவரசன் திருமணத்தை அடுத்து பெரிய ஜாதிக் கலவரம் மூண்டு அது பெரிய பிரச்சனையான நிலையில் காதல் திருமண ஜோடிகள் பிரிந்து நேற்று இளவரசன் மர்மமான முறையில் இறந்தும் போயுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளரும், வழக்குரைஞருமான எஸ். இம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பொது நலன் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், தருமபுரியில் காதல் திருமணம் செய்த கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது மனைவி திவ்யாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம். ஜெயச்சந்திரன், எம்எம். சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழைக்குரைஞர் வைகை ஆஜராகி வாதாடினார். அப்போது, நடந்த சம்பவங்கள் துரதிருஷ்ட வசமானது. இந்த நிலையில், திவ்யாவுக்கு இரண்டு ஆபத்து உள்ளது. ஒன்று நடந்த சம்பவங்களுக்கு எல்லாம் தான் தான் காரணம் என்று சுய குற்ற உணர்வினால் தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது அவரை சுற்றி உள்ளவர்கள் தற்கொலைக்குத் தூண்டலாம்.

எனவே இந்த ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும். திவ்யா மற்றும் அவரது தாய், தம்பி ஆகிய மூன்று பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைத்து, மிக விரைவில் அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டாக வேண்டும். அவர்களை உடனடியாக சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

Read more...

சீன பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்.

தென்கிழக்குப்பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார். சீன அரசினால் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு சீனா பீஜிங் தொழல்நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதி மாணவனாக இணைந்து கொண்ட இவர் அங்கு மேற்கொண்ட மிகச்சிறந்த ஆய்வுகள்மற்றும் வெளியீடுகளுக்காக 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் மிகச்சிறந்த கலாநிதி மாணவனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நற்பிட்டிமுனையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை கார்மல் பாத்திமாக்கல்லூரியிலும் உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார்.

இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எச்.முகம்மது மற்றும் ஹாஜியானி எஸ்.மீரா உம்மா ஆகியாரின் புதல்வராவார் என்பது குறிப்பிடத்தக்கது.


யு.எம்.இஸ்ஹாக்.

Read more...

த.தே.கூ வினுள் உட்கட்சி மோதல் உக்கிரம்! சேனாதிராஜா வை முதலமைச்சர் வேட்பாளராக்காவிடின் தீக்குளிப்பாராம் நிஷாந்தன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பின ருமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட் பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்க மாட்டேன் என யாழ். முன்னாள் மாநகர சபையின் உறுப் பினர் சிறிகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் தேர்தல் அறிவிக்கப்பட்டுவதற்கு முன்பிருந்தே வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முட்டி மோதிக்கொண்டனர். தேர்தல் அறிவித்தல் வந்த பின்னர் தமிழரசுக் கட்சியினர் எழுந்தமானமாக மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்ததை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாகவே நிஷாந்தன் மாவைக்காக தீக்குளிக்க போதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில் நீண்டகால அரசியல் அனுபவமும், ஆயுதம் தூக்காத மாறாத கொள்கையுடன் அகிம்சை பேராட்டத்தை நடத்திய ர்தூரநோக்குச் சிந்தனை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதி ராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more...

தனது மகன் தொடர்பாக வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டால் பதவி விலகுவாராம் ஹெலிய!

தனது மகன் குடித்திருந்ததாகவும், விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகவும் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத் தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து உடனடியாக விலகத் தயாராக உள்ளதாகத் ஊடகத்துறை ஹெலிய றம்புக் கெல்ல, தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற "ஏ" கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறையின் கதவு என எண்ணிக் கொண்டு றமித் றம்புக்கெல்ல விமானத்தின் கதவைத் திறக்க முனைந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரச ஊடகச் சந்திப்பில் அரச ஊடகப் பேச்சாளராகக் கலந்து கொண்ட கெஹெலிய றம்புக்வெல்ல, குறித்த விமானத்திற்குள் செல்லும் முன்னர் தனது மகன் ஒரு கோப்பை 'றெட் வைன்' மாத்திரமே அருந்தியிருந்ததாகக் குறிப்பிட்ட கெஹெலிய றம்புக்கெல்ல, இங்கிலாந்தின் ஊடகங்களில் தனது மகன் அதிக மணிக்கணக்காக மதுவருந்தினார் என்று வெளியாகும் செய்திகளை மறுத்தார்.

தன்னையறியாமல் செய்த தவறுக்காக தனது மகன் விமானப் பணியாளர்களிடம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியதாகத் தெரிவித்த கெஹெலிய றம்புக்கெல்ல, அத்தோடு, தனது மகனின் மன்னிப்பை குறித்த விமான சேவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது மகன் செய்தது ஒரு சின்ன விடயமாகும் என்று ரமித் ரம்புக்கெல்லவின் தந்தையும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய றம்புக்கெல்ல, தெரிவித்திருந்த நிலையில் தனது மகன் தொடர்பாக வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து உடனடியாக விலகத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

வடமாகாண சபை தேர்தல் ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன வெளியிட்டுள்ளார். ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கைச்சாத்திடப்பட்டதன் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.

இதன்படி 1987 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்ததுடன் 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி ஒன்பது மாகாணசபைகளும் உருவாகக்ப்பட்டதுடன் மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28ஆம் திகதி வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு நடைபெற்றது.

1988 ஜுன் 2 ஆம் திகதி மத்திய மாகானம் மற்றும் தெற்கு, மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழு மாகாண சபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 டிசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது மட்டும்லாது இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதுடன் 1988 செப்டம்பர் 2 திகதி அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து 1988 நவம்பர் 19 திகதி வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெற்றி பெற்றது மீண்டும் 1993 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் நடைபெற்றது.

3வது மாகாணசபைத் தேர்தல்களும் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன.

4வது மாகாணசபைத் தேர்தல்கள் ஏழு மாகாணங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன

5வது மாகாண சபைத் தேர்தல்கள் வடக்கு மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களுக்கு நடத்தப்பட்டபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்கேற்கவில்லை.

Read more...

12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

கொலைச் சம்பவம் தொடர்பில் 12 விசேட அதிரடிப் படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு திருகோண மலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படை வீரர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, இவர்களை ஜுலை மாதம் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Read more...

அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றோரின் ஏமாற்று வார்த்தைகளை கேட்டுத்தான் நாங்கள் பேராடினோம் - கருணா.

"தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபைக்கு 11 உறுப்பினர்களை அனுப்பியுள்ளார்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள்? நாட்டுக் கட்டை போல் இருக்கின்றார்கள்"

அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்கள் கூறிய வார்த்தை களைக் கேட்டு நாங்கள் போராடினோம். ஆனால் அப் போராட்டத்தால் இறுதியில் என்ன நடந்தது? வெறும் அழிவு மட்டும்தான்' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளர்

மட்டக்களப்பு, படுவான்கரையில் புதுமன்மாரிச்சோலை கிராமத்திற்கு மின்சார விநியோகத்தினைத் வழங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

30 வருடகால யுத்தத்தினால் பெற்ற பலன்கள் ஒன்றுமில்லை. யுத்தம் நடந்திருந்தால் இன்று மின்சாரம் கிடைத்திருக்காது எனவும் இப்பிரதேச மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் என்னிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இன்று இந்த மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் யுத்தம் நீடித்திருந்தால் மின்சாரம் என்பது இக்கிராம மக்களுக்கு எட்டாக் கனியாகவே அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

யுத்தத்தினால் நாம் பெற்ற பலன் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் பதில் கூறலாம். ஆசை வார்த்தை காட்டி வாக்குகளை சூறையாடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வருவார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைக்கு 11 உறுப்பினர்களை அனுப்பியுள்ளார்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள்? நாட்டுக் கட்டைபோல் இருக்கின்றார்கள்.

அரசியலுக்கு ஒருவரை நீங்கள் தெரிவு செய்து அனுப்பினால் அவரால் உங்களுக்கு இலாபம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்பக் கூடாது. ஆசை வார்த்தைகளைக் கூறி பெரிதும் ஏமாற்றப்படுபவர்கள் படுவான்கரை மக்கள்தான். அதுபோன்றுதான் கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்மந்தன் போன்றவர்களின் வர்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம், அவர்கள் கூறியதால்தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம், ஆனால் இறுதியில் என்ன நடந்தது? வெறும் அழிவு மட்டும்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

16,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சவூதியிலிருந்து வெளியேறுகின்றனர் - இலங்கைத் தூதுவர்.

