Saturday, November 7, 2009

இலங்கையிலும் "பகிரங்க கசையடி" புதிய சட்டம்

இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பகிரங்க கசையடி சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் தெற்காசிய நாடுகளில் பிரபல்யமாக உள்ள இந்தச் சட்டத்தினால் இத்தகைய குற்றங்களை கணிசமான அளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதனால் இலங்கையிலும் இச் சட்டத்தை கொண்டுவருவது தொடர்பான முதல் கட்டப் பேச்சு வார்தைகள் நிறைவடைந்துள்ளதுடன் மிக விரைவில் இச் சட்டம் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

Read more...

நான்கு வகை அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி

இலங்கையில் தயாரிக்கப்பட்டு பாவிக்கப்பட்டுவந்த நான்கு வகை அத்தியாவசிய மருந்துகள் அடைத்திருந்த குப்பிகளில் குப்பியோடுகள் வைத்தியசாலைகளில் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அம் மருந்துவகைகளை தயாரித்து வினியோகித்த நிறுவனங்களுக்கு இரண்டு வருட தடையை விதித்துள்ள இலங்கை அரசு அம் மருந்துவகைகளை உடனடியாக இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இம்மருந்துகளை இறக்குமதி செய்யும் செலவுகள் தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படும் என தெரிவித்த அவர் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசோதிப்பதற்கு செயற்திட்டமொன்று நடை முறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Read more...

Friday, November 6, 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவில் பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது.

முப்படைகளின் பிராதான அதிகாரி ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஒரு பகுதி இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவின் உத்தரவின் பேரில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகாவில் பாதுகாப்பு பிரிவில் அங்கம் பெற்றிருந்த புலனாய்வுப் பிரிவினரே இவ்வாறு வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.

ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளுக்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஒரு பிரிவு நியமிக்கப்பட்டிருந்தது. அப் பிரிவை உடனடியாக வாபஸ் பெறுமாறு இராணுவத் தளபதியினால் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் அமால் குணரத்தினவிற்கு எழுத்து மூலம் கட்டளையிடப்பட்டதை தொடர்ந்து, ஜெனரலின் பாதுகாப்பு பிரிவில் அடங்கியிருந்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் மற்றும் 8 சிப்பாய்கள் இராணுவத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக லங்காறுத் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

Read more...

யுத்தத்தினால் பெற்றோரை இழந்த முல்லைச் சிறுவர்களுக்கு பாராளுமன்றில் வரவேற்பு

யுத்தத்தின் போது பெற்றோரை இழந்த 201 சிறுவர், சிறுமியர்கள் நேற்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர். விசேட அதிதிகளாக வருகைதந்த 201 சிறுவர்களையும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று வரவேற்றனர். பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்த சிறுவர், சிறுமியர்களை வரவேற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டியும், மேசையில் தட்டியும் ஆரவாரமாக வரவேற்றனர்.

மேற்படி சிறுவர், சிறுமியர் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற வட்டத்தொகுதியினுள் இருக்கும் போதே இச் சிறுவர், சிறுமியர்கள் சபை நடவடிக்கைகளை காண்பதற்காக வருகைதந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என அமைச்சர் புத்திரசிகாமணி சபையில் பேசினார்.

பாராளுமன்ற முன்றலில் அமைச்சர்கள் எம்.பிக்கள் சிறுவர், சிறுமியர்களை வரவேற்றதுடன் கட்டடத் தொகுதியையும் சுற்றிக் காண்பித்தனர்.

மிக மிக நீண்ட காலத்தின் பின்னர் முதற் தடவையாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து சிறுவர், சிறுமியர் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் வந்ததும், சபை நடவடிக்கைகளை நேரடியாக கண்டுகளிக்க வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பிரதி அமைச்சர் புத்திரசிகாமணியின் முயற்சியை தபால் துறை பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி சபையில் பாராட்டிப் பேசினார்.

Read more...

சுய கட்டுப்பாடு இருப்பின் நீரிழிவு நோயைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. - புன்னியாமீன்-

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.

நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும். முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.

முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.

குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது.

சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.


மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.

இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.

நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
3. விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract) கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
4. பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
5. சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோயைக்கட்டுப்படுத்தும் முறைகள்
1. சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும்.
2. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
3. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. .

நீரிழிவு நோய்களுக்காகச் சிகிட்சை பெற்றுக் கொண்டிருப்போர் கவனிக்க வேண்டியவை:

1. வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
2. வைத்திய ஆலோசனைப்படி குளிசையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
3. மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
4. சில சந்தர்ப்பங்களில் மருந்த எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் உங்களுடன் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
5. தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
6. உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும்.
7. உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.VIII

Read more...

எனது முழுக் குடும்பத்தையும் புலிகள் அழித்துவிட்டார்கள். கனடா சென்றுள்ள இளைஞன்.

படகில் கனடா சென்றுள்ளோரில் இருவர் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 17 ம் திகதி வன்கூவர் கடற்பரப்பில் வைத்து கனடிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கப்பலில் சென்ற 76 இளைஞர்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அங்கு ஆஜராகிருந்த மாகாண அரசிற்கான சட்டத்தரணிகள் (Lawyers for the federal government) குடியேற்றக்காரர்களில் இருவர் கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள புலிகளியக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசாரணை அமர்வுகளில் கலந்து கொண்ட இளைஞர்கள் இருவர் கனடிய சீபீசீ எனும் செய்தி சேவைக்கு தமது கருக்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த அனேகர் புலிகளால் கொல்லப்பட்டு விட்டதாகவும் இரண்டாமவர் தான் கப்பலில் ஏறும்போது கப்பல் எந்த நாட்டை நோக்கி புறப்படுகின்றது என அறிந்திருக்கவில்லை எனவும் தனது நோக்கம் இலங்கையை விட்டு வெளியேறவேண்டும் என்பதாகவே இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.

ஓசியன் லேடி என பெயரிட்டுச் சென்ற குறிப்பிட்ட கப்பல் புலிகளியக்கத்திற்கு சொந்தமான பிரின்சஸ் ஈஸ்வரி எனவும் அது கடந்த காலங்களில் அவ்வியக்கத்திற்கான ஆயுதக்கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்ற முன்னர் இலங்கை துதரகத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் குழந்தைகளை தாயார் பாரமெடுத்தார். சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்.
சவுதி அரேபியாவில் களவு மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் எனும் குற்றங்களுக்காக இலங்கையைச் சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இந்தியர் ஒருவருமாக மூவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்து. ஆனால் இம்மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக சவுதி அரசினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அதை அவர்கள் இரகசியமாக செய்து முடித்துள்ளார்கள் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வழக்கில் 7 இலங்கையர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அவர்களில் ஐவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தூதரகம், மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் சவுதியில் இருந்த காலப்பகுதியில் இந்தியர் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன் அவரும் குறிப்பிட்ட வழக்கில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண்ணுக்கும் இந்தியருக்கும் இரு குழந்தைகள் உண்டு எனவும் அக்குழந்தைகளை பெண்ணின் தாயாரிடம் பாரமளிப்பதற்கு இலங்கைத் தூதரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அப்பெண்ணது முதல் தார திருமணத்தின் போது இரு குழந்தைகள் உண்டு என்பது அக்குழந்தைகளும் பெண்ணின் தாயாரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி மரண தண்டனைகளுக்கு சர்வதேச மன்னிப்புச்( Amnesty International) சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007ம் ஆண்டில் 76 வெளிநாட்டவர்கள் உட்பட 158 பேரும், 2008 ஆண்டில் 40 வெளிநாட்டவர்கள் உட்பட 102 பேரும், 2009 ஆண்டின் ஆரம்பம் முதல் இன்றுவரை 18 வெளிநாட்டவர்கள் உட்பட 61 பேரும் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியவர்களாக 106 வெளிநாட்டவர்கள் உட்பட 137 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் நிறைவேற்றப்பட்டுவரும் மரண தண்டனைகள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





Read more...

