Sunday, November 15, 2009

மத்திய வங்கி குண்டு வெடிப்பில் 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நபர் கைது


மத்திய வங்கி குண்டுவவெடிப்புடன் சம்பந்தப்பட்டிருந்த பிரதான சந்தேச நபர்களில் ஒருவரான 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள செல்லத்தம்பி நவரத்தினம் என்பவர் செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 1996 ம் ஆண்டு மத்திய வங்கி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் இவர் வவுனியாவில் இருந்து கொழும்புக்கு குறிப்பிட்ட தாக்குதலுக்கு தேவையான வெடி பொருட்களை கொண்டுவந்திருந்தார் என நிருபிக்கப்பட்டதுடன் அவருக்கு நீதி மன்று 200 வருட கடூளியச் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.

தாக்குதல் இடம்பெற்றதில் இருந்து பொலிஸாரால் தேடப்பட்டுவந்த அவர் கடந்த 13 வருடங்களாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வசித்து வந்திருந்தார். ஆனால் வன்னிப் பிரதேசம் விடுவிக்கப்பட்டதில் இருந்து தேடப்பட்டு வந்த அவர் சுமார் ஆறு மாதங்களின் பின்னர் நேற்று வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்து விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்ட்டதாக தெரியவருகின்றது.

Read more...

நுகர்மூடி (மாஸ்க்) அணியும் காலம் இலங்கையிலும் வந்து விட்டது. - புன்னியாமீன்

காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.

நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் ஏ/ எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு (swine flu / swine influenza) வேகமாக பரவி வருகின்றது.

இதுவரை பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ் இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 நோய்த்தாக்கத்தின் காரணமாக கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர் நவம்பர் 04, 2009ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அதே நேரம் இந்நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழந்தவர் வைத்தியத் தம்பதியினரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைவிட மாத்தறையிலும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கடந்த நவம்பர் 10. 2009 உயிரிழந்துள்ளார்.

கண்டி மரணம் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லையென்று சில வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் உயிரிழந்தவர் ஏற்கனவே முள்ளந்தண்டு மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை ஏ/ எச்1என்1 வைரஸ் தாக்கியிருக்கின்றது என இந்த வைத்திய அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர். எப்படியிருப்பினும் ஏ/ எச்1என்1 வைரஸ் காரணமாக இலங்கையில் ஒரு மரணம் சம்பவித்து விட்டது. எனவே இது விடயமாக பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியமும், இந்நோய் பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு ஊடகங்களும், அரசாங்கமும் பிரயத்தனம் எடுக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு விட்டது. ஏனெனில், ஒரு தொற்று நோயோ அல்லது பயங்கர நோய்களோ பரவி வரும் போது அந்நோய் பற்றிய சரியானதும், பூரணமானதுமான விளக்கங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தினதும், சுகாதாரத் திணைக்களத்தினதும் மேலும் ஊடகங்களினதும் கடமையாகின்றது.

தற்போது வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ் உலகிற்குப் புதிது. 2009 ஏப்ரல் காலகட்டத்தில் மெக்ஸிக்கோவிலிருந்து இந்த வைரஸ் உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இலங்கையில் பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நோயாளி ஜூன் 16, 2009 ம் திகதி இனங்காணப்பட்டார். எட்டு வயது சிறுவனான இவர் அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தவர். சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையின்போது இச்சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியொருவரும் ஏ/ எச்1என்1 வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததையடுத்து அச்சிறுமியும் அவருடைய தாயாரும் சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டனர்.

சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையொன்றின் பிரகாரம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சவூதி அரேபியா மற்றும் மேலைத்தேய நாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 15, 2009 திகதிப்படி இலங்கையில் 140 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத் திணைக்கள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

எமது அண்டைய நாடான இந்தியாவிலும் இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஜூலை 3, 2009 இல் உயிரிழந்தார். இவரும் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவராவார். நவம்பர் 4, 2009 அறிக்கைப்படி இந்தியாவில் 477 பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர். 14, 049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அக்டோபர் மாத இறுதியில் அமெரிக்காவில் பன்றிக் காய்ச்சலினால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை ஜனாதிபதி பராக் ஒபாமா பிரகடனப்படுத்தியுள்ளார். தேசிய அவசர நிலையின் கீழ் பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். நவம்பர் 1, 2009 வரை உலகம் முழுவதும் வேகமாகப் பரவி 5712 பேரின் உயிர்களைப் பறித்துள்ள பன்றிக் காய்ச்சல் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது.