சவூதி அரேபியாவில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் தொடர்பிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வருவது நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற பல நாட்டவர்கள் நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதற்கிணங்க இலங்கை யர்களில் 16,000 க்கும் அதிகமானவர்கள் சவூதியிலிருந்து வெளியேற தற்காலிக அனுமதி பத்திரத்தை கோரியுள் ளார்கள் என சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

தமது நாட்டில் பணி புரிபவர்கள் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். சவூதி அரேபிய குடிமக்களுக்கு வேலைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் நிதாகத் எனும் புதிய சட்டத்தை அந்நாடு அறிமுகப் படுத்தியது.

இதன் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதை யடுத்து பல நாடுகள் சவூதி அரேபிய அரசிடம் முறையிட்டன. இந்தியா உட்பட பல நாடுகள் இராஜதந்திர ரீதியில் அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்தன. சர்வதேச வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நேற்று முன்தினம் நடைமுறைக்கு வரவிருந்த சட்டத்தை நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக சவூதி மன்னர் அறிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தம்மீதான நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு நாட்டைவிட்டு வெளியேற தற்காலிக அனுமதி பத்திரங்களை கோரியுள்ளதாகவும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Read more...

13 ஆவது திருத்தத்தினால் உருவாகும் பாரிய விளைவுகள் என்ன? விளக்குகின்றார் கோத்தபய ராஜபக்ஷ

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கிணங்க மாகா ணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் தேசிய பொலிஸ் 9 ஆக உடையும் எனவும், 9 மாகாணங்களிலும் 9 பொலிஸ் உருவாகும் இதனால் பொலிஸ் நிலையங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்குள்ள அதிகாரம் இல்லாமல் போகும் எனவும், நாடு குழம்பிப் போவதோடு பொலிஸ் அரசியல் மயமாவதை தடுக்க முடியாது என, பாதுகாப்பு மற்றும் நகர அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு மாகாணத்திலும் முதலமைச்சர்களின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் மாகாண பொலிஸ்கள் இயங்குவதால், ஆட்சேர்ப்பும் பொலிஸ் அதி காரத்தின் கீழ் காணப்படுகின்றது. இதன் மூலம், இன ரீதியான பொலிஸ் நிலை யங்கள் உருவாகும் அபாயம் எழும் எனவும், கோத்தபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இதனால் நாட்டில் பிரிவினை வாதம் தலைதூக்கும், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏதும் தவறு செய்தால் அவரை விசாரிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் மாகாண முதலமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும். அவரை விசாரிப்பதும் விசாரிக்காமல் இருப்பதும் முதலமைச்சரின் விருப்புப் படியே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதன் மூலம் தேசிய பொலிஸ் சேவை துண்டுகளாக பிரிக்கப்படும். 75 ஆயிரம் பொலிஸாரும் மாகாணங்களுக்கு பிரிந்து செல்வதன் மூலம் பொலிஸ் தலைமையகத்தில் 600 பொலிஸாரே எஞ்சுவர் எனவும் பொலிஸ் ஆயுதம் தரித்திருப்பதன் மூலம் மாகாணங்கள் தனியான ஆட்சியில் ஈடுபட ஆயுதப் போராட்டத்தில் குதிக்கும் அபாயமும் உள்ளது. பொலிஸ் அதிகாரம் வழங்குவதன் மூலம் நாட்டில் மீண்டும் பிரிவினை ஏற்பட்டு யுத்தம் ஏற்படும் சூழல் ஏழலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

எகிப்த்தில் இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார் மஹ்மூத் மன்சூர்! முன்னாள் ஜனாதிபதி முர்சி வீட்டுக் காவலில்!

எகிப்த்து ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி விலக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இடைக் கால ஜனாதிபதியாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அட்லி மஹ்மூத் மன்சூர் நேற்று பதவியேற்றார் இராணுவ புரட்சி மூலம் பதவி விலக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய முர்சி தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் முர்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறியதாக இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

எகிப்தில் புதிய தேர்தல் நடத்தப்படுவதே ஒரே இலக்கு என மன்சூர் குறிப்பிட்ட போதும் தேர்தலுக்கான காலம் குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஜனாதிபதி முர்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்த நிலையிலேயே கடந்த புதன்கிழமை இரவு முர்சி இராணுவத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார முர்சி தனது இஸ்லாமிய திட்டத்திற்கு அமைய செயற்பட்டதாகவும் பொருளாதார பிரச்சினையை தீர்க்க தவறியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

நாட்டில் நிலவும் பதற்றத்தையொட்டி ஏற்பட்ட வான்முறைகளில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் பெரும்பாலானோர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பதற்றம் ஆரம்பமானது தொடக்கம் இதுவரையில் சுமார் 50 பேர் அளவில் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியபிரமாணம் செய்த மன்சூர், இடைக்கால அரசின் தலை வராகவும் பொறுப்பேற்றார். இதன்போது அவர், 'குடியரசின் ஒழுங்குகளை பாதுகாப்பதாகவும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மதிப்பதாகவும், மக்கள் விருப்புகளின் பாதுகாவலராக இருப்பதாகவும்' சத்தியபிரமாணம் செய்தார்.

'மோசடிக்காரர்களுக்கு அன்றி நேர்மையான மக்களின் விருப்புக்கு அமைய தேர்தல் நடத்தப்படும். ஒரு சுதந்திரமான மற்றும் ஜனநாயகமான பிரகாசமான எதிர்காலத்திற்கு இதுவே ஒரே வழி' என்று மன்சூர் வலியுறுத்தினார். அரசியல் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர இராணுவம் விதித்திருந்த 48 மணி நேர கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு, இஸ்லாமியவாதிகளால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பை ரத்துச்செய்த இராணுவம் புதிய தேர்தலுக்கும் வாக்குறுதி அளித்தது.

இராணுவ அறிவிப்பை தொடர்ந்து தலைநகர் கெய்ரோ எங்கும் இராணுவத்தின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. எனினும் இது ஒரு இராணுவப் புரட்சி என முர்சியின் பேஸ்புக் பக்கம் விமர்சித்தது. மக்கள் சட்ட ஒழுங்குக்கு அடிபணிந்து இராணுவ சதிக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Read more...

Thursday, July 4, 2013

சனல்-4 ஆவணப்படத்தை திரையிட ஏற்பாடு செய்தவர்கள் கைது!

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாதகமாக சித்தரித்த சர்ச்சைக்குரிய சனல்-4 ஆவணப்படத்தை திரையிட ஏற்பாடு செய்தவர்கள் மலேஷிய பொலிஸாரினால் கைது செய்யப்படடுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாதகமாக சித்தரித்த "யுத்த சூன்ய வலயம்" ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதென அறிந்துக்கொண்ட மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்ஸர், மலேஷிய அதிகாரிகளிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் தகவலின் பிரகாரம் ஆவணப்படம் திரையிடப்படுவதை மலேஷியா அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன், ஏற்பாட்டாளர்களையும் தடுத்து வைத்துள்ளனர். படத்தின் இயக்குநரான கலம் மக்றே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தபோதிலும் வெளிவிவகார அமைச்சரினால் அதனை உறுதிசெய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

ஆசிரியையின் நிர்வாணப்படங்களை இணையத்தளத்திக்கு அனுப்பப் போவதாக மிரட்டும் படைவீரர்!

கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் 26 வயதான ஆசிரியை ஒருவரை, பாலியல் ரீதியான அச்சுறுத்தும் விமானப்படை வீரரொருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பி லுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் 26 வயதான ஆசிரியையே இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆசிரியையை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, அவரது நிர்வாணப் படங்களையும் வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்திக்கு அனுப்பப்போவதாக குறித்த படைவீரர் அந்த ஆசிரியையை எச்சரித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் இந்த விமானப்படைவீரருடன் அறிமுகமாகியதன் பின்னர், புறக்கோட்டை யிலுள்ள ஓர் அறையில் சந்தித்துவந்ததாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை நிர்ப்பந்தித்து நிர்வாணமாக வீடியோ படமெடுத்ததாகவும் இந்த ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும் அதன் பின்னரும் விமானப்படைவீரர் தன்னோடு வரும்படி நிர்ப்பந்திப்பதாகவும் மறுத்தால் தன்னிடமிருக்கின்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத் தளத்திற்கு அனுப்பப்போவதாக மிரட்டுவதாகவும் இந்த ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பெரிதும் மனமுடைந்து போயுள்ள தன்னை இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீட்குமாறு அவர் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சந்தேகநபரின் தொலைபேசி அழைப்புகளை பயன்படுத்தி, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

சிங்களவர்கள் நாடு இரண்டுபடும் என்று சந்தேகிப்பதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்துகிறார் தயா மாஸ்டர்!

