Tuesday, July 2, 2013

பிள்ளைகளைத் தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மாணவ மாணவியருக்கு எதிராக கடும்கோபத்துடன் தண்டிக்கக்கூடிய அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக கல்வியமைச்சு ஒழுக்காற்று மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியத் தொழிற் சங்கம் பதில் சொல்ல வேண்டியோரிடம் கேட்டுநிற்கின்றது.

கடந்த சில வருடங்களாக கடும் கோபத்துடன் மாணவர்கள் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகள் பல பதிவாகியுள்ளன என்றும், அவ்வாறு மாணவர்களைத் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சட்ட ரீதியாக சரியான நடவடிக்கை எடுக்காமையினாலேயே தொடர்ந்தும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன என ஆசிரியச் சங்கம் குறிப்பிடுகின்றது.

பெரும்பாலும் மாணவர்கள் மிக மோசமான முறையில் தண்டிக்கப்படுவதற்குக் காரணம் அரசியலாளர்களினதும், தனவந்தர்களினதும் பலம் தன்பக்கம் இருக்கின்றமையினாலேயே என்றும், இதனால் மாணவர்கள் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் ஆசிரியச் சங்கம் மேலும் குறிப்பிடுகின்றது.

ஆசிரியர்கள் தங்கள் சீற்றத்தை மாணவர்களுக்குக் காட்டி அவர்களைப் பல்வேறு உபாதைகளுக்கு உட்படுத்தி அவர்கள் காயப்பட்டால் அல்லது நீதியற்றமுறையில் மாணவர்களுடன் நடந்துகொண்டால் அந்த மாணவ மாணவியர் சட்ட ரீதியாக செல்லும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது சங்கம் பூரண ஒத்துழைப்பு நல்கும் என்றும் தெளிவுறுத்தியுள்ளனர்.

மாணவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதை தங்கள் சங்கம் பெரிதும் எதிர்த்து நிற்பதாகவும் சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

சுவிட்சர்லாந்தில் 24 வது வீர மக்கள் தினம் 06.07.2013.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வீரமக்கள் தினம் வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்கள் யாவரையும் நினைவு கூருமுகமாக நிகழ்த்தப்படும் இந்நிகழ்வினை கழகத்தின் சுவிஸ் கிளையினரும் கடந்த பல ஆண்டு காலமாக முன்னெடுத்து வருகின்றனர்.


இவ்வாண்டிற்கான வீர மக்கள் தின நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழைமை 06.07.2013 அன்று நிகழ்த்தப்படும் என அறிவித்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினர் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் யாவரையும் நிகழ்வில் பங்கெடுக்குமாறு தோழமையுடன் அழைமையுடன் அழைப்பதாக அறிவித்துள்ளனர்.



Read more...

திருக்கோவிலில் ஆயுதங்கள் மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருக்கோவில் 1ம் குறிச்சியில் உள் ஊர்த் தயாரிப்பான ஆயுதங்களும் மற்றும் வெடிபொருட்களுடன் ஆயுதங்களை தயாரிக்க பயன் படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக் தெரிவித்துள்ளார் :

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் இன்று பகல் வேளையில் இராமசாமி வீதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் தயாரிப்பதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மேற்படி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதற்கான ஆணை கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர விடமிருந்து தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்:


Read more...

கே.பி யை கொண்டுவந்து விசாரிக்க ஆணையிடுவீர்! முன்னாள் சிபிஐ இன்ஸ்பெக்ரர் இந்திய உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடையதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள புலிப்பயங்கரவாதிகளுக்கான ஆயுத விநியோகிஸ்தர் கே.பி இலங்கையில் சுதந்திரமாக உள்ளதாகவும் அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கோரி முன்னாள் சிபிஐ அதிகாரி ஒருவர் இந்தியாவின் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய செய்தி ஒன்று இவ்வாறு தெரிவிக்கின்றது :

சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஜெ.மோகன்ராஜ். இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளராக இருக்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை குழுவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.

ராஜீவ்காந்தி கொலை சம்பவம் குறித்து ஜெயின் கமிஷன் விசாரித்தது. அதன் இறுதி அறிக்கையில் சந்திரசாமி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் கே.பி.என்ற குமரன் பத்மநாபன் உள்பட பலருக்கு ராஜீவ்காந்தி கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கிய பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை கண்காணிக்கவும், கைது செய்யுவும் சி.பி.ஐ.யில் பன்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு குழுமம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குமரன் பத்மநாபனை 2009-ம் ஆண்டு இலங்கை அரசு கைது செய்தது. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இலங்கை அரசு வாபஸ் பெற்றது. தற்போது இலங்கையில் குமரன் பத்மநாபன் சுதந்திரமாக உள்ளார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு குமரன் பத்மநாபன் அனுப்பி வைத்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவரை கைது செய்ய சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து மத்திய அரசுக்கு 3.5.2013 அன்று மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குமரன் பத்மநாபனை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து வருகிற ஆகஸ்டு 5-ந் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

Read more...

47 வருடங்களின் பின்னர் இராணுவ வீரரின் கை எலும்புகளை கொடுத்த அமெரிக்க மருத்துவர்!

வியட்நாமில் போரில் அமெரிக்க இராணுவத்தின் திடீர் தாக்குதலால் தனது கையை பறிகொடுத்த வீரர் ஒருவருக்கு சுமார் 47 வருடங்கள் கழித்து, அவரது கை எலும்புகளை அமெரிக்க மருத்துவர் ஒருவர் திருப்பிகொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1966 ஆம் ஆண்டு அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே போர் நடந்த போது அமெரிக்க இராணுவத்தின் திடீர் தாக்குதலால் வியட்நாம் வீரர் ஒருவரின் வலது கையில் குண்டு பாய்ந்தது. பின்னர் அப்பகுதிக்கு வந்த அமெரிக்க ராணுவத்தினர், அந்த வீரரை மீட்டு அமெரிக்க ராணுவ மருத்துவர் சாம் ஆக்சல்ராட்டிடம் கொண்டு விட்டனர். அவர் வியட்நாம் வீரரின் கையை துண்டித்து சிகிச்சை அளித்தார்.

