Thursday, June 13, 2013

பொதுபல சேனா இணையத்தளத்தை மூடிவிட்டது!

பொது பல சேனா இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இடைநிறுத்திவைத்துள்ளது.பொதுபல சேனாவின் இணையத்தளத்திற்குள் நுழையும் போது இணையப்பக்கம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக திரையில் காட்டுகின்றது.

பொதுபல சேனாவின் ஊடகப் பேச்சாளராகவிருந்த கலகொட அத்தே ஞானஸார தேரர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து டிலான் பெரேரா அந்தப் பதவியைப் பொறுப்பேற்றதிலிருந்து அவ்விணையத்தளத்தின் பதிவேற்றங்கள் மெல்ல மெல்லக் குறைந்து வந்தன. பொதுபல சேனாவில் செய்திகள் பிரசுரிப்பதானது அதனது அடிப்படை நோக்கத்திற்கு ஊறுவிழைப்பதால் பொதுபல சேனாவின் முகப்பையும் பதிவேற்றங்களையும் மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்காலிகமாக பொதுபல சேனாவின் இணையத்தளமானது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளிடத்துச் செய்திகள் கசிகின்றன.

(கேஎப்)

Read more...

கிறின் ஹிராஸ் ஹோட்டலில் 'மீள் இணக்கத்தில் உயர்கல்வியின் பங்கு'! யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பகிஷ்கரிப்பு! (படங்கள் இணைப்பு)

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் யாழ். பல்கலைக்கழககும் இணைந்து ஏற்பாடு செய்த 'மீள் இணக்கத்தில் உயர்கல்வியின் பங்கு' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் கிறின் ஹிராஸ் ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதம விருந்தினராக முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதி எமிரஸ் மேனாஸ் விரிவுரையாளர் சி.ஜி.வீரமந்திரி கலந்துகொண்டு உலகத்திற்கு தேவை சமாதானத்திற்கான கல்வி எனும் தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கினார்.

இக்கலந்துரையாடலில்இ டாக்டர் றொகான் குணரட்ண விரிவுரையாளர் ராஜரட்ணம் ஸ்கூல் சிங்கப்பூர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும், விரிவுரையாளருமான ரஞ்சித் சேனாரட்ண, சாந்திகா கிரிம்புரெஹம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், விரிவுரையாளர்கள், பெரதேனியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதனை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பகிஸ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தங்களுக்குஅனுப்பப்பட்ட அழைப்பிதழ்களில் பயங்கரவாதம் தொடர்பான சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர.

இதன்போது கடந்த யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் ஏற்பட்ட மீள் இணக்கம் மற்றும் கல்வி தொடர்பாக ஆராயப்பட்டது. நாளைய தினமும் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(பாறூக் சிகான்)





Read more...

வடக்கில் நிர்க்கதியான சிங்களவர்களுக்கு கைகொடுக்கிறது இலண்டன்! (படங்கள் இணைப்பு)

இலங்கையில் வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கோடு இலண்டனில் நட்புத்துவ ஒன்றுகூடலொன்று இடம்பெற்றது.

பிரித்தானியாவின் இலங்கை வட்டம், கிழக்கு இலண்டனின் சிங்கள நலனோம்புச் சங்கம் மற்றும் இதமான உள்ளங்களின் அமைப்பு எனும் மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து சேர்த்த பணம், தற்போது வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு வீடு மற்றும் ஏனைய தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

சிறுமி மராயா அல்மேதாவின் இரம்மியமான நடனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இலங்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தம்முயிரைப் பணயம்வைத்துப் போராடிய முப்படையினரையும், விசேட அதிரடிப்படையினரையும், கிராமக் காவல் படையினரை – அவர்களின் சொல்லால் சொல்லமுடியாத தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நாட்டுப்பற்றுள்ளவர்களுக்காக மட்டுமே ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அந்த ஒன்றுகூடலில் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டிருந்தோரை விளித்து உரையாற்றிய பெரிய பிரித்தானிய இலங்கை வட்டத்தைச் சேர்ந்த ஜனக்க அலகப்பெரும,

‘மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட பயங்கரவாத்த்தினால் எந்தவொரு இனத்திற்கும் ஒரு செப்புக் காசுக்குக்கூட பயன் இருக்கவில்லை என்பது தெட்டத்தெளிவான உண்மை எனவும், அதனால் முழு இலங்கையும் பாரிய இழப்பையே சந்தித்த்து எனவும், அதனால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது வடக்கு கிழக்கில் காலகாலமாக வாழ்ந்து வந்த சிங்களக் குடியேற்றவாசிகளே என்றும் அதனை ஒருபோதும்‘ என்றும் குறிப்பிட்டார்.

அங்கு அலகப்பெரும தொடர்ந்து உரையாற்றுகையில்:

தமிழ்ப் பயங்கரவாதிகள் ஆரம்பத்திலேயே வட மாகாணத்தில் வசித்துவந்த சிங்களவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும்கூட வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அப்பாவிச் சிங்கள மக்களுக்கு இதுவரை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்பது தெட்டத்தெளிவு.

அரசாங்கத்தினாலோ ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களாலோ எந்தவித உதவியும் கிடைக்காது பல ஆண்டுகளாக தெருத்தெருவாய் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவ்வேண்டியது அனைத்துச் சிங்களவர்களினதும் கடப்பாடாகும். நாட்டின் பெரும்பான்மை இனம் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் இவ்வாறானதொரு நிலைக்குள்ளாகியிருப்பது மிகவும் சோகமயமானது.

பன்னூறு கோடி ரூபாக்களைப் பயன்படுத்தி வசந்த பூமியாக வடக்கை மாற்றியமைத்திருக்கின்ற போதும், வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு இதுவரை அந்த வசந்த்த்தின் ஒளிக்கீற்றுக்களை தூரத்திலிருந்தேனும் பார்ப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. ஒருபோதும் வசந்தத்தைக் காணமுடியாமல் இருக்கின்ற அந்த அப்பாவிச் சிங்கள மக்கள் வீழ்ந்திருக்கின்ற படுகுழியிலிருந்து அவர்களைக் கரைசேர்க்க வேண்டியது எங்களது பொறுப்பாகவுள்ளது. இவ்வாறானதொரு காலத்தில் வட மாகாணத்தில் நிர்க்கதியாக இருக்கின்ற சிங்களவர்களுக்கு எங்களால் இயலுமான அளவு உதவுவதே எங்களது திடசங்கற்பமாகும். இதற்கொப்ப, நிர்க்கதியான சனத்தை பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்கும், நிலையாக வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று கூடியுள்ள நட்பு ஒன்றுகூடலின் முக்கிய நோக்கம் இதுதொடர்பில் எங்கள் இனத்தவர்களுக்கு தெளிவுறுத்துவதும், அவர்களது உதவி ஒத்தாசைகளைப் பெறுவதுமாகும்.’