அதற்கு முதல் காரணம் புலம்பெயர்ந்திருக்கின்ற ஈழத் தமிழ்த் தனவந்தர்கள் மற்றும் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இலங்கை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் நாடு இரண்டுபடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் குறிப்பிடுகிறார்.

யுத்தம் முடிவடைந்த போதும்,இன்னும் புலம் பெயர் தமிழர்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மூலம் பெற்றுக்கொண்ட பணத்தை வைத்துக்கொண்டு வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்களின் தனியார் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே குறியாக நிற்பதாகவும் அவர் தெளிவுறுத்தினார்.

அதேபோல, நாட்டுக்கு வெளியே ஈழ நாடொன்றை அமைப்பதன் மூலம் சிங்கள மக்களும் அரசாங்கமும் இரண்டுபடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால் ஈற்றில் நடைபெறுவது என்னவென்றால் வடக்கில் வாழும் அப்பாவிச் சனம் நாளுக்கு நாள் துன்பத்தை எதிர்நோக்குவதே என்றும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

திருமணம் ஆகியும் இன்னும் உங்களுக்கு குழந்தை இல்லையா குணப்படுத்த புதிய மருந்து

தற்போது துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது.இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிலும் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் துரியன் பழம் சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு கூறுகின்றனர். இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. சரி, இப்போது துரியன் பழத்தால், உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.

துரியன் பழத்தின் சதைப் பகுதியை சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தலாம்.அது மட்டுமல்லாது நகங்களில் பிரச்சனை இருக்கும் போது துரியன் பழத்தின் வேர்களைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். துரியன் மரத்தின் வேர் மற்றம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால், காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம்.

துரியன் பழத்தில் உள்ள விட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். துரியன் பழத்தின் தோல், கொசுக்கடியைத் தடுக்க உதவும். துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.

இளமையிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள விட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஃபைரிடாக்ஸின் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.

இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும். ஒற்றைத் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, துரியன் பழம் ஒரு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஏனெனில் இதில் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் ரிபோஃப்ளேவின் அதிகம் நிறைந்துள்ளது.

துரியன் பழத்தில் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.துரியன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது. ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால் கருப்பை பலமாகி ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள தயமின் மற்றும் நியாசின் பசியைத் தூண்டும். சொறி சிரங்கு பிரச்சனை இருந்தால், துரியன் பழத்தின் தோலை அரைத்து தடவினால் குணமாகும்.

Read more...

உங்களுடைய அழகைக்கூட்ட

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ – வாட்டி எடுத்த கோடை வெயிலிலால் நம் சருமம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அதை அப்படியே விட்டுவிட்டால், சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கங்கள் விழுந்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும்.

”கருத்து, களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க, இயற்கை தந்த வரமாய் இல்லத்தில் இருக்கும் பொருட்களைவைத்து பொலிவுறச் செய்யலாம்” என்கிறார் காரைக்குடி சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்.

தக்காளி

தக்காளியில் லைக்கோபின், வைட்டமின் ஏ மற்றும் சி இருக்கின்றன. சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களினால் ஏற்பட்ட பாதிப்பைப் போக்கும். கண்ணைச் சுற்றி உள்ள கருவளையத்தைப் போக்கும். சரும நோய்கள் வராமலும் பாதுகாக்கும். குளிப்பதற்கு முன் தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து, பிறகு கழுவ வேண்டும்.

எலுமிச்சை

இதில் இருக்கும் வைட்டமின் சி, சரும செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச்செய்யும். எண்ணெய் சருமத்தினர்களுக்கு, எலுமிச்சை மிகச் சிறந்தது. எலுமிச்சைச் சாறில் சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் தடவிவர, முகத் தோலின் மேல் கருப்பு அடுக்கினை நீக்கி முகத்தைப் பிரகாசமடையச் செய்யும். வெள்ளரிப் பிஞ்சை அரைத்து எலுமிச்சைச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காயவைத்து, பிறகு கழுவலாம்.

பாதாம்

ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் மற்றும் லினோலைக் ஆசிட் இதில் இருக்கின்றன. இது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சுத்தமாக்குவதுடன் முகத்தைப் பொலிவடையச் செய்யும். தினமும் ஒரு பாதாம் பருப்பின் தோலை நீக்கி, அரைத்து பாலில் கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவலாம்.

கற்றாழை

வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உள்ளது. முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதுடன், அதிகமான எண்ணெய் பசையையும் போக்கும். சூரிய ஒளியின் கடும் வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். சருமத்தில் ஈரத் தன்மையைத் தக்கவைத்து, நிறத்தையும் கூட்டும். கற்றாழை ஜெல்லுடன், பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.

துளசி

மிகச் சிறந்த கிருமிநாசினி. சருமத்தை தோல் நோயிலிருந்து பாதுகாக்கும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளின் மீது தடவவேண்டும். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

கேரட்

பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால், சருமப் பிரச்னையைச் சரிசெய்து பளிச்சென வைத்திருக்கும். ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கி பருக்கள் வருவதைத் தடுக்கும். இரண்டு கேரட்டுகளை வேகவைத்து அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காயவைத்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்ய வேண்டும்.

பப்பாளி

‘பப்பாய்ன்’ என்கிற தாதுப் பொருள், சரும செல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை என்சைம்கள் பப்பாளியில் இருப்பதால், சருமம் புத்துணர்ச்சி அடையும். சருமத்தில் புதிய செல்களை உருவாக்க உதவும். பப்பாளிக் கூழை மருக்களின் மீது தடவிவர, மருக்கள் உதிர்ந்துவிடும். முரட்டுத் தோலை மிருதுவாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச் சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. தூசுகளால் ஏற்பட்ட பொலிவிழப்பை மீட்டுத் தரும். பருக்களால் உண்டான தழும்பும் மறைந்துவிடும். ஆரஞ்சுத் தோலினை சூரிய ஒளியில் காயவைத்து அரைத்து வைத்துக்கொள்ள«வண்டும். இந்தப் பொடியில் சந்தனம் கலந்து சிறிது தயிர் சேர்த்து, வாரம் ஒரு முறை முகத்தில் தடவி 10 நிமிடம் காயவைத்து கழுவிவர வேண்டும்.

Read more...

போராட்டத்தை பதிவு செய்ய சென்ற பெண் நிருபர்மீது பலாத்காரம்

எகிப்து அதிபர் மோர்ஸி பதவி விலகக் கோரி ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்ய சென்ற டச்சு நாட்டைச் சேர்ந்த பெண் நிருபர் கூட்டத்துக்கு நடுவே வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.

தலைநகர் கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன் போராட்டம் இரவிலும் நீடித்ததால் அந்த போராட்டத்தை பதிவு செய்யச்சென்ற பெண் நிருபர் கூட்டத்துக்கு நடுவே வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலாத்காரத்திற்க உள்ளான பெண் நிரூபர் உயிருக்குப் போராடிய நிலையில் போராட்டக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதே வேளை இதே இரவில் மட்டும் மொத்தம் 41 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

போருக்கு பிந்திய கிளிநொச்சி கொழும்பை முந்துமா!

கிளிநொச்சி இன்று உலக ஊடகங்களில் அடிபடும் ஒரு பிரபலமான நகராக மாறி இருக்கின்றது. அதற்குக் காரணம் புலிகளுடனான இலங்கை அரச படைகளின் இறுதி யுத்தம் பெரும்பாலும் கிளிநொச்சிப் பிரதேசத்திலேயே நடைபெற்றமையாகும்.

1995 ஒக்ரோபரில் அரச படைகள் புலிகளை யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேற்றிய பின்னர், 2009 மே மாதம் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இறுதிப்போரில் தோற்கடிக்கப்படும் வரை, சுமார் 14 வருடங்களாக புலிகள் கிளிநொச்சியையே தமது தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். அதன் காரணமாகவோ என்னவோ, போர் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் கிளிநொச்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மிக விரைவில் தமிழ்ப் பகுதிகளில் கிளிநொச்சி நகரம் முதல்தரமான நகரமாக மாறக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

போர் முடிவுற்ற பின்னர் கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து சில தகவல்களைப் பார்ப்போம்.