சிகிச்சைக்கு பின் எஞ்சிய கை எலும்புகளை சாம் டெக்சாஸுக்கு கொண்டு சென்றார். இந்நிலையில், வியட்நாமைச் சேர்ந்த வீரர் ஹங் அமெரிக்க படையினரால் சுடப்பட்டு கை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அவர் உயிருடன் இருப்பதாகவும் கடந்த ஆண்டு பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.

இதனை படித்த மருத்துவர் சாம் சுமார் 47 வருடங்களாக தான் பாதுகாத்து வைத்திருக்கும் ஹங்கின் கை எலும்பை கொடுக்க விரும்பினார். அதன்படி மருத்துவர் சாம் ஆக்சல்ராட், குவாங் ஹங்கின் கை எலும்பை எடுத்துக்கொண்டு வியட்நாம் தலைநகர் ஹனாய் வந்து சேர்ந்தார்.

பிறகு இன்று ஹங்கின் ஊருக்கு சென்ற மருத்துவர், 45 வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வைத்திருந்த அந்த கை எலும்பை ஹங்கிடம் ஒப்படைத்தார். இது குறித்து தெரிவித்த ஹங், சுமார் 47 வருடங்களுக்கு பின்னர் எனது உடலில் இருந்து ஒரு பாகம் எனக்கு திரும்ப கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது, போரின் போது இளமையாக இருந்த நாங்கள் இப்போது எங்களின் பேரக்குழந்தைகளை நலம் விசாரித்து கொள்வது பழைய ஞாபகங்களை நினைவூட்டுகிறது எனத் தெரிவித்தார்.

Read more...

யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை!!!

நேற்றையதினம் கைது செய்யப்பட்ட யாழ மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டு ள்ளார்

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றையதினம் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் இன்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
இவரது வழக்கை விசாரித்த யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் இவரை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஆவணி 27ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் பணித்துள்ளார்.

விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கூறி அத்துமீறி உள்நுழைந்து தமது விடுதியின் தங்கியிருந்த ஒரு ஜோடியினை பிடித்தார் என இவர்மீது விடுதி தரப்பினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்

Read more...

தொலைபேசி ஒன்று பிரிதொரு தரப்பால் ஒட்டுக்கேட்கப்படுகின்றதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

கைடயக்க தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான உபகரணங்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு ள்ளன

கைடயக்க தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதற்கான உபகரணங்கள், கணனி பாகங்கள் என்ற போர்வையில், இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, மற்றும் சில இலங்கை தூதுவர்களின் தொலைபேசிகள் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளினால் ஒட்டுக்கேட்கப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த உபகரணங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ரொவின் பக் என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் நடவடிக்கைகள் வெளிநாடுகளில் செயற்படுத்தப்படுகிறது எனினும் ஒரு நாட்டின் புலனாய்வுச் சேவையின் வெளிநாட்டு விசாரணை சட்டத்தின் கீழ் மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்படு குறிப்பிடத்தக்கது.

கையடக்க தொலைபேசி பயன்படுத்தப்படாத நிலையில், அதன் பட்டரி சூடேறுதல், தொலைபேசி அடிக்கடி வெளிச்சத்தை வெளியிடுதல், பீப் என்ற சத்தம் ஏற்படுத்தல், என்பவற்றின் மூலம் தொலைபேசி ஒன்று பிரிதொரு தரப்பினரால் செவிமடுக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என இலங்கை புலனாய்வுப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

தமிழரசுக்கட்சியின் முடிவு சரியானதல்ல-சுரேஸ்!!!!

வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவைசேனாதிராஜாவை தமிழரசுக்கட்சி தெரிவுசெய்தது சரியான முடிவு அல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி,ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

என்னைப்பொருத்த வரையில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடனேயேதெரிவு செய்யப்பட வேண்டும், மாறாக தனியாக ஒரு பகுதியினர் ஒரு முடிவை எடுப்பதென்பது ஒரு சரியான முடிவாக இருக்கமுடியாது.

குறிப்பாக மாவை சேகாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் கிழையினர் தெரிவு செய்திருப்பதாக செய்திகள் நேற்று வந்துள்ளது ஆனால் இன்று இதுதொடர்பாக கட்சியின் தலைவர் சம்பந்தன் இன்று பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் தமக்கு இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வரவிலைலை என்றும் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டபின்னரே இதுதொடர்பாக ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை ஆரோக்கியமான ஒரு சூழல் அல்ல! ஓரு கட்சி ஒட்டு மொத்தமாக தெரிவுசெய்யவேண்டிய விடயத்தை ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள கிளைகளும் தெரிவுசெய்வதென்பது சரியானதாக இருக்கமுடியாது, இவ்வாறு அவர்கள் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் கூட்டமைப்பை சார்ந்தவர்களுடனோ கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களுடனோ கலந்தாலோசித்து எடுப்பதுதான் நன்றாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

பொட்டு அம்மான் ஒழித்துவைத்திருந்த 1 தொன் பாரமுடைய இரு குண்டுகள் அவிஸ்ஸாவலையில் கண்டுபிடிப்பு!

கொழும்பு அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் நாசத்தை ஏற்படுத்துவதற்காக எல்.ரீ.ரீ.ஈ இயங்கிய காலகட்டத்தில் கொண்டு வந்து புதைக்கப்பட்டுள்ள இதுவரை கண்டுபிடிக்கப்படாத எடையுடைய – ஒரு தொன்நிறையுடைய குண்டுகள் இரண்டு அவிஸ்ஸாவலைப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரினால் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத விமர்சனப் பிரிவினரால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வுத் துறையின் தலைவர் பொட்டு அம்மானின் கட்டளையின் பேரில், இந்த அதி சக்தி வாய்ந்த குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாக வன்னியில் வசிக்கும் பாலசுப்ரமணியம் ராஜேந்திர குமார் மற்றும் யோகராஜா நிரோஷன் என்போர் குறிப்பிட்டுள்ளதுடன் செய்திவெளியிட்டுள்ளதுடன், தற்போது கடங்காவற் சிறையில் இருக்கின்ற இவ்விருவரையும் பயங்கரவாத விமர்சனப் பிரிவினர் வசம் மூன்று நாட்களுக்கு ஒப்படைக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளனர்.

