Wednesday, November 4, 2009

துணுக்காய், முழங்காவில் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம்

‘நான் உங்கள் சொந்தக்காரன்:’ மக்களுடன் தமிழில் உரையாடினார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய்க்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முழங்காவிலுக்கும் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.
துணுக்காய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் வைத்து மனிதாபிமான நடவடிக்கைக்குப் பங்களித்த முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட படை வீரர்களை சந்தித்த ஜனாதிபதி முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் விஜயம் செய்தார்.

துணுக்காய் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுவரும் பெருந்திரளான மக்களை துணுக்காய் 65 ஆவது படைப் பிரிவு தலைமையத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கட்டளையிடும் தளபதிகள், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்றப்படும் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரை முடிவடைந்த பின்னர் அவர்களின் அருகில் சென்று மக்களுடன் சுமுகமாக உரையாடினார்.

மக்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்தத் தேசத்தை மீண்டும் ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ‘நான் உங்களின் தோழன்; சொந்தக்காரன்; நீங்கள் என்னை நம்பலாம்; உங்களுக்கு சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறினார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி :-

உங்களை மீளக் குடியமர்த்துவது போல ஏனைய மக்களையும் விரைவில் குடியமர்த்த உள்ளோம். அதற்காக முதலில் மிதிவெடிகளை அகற்ற வேண்டும். அந்தப்பணியை துரிதமாக பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த கஷ்டங்களை நான் நன்கு அறிவேன். பயங்கரவாதிகள் உங்களை தவறான பாதையில் இட்டுச் சென்றனர். அதனால் நீங்கள் அங்கும் இங்குமாக கஷ்டப்பட நேரிட்டது. எமது மக்களுக்கு சொந்த நாட்டிற்குள் அகதிகளாக இடம்பெயர நேரிட்டது.

இது எமது நாடு. இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒரே தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும். இங்கு இன, மத, குல, பிரதேச வேறுபாடு இருக்க முடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்.

இந்த நாட்டின் மீது அன்பு காட்டும் அனைவரும் இலங்கை மக்களே. நீங்கள் பணயக் கைதிகளாக்கப்பட்ட அந்த கஷ்ட காலம் இனி கிடையாது. புதிய வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.

அதனை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன். சகல மக்களும் பயம், சந்தேகம் இன்றி வாழவேண்டும். நீங்கள் சம உரிமையுடன் வாழும் சூழல் உருவாக்கப்படும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலைதூக்க இனியும் இடமளியோம்.

வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக இதற்கு முன்பு காணாத அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்த சகல மக்களுக்கும் நிச்சய மாக வீட்டு வசதி வழங்கப்படும். சகலருக்கும் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உருவாகும்.

உங்கள் பிள்ளைகள் தான் உங்கள் சொத்து. அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். அதனூடாக அவர்கள் நாட்டில் முக்கிய பதவிகளை பெற வேண்டும்.

நீங்கள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றார்.

அடுத்து முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி படைவீரர்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் இங்கு குழுமியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் ஜனாதிபதி விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.


Read more...

அம்பாறையில் 4 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு.

அம்பாறை, பொல்வத்தை பிரதேசத்தில் 4 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நடந்து கொண்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read more...

படைவீரர்களுக்கு உடனடிச் சம்பள உயர்வு. ஜனாதிபதி

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, யுத்தத்தில் ஈடுபட்ட படையினர் மத்தியில் பேசினார். அங்கு பேசிய அவர் கடந்தகாலத்தில் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக நாடு பிளவுபடவிருந்தாகவும், அதை தக்க சமயத்தில் முறியடிப்பதற்கு உதவிய படையினருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன், படைவீரர்களுக்கான சப்பள உயர்வொன்றை உடன் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கைத் தமிழர் முகாம்களில் அமைச்சர்கள் ஆய்வு: முதல்வர் உத்தரவு எதிரொலி

முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களை நேற்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 340 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக, அனைத்து முகாம்களையும் அமைச்சர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, நேற்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களுக்கு சென்ற அமைச்சர்கள், அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். சென்னை புழலை அடுத்த காவங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை, நேற்று மாலை துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, முகாமில் வசிப்பவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். "குடியிருப்பு, கழிப்பிட வசதி, வாகனத்திற்கு லைசென்ஸ் வழங்குதல், தனியாக ரேஷன்கடை, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு' என பல்வேறு கோரிக்கைகளை துணைமுதல்வரிடம் இலங்கைத் தமிழ் அகதிகள் தெரிவித்தனர்.

