Tuesday, June 8, 2010

ஜனாதிபதியுடன் சேர்ந்து வேலை செய்வதில் த. தே. கூ ற்கு மன மகிழச்சியாம்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று நேற்று ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அச்சந்திப்பின்போது எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதிக்கு உறுதிமொழி கூறியுள்ள சம்பந்தன், தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் சந்திப்பு தொடர்பாக லங்காபுவத் இற்கு கருத்து தெரிவித்த ஆர் சந்தந்தன், தமது கட்சி இலங்கையின் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்த்தனா, ஆர். பிறேமதாஸ, சந்திரிகா குமாரணதுங்க ஆகியோருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகவும் ஆனால் அப்பேச்சுவார்த்தைகள் எதுவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்றதுபோல் ஆக்கபூர்வமானதாகவும் பலன்தரகூடியதாகவும் அமைந்திருக்கவில்லை என மகிந்தவிற்கு புகழாரம் சூட்டியதாக லங்காபுவத் தெரிவிக்கின்றது.

வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான நீண்ட நேர சுமுகமாக நடந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக்கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லை யென ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார்.

இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும்

அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read more...

ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி: வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது!

சிறுவனை கடத்தி கப்பம் பெற்ற டக்ளஸை கைது செய்யவேண்டும்.
ஜனாதிபதி மஹிந்து ராஜபக்ச டெல்லி வருவதைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகத்தை நோக்கி கருப்புக் கொடியுடன் புறப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, நல்லக்கண்ணு, மகேந்திரன், பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்களுடன் பல நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை நோக்கி கருப்புக் கொடியுடன் பேரணியாக செல்வதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள், மயிலையில் உள்ள நாகேஸ்ர ராவ் பூங்கா அருகே கருப்பு கொடிகளுடன் திரண்டனர். இந்தப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்தது மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடத்த தடை விதித்திருந்தது. ஆயினும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றது.

நாகேஸ்வர ராவ் பூங்கா முன்பு கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, சிறிலங்க அதிபர் ராஜபக்சவையும், அவருக்கு வரவேற்பு அளிக்கும் டெல்லி அரசையும் கண்டித்து முழங்கங்கள் எழுப்ப, அதனைத் தொண்டர்களும் முழங்கினர்.

தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச திரும்புப் போ., வரவேற்காதே வரவேற்காதே தமிழினப் படுகொலை செய்த ராஜபக்சவை டெல்லி அரசே வரவேற்காதே. தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ராஜபக்சவின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது.

இதன் பிறகு தலைவர்கள் உரையாற்றினார்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்தப் பிறகு, தமிழர்களின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்று கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டி பழ.நெடுமாறன், உண்மையிலேயே தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால் டெல்லிக்குச் சென்று, தமிழர் மறுவாழ்விற்கு எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் குறித்து பேசியிருக்க வேண்டும் என்று கூறினார்.

சிறுவனை கடத்தி கப்பம் பெற்ற டக்ளஸை கைது செய்யவேண்டும்.

போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, சென்னை சூளை மேட்டில் துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொன்றும், மேலும் 4 பேரைக் காயப்படுத்திய குற்ற வழக்கிலும், ஈழத்தைச் சேர்ந்த குடும்பத்தின் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய வழக்கிலும் முக்கிய குற்றவாளியான சிறிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜபக்சவுடன் டெல்லி வருகிறார் என்பதை சுட்டிக்காட்டி, அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பேசிய வைகோ, ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ராஜபக்சவும், டெல்லி அரசும் பதில் கூறியே தீர வேண்டும் என்றும், அதுவரை தமிழர்களின போராட்டம் ஒயாது என்றும் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. இராசேந்தர், தமிழரசி நாளிதழ் ஆசிரியர் நடராசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொணடனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு தலைவர்களையும், நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

சீமானுடன் 200க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை நுங்கம்பாக்கதிலுள்ள சாஸ்திரி பவன் முன்பு கருப்புக் கொடிகளுடன் மறியல் நடத்தச் சென்ற நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானும், அவருடன் 200க்கும் அதிகமான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட பல ஆயிரக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

சித்தார்த்தன் தென்றல் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.

புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றல் வானொலியின் ஏழாவது நாள் என்னும் சமகால அரசியல் களம் நிகழ்வில் 06.06.2010 ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றிருந்தார். இதன்போது ஊடகவியலாளரின் கேள்விகளுக்கும் நேயர்களின் கேள்விகளுக்கும் புளொட் தலைவர் பதிலளித்தார்.
 
ஊடகவியலாளர்: வணக்கம் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களே!
 
சித்தார்த்தன் : வணக்கம்
 
ஊடகவியலாளர்: நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி போட்டியிட்டபோதிலும் உங்கள் கட்சி சார்பில் யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. ஆனால் இதற்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட கணிசமானவர்கள் இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர். இதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு கட்சியாக இருப்பதாக சொல்லிக் கொள்ளப்படுகிறது. இதுபற்றி உங்களுடைய கருத்தென்ன?
 
பதில்: எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில் நடந்து முடிந்த தேர்தலில் ஒரு பாராளுமன்ற அங்கத்தவர்கூட கிடைக்கவில்லை. நாங்கள் நம்பியிருந்தோம் வன்னியில் நிச்சயமாக ஆகக்குறைந்தது ஒரு ஆசனம் கிடைக்குமென்று. ஆரம்பத்திலே ஒரு அங்கத்துவம் எமக்கு கிடைக்குமென்ற நிலையைத்தான் என்னால் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு மாற்றத்தையும் பார்க்கக் கூடியதாகவிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுடைய பலம்பொருந்திய ஒரு கட்சியாக 14அங்கத்தவர்களைப் பெற்று வென்றிருக்கின்றது. தமிழ்க் கட்சி என்ற ரீதியிலே மற்றைய ஒரு தமிழ்க் கட்சியும் ஒரு அங்கத்துவமும் எடுக்காதநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரத்தில் நீங்கள் ஒரு விடயத்தைப் பார்ப்பீர்களென்றால், வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமிடையில் 4000 வாக்குகள்தான் வித்தியாசமிருந்திருக்கிறது. அது மாத்திரமல்ல மொத்த 90வீதமான தமிழ்மக்கள் வாழும் வடக்கை எடுத்துப் பார்த்தீர்களென்றாலும் கூட, 15ஆசனங்களில் 08ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஏனைய ஆசனங்கள் தேசியக் கட்சிகள் அல்லது சிங்களக் கட்சிகள் என்று கூறக்கூடிய கட்சிகளுக்கும் கிடைத்திருக்கிறது. ஆகவே அதில் மிகப்பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. இதில் ஐக்கிய தேசியக் கட்சி 02 அங்கத்தவர்கள் எடுத்திருக்கிறார்கள். அரச கட்சி 05ஆசனங்கள் எடுத்திருக்கிறார்கள். மக்கள் அரச கட்சிக்கு 05 ஆசனங்களை வழங்கியிருக்கிறார்கள். அதேபோல் கிழக்க மாகாணத்தை எடுத்துக்கொண்டால் 16ஆசனங்கள், அதில் 05ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கின்றது. எனவே இன்றைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழ் மக்களுடைய ஒரே கட்சியாக திகழ்கிறது என்பது யதார்த்தம். இந்த ரீதியில்தான் இன்று செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி அவர்கள்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றார். நாளை பேசுவதாக அறியமுடிகிறது. ஆகவே அவர்களுக்கு மிகப்பெரிய கடமையொன்று இருக்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அவர்கள்தான் முற்றுமுழுதான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற ஒரு கடப்பாடு நிச்சயமாக அவர்களுக்கு இருக்கின்றது. அதை சரியாக அவர்கள் செய்வார்கள் என நான் நம்புகிறேன்.
 
ஊடகவியலாளர்: நீங்கள் கூறுகின்றபோது வடக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 08உம், சிங்களப் பெரும்பான்மைக் கட்சிக்கு 07ஆசனங்களும் கிடைத்திருக்கிறது. இவ்விடயத்தைப் பார்க்கும்போது வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களால் பேசப்படுகின்ற யுத்தக்குற்றம் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கூட அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றபோது இங்குவாழும் மக்கள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவுமில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் இந்நாட்டின் தேசியக் கட்சிக்கு அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் பேசுவதுபோல் இவை சரியென்று இருந்தால் இந்த மக்கள் அரசை நிராகரித்திருக்க வேண்டும். இதைப்பற்றி நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
 
பதில்: நீங்கள் கூறியபோதுதான் அதுபற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன். நீங்கள் கூறுவதில் மிகப்பெரிய உண்மை இருக்கிறது. வன்னியின் இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் கைகால்களை இழந்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுபற்றிய ஒரு மிகப்பெரிய பிரசாரம் உலகம் முழுக்க எடுக்கப்பட்டது. ஆகவே தமிழ்மக்கள் மத்தியில் அரசகட்சிக்கு நிச்சயமாக கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்றுதான் நாங்கள் பார்த்தோம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அப்படியான ஒரு எதிர்ப்பை நிச்சயமாகக் காட்டவில்லை. அங்கு பாரியளவில் இராணுவத்தினால் மிகப்பெரிய யுத்தக்குற்றங்கள் நடந்ததாகவோ, அல்லது அந்தமக்கள் அதனைப் பார்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். வடக்கில் தான் கடைசி யுத்தத்தில் மிகப்பெரியளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் அரசகட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அல்லது பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் வெளிநாடுகளில் இந்த யுத்தக்குற்றங்கள் பற்றி பேசுவது எந்தளவிற்கு எடுபடப்போகிறது என்று புரியவில்லை. யுத்த குற்றங்களைப் பற்றி பெரியளவில் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை போல்தான் தெரிகிறது.
 
ஊடகவியலாளர்: 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது உங்கள் கட்சியில் யாரும் தெரிவுசெய்யப்படவில்லை. இம்முறை தேர்தலிலும் எவரும் தெரிவாகவில்லை. அந்நேரம் தெரிவாகவில்லை என்பதற்கு உங்களால் சொல்லப்பட்ட ஒரு காரணம் புலிகளின் பின்னணியில்தான் அந்தத் தேர்தல் நடந்தது என்று. அந்தத் தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்குமிடையிலான நிலையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
 
பதில்: நிச்சயமாக 2004ம் ஆண்டுத் தேர்தல் புலிகளுடைய பின்னணியிலே நடைபெற்ற ஒரு தேர்தல். அதிலே மக்கள் ஓர் அமைதிவரும். தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்திருந்தார்கள் என்றுதான் நாங்கள் நம்பினோம். அது மாத்திரமல்ல பல முறைகேடுகளும் அந்த தேர்தலில் நடைபெற்றிருந்தது. அதை நாங்கள் நேரடியாகவே கண்டிருக்கிறோம். நாங்கள் மாத்திரமல்ல இங்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள்கூட கூறியிருக்கின்றார்கள். எனினும் இம்முறை தேர்தலில் அப்படியான முறைகேடுகள் நடைபெற்றிருக்கவில்லை. மக்கள் விரும்பியே வாக்களித்துள்ளனர். எங்களுடைய அறிவுக்கெட்டிய அளவிற்கு மிக மோசமான அளவில் எந்தவித முறைகேடுகளும் பெரியளவில் நடந்திருக்கவில்லை. ஆகவே இம்முறை எங்களுடைய தோல்விக்கு தமிழ் மக்கள் எடுத்த இரண்டு நிலைப்பாடுகள்தான் காரணமாக இருந்திருக்கிறது. ஒன்றில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்க வேண்டும். அல்லது தேசியக் கட்சியொன்றுக்கு வாக்களிக்க வேண்டுமென்று யோசித்திருக்கிறார்கள் போல் தெரிகின்றது. அரச கட்சியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரியளவில் மக்களுக்கு நேரடியாக தேர்தலுக்கான உதவிகளை செய்திருக்கிறது. இப்படியான காரணங்களுக்காக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதற்கிடையிலே நாங்கள் கூறியதுபோல், நாங்களும் தமிழ்த் தேசியவாதிகள் தான், இருந்தாலும் யதார்த்தத்தை உணர்ந்து இடம்பெயர்ந்த மக்களை சரியான முறையிலே வாழவைக்க வேண்டும். பிடிபட்டிருக்கின்ற இளைஞர்களை வெளியில் கொண்டுவர வேண்டும். இப்டியான கோரிக்கைகளை முன்வைத்துதான் நாம் தேர்தலில் போட்டியிட்டோம். இவை எல்லாவற்றையும் விடுத்து மக்கள் இரண்டுநிலை அதாவது எல்லையில் போய் நின்றுதான் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவேதான் எங்களுக்கு இந்தமுறையும் ஒரு தோல்வி கிடைத்திருக்கிறது என்று நான் நம்புகின்றேன்.
 
ஊடகவியலாளர்: நீங்கள் வன்னிக் கள நிலைவரத்தைப் பார்த்தளவில் ஒரு ஆசனம் கிடைக்குமென்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்ததாக ஆரம்பத்தில் கூறியிருந்தீர்கள். அந்த நம்பிக்கை இல்லாமற் போனது எப்படி?
 