(கேஎப்)

Read more...

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு! 80பேர் கைது!

சட்டவிரோத சூதாட்ட நிலையமொன்றில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சுமார் 80 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 7 இல் அமைந்துள்ள சூதாட்ட நிலையமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தேடுதல் ஆணையுடன் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 80 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதேவேளை, செல்லுபடியாகக்கூடிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக சூதாட்ட நிலையத்தை நடத்தியதாகக் கூறப்படும் மூவரும் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.

Read more...

மதுபோதையில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வீரர்! 229 பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பினர்.

மதுபோதையில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரொருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமை யினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் கதவையே மதுபோதையில் இருந்த இலங்கை வீரரொருவர் திறக்க முயன்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

போயிங் 777 என்ற விமானத்தில் பயணம் செய்த பயணியான இவர் சென். லூக்காவிலிருந்து லண்டன் கெட்வீக் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு முயற்சித்துள்ளார். அந்த விமானத்தில் 229 பயணிகள் பயணம் செய்துக்கொண்டிருந்ததுடன், இந்த கிரிக்கெட் அணியினர் திங்கட்கிழமை காலையில் விமானத்தில் ஏறியுள்ளனர். மலசல கூடத்தின் கதவென நினைத்தே தான் அந்த கதவை திறப்பதற்கு முயன்றதாக குறிப்பிட்ட வீரர் விமான பணியாளர்களிடம் பின்னர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானம், சென்.லூக்காவிலிருந்து கெட்விக் விமான நிலையத்தை சென்றடை வதற்கு 8 மணித்தியாலம் எடுக்கும் என்பதுடன், விமானம் தரையிறங்குவதற்கு ஒருமணித்தியாலத்திற்கு முன்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

கதிர்காம பூசகரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது.

செல்லக் கதிர்காமம் ஆலயமொன்றின் பூசகர் ஒருவரது கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர், பதுளை புறநகர்ப் பகுதியிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளார் என பதுளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் நேற்று பதுளைப் பொலிஸாரினால், கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கதிர்காமம் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த போதிலும், ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலுமொருவர் தேடப்பட்டு வருகின்றார். தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் பிரதான சந்தேகநபரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

செல்லக் கதிர்காமம் ஆலயமொன்றில் பூசகர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, பசளை பையொன்றில் தினிக்கப்பட்ட நிலையில், சடலம் கதிர்காமம் பொலிஸா ரினால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றம் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தம்.

கிழக்கு மாகாணத்திற்குள் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி வலயங்களுக்குள்ளும், வலயங்களுக்கு அப்பாலும், மாகாணத்திற்கு வெளியிலும் சகல இடமாற்றங்களும் டிசம்பர் 31ம் திகதி வரை எக்காரணத்திற்காகவும் மேற்கொள்ளக்கூடாது எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான புதிய இடமாற்ற சபைகள் அமைக்கப்பட்டு வலய மாகாண மட்டத்திலான இடமாற்றக் கொள்கை விடுக்கப்பட்ட பின்னர் ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடம் முழுவதும் சில கல்வி வலயங்களில் ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக ஆசி ரியர் சங்கங்கள் கல்வி அமைச்சின் கவனத் திற்கு கொண்டு வந்துள்ளதை யடுத்தே இந்நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Read more...

டக்ளஸை கொலை செய்ய முயற்சித்தவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள தயார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்ய சதி தீட்டியமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரான செல்வகுமார் சத்யலீலா என்ற சந்தியா என்பவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள தயாராக இருப்பதாக சட்டத் தரணி லக்ஷ்மன் பெரேரா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் சார்பில் இதனை மேல் நீதிமன்ற நீதிபதி ஐரங்கனீ பெரேரா முன்னிலையில் தெரிவித்த சட்டத்தரணி பெரேரா சட்டமா அதிபருடன் பேசுவதற்கு நேரத்தை பெற்றுத் தருமாறும் கேட்டார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் 09 ஆண்டுகளாக கைதாகி உள்ளார். வழக்கு விசாரணையும் அரைவாசியே முடிந்துள்ள நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை மீண்டும் பரிசீலிக்குமாறு சட்டத் தரணி பெரேரா கோரிக்கை விடுத்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் சட்டமா அதிபருக்கு இதுபற்றி காரணங்களைத் தெரிவிக்க கால அவகாசம் பெற்றுக்கொடுப்பது பொருத்த மென அரச சட்டத்தரணி சேத்திய குணசேகர தெரிவித்தார். வழக்கை ஆகஸ்ட் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அத்தினத்தன்று சட்டமா அதிபரின் தீர்மானத்தை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

2004 மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஜுலை 24 ஆம் திகதி வரை கொள்ளுப்பிட்டியில் தற்போது மரணித்துள்ள தியாகராஜா ஜயரானி என்பருடன் அமைச்சரைக் கொலைசெய்ய சதி தீட்டியமை, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஏக்கநாயக்க, சார்ஜன்ட் ஹெரல்ட் ஆட்டிகல, பந்து ஜயசிங்க ஆகியோருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை போன்றவை குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

Read more...