அகதிகள் சார்பான போச்சாளர் ஆள்கடத்தல் மன்னன்.

இந்தோனேசியக் கடற்பரப்பில் காணப்படும் 255 அகதிகள் சார்பான பேச்சாளர் என தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டுள்ள அலெக்ஸ் பிரதான ஆட்கடத்தில் முகவர்களில் ஒருவர் என இந்தோனேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

நீண்ட காலமாக ஆட்கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இவரது அலுவலகம் ஒன்று இந்தியாவில் உள்ளது. கனடாவில் வசித்து வந்த இவர் அங்கு தெருச்சண்டைகளில் ஈடுபட்டுவந்த கண்ணன் குழுவின் உறுப்பினர் எனவும் அவ்வாறு தெருச்சண்டைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 2003ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டிருந்தார் என்பதும் வெளிவந்துள்ளது.

இவரது சதோதரன் ஒருவன் கனடாவில் வசித்துவருவதாகவும் இவ் ஆட்கடத்தல் பின்னணியில் அவரும் உள்ளதாகவும், அவர் தொடர்பான விசாரணைகளை ஆர்சிஎம்பி யினர் மேற்கொண்டு வருவதாகவும் இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதரம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Thursday, November 5, 2009

தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ராஜனாமா.

ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று விமல் வீரவன்ச தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பின் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக அக்கட்சியில் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். ஜேவிபி யில் இருந்து பிரிந்து தனியான கட்சியொன்றை நிறுவி அரசாங்கத்திற்கு ஆதரவுக் கட்சியாக இயங்கி வந்திருந்துடன் அமைச்சுப் பதவிகளையும் பெற்றிருந்தது.

இலங்கை அரசின் சுற்றுலா துறை அமைச்சராக செய்படும் நந்தன குணத்திலக தான் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். ஆனால் அவர் அமைச்சுப்பதவியில் இருந்து ரஜனாமா செய்துள்ளாரா என்பது இதுவரை வெளியாகவில்லை.

12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜேவிபி யில் இருந்து வெளியேறியிருந்தனர். ஆனால் நேற்றுடன் அக்கட்சியில் பொதுச்செயலாளர் நந்தனவும், தேசிய அமைப்பாளர் கமால் தேசப்பிரிய மன்னப்பெரும வும் வெளியேறியுள்ளமை பாரிய மாற்றமாகும். இவர்கள் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் செயற்பாடுகளின் அதிருப்தி காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது.

...............................

Read more...

திருகோணமலையில் 50 கிலோ கிராம் சி4 வெடிமருந்து மீட்பு.

வவுனியா விசேட பொலிஸ் பிரிவினர் திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் 50 கிலோ கிராம் சி4 வெடி மருந்தினை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

லங்கா பத்திரிகையாளர்கள் வழக்கு : நல்லிணக்கச் சபைக்குச் செல்கின்றது.

தெனியாய பிரதேசத்தில் உள்ள தனியார் பங்களா ஒன்றுக்கு செல்வதற்கான பாதை அரச செலவில் அமைக்கப்படுவதாக அறிந்த லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கடந்த செப்படம்பர் மாதம் 2ம் திகதி, அது தொடர்பான செய்திகளைச் சேகரிக்க அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஊடகவியலாளர்கள் மூவரையும் 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்து தனியார் தோட்டம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்தமைக்காக அவர்களை கைது செய்து விசாரித்ததாக தெரிவித்திருந்தபோது நீதிமன்று அவர்களுக்கு பிணை வழங்கியிருந்தது. இன்று அவ் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இச்சம்பவத்தை நல்லிணக்க சபையில் தீர்த்து எதிர்வதும் ஜனவரி 13ம் திகதி மன்றிற்கு அறியத்தருமாறு மொறவக்க மேலதிக மஜிஸ்திரேட் உதேஸ் வீரதுங்கா கட்டளையிட்டார்.

Read more...

ஜெனரல் சரத் பொன்சேகா நாடுவந்தடைந்தார்.