‘வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்களவர்கள் சாமனியர்கள் அல்லர். அவர்கள் வடக்கிற்குத் தேவையான சேவைகளை, உதவிகளை வழங்கிவந்த சிறந்த மக்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்’ என்றும் அலகப்பெரும குறிப்பிட்டார்.

நிகழ்வில் வைத்தியர் ஞானிஸ் சுபசிங்கள, வைத்தியர் குசும் சுபசிங்கள, லக்ஷ்மி பெரேரா, தில்கானி ஜகொடகே ஆகியோர் தேசப்பற்றுப் பாடல் இசைத்து அங்கிருந்தோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கினர்.

இலண்டன் நகரில் வசித்துவரும் கொட்ப்ரி த சில்வா மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் ஒன்றுசேர்த்த பணத்தொகையும், நிர்க்கதியான மக்களுக்கு உதவுவதற்காக அங்கு கையளிக்கப்பட்டது.

இலண்டன் மாநகரில் பல ஆண்டுகளாக இலங்கை சார்ந்த பல்வேறு விடயங்களுக்கும் தானாக முன்வந்து உதவுகின்ற கருணா பஸ்நாயக்க மற்றும் வைத்தியர் எம்.பீ. ரணதுங்க ஆகியோரின் சேவை நலனைப் பாராட்டி அவர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் இலங்கைக்கே உரித்தான உணவு பரிமாறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக ஒலிபெருக்கிகள், வாகனங்கள், உணவு பானங்கள் ஆகியவற்றை வழங்கியவர்களுக்கும், பல்வேறு வித்திலும் உதவியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

(சிங்களத்தில்: திஸ்ஸ மடவல - தமிழில்: கலைமகன் பைரூஸ்)

Read more...

ஓட்டம் என்றால் ஓட்டம் நாயோட்டம் நரியோட்டம்!!!

வடக்கின்ர தேர்தல் வரப்போகுதென்று எல்லோரும் அங்க மாறி இங்க மாறி ஒடுப்பட்டு திரியிறதை எல்லோரும் அறிஞ்சிருப்பியள் , இருந்தாலும் சில உண்மைச் சம்பவங்களை நீங்கள் அறிந்திருக்க மாட்டியள் பாருங்கோ.

வடக்குத்தேர்தல்ல தாங்கள்தான் சீ எம் என்று சொல்லிக்கொண்டு எத்தினை பேர் திரியினம் என்று உங்களுக்கு கொஞ்சம் தன்னும் தெரிந்திருக்கும்தானே..

இஞ்சால கூட்டமைப்பு காரர் முந்தின நாட்டாமையை முதன்மைவேட்பாளரா கேட்டிருக்கினம் , அவர் தனக்கிருக்கின்ற நல்ல பேரை இந்த கூத்தமைப்பிட்ட போய் சேர்ந்து கெடுக்கிறதோ என்ற நிலைப்பாட்டில் கூழுக்கம் ஆசை மீசைக்கும் ஆசையுடன் மனுசன் குழப்பிப்போயிருப்பிறாராம்.

இதனால் கூத்தமைப்பு என்ன செய்கிறதென்று யோசிச்சுக்கொண்டிருக்க... யாழில் இருக்கின்ற சப்றா கள்ளனின் பத்திரிகையில் கேள்விக்குறியோட ஒரு செய்தியைப் போடு என்டு மாவிட்டபுரத்து ஐயா கேட்டிருக்கிறார் பத்திரிகை ஓனரிட்ட.. நீ போட்டுத்தந்தால் வீட்டுசின்னத்தின் தலைவர் பதவிக்கு உன்னை சிபார்சு செய்கிறன் என்று சொல்லியிருப்பார்போல!!.

அந்த கொள்ளைக்கார எம்பியும் அவரின்ர அன்புக்கு கட்டுப்பட்டு தன்ர ஊத்தபேப்பரில முன்பக்கத்தில அதைப்போட அதைப்பார்த்திட்டு எங்கட ஓட்டுல்லாம வந்த எம்பி பாய்ஞ்சடிச்சு பெரியவரிட்ட ஒரு உறுமு உறுமியிருக்கார்.. என்ன நடக்குதிங்க.. நீங்கள் என்னை சீம் ஆக்கிறன் என்று பிறமிஸ் பண்ணியிருக்கிறீயள் என்று வெழுத்து வாங்கியிருக்கிறார்....

ஹம்...இது இப்படியிருக்க ஓட்டில்லாம வந்த எம்பி போட்டி போட்டால் தாங்கள் முழுப்பேரும் வெளியேறிவிடுவோம் எண்டு சிலர் மிரட்டலும் விடுத்து வருகீனமாம்..

இந்த சமாச்சாரம் மக்களுக்கு தெரிஞ்சு மக்கள் குழம்பி போய் மக்கள் சொன்ன வசனம் என்னவெண்டால் ... இந்த மண்டையன் எம்பி முதலமைச்சர் வேட்பாளராய் நின்றால் அரசாங்கம் வடக்கு தேர்தலில் போட்டியிடவே.. தேவையில்லை

இதைவிட பகிடி பாருங்கோ எங்கள் வீணைகார ஐயா எங்க கூட்டம் போட்டாலும் தான் தான் முதலமைச்சர் என்று சொல்லி வாறதையும் நீங்கள் கேள்விப் அவதானிச்சுத்தானே இருப்பியள். அவர் எங்க வந்தாலும் 'நான் அன்று சொன்னதைத் தான் இன்றும் சொல்லுறன் இன்று சொல்லுறதைத் தான் நாளையும் சொல்லுவன்' எண்டு சொல்லுறார்.. இதைக் கேட்ட மக்கள் இவர் அன்டைக்கு என்ன சொன்னவர் என்று தெரியாமல் குழப்பிப் போயிருக்கினம். ஏதோ இந்த மனுசனுக்கு கட்சிக்குள்ள ஒரு பிரச்சனை இல்லை.. எந்த பிரச்சனையும் இல்லாத படியால் மனுசன் ஒரு தெம்பா இருக்குது...போனா மயிர் வந்தால் மலை என்று... பொறுத்திருந்து பார்ப்பம் மயிர் வருதா? மலைவருதா? என்று.