கிளிநொச்சியின் தற்போதைய சனத்தொகை 135,605 ஆகும். போர் முடிவுற்ற பின்னர், கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த (பெரும்பாலும் புலிகள் புதைத்தவை) 77,363,408 சதுர மீற்றர் பிரதேசத்தில், 64,057,713 சதுர மீற்றர் (83 வீதம்) பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. மீதி இருக்கும் இடங்களில் 8 வீதமான பிரதேசங்களில் தற்பொழுது கண்ணி வெடி அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுதவிர காடுகளில் உள்ள 9 வீதமான பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியிருக்கிறது.

இந்த கண்ணிவெடி அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவமும், ஐ.நா. கண்ணிவெடி அகற்றும் பிரிவும் ஈடுபட்டு வருகின்றன. யுத்தம் நடைபெற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி வேகமாகவும், நல்ல முறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

போர் முடிவுற்ற பின்னர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும்தொகையான பல்வகை ஆயுதங்களையும் படையினர் மீட்டுள்ளனர்.

அபிவிருத்தி முயற்சிகள்

யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் தற்பொழுது பல்துறை சார்ந்த அபிவிருத்தி முயற்சிகளை செய்து வருகின்றது. குறிப்பாக நீர் விநியோகம், கல்வி அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறை, வர்த்தகம், சுகாதாரம், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை, மின் விநியோகம், தொலைத் தொடர்பு, வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி ஆகிய துறைகளில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வீதி அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் ஏ-9, ஏ-32, ஏ-34, ஏ-35, பி-269, பி-357 ஆகிய வீதிகள் உள்ளடங்கிய 176 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 15,096 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அரசாங்கத்தினதும், சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் முயற்சியால் வன்னிப் பிரதேசத்தில் 42,480 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதுன் மீள் குடியேற்றத்திற்கு இராணுவமும் பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளது.

உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் தகவல்ப்படி பூநகரியில் 22,023 பேரும், கரைச்சியில் 65,723 பேரும், கண்டாவளையில் 23,366 பேரும், புதுக்குடியிருப்பில் 3,978 பேரும், மாந்தை மேற்கில் 1874 பேரும், துணுக்காயில் 9,742 பேரும், ஒட்டிசுட்டானில் 5,285 பேரும், மாந்தை கிழக்கில் 3,614 பேரும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியேறிய மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசாங்கம் 70,445.96 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலான மக்களின் தொழில் விவசாயமும் மீன்பிடியும்தான். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியளிப்புடன், இலங்கை மீன்பிடி அமைச்சின் உதவியுடன் பூநகரி மீனவர் கூட்டுறவுச் சங்கம் பூநகரியில் படகு கட்டும் தொழிற்சாலையொன்றை அமைத்துள்ளது. இதில் 8 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் கண்ணாடி இழைப் படகுகள் உள்ளூர் மீனவர்களுக்கு 5 இலட்சம் ரூபா விலைக்கு வழங்கப்படுகின்றன.

விவசாயிகளைப் பொறுத்தவரை நிலமில்லாத பிரச்சினையும், இருக்கும் நிலங்களுக்கு போதிய நீர் இல்லாத பிரச்சினையும் இங்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. 1950ஆம் ஆண்டுகளிலும், 1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் இங்கு அரசாங்கம் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கிய பின்னர் புதிதாக குடியேற்றத் திட்டங்கள் எதையும் உருவாக்கவில்லை.

அந்தக்காலப்பகுதியில் குடியேற்றப்பட்ட பழைய குடியேற்றவாசிகளின் பிள்ளைகளும், அவர்களது பிள்ளைகளும் வளர்ந்து குடும்பஸ்தர்களாகிவிட்டதால், அரசாங்கம் முன்னர் வழங்கிய 2 ஏக்கர் வீட்டுக் காணியும், 3 ஏக்கர் வயல் காணியும் பல தடவைகள் பிள்ளைகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டுவிட்டதால், இப்பொழுது அவர்கள் அரை ஏக்கர் 1 ஏக்கருடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். இது அவர்கள் விவசாயம் செய்து வாழப் போதாதாக காணப்படுகிறது.

இதுதவிர இன்னொரு பிரச்சினையும் உருவாகியுள்ளது. போருக்கு முந்திய காலங்களில் 50 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரை காணிகளை வைத்திருந்த பெரும் நிலச் சொந்தக்காரர்களின் காணிகளை பின்னர் புலிகள் யைகப்படுத்தி வைத்திருந்தனர். சில காணிகளை தமக்கு வேண்டியவர்களுக்கு பங்கிட்டளித்திருந்தனர். தற்போது போர் முடிவுற்றதும் அந்தக் காணிகளின் வாரிசுகள் (பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்பவர்கள்) தமது காணி உறுதிகளுடன் வந்து அந்தக் காணிகளை மீட்டுத் தரும்படி கிராமசேவை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அந்தக் காணிகளை திரும்பவும் மீட்பதற்காக அரச அதிகாரிகளுக்கு இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். அப்படியானவர்கள் இந்தக் காணிகளில் வந்து விவசாயம் செய்யப் போவதில்லை. அவர்கள் இப்பொழுது இந்தக் காணிகளில் பயிர் செய்பவர்களை வெளியேற்றிவிட்டு, அந்தக் காணிகளை வசதியுள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்கே முயல்கின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது அவசியம். தேவையானால் விசேட காணிச் சுவீகரிப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, வெளிநாடுகளில் சகல வசதிகளுடனும் வாழும் இந்தப் பெரும்காணிச் சொந்தக்காரர்களின் காணிகளைச் சுவீகரித்து, தற்பொழுது அந்தக் காணிகளில் உழுது பயிரிடும் ஏழை விவசாயிகளுக்கு அவற்றை வழங்க வேண்டும்.

விவசாயிகள் எதிர்நோக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சினை நீர்ப் பிரச்சினையாகும். இது ஆண்டாண்டு காலமாக கிளிநொச்சிப் பிரதேசத்தில் இருந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு செல்வாக்குடைய தமிழ் அரசியற் தலைவர்களாகவும் பின்னர் யாழ்ப்பாணம் கச்சேரியில் அரசாங்க அதிபர்களாகவும், உதவி அரசாங்க அதிபர்களாகவும் இருந்த பலருக்கும் கிளிநொச்சியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வயல்கள் இருந்ததால், அவர்கள் நீர் விநியோகத்தில் ஏழைக் குடியேற்ற விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் ஓரவஞ்சகமாக சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டனர்.

கிளிநொச்சியின் மிகப்பெரிய நீர்த் தேக்கமான இரணைமடு குளத்தைக் கட்டும் போதே, ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டுக் கட்டினர். குளத்தின் வலது வாய்க்காலால் தண்ணீர் பாயும் சாதாரண விவசாயிகளுக்குத் தண்ணீர் பாய்வதை நிறுத்திய பின்னரும், தாம் தொடர்ந்து தண்ணீர் பெறும் வகையில் தமது காணிகளுக்கு நீர் பாயும் வகையில் இடது வாய்க்காலை 6 அடிகள் பதித்து வைத்துக் கட்டிக் கொண்டனர். அத்துடன் சிறுபோக தண்ணீர் பங்கீட்டின்போது, வைத்திருக்கும் காணிகளில் மூன்றிலொரு பங்கு காணிக்குத் தண்ணீர் என்ற கபடத்தனமான திட்டமொன்றை வகுத்து, தாம் வைத்திருக்கும் 300 ஏக்கர் காணியில் 100 ஏக்கர் காணிக்கு தண்ணீரும், குடியேற்ற விவசாயி வைத்திருக்கும் 3 ஏக்கர் காணியில் 1 ஏக்கர் காணிக்கு மட்டும் நீரைப் பங்கிட்டுக் கொண்டனர்.

இந்த நிலை இன்றும் தொடர்கின்றது. விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு போதிய நீரற்ற இந்த நிலைமையில், அரசாங்கம் இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப் போவதாக வேறு கூறி வருகின்றது. இன்று கிளிநொச்சி மக்களில் கணிசமான ஒரு தொகையினர் குடும்பத் தலைவர்கள் இல்லாத விதவைகளாக இருக்கின்றனர். கடந்தகால போர் விளைவித்த ஒரு கோர நிகழ்வு இது.

கிளிநொச்சியின் 4 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் மொத்தமாக 6,170 குடும்பங்கள் குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பங்களாக இருக்கின்றனர். இவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவும், புலிகளிடம் பறி கொடுத்ததுபோக மீதியாகவுள்ள தமது பிள்ளைகளைக் காப்பாற்றி வளர்க்கவும் வழி தெரியாது திண்டாடுகின்றனர்.