தமிழ் மக்களுக்கு த.தே.கூ மிகப் பெரிய துரோகம் இழைக்கின்றது! கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை.....!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவை பகிஷ்கரிக்க எடுத்த தீர்மானம் அவர்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகமாகுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் அதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தெரிவுக்குழுவுக்கு சமுகமளிக்காமை மூலம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார்கள் எனவும், நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழு பாராளுமன்ற விதிமுறைகளுக்குட்பட்ட தொன்றே தவிர அரசாங்கத்தின் செயற்பாடல்ல என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் உறுப்பினர்கள் புரிந்து கொள்ள தவறியிருப்பதாகவும், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை மறுக்கும் இவர்கள் எதற்காக பாராளுமன்றத்திற்கு மட்டும் சமுகமளிக்க வேண்டுமெனவும், அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார். இருப்பினும், அரசாங்கம் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இது குறித்து பேச்சு நடத்தி அவர்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்காகத் தொடர்ந்தும் தூண்டுதல்களை விடுத்து கொண்டேயிருப்போமெனத் தெரிவித்த அமைச்சர், இறுதித் தறுவாயிலாயினும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவுக்குழுவுக்கு சமுகமளிப்பதே சிறப்பானதாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக் காவிடினும் அதன் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக் கப்படுமென்பதில் ஜயமில்லை. இருந் தாலும், கூட்டமைப்பினர் தமது கருத்துக்களை முன்வைக்க கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை வீணாக தவறவிடுகின்றனர் என்றே கூறவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அனைத்துச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதி முறைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டினை பாராளுமன்ற அமர்வுகளின் போது நாட்டு மக்களுக்காக அறிவிக்க முடியுமாகவிருந்தால், தெரிவுக் குழுவில் கலந்துகொண்டு தமது நிலைப்பாட்டினை அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவிக்க முடியுமே எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும் பாராளுமன்றத்தின் கணக்கு விவரம் குழுவுக்கு சமுகமளிக்கும் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக்காமை தங்களுக்குள்ள பொறுப்புக்களிலிருந்து விலகி நடப்பதாகவும் தெரிவுக் குழுவில் அங்கம் வகித்ததன் பின்னர் கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டினை எவ்வகையிலாவது வெளிப்படுத்த முடியுமெனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நான் ஒரு ஜனநாயகவாதியெனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் பிரிவினை வாதம் தோன்றாமல் இருப்பதற்கு மாகாண சபைகள் முறைமை அவசிய மென்பதையும் மாகாண சபைகள் முறைமை முற்றாக இல்லாதொழிப்பதனை நான் ஏற்க மறுக்கிறேன் எனவும் கூறிய அமைச்சர் அதிக மக்களை பிரதிநிதித் துவப்படுத்தும் முக்கிய கட்சிகள் மாகாணசபை முறைமைக்கு பாரிய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் இருந்து எவ்வித அழுத்தங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சம்பந்தப்பட்டவர்களுடன் உள்நாட்டில் பேச்சு நடத்துவதனை விடுத்து இந்தியாவின் மத்திய அரசாங்கத் திடம் பேச்சு நடத்தி திரும்பியுள்ளனர் இதன்போது உள்நாட்டு விவகாரங்களை ஏதேனுமொரு வழியில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றே இந்தியா கூட்டமைப்பினருக்கு பதிலளித்துள்ளதே தவிர இலங்கை அரசாங்கத்துக்கு எந்தவொரு அழுத்தத்தையும் முன்வைக்க வில்லையெனவும் தெரிவித்தார்.

Read more...

Monday, July 1, 2013

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் மருதமுனையில் முறைகேடு! (கடிதங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை முஸ்லிம் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு வீடு பெறும் தகுதியிருந்தும் அவர்களுக்கு இன்றுவரை வீடுகள் வழங்கப்படாமல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக வும், இலஞ்சம் பெற்று வீடுகளை அதிகாரிகள் துஷ் பிரயோகம் செய்திருப்பதாகவும், குறித்த 11 பேருக்கும் மீதியாக இருக்கின்ற வீடுகளைப் பெற்றுத்தருமாறும் மருதமுனை ஜம்இயத்துல் உலமா சபைக்கு ‘65 மீட்டர் பாதிக்கப்பட்டோர் அமைப்பு’ கோரிக்கை விடுத்துள்ளது.

2013.06.10 ஆந் திகதி எழுதப்பட்டுள்ள கடிதத்தில் வீடு வழங்கலில் இடம் பெற்றுள்ள முறைகேடுகள் பற்றி இந்த அமைப்பினரால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேவேளை இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிடும்போது,
‘ஜனாதிபதியை நம்பினோம்....முடிவு கிடைக்கும் என்று எதுவும் ஆனதில்லை, எங்கள் ஜம்இயத்துல் உலமாவை நம்பினோம்.... அல்லாஹ்வின் பேரால் வீடுகளை பெற்றுத் தாருங்கள் என்று கெஞ்சினோம்.... வாய்மூடி பேசாமடந்தைகளாக அவர்கள் உள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.


Read more...

இலங்கையின் நிலைமையைக் கண்ணாறக் காண வந்தே தீருவேன்! – நவநீதன் பிள்ளை

இலங்கையின் நிலைமையைக் தன் கண்களால் காண எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதன் பிள்ளை குறிப்பிட்டார்.

அந்தப் பயணத்தின்போது இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருடன் தான் கலந்தாலோசிக்க எண்ணியுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய வானொலி நிலையத்தின் பிபிஸி உலக சேவை நேற்று முன்தினம் (29) அவருடன் கண்ட செவ்வியின்போதே அவர் இவ்விடயம் பற்றித் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கவுள்ள இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்களால் காணமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிபிஸி உலக சேவைக்கு கருத்துரைத்த நவநீதன் பிள்ளை தொடர்ந்து குறிப்பிடும் போது, போரின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச ரீதியில் விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைச் சரியாக்க் கண்டுபிடித்து அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

Read more...