ஜூன் 11, 2009 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது. ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் கருதுகின்றனர்.

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?


ஸ்வைன் இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கும் / கோழிகளுக்கும் (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. ஃப்ளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் இன்புளுயன்சா பறவைகளிலும், முலையூட்டிகளிலும் காணப்படும் ஒருவகைத் தொற்று நோய் ஆகும். இது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.என்.ஏ வைரஸினால் (virus) உண்டாகிறது. நோயுற்ற முலையூட்டிகள் இருமும் போதும் தும்மும் போதும் காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால் பிற முலையூட்டிகளில் தொற்றிக் கொள்கின்றன. இவ்வாறே இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவக்குத் தொற்றுகிறது. நோயுற்ற பறவைகளின் எச்சங்களில் இருந்தும் தொற்று ஏற்படும். எச்சில், மூக்குச் சளி, மலம், குருதி என்பவற்றூடாகவும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏ/ எச்1.என்1 இன்புளுயன்சா சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பதும் ஒரு ஆபத்தான நோயாகும். இந்நோய் இன்புளுயன்சா A, இன்புளுயன்சா B, மற்றும் இன்புளுயன்சா C என்னும் மூன்று வகையான வைரஸ்களினால் ஏற்படுகிறது. இதில் இன்புளுயன்சா A யினால் மிக அதிகமான அளவிலும், இன்புளுயன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது.

இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்றக் கூடியவை. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இவ்வைரஸ் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது..

பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகை வைரஸானது 1918இல் உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிய 'எசுப்பானிய ஃப்ளூ" எனும் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'எசுப்பானிய ஃப்ளூ" காரணமாக ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய ஏ/ எச்1என்1 வைரஸ் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகை வைரஸின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுருக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது.

பன்றிகளுக்கு வருகின்ற மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதருக்கு தொற்றத் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில், இந்நோய்க்கு ஆளான மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு இது தொற்றவில்லை. எனவே நோய் பரவும் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மெக்ஸிகோவில் பரவிய எச்1என்1 வைரஸ் மனிதரிடமிருந்து பிற மனிதருக்கு தொற்றி மிகவிரைவாக நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை "மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்

பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் பொதுவான சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அதாவது,
தொடர்ந்த தலை வலி, குளிருதல், நடுங்குதல் விறைப்பு, தசைநார் வலி,
இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் / தொண்டை அழற்சி/ தும்மல் / பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
தலை சுற்றல் / மயக்கம்
உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
இடைவிடாத காய்ச்சல் (100.o F க்கு மேல்),
வயிற்று போக்கு, குமட்டல் வாந்தி எடுத்தல்

குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றியிருந்தால் தொடர்ந்த காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல், மூச்சு விட சிரமப்படல், உடல் தோல் ஒரு வித நீல நிறமாக மாறுதல். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்), தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருத்தல், அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது வழமைப்போல் இல்லாமல் சோர்ந்து இருத்தல், தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல், தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படல் போன்ற காரணிகளை வைத்து இனங்காணலாம்.

நோய் தடுப்பு முறை

நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி (மாஸ்க்) அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்வது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் அருகாமையில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்நிலையில் சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி என கனடா நலத்துறை விபர மடலில் தெரிவிக்கப்பட்டிருந்தது கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும். அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மென்தாள் (டிசு), அல்லது கைக்குட்டை கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.

சளிக்காய்ச்சல் நுண்ணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது. நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேசை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், பழம்- கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல், நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம். நன்கு ஒய்வெடுக்கவும், உடற் பயிற்சி செய்யவும், பானங்கள், நிறையப் பருகவும், சத்துணவு வகைகளை உண்ணவும். இந்த நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பான அவதானங்கள்.

பன்றிக் காய்ச்சல் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏனைய காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், "மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல் எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை. அதேவேளை, வயிற்றோட்டம் ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது.

நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் சளிகோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாகும். உச்ச நிலையில் சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயவங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகலாம்.

இது மட்டுமன்றி ஆஸ்மா போன்ற சுவாச மண்டல நோய்கள், HIV மற்றும் நீரிழிவு முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.

உலக சுகாதார நிறுவன அறிக்கைகளை விரிவாக ஆராயும் போது பன்றிக் காய்ச்சல் எனும் கொள்ளை நோய் ஒருசில நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்சினையில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.. இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை. தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும். மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய மருத்துவமனைகள், பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது.

நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ நிறுவனங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும். பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை வைத்திய நிலையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும். பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறை:

பன்றி காய்ச்சல் சிகிச்சை குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்' / "oselitamivir (Tamiflu (r)" 'ஜானமிவிர்' "zanamivir (Reienza (r) ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம். இந்த மருந்துகள் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்படுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) ஆகிய மருந்து வகைகள் சிகிச்சைக்கு உதவுகின்றன. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாகவும் கூறப்படுகின்றது. நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்யக்கூடாது.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

oselitamivir (Tamiflu (r))" டா‌மிபுளு மாத்திரைகளை முறையின்றி பயன்படுத்துவது ஆபத்தானதாகும். பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் அ‌றிவுறு‌த்த‌ல் இ‌‌ல்லாம‌ல், முறையின்றி உட்கொண்டால் மோசமான ‌பி‌ன் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பன்றிக் காய்ச்சலுக்கான டாமிபுளு மாத்திரைகளை, பொதும‌க்க‌ள், மரு‌த்துவ‌ர்க‌ள் ஆலோசனையின்றி பயன்படுத்துவதாகவும், முறைப்படி ஐந்து நாட்கள் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்தி விடுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்துக்கு முறைப்பாடுகள் வந்ததையடுத்து மேற்குறிப்பிட்ட கருத்தினை வெளியிட்டிருந்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் கட்டுப்பாடு மையத்தின் நிபுணர்கள் கூறுகை‌யி‌ல், "டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மரு‌த்துவ‌ர்க‌ள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். எனவே, பொதும‌க்க‌ள் யாரு‌ம், சாதாரண கா‌ய்‌ச்சலு‌க்காகவோ, ச‌ளி‌க்காகவோ மரு‌த்துவ ப‌ரிசோதனை இ‌ன்‌றி டா‌‌மி புளு மா‌த்‌திரைகளை‌ப் உட்கொள்ள வேண்டாம் எனவும் உட‌ல் நல‌ப் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டா‌ல் உ‌ரிய மரு‌‌த்துவரை அணு‌கி, அவரது ப‌ரி‌ந்துரை‌யி‌ன் படி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலு‌ம், ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் முட‌ங்‌கி இரு‌க்காம‌ல், தகு‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் உடனடியாக ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று குணமடையலா‌ம். ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் நோ‌ய்‌க்கு உடனடியாக உ‌ரிய ‌‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டா‌ல் ‌நி‌ச்சயமாக பூரண குணமடையலா‌ம். ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ஒருவரு‌க்கு ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை‌த் தடு‌க்க நாமு‌ம் ந‌ம்மை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். து‌ம்‌மிய‌ப் ‌பிறகோ, இரு‌‌மிய‌ப் ‌பிறகோ நமது கைகளை சு‌த்தமாக கழுவ வே‌ண்டு‌ம். வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை, கா‌ல்களை ந‌ன்கு கழு‌வி, ‌பி‌ன்ன‌ர் முக‌த்தையு‌ம் கழுவுவதை பழக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும். தன்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள். நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Read more...

Saturday, November 14, 2009

‘புலிகள் மீள தலையெடுப்பதைத் தடுக்க சர். வலையமைப்பை சிதறடிக்க வேண்டும்’

பொருளாதாரம், சமூக, கலாசார விழுமியங்கள் போன்றவற்றில் இழந்த வாய்ப்புகளை மீளப் பெறுவதற்கான சூழலைத் தோற்றுவிப்பதன் மூலமே, புலிகளுக்கு எதிரான போராட்டத்தின் முழுமையான வெற்றியை அடைய முடியுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச ரீதியாக அவர்களுக்கு ஆதரவான பாரிய வலையமைப்பு உள்ளது. புலிகள் மீளத் தலையெடுப்பதைத் தடுக்க வேண்டுமாயின் இந்த சர்வதேச வலையமைப்பையும் சிதறடிக்க வேண்டுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் ஸ்தாபகர் கேர்ணல் ஹென்றி ஸ்ரீல் ஒல்கட் நினைவுச் சொற்பொழிவாற்று கையிலேயே பாதுகாப்புச் செயலா ளர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அரங்கில் நேற்று மாலை நடை பெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செய லாளர் மேலும் உரையாற்றுகையில்,