நம்பட ஐயா அன்று சொன்னதைத்தான் இன்றும் என்று சொல்றார், அப்படி என்றால் „மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியோ?' ஆனால் „ வீணை என்னடா? என்னடா வெற்றிலை என்னடா?' என்று பாட்டு வேறு அடித்து வைத்திருக்கிறார்.. ஒன்றுமே விளங்கல்லங்க...

ஹிம்.. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் ..சரி நீங்கள் எல்லோரும் வேட்டைக்காரன் படத்தின்ர பாட்ட கேட்டிருப்பியள் தானே இன்னும் கேக்காட்டி ஒருக்கா குறை நினைக்காமல் கேளுங்கோ. அதில பாருங்கோ ஒரு பாட்டு வருகுது 'புலி உறுமுது புலி உறுமுது' என்று ..

இங்க இன்னொருத்தர் அந்தப்பாட்டைப் போட்டுட்டு தன்ன வீடியோவில் ஒளிப்பதிவு செய்ய சொல்லியிருக்கிறராம் ஓரு கேபிள்சனல் கரரிட்ட...... ....

என்ன சினிமாவில் நடிக்க போறயளே என்று படம்பிடிச்ச பொடியன் கேட்டிருக்கின்றான். அதுக்கு அவர் போட்ட குண்டு அமெரிக்கா ஜப்பானிலை போட்ட அணுகுண்டைவிட மோசமானது பாருங்கோ..

வடக்கு தேர்தலில் உள்ளுராட்சி அமைச்சு பதவி எனக்கு வந்தால் உங்கட சனலை ஒரு பெரிய லெவலுக்கு கொண்டு வாறன்.. இப்ப இந்த பாட்டுக்கு ஏற்றமாதிரி என்ன படம் பிடி என்று கேட்டிருக்கிறார்.. வருங்கால உள்ளுராட்சி அமைச்சரும் தற்போதைய விம்பத்தின் பிரதிநிதியும்..

இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து குளம்பிப்போயுள்ள மக்கள்.. ஆமா நம்ம நாட்டில இப்ப என்னடா நடக்குது எண்டு தங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கினம்..

இன்னும் கனக்க கதைக்க கிடக்கு நானும் குழம்பி உங்களை குழப்பி போட்டன் .. நாளைக்கு நாளண்டைக்கு தெளிவாகிருவன் அப்ப சில விடயங்களை தெளிவாக கொண்டுவாரன்.. பேந்து சந்திப்பம் என்ன..

கந்த சாமி..

Read more...

இந்திய ராணுவத்தின் ரகசியக் கடிதம் எல்லையில் மாயம்! சீனா வரை போயிருக்குமோ!!

இந்திய சீன எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எழுதப்பட்ட ராணுவ ரகசியங்கள் மாயமாக ‌மறைந்தது குறித்து ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்‌சம்பவம், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இந்த ரகசிய கடிதம், அசாம் தலைநகர் திஸ்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 4-ம் ராணுவ படைப்பிரிவிலிருந்து ராங்கியா பகுதியில் செயல்படும் 21-வது மலைப்பிரிவு ராணுவ அதிகாரிக்கு எழுதப்பட்டிருந்தது. எல்லைப் பகுதியில் படைப்பிரிவு நடமாட்டம் பற்றிய திட்டமிடல், மற்றும் படையினரை எங்கே நிறுத்த வேண்டும் போன்ற செவ்சிட்டிவ்வான விபரங்கள் இந்த கடிதத்தில் இருந்தன..

2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பப்பட்ட கடிதம் திடீரென மாயமாகி விட்டது.

இந்திய ராணுவ திட்டமிடல் தொடர்பான கடிதம் என்பதால் யாருடைய கைகளில் சிக்கியிருந்தாலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், ராணுவத்துக்கு உள்ளே ரகசிய விசாரணை தொடங்கியது.

இந்த விசாரணைகளில், ஒரு லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஐந்து ராணுவ அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவர்‌கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கடிதம் அனுப்பப்பட்ட சமயத்தில் 21-வது மலைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் என்.எஸ். கேய் தலைமையேற்றிருந்தார். இவர் பின்னர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். இப்போது பாகிஸ்தான் எல்லையை எட்டிய இந்திய பகுதியில் 10-வது ராணுவ படைப்பிரிவுக்கு தலைவராக உள்ளார்.

கடிதத்தில் தற்செயல் தி்ட்டங்கள், ‌வீரர்கள் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள், வழி முறைகள், ஆயுதங்களின் எண்ணக்கை, பயன்படுத்தப்படும் விவரம் போன்றவை குறிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கடிதம் போன இடத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடிதம் மாயமான விவகாரம் ராணுவ அமைச்சகத்திடம் அப்போது தெரிவிக்கப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

இந்த கடிதம் மாயமான சமயத்தில் ராணுவத் தளபதியாக, பின்னர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட ஜெனரல் வி.கே. சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிதம் அனுப்பப்பட்ட சமயத்தில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் ராணுவ வீரர்களை அதிக எண்ணிக்கையில் குவிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் தீவிரமாக இருந்தது. 90,000 படை வீரர்களை அங்கு குவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இவர்களது திட்டம் என்னவென்பதை, ‘மாயமாகி விட்ட’ கடிதத்தை அடித்துக்கொண்டு போன நபர் நிச்சயம் தெரிந்து கொண்டிருப்பார்! கடிதம் சீனா வரை போயிருக்குமோ!



Read more...

பாதுகாப்பை காரணங்காட்டி அவுஸ்ரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர் விரைவில் விடுதலை

அவுஸ்திரேலியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தனர் என்ற அடிப்படையில் 3 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் விடுவிப்பதற்கான அனுமதியை அவுஸ்திரெலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் போது 5 இலங்கையர்களும் விடுவிக்கப்படுவர் என்று அவுஸ்திரேலிய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கப்படுவதுடன் விடுவிக்கப்படவுள்ளர்களில் தடுப்பின் போது பிறந்த குழந்தை ஒன்றும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 5 பேரும் அவுஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அவுஸ்திரேலிய பிராந்திய காவல்துறையினர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்தே அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பத்து வயது சிறுமியை கர்பம்மாக்க பலமுறை முயன்றவர் கைது

மிஹிந்தலை குருந்தன்குளம் பகுதியில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பாடசாலை அதிபர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பாடசாலைக்கு அருகே வர்த்தக நிலையமொன்றை நடத்திச் சென்றமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சிறுமி வர்த்தக நிலையத்திற்கு சென்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் சிறுமியின் தந்தை ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் தாய் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read more...