பதில்: மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் நாங்கள் பேசுகின்றபோது அல்லது எங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லுகின்றபோது. மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யுமுன்னமே நான் பலநூற்றுக் கணக்கானவர்களுடன் கதைத்திருக்கிறேன். அவர்கள் மிகத் தெளிவாக கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அனுப்பியதால் எந்தவித பிரயோசனமும் இருக்கவில்லை. அந்தப் பகுதிகளில் எந்தவித அபிவிருத்தி வேலைகளும் செய்யப்படவில்லை. நீங்கள் இருந்த காலங்களில் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே உங்களுக்கு இம்முறை வாக்களிப்போம் என்று என்னை சந்தித்தபோது பலர் கூறினார்கள். நீங்கள் கட்டாயமாக இம்முறை பாராளுமன்றுக்கு செல்வீர்கள் என்று கூறினார்கள். இந்நிலையில் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகளையே என்னால் பார்க்கக் கூடியதாகவிருந்தது. இறுதிநேரத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே மிகப் பெரியளவிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சார்பான பிரச்சார நடவடிக்கையினை மிகவும் அழகாக மேற்கொண்டிருந்தன. இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் குறித்த பத்திரிகைகள் பெரும்பங்கினை ஆற்றியுள்ளன. மக்களும் தாங்கள் காலையில் சென்று வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டால் தாம் தமிழ்த் தேசியத்திற்கு மிகப்பெரிய பங்கினை ஆற்றிவிட்டோம் என்ற திருப்தியுடன் இருக்கலாமென்று நம்பி அவர்களும் இதனைச் செய்துள்ளனர்.
 
நேயர் : வன்னியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அங்கு பெரும்பான்மை மக்களை குடியேற்றுவதாக கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலையினை தோற்றுவித்துள்ளது. பத்திரிகைகளிலும் இதுபற்றி சொல்லப்படுகின்றது. இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
 
பதில்: மீள்குடியேற்றம் என்ற பெயரில் நிச்சயமாக வன்னியில் பெரும்பான்மை குடியேற்றப்படுவார்கள் என்பதை தேர்தல் காலத்திலேயே நாம் கூறியிருந்தோம். இவ்வாறான ஒரு விடயம் நடக்கப்போகின்றது. இவ்வாறான அபாயமொன்று இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனாலும் மடுறோட் மற்றும் கொக்காவில் ஆகிய இரண்டு இடங்களிலும் 1983க்கு முன்பு சிங்கள மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த மக்களைத்தான் குடியேற்றுவதாக அரசு கூறியிருக்கின்றது. 1983ல் வாழ்ந்தவர்கள் என்றால் முப்பது வருடங்கள் ஆகின்றது. அவர்கள் இங்கு வருவதற்கு விரும்புகிறார்களா. அவர்கள் இங்கு வருவதற்கான தேவையிருக்கின்றதா என்பது தெரியவில்லை. இருப்பினும் அரசு அந்தக் குடும்பங்கள் பெருகிவிட்டதாக காட்டிக்கொண்டு அவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். இந்த இடங்களில் மாத்திரமல்ல முல்லைத்தீவின் வெலிஓயா பெருத்துக்கொண்டு வருமென்பதும் நாங்கள் பயப்படுகின்ற ஒரு விடயமே. மற்றும் அங்கு பல கொந்துராத்து வேலைகள் மற்றும் கூலிவேலைகளுக்கு கூட ஆட்களை தெற்கிலேயிருந்து கொண்டுபோவதைப் பார்க்கக் கூடியதாகவிருக்கின்றது. இவைகள் சம்பந்தமாக எங்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லாமையால் அதாவது இன்று அதனை எடுத்துக் கூறக்கூடிய ஒரு அங்கத்துவம் இல்லாவிட்டாலும் கூட மிகக் குறைவாக கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களிலும் நாங்கள் பலமுறை தெளிவாக அதனை அரசுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம். ஆனால் அரசியல் அதிகாரமில்லாதபடியால் அதனை பெரியளவில் எடுத்துச் செல்வது மிகவும் கஸ்டமாகவுள்ளது. இந்தவேலையை கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்க்கவேண்டுமென்று நம்புகிறோம். பார்க்குமென்றும் நம்புகிறோம்.
 
இப்போது நாங்கள் கொழும்பில் ஒரு வீடு வாங்கி இருக்கலாம் என்றால் பெரும்பான்மையினத்தவர் ஒருவர் அங்குவந்து இருப்பதை தவறென்று எவருமே கூறமுடியாது. அரசாங்கம் திட்டமிட்டு அங்கிருக்கின்ற குடிப்பரம்பலை குறைப்பதற்காக குடியேற்றம் செய்வதைத்தான் நாங்கள் அன்றுதொட்டு இன்றுவரை எதிர்த்து வருகின்றோம். அது நாங்களாக இருந்தாலென்ன? தமிழரசு கட்சியாக இருந்தாலென்ன. தமிழரசுக் கட்சியில் நான் இருந்த காலத்தில் தொடக்கம் பார்க்கின்றபோது அதைத்தான் அவர்களும் எதிர்த்தார்கள். நாங்களும் எதிர்க்கின்றோம் என்பதைத் தவிர, ஒரு தனிமனிதன் வந்து அங்கு காணி வாங்கி இருப்பதை எவருமே பிழையென்று நிச்சயமாக கூறமுடியாது. ஆனால் ஒருவிடயம் என்னவென்றால் 1983கலவர காலங்களில் அந்தக் காணிகளை விற்றுவிட்டு வந்தவர்கள் மீண்டும் சென்று நாங்கள் காணிகளை விற்கவில்லை என்றுகூறி அந்தக் காணிகளுக்கு மீண்டும் உரிமைகோருகின்ற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கின்றது. அது சட்டரீதியாக சரியாக இருக்கலாம். ஆனால் மனச்சாட்சியின்படி பிழையான விடயங்கள் சிலதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் 83க்கு பிறகு அங்கு பதிவுகள் இல்லை. பதிவுகள் உரிய முறையில் நடைபெறவில்லை என்பதே.
 
ஊடகவியலாளர்: இம்முறை தேர்தலில் உங்கள் கட்சியில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படாத நிலைக்கு காரணமாக கடந்தகாலங்களில் உங்கள் புலி எதிர்ப்பு கோட்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்தது, அரசுடன் இணைந்து செயற்பட்டது என்பதில் எதுவாவது காரணமாக இருக்கலாமென்று நீங்கள் நினைத்ததுண்டா?
 
பதில்: இதை அப்படிப் பார்க்க முடியாது ஏனென்றால், டக்ளஸ் தேவானந்தா 03 அங்கத்துவம் எடுத்திருக்கின்றார். வன்னியில்கூட பெரும்பாலான தமிழ்மக்கள் கூட, ஏறக்குறைய 20ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் அரசகட்சிக்கே நேரடியாக வாக்களித்திருக்கிறார்கள். அரச கட்சியில் நிச்சயமாக நாங்கள் என்றும் இணைந்திருந்ததில்லை. நல்ல விடயங்களை செய்கின்றபோது ஆதரித்திருக்கின்றோம். பிழையென்றால் பிழையென்று சொல்லியிருந்திருக்கிறோம். ஆகவே நாம் அரச கட்சியில் இருந்ததில்லை. அரச கட்சிக்கே வாக்களித்த மக்களுக்கு எங்களுக்கு வாக்களிப்பதற்கு ஒரு சிரமமாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் நாங்கள் அங்கு இருக்கின்றபோது தொடர்ந்து மக்களுக்காக எவ்வளவோ சேவைகளை செய்திருக்கிறோம். அதற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக மாறி வாக்களித்திருக்கிறார்கள். மற்றது நாங்கள் புலிகளை எதிர்க்கின்றோம் என்றால் இப்படியான அழிவை நோக்கி அவர்கள் கொண்டு செல்கின்றார்கள் என்பதைத்தான் நாங்கள் கொள்கை ரீதியாக எதிர்த்தோமே தவிர புலிகளை எதிர்க்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கவில்லை. அவர்களின் பிழைகளைப் பிழையென்று கூறினோம். பிழையென்று கூறியபோது அந்த மாற்றுக் கருத்தினை விரும்பாமல் புலிகள் எங்களை நசுக்க ஆரம்பித்தார்கள். அந்தநேரத்தில் நாம் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அதை மக்கள் பெரிதாக பார்க்கமுடியாது. ஏனென்றால் நாங்கள் சொன்னது இன்று சரியாக வந்திருக்கின்றது. ஒரு மிகப்பெரிய அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தோம். இன்று அது சரியாக வந்திருக்கிறது. அதற்காக நாம் சொன்னது சரியாக வந்திருக்கிறது என்று நான் சந்தோசப்படவில்லை. ஆனால் இதனை அன்றே புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எல்லாருமே உணர்ந்திருந்தால் இந்த அழிவிலிருந்து மக்களைப் பாதுகாத்திருக்க முடியுமென்றுதான் நான் இப்போதும் கருதுகிறேன்.
 
ஊடகவியலாளர்: கடந்தவருடம் வவுனியா நகரசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் உங்களுடைய கட்சி போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தது. அதாவது 140வாக்குகளால் அந்த நகரசபையைக் கைப்பற்ற முடியாமற் போயிருந்தது. அந்த விடயத்தை ஒப்பிடுகின்றபோது இந்த நடந்து முடிந்த தேர்தலில் உங்களுடைய கட்சிக்கு முன்னேற்றம் இருக்கிறதா? இது விடயமாக திருப்தியடைகிறீர்களா?
 
பதில்: இல்லை, நிச்சயமாக திருப்பதியடைய முடியாது. ஏனென்றால் நகரத்தில் மாத்திரம் ஒரு சிறிய இடத்தில் 140வாக்குகள் மாத்திரம் குறைவாக எடுத்ததால் நகரசபையை கைப்பற்ற முடியாதுபோனது. நாங்கள் பொதுவாக கிராமங்களிலேதான் எங்களுடைய வாக்கு வங்கி தங்கியிருந்தது. அம்மக்கள்கூட இம்முறை நிச்சயமாக மாறியே வாக்களித்துள்ளார்கள். அதாவது வழக்கமாக எங்களுக்கு மிகவும் ஆதரவாகவிருந்த அந்த கிராம மக்கள் மாறி வாக்களித்துள்ளார்கள். ஏனெனில் கிராமங்களிலேதான் எங்களது கூடுதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆகவே இவ்விடயத்தில் நாம் திருப்திப்பட முடியாது. அங்கத்துவம் கிடைப்பது கிடைக்காதது வேறு, ஆனால் திருப்திப்படக் கூடியளவுக்கு எங்களுக்கு நிச்சயமாக வாக்குகள் கிடைக்கவில்லை.
 
நேயர் : கடந்த 2004 தேர்தலில் வன்னியில் பெரும்பாலான மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்திருந்தனர். எனினும் அந்தக் காலகட்டத்தில் வவுனியாவில் எந்தவித அபிவிருத்திப் பணிகளும் இடம்பெற்றிருக்கவில்லை. எனினும் இதற்கு முந்தைய காலகட்டத்தில் புளொட் அமைப்பு உள்ளிட்ட மற்றைய கட்சிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தபோது இங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே இந்தமக்கள் தங்களுக்கு அபிவிருத்தி வேண்டாமென்று நினைக்கிறார்களா அல்லது தாங்கள் ஒற்றுமை மற்றும் தேசியம் என்பதற்குள் தங்களின் நிலையை வெளிப்படுத்த நினைக்கிறார்களா, இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் விரும்பும் அரசியலை தாங்கள் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?
 
பதில்: நான் நம்புகின்றேன் ஒரு அரசியல் கட்சி என்று சொன்னால், அரசியல் கட்சிதான் மக்களுக்கு வழிகாட்ட வேண்டுமேயொழிய, மக்கள் விரும்புவதையெல்லாம் ஒருகட்சி ஏற்றுக்கொண்டு போவதென்றால் அந்தக் கட்சியே இருக்கத் தேவையில்லை. 2004ம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தமட்டில் தேர்தல் இடம்பெற்ற விதம், இடம்பெற்ற முறைகேடுகள், வன்னியிலிருந்து வாக்குகள் போடப்பட்ட விதம், அதாவது ஒருவர் முப்பது முப்பத்திரண்டு வாக்குகள்கூட அளித்திருக்கிறார்கள். 2004ம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தமட்டில் அந்நேரம் கடும் யுத்தம் இடம்பெற்றுவந்தமையால் ஒரு அமைதிவரும் என்ற நம்பிக்கையிலும் மக்கள் வாக்களித்தார்கள். இம்முறை தேர்தலின்போது கடந்த ஆறு வருடங்களாக இப்பகுதியில் அபிவிருத்திகள் எதுவும் இடம்பெறவில்லை, அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று பலரும் என்னிடம் கூறினார்கள். கிராம முன்னேற்றச்சங்கத் தலைவர்கள், சமூகப் பெரியார்கள், பொதுமக்கள் இப்படி பலருடன் நான் கதைத்தபோது நேரடியாகவே கூறினார்கள், நீங்கள் இருக்கின்றபோது மிகப்பெரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகள் முன்னேறவேண்டும். ஆகவே நீங்கள் நிச்சயம் பாராளுமன்றம் போகவேண்டும். போவீர்கள் என்று சொன்னார்கள்.
 