இதுவரை நாங்கள் அடைந்த வீழ்ச்சிக்குக் காரணமான அதீத அனுகூல சிந்தனைப் பொறிக்குள் விழாமலும், குறுகிய பகைமையைப் பாராட்டாமலும், முரண்பாட்டு அரசியலில் ஈடுபடாமலும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து சிறந்த எதிர்கால த்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இலங்கையை சகல விதமான எதிர்கால அச்சுறுத்தல்களிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு நாடாக உறுதிப்படுத்துவதே எமக்குள்ள சவால்களாகும்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, பயங்கரவாத அழிவின் மூலம் கிடைத்த வாய்ப்பினை நாம் பயன்படுத்த வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்கேற்ற பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண் டும்.

நாட்டில் பிரிவினைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் முக்கிய சவாலாக உள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

Read more...

மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய சேவையில் இணைகின்றார்.

புதையல் தோண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் கிழக்கு மாகாண இராணுவத் தளபதியும் கிழக்கு மீட்பு போரின் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பாராக்கிரம பன்னிப்பிட்டிய கடந்த வியாளக்கிழமை மீண்டும் இராணுவச் சேவையில் இணைந்து கொண்டுள்ளார்.

சட்டவிரோதமாக புதையல் தோண்டினார், இராணுவ வாகனங்களை தவறான தேவைகளுக்காக பயன்படுத்தினார் என பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தபோதும், நீதிமன்றம் சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து அவரை விடுவித்துள்ளது.

இவர் முப்படைகளின் பிரதான அதிகாரியாக நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருவதுடன், தான் அவ்வாறு நியமிக்கப்படும் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விற்கு தகுந்த பாடம் கற்பிக்க உள்ளதாக அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.


Read more...

ராம் கைது செய்யப்பட்டார். நகுலன் தலைமறைவு.

புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியும் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்தவுடன் அவ்வியக்கத்தின் தலைமையை ஏற்று நடாத்துவார் என புலம்பெயர் புலிகளால் எதிர்பார்க்கப்பட்ட கேணல். ராம் மின்னேரிய முகாமில் இருந்து தப்பியோடி 5 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

அம்பாறை கஞ்சிகுறிச்சாறு, புளுக்குணாவ காட்டுப்பகுதியில் தப்பியிருந்த ராம், நகுலன் தலைமையிலான குழுவினர் கடந்த யூலை மாதம் நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். சரணடைந்த இவர்களை மிகவும் இரகசியமாக வைத்து விசாரணை செய்த புலனாய்வுப் பிரிவினர் இவர்களின் உதவியுடன் புலிகள் தொடர்பான மிக முக்கியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மின்னேரிய இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ராம் தலைமையிலான குழுவினை சேர்ந்த ஐவர் இம்மாதம் 5 ம் திகதி (NOV 05) முகாமில் இருந்து தப்பி ஓடியுள்ளனர், தப்பியோடிய இவர்களை தேடி காடுகளை சுற்றி வளைத்த படையினரால் 3 நாட்களாகியும் அவர்கள் தொடர்பான எவ்வித தடயங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இந்நிலையில் பிரதேச மக்களின் உதவியை நாடிய பாதுகாப்புப் படையினர் தப்பியோடியோரது புகைப்படங்களை மக்களுக்கு வினியோகித்து தேடுதலுக்கா மக்களையும் அழைத்துக் கொண்டு காடுகளுள் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்களின் உதவியுடன் காடுகளுக்குள் படையினர் சென்ற போது, மின்னேரிய ஆற்றிற்கு 6 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் காணப்படும் கிரித்தலஆறு எனப்படும் ஆற்றுக்கு ஆப்பால் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதில் உள்ள பாரிய மரம் ஒன்றின் கிளை ஒன்று அசைந்துள்ளது. அப்பகுதில் உள்ள மரங்களில் ஆபத்து விளைவிக்க கூடிய மிருகங்கள் காணப்படுகின்றது. அதன் காரணமாக அச்சமடைந்த சிப்பாய் ஒருவர் கல்லொன்றை எடுத்து மரத்தை நோக்கி எறிய முற்பட்டபோது, சேர் வெடிதியன்ட எப்பா என சொல்லிக் கொண்டு இறங்கிய கேணல் ராம் 09ம் திகதி 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். ராமுடன் தப்பியோடிய மேலும் ஒருவர் அப்பிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட்டதுடன், நகுலன் மற்றும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

அப்பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தப்பியோடியோரை தேடும் நடவடிக்கை முடிவடைந்துள்ளது. ஆனால் நகுலன் இதுவரை பிடிபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகுலன் பிடிபட்டு அவரது கதை முடிந்துவிட்டதாக அல்லது அவர் உண்மையிலேயே தப்பி விட்டாரா என்பது தொடர்ந்தும் சந்தேகமாகவே உள்ளது.