சிரிய பிரஜையின் தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியது சவூதி!

சவூதி அரேபியா சிரிய பிரஜை ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைவஸ்துகளை சவூதி அரேபியாவிற்குள் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த சிரிய பிரஜையின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதக்கொள்கை, போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் மாத்திரம் 51பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.

Read more...

மயக்கமுற்று விழுந்திருந்த வயோதிப மாதுவை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

மயக்கமுற்று விழுந்திருந்த 68 வயதுடைய திருமணமாகாத வயோதிப மாதுவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரை கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த வயோதிப மாது தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்திருந்தபோது, மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் குறித்த வயோதிப மாதுவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், மயக்கம் தெளிந்து பார்த்த போது சந்தேக நபர் தலைமறைவாகி விட்டதாகவும், குறித்த வயோதிப மாது தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

வயோதிப மாதுவின் முறைப்பாட்டிற்கிணங்க சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரை தம்புள்ளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

தகுந்த காரணங்கள் இல்லாமல் அவுஸ்ரேலியாவிற்கு வருபவர்கள் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்! மைக்கல்கில்

தமது உயிரைப் பயணம் வைத்து அபாயகரமான கடற்பயணத்தினை மேற்கொண்டு அவுஸ்ரேலியா வருபவர்கள் தொடர்பாக தமது அரசாங்கம் மிகுந்த கவலை அடைந்துள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலியாவின் தெற்காசிய நாடுகளிற்கான ஆலோசகர் மைக்கல்கில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் தெற்காசிய நாடுகளிற்கான ஆலோசகர் மைக்கல்கில்மனிற்கும் யாழ் ஆயர் தோமஸ்சவுந்தரநாயகற்கும் இடையிலான சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களின் அவுஸ்ரேலியாவிற்கான சட்டவிரோத பயணம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமது உயிரைப் பயணம் வைத்து அபாயகரமான கடற்பயணத்தினை மேற்கொண்டு அவுஸ்ரேலியா வருபவர்கள் தொடர்பாக தமது அரசாங்கம் மிகுந்த கவலை அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு வருபவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர் என்றும், சிலவேளைகளில் உயிரிழப்பு சம்பவங்ளும் இடம்பெற்று வருகின்றமை மிகவும் கவலையளிக்கின்றது என்றும், அவ்வாறு வருபவர்கள் தகுந்த காரணங்கள் இல்லாத பட்சத்தில் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான கப்பல் பயணங்களை மேற்கொண்டு தமது நாட்டிற்குள் வருவதை தமது அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவுஸ்ரேலியாவின் தெற்காசிய நாடுகளிற்கான ஆலோசகர் மைக்கல்கில்மன் தெரிவித்துள்ளார்.

Read more...

13 இல்லாமல் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம்! அவுஸ்ரேலிய பிரதிநிதியிடம் யாழ் ஆயர்!

13 திருத்தச் சட்டம் இல்லாமல் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என, உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அவுஸ்ரேலியாவின் தெற்காசிய நாடுகளிற்கான ஆலோசகர் மைக்கல்கில்மனிக்கிடம் யாழ் ஆயர் தோமஸ்சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் தெற்காசிய நாடுகளிற்கான ஆலோசகர், மைக்கல்கில்மனிற்கும் யாழ் ஆயர் தோமஸ்சவுந்தரநாயகற்கும் இடையிலான சந்திப்பின் போதோ ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வடமாகாண சபைத்தேர்தல் நடைபெறவுள்ள இந்த சமயத்தில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு தேர்தலை நடத்துமாறு சில கட்சிகள் வலியுறுத்திவருவது மிகுந்த கவலைக்குரி விடயம் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை வைத்துக்கொண்டே தேர்தலை நடத்துவதுதான் சரியாக அமையும் எனவும், தமது ஆயர்கள் சங்கமும் இதையே வலியுறுத்துவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றார் அம்பிட்டியே சுமணரத்ன தேரர்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி கேவிலுக்கருகில் புத்தர் சிலை நிறுவுவதற்கு, மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மேற்கொண்ட முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து, குறித்த இடத்தில் புத்தர் சிலையை நிறுவுவது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என தெரிவித்த பொலிஸார், குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிணங்க குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துடன், அது தொடர்பான வேலைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமது நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தமை தொடர்பில், மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இதுமூலமான எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

53 வயதான பெண்ணொருவருக்கு மரணதண்டனை! - மேல்நீதிமன்றம்

பொலிஸார் என்னைக் கைது செய்து போதைப் பொருளை பலாத்காரமாக ஊட்டி வாக்குமூலத்தை பெற்றனர் - குற்றவாளி

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 53 வயதான பத்மா என்பவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை பேன்ற குற்றத்திற்காகவே நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு கிராண்ட்பாஸ் "இங்குரு கடே" சந்தியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் இவரை கைது செய்ததாக பொலிஸார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். எனினும் தான் போதைப் பொருள் வைத்திருக்கவில்லை, விற்பனை செய்யவில்லை எனவும், பொலிஸார் தன்னைக் கைது செய்து போதைப் பொருளை ஊட்டி பலாத்காரமாக வாக்குமூலத்தை பெற்று அதனடிப்படையில் வழக்கு தொடர்ந்தார்கள் எனவும், குற்றவாளி தனது குற்றத்தை மறுத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளியினால் மறுக்கப்பட்ட விடயங்கள் சரியான முறையில் உறுதிப்படுத்தப்படாததுடன், குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபிக் கப்பட்டதால் நீதவான் இவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

இன்றும் மன்னாரிலிருந்து பொத்துவில் வரை கடலில் பயணிக்க வேண்டாம்!

இன்று (13) மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலியூடாக பொத்துவில் வரை கடலின் ஆழமான ஆழமற்ற எங்கும் பயணம் மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு மீன்பிடி மற்றும் கடல்சார் பணிகள் மேற்கொள்வோரிடம் கேட்டுக்கொள்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலியூடாக பொத்துவில் வரையான கடல்பகுதியும், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையுள்ள கடற்பகுதியும் பேரலைகளுடன் காணப்படுகின்றன.