‘அண்ணா’ என்றதால், பொலிஸ் காவலரை நையப்புடைந்தார் பொலிஸ் பரீட்சகர் – மாத்தறையில் சம்பவம்

மாத்தறை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பிரிந்துபசார ஒன்றுகூடல் நிகழ்வின் இறுதியில், பொலிஸ் பரீட்சகர் ஒருவருக்கு பொலிஸ் காவலர் ஒருவர் ‘அண்ணா’ (ஐயே!) என்று குறிப்பிட்ட விடயம் பெரிதுபடுத்தப்பட்டதால் கித்துல் தடியொன்றை எடுத்து நையப்புடைக்கப்பட்டதால் பொலிஸ் காவலர் உட்பட இருவர் நேற்று (30) அதிகாலை காயத்திற்குள்ளாக்கப்பட்டு மாத்தறை பெரியாஸ்பத்தியில் அநுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதிப் பொலிஸ் பரீட்சகர் ஒருவர் ஓய்வுபெறுவதை முன்னிட்டு மாத்தறை பள்ளிமுல்லையில் உள்ள பொலிஸ் ‘கராஜி’ல் இந்த ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது. அந்நிகழ்வின் இறுதியில் அனைவரும் தத்தம் வீடுகளுக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.

காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரும் அவருடைய நண்பரொருவரும் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது, ‘ஹூ’ எனும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது அவர்கள் தங்களது துவிச்சக்கரவண்டியை நிறுத்தியதும், அருகில் நின்றிருந்த பொலிஸ் பரீட்சகர் உள்ளிட்டோர் ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என வினா தொடுத்துள்ளனர்.

அவ்வமயம் துவிச்சக்கர வண்டியில் இருந்திருக்கின்ற பொலிஸ் காவலர் ‘ மன்னிக்கவும் அண்ணா.... ஹூ சொன்னதனாலேயே நிறுத்தினோம்’ எனச் சொல்லியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

‘அண்ணா என்று யாருக்குச் சொல்வதென்று விவஸ்தை தெரியாதா?’ எனக் கேட்டுள்ள பொலிஸ் பரீட்சகர் கித்துல் தடி ஒன்றைக் கொண்டுவந்து அந்த அதிகாரியை நையப்புடைத்தாக காயமடைந்துள்ள பொலிஸ் காவலர் பொலிஸில் மனு கொடுத்துள்ளார்.

எது எவ்வாறாயினும், ‘ஹூ’ என்ற ஒலமிட்டுள்ளது அருகிலுள்ள தேவாலயத்தில் தன்னை மறந்து ஆருடமாகியுள்ள ஒரு பக்தர் என்ற உண்மை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தலையிட்ட மீனவரொருவரும் தாக்கப்பட்டுள்ளார்.

அவ்விருவரும் தற்போது மாத்தறை பெரியாஸ்பத்திரியில 3 ஆவது வார்ட்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விடயத் தெளிவில்லாமையே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

எது எவ்வாறாயினும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமவின் ஆலோசனையின் பேரில் மாத்தறை சிரேட்ட பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோனின் கண்காணிப்பின் கீழ் உப பொலிஸ் அதிகாரி ரவீந்திர அம்பேபிட்டிய மற்றும் மாத்தறை தலைமைப் பொலிஸ் பரீட்சகர் ஹேமால் பிரசாந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...

கருக்கலைப்பு வழக்கு தொடர்பில் விசேட வைத்தியர் 6 ஆம் திகதி நீதிமன்றிற்கு...!

கருக்கலைப்புச் செய்வதற்காக பெண் பொலிஸ் அதிகாரி யொருவருக்கு மருந்து வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள கொழும்பு த சொய்ஸா வைத்திய சாலையின் விசேட வைத்தியர் சிரில் ரந்தெனிய எதிர்வரும் 06 ஆம் திகதி மேல்நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஐரங்கனி பெரேரா அழைப்பாணை விடுத்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் உயிரைக் காப்பதற்காகச் செய்கின்ற கருக்கலைப்பன்றி , பிறிதொரு தேவைக்காக கருக்கலைப்பு செய்யப்பட்டதாக பேராசிரியர் ரந்தெனியவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவரது தாதியாகப் பணியாற்றிய காலோச்சனா மெணிக் குமாரி என்பவருக்கும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை ஒட்டிய திகதியொன்றில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு தெமட்டகொடையில் முறைகேடான கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றில் தேடுதலுக்கு அதிகாரம் பெற்றுக்கொண்டு தேடல் வேட்டையில் ஈடுபட்ட போதே இந்த உண்மை வெளிவந்தது என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(கேஎப்)

Read more...

யாழ்.பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் கைது கைதுசெய்யப்படுவார்கள்

யாழ்.நகரப் பகுதிக்கு வரும் பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசும் விதமாக யாழ்.மத்திய பேரூந்து நிலையச் சூழலில் சிறுநீர் கழித்து விட்டு செல்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி விக்கிரமராட்சி தெரிவித்தார்.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை இம்மாதம் முதல் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read more...

பாகிஸ்தானில் மழையில் நடனமாடிய 2 இளம்பெண்களும் தாயும் சுட்டுக்கொலை!

மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல ‘தந்தான தந்தான தந்தான தனனே..’ என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெலிதான தூரல் மழைக்கு இடையில் பாகிஸ்தானின் சிலாஸ் பகுதியை சேர்ந்த நூர் ஷேசா(16), நூர் பஸ்ரா(15) ஆகிய சகோதரிகள் சில சிறுவர் சிறுமிகளுடன் துள்ளி நடனமாடும் காட்சி சமீபத்தில் இணையதளங்களில் உலா வந்தன.

உலகெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கானோர் இந்த படப்பதிவை கண்டு மகிழ்ந்தனர். இந்நிலையில், இவர்களின் வீட்டுக்கு வந்த 5 பேர் காட்டு மிராண்டித் தனமாக அந்த பெண்கள் இருவரையும் அவர்களின் தாயார் நோஷரா என்பவரையும் ஈவிரக்கமற்ற அந்த பழமைவாத கும்பல் சுட்டுக்கொன்றது.

குடும்ப கவுரவத்தை குலைத்ததாக கருதிய தனது பங்காளிதான் கூலிப்படையை ஏவி தங்கைகளையும், தாயையும் சுட்டுக் கொன்றதாக பலியான பெண்களின் அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார் இதனால் தலைமறைவாக இருக்கும் குத்தோர் என்ற பழமைவாதியையும், இந்த படுகொலையை செய்த 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Read more...

மூன்று நபருடைய மரபணுக்களை கலந்து குழந்தை உருவாக்க அனுமதி!