ஒருவர் தனது வாக்கை கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டுவிட்டால் தனது கடமை தமிழ்த் தேசியத்திற்கு முடிந்துவிட்டது. பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியோ பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். அதாவது வெளிநாடுகளிலுள்ளவர்கள் 100டொலரை புலிகளுக்கு கொடுத்துவிட்டால் தங்கள் பணி முடிந்துவிட்டது என்று கருதுவதுபோல வடகிழக்கில் மக்கள் அந்த நம்பிக்கையில் வாக்களித்துள்ளனர். ஆனால் இம்முறை வாக்களிப்பைப் பார்க்கையில் தமிழ் மக்கள் அரசுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வாக்களித்திருக்கிறார்கள். வன்னியைப் பொறுத்தமட்டில் ஆகக்குறைந்தது 15 முதல் 16வீதம் முஸ்லிம்களே அங்குள்ளனர். முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் சேர்த்தால் ஆகக்கூடினது 20வீதம் தான் இருப்பார்கள். ஆகவே முஸ்லிம் ஒரேயொரு அங்கத்தவர் வருவதற்கான வாக்குகளே அங்குள்ளன. இருந்தும் மூவர் வந்திருக்கிறார்கள். அதிலே பிரச்சினையில்லை. அவர்களும் தமிழ்பேசும் மக்கள்தான். ஆனால் அரசகட்சியில் வந்திருக்கிறார்கள். அதாவது அவர்கள் தமிழ் கட்சிக்குள்ளால் வந்திருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேன். தமிழ்மக்கள் அவர்களுக்கு வாக்களித்து ஒற்றுமையை உறுதிப்படுத்து;கிறார்கள் என்ற ரீதியில் நான் சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால் அவர்கள் அரச கட்சிக்குள்ளாலும், ஐ.தே.கட்சிக்குள்ளாலும் வந்திருக்கிறார்கள். ஆகவே அரச கட்சிக்கும் ஐ.தே.கட்சிக்கும் அந்த மக்கள் வாக்களிக்கின்றபோது அவர்கள் அபிவிருத்தியையோ, அல்லது பிரச்சினைக்கான தீர்வையோ நோக்கி வாக்களிக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. வேறு ஏதோவொரு காரணத்திற்காக அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள. அது அந்த மக்களின் அரசியல் தெளிவின்மையையோ அல்லது அக்கறையின்மையையோ காட்டுகிறது போலதான் எனக்குத் தெரிகின்றது.
 
நேயர்: தமிழ்த் தேசியத்தை இனிமேல் யார் வழிநடத்தப் போகின்றார்கள்?
 
பதில்: நல்ல கேள்வி, பிரபாகரனுக்கு பின்பு யார் வரப்போகிறார்கள் என்று கேட்கிறீர்கள். தமிழ்த் தேசியம் என்பது நான் நினைக்கின்றேன். தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு பிழையான அடிப்படை எண்ணக்கருவைத்தான் வைத்திருக்கிறார்கள் என்று. ஏனென்றால், தமிழ்த் தேசியமென்றால் முற்றுமுழுதாக தொடர்ந்து போராடியே தமிழினம் அழிந்துவிட வேண்டும் என்பதல்ல. நாங்கள் அனைத்து இயக்கங்களும் ஆயுதம் எடுத்தபோது மிகத் தெளிவாக தமிழ் மக்களை வாழ வைக்க வேண்டும். தமிழ் மக்களை இந்நாட்டில் சரிசமமான பிரஜைகளாக வாழவைக்க வேண்டும். முடியாவிட்டால் எங்களுக்கென்று ஒரு தனிநாட்டை அமைத்துக் கொள்ளவேண்டும். இந்த அடிப்படை நோக்கத்திலேதான் நாங்கள் ஆயுதம் எடுத்தோம். ஆயினும் இந்நாட்டிலே ஒரு தனிநாடு அமைப்பது கஸ்டமென்று கண்டபோது அனைவருமாக ஒரு சரியான தீர்வை நோக்கிப் போயிருக்க வேண்டும். நாம் அரசியல் ரீதியாக, ஆயுத ரீதியாக, பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக எல்லா ரீதியிலும் பலமாக இருந்தபோது ஒரு சரியான அரசியல் தீர்வை நோக்கிப் போயிருக்கவேண்டும். அன்றில் இந்திய அரசாங்கம் எம்மை முற்றுமுழுதாக ஆதரித்தபோதாவது ஒரு சரியான அரசியல் தீர்;வை நோக்கிப் போயிருக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்துமே எங்களது போராட்டத்தை ஒரு விடுதலைப் போராட்டமென்று ஏற்றுக்கொண்டு எங்களை எல்லாம் நேரடியாக அங்கீகரிக்கா விட்டாலும்கூட ஒரு மறைமுகமான அங்கீகாரம தந்து அந்நாடுகளில் செயற்பட அனுமதித்த போதாவது அந்நாடுகளின் உதவியைக் கொண்டாவது ஒரு சரியான தீர்வுக்குப் போயிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா நிச்சயமாக ஒரு தனிநாட்டை எதிர்க்கின்றது என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். பிரபாகரன் உட்பட ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்தியா ஒரு தனிநாட்டை இந்தப் பகுதியில் உருவாக விடாதென்று. இலங்கை அரசாங்கம் ஓம் என்றால்கூட இந்தியா இந்தப்பகுதியில் ஒரு தனிநாட்டை உருவாக விடமாட்டாதென்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆகவே நாங்கள் பலமாக இருந்தபோது ஒரு சரியான தீர்வுக்கு போயிருக்க வேண்டும்.
 
தமிழ் தேசியம் என்ற பதத்தை ஒரு சரியான முறையிலே உணர்ந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய உணர்வு ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்றது. தமிழ்த் தேசியம் என்ற பெயரால் எதையும் செய்யலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டில்தான் நாங்கள் கடந்த காலங்களில் எங்களது போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியிருக்கின்றோம். அது யாராக இருந்தாலும், நிச்சயமாக தமிழ்த் தேசியம் என்ற பதத்தை மிகப் பிழையான முறையில் பாவித்து எமது இனத்தின் அழிவைநோக்கி நாங்கள் அனைவருமே கொண்டு விட்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்திலே பங்குபற்றிய அதாவது, அது சாத்வீக போராட்டமாக இருந்தாலென்ன ஆயுதப் போராட்டமாக இருந்தாலென்ன நாங்கள் ஒவ்வொரு இயங்கங்களுமோ அல்லது ஒரு கட்சிகளுமே மிகத் தெளிவாக எங்களுடய கட்சி அல்லது எங்களுடைய இயக்கத்தினுடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்காகவுமே இந்த தமிழ் தேசியத்தை உபயோகப்படுத்தினோமே தவிர உண்மையிலே சரியான முறையில் அந்த மக்களுக்காக அதைப் பாவிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே இன்று யார் இந்த தமிழ்த் தேசியத்தை எடுத்துச் செல்பவர்கள் என்பதைக் காட்டிலும் இன்று யார் இந்த மக்களை வாழவைக்கப் போகிறார்கள் என்பதே முக்கியம். வன்னியில் இருக்கின்ற மக்களுக்கு இப்போதுகூட மீள்குடியேற்றப் பிரச்சினை இருக்கின்றது. அங்கு சிங்கள மக்களுடைய குடியேற்றம் உருவாக்கப்படலாம் என்ற ஒரு பயத்தில் வாழுகிறார்கள். அந்த மக்களை தங்கள் கிராமங்களில் கொண்டுபோய் விட்டாலும் சரியான முறையில் அவர்கள் இன்னமும் வாழத் துவங்கவில்லை. அவர்களை கொண்டுபோய் விட்டதைச் சரியென்றுதான் நான் இன்னும் கூறுகின்றேன் ஏனென்றால் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதைவிட அவர்கள் தங்களது கிராமத்தில் கொண்டுபோய் விட்டு அங்கு அவர்கள் ஒரு கொட்டிலில் இருந்தாலும்கூட அவர்கள் சொந்த இடத்தில் இருக்கின்ற மன திருப்தியோடாவது இருக்கிறார்கள். ஏனெனில் நான் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமாக இந்த மீள்குடியேற்றக் கிராமங்களுக்குச் சென்று பார்த்திருக்கின்றேன். மக்களுடன் கதைத்திருக்கின்றேன். அவர்கள் மிகவும் வேதனையில் வாழுகின்றார்கள். கஸ்ரங்களில் வாழுகின்றார்கள். இருந்தாலும் நான் எனது சொந்தக் கிராமத்துக்கு வந்துவிட்டேன். நான் ஏதாவது செய்து பிழைத்துக் கொள்வேன் என்றொரு நம்பிக்கையில் அவர்கள் வாழுகின்றார்கள். அந்த ஏதாவதை செய்வதற்கு நாங்கள் உதவ முடியுமா என்பதுதான் இன்றிருக்கின்ற கேள்வி.
 
தமிழ்த் தேசியம் என்றுகூறி, தமிழ் மக்களைத் தொடர்ந்து அழிப்பதைக் காட்டிலும் அதற்காக நான் தமிழ்த் தேசியம் பிழையென்று நான் கூறவில்லை. அது நான் முன்பு குறிப்பிட்டதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையிலே தேசியம் என்பது நிச்சயமாக இருக்கின்றது. அந்த தேசிய உணர்வு இல்லாவிட்டால் அவன் நிச்சயமாக ஒரு மனிதனாக இருக்கமுடியாது. அதிலே ஒரு பிழையுமில்லை. அது நிச்சயமாக இருக்கவேண்டும். நான் நெடுகலுமே கூறுகிறேன் பிரபாகரனைக் காட்டிலும் எனக்கு தமிழ்த் தேசிய உணர்வு கூட இருக்கின்றது என்று. ஏனென்றால் நான் நீண்ட நெடுங்காலமாக 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் தொடக்கம் தமிழ் மக்களுடைய போராட்டங்களில் பங்குபற்றி வந்திருக்கின்றேன். ஆகவே தமிழ்த் தேசியம் என்பதிலே எங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையுமில்லை. தமிழ்த் தேசியம் என்ற பெயரிலே மக்களை அழிப்பதைக் காட்டிலும் அந்த மக்களை வாழவைப்பதற்கு எங்களால் முடிந்தளவைச் செய்யவேண்டும். இதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.
 
நேயர் : முப்பது முப்பத்தைந்து வருடங்களாக தமிழ்க் கட்சிகள் அரசை எதிர்த்த கட்சிகளாகத்தான் அரசியல் நடத்தியிருக்கிறார்கள். இதனால் தமிழ்மக்கள் அடைந்த பயன் என்ன?
 
பதில்: தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தமட்டில் அரசை தொடர்ந்து எதிர்த்து வந்தது அந்தக் கட்சிகளின் பிழையல்ல. அரசினுடைய பிழையே. இலங்கையின் முதலாவது சட்டமே இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் என்று மலையகத் தமிழ்மக்கள் 10லட்சம் பேருடைய வாக்குரிமையை இல்லாமற் பண்ணியது. பின்பு 56இலே சிங்களம் மாத்திரம் என்ற சட்டம். பின்பு 70இல் தரப்படுத்தல் இப்படியாக தமிழ்மக்கள் பல வகையிலே நசுக்கப்பட்டு வந்தபோது நிச்சயமாக தமிழ்மக்கள் அரசுக்கு எதிராகப் போராடவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஆகவே அந்த போராட்டம் ஆரம்பித்ததோ, அல்லது அரச எதிர்ப்பாக இருந்ததோ, இருக்கின்றதோ தவறென்று கூறமாட்டேன். என்னைப் பொறுத்தமட்டில் அரசு செய்யக்கூடிய நல்ல விடயங்களை நிச்சயமாக நாங்கள் பாராட்ட வேண்டும், ஆதரிக்க வேண்டும். இன்றிருக்கின்ற நிலைமையிலே முற்றுமுழுதாக அரச எதிர்ப்பு என்ற கோசத்துடன் மாத்திரம் போய்க்கொண்டிருந்தால் வடக்கு கிழக்கில் வாழுகின்ற எங்களுடைய தமிழ்பேசும் மக்கள், தமிழர்களாக இருந்தால் என்ன முஸ்லிம்களாக இருந்தாலென்ன? இன்னும் கஸ்ரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள் என்பதே உங்கள் கேள்வியின் தொனியிலிருந்து நன்றாக விளங்குகின்றது. ஆகவே அதற்காக அரசு செய்வது எல்லாம் சரியென்று சொல்லி எங்களுடைய அடிப்படை உரிமைப் பிரச்சினைகளை விட்டு அரசை ஆதரிக்க முடியாது. அரசு செய்யக்கூடிய நல்ல விசயங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து எங்களுடைய அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நாங்கள் செயற்படுவதன் மூலம் ஓரளவுக்கு எங்களுடைய மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பது மாத்திரமல்ல. அனைத்தையும் இழந்து வடகிழக்கிலே வாழுக்கின்ற இலட்சக்கணக்கான மக்களை வாழவைக்கவும் வேண்டும். அவர்கள் சாதாரண வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமென்பதை மனதிற் கொள்ளுவோமாக இருந்தால் இதற்கான முயற்சிகளை இயலுமானளவு எடுக்க வேண்டும். அதற்கு நாம் விரும்புகிறோமோ இல்லையோ அடுத்த ஏழு வருடத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக இருக்கப் போகிறார். ஆகவே அவருடன் நிச்சயமாக கதைக்க வேண்டும். இதன் ஆரம்பமாக நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி அவர்களும் பேசவுள்ளனர்.
 
நேயர் : பல தடவைகள் அரசாங்கங்கள் தமிழ்க்கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதை புறக்கணித்தது ஏன்?
 
பதில்: பலதடவை அரசாங்கம் பேச்சுக்கு அழைத்தும் புறக்கணித்தது ஏன் என்கிறீர்கள் நான் நினைக்கிறேன் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தான் கூறுகிறீர்கள் என்று. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று பாராளுமன்றத்தில் பலம்பொருந்திய கட்சியாக இருந்தது. அவர்கள் அன்று முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள், ஆகவே அவர்களால் தங்கள் விரும்பியதை செய்யமுடியாமல் இருந்திருக்கின்றது. இன்று அவர்கள் அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வந்திருக்கின்ற காரணத்தினால்தான் நாளை அவர்கள் அரசுடன் பேசுவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என நான் நம்புகின்றேன். அதற்கு முன்னைய காலங்களில் அதாவது 2004ற்கு முன்பு எல்லா தமிழ்க் கட்சிகளும் பேச்சுக்களில் பங்குபற்றினார்கள். புலிகளும்கூட திம்புப் பேச்சில் பங்கேற்றிருந்தார்கள். அதற்குப் பிறகுகூட பேச்சுக்களில் பங்குபற்றியிருக்கிறார்கள். ஆகவே தமிழ்க்கட்சிகள் முழுமையாக பேச்சுவார்த்தைகளிலிருந்து விலத்தியிருக்கிறார்கள் என்று கூறுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை. 2004ற்கும் 2010ற்கும் இடைப்பட்ட காலத்திலேதான் தமிழ்க்கட்சிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருந்திருக்கிறார்கள். அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் விலத்தியிருந்தது என்பதுதான் உண்மை.
 