அமெரிக்காவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அதி முக்கிய நபர்களுக்கான பாதையூடாக வந்திறங்கிய அவர் அமோக வரவேற்புடன் விசேட பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவருடைய வருகையை படம்பிடிப்பதற்கும், கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தனியார் ஊடகங்கள் பல அங்கு காத்திருந்த போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

இலங்கையில் இடம்பெற்றதாக குற்றஞ் சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பாக நேர்காணல் ஒன்றிற்கு வருமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க Homeland Security பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ் அழைப்பை அவர் நிராகரித்து வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் அமெரிக்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி முயற்சியை அரசு எவ்வாறு முறியடித்தது என பத்திரிகையாளர் மாநாடொன்றை கூட்டி அறிவிக்கப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

Read more...

புனித ஹஜ் யாத்திரிகர்களுக்காக விசேட டேமினல்கள்

இது புனித ஹஜ் யாத்திரைக் காலம் உலகம் முழுவதும் இருந்து இலட்ச்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கா நகரம் சென்றவண்ணமுள்ளனர். இவ்வாறு உலக முழுவதிலுமிருந்து வரும் ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்பதற்காக புதிய ஏழு டேமினல்களை நவீன வசதிகளுடன் சவூதி ஜித்தா விமான நிலையம் திறந்துள்ளது.

ஜித்தா கிங் அப்துல் அஸீஸ் விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய டேமினல்கள் ஒரு மணித்தியாளத்திற்கு 3700 யாத்திரிகர்களை கையாளக்கூடியதாகவும். அத்துடன் பழைய டேமினல்களும் இயங்கிவருகின்றது.

இதுவரை புனித ஹஜ் யாத்திரைக்காக சுமார் 200,136 யாத்திரிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து 856 விமானங்களில் ஒக்டோபர் 20ம் திகதிவரை வந்திறங்கியுள்ளனர்.

யாத்திரிகர்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட விசேட கமராக்கள் மூலம் இதுவரை இனம் காணப்பட்ட பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்கள் விசேட அறைகளில் வைக்கப்பட்டு அவர்களுக்கு வைத்திய உதவிகளை சவூதி சுகாதார அமைச்சு வழங்கி வருகின்றது.

தற்போது அமைக்கப்படும் புதிய விமான நிலைய விஸ்தரிப்பு நிறைவுபெறும் நிலையில் உள்ளது இது நிறைவடைந்தால் விசேடமாக 13 டேமினல்களும், 10 ஓடக்கூடிய பாலங்களும் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்காக பயன்படுத்தப்படும்.

நன்றி - கலீஜ் டைம்ஸ்


Read more...

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. - யஹியா வாஸித் -

புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும்,
இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.

1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்குமாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓள் ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடி வெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்கா மாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள்.

மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடிக் கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓள் ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்கா மாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓள் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்கா மாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்கா மாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள். அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓள் ஆர் சக்களத்திகள்.

இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, பெரிய கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள். செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ் பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.

அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7.15 க்கு தமிழ் பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அதற்காக புலிகளுடனும், வன்னி மக்களுடனும் நிச்சயம் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு. ( இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம் )


05-11-2009. VIII


Read more...

Wednesday, November 4, 2009

பொது வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணி இணக்கம்

எதிர்வரும் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எதிர்கட்களினால் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

பொதுவான வேட்பாளராக ஊடகங்களில் ஊகம் தெரிவிக்கப்படும் ஒருவரே நியமனம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதே நேரம் அவர் கூட்டு முன்னணி சார்பாக தேர்தலில் குதித்தால் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யும் முன்னணியில் இணைந்து கொள்ளும் என நம்பகமாக தெரியவருகின்றது.

அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாஸ, எஸ்பி திஸாநாயக்க ஆகியோருக்கு தேர்தலில் நிற்க ஆர்வம் உள்ளதாகவும், பொது வேட்பாளர் விடயத்தில் அவர்களது விருப்பு எவ்வாறு என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகின்றது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com