மூன்று பேரின் டிஎன்ஏ மரபணுக்களைக் கொண்டு குழந்தைகளை உருவாக்கக்கூடிய நவீன ஐவிஃஎப் தொழிநுட்பத்துக்கு, உலகின் முதல்நாடாக பிரிட்டன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐவிஃஎப் என்பது பெண்ணின் கரு முட்டையையும் ஆணின்விந்தணுவையும் உடலுக்கு வெளியே கருக்கட்டச் செய்து பின்னர் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வளரச்செய்கின்ற தொழிநுட்பம். இந்த தொழிநுட்பத்தில் மூன்றுபேரின் மரபணுக்களைச் சேர்க்கும் நவீன முறைக்கே பிரிட்டன் அரசு சம்மதித்துள்ளதது. இந்த மூன்று-பேர் ஐவிஃஎப் தொழிநுட்பம் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு மாறும் நுண்ணிய இழைமணி சார்ந்த (Mitochondria) நோய்களை தவிர்க்கமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆங்கிலத்தில் Mitochondria எனப்படும் இழைமணி உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் நுண்ணுறுப்பாகும். அது தாயின் கரு முட்டையிலிருந்தே குழந்தையின் உடலுக்கு கடத்தப்படுகிறது. நலிவடைந்த இழைமணி 6,500-இல் ஒரு குழந்தையை பாதிக்கிறது. உடல் நலிவடையவும் தசைகள் சோர்வடையவும் கண்கள் குருடாகவும் இருதயம் பலவீனமடையவும் இவை காரணமாகின்றன. உயிரழப்புகளுக்கும் வழி வகுக்கின்றன.

இதனால் இன்னொருவரின் கருமுட்டையிலிருந்து இழைமணியைப் பெற்றுக்கொள்வதன்மூலம் இவ்வகை நோய்களை தவிர்க்கமுடியும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஒரு குழந்தை உருவாகக் காரணமாகின்ற இரண்டு பேரின் டிஎன்ஏ மரபணுக்களில் எந்தவிதமான மாற்றத்தையும் இந்த தொழிநுட்பம் செய்துவிடாது. ஆனால் மூன்றாவது நபரின் மிக நுண்ணிய இழைமணி மரபணுவும் குழந்தையுடன் கலப்பதை தவிர்க்க முடியாது போகும்.

இதே வேளை இந்த நடைமுறை மனித வாழ்வியல் விழுமியங்களுக்கு ஒத்துவராது என்று எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

Read more...

நம்மிடம் உள்ள ஒதுக்க முடியாத இரகசிய ஒற்றன்!

சமீபத்தில் தனியார் வங்கி ஒன்றிலிருந்து நண்பரின் கைத்தொலைபேசிக்கு அழைத்தார்கள். நண்பருடைய வேலை, மனைவியின் வேலை, பிள்ளைகளின் எண்ணிக்கை போன்ற பல விபரங்களையும் குறிப்பிட்டு, சேமிப்புக்குப் பல புதிய திட்டங்களை வைத்திருக்கிறோம், நேரில் பேசவரலாமா என்று கேட்டிருக்கிறார்கள். நண்பர் ஆச்சரியப்பட்டு, தொலைபேசி இலக்கம் எப்படிக் கிடைத்தது என்று கேட்க, மழுப்பினார்கள்.

கைத்தொலைபேசியூடாகவும், மின்னஞ்சலூடாகவும் நண்பர் தனது வங்கி நடவடிக்கைகளைக் கையாள்கிறவர் என்பதால், பிறகு யோசித்துப்பார்த்து ஆச்சரியத்தைக் கைவிட்டார். நவீன கருவிகளும் வசதிகளும் அதிகரித்த பிறகு, இரகசியம் என்று எதுவுமில்லை நம்மைப் பற்றியதகவல்கள் எல்லாமே பொதுவெளிக்கு வந்துவிட்டன. எல்லா இடங்களிலும் நம் ஒவ்வொருவரைப் பற்றிய சிறுசிறு தகவலும் பதியப்பட்டு வருகின்றன. ஜிபிஎஸ் மூலம் புவிப்பரப்பில் துல்லியமாக இடம் அறியும் தொழில்நுட்பமும் கைத்தொலைபேசிகளின் பரிணாம வளர்ச்சியும் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்மார்ட் ஃபோன் போன்ற அதிநவீனமான கருவிகள் பற்பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றை ஒருவர் பயன்படுத்தும்போதெல்லாம் அவரைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த எந்தக் கடைகளில் என்ன என்ன பொருட்களை எப்போதெல்லாம் வாங்குகிறார்கள் அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று, எப்போது எவ்வளவு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் அல்லது வங்கியில் செலுத்துகிறார்ளூ மின்னஞ்சல் மூலம் யார் யாருடன் எப்போதெல்லாம் தொடர்பு கொள்கிறார் எந்த இணையத் தளங்களைப் பார்வையிடுகிறார்கள் எந்தவிடத்துக்கு, எந்த நேரத்தில், உறங்கப்போய் எப்போது கண் விழிக்கிறார்; போன்ற எல்லா நடவடிக்கைகளையும் அவர் தன்னையும் அறியாமலே தொலைத் தொடர்பிடங்களில் உள்ள கருவிகளில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்.

கடந்த ஆண்டில் அமெரிக்கக் காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் செல்போன் நிறுவனங்களிடமிருந்து 13 லட்சம் தொலைபேசி உரையாடல்களைப் பற்றிய பதிவுகளைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். பல சமயங்களில் உளவுத்துறையினர் தன்னிச்சையாகச் சென்று செல்போன் நிறுவன ஆவணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.

தொலைபேசிகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திய காலம் நேற்றுவரைக்கும்தான். அதிநவீனக் கைத்தொலைபேசிகள் 20 சதவிகிதம்தான் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுவதாக ஓர் இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. மீதி நேரமெல்லாம் இணையத் தளத்தில் மேய்வது, விளையாட்டு, இசை, சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது எனச் செலவழிக்கப்படுகிறது.