நேயர் : தற்போதைய அரசாங்கமோ அல்லது எந்தவொரு பேரினவாத கட்சியோ தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமா?
 
பதில்: நிச்சயமாக தீர்த்து வைக்காது. எந்தவொரு அரசாங்கமும் அது எவராக இருந்தாலும் தமிழ் மக்களின் அல்லது தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒரு தீர்வை முன்வைக்க மாட்டாது. இதிலே என்னைப் பொறுத்தமட்டில் எந்த சந்தேகமும் கிடையாது. 87ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய அழுத்தம் இருந்திருக்கின்றது. ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமாக இருந்தும்கூட எங்களால் பெறக்கூடியது 13வது திருத்தம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றது. இன்று மகிந்த அரசுமீது அப்படியான ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த ஒரு சர்வதேச நாடுகளோ எவருமே தயாராக இல்லை. இவ்விடயத்தில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். அது மாத்திரமல்ல இன்று நாம் யுத்தத்தில் பாரிய ஒரு அழிவை எதிர்கொண்டு மிகப்பெரியளவில் தமிழ்மக்கள் எல்லாவிதத்திலும் பலவீனமான ஒரு நிலையில் அதாவது இன்று இந்த தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் பற்றி கதைக்கின்றபோது நான் நினைக்கின்றேன் நாங்கள் ஒரு பலவீனமான நிலையில் இருக்கின்றோம் என்று. ஏனெனில் மகிந்த யுத்தத்தில் வென்றவர். பலமாக இருப்பவர். சிங்கள மக்களின் முழுமையான வாக்குகளில் தங்கியிருந்தவர். இன்று ஓரளவில் தமிழ்மக்கள் மகிந்த அரசுக்கு வாக்களித்திருந்தாலும் கூட அவர் முற்றுமுழுதாக சிங்கள பெரும்பான்மை வாக்குகளில் தங்கியிருப்பவர். அவர் ஒரு அரசியல்வாதி. ஆகவே அவர் நிச்சயமாக சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாத அல்லது முற்றுமுழுதாக சிங்கள மக்கள் புறக்கணிக்கக் கூடிய ஒருதீர்வை முன்வைப்பாரென்று நான் நம்பவில்லை. ஆனாலும் அவர் யுத்தத்தில் வென்றிருக்கிறார். இந்நாட்டில் அமைதிவேண்டும். இந்தநாடு முன்னேறவேண்டும் என்பதை மனதிற்கொண்டு ஆகக் குறைந்தது ஒரு நியாயமான தீர்வு, வடகிழக்கில் எங்களுடைய பகுதிகளில் எங்களுடைய மக்கள் நிம்மதியாக தாங்களே தங்களுடைய அலுவல்களைப் பார்க்கக் கூடிய விதத்திலே அதிகாரப்பரவலாக்கல் கொண்ட ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமென்பதுதான் எங்களுடைய கோரிக்கை நிச்சயமாக அவரிடம் இருக்கிறது. இன்றல்ல தொடர்ந்து நாம் அவருக்கு இந்த அழுத்தத்தைக் கொண்டு வருகின்றோம். என்ன நடக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
நேயர் : உங்கள் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் எந்தவொரு ஆசனமும் இல்லாத இந்த காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நீங்கள் எந்தவகையில் உதவிசெய்ய நினைத்திருக்கிறீர்கள்?
 
பதில்: ஒன்று அரசியல் அதிகாரம் இல்லாவிட்டால் இன்றிருக்கின்ற நிலையில் சில விடயங்களைச் செய்வது கடினம். ஆனால் நாங்கள் ஏறக்குறைய முப்பத்தைந்து நாற்பது வருடங்களாக இந்த போராட்டத்திற்கு வந்தபோது நாங்கள் அன்று என்றோ ஒருநாள் பாராளுமன்றம் செல்வோம் என்று நிச்சயமாக எதிர்பார்த்து வரவில்லை. அது எங்களுடைய கட்சியில் இருக்கின்ற ஒவ்வொரு தோழர்களையும் பற்றி நான் கூறமுடியும். அவர்கள் எவருமே அவ்வாறு எதிர்பார்த்து வரவில்லை. இருந்தாலும் பாராளுமன்றத்தில் இருப்பது மக்களுடைய சில சேவைகளை, தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு பிரயோசனமான சாதனமாகவே நான் பார்க்கின்றேன். அது கிடைக்கவில்லை என்பதற்காக நாங்கள் ஒதுங்கிவிட முடியாது. பாராளுமன்றத்திற்கு நாங்கள் 94ம் ஆண்டுதான் முதன்முதலாக வந்தோம். அதற்கு முன்பே இருபது முப்பது வருடங்கள் எங்கள் கட்சி இயங்கி வந்திருக்கின்றது. மக்களுக்குப் பலவகைகளிலே நாங்கள் இயன்றளவுக்கு உதவி வந்திருக்கிறோம். சேவைகளைச் செய்து வந்திருக்கின்றோம். பாதுகாப்பளித்து வந்திருக்கின்றோம். வவுனியாவில் மற்றும் வன்னிப் பகுதிகளிலும் கேட்டால் தெரியும், அந்தப் பகுதிகளைப் பாதுகாப்பதில் நாங்கள் பாரியளவில் சேவைகளைச் செய்து வந்திருக்கின்றோம். இந்தக் காலத்திலே அதை செய்வது மிகவும் கடினமான விடயமென்று தெரிந்தாலும் எங்களால் இயன்றளவுக்கு அந்த மக்களுக்கு அதாவது வன்னியில் மாத்திரமல்ல மற்றைய பகுதிகளிலும் இருக்கக்கூடிய மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளைச் செய்வோம். தனிப்பட்ட முறையில்கூட ஜனாதிபதியாக இருந்தாலென்ன, பல அமைச்சர்களும்கூட எங்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள். நன்றாகத் தெரிந்தவர்கள் ஆகவே அவர்களின் ஊடாகவும் தீர்வு விடயமாக இருந்தாலென்ன, மக்களை மீள்குடியேற்றும் விடயமாக இருந்தாலென்ன அவர்களை அணுகக் கூடியதாக இருக்கின்றது. அதை நாம் தொடர்ந்து செய்வோம்.
 
ஊடகவியலாளர்: புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுடைய நாடு கடந்த தமிழீழம் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
 
பதில்: கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலே தமிழ்பேசும் கட்சிகளுக்கான கூட்டம் சூரிச்சில் நடைபெற்றது. அதில் பங்கேற்றிருந்தேன். அதன் பிறகு புளொட் அமைப்பினராகிய நாங்கள் பொதுமக்களுடனான கூட்டத்தினை சூரிச் மாநகரில் நடத்தியிருந்தோம். அதிலே புலிகளை ஆதரிக்கின்றவர்களும், புலிகளின் செயற்பாடுகளில் தீவிரமாக இருந்தவர்களுமாக பலர் வந்து கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னைக் கேட்டார்கள். நாடு கடந்த தமிழீழத்திற்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா என்று, அதற்கு ஆதரவளிக்க முடியாதென்று சொன்னேன். இதன்போது நான் அவர்களைக் கேட்டேன், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு உண்மையாக விளங்கவில்லை என்று. ஒன்று நாடொன்று உங்களை அங்கீகரித்து அந்த நாட்டிலே ஒரு காபந்து அரசாங்கமொன்று நீங்கள் வெளியில் வைத்து செயற்படுவதைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களா? அப்படி என்றால் எந்தநாடு அங்கீகரித்திருக்கின்றது தமிழீழம் என்று. அப்படி ஒன்றுமே கிடையாது. ஆகவே என்ன செய்ய யோசித்திருக்கின்றீர்கள் என்று கேட்டேன். இந்தக் கேள்வியைக் கேட்டவருக்கே உண்மையில் அது சரியாக விளங்கியிருக்கவில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் அவர்கள் புலிகளை முழுமையாக ஆதரித்துக் கொண்டிருந்த காலங்கள் முதல் இன்றுகூட அவர்கள் அதனை முழுமையாக நிராகரிக்கின்றார்கள். முழுமையாக நிராகரிக்காவிட்டாலும் தாங்கள் அதற்கு சம்பந்தமில்லையென்பதை பலதடவைகளில் கூறி விலகி நிற்கிறார்கள். இந்த நாடுகடந்த தமிழீழம் ஒரேயொரு விசயத்தை செய்யலாம். என்னவென்றால் இங்கிருக்கக்கூடிய ஓரளவு அமைதியான சூழலை குழப்பலாம். இது ஒன்றைத்தான் செய்ய முடியுமேயொழிய அதற்குமேல் எதையும் செய்யமுடியாது. மற்றையது இந்த நாடுகடந்த தமிழீழத்திற்காக புலிகள் அங்கு இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கின்றார்கள். அதில் ஒருபகுதியினர் தான் இந்த நாடு கடந்த தமிழீழத்திற்கான தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். அதிலே மற்றைய பகுதியினர் சில இடங்களில் இத்தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்குள் மிகப்பெரிய குழப்பமொன்றுகூட ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் எந்தவிதமான ஒரு பிரயோசனமும் இங்கு வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை. அங்கிருக்கும் புலி உறுப்பினர்களுக்கு பிரயோகசனம் ஏதும் இருக்குமோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு சிலவேளை அதனால் தனிப்பட்ட லாபங்கள் ஏதும் வரலாம். ஆனால், நிச்சயமாக இங்கிருக்கக் கூடிய தமிழ் மக்களுக்கு இதனால் எந்தவொரு லாபமும் வராது இதனால் பாரிய கஸ்டங்களே வரலாம். ஏனென்றால் அரசு இப்போது அதைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றோம் என்றுகூறி பிரச்சினைகளை உருவாக்கலாம். ஆகவே இதிலே நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்றே கருதுகிறேன்.
 
நன்றி: வணக்கம்.

Read more...

Monday, June 7, 2010

மது அருந்திவிட்டு வகுப்பறையில் படுத்துறங்கிய மாணவிகள்.

அனுராதபுரத்திலுள்ள முன்னணி அரச பாடசாலையொன்றில் 11 வயதுடைய 3 மாணவிகள் மதுவருந்திவிட்டு போதையில் படுத்துறங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் படுத்துறங்கிய மாணவிகளை கண்ட ஆசிரியை அவர்கள் திடீரென நோயுற்றுளார்களா என வினவியபோது அவர்கள் வகுப்பறையில் மதுபாணம் அருந்திவிட்டு போதையேறி தூங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்கள் அருந்திய மதுப்போத்தலில் அரைபோத்தல் மிகுதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more...

பயங்கரவாதிகளை ஒழிக்க உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவம்: ஒபாமா நடவடிக்கை

பயங்கரவாதிகளை ஒழிக்க உலகம் முழுவதும் 75 நாடுகளில் அமெரிக்க இராணுவம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் அமெரிக்க இராணுவத்தினர் தற்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அல் காய்தா உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அதிபர் ஒபாமா பிறப்பித்த ரகசிய உத்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more...

அரசியல் யாப்பு மாற்றம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டும். ரில்வின் சில்வா.

நாளை இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ராஜபக்ச இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பொதி ஒன்றின் வரைவொன்றினை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதாக குற்றஞ்சாட்டும் ஜேவிபி யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அரசியல் அமைப்பின் மாற்றமானது மக்களின் அபிலாஷைகளை தீர்க்க கூடியதாக அமையவேண்டுமே தவிர ஜனாதிபதியின் சேவைக்காலத்தை நீடிப்பதற்கானதாக அமையக் கூடாது என எச்சரித்துள்ளார்.

பலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமைக்காரியாலயத்தில் இன்று காலை இ;டம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 'தேசத்துரோகிகள், விடுதலைப் புலிக்கு ஆதரவானவர்கள'; என இலங்கை அரசாங்கத்தினால் முத்திரைக் குத்தப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 'நல்வர்கள், தேசப்பற்றாளர்களாக' இலங்கை அரசின் கண்களுக்கு புலப்படுவதாக கூறுகின்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய இந்த அரசு தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளமையானது இந்த அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை நன்கு உணர்த்தி நிற்பதாக மக்கள் விடுதலை முன்னணியன் பிரசாரச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.

அதாவது அரசாங்கத்திற்கு ஆதரவாக அரசாங்கத்துடன் செயற்படும் போது அவர்கள் நல்லவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் போது அவர்கள் கெட்டவர்கள் தேசத்துரோகிகள், விடுதலைப் புலிக்கு சார்பானவர்கள் என முத்திரைக்குத்தப்படுவதாகவும் அவர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை அரசு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான சந்திப்பின் பின்னணியில் இந்தியா செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அது மாத்திரமில்லாமல் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் அனைத்து செற்பாடுகளின் பின்னணியிலும் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்படுத்தப்படவிருக்கும் அரசியல் யாப்பு மாற்றம் இலங்கை இந்தியாவின் ஓர் மாநிலமாக மாறுவதற்கு வழிவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.


Read more...

ஜனாதிபதி ஐஃபா நிகழ்வுகளில் பங்குகொள்ள திட்டமிட்டிருக்கவில்லை.

கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐஃபா திரைப்பட விருது வழங்கும் விழாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறக்கணித்து விட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் ஆதாரமற்றலை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்புக்காரணங்கள் திட்டமிட்டபடி சில கலைஞர்கள் கலந்துகொள்ளாமையினால் ஜனாதிபதி நிகழ்வில் பங்குகொள்ளவில்லை என சில ஊடகங்கள் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் பொருட்டு ஜனாதிபதி செயலம் ,வ்வறிவித்தலை விடுத்துள்ளது.

Read more...

பயங்கரவாத சதி தொடர்பில் இரு அமெரிக்கர்கள் கைது.

அமெரிக்கப் படையினரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்ட இரு அமெரிக்கர்கள் நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பத்திரிகைத் தகவல் கூறுகின்றது. அந்த இரு அமெரிக்கர்களும் சோமாலியாவுக்கு செல்லவிருந்த விமானத்தில் ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். சோமாலியாவில் அமெரிக்கர்களுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதக் குழுவினருடன் சேர்ந்து கொள்வதற்காக அந்த இரு அமெரிக்கர்களும் சோமாலியா செல்லவிருந்ததாக நம்பப்படுகிறது.

Read more...

கல்முனையில் ஆயுதங்கள் மீட்பு.

கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள தேவ சாந்தி என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன அம்பாறைப் மற்றும் கல்முனை பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை முதல் பாண்டிருப்பு பிரதேசத்தை சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை நடத்தியுள்ளனர் அதன்போது மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை செய்திகள் தெரிவிக்கின்றது.

இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டு பின்பகுதியில் உரப்பையினுள் கிரிஸ் பூசிய நிலையில் பீப்பாய் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர் . இந்த ஆயுதங்களை வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தில் பேரில் வீட்டு உரிமையாளரான பொன்னையா தேவ சாந்தி -வயது 40- என்ற பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார் .

Read more...

என்னை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட கருணாநிதி சதி: ஜெயலலிதா

தம்மை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி சதி செய்வதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சா‌ற்‌றியுள்ளார். இது தொட‌‌ர்பாக அவர் இன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், த‌ன் ‌மீது‌ள்ள வழ‌க்குக‌ள் கு‌றி‌த்து மே‌ல் நடவடி‌க்கை தேவை‌யி‌ல்லை என தன‌க்கு‌த் தானே ‌நீ‌தியை வழ‌ங்‌கி‌க் கொ‌ண்ட த‌ன்னலவா‌தி கருணா‌நி‌தி, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் எனது வழக்கு குறித்தும், நீதிமன்றம் மூலம் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார். மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் மீது கருணாநிதிக்கு அக்கறை இல்லாததையும், என்மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே அவரிடம் மேலோங்கி இருப்பதையு‌ம் தெ‌ளிவா‌க்கு‌கிறது.

பூந்தமல்லி அருகே ஒரு ரவுடி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை, திருச்சி பஞ்சாயத்து கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல், சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை, ஓய்வுபெற்ற காவல் துறை சார் ஆய்வர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை, ஜாமீனில் வெளிவந்த இருவர் ஒசூர் அருகே வெட்டிக்கொலை, புளியந்தோப்பில் ரவுடி வெட்டிப் படுகொலை, ஏ.டி.எம். மைய காவலாளி படுகொலை, சைதாப்பேட்டையில் ரவுடி கழுத்தறுத்து கொலை என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு கடந்த நான்கு நாட்களில் மட்டும் பல்வேறு கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. காவல் துறையினர் ரவுடிகளை பார்த்து அஞ்சி நடுங்குகின்றனர். இந்த அளவுக்கு தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.

தமிழக மக்களின் முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்திருப்பது விண்ணை முட்டும் விலைவாசி. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டுமல்லாமல், நோட்டுப் புத்தகங்கள், காய் கனிகள், நூல், பால் மற்றும் பால் பொருட்கள் என அனைத்துப் பொருட்களின் விலையும் விஷம் போல் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

ஒரு கிலோ கொத்தமல்லி கட்டு 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலைவாசி ஏறுவதற்கு முக்கிய காரணமே பதுக்கல் தொழிலையும், கடத்தல் தொழிலையும் ஊக்குவிப்பதால் தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 20 ரூபாய்க்கு உணவகங்களில் சாப்பாடு போடப்படும் என சென்ற ஆண்டு தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டது என்ன ஆயிற்று என்பதை கருணாநிதியால் விளக்க முடியுமா?

தமிழகத்தில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக தொழில் உற்பத்தியும், வேளாண் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும், ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரியின் விலை உயர இருப்பதாக செய்தி வந்துள்ளது பற்றியும், தமிழ்நாடு மின்சார வாரியம் காற்றாலைகளிடமிருந்து மின்சாரத்தை பெறுவதில் சுணக்கம் காட்டி வருவதாக வந்துள்ள செய்தி குறித்தும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 12 மணி நேர மின்வெட்டு நிலவுவது பற்றியும் கருணாநிதிக்கு தெரியுமா

என்னை அரசியலிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீதிமன்றம் கவனித்துக் கொள்ளும். எனவே, என்மீதான வழக்குகள் குறித்து அறிக்கைகள் விடுவதில் நேரத்தை வீணடிக்காமல், தமிழக மக்களின் முக்கியப் பிரச்னைகளான சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குழ்நீர்ப் பிரச்சனை, தொழில் உற்பத்தி குறைவு, விவசாய உற்பத்தி பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் அது தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எ‌ன்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Read more...

நாவிதன்வெளி பிரதேசத்தில் மத்தியஸ்த சபை.

நாவிதன்வெளி பிரதேசத்திற்கான முதலாவது மத்தியஸ்த சபை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.றிஸ்வி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனப் பத்திரங்களை வழங்கி வைத்தார். நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் மத்தியஸ்த சபைத் தலைவர் த.பூவேந்திரன் பிரதேச சபைத் தவிசாளர் த.கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேநேரம் நாவிதன்வெளி பிரதேசத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலர்களுக்கு முதல்தடவையாக அலுவலகப் பைபகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கான பைகளை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்கள் வழங்கி வைத்தார்





விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபா

Read more...

ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் உலக சமூக அமைதியின்மை பற்றி எச்சரிக்கின்றன. Chris Marsden

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் “ஐரோப்பாவை ஒரு பேரழிவு பயமுறுத்திக் கொண்டிருக்கிறது” என்று கார்ல் மார்க்ஸ் எழுதியபோது, இத்தாலியிலும் பிரான்சிலும் 1848ல் தொடங்கிய புரட்சிகர வெடிப்புக்களுக்கு முன் ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பகுதியை சூழ்ந்திருந்த நிலைமை பற்றி அவர் குறிப்பிட்டார்.

சமீப காலத்தில் பல செய்தி ஊடகக்கருத்துக்கள் மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவாக புரட்சிகரப் பரிமாணங்களுடனான சமூக அமைதியின்மை அதேபோல் வெடிக்கக்கூடும் என்று கணித்துள்ளன. இந்த எச்சரிக்கைகள் ஐரோப்பா மீண்டும் தேசிய அழுத்தங்களுக்கு திரும்பும் என்றும், பாசிச இயக்கங்கள் எழுச்சி பெறும், ஏன் போர் கூட ஏற்படலாம் என்ற அபாயமான கணிப்புக்களுடன் தொடர்ந்து வந்துள்ளன.

உதாரணமாக பைனான்ஸியல் டைம்ஸில் மே 24 அன்று எழுதிய வரலாற்றாளர் சைமன் ஷஹமா, “தேவையானதை விட நிலைமையை அபாயகரமானதாக காட்டுவதற்கு தொலைவில் நான் இருக்கின்றேன். ஆனால் நீங்கள் காற்றில் இப்பொழுது கந்தகத்தின் நெடியை நுகரவில்லை, ஒரு சீற்றமான சகாப்தத்தின் நுழைவாயிலின் இருக்கிறோம் என்றும் நினைக்க மாட்டீர்கள்….ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சமூக குழப்பங்களுடனான ஒரு நீண்ட கோடைகாலத்திற்கான வாய்ப்பு உறுதியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.

ஷஹமா “பொருளாதாரப் பேரழிவின் தொடக்கத்திற்கும் சமூகச் சீற்றத்திற்கும் இடையே சற்று கால இடைவெளி” அடிக்கடி காணப்படும், ஆனால் “அச்சம்மிக்க நோக்குநிலையின்மையின் ஆரம்பகட்டத்தை அடுத்து “கிளர்ச்சியின் ஒழுங்கமைக்கப்பட்ட அணிதிரளின்” ஆபத்து வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இக்கிளர்ச்சி அதிசெல்வந்தர்கள் மற்றும் நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள் என்று காணப்படுபவர்களுக்கு எதிராக இருக்கும் என்றும், 1789 பிரெஞ்சுப் புரட்சியின் போது “செல்வம் படைத்த தன்முனைப்பு” நிறைந்தவர்கள் நினைவிற்கொள்ளும் விதத்தில் இலக்கு வைக்கப்பட்டது போலவே, “நம்முடைய சொந்த செல்வந்தர் குழுவினரையும்'' ஒப்பிட்டு எழுதுகிறார்.

மே 30ம் திகதி Observer ல் முன்னாள் ஆசிரியரும் இப்பொழுது பிரிட்டிஷ் பழைமைவாத-லிபரல் ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு பொதுத்துறை ஊதிய வெட்டுக்களுக்கு ஒரு ஆலோசகராக இருப்பவருமான வில் ஹட்டன், “ஐரோப்பாவின் வருங்காலம் ஆபத்தில் உள்ளது. யூரோவின் சிதைவின் சாத்தியம் ஒரு முதல்மட்ட பொருளாதார, அரசியல் பேரழிவாக அமையும். பொருளாதாரத்தில் இது ஐரோப்பாவை போட்டியிடும் நாணய மதிப்புக்குறைப்புக்கள், கடன்கள் திருப்பித் தராத நிலை, வங்கிப் பிணை எடுப்புக்கள், உறைந்துவிட்ட கடன் கொடுத்தல்கள், வணிகப் பாதுகாப்புக்கள் மற்றும் நீடித்த மந்தநிலை ஆகியவற்றிற்கு தள்ளும். அரசியலில், நம்முடைய வேற்றுமைகள் நிறைந்த கண்டத்தை ஒற்றுமையாக வைக்கும் உறுதிப்பாடு எப்படி இருந்தாலும், பழைய விரோதங்களும் சந்தேகங்களும் மேல்மட்டத்திற்கு அப்பால் இல்லாததால், அவை கரைத்துவிடும்… அதன் பின் வெளிப்படுவது 1930 களில் இருந்து ஐரோப்பிய நிலைமைக்கு அண்மித்ததாக இருக்கும். அச்சமும், மந்தநிலையும் தீய இனவெறிக்கும் தேசியவாதக் கொள்கைகளுக்கும் இலகுவான இரையாகும்.”

இதுவரை வந்துள்ளவற்றில் மிகவும் கூடுதலான தீர்க்கதரிசன எச்சரிக்கையாக என்ன வரக்கூடும் என்பது ஜேர்மனியின் சர்வதேச ஒளிபரப்பான Deutsche Welle ஆல் மே 26 அன்று கூறப்பட்டது. அதன் கட்டுரை 2008ல் உலகப் பொருளாதாரச் சரிவின் பாதிப்பு பற்றிய ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலர் பான் கி-மூன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் மற்றும் உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் ஜீலிக் ஆகியோர் கொடுத்த எச்சரிக்கைகளுடன் தொடங்குகிறது. உதாரணமாக ஸ்ட்ராஸ் கான், “பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகள் உட்பட பல நாடுகளில் சமூக அமைதியின்மை நிகழலாம்” என்று எச்சரித்திருந்தார்.

Deutsche Welle, இந்த எச்சரிக்கைகள் “மற்ற எந்த நேரத்தைக் காட்டிலும் பார்க்க தற்போதைய நிதிய நெருக்கடிக்கு நெருக்கமாக இருப்பதாகவும், 1929 நெருக்கடிக்கு பின்னர் இது மிக மோசமானது” என்று எழுதியுள்ளது.

கிரேக்கத்தில் நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டம் செய்த்தை மேற்கோளிட்டு இதே விதி “நிதிய வகையில் நலிந்துள்ள ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி” போன்ற ஐரோப்பிய அரசாங்கங்களையும் சூழலாம், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எழுச்சி பெறும் சமூக அமைதியின்மை பற்றி கவலைப் படுகின்றன” என்று அது எச்சரித்துள்ளது.

“இந்நாடுகளில் புகைந்து கொண்டிருக்கும் ஆழ்ந்த கோபம் உலகம் முழுவதும் அதே நிறுவனங்கள், அதே நபர்கள், உலக முதலாளித்துவத்தின் தோல்வி ஆகியவற்றிற்கு எதிராக கொதித்துக் கொண்டிருக்கிறது” என்று அறிக்கை தொடர்ந்து கூறியுள்ளது.

அமெரிக்கத் தேசிய உளவுத்துறையின் இயக்குனர், டெனிஸ் சி. பிளேயர் செனட் உளவுத்துறைக் குழுவிற்கு ஒரு தொடர்ந்த பொருளாதார நெருக்கடி என்பது “ஆட்சியை அச்சுறுத்தும் உறுதியற்ற தன்மையை அதிகமாக்குகிறது, இதில் அமெரிக்கா மட்டும் பாதிப்படையாது இருக்காது ” என்று எச்சரித்துள்ளதை மேற்கோளிடுகிறது.