மன்னாரிலிருந்து காலியூடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதியும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையிலான கடற்பகுதியும் பேரலைகளுடன் காணப்படுகின்றன.

புத்தளத்திலிருந்து காலியூடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் இடைக்கிடையே மழை அல்லது கடும் காற்றுடன் மழை பெய்யவுள்ளதாகவும், நாடெங்கும் கடலை அண்மித்த பகுதிகளில் மழையை எதிர்பார்க்க முடியும் எனவும் இன்று காலை 05.30க்கு வானிலை பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காற்று தென் மேற்குத் திசையிலிருந்து வீசவுள்ளதுடன் அதனது வேகம் மணித்தியாலத்திற்கு கி.மீ. 30-40 அளவில் இருக்கும். மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலியூடாக பொத்துவில் கடற்பிரதேசங்களிலும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையுள்ள கடற்பிரதேசங்களிலும் இந்தக் காற்று பலமாக வீசக்கூடியதாகவுள்ளது. மேலும் இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 60-70கி.மீ. அளவில் உயர்வதற்குரிய சாத்தியக்கூறுகளும் உள்ளன எனத் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

Read more...

‘கிழக்கில் முதலிடுங்கள்’ - கொழும்பில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு!

மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் கிழக்குக்கு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கவென சர்வதேச முதலீட்டாளர் மாநாடொன்று கொழும்பில் நடாத்தப்படவிருக்கின்றது.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி சுற்றுலா துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட்டின் எண்ணக் கருவுக்கு ஏற்ப எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரு தினங்கள் இப்பேரவை நடாத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண விவசாய- கால்நடை வளர்ப்பு- கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி,மீன்பிடி மற்றும் சுற்றுலா அமைச்சு- பொருளாதார அமைச்சினதும்- முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினதும் ஒத்துழைப்புடன் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றது.

இது தொடர்பாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மட் குறிப்பிடுகையில்,

'யுத்தம் காரணமாக கடந்த 30 வருட காலமாகக் கிழக்கு மாகாண வளங்கள் பயன்படுத்தப்படவில்லை. இப்போது யுத்தம் இல்லை. ஆகவே இவ்வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்- இம் மாகாணத்தின் வேலை இல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு வைக்கவும் முடியும்.

அந்தடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் முதன் முறையாக ‘கிழக்கில் முதலிடுங்கள்’ என்ற தொனிப் பொருளில் சர்வதேச முதலீட்டாளர் பேரவையொன்றை நடாத்தவிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கும் இலங்கையரின் நேரடி முதலீடுகள் உள்ளிட்ட உள்நாட்டு - வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் நோக்கிலேயே இப்பேரவை ஏற்பாடு செய்யப்படுகின்றது. இப்பேரவையில் சுமார் 300 முதலீட்டாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கின்றோம். கிழக்கு வளங்கள் நிறைந்த மாகாணம் இங்கு எல்லாத்துறைகளிலும் முதலிட முடியும். அதற்காக உள்நாட்டு- வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் இதற்கு இப்பேரவை சிறந்த அடித்தளமாக அமையும் என்றார்.

Read more...

பொலிஸ்மா அதிபர் இளங்ககோன் தனது கடமையை சரியாக செய்யவில்லை! சாடுகிறார் சரத் பொன்சேகா

உயர் பொலிஸ் அதிகாரிகளினதும், அந்த அதிகாரிகளின் கீழ் கடமைபுரியும் பொலிஸாரினதும் நடத்தைக்கு பொலிஸ்மா அதிபர் இளங்ககோனே பொறுப்பேற்கவேண்டும் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பம்பலபிட்டி வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் குற்றத்தை இழைத்ததாக கூறப்படுவது, பொலிஸ் திணைக்களத்தில் பல பிரச்சினைகள் இருப்பதனை காட்டுகின்றது எனவும், எனவே, பொலிஸ் அதியுயர் அதிகாரி பொலிஸார் செய்யும் குற்றச் செயல்களை பொறுப்பேற்கவேண்டும் என்றும், பொலிஸ் உயரதிகாரி தனது கடமையை சரியாக செய்தால் இப்படியான குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்காது என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அரச சாட்சியாக மாற்றப்பட்டு இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவார் எனவும், பிரதி பொலிஸ்மா அதிபரி வாஸ் குணவர்தன ஓர் உயர்பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் நெருங்கிய நண்பன் என்தால்தான் இவரது கேள்விக்குரிய கடந்தகாலத்தையும் கவனத்தில் கொள்ளாமல் இவருக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Read more...

NGO களின் உண்மையான செயற்பாடுகள் அம்பலம்! இலங்கையில் பதிவு செய்யப்படாத NGO கள் நாட்டில் இயங்குவது தடை செய்யப்படும்!

இலங்கையில் செயற்படும் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், இலங்கையில் அவை உரிய முறையில் பதிவு செய்யாவிட்டால் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன். நாட்டில் இயங்குவதும் தடை செய்யப்படும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல அறிவித்துள்ளார்.

இலங்கையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்யாமல், நாட்டுக்குச் சேவையாற்றும் போர்வையில் அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொண்டு அரசைக் கவிழ்க்க இரகசியமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்களைப் பதிவு செய்யும் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் அபிவிருத்தி, நலன் என்ற போர்வையில் நாட்டுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் சதிகளை மேற்கொண்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது எனவும், இந்த நிறுவனங்கள் தொடர்பாக இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், 2006 ம் வருடத்திலும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாராம் அதில் அடங்கியுள்ள நிபந்தனைகளை சகல அரசசார்பற்ற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென லக்ஷ்மன் ஹலுகல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