இவ்வாறு தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு இருந்த போதிலும், கடுமையான உழைப்பாளிகளான இந்த மக்கள் தமது சொந்த முயற்சிகளால், தமது வீடுகளை திருத்தியும் புதிதாகக் கட்டியும் வாழுவதுடன், தமது தொழில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில் இன்றைய காலகட்டத்தில் அரச அதிகாரிகளினதும், அரசியல் கட்சிகளினதும் ஆதரவு நிச்சயமாகத் தேவை. அந்த வகையில் அவர்களது நலன்களுக்காக அரசியல் உள் நோக்கமோ அல்லது சுயநலமோ இன்றி செயற்படும் நன்நோக்கு மனப்பாங்குடைய சமூகப் பொறுப்புக் கூறும் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே இன்று அவர்களுக்குத் தேவைப்படுகின்றனர்.

-வானவில் -

Read more...

ஆஸ்திரேலியாவில் அரசியல் நெருக்கடி. Patrick O’Connor

ஒரு திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் கெவின் ரூட்டை திடீரென ஆஸ்திரேலிய பிரதமராக இருத்தியிருப்பதும், ஜூலியா கில்லார்ட்டை அகற்றியிருப்பதும் ஒரு முன்னோடியில்லாத அரசியல் நிகழ்வாகும். ஜூன் 2010ல் உள்கட்சி ஆட்சி சதியின் மூலம் ரூட்டை பிரதம மந்திரி பதவியில் இருந்து அகற்றி, கில்லார்ட்டை பிரதமராக்கிய அதே தொழிற் கட்சி அங்கத்தவர்களின் செயற்பாடுதான் இப்பொழுது ரூட் மீண்டும் வந்துள்ளதற்கும் காரணமாகும்.

இந்த அசாதாரண அரசியல் கொந்தளிப்பு, ஆஸ்திரேலிய முதலாளித்துவம் அரசியல், சமூக உறுதிப்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பு அரண் என்று பெரும் அக்கறையுடன் அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தால் பிரச்சாரம் செய்யப்படும் சர்வதேச தோற்றத்தை பொய்யாக்குகிறது. ஒரு நூற்றாண்டிற்கும் மேல் பாராளுமன்ற அமைப்புமுறை மற்றும் இரு கட்சிமுறையின் முக்கிய ஊண்டுகோலாக இருந்து ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்கு சேவைசெய்துள்ள தொழிற் கட்சி இப்பொழுது ஒரு இறுதியான நெருக்கடியால் அதன் இருப்பிற்கே ஆபத்தான நிலையில் உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலிய மக்களின் முதுகிற்கு பின்னே செயல்படுத்தப்பட்ட 2010 ஆட்சி மாற்றம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளில் நீண்டகால விளைவுடைய மாற்றங்களை கொண்டுவருவதற்காக நடத்தப்பட்டது. பெருநிறுவன உயரடுக்கு, ரூட்டின் கொள்கைகளுடன் தொடர்புபட்ட யுத்தத்திற்கு பின்னரான நிதிய நெருக்கடிக்கு ஊக்கம் தரும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்றும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை குறைக்கும் நோக்கமுடைய சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்றும் கோரின.

அதே நேரத்தில் ரூட்டின் இராஜதந்திர முன்முயற்சிகளான, அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து ஆசிய பசிபிக்கில் சீனாவிற்கு அதன் மூலோபாய செல்வாக்கு சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும் எனப்பட்டவற்றை முடிவிற்குக் கொண்டுவர வாஷிங்டன் உறுதி கொண்டது. ஒபாமா நிர்வாகம், ஆசியாவிற்கு “முக்கியத்துவம் கொடுக்கும்” ஆக்கிரோஷ கொள்கை மூலம் சீனாவைச் சுற்றி வளைப்பதற்கும் பின்னர் அதன் மீது போர் தொடுக்கும் நிலைப்பாட்டிற்கும் ஆஸ்திரேலியாவை இசைவாக கொண்டுவர கில்லார்ட்டை ஒரு கருவியாக கண்டது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின், ஆட்சிமாற்றத்தைத் தூண்டிய மோதல்களும் நெருக்கடிகளும் தீவிரம்தான் அடைந்துள்ளன. ஒபாமாவின் “முக்கியத்துவம் கொடுக்கும்” கொள்கை இது பின்னர் மூலோபாயம் என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது இப்பொழுது யதார்த்தமாகிவிட்டது. இதில் ஒரு பாரிய அமெரிக்க இராணுவ பலப்படுத்தல் இப்பிராந்தியத்தில் நடைபெறுவதுடன், சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் தொடர்கின்றன. இவை ஆசிய பிராந்தியம் முழுவதும் ஆபத்தான வெடிப்புமிக்க இடங்களை உருவாக்கிவிட்டுள்ளன.

உலகப் பொருளாதார நெருக்கடியும் இதேபோல் விரைவுபட்டுவிட்டது. இப்பொழுது ஆஸ்திரேலியாவில் இன்னும் அதன் நேரடி விளைவை காண்கிறது. உலக நிதியச்சரிவை தொடர்ந்த உடனடிக்காலத்தில் ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடைக்கால பாதுகாப்பளித்த சீனாவின் உந்துதலுடனான சுரங்கத் தொழில் ஏற்றுமதி எழுச்சி இப்பொழுது முடிந்து விட்டது.

நேற்று வெளிவந்த ஒரு ப்ளூம்பேர்க் கட்டுரை ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தப்பட்ட கடன் கடமைப்பாடு (CDO) நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளது. இது 2008 நிதியச் சரிவைத் தூண்டிய “நச்சுச் சொத்துக்களில்” ஒன்று எனக் கூறப்பட்டது. “வெடிப்பதற்கு காத்திருக்கும் நேரத்திற்கு வெடிக்கும் குண்டுதான் ஆஸ்திரேலியா” என்று Société Générale SA உடைய லண்டனை தளமாக கொண்ட மூலோபாயவாதி ஆல்பேர்ட் எட்வார்ட்ஸ் அறிவித்துள்ளார். “இது ஒரு CDO மட்டும் அல்ல, தன்னை இருமடங்காக பெருக்கிக் கொண்டுள்ள CDO ஆகும். இப்பொழுது ஆஸ்திரேலியாவில் இருப்பது எல்லாம், மிக எளிதாகக் கூற வேண்டும் என்றால், சீனாவின் இன்னும் பெரிய கடன் குமிழியைத் தனது உயிர்வாழ்விற்கு நம்பியிருக்கும் ஒரு பாவனைப் பொருட்களின் எழுச்சியின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு கடன் குமிழியாகும்.”

ஏற்கனவே பல ஆஸ்திரேலிய மாநிலங்கள் உத்தியோகபூர்வ மந்த நிலையில் உள்ளன. பாரிய பணிநீக்கங்கள் நாடு முழுவதும் விரைவாக நடைபெறுகின்றன. கடந்த 12 மாதங்களில் மொத்தம் 150 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய 18 சுரங்க மற்றும் எரிசக்தி திட்டங்கள் கைவிடப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. சுரங்க மற்றும் கட்டமைப்புத் துறையில் கீழ்நோக்கிய சரிவு, முக்கிய பங்கு குறியீடு கிட்டத்தட்ட 9% குறைந்துவிட்ட நிலையில் சொத்துக்கள் மற்றும் பங்குச் சந்தைக் குமிழிகளை வெடிக்கச் செய்யும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அதாவது 135 பில்லியன் டாலர்கள் மே மாத நடுப்பகுதியில் இருந்து சரிந்துவிட்டது. ஆஸ்திரேலிய டாலர் மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில் மதிப்பில் சரிகிறது. எரிபொருள் மற்றும் உழைக்கும் மக்கள் நம்பியுள்ள பல இறக்குமதிப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிட்டது.

வெடிப்புத்தன்மை உடைய சமூக எழுச்சிகள் எதிர்பார்க்கப்படுகையிலும் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்திலும் ரூட் அதிகாரத்திற்கு மீண்டும் வந்துள்ளார்.