European Laboratory of Political Anticipation எனப்படும் ஐரோப்பிய சிந்தனைக் குழுவின் தலைவர் Marie-Helene Caillol மற்றும் Trends இதழின் நிதிய, அரசியல் போக்குகள் கணிப்பாளரும், பதிப்பாளருமான Gerald Celente உடைய கருத்துக்களுடன் கட்டுரையை முடிக்கிறது

“இப்பொழுது கிரேக்கத்தில் நடைபெறுவது பொருளாதாரம் சரியும்போது உலகம் முழுவதும் பரவும்… அரசாங்கக் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளிலும் சமூக அமைதியின்மை தோன்றுவதை நாம் காண்போம். இவற்றில் வெளிப்படையாகத் தெரியும் நாடுகள் ஸ்பெயின், அயர்லாந்து, போர்த்துக்கள், இத்தாலி, ஐஸ்லாந்து, உக்ரைன், ஹங்கேரி ஆகியவை; இதைத் தொடர்ந்து இங்கிலாந்தும் அமெரிக்காவும் வரும்.” என்று Celente விளக்கியுள்ளார்.

“இந்த நெருக்கடி 1945ல் இருந்து நாம் அறிந்துள்ள உலக ஒழுங்கமைப்பின் முடிவுடன் நேரடியாகத் தொடர்புடையது-இன்னும் முன்னதாக ஐரோப்பாவின் காலனித்துவ நிகழ்வுப்போக்கு காலத்துடன் தொடர்புற்றது என்று கூடக் கூறலாம். எனவே கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவில் மையம் கொண்டிருந்த உலக கூட்டு முழுவதும் மெதுவாகச் சரிகிறது, அனைத்துவிதக் கொந்தளிப்புக்களையும் தோற்றுவிக்கிறது.” என்று Calliot கூறியுள்ளார்.

சமூக அமைதியின்மை எங்கு முடியும் என்று வினவப்பட்டதற்கு, அவர் விடையிறுத்தார்: “போர். இது அவ்வளவு எளிதானதும், கொடூரமானதும் ஆகும்.”

Calliol, Celente இருவருமே சமூக அமைதி அலைக்குப் பின்னணியில் கிளர்ச்சியூட்டுவோர் உள்ளன என்ற கூற்றை நிராகரித்தனர்.

“இந்த பிரதிபலிப்பின் பின்னணியில் எந்த அமைப்புக்களும் இல்லை-இது ஒரு பொதுஜன பிரதிபலிப்பு” என்ற Celente, மார்க்சின் மகத்தான படைப்பிற்கு அழைப்புவிடுகின்றார். “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்” என்பதின் 21ம் நூற்றாண்டுப் பதிப்புத்தான் இது. “பெரிய அளவில் இருப்பவை தோல்வி அடையக்கூடாது என்பதற்காகக் கொடுக்கப்பட்ட மகத்தான பிணை எடுப்பு பற்றியும் அதற்கு அவர்கள் விலை கொடுக்கமாறு கோரப்படுவதையும் மக்கள் நன்கு அறிவர். வரிகள் உயர்ந்தால், அதிக வேலைகள் இழக்கப்படும், இன்னும் அதிகளவிலான எதிர்ப்புக்கள் வெளிப்படும்”

இத்தகைய அறிக்கைகள் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கண்டத்தில் சமூகப் புரட்சியின் பெருகும் ஆபத்தை பற்றித் தீவிரமாக உணர்ந்துள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன. மோசமான பொருளாதார நெருக்கடியின் தவிர்க்க முடியாத விளைவு நிலைமையில் இதைத்தான் அவர்களுடைய ஆலோசகர்கள் அவருக்குக் கூறிவருகின்றனர். ஆனால் பெருவங்கிகள் மற்றும் நிறுவனங்களின் நலன்களுக்காக முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றும் அவர்களுடைய முயற்சியலேயே இது இன்னும் உறுதியாகிறது. இவ்விதத்தில் தொழிலாளர்களால் முன்பு வெற்றிகொள்ளப்பட்டிருந்த சமூகநல திட்டங்கள் மற்றும் பணி நிலைமைகளில் எஞ்சியிருப்பவை அழிக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் ஆளும் வர்க்கங்கள் பரந்துபட்ட தொழிலாள வர்க்கத்தின் போராட்ட எழுச்சிகளுக்கு பல மத்தியதர வர்க்க போலி இடது அமைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்து சோசலிச நனவை வளர்தலையும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் தடைப்படுத்த தயாரிப்பு செய்கின்றன. பிரான்ஸில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, கிரேக்கத்தில் சிரிசியா போன்றவை இவ்வாறானவையாகும். இவை அனைத்துமே பெரும் அரசாங்க அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிமுறை அறிமுகப்படுத்துவதற்குத்தான் தயாரிப்புக்களை செய்கின்றன.

தற்பொழுது ஆளும் வர்க்கம் அனுபவிக்கும் சாதகமான நிலைமை தொழிலாள வர்க்கத்திடம் தேவையான சோசலிச, புரட்சிகர முன்னோக்கு இல்லையென்பதுடன் தன் பதில்தாக்குதலை தொடக்கத் தலைமையும் இல்லாததுதான். மாறாக, தொழிலாளர்களை பிரதிபலிப்பதாக தவறாக விவரிக்கப்படுவது அனைத்தும் -எல்லாவற்றிற்கும் மேலாக தொழிற்சங்கங்கள்- பெருவணிகத்தின் ஐந்தாம் படையாகத்தான் செயல்படுகின்றன.

கிரேக்கம், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்றவற்றில் போல் இவை பல ஒருநாள் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தாலும், அல்லது பிரிட்டனின் தொழிற்சங்க காங்கிரஸ் போல் எதையும் செய்யவில்லை என்றாலும், இவை அனைத்தும் வர்க்கப்போராட்டத்தை வேண்டுமென்றே அடக்கியும், நசுக்கி வைப்பதன் மூலம் கடும் சிக்கன நடவடிக்கைகளையும் வெட்டுக்களையும் சுமத்துவதற்கான கருவியாகத்தான் செயல்படுகின்றன. தொழில்வழங்குனர்களுடனும் மற்றும் அவர்களின் முன்னாள் கூட்டணியான சமூக ஜனநாயக கட்சி அல்லது அதிபழைமைவாத அரசாங்கங்களுடனும் கையுடன் கையாக இணைந்து இயங்குகின்றன.

இறுதியில், இந்த உருவாக்கிக்கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டம், இந்த அமைப்புக்களை ஒரு பேரலைபோல் கடந்து சென்றுவிடும். உலக சோசலிச வலைத் தளம் இடைமருவு வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி திறமையுடன் கோடிட்டுக் காட்டிய முன்னாய்வைத்தான் பகிர்ந்து கொள்ளுகிறது: “மக்களுடைய நிலைநோக்கு முதலாவதாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் புறநிலை நிலைமையால்தான் நிர்ணயிக்கப்படும், இரண்டாவதாக, பழைய தொழிலாளர் அமைப்புக்களின் துரோக அரசியலால் நிர்ணயிக்கப்படும். இந்த இரண்டில் முதலாவதுதான் தீர்மானகரமானது: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவவ அமைப்புகளைவிட வலிமை மிக்கவை”

இந்த முன்னாய்வு சுயதிருப்தி அல்லது விதிவிட்ட வழி என்பதற்கும் அப்பாற்பட்டு புரட்சிகரத் தலைமையின் முக்கிய பிரச்சினையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலக நெருக்கடியின் புரட்சிகர தாக்கங்களுக்கும் தற்போதைய தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய நனவுக்கும் இடையே உள்ள இடைவெளியை மூடக்கூடிய முன்னிபந்தனையான கருவி மார்க்சிச கட்சி ஒன்றுதான். ஒரு சோசலிச மாற்றீட்டின் தேவையை உணர்பவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டிமைக்கும் முடிவை எடுக்க வேண்டும்.

Read more...

Note Book ஐ நீதிமன்றில் சமர்பிக்குமாறு Frederica Jansz இற்கு நீதிமன்று உத்தரவு.

சரணடைந்த புலிகளை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டார் என முன்னால் இராணுவத் தளபதி தெரிவித்ததாக வெளியான சர்சைக்குரிய நேர்காணலின் ஒலி-ஒளி அடங்கிய note book இனை நீதிமன்றில் சமர்பிக்குமாறு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம எழுத்தாளர் பெட்றிக்கா ஜென்ஸ் இற்கு கொழும்பு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளை சுட்டுக்கொல்லுமாறு ஜெனரல் பொன்சேகா தெரிவித்தாக வெளியான செய்தி அவசரகால சட்ட திட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்ட நேர்காணலின் மூலப்பிரதி சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் note book இல் உள்ளதாகவும் அதனை அவர் விசாரணை அதிகாரிகளுக்கு தர மறுப்பதாகவும் நீதிமன்றில் தெரியப்படுத்தியதை அடுத்தே மன்று ஜெய்ன்ஸ் ஐ எதிர்வரும் 21ம் திகதி குறிப்பிட்ட ஒலி-ஒளிப்பதிவு அடங்கிய note book உடன் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more...

ததேகூ இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு மிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 4.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்வதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்புக்கு முன்னோடியாக நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்று ள்ளது.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப் பட்டுள்ளது. தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதுடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி யைச் சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

Sunday, June 6, 2010

சவுதிஅரேபிய இளவரசர்களுக்கு அல்கொய்தா மிரட்டல்.

சவுதி அரேபிய இளவரசர்களைக் கடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய பெண் தீவிரவாதியான ஹய்லா அல்குயாசிரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியா ராணுவம் கைது செய்தது.

இந்த நிலையில், ஹய்லா அல்குயாசிரை விடுதலை செய்யாவிட்டால் சவுதி அரேபியாவின் இளவரசர்கள், மந்திரிகள், அதிகாரிகள் மற்றும் ராணுவ கமாண்டர்களை கடத்துவோம். மேலும், கைது செய்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அல் கொய்தா தீவிரவாதிகளையும் விடுவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தீவிரவாதிகளும், அவர்களது குடும்பத்தினரும் உங்களை கடத்துவார்கள் என்று அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மண்டல கமாண்டர் சயீத் அல்ஷெக்ரி அல் அரேபியா டி.வி. மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

Read more...

ஐரோப்பிய நாடுகளில் புலிகளிடையே மோதல்.

ஐரோப்பியநாடுகளில் புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. புலிகளின் உருத்ரகுமாரன் பிரிவினருக்கும் நெடியவன் பிரிவினருக்குமிடையில் இந்த மோதல் உக்கிரமடைந்து ஒருவரை யொருவர் நேரடியாகத் தாக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக உருத்ரகுமாரன் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் சிவரூபன் என்பவர் பாரிஸில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நெடியவன் குழுவைச் சேர்ந்த இருவர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரமேஷ் சிவரூபனை பாரிஸில் உள்ள இல்லத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் சிலர் வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது வீட்டுக் கருகில் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டிருக்கிறார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் அவர் பாரிஸ் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், தம்மை நெடியவன் குழுவைச் சேர்ந்தவர்களே கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில், தம்பையா கணேஷ், குப்பிளான் ரவி ஆகிய இருவரையும் பாரிஸ் பொலிஸார் கைது செய்ததாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

உருத்ரகுமாரன் பிரிவினரால் வெளியிடப் படும் ‘தாய்நிலம்’ பத்திரிகையின் ஆயிரக் கணக்கான பிரதிகளை நெடியவன் குழுவினர் கடந்த வாரம் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இரு குழுவினருக்குமிடையிலான மோதல் ஐரோப்பிய நாடெங்கும் பரவி, ஒருவரையொருவர் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கையில் கடந்த வருடம் புலிகள் இல்லாதொழிக்கப்பட் டதையடுத்து இரு பிரிவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளில் புலிகளுக்குள்ள சொத்துக்கள் கருத்து முரண்பாடுகளைக் கொள்ளாது சமமாக பகிரப்பட வேண்டுமென இரு சாராரும் கோரி வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள சட்டத்தரணி வீ. ருத்திரகுமார் நாடு கடந்த தமிbழ அரசொன்றை நிறுவும் முயற்சியில் பின்புலமாகச் செயற்படுபவரென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மலேசியாவின் அரசியல் வாதியான பினாங்கு மாநில துணை முதல்வர் பீ. இராமசாமியைத் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க வேண்டாமென்று தமிழ்நாடு பொலிஸார் இந்திய மத்திய அரசைக் கேட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இம்மாத பிற்பகுதியில் செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துகிறது. இதில் உல கெங்குமிருந்து பல்வேறு தமிழ் அறிஞர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான மலேசிய அரசியல்வாதி ராமசாமியை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாமென்று மாநில அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.


Read more...

Saturday, June 5, 2010

காசா கப்பல்கள் தொடரணி மீதான கொலைகாரத் தாக்குதலை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது

(By Jean Shaoul) காசா உதவிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதில் இறந்து போன எட்டு துருக்கியக் குடிமக்கள் மற்றும் ஒரு துருக்கிய பின்னணி அமெரிக்கக் குடிமகன் ஆகியோரின் சடலங்கள், இஸ்தான்பூலுக்கு வியாழனன்று திருப்பி அனுப்பப்பட்டன. ஒரு சீற்றம் மற்றும் உணர்வுப் பெருக்கு நிறைந்த அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களுடைய சவப்பெட்டிக்குப் பின் கூடிய நிலையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை இது தூண்டியது.

அதன் கடற் தாக்குதல் நடவடிக்கை மற்றும் குறைந்தது ஒன்பது நிராயுதபாணிகளான பயணிகளை சர்வதேச கப்பல்கள் தொடரணியில் காசாவிற்கு மிகவும் தேவைப்பட்ட உதவியைக் கொண்டுவந்தவர்களைக் கொன்றது பற்றிய உலகம் முழுவதுமான சீற்றத்தை எதிர்கொள்ளுவதில் இஸ்ரேலிய அரசாங்கம் ஆக்கிரோஷமாகத்தான் உள்ளது.