Wednesday, June 12, 2013

தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாதாந்த சிங்கள செய்திச் சஞ்சிகையான 'தெசதிய"வின் 35 வருட பூர்த்தி விழாவும் புதிய இணையத்தள அங்குரார்ப்பணமும் இன்று (12) புதன் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தகவல் திணைக்களத்தின் இப்புதிய (www.dgi.gov.lk)இணையத்தளத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த இணையத்தளம் ஆரம்பத்திலேயே தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இணையத் தளத்தின் முகப்பில் திணைக்களம் என்பதற்கு பதிலாக உச்சரிக்க முடியாத வேறொரு திணகை்களம்) சொல் பொறிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள தமிழ் எனும் சொல்லைத் சொடுக்கினால் உள்ளே உள்ள செய்தியில் உள்ள படத்தில் தமிழுக்குப் பதிலாக 'நமிழ்' உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ் - சிங்களம் தேசிய மொழி என்ற தொனிப்பொருளில் நாடெங்கிலும் தமிழர்களுக்கு சிங்களமும், சிங்களவர்களுக்கு தமிழும் கற்பிக்கப்பட்டுவருகின்ற காலகட்டத்தில் இவ்வாறான தவறுகள் மேலெழாமல் உயரதிகாரிகள் மிகக் கவனமெடுத்தல் வேண்டும். சிங்களவர்கள் இவ்விணையத்தளத்தினுள் உள்நுழைந்தால் அங்குள்ள 'திணகை்களம்' எனும் சொல்லே சரியெனக் கருதி அவ்வாறு எழுதத் தொடங்குவர். மேலும், இவ்விணையத்தளத்திலுள்ள சுட்டிகளைச் சொடுக்கி உள்நுழையும்போது, ஆக்கங்கள் ஆங்காங்கே பெரும்பிழைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான செய்திகளில் எழுத்துப்பிழைகள் நிகழ்ந்துள்ளன. தமிழறிந்தவர்கள் விடயத்தைப் ஒருவாறு புரிந்துகொள்ள முடிந்தாலும், புதிதாகத் தமிழ் கற்போர் தமிழைப் பிழையாகக் கற்கவும், கற்பிக்கவும் இது துணையாக நிற்கும். எனவே, ஒருமொழியின் சுயாதீனத்தன்மை இல்லாதழிந்து போக இவ்வாறான விடயங்கள் காரணமாக அமைகின்றன.

தமிழ் தெரிந்த தட்டெழுத்தாளர்களை இவ்விணைய வடிவமைப்புக்காக உள்வாங்குவதுடன், இணையத்தில் பதிவேற்றமுன் சரவை பார்ப்பதும் இன்றியமையாதது. 'தகவல்' வழங்கும் தகவல் திணைக்களம் இவ்வாறான பிழைகள் நிகழாமல் பார்த்துக்கொள்வதே உசிதமானது.
எனவே, அரசாங்கத்தின் முக்கிய திணைக்களங்களில் ஒன்றான தகவல் திணைக்களம் இதுதொடர்பில் கவனமெடுக்கும் என்று 'இலங்கைநெற்' எதிர்பார்க்கின்றது.

(கேஎப்)

Read more...

அமெரிக்காவை ஆள்வது யார்? Barry Grey

அமெரிக்க மக்களை உளவுபார்க்கும் இரகசிய அராசங்கத் திட்டங்களை ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆதரிப்பதை தொடர்ந்து, தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பரிடம் இருந்து பாரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றித் தகவல் கசியவிடுவோர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்னும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கிளாப்பர் பென்டகனை தளமாகக்கொண்ட தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) திட்டங்களை “பொறுப்பற்ற முறையில் அம்பலப்படுத்தியதற்காக” பிரித்தானியாவின் கார்டியனையும், வாஷிங்டன் போஸ்ட்டையும் கண்டித்தார். இத்திட்டங்கள் அன்றாட வாடிக்கையாக கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கருடைய தொலைப்பேசிச் சான்றுகளையும் மற்றும் மில்லியன் கணக்கான இணைய தள தகவல்கள் மின்னஞ்சல்கள், உரையாடல்கள், ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் கடன் அட்டை பற்றுச்சீட்டுக்களையும் சேகரிக்கின்றன.

நீதித்துறை மற்றும் FBI அதிகாரிகள் அரசாங்கம் கசிவுகள் குறித்து குற்ற விசாரணைகளை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறியதாக ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது. ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அப்பட்டமாக அரசியலமைப்புக்கு மாறானவகையில் அமெரிக்க மக்களுடைய அந்தரங்க உரிமைகளை மீறியது குற்றம் அல்ல, மாறாக இவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தியதுதான் அத்துமீறலாகும்.

கடந்த வெள்ளியன்று NSA திட்டத்தை ஆதரித்து வந்த ஒபாமாவின் கருத்துக்கள், செய்தி ஊடகத் தகவல்களை அவர் “பரபரப்பானவை” எனக்கூறி, மக்களை அரசு கண்காணிப்பது என்பது உரிமைகள் பற்றிய சட்டத்தை “மிதமான ஊடுருவல்” என்று கூறுவது ஜனநாயக உரிமைகள் பற்றிய எவ்விதமான கருத்தையும் முற்றிலும் கைவிடுவதைத்தான் குறிக்கிறது என்றார். இப்படி முன்னாள் அரசியலமைப்புச் சட்டத்தின் பேராசிரியர், அமெரிக்கா நிறுவப்பட்ட அரசியலமைப்பின் அடிப்படையுடன் எந்த தீவிர தொடர்பும் இல்லாத ஆளும் வர்க்கத்தின் பார்வையைத்தான் கூறுகிறார்.

அமெரிக்க குடிமக்களும் உள்ளடங்கலாக உலகில் உள்ள மக்கள் மீதும் நீதிக்கு புறம்பாக ஒருதலைப்பட்சமாக படுகொலை செய்ய ஆணையிடும் உரிமையை ஜனாதிபதியாக கொண்ட நாட்டிற்கு ஒபாமா தலைமை தாங்குகிறார். பொஸ்டன் போன்று முழு நகரங்களும், நடைமுறையில் இராணுவச் சட்டத்தின் கீழ் இருத்தப்படுகிறது. அரசாங்கம் செய்தியாளர்களின் தொலைப்பேசி சான்றுகளையும் மின்னஞ்சல்களையும் பற்றி எடுத்துக் கொள்கிறது. இந்நாட்டில் அமெரிக்கப் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் படையினரான பிராட்லி மானிங் போன்றோர் சித்தரவதை செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். இங்கு ஜனாதிபதி பயங்கரவாதிகள் எனக் கூறப்படுவோரை காலவரையின்றி, விசாரணையின்றி இராணுவச் சிறைகளில் தள்ளுமாறு உத்தரவிடமுடியும்.

இந்நிகழ்வுகள் எழுப்பும் வினா இதுதான்: அமெரிக்காவை யார் ஆள்வது?