அவரை பதவியிலிருத்தியதன் உடனடி நோக்கம் தொழிற் கட்சி அப்படியே சரிந்துவிடுவதை தடுத்தல் ஆகும். ஜூலியா கில்லார்ட்டின் தலைமையில், கட்சி இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் முன்னோடியில்லாத தோல்வியை சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ரூட்டை பதவியிலிருந்து அகற்றும் ஜனநாயக விரோதச் செயலில் அவர் கொண்டிருந்த பங்கினால், கில்லார்ட்டுக்கு எதிராக மக்கள் விரோதப் போக்கு தீவிரமாயும் பரந்தும் உள்ளது. இந்தப் பின்விளைவை ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருந்தவர்கள் எதிர்பார்க்கத் தவறிவிட்டனர். இது தொழிற் கட்சியை பாராளுமன்றத்தின் பின்வாங்கில் இருக்கும் ஒரு சிறிய, ஆழ்ந்த பிளவுற்ற குழுவாக மாற்றிவிட்டது.

ஆஸ்திரேலிய பெருநிறுவன உயரடுக்கு, தொழிற் கட்சியின் உள்வெடிப்பை வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கும் மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் மற்றும் விரோதப் போக்கு ஆகிய ஆபத்து பாராளுமன்றத்திற்குப் புறம்பான வடிவங்களை எடுப்பதை தடுக்கும் மிக முக்கியமான அமைப்பு என்பது ஆபத்தில் உள்ளது எனக்கருதுகின்றது. சிக்கன நடவடிக்கைகளுக்கான மாற்றத்தை கில்லார்ட் ஆரம்பித்து, ஆழ்ந்த செலவுக் குறைப்புக்கள், ஒற்றைப் பெற்றோர்களை இலக்கு கொள்ளும் செயல்கள், வேலையற்றோர் இன்னும் சமூகநலன்களை பெறுவோரை இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை நீண்டகால வரவு-செலவுத் திட்ட வெட்டில் கொண்டுவந்தார். ஆனால் உயரடுக்கு ஐரோப்பிய வகையிலான சமூக எதிர்ப்புரட்சியைத்தான் கோருகிறது. அது பொதுக் கல்வித் துறை, சுகாதாரப் பாதுகாப்பு, பொதுநல இன்னும் பல அடிப்படை சேவைகளிலும் சமூக உள்கட்டுமானத்திலும் நிரந்தர, பெரும்வெட்டுக்கள் தேவை எனக்கோருகிறது.

சிறியளவேனும் மக்கள் ஆதரவைக் கொண்டுள்ள தொழிற் கட்சி அரசியல்வாதியாக ரூட்தான் உள்ளார். இதற்குக் காரணம் ஜனநாயக விரோத ஆட்சி சதியால் அவர் பாதிக்கப்பட்டதுதான். இதன் விளைவாக அவர், டஜன் கணக்கான தொழிற்கட்சி அரசியல்வாதிகளின் தொழில்வாழ்க்கையை பாதுகாக்க கூடியதும் மற்றும் தொழிற் கட்சி சரிவதை தடுக்கும் மற்றும் தொழிலாளர்களின் சமூக நிலைக்கு எதிராக அவர்களால் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரே நபர் என பெருநிறுவன, நிதிய உயரடுக்குகளால் கருதப்படுகிறார்.

பதவியில் மீண்டும் இருத்தப்பட்டபின் கொடுத்த முதல் உரையில், ரூட் குறிப்பாக முழு பாராளுமன்ற முறையின் மீதும் வெறுப்பு கொண்டிருக்கும் இளைஞர்களை மீண்டும் தம்மை நோக்கி இழுப்பதற்கான தேவையை வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமூக உறுதிப்பாடு இருப்பதாக மேலோட்டமாக தெரிவதற்கு கீழே பார்த்தால் உண்மையில் வர்க்க அழுத்தங்கள் விரைவில் வெடிக்கும் கட்டத்தை அடையும் என்பதை அவர் நன்கு அறிவார். 2011ல் எகிப்திலும் துனிசியாவிலும் நடந்தது போல், இந்த ஆண்டு துருக்கியிலும் பிரேசிலிலும் நடந்தது போல், வெகுஜன அமைதியின்மை தீடீரென எதிர்பாராத வடிவங்களில் வெடித்து எழும். எதிர்வரவிருக்கும் சமூக வெடிப்புக்களை பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் திசைதிருப்பும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக ரூட் பதவியில் இருத்தப்பட்டுள்ளார்.

வாஷிங்டனைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருகட்சி முறையைத் தக்கவைப்பது மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் அமெரிக்கா, அதுவும் தொழிற் கட்சி பிரதம மந்திரி ஜோன் கர்ட்டின் 1941ல் பிரித்தானிய பேரரசில் இருந்து வாஷிங்டனுக்கு மூலோபாய மாற்றம் ஏற்படுத்தியதில் இருந்து, கணிசமான வளங்களை தொழிற் கட்சி மீது முதலீடு செய்துள்ளது. அமெரிக்கத் தூதரகமும் CIA அதிகாரிகளும் பல தசாப்தங்களாக தொழிற் கட்சிக்குள்ளும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள்ளும் தமக்கு ஆதரவான பரந்த வலைப் பின்னலை உருவாக்கியுள்ளனர். ஒபாமா நிர்வாகத்தினுள் ரூட் பற்றிய கவலைகள் இருந்தாலும், தொழிற் கட்சியின் சரிவு அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டினை திக்குத்தெரியாத நிலைக்குத் தள்ளும் என்பதை அது சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துள்ளது.

உண்மையில், 2010ல் ஆட்சி கவிழ்ப்புக்கு வழியமைத்த தொழிற் கட்சிக்குள் இருக்கும் இதே அமெரிக்க “பாதுகாப்பான ஆதரவானவர்கள்தான்” இந்த வாரம் ரூட் மீண்டும் பதவியில் இருத்தப்படவும் காரணமாக உள்ளனர்.

ஆயினும்கூட தொழிற் கட்சிக்குள்ளும், அதேபோல் எதிர்த்தரப்பு லிபரல்-தேசியவாத கூட்டணியினுள்ளும் ஆழ்ந்த பிளவுகள் தொடர்கின்றன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறையின் கணிசமான பிரிவுகளின் ஆதரவை ரூட் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவை ஒபாமாவின் “முன்னுரிமை கொடுக்கும்” நிலைப்பாட்டை எதிர்த்து பெய்ஜிங்குடன் இன்னும் சமரச அணுகுமுறை தேவையென விரும்புகிறது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிஞ்சர் இப்பிரிவில் முக்கிய நபராவார். சமீபத்திய ஆண்டுகளில் ரூட்டுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளார். இருவரும் இன்று பெய்ஜிங்கில் அரசாங்க ஆதரவில் நடக்கும் வெளிநாட்டுக் கொள்கை அரங்கில் பேச உள்ளனர். ஒபாமாவின் பொறுப்பற்ற, ஆத்திரமூட்டும் நிலைப்பாடு சீனா மீது இருப்பதால் அச்சமடையும் ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின் ஆதரவை ரூட் கொண்டுள்ளார். அத்தகைய நிலை ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் பெய்ஜிங் உடனான முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை தடைக்கு உட்படுத்தும் என அவை அஞ்சுகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எதிர்கொண்டிருக்கும் அவசர பணி, இந்த நிலைமையில் தலையிட்டு போர், இராணுவ வாதத்திற்கும், சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுவது ஆகியவற்றிற்கும் எதிராக தங்கள் சுயாதீன வர்க்க நலன்களை பாதுகாத்து கொள்வதுதான். இதற்கு அவசியமாக உள்ளது, தொழிற் கட்சிக்கும் முழு பாராளுமன்ற அமைப்பு முறைக்கும் எதிரான தற்பொழுது கொதிக்கும் அந்நியப்படுதல் மற்றும் வெறுப்பை முதலாளித்துவத்தின் இலாபமுறைக்கு எதிராக அரசியல் நனவு கொண்ட இயக்கமாக உருவாக்கும் திறனுடைய புரட்சிகரக் கட்சியைக் கட்டமைப்பதுதான்.

அக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியாகும். தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொண்டு எங்கள் 2013 தேசிய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும்படி வலியுறுத்துகிறோம்.

Read more...

ஐயோ..... இப்படி நடந்து போச்சே...

கொஞ்சக்காலமா எங்கட எம்பி ஒராள காணவில்லை என்று  மக்கள் கவலையாய் இருக்கினம்.. அவருக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று மக்கள் ஏக்கத்தில்.. (அக்கறையில் என்று நினைத்துப்போடாதேங்கோ) என்ன இப்படி ஆச்சு தென்டு எம்பியின்ர தும்பிகளிட்ட விசாரிச்சுப் பார்த்ததிலை மனிசன் யோசிச்சு யோசிச்சு மனநிலை பாதிக்கிற அளவிற்கு வந்திட்டுதாம் என்று அவயள் வெதும்யினம்...