ராம் தப்பியோடியதில் இருந்து அவரது தலைவிதி மாறியுள்ளது என்பது மட்டும் உண்மை. இத்தனை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த குழுவினருக்கு ஈற்றில் என்ன நடந்திருக்கும் என்பது யாவராலும் ஊகித்துக்கொள்ள முடியும். ஆனால் அவர் தப்பியோடியபோது, அவருடைய படம் பிரதேசவாசிகளுக்கு வினியோகிக்கப்பட்டதுடன் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியும் அம்பலத்திற்கு வருகின்றது. ஏனவே அவரது விதியை நீதிமன்றுதான் தீர்மானிக்க முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

ராம் குழுவினரிடமிருந்து கிழக்கு மாகாண புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளதுடன், சகலவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டள்ளதாக நம்பப்படுகின்றது. அதே நேரம் ராமின் தொலைபேசியில் காணப்பட்ட கே.பி யின் சற்லைட் தொலைபேசியின் இலக்கத்தின் உதவியுடனேயே கே.பி் கைது செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

பிரதேச சபையின் செயற்பாட்டில் மக்கள் அதிருப்தி.

குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர்.
திருக்கோவில் பிரதேச சபையின் செயற்பாட்டில் பிரதேச மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆகக் குறைந்துது பிரதேசத்தில் உள்ள தெருக்கள், மற்றும் வைத்தியாசாலைச் சூழல் என்பன கூட சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் மிகவும் துர்நாற்றம் வீசுவதுடன் பல தொற்று நோய்களும் உருவாகி வருகின்றது. இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கூறப்பட்டும் நடவடிக்கைள் ஏதும் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே இவற்றை இலகுவாக உணர்த்தும் நோக்குடன் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட தாதிமார்கள் சிற்றூளியர்கள் அனைவரும் வைத்தியசாலைச் சுற்றாடலைச் சுத்தம் செய்து குப்பை கூழங்களை அள்ளிக்கொண்டு கிழக்கு மகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா அவர்களின் காரியாலயத்துக்கு முன்பால் கொட்டி இருப்பதை படத்தில் காணலாம்.



HNB யின் 183 வது கிளை திருக்கோயிலில் திறந்து வைக்கப்பட்டது.
ஹற்றன் நஷனல் வங்கியின் 183 அவது கிளை அண்மையில் திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி கிருஷhந்தி தம்பையா மற்றும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



திருக்கோயில் நிருபர்.

Read more...

ஆட்கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவர் வெள்ளவத்தையில் கைது.

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த இரு வெளிநாட்டவர்களையும் மற்றும் இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்றையும் வெள்ளவத்தை ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாக நேர்முகப்பரீட்சை ஒன்றை நாடத்திக் கொண்டிருக்கும்போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்த 31 கடவுச்சீட்டுக்களும் பல போலி ஆவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் காணப்படும் பெண் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பல காலங்களாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

Friday, November 13, 2009

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

நேற்று முன்தினம் மியன்மார் தலைவர் ஜெனரல் Than swe கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தபோது அவரை வரவேற்க நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் விமானநிலையம் சென்றிருந்தனர். விமான நிலையத்தின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்தருணத்தில் அங்குள்ள சகல பாதுகாப்பு நிலைகளையும் தாண்டி இழைஞன் ஒருவர் கடவுச்சீட்டோ அன்றில் அவற்றை ஒத்த பத்திரங்கள் எதுவுமின்றி புறப்படவிருந்த விமான மொன்றினுள் நுழையச் முயற்சிக்கையில் குடியரவு-குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட் படுத்தப்பட்டபோது அவன் அங்கோடை மனநோய் வைத்தியசாலை யில் இருந்து தப்பியோடிய இளைஞன் என வெளிவந்துள்ளது.

இத்தனை பாதுகாப்பையும் தாண்டி அவ்விளைஞன் விமான நிலைத்தினுள் எவ்வாறு நுழைய அனுமதிக்கப்பட்டான் என அத்தருணத்தில் விமான நிலைத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவிருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் இயக்குனரிடம் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more...