தான் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள அரசியலமைப்பை தானே மீறுவதை பாதுகாப்பதற்கு காங்கிரஸிடம் ஆலோசனை கேட்கப்பட்டது, அது ஒப்புதல் கொடுத்துள்ளது என்று ஒபாமா கூறுகிறார். அது உண்மைதான். நீதிமன்றங்கள் அளித்துள்ள ஒப்புதலைப் பற்றியும் அவர் துல்லியமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆயினும்கூட, அமெரிக்க மக்களிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை, பொய்கூறப்பட்டு, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது குறித்து அறியாநிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். “முதலாளித்துவ ஜனநாயகம்” என்னும் சொற்றொடர்கூட மக்களின் இறைமைக்கு வெறும் கந்தலான பொறிகளாகி ஒரு அரசியல் அமைப்புமுறைக்கு ஒவ்வாததாகி, அரசியல் வாழ்வின் யதார்த்தங்களால் முற்றிலும் முரணானதாகிவிட்டது.

இராணுவம், உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் அமெரிக்க மக்கள் மீது திட்டமிட்ட, சட்டவிரோத கண்காணிப்பு நடத்துவதற்கு இரகசியமாகக் கொடுக்கும் ஒத்துழைப்பு அமெரிக்க நாட்டின் உண்மை அதிகாரம் செலுத்துவோரை வெளிப்படுத்துகிறது. AT&T, Verizon, Sprint போன்ற மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இணைய தள நிறுவனங்களான கூகிள், மைக்ரோஸாப்ட், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவை அரசாங்க அமைப்புக்களான இராணுவத்திற்கும் FBI, CIA இற்கும் அவை சட்டபூர்வமாக பெற்றிராத உரிமையான நூற்றுக்கணக்கான மக்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள இடமளித்துள்ளன.

காங்கிரஸும் இரண்டு பிரதான கட்சிகளும், உண்மையில் நாட்டை நடத்தும் இராணுவம், உளவுத்துறை அமைப்பு மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு இரப்பர் முத்திரை போல் பணியாற்றுகின்றன. “நான்காம் பிரிவு” என அழைக்கப்படும் செய்தி ஊடகம் வெட்கமின்றி இந்த ஆளும் முக்கூட்டின் கைகளாக செயல்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரசின் கோழைத்தனமும் மோசடியும், ஜனாநாயகக் கட்சியினர் செய்தி ஊடகத்தின் தாழ்ந்து நிற்கும் நிலையும், NSA ஒற்றுக்கேட்டல் திட்டங்கள் அம்பலப்படுத்தியதை அவர்கள் எதிர்கொண்ட விதமும், இராணுவ, உளவுத்துறை பிரிவுகளுக்கு தங்கள் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலில் இன்னும் ஈடுபட ஊக்கம் கொடுக்கிறது. ஒற்றுத்திட்டங்களை மிகவும் “துணிச்சலாக” குறைகூறுபவர் எனக் கூறப்படும் ஜனநாயக செனட்டர் மார்க் உடால் ஞாயிறன்று CNN “நாட்டின் உடைய” நிலைமை பேட்டியை ஆரம்பிக்கையில், தன்னுடைய ஆதரவு “பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு” உண்டு என உறுதியளித்து ஆரம்பித்து இரகசியத் தகவல்களை கசிய விடுபவர்களை கண்டித்தார்.

ஒரு பெரிய செய்தித்தாளோ செய்தி ஊடகமோ ஒற்றுக்கேட்டலுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் எனக் கோராததுடன், NSA மூடப்பட வேண்டும் எனக் கோரவில்லை, சட்டவிரோத ஒற்றுக்கு பொறுப்புக் கொண்ட அதிகாரிகள் குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரவில்லை அல்லது நிக்சன் நடத்திய அனைத்தையும் கடந்து நிற்கும் அரசியலமைப்பு மீறலை செய்துள்ள ஒபாமாவிற்கு எதிராக பெரும் குற்றங்கள், தவறுகளுக்காக பதவிவிலகல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை. நியூ யோர்க் டைம்ஸ் சனிக்கிழமை அன்று முதல் பக்கக் கட்டுரையை “தகவல் சேகரிப்பு பயங்கரவாதத்துடன் போரிட மிகவும் முக்கியம்” என்ற தலைப்பில் வெளியிட்டது. இக்கட்டுரை பல முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் NSA கண்காணிப்பு திட்டங்களை வெட்கமின்றி ஆதரித்துள்ளதை காட்டுகிறது.

ஒபாமா நிர்வாகமே, முந்தைய எந்த அமெரிக்க நிர்வாகத்தையும் விட, நிதிய உயரடுக்குடன கூட்டு வைத்துக் கொண்டு இராணுவமும் CIA உம் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதை உருவகப்படுத்திக் கொண்டுள்ளது. 1961 இல் ஐசனோவர் “இராணுவ-தொழில்துறை இணைப்பு” என அழைத்த எப்பொழுதும் பெருகும் அதிகாரம், ஒபாமாவின் கீழ் நிறைவேற்று அதிகார பிரிவு தேசிய பாதுகாப்புக் கருவியுடன் இணைவதில் ஒரு உறுதியான நிறைவை கண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிப்போக்கிற்கு ஒபாமாவின் தனிப்பட்ட பின்னணி அவரைச் சிறந்த வாகனமாக செயற்படச் செய்துள்ளது. பட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளியேறியபின் அவர் ஓராண்டு Business International இல் பணிபுரிந்தார்; அதன் நிறுவனர் CIA முகவர்களுக்கு பல நாடுகளில் பாதுகாப்பு கொடுத்துள்ளதை ஒப்புக் கொண்டார்.

எவ்வாறாயினும், ஒபாமாவின் தனிப்பட்ட வாழ்க்கையை அமெரிக்காவில் சர்வாதிகார வகைகளாக வெளிப்படுவதற்கு காரணமாகவுள்ள இன்னும் அடிப்படையான சமூக நிகழ்வுப்போக்குகளிலிருந்து பிரித்து பார்க்கக்கூடாது. எவரும் இன்று “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது எப்பொழுதும் அமெரிக்க மக்கள் மீதாக இருந்து வருகின்றது, வந்தது, என்பதைத் தீவிரமாக மறுக்க முடியாததுடன், சர்வதேச அளவில் ஏகாதிபத்திய போருக்கும் அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகள் மீது இடையறா தாக்குதல்களுக்கும் ஒரு மறைப்பாகவும் உள்ளது.

நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தையை இலக்கு கொள்ளும் ஒற்றுக் கேட்டலின் பாரிய அளவானது இந்த வினாவை எழுப்புகிறது. இவர்கள் எதற்குப் பயப்படுகிறார்கள்?