யார்ரா இந்த எம்பி என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்தானே.. சப்ரா சனங்களின்ர திட்டுக்கள் என்றா என்ன சும்மா திட்டுக்களோ.. அதுகள் வியர்வை கொட்டி வாயை கட்டி வயிற்றைக் கட்டி எல்லோ உவன் பாவிட்ட கொடுத்ததுகள்.. அந்த திட்டுக்களால பிடித்த சனியன் உப்பதான் ஐயாவை ஆட்ட தொடங்கியிருக்குதாம்.

உந்த கறுமங்களிடம் சுருட்டின பணத்தை அப்பிடியே கனடாவிற்கு அனுப்பிப்போட்டு மிச்ச சொச்சத்தில் உந்த பேப்பரை நடத்தி மனுசன் தெம்பாய் 25 வருசத்தை கடத்திட்டுது இவ்வளவு காலமும் பேசாம விட்டுட்டு எங்கட அரசாங்கம் இவர் கொள்ளையடித்த காசுக்கொம்பனி பற்றி விசாரிக்க போகுதென்றவுடன் மனுசன் அப்பலோவில படுத்தது.. படுத்தது தான் இன்னும் எழும்பேலையாம்.

சரி அதை எப்பயாவது அரசாங்தோடு பின்வாசலாலட கதைச்சு சமாளிக்கலாம் என்று நினைச்சிருந்த மனுசனுக்கு அந்த உதயனில் இருக்கிற சடைநன் பாhத்த வேலையால் புதிய தலையிடி ஒன்றும் வந்திட்டுது.. எங்கட தாடிக்காரரைப் பற்றி ஏதோ எழுதிப்போட்டாங்கள் போல கிடக்கு அந்த மனுசனும் கொஞ்ச நஞ்சம் இல்லாமல் 10000 மில்லியன் கேட்டு ஒற்றைக்காலில் நிக்குது.. ஒவ்வொரு வழக்கு வரும் போது நீதிமன்றத்தில் நீதிபதி என்ன சொல்லுறார் என்டு நேரடியாக் கேட்டுக்கொண்டு இருக்கிறாராம் எம்பி கட்டிலில படுத்த படி..

என்ன செய்வதென்று தெரியாமல் நிர்வாகத்தை நீங்களே பாருங்கோ என்று வேறு யாருக்கோ கொடுக்கப்போறார் என்று ஒரு கதையும் ஓடித்திரியுது.
சரி இது ஒரு பக்கம் இருக்க இவையின்ர இந்த விளம்பரத் தந்திரம் தெரியுமோ உங்களுக்கு.. (தயவு செய்து வேறு பேப்பர் நிறுவனங்கள் இவையின்ர தந்திரத்தை கொப்பி பண்ணவேண்டாம் இது அவையின் இரகசியத்திட்டம்) என்னட இவையின்ர பேப்பரில மட்டும் செத்தவிட்டு விளம்பரம் போட்டாப்பிறகு 31 நாள் விளம்பரங்களும் போடுறாங்கள் என்று நீங்கள் யோசிக்கலாம்.. அந்தக்கதையை கேட்டயளென்டால் நீங்கள் மூக்கில கைவைப்பியள்.

சரி செத்த வீடு தானே என்று விட்டால் அந்த வீட்டுக்கு ஒரு அனுதாபக் அட்டை வரும் ' உங்கள் துன்பத்தில் நானும் பங்கெடுக்கிறன்' ஈ.சரவணபவன் என்று சரி அனுதாபம் அந்த மனுசனும் போட்டுருக்கே என்று நினைச்சுக்கொண்டிருக்க பின்னால கோல் ஒன்று வருமாம் என்ன 31 நெருங்குது போல பேப்ரில் ஒரு காப்பக்கம் விளம்பரம் கோடுங்கோவன் ஐயாவும் அனுதாபம் அனுப்பினவர் போல அவர் தான் கேட்கச் சொன்னவர் என்பினமாமாம். சுனங்களும் நன்றியுள்ள சனங்களெல்லே முதலாளி எங்களுக்கு அனுதாபமும் அனுப்பினவர்தானே என நினைத்து சரி போட்டா போச்சு என்பினமாம்.. இது தான் முப்பத்தி ஒன்றுக்கதை...

மரண அறிவித்தல் கதை பெரியகதை ஒவ்வொரு ஊரிலையும் குறிப்பாக ஆசுபத்திரிகளிலையும் உளவாளிகள் வைத்திருக்கினமாம்.. யாராவது மண்டையை போட்டால் உடனடியாக உதையண்ட மணி டாங் டாங் என்று அடிக்குமாம்.. உடனே நம்பரை வாங்கி என்ன செய்கிறது இப்படி நடந்து போட்டுது.. சரி சரி இனி செய்ய வேண்டியதை பார்ப்பம் என்று சொல்லி விளம்பரக்கதையை தொடுப்பினமாம்.. எப்படி வண்டி சும்மா வண்டியா சப்ரா வண்டியெல்லே..


Read more...

யாழ் சுகாதாரப்பணிப்பாளருக்கு டெங்குகாய்ச்சல்!!!

யாழ் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளரான வைத்தியர் கேதீஸ்வரனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த மூன்று தினங்களுக்குமுன் சாதரண காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கேதீஸ்வரன் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

முன்றுதினங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று வீடு திரும்பியுள்ளார்

யாழ் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புவாரம் அனுஸ்ரிக்கப்பட்டுவரும் சமயத்தில் சுகாதாரப்பணிப்பாளருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Read more...

இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட பிரபாகரனை காப்பாற்றவே 13ஆவது திருத்தம் உருவானது! விளக்குகிறார் விஜிதமுனி

ஜெனரல் கொப்பேகடுவ தலைமையில் இடம் பெற்ற வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது, எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, பிரபாகரனை பாதுகாக்குமாறு அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடும் அழுத்தம் கொடுத்தார் எனவும், இந்த அழுத்தம் காரணமாகவே பிரபாகரனை பாதுகாப்பதற்காக 13ஆவது திருத்தம் ராஜீவினால் ஏற்படுத்தப்பட்டது என ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரோஹன விஜித முனி இதனைத் தெரிவித்தார்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சிங்கள மக்களின் வாக்குகளி னாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிக்கின்றார் எனவும், எனவே அதற்கு எதிராக செயற்பட முடியாதென்றும், 13 மூலம் இந்தியா எமது நாட்டை ஆக்கிரமித்தது இது தான் உண்மை. எனவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று மாகாணசபை முறைமையை எதிர்த்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், இன்று தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். உறுப்பினர்களாக அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இன்று சிங்கள முதலமைச்சர் இல்லை முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்து முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்கின்றார் எனவும், இதன் மூலம் சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பதோடு அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை யையும் கிடைத்தது எனவும், எனவே இந்தியாவின் பேச்சைக் கேட்க அவசியமும் இல்லை எனவும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேவையும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜே. ஆர் ஜயவர்த்தனவுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட பின்னர் ராஜீவுக்காக இடம்பெற்ற கடற்படை அணிவகுப்பு மரியாதையின்போது அவர் மீது தாக்குதல் நடத்தியவரே ரோஹண விஜிதமுனி என்பது குறிப்பிடத் தக்கது.

Read more...

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸின் மனைவி நீதிமன்றில் ஆஜர்!

மொஹமட் ஷியாம் படுகொலை வழக்கில் கைதுசெய்யப் பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்..

மொஹமட் ஷியாம் படுகொலை வழக்கில் தனது கணவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் சாட்சியாளர்களுக்கு வாஸின் மனைவி அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, அவரை நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் அன்று உத்தர விட்டிருந்த நிலையிலேயே வாஸ் குணவர்தனவின் மனைவி இன்று நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியுடன் ஆஜராகியுள்ளார்.

Read more...

பிரபல பாதாள உலகக் குழுத்தலைவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில், மாளிகாவத்தை பிரபல பாதாள உலகக் குழு தலைவரான மாமாஷிமி என்பவர் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

இந்த சம்பவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரை கைதுசெய்து பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, வாகனத்தை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை சந்தேகநபர் நெரித்துள்ளதாகவும், இதன்போது பொலிஸ் வாகனத்தின் பின்புறமாக அமர்ந்திருந்த விசேட அதிரடிப் படை வீரர் சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாமஸ்மீ என அழைக்கப்படும் இந்த சந்தேகநபர், மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென்றும், பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்களை மயிரிழையில் மீட்பு! சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது!