அமெரிக்காவில் பிறந்த 19 வயது பள்ளி மாணவர் பர்க்கன் டோகன் பலியானவர்களில் ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டதானது வாஷிங்டன் இஸ்ரேலின் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான சமாளிப்புக்கள் தோற்றுவிட்டது என்பதை காட்டுகிறது. நான்கு முறை தலையிலும், ஒருமுறை நெஞ்சிலும் சுடப்பட்டப் பின்னர் டோகன் இறந்ததாக தகவல்கள் குறிப்புக் காட்டியுள்ளன.

பிரதம மந்திரி பென்யமின் நெத்தன்யாகுவின் அரசாங்கம், அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் Rachel Corrie இவ்வார இறுதியில் காசாவிற்கு வரவிருப்பதின் மீது புதிய மோதல் ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளது.

இக்கப்பலில் 11 பேர் உள்ளனர். அதில் நோபல் பரிசை வென்ற Mairead Corrigan Maguire, அயர்லாந்தின் முன்னாள் ஐ.நா.தூதர் டெனிஸ் ஹாலிடே மற்றும் அயர்லாந்து, மலேசியாவில் இருந்து ஏழு சாதாரணக் குடிமக்கள் அடங்குவர். இக்கப்பல் மருத்துவக் கருவிகள், சக்கர நாற்காலிகள், பள்ளிக்குத் தேவையான அளிப்புக்கள் மற்றும் சிமென்ட் ஆகியவை உள்ளன. கடைசிப் பொருளை இஸ்ரேல் காசாவிற்குள் அனுமதிக்க மறுக்கிறது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தீய முறையில் அச்சுறுத்தியதாவது: "Rachel Corrie க்கும் நாங்கள் தயாராக இருப்போம்."

புதனன்று இரவு ஒரு தொலைக்காட்சி உரையில் நெத்தன்யாகு திங்கள் நடந்த மாவி மர்மரா மீதான கொலைகாரத் தாக்குதலை பாதுகாத்துப் பேசி, சிறிதளவு சான்றும் இல்லாமல் அது ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வருகிறது என்றார்.

அவர், கப்பல்கள் தொடரணியின் நோக்கம் காசா முற்றுகையை முறியடிக்க வேண்டும் என்பதே அன்றி உதவிப் பொருட்களைக் கொண்டுவருவது அல்ல, முற்றுகை முடிந்திருந்தால், கப்பல்கள் ஈரானில் இருந்து இஸ்ரேல், அதற்கும் அப்பால் இலக்கு கொள்ளக்கூடிய ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைக் கொண்டுவரும், மத்தியதரைக்கடல் பகுதியில் ஒரு ஈரானியத் துறைமுகத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார். "இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைத் தொடரும். எனவே கப்பல் முற்றுகையைத் தொடர்வோம், வரும் கப்பல்களை சோதிப்பதையும் தொடர்வோம் என்னும் எங்கள் கொள்கையில் உறுதியாக இருப்போம்" என்றார் அவர்.

பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக்கும் கமாண்டோத் தாக்குதலை ஆதரித்து இது ஒரு தற்காப்புச் செயல் என்ற பொய்யை மீண்டும் கூறினார். "நாங்கள் ஒன்றும் வட அமெரிக்காவிலோ, மேலை ஐரோப்பாவிலோ இல்லை, நாங்கள் மத்திய கிழக்கில், வலுவற்றவர்களுக்கு இரக்கம் காட்டாத இடத்தில் இருக்கிறோம் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும்."

இஸ்ரேலின் அறிக்கைகள் முடிவில்லாமல் செய்தி ஊடகத்தில் கிளிப்பிள்ளை போல் கூறப்படுகின்றன. ஆயினும் கப்பல்கள் தொடரணி பற்றிய இக்கூற்றுக்களில் ஒன்று கூட சான்றுபடுத்தப்பட முடியாதது ஆகும்.

கப்பல்களில் ஒரு ஆயுதம் கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை கிரேக்கத்திலும், துருக்கியிலும் அதிகாரிகளால் சோதனைக்கு உட்பட்டிருந்தன. உண்மையில் இஸ்ரேலிய அதிகாரிகள் உதவிப்பொருட்கள் காசாவிற்குச் செல்வதற்கு உடன்பட்டிருந்தனர்--சிமென்ட் மற்றும் உலோகப் பொருட்கள் மட்டும் கணிசமான விதிவிலக்குகள் ஆயின.

மாவி மர்மராவின் தளத்தில் இருந்த செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலிய கமாண்டோக்கள் கப்பலில் ஏறும் முன்னரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உறுதிபடக் கூறியுள்ளனர். பிரிட்டிஷ் செயற்பாட்டாளர் சாரா கொல்போர்ன் பிபிசி இடம் கூறினார்: "கடலில் இருந்த கப்பல்களைக் கூட நான் எண்ண முடியவில்லை. அந்த இடம் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், துப்பாக்கி வெடிச்சத்தம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அது கொடூரமானது, முற்றிலும் கொடூரமானது."

ஒரு இஸ்ரேலிய அரபு சட்டமன்ற உறுப்பினரும் மாவி மர்மரா தளத்தில் இருந்த பயணியுமான ஹனீன் ஜௌபி கருத்துப்படி, இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்கள் அக்கப்பலை சூழ்ந்தும் கமாண்டோக்கள் ஒரு ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவதற்கு முன் சுட்டுக் கொண்டிருந்தன என்றார். இது தளத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றியது. ஆயுதமற்ற அனைத்துப் பயணிகளிடம் இருந்தும் தூண்டுதலோ எதிர்ப்போ இல்லை என்று அவர் கூறினார். மேலும் இரு பயணிகள் தலையில் துப்பாக்கிச் சுட்டு காயங்களுக்கு உள்ளானார்கள். இது கொலை செய்யப்படும் நோக்கத்தை தெரிவிக்கிறது என்றும் கூறினார்.

அல்-ஜசீரா தயாரிப்பாளர் ஜமால் இஷயல் இஸ்ரேலியக் கமாண்டோக்கள் முதலில் ரப்பர் பூச்சு உலோகத் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை மற்றும் ஒலி வெடிப்புகளை பயணிகள் மீது இயக்கினர், ஆனால் ஐந்து நிமிடங்களுக்குள் உண்மையான வெடிபொருட்களைப் பயன்படுத்தினர் என்றார். "உறுதியாக உண்மையான வெடிகள் வானில் இருந்தும் கடலில் இருந்தும் வந்தன" என்று அவர் கூறினார். துருப்புக்கள் பயணிகளின் வேண்டுகோளான காயமுற்றோரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைக் கேட்கவில்லை, அதன் விளைவாக பலரும் தளத்திலேயே குருதி கொட்டி இறந்தனர் என்று இஷயல் சேர்த்துக் கொண்டார்.

காசாவின் மக்களை இழிந்த வறுமைக்குத் தள்ளியுள்ள முற்றுகையை அகற்ற வேண்டும் என்ற முறையீடுகளை டெல் அவிவ் நிராகரித்துள்ளது. மாறாக தன்னுடைய அடக்குமுறையை அது அதிகப்படுத்தும் சான்றுகள்தான் வந்துள்ளன. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் செவ்வாயன்று ஒரு சிறு பகுதியைத் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.

திங்கள் கிழமைக்கு முன்பே இஸ்ரேலுடன் கப்பல்கள் தொடரணி பற்றி வாஷிங்டன் தொடர்பு கொண்டிருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் வியாழனன்று தெரிவித்துள்ளது. அரச செயலக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரௌலியை மேற்கோளிட்டு நிர்வாகம் "பல வழிகளில் பல முறை தொடரணி பற்றி இஸ்ரேலுடன் பேசியது" என்றார்.

"நாங்கள் எச்சரிக்கை மற்றும் நிதானத்தை, எதிர்பார்க்கும் சாதாரண மக்கள், அமெரிக்க குடிமக்கள் இருப்பதை ஒட்டி முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம்" என்று கிரௌலி கூறினார். ஆயினும் கூட, இஸ்ரேலிய அரசாங்கம் தடையற்ற வன்முறையில் செயல்பட்டு ஒரு அமெரிக்கக் குடிமகனும் இறந்துவிட்டார். இஸ்ரேலின் செயல்களை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கண்டிக்க மறுத்துவிட்டார். இவை கடற் தாக்குதல் போன்றது அல்லது போர்க் குற்றம் என்பதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இஸ்ரேல் பற்றிய குறைகூறலை ஐ.நா. பாதுகாப்புக்குழுத் தீர்மானத்தில் இருந்து அகற்றியதில் வெற்றி அடைந்தபின் வாஷங்டனானது இஸ்ரேலிய அரசாங்கம் அதன் "விசாரணை" என்பதை திங்கள் தாக்குதல் குறித்து நடத்தும் என்று வலியுறுத்தி, ஒருவேளை ஒரு அமெரிக்கப் பார்வையாளர் இந்த வெள்ளைப்பூச்சில் உதவுவார் என்றும் கூறினார்.

"இஸ்ரேலிய தூதர் மைக்கேல் ஒரென் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உஜி அரட்டும் நான்கு மணி நேரம் வெள்ளை மாளிகையில் செவ்வாயன்று பேச்சுக்கள் நடத்தி, தாக்குதலில் இருந்து தோன்றும் ராஜதந்திர விளைவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதில் குவிப்புக் காட்டினார். இது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் பற்றிய கோரிக்கையும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் சமாதான முயற்சிகளையும் ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளது."

மாவி மர்மரா மீது தாக்குதல் நடத்தியதை ஈரானுக்கு எதிரான அமெரிக்க மூலோபாயத்துடன் சேர்த்துள்ளது, மற்றும் பிராந்திய அரசியலுடன் இணைத்துள்ளது, பொதுவாக இந்த வன்முறை நிகழ்விற்குப் பின்னணியில் ஆழ்ந்த உந்து சக்திகள் உள்ளன, இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் தெளிவாகக் காட்டாத ஒரு நிகழ்வு பற்றி மிருகத்தன, திமிர்பிடித்த விதத்தில் அரசாங்கம் நிதானம் இழந்து செயல்பட்டது என்பதற்கு மாறான தன்மைதான் காணப்படும்.

டெல் அவிவ் வேண்டுமென்றே திட்டமிட்ட கொலைகளைக் கடந்த திங்களன்று நடத்தி தன்னுடைய கூறப்படாத புவியியல் மூலோபாய நோக்கங்களை முன்னேற்றுவிக்க முற்பட்டது. இவற்றுள் துருக்கிக்கு அது ஒன்றும் மற்ற அனைத்து அண்டை நாடுகள் மீதும் இஸ்ரேல் நடத்தியுள்ள இராணுவத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெற்றது அல்ல என்ற எச்சரிக்கையும் அடங்கியுள்ளது;

சியோனிச அரசாங்கத்தின் மூலோபாயங்கள் பற்றி எவ்விதத் துல்லிய கணிப்புக்கள் இருந்தாலும், இது ஒரு பொறுப்பற்ற கொள்கையாகும். இது பிராந்தியம் முழுவதையும் பேரழிவு தரும் போருக்கு இழக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்குள், கப்பல்கள் தொடரணி மீது இராணுவத் தாக்குதல் பற்றி செய்திகள் கிடைத்தவுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ் மற்றும் ஜேருசலத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுடைய பதாகைகள், "காசா முற்றுகையைக் கைவிடு", "ஆர்ப்பாட்டக்காரர்கள் உடல்கள் மீது ஒன்றும் பாதுகாப்பு கட்டமைக்கப்படுவதில்லை", "போர்க் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்துக" மற்றும் "இராணுவத்தை நிறுத்து, தொடரணியை அல்ல" என்று இருந்தன.

அரபு மாணவர் சங்கங்கள் உட்பட ஹைபா, ஜெருசேலம், பீர் ஷேவா, டெல் அவிவ் ஆகிய இடத்தில் உள்ள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில செயற்பாட்டாளர்கள் அஷ்டோட் துறைமுகத்தில், தொடரணிக் கப்பல்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட பயணிகள் எடுத்துச்செல்லப்பட்ட இடத்திற்குள் நுழைய முயன்று தோல்வியுற்றனர். வெள்ளியன்று மாலை ஜெருசேலத்தில் ஒரு எதிர்ப்பு விழிப்பு நிலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல அரேபிய சிறுநகரங்களிலும் இஸ்ரேலுக்குள் இருக்கும் கிராமங்களிலும் சீற்றமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வெடித்தெழுந்தனர். அரபு உயர்மட்ட கண்காணிப்புக் குழு ஒரு பொது வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை இஸ்ரேலிய அரேபியர் படுகொலைக்கு எதிராக நிகழ்த்த வேண்டும் என்று கோரியதுடன் உதவிக்கு வந்த கப்பல்கள் தொடரணியின் பிரதிநிதிகள் காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவும் அழைப்பு விடுத்தது.

Read more...

ஜிரிவி க்கு ஆப்பு : நெடியவன் குழுவினரால் புதிய ரிவி சனல் சுவிஸில் ஆரம்பம்.

புலிகளின் புலம் பெயர் கட்டமைப்பில் உருவாகியுள்ள பிளவுகளின் விளைவாக ஜிரிவி தொலைக்காட்சிக்கு போட்டியாக நெடியவன் தரப்பினரால் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பமாகின்றது. இத்தொலைக்காட்சி ரிவி 24 எனும் பெயரில் சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து ஆரம்பமாவதாக தெரியவருகின்றது.