அதிநவீன செல்போனை வைத்திருப்பவருக்கு கைக்கடிகாரம், கமெரா, கல்குலேட்டர், சிடி பிளேயர், பண்பலை ரேடியோ போன்ற சாதனங்களே தேவையில்லை. அவற்றின் பணிகளையெல்லாம் ஓர் அதிநவீனக் கைத்தொலைபேசியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் அட்டைகள், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது எல்லாமே கைவிரல் முனைகளில் சாத்தியமாகிவிட்டன.

ஐஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்று பற்பல பயன்பாடுகளுடன் அதிநவீனக் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றைக் கைப்பேசி என்று அழைப்பதுகூட இன்று பொருத்தமில்லை. அவற்றின் மூலம் செல்போன் நிறுவனங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து நம்முடைய ஒவ்வோர் அசைவையும் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.

செல்போன் இல்லாமல் வாழ்வது அசாத்தியமாகிவிட்டது. அது ஓர் இன்றியமையாத இன்னல், கூடவே இருக்கும் ஒற்றன்தான் என்றாலும் அது இல்லாமல் நாமிருப்பதை இனி கற்பனையும் செய்ய முடியாது.

Read more...

யாழ்.போதனா வைத்திய சாலை சத்திர சிகிச்சை உபகரணம் வெளியே வந்தது எப்படி?

யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு வெளியே சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பைக் (சத்திர சிகிச்சை உபகரணப் பொதி) கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுக்காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மாடிக்கட்டடத்திற்கு நெருக்கமாகக் கீழே அமைந்திருக்கும் சத்திர சிகிச்சைக் கூடத்தில் இருந்து பைக்கே இவ்வாறு வெளியே காணப்பட்டுள்ளது.

இதனை வைத்தியசாலை ஊழியர் ஒருவர் அவதானித்து அதனை எடுத்து மீளவும் அந்தச் சத்திரசிகிச்சைக் கூடத்தில் ஒப்படைத்துள்ளார். குறித்த பைக் எவ்வாறு சத்திரகூடத்திற்கு வெளியே சென்றது என்பது குறித்து தெரியவராத நிலையில் வைத்திய சாலை நிர்வாகம் இவ்விடயம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பைக் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் பின்னர் தொற்று நீக்கிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிய வருகின்றது.

Read more...

எச்.ஐ.வி யின் தாக்கத்தை குறைப்பதற்கான புதிய மருந்துவ முறை

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிகாட்டு முறைகளை உலக சுகாதாரக் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய கணக்கெடு ப்பிற்கிணங்க ஒரு கோடிப் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய இலட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க மருந்து உட்கொள்ளும் முறைகளை சற்று முன்ன தாகவே துவங்குவதால், நோயின் தீவிரம் சற்றே குறையும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த ஒரு மருந்து, பாதிக்கப் பட்டவர்கள் உபயோகிக்க வேண்டுமென உலக சுகாதாரக மையம் பரிந்துரைக்கிறது.

மலேஷியாவில் ஆரம்பிக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்த புதிய மருத்துவ முறைக்கான பிரச்சாரம் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 32 ஆண்டுகளாக பரவி வரும் எச்.ஐ.வி தொற்றினால், கடந்த 2011 ஆம் ஆண்டு உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பதிக்கபட்டுள்ளர்கள் என்பதும் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் 65 லட்சம் பேர் எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர். அல்லது பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை அகதிப் பெண்ணுக்கு இந்தியாவில் நடந்த கொடுமை! 9 மாதமாக வீட்டில் அடைத்து .......!

திருச்சியில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளம் பெண்ணை 9 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக க்யூ பிரிவு பொலிஸ் மீது தமிழக பொலிஸ்மா அதிபரிடம் புகார் அளிக்கப்பட்டுளளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 530 வீடுகளில் 1,470 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாம் என்பதால் இதன் கண்காணிப்பை க்யூ பிரிவு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த பணியில் க்யூ பொலிஸ் பிரிவு பிரபாகரன் ஈடுபட்டு வந்தார். இந்த முகாமில் விஜயகுமார் மற்றும் அவரது மகள் ராதிகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த விஜயகுமார் தமிழக டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது, என் மனைவி இறந்ததையடுத்து வயதுக்கு வந்த மகளை பார்த்துக் கொள்வதில் மிகவும் சிரமமாக இருந்ததால் இலங்கையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு என் மகள் ராதிகாவை அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.

இதுதொடர்பாக க்யூ பிரிவு பொலிஸாரின் அனுமதி பெற்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராதிகாவை சென்னை வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தேன். உறவினர்களுடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்ற ராதிகாவின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் அவளை இலங்கை விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டனர். அதுபற்றி என் மகள் போன் மூலம் எனக்கு தகவல் தெரிவித்தார். இதனால் செய்வது அறியாமல் தவித்த நான் உதவிக்காக க்யூ பிரிவு பிரபாகரனை அழைத்தேன். என்னுடன் சென்னைக்கு வந்து மகளை அழைத்துவர உதவி செய்யுமாறு அவரிடம் உதவி கோரினேன். அவரும் என்னுடன் சென்னைக்கு வந்தார்.

அங்கு விமான நிலையத்தில் இருந்து என் மகளை அழைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தோம். அங்கு வந்த பிறகு திடீரென பிரபாகரனின் நடவடிக்கை மாறத் தொடங்கின. பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் என்னை வேறு இருக்கையில் அமர சொல்லிவிட்டு என் மகளிடம் சில விவரங்கள் கேட்க வேண்டும் என கூறி அவளது அருகில் அமர்ந்துகொண்டார்.

பேருந்து திருச்சியை நெருங்கியபோது, நான் என் மகளை பார்க்க எழுந்து சென்றேன். அப்போது க்யூ பிரிவு பிரபாகரன் என் மகள் ராதிகாவின் மடியில் படுத்து இருந்தார். இதைப்பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் முகாமிற்கு வந்தவுடன் அங்குள்ள சிவஈஸ்வரி என்பவரின் வீட்டிற்கு ராதிகாவை அனுப்பி வைத்த பிரபாகரன், இனி அந்த பக்கமே நீ வரக்கூடாது என என்னை எச்சரித்தார்.