லசந்த கொலைவழக்கின் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியவில்ல : நீதிமன்றில் பொலிஸார்

லசந்த கொலைவழக்கு தொடர்பாக கல்கிஸை நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பொலிஸார், கொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் தொலைபேசியை வைத்திருந்தாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து எவ்வித தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என மன்றுக்கு தெரிவித்தனர்.

24ம் முறையாக வழக்கு அழைக்கப்பட்டபோது மன்றில் ஆஜராகியிருந்த மிரிகானை பொலிஸின் விசேட விசாரணைப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டினர். எதிர்வரும் 26ம் திகதி மன்றுக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என உத்தரவிட்ட பிரதான மஜிஸ்ரேட் ஹர்ஷா செத்துங்க விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான சுகத் பெரேராவை தொடர்ந்தும் தடுத்து வைக்க உத்தரவிட்டனர்.

Read more...

ஏ9 வீதி மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

யாழ் கண்டி பிரதான விதியான ஏ9 வீதி மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆழுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இப்பாதையினூடாக மக்கள் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் வாகனங்களின் போக்குவரத்துக்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது. அத்துடன் இவ்வீதியினூடாக பொருட்களை எடுத்துச் செல்வதில் காணப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளிலும் பல தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

பிரணாப் முகர்ஜி நாளை கொழும்பு வருகின்றார்.

இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காகவும் , நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முயற்சியாகவும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தூதராக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) கொழும்பு வரவுள்ளார். வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பதிலாக கொழும்பு வரும் அவர் அதிபர் ராஜபக்சவைச் சந்தித்து முகாம்களில் உள்ள தமிழர்களை அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்துவது, நிவாரண பணிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்துவார் என இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

Read more...

ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் நீதி மன்றில் ஆஜர்

இடைத்தங்கல் முகாம் மக்களுடன் இருந்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரை ஆஜர்படுத்திய அதிகாரிகள் தமது விசாரணைகள் முடிவுறவில்லை என மன்றுக்கு தெரியப்படுத்தினர்.

முதன் முறையாக நீதிமன்றில் ஆஜர்படுத்திய பா.உ கனகரத்தினத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் விளக்க மறியலில் வைக்குமாறு வவுனியா மஜிஸ்ரேட் எம். சித்தம்பலம் உத்தரவிட்டார்.

Read more...

தவறிழைக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை. -பொலிஸ் மா அதிபர்-

புதிய பொலிஸ் மா அதிபராக கடமையேற்று முதன் முறையாக ஊடகவியலாளர்களுடன் பேசிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா பொலிஸ் திணைக்களத்தை மக்களுக்கு பரிட்சயமானதாக மாற்றி அமைக்க தான் எண்ணம் கொண்டுள்ளதாகவும், தவறிழைக்கும் பொலிஸாருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் பொருட்டு வாரத்தில் ஒருமுறை தான் பொதுமக்களைச் சந்திக்கவுள்ள அதே நேரம் பொலிஸ் திணைக்களத்தின் இளநிலை அதிகாரிகளையும் அதிகம் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனநோயாளியான இளைஞன் ஒருவனை கடலினுள் மூழ்கடித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகித்தர்கள் இருவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உதவியையும் நாடியுள்ளதாகவும், பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சம்பவநேரம் கடமையில் இருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பல உத்தியோகித்தர்கள் இடம்மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Read more...

ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

அண்மையில் உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய மக்கள் முன்னணியினர் மோட்டார் வாகன பவனியாக கண்டி அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்திக்க சென்று கொண்டிருந்தபோது நிட்டம்புவ பிரதேசத்தில் மறிக்கப்பட்ட அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தாக்குதலில் HIRU FM நிருபர் ஷானக்க கருணாரத்ன, எதிர்கட்சித் தலைவரின் பாதுகாப்பு உத்தியோகித்தர் எஸ். ரத்நாயக்க உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆழும் கட்சி ஆதரவாளர்கள் என நம்பப்படுகின்றது. தாக்குதல் நாடாத்தியோர் வீதியில் ரயர்களை போட்டு எரித்து வாகனப்போக்குவரத்தை தடுத்துள்ளனர்.

Read more...

சிறைச்சாலையினுள் மோதல். 7 பேர் காயம்

வெலிக்கடை சிறைச்சாலையினுள் இன்று காலை இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விரு குழுக்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரிவித்த சிறைச்சாலை ஆணையாளர் நிலமை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com