தான் சமூக, அரசியல் அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற உணர்வில் ஆளும் வர்க்கம் பேயினால் வட்டமிடுதலுக்கு உட்பட்டது போல் உள்ளது. ஏனெனில் அது மக்கள் ஆதரவு இல்லாத கொள்கைகளை தொடர்கிறது. முதலாளித்துவ முறையின் நெருக்கடியால் உந்தப்பெற்ற நிலையில் பெரும்பாலான மக்களின் நிலைமை மீது தாக்குதலை அது அதிகரிக்கையில் பெருநிறுவன-நிதிய உயரடுக்கு நெருக்கடியின் விளைவுகளால் தானும் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது. அது கட்டியிருக்கும் சீட்டுக் கட்டு வீடு எந்த கணமும் உடையலாம் என்பதையும் மற்றும் இது புரட்சிகர சமூக எழுச்சிகளை தூண்டலாம் என்பதையும் நன்கு அறியும்.

ஆனால் ஆளும் வர்க்கம் இறுதியில் ஒரேயொரு விடையைத்தான் இச்சிக்கலுக்கு கொண்டுள்ளது. அதாவது வன்முறையை பயன்படுத்தி அடக்குதலாகும். எனவே அரசு அதிக பொலிஸ் அதிகாரங்களுடன் தவிர்க்க முடியாமல் கட்டமைக்கப்படுகின்றது. இவை பயங்கரவாதிகளுக்கு எதிராக அல்ல, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக.

அரசியல் அமைப்புமுறையின் எந்தப் பிரிவும் அல்லது எந்த உத்தியோகபூர்வ நிறுவனமும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராடப்போவதில்லை.

ஜனநாயகக் கட்சியும் இடது “தாராளவாத பிரிவு” எனப்படுவதும் ஜனநாயக உரிமைகள் குறித்து தங்களுக்கு தீவிர ஈடுபாடு இல்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்திவிட்டன. இவர்களுடன் நேஷன் ஏடு, சர்வதேச சோசலிச அமைப்பு போன்றவற்றால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இடது தாராள மற்றும் போலி இடது சக்திகளும் சேர்ந்துள்ளனர். இவை ஒபாமாவின் பிற்போக்குத்தன மற்றும் ஜனநாயக விரோதக் கொள்கைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது குறித்து பெரிதும் மௌனம் சாதிக்கின்றன. உண்மையில் வலதுசாரிக் குழுக்களான இந்த “இடது” எனக்கூறிக் கொள்பவற்றின் ஆதரவு ஒபாமாவிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இல்லை என்றால், அரசாங்கத்தினால் ஜனநாயக உரிமைகள் மீது இத்தகைய நீண்டகால விளைவுடைய தாக்குதல்களை நடத்துவது முடியாத காரியமாகும்.

ஆனால் இந்த உரிமைகள் தொழிலாள வர்க்கத்துள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவை புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் சாதிக்கப்பட்டவை. ஆளும் வர்க்கம் இன்று இவற்றை அழிக்க உறுதி கொண்டுள்ளது என்னும் உண்மை அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று திவால் தன்மையின் வெளிப்பாடாகும். இந்த உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் வந்துள்ளது. இதற்கு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் சுயாதீன அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கான போராட்டமானது முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாதது. இப்போராட்டத்தின் திறவுகோல் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையாக கட்டியமைப்பதுதான்.

Read more...

த.தே.கூட்டமைப்பு தனது பிடிவாதத்திலிருந்து விலகுவதன் ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் - இந்திய தூதுக்குழு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் கட்சிகள் இலங்கை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என இந்திய பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த பாரதீய ஜனதா கட்சியின் பிரதித்தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, த. தே .கூட்டமைப்பு தனது பிடிவாதத்திலிருந்து விலகுவதன் ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமென இந்திய தூதுக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாரப்பகிர்வு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவு முறையே சிறந்தது எனவும், இதனால் இத்தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் ஆலோசனை வழங்கியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more...

"சைபர்" தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை எட்டாம் இடம்! - கஸ்பர்ஸ்கை

"சைபர்" தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை எட்டாம் இடத்தை வகிக்கின்றது என "கஸ்பர்ஸ்கை" நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள கணனி பயனர்கள் அதிகளவில் "சைபர்" தாக்குதல்களுக்கு இலக்காவதாகவும், கணனியைப் பாவிப்பவர்களில் 51 வீதமானனோர் சைபர் தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்த "கஸ்பர்ஸ்கை" நிறுவனம், இலங்கையில் 15 வீதமானோர் இணையத்தளங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

Read more...

மரத்திலேறி பிக்கு ஆர்ப்பாட்டம்! தனது உறவினருக்கு வேலை வேண்டுமாம்!

கொள்ளுப்பிட்டி லிபேட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் அலரிமாளிகைக்கு செல்லும் வழியிலுள்ள மரமொன்றில் ஏறி பிக்கு ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது உறவினருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியே குறித்த பிக்கு மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வினோதமான ஆர்ப்பாட்டத்தில் குதித்த பிக்குவை சில நிமிடங்களுக்குள் பொலிஸார் மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளனர்.

Read more...

13 இல் கையை வைத்தால் நீதிமன்றம் செல்வேன்! - அஸாத் ஸாலி

13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை முற்றாக நீக்குவதற்கோ அல்லது அதனை மாற்றியமைப்பதற்கோ அரசாங்கம் முன்வருமானால், அதற்கெதிராக தான் நீதிமன்றம் செல்லவிருப்பதாக அஸாத் ஸாலி குறிப்பிடுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்டஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பை விஞ்சிச் செல்லும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிடும் அஸாத் ஸாலி,25 வருடங்களாக 8 மாகாணங்களிலும் செயற்பட்டுவந்த இந்த 13 ஆவது திருத்தச் சட்டமானது வடக்கிற்கு மட்டும் ஏன் பொருத்தமற்றது என வினா எழுப்புகிறார்.

எதுஎவ்வாறாயினும், 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் மாற்றியமைப்பதற்கு அன்றேல் நீக்குவதற்கு எதிராக அதிகாரத்திலுள்ள அமைச்சர்கள் 20 பேர் எதிராகவுள்ளது தொடர்பில் தான் சந்தோசப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து வடக்கின் தேர்தலுக்கு ஆயத்தமாகும்போது தானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகளாகத் தோற்றமளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com