கொலை செய்வதற்காக கடத்திச் செல்லப்பட்ட முல்லைத் தீவைச் சேர்ந்த இரு இளைஞர்களை மீட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்துள்ளதாக மீஹாதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, அவுஸ்தி ரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட வர்களிடமிருந்து கிடைக்கவேண்டிய 16 இலட்சம் ரூபா கிடைக்கும் வரையில் அந்த இளைஞர்கள் இருவரும் களுத்துறை பயாகல பிரதேசத்தில், குறித்த குழுவினர் மறைத்து வைத்துள்ளனர்.

அந்த பணம் கிடைக்காமையினால் அவர்கள் இருவரையும் கொலைசெய்வதற்கு மத்துகம பெலவத்தைக்கு கொண்டுசென்றுக்கொண்டிருந்த போது, வீதி ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் குழு அவர்களை விசாரித்தமையினால் இருவரும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவ்விருவரையும் கொலை செய்வதற்காக பாதாள உலக கோஷ்டி யினருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித் திருந்தமை, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

பிரான்ஸிலிருந்து வந்த நபரை மார்புக் கச்சையால் கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ள மனைவி!

பாணந்துறையில், பாடசாலை ஒன்றுக்கு அருகில் கார் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில், பண்டாரகம அலுபோமுல்லையை வசிப்பிட மாக கொண்ட ஒரு குழந்தையின் தாயான, 39 வயதுடைய மேரஞ்ஜ ஹேவகே சஞ்ஜீவனி தேவிகா என்ற பெண் தனது சட்டத்தரணியின் மூலமாக பாணந்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினார்.

இவ்வாறு சரணடைந்த பெண்மணி, கொலைசெய்யப்பட்ட நபரின் கள்ள மனைவியென்றும், தன்னுடைய மார்பு கச்சையால் கழுத்தை நெரித்தே கொலை செய்துள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்தே, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் ரூவீர வெலிவன்ன உத்தரவிட்டார்.

40 வயதான பிரதீப் தேவநாராயன கங்கொடவில நுகேகொடையை வசிப்பிடமாக கொண்டவர். எனினும் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழ்ந்து வந்த இவர் இலங்கைக்கு திரும்பியிருந்த நிலையில் கடந்த 01 ஆம் திகதி பாணந்துறையில் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

ரம்புக்வெலவின் மகனுக்கு மலசல கூட கதவிற்கும், விமானத்தின் கதவிற்கும் வித்தியாசம் தெரியாதா? பிரசன்ன ரணதுங்க

ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெலவின் மகனான ரமித் ரம்புக்கெல 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமை தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தனது மகன் செய்தது ஒரு சின்ன விடயமாகும் என்று ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இதேவேளை ரமித் ரம்புக்வெல என்ற வீரர் நாட்டை பற்றியோசித்து பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும் என்று தெரிவித்த மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரம்புக்வெலவின் மகனுக்கு மலசல கூட கதவிற்கும், விமானத்தின் கதவிற்கும் வித்தியாசம் தெரியாதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் நானும், விமானத்தில் பயணம் செய்திருக்கின்றேன். மலசல கூட கதவிற்கும், விமானத்தின் கதவிற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறியதில்லை. தெரியாத விடயம் இருந்தால் விமான பணியாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வதில் எவ்விதமான தவறும் கிடையாது. கதவுகள் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனதை நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் இருக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பத்திரிக்கைகளின் ஊடாகவே நான் அறிந்து கொண்டேன். அவர், மதுபோதையில் இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அது உண்மையாயின் அமைச்சரின் மகனாக அல்ல நாட்டை பிரதிநித்துவப்படுத்துகின்ற விளையாட்டு வீரர் என்றவகையில் பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும். இளைஞர் காலத்தில் நாமும் பல விடயங்களை செய்திருக்கின்றோம். அமைச்சரின் பிள்ளைகள் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று எங்களது தந்தையைவிடவும் ஆசிரியையான எங்களுடைய அம்மாவே அடிக்கொருத்தடவை அறிவுரை கூறிக்கொண்டு இருப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஸ்னோடனை கைதுசெய்ய பொலிவிய ஜனாதிபதியின் விமானத்தை தரையிறக்கிய ஆஸ்திரியா அதிகாரிகள்!

அமெரிக்காவின் உளவு இரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடன் விமானத்தில் உள்ளார் என்ற சந்தே கத்தில் பொலிவிய ஜனாதிபதி ஈவொ மொராலஸ் பய ணித்த விமானம் பாதி வழியில் ஆஸ்திரியாவில் தரையி றக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்னோடன் அந்த விமானத்தில் இருக்கவில்லை என்பதை ஆஸ்திரிய மற்றும் பொலிவிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொலிவிய ஜனாதிபதி ஈவோரிமாரல்ஸ் ரஷ்யாவிலிருந்து பொலிவியா புறப்பட்டபோது தமது வான்பரப்பை பயன்படுத்த பிரான்ஸ், போர்த்துக்கல் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்தன.

இந்த விமானத்தில் அமெரிக்க முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி ஸ்னோடன் தப்பிச் செல்கிறார் என்ற சந்தேகத்திலேயே ஐரோப்பிய நாடுகள் விமானம் பறப்பதற்கான. வான்மார்க்க அனுமதியை மறுத்திருந்தன. இதனால் விமானத்தை அஸ்திரியாவில் தரையிறக்க வேண்டி ஏற்பட்டதாக பொலிவியா குற்றம்சாட்டியது.

ஸ்னோடன் புகலிடம் கோரி விண்ணப்பித்த 21 நாடுகளில் பொலிவியாவும் உள்ளடக்குகிறது. இந்நிலையில் ஸ்னோடன் விமானத்தில் இருப்பதாக மிகப் பெரிய பொய்யொன்றை கூறி தனது வான்பரப்பை பயன்படுத்த பிரான்ஸ், போர்த்துக்கல் தடை விதித்தன என பொலிவிய வெளியுறவு அமைச்சர் டேவிட் சொக்கு {ஹவன்கா குற்றம் சாட்டினார்.

'யார் இந்த பொய்யை இட்டுக்கட்டினார்கள் என்று எமக்கு தெரியாது. ஆனால் இந்த விமானத்தில் இருந்த ஜனாதிபதி இவெ மொராலற்கு இழைக்கப்படட அநீதிக்கு சர்வதேச சமூகத்திடம் எமது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விமானத்தில் ஜனாதிபதியுடன் பயணித்த பொலிவிய பாதுகாப்பு அமைச்சர் ரூபன் சாவெட்ரா அமெரிக்கா தனது ஐரோப்பிய 'அரசுகளை பயன்படுத்தி செய்த விரோத செயல்' என குற்றம்சாட்டினார்.

அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஆய்வாளரான ஸ்னோடன், மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து வலயத்தில் தொடர்ந்து தங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையிலேயே பொலிவிய ஜனாதிபதி மொஸ்கோவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் அதேபோன்று எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க வெனிசுவெலா ஜனாதிபதி நிகொலஸ் மடுரொவும் மொஸ்கோ சென்றுள்ளார்.

இதில் ஸ்னோடனை பாதுகாக்க தயாராக இருப்பதாக மடுரோ வலியுறுத்தியுள்ளார். ஏன் அவர் மீது குற்றம்சாட்டுகின்றார்கள்? அவர் என்ன செய்தார்? அவர் யாரையாவது கொல்ல ஏவுகணை வீசினாரா? அவர் குண்டு போட்டு யாரையாவது கொன்றாரா? இல்லை. அவர் யுத்தத்தை தடுக்கிறார்' என்று வென்சுலா ஜனாதிபதி ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரியாவில் தரையிறங்கிய பொலிவிய ஜனாதிபதியின் விமானம் சோதனை செய்யப்பட்ட பின் ஸ்பெயின் வான் பரப்பினூடாக பயணிக்க நேற்று அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதி நடத்தப்பட்ட விதம் குறித்து ஆத்திரமடைந்துள்ள பொலிவிய அரசு தென் அமெரிக்க தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே ஸ்னோடன் புகலிடம் வழங்க அமெரிக்க ரகசியங்களை வெளியிடக்கூடாது என ரஷ்யா நிபந்தனை விதித்ததை யடுத்து அவர் ரஷ்யாவின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பத்தை மீளப் பெற்றுக்கொண்டதாக அறிவித் துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com