இத்தொலைக்காட்சி உருவாவது ஜிரிவி க்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு சொந்தமான ஜிரிவி தமது வியாபாரத்தினை விஸ்தரித்துக் கொள்வதற்காக புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக தம்மைக் காட்டிக் கொண்டதுடன் புலிகளின் சகல அராஜகங்களையும் நியாயப்படுத்தி வந்திருந்ததுடன் தொலைக்காட்சியின் வருமானத்தின் பகுதி புலிகளியக்கத்திற்கு வழங்கப்படுவதாகவும் ஒர் தோற்றத்தை காட்டி வந்தனர்.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் புதிய தலைவராக தன்னை அறிமுகம் செய்துகொண்ட கே.பி சார்பானதோர் நிலைப்பாட்டை எடுத்திருந்த ஜிரிவி யுடன் கே.பி யுடன் பதவிப்போட்டியில் நிற்கும் நெடியவன் முரண்பட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜிரிவி யை கைப்பற்றுவதற்கு பல குறுக்குவழிகளைத் தேடிய நெடியவன் அவை கைகூடாத நிவையில் தற்போது புதியதோர் ரிவி யை தொடங்குகின்றார்.

இத்தொலைக்காட்சியின் உருவாக்கத்தை சகிக்கமுடியாத ஜிரிவி யினர் மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தின் இறுதி யுத்தத்தில் நடந்தவை, ராம் எங்கே? கே.பி சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டாரா? புலிகளின் பணம் எங்கே சென்றது என்ற விடயங்கை தொடர்சியாக அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

Read more...

ஐ.நா.விசாரணையாளர் குழுத் தலைவராக ஹோகண நியமனம்,

இஸ்ரேலின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்கள் குழுத் தலைவராக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித ஹோகண நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன மற்றும் ஏனைய அராபிய மக்களின் மனித உரிமைகளை இஸ்ரேல் மீறிச் செயற்படுகின்றதைக் குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை மூன்று பேர் கொண்ட சர்வதேச விசாரணையாளர் குழுவை நியமனம் செய்துள்ளது.

இக்குழுவின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. பாலித கோஹண தலைமையிலான விசாரணையாளர்கள் குழு எகிப்து, ஜோர்தான்,சிரியா ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் நேரில் விஜயம் செய்து விசாரணைகளை நடத்தும் என்றும் ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

Read more...

ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம் (World Environment Day) - புன்னியாமீன்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2009 ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழல்லைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. இதில் சுற்றுச் சூழலுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பினைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. உலகமயமாக்கல் என்ற போர்வையின் கீழ் சூழல் மாசடையச் செய்வதிலும், அதிக அளவு இயற்கை வளங்களை சர்வ நாசஞ் செய்வதிலும் ஈடுபடுவது மனிதனே! என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.

சூழல் மாசடைதலை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். முதலாவது வளிமண்டலம் மாசடைதல், இரண்டாவதாக நிலம் மாசடைதல், அடுத்தாக நீர் மாசுறுதல்.

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.

மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.

புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு , உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை

ENUP இந் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி முஸ்தபா கே. டோல்பா அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதன் மூலம் இன்றைய வறுமை, சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை இலட்சக்கணக்கான மக்களின் சுற்றாடல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.. எனவே சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த 1974-ம் ஆண்டு முதல் ஜூன் 5ம் திகதியை பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி கொண்டாடியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

1974- ஒரே ஒரு பூமி
1975- மனித வாழ்விடம்
1976- தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம்
1977- ஓசோன் படலம், சுற்றுச் சூழல் முக்கியத்துவம் நிலம் இழப்பு மற்றும் மண் சீர்கேடு
1978- இழப்பில்லாமல் வளர்ச்சி
1979- நம் குழந்தைகளுக்கு ஒரே எதிர்காலம் இழப்பில்லாமல் வளர்ச்சி
1980- பத்தாண்டுக்கான புதிய சவால் இழப்பில்லாமல் வளர்ச்சி
1981- நிலத்தடி நீர் மனித உணவு பழக்கத்தில் நச்சு வேதிப் பொருட்கள்
1982- பத்தாண்டுகளுக்கு பிறகு ஸ்டாக்ஹோம் (சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்)
1983- நச்சுக் கழிவு நிர்வாகம் மற்றும் அகற்றுதல் இரசாயன மழை மற்றும் ஆற்றல்
1984- பாலைவன மேலாண்மை
1985- இளமை மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல்
1986- அமைதிக்கு ஒரு மரம்
1987- சுற்றுச் சுழல் மற்றும் வசிப்பிடம் ஒரு கூரையையும் தாண்டி
1988- சுற்றுச் சூழல் முதலெனில் மேம்பாடு தழைக்கும்
1989- புவி வெப்பமயமாதல், புவி எச்சரிக்கை
1990- குழந்தைகள் மற்றும் சுற்றுச் சூழல்
1991- வானிலை மாற்றம். தேவை உலகளாவிய ஒற்றுமை
1992- ஒரே பூமி, பராமரிப்பு மற்றும் பங்களிப்பு
1993- ஏழ்மை மற்றும் சுற்றுச் சூழல் - வளையத்தை உடைத்தல்
1994- ஒரு பூமி, ஒரு குடும்பம்
1995- மக்களாகிய நாம் : உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்
1996- நம் பூமி, நம் வசிப்பிடம், நம் வீடு
1997 - பூமியில் வாழ்க்கைக்கு
1998- பூமியில் வாழ்க்கைக்காக கடல்களை பாதுகாப்போம்
1999- நம் பூமி - நம் எதிர்காலம், காப்போம்
2000- சுற்றுச்சூழல் நூற்றாண்டு - செயல்படும் நேரம்
2001- வாழ்க்கையை இணைப்போம்
2002- பூமிக்கு ஒரு வாய்ப்பு
2003- தண்ணீர் - அதற்காக இரண்டு மில்லியன் மக்கள் இறப்பு
2004- தேவை! கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் - இறப்பு அல்லது வாழ்வு?
2005- பசுமை நகரங்கள் - கிரகத்திற்காக திட்டமிடுவோம்
2006- பாலைவனங்கள் மற்றும் பாலைவனமயமாக்கல் - தரிசு நிலங்களை கைவிடாதீர்
2007- உருகும் பனி - ஒரு சுடான விஷயம்
2008- பழக்கத்தை உதருவோம் - குறைந்த கார்பன் பொருளாரத்தை நோக்கி
2009- 'வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்'
உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 1987ஆம் ஆண்டு முதல் முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.

1987 நைரோபி கென்யா
1988 பாங்கொக் தாய்லாந்து
1989 பிரசெல்ஸ் பெல்ஜியம்
1990 மெக்சிகோ நகரம் மெக்சிகோ
1991 ஸ்ட்டொக்ஹோம் சுவீடன்
1992 ரியோ டி ஜெனரோ பிரேசில்
1993 பீஜிங் சீனா
1994 இலண்டன் ஐக்கிய இராச்சியம்
1995 பிரிட்டோரியா தென்னாபிரிக்கா
1996 இஸ்தான்புல் துருக்கி
1997 சியோல் கொரியக் குடியரசு
1998 மாஸ்கோ ரஷ்யக் கூட்டிணைப்பு
1999 டோக்கியோ ஜப்பான்
2000 அடெலைட் ஆஸ்திரேலியா
2001 தொரினோ/ஹவானா இத்தாலி/கியூபா
2002 ஷென்சென் சீனா
2003 பெய்ரூத் லெபனான்
2004 பார்சிலோனா ஸ்பெயின்
2005 சான் பிரான்சிஸ்கோ ஐக்கிய அமெரிக்கா
2006 அல்ஜீரீஸ் அல்ஜீரியா
2009 டோரொம்ஸ்சோ நோர்வே
2008 வெலிங்டன் நியூசிலாந்து
2009 மெக்சிக்கோ

மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர் கெள்ளும் சவால்களிளொன்று சுற்றுச் சூழல் மாசடைதலாகும். இந்நடவடிக்கையானது மக்களால் தன்னிச்சையாக ஏற்படுத்தப்படுகின்ற அபாயகமரான செயற்பாடாகும் என்றும் கூறலாம். இதனால் சர்வதேசமும் அதனைச் சூழவுள்ள பிரபஞ்சமும் அதன் இயற்கை சமநிலையிலிருந்து மாற்ற மடைகின்றது. எனவே இவ்வையகத்தே வாழுகின்ற அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதும் இச்சுற்றாடல் மாசடைதல் என்பது வெள்ளிடைமலை. ஏலவே இதுபற்றிய விழிப்புணர்வை அனைவர்களுக்கும் உண்டாக்க வேண்டிய கடப்பாடு புத்திஜீவிகளையே சாரும்.

Read more...

Friday, June 4, 2010

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: வட கொரியா எச்சரிக்கை

தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று, தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது.அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது. ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.

வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.

Read more...

சுவிஸிலிருந்து வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்த திட்டம்.

சுவிற்சர்லாந்து சமூக நலத்திட்டங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட சகலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சி ஒன்றினை சுவிஸ் மக்கள் கட்சியினர் மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்த நாட்டின் சட்ட முறைகளில் மாற்றம் ஒன்று செய்யப்படவேண்டுமானல் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்கள் ஆணையை பெறவேண்டும். ஆதின் அடிப்படையில் வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்தும் திட்டம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியிலான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

ஜனாதிபதியால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் வட மாகா ஆளுநார் ஜீ.ஏ. சந்திரசிறியும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக கைத்தொழில் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் நியமிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா நாடளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more...

சீனாவை உடைக்க இந்தியா முயற்சி

இலங்கை மீது சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தை உடைப்பதற்கு இந்தியா கங்கணம் கட்டி உடனடியாக செயலில் இறங்கி உள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. அச்செய்திகள் தெரிவிப்பவை வருமாறு:

”சீனா இலங்கையின் இராணுவ பொருளாதார, அரசியல் விவகாரங்களில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வருகின்றது. சீனா அளவுக்கு இலங்கை விவகாரங்களில் இந்தியாவால் ஈடுபட முடியாமல் போய் விட்டது. இந்நிலையிலேயே இலங்கை விவாரங்களில் காத்திரமான வகையில் பங்கெடுப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா முழு மூச்சாக இறங்கி உள்ளது.

இதன் முதற்கட்டமாக சீபா என்கிற வர்த்தக உடன்படிக்கையை இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பாரதத் தரப்பு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இந்த உத்தேச உடன்படிக்கையின் படி இந்தியர்கள் கணிசமான அளவில் இலகுவாக இலங்கையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும். குறிப்பாக ஆசிரியர்கள், சட்டத்தரணிகள்,வைத்தியர்கள் போன்ற தொழில் சார் நிபுணர்கள் இலங்கையில் வேலை பார்க்க முடியும். இதனால் இவர்களின் நலன்களைப் பேணுதல் என்கிற போர்வையிலும் இலங்கையின் விவகாரங்களில் பெரிதும் தலையிட இந்தியாவுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. ”

Read more...

வ‌ங்கதேச‌த்தி‌ல் ‌‌தீ ‌விப‌த்து: 104 பே‌ர் ப‌லி

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 104 பேர் பலியாகினர். 50‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாயமடைந்துள்ளனர். வங்கதேசம், பழைய டாக்கா, நஜீராபஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்‌பி‌ல் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறிய‌தி‌ல் தீ அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை ஒன்றில் பரவியது.

‌தொழிற்சாலையில் ரசாயனப் ‌பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவிய‌தி‌ல் 104 பே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லியானா‌ர்க‌ள். 50‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாயங்களு‌டன் டா‌க்கா மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதி‌ல் பல பே‌ரி‌ன் ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக இரு‌ப்பதா‌ல் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இத‌னிடையே பிரதமர் ஷேக் ஹசீனா , சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Read more...

பள்ளி வாசல் -வம்சிகன்

இரண்டாயிரத்திப்பத்தாம் ஆண்டு
களித்தல் அடையாளம்
ஆயிரத்தியெழுனூற்றிப்பதின்மூன்றாம் ஆண்டு
சமன் அடையாளம்
இருனூற்றித்தொண்ணூற்றியேழு ஆண்டுகள்.

இத்தனை ஆண்டுகள்
பழமை தோய்ந்த
பள்ளிவாசலின்
சொந்தக்காரச் சமூகமொன்றைத்
துரத்தியடித்த
சமூகத்தின்
பேனாவொன்றின்
முனைக்கசிவு
இது.

தொல்பொருள்
அகழ்ந்து
பெருமை பேசும்
தமிழர்களே!
தலை குனியுங்கள்.
மனிதராகி நிமிருங்கள்.

இதயம்
இரத்த ஓட்டத்திற்கான
இயந்திரம் மட்டுமே.

மூளையிலிருந்து மட்டுமே
பிறக்கட்டும்
புதிய நதிகள்.

திரும்பியுலவவரும்
அத்தனை பிறை நிலவுகளும்
முகம் பார்க்கட்டும்
ஆனந்தமாய்.

நதியில்
நீந்தும் நிலவு
அழகானது.

இனி
நமது இலங்கைத் தேசத்தில்
இருக்கவேண்டியவை
பெருக்கல் அடையாளங்களும்
சமன் அடையாளங்களும்
அதற்குமப்பால்
பெறுபேறுகளும் மட்டுமே.

எல்லாம் வல்ல
அல்லாவே!
மன்னிப்பாயாக.
எம்பெருமானே!
இரட்சிப்பாயாக.

தேவபிதாவே!
எல்லோரும் இன்புற்றிருக்க.

நன்றியுடன் வம்சிகன். VII

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com