மீறி ஒருமுறை மகளை பார்க்க சென்ற என்னை க்யூ பிரிவு பிரபாகரன் கன்னத்தில் அறைந்தார். இப்படியாக 9 மாதங்களாக என் மகளை சிவஈஸ்வரி வீட்டில் வைத்து பிரபாகரன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். எனவே, என் மகள் ராதிகாவை மீட்டு தரவேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏட்டு பிரபாகரன் மீது கூறப்பட்டதால் க்யூ பிரிவில் இருந்து, அவர் ஏற்கனவே பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் தொடர்ந்து க்யூ பிரிவிலேயே பணிபுரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read more...

நிதி அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை.

நிதி அமைச்சின் செயலாளரும், திறைசேரியின் செயலாள ருமான கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவை மோசடி வழக்கென்று தொடர்பில் சாட்சியம் அளிப்பதகாகவே எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்று இன்று அழைப்பாணை அனுப்பிவைத்துள்ளது.

பல கோடி ரூபா "வற் வரி" மோசடி தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

வற் வரி மோசடி வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கே அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இறைவரி திணைக்களத் திற்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிவைத்துள்ளது.

Read more...

மயிலிட்டிப் பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள ஆலயங்களுக்கு செல்ல அனுமதி

மயிலிட்டிப் பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக் குள் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்களது ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி யுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி குறித்த பகுதியில் நடைபெறவுள்ள ஆலயத் திருவிழாவிற்கு செல்ல அனுமதி பெற்றுத் தருமாறு மயிலிட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பகுதிக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Read more...

சு.க வில் இணையவுள்ளார் த.தே.கூ யாழ் மாநகரசபை உறுப்பினர்!

தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துகொண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய வுள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமிடியஸ் தெரிவித்துள்ளார்

தனது ராஜினாமா கடிதத்தினை விரைவில் யாழ். மாநகர சபை முதல்வரிடம் தாம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இன்று(01) யாழ். ஊடக மையத்தில், இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் தனது ராஜினாமா தொடர்பில் அறிவித்தார்.

கடந்த மாநகர சபைத் தேர்தலில் நான் தமிழ் தேசியக் கூட்டமைபின் கீழ் போட்டியிட்டு, அதிக வாக்குகளில் வெற்றிபெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன், பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நானும் முரண்பட்டுக் கொண்டு வந்திருந்த நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாகவே நான் தனித்தும் சுதந்திரமாகவும் செயற்பட்டு வந்துள்ளேன்,

கடந்த இரண்டு வாரங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் சேர்வதற்கான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டு வருகின்றேன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் என்னை, அக்கட்சியினர் எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர்.

அதற்கான நேர்முகத் தேர்விற்கும் நான் சென்று வந்துள்ளேன். நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதால் மக்களுக்கான பணிகளிலிருந்து விலகுவது என்று இல்லை, தொடர்ந்தும் தமிழ் மக்களின் நலனுக்காக மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்காலத்தில் குரல் கொடுக்கவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர் கைது !

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித் துள்ளார்.

அண்மையில் யாழ். பிரதான வீதியிலுள்ள விடுதி யொன்றில், விபச்சாரம் இடம்பெறுவதாக கூறி யாழ். பிரதேச செயலாளர் சுகுணவதி மற்றும் நிஷாந்தன் ஆகியோர் சென்று ஜோடியொன்றை பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த விடுதி உரிமையாளர் தனது விடுதிக்குள், யாழ். பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஆகியோர் அத்துமீறி நுழைந்ததாக முறைப்பாடொன்றைப் யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். எனவே அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் மாநகரசபை உறுப்பினரைக் தாம் கைதுசெய்துள்ளதாகவும், விரைவில் இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதியில் ஜோடி ஒன்று பிரதேச செயலாளர் மற்றும் நிஷாந்தன் ஆகியோரினால் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நிஷாந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Read more...

வைகோ மற்றும் புகழேந்தியின் மனுக்கள் தள்ளுபடி! எல்.ரி.ரி.ஈக்கு தடை விதித்தது சரியானது! சென்னை மேல்நீதிமன்றம்

எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது சரியே என தீர்ப்பளித்துள்ள சென்னை மேல்நீதிமன்றம், இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை நேற்று தள்ளுபடி செய்தது.

இந்தியாவில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் கடந்த 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடை நீட்டிப்பு சரிதானா என்பது குறித்து ஆராய்வதற்காக டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

டில்லி, சென்னை, ஊட்டி உட்பட பல்வேறு இயக்கங்களில் அந்த தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இறுதியாக தடை நீட்டிக்கப்பட்டது சரியே என்று கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை இரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்னை மேல்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

இந்த வழக்கு ஓராண்டுக்கு முன்பே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியாதே என தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று, கூறி வைகோ மற்றும் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Read more...

கொலைக்குற்றவாளியான ஐவருக்கு மரணதண்டனை!

பிபில மெதகம டீ.எம்.மஹிந்த என்பவரை கடத்திச்சென்று, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு, மொனராகலை மேல் நீதிமன்றம், இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் பிபில மெதகம டீ.எம்.மஹிந்த என்பவரை கடத்திச்சென்று வெட்டிக் கொலைச்செய்ததாக, இவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டடப்பட்டிருந்த நிலையில் கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், மொனராகலை மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Read more...

முதலமைச்சர் வேட்பாளர் மாவையே!!!-சீ.வி.கே

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடலின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு இன்று திங்கட்கிழமை பதிவுத் தபால் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய கட்சிகள் குறிப்பாக ஈபிஆர்எல்எப்,ரெலோ, புளொட் ஆகியன ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, சாதகமான முடிவொன்றை எடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான தங்களது கருத்துக்களை ஏனைய கட்சியினரும் வெளிப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com