ஆய்வுக்கு பின் துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அரசின் சார்பில் பண உதவி மற்றும் ரேஷன் பொருள் வழங்கப்படுகிறது. 16 கோடியே 18 லட்சம் மதிப்பில் அவர்களுக்கு மேலும் பல அடிப்படை வசதி செய்து தர மத்திய அரசிடம் கோரியுள்ளோம். தமிழக அரசின் சார்பில் 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் தெரிவிக்கப்பட்ட பிரச்னைகள் தீர்க்கப்படும். பாதுகாப்பான வீடுகள், பிறப்பு, இறப்பு சான்று எளிதில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

அகதிகளுக்கும் இலவச "டிவி': நெல்லை மாவட்டத்தில் பெருமாள்புரம், நாராணம்மாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, நெல்லை கலெக்டர் ஜெயராமன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். "இலவச "டிவி', காஸ் அடுப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அகதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என சபாநாயகர் உறுதி அளித்தார். திருச்சி மாவட்டத்திலுள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான் கோட்டை இலங்கைத்தமிழர் முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோரிக்கை மழையில் அமைச்சர்கள்

முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அமைச்சர்களிடம் தெரிவித்த கோரிக்கைகள் விவரம்:
* அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்
* கல்விக்கடன் வழங்கி உயர்கல்விக்கு உதவ வேண்டும்
*படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
* தமிழகத்தில் தொடர்ந்து தங்க விரும்புவோருக்கு மட்டும் இந்திய அரசு நிரந்தர குடியுரிமை தரலாம். அதேநேரம் மீண்டும் இலங்கை செல்ல தயாராகவுள்ளவர்களை அங்கு அனுப்பி விடலாம்.
* முகாமிலிருந்து காலை ஆறு மணிக்கு நாங்கள் வெளியேறினால் மாலை ஆறு மணிக்குள் வர வேண்டும் என்ற விதிமுறையால், எங்களின் தொழில் பாதிக்கிறது. அதை தளர்த்த வேண்டும்.
* வெளிமாவட்ட முகாம்களில் உள்ள எங்களது உறவினர்களை பார்க்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்க செல்ல விதிக்கப்படும் கடுமையான விதிமுறைகளை நீக்க வேண்டும்.
* குடும்பத் தலைவருக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதை அதிகப்படுத்த வேண்டும்.
* வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும்
* அரசு காப்பீட்டுத்திட்டம், ஊனமுற்றோர், முதியோர் உள்ளிட்ட உதவித்தொகைகள், இலவச "டிவி', இலவச காஸ் போன்ற தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் பலன் பெற வழி செய்ய வேண்டும்.
* முகாமில் பழைய மின்சார வயர்களை மாற்றவேண்டும்.
*குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும்.
* வீடுகளை சரிசெய்து தர வேண்டும்.
* இங்குள்ள பெண்ணை திருமணம் செய்த இலங்கை அகதிக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி தினமலர்

Read more...

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்.

பொருத்தமான தொழில் வாய்ப்பு தமக்கு வழங்கப்படவேண்டும் என கொழும்பு கோட்டை முன்பாக சத்தியாகிரகம் இருந்து வந்த வேலையில்லா பட்டதாகரிகள், அலறி மாளிகைளை நோக்கி புறப்பட்டபோது பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அலறி மாளிகையை நோக்கிச் சென்ற வேலையில்லா பட்டதாரிகளை கொழும்பு கில்டன் ஹோட்டல் முன்னபாக மறித்த பொலிஸார் அவர்கள் மீது, கண்ணீர்ப் புகை, தண்ணீர் என்பவற்றை வீசி தடியடிப்பிரயோகம் செய்தனர்.

பொலிஸாரின் தாக்குதலை எதிர்த்து தாக்கிய பட்தாரிகள் பொலிஸாரின் தடைகளை பலவற்றையும் உடைத்து எறிந்துள்ளதுடன், அவ்விடத்தை விட்டு நகராமல் தெருவுக்கு குறக்கே வீற்றுள்ளனர். இவர்கள் தெருக்களை மறித்துள்ளதால் கொழும்பு கோட்டை பிரதேசத்திற்கான பிரதான பாதைகள் யாவும் மறிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read more...

கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இருவரை சிஐடி யினர் விசாரணை செய்தனராம்.

இந்தியாவில் அஞ்சாவாசம் புரிந்து வந்த முன்னாள் ஆயுததாரிகளான தமிழ் தேசியக் கூத்தமைப்பைச் சேர்ந்த எம்பி க்கள் சிவாஜிலிங்கம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது சீஐடி யினரால் விசாரிக்கப்பட்டார்களாம் என அவர்களில் ஓரு கோமாளி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மஹிந்தவிடம் பின்கதவால் சென்று முட்டுக்காலில் நின்று மடிப்பிச்சை வேண்டி தமிழர்களை ஏமாற்றவரும் குறிப்பிட்ட கோமாளிகளை எவ்வாறு சீஐடி யினர் விசாரித்தனர் என்பது கேள்வி. தாம் இலங்கை விமான நிலையத்தில் வந்திறங்கிய போது சிஐடி யினர் விசாரித்தனர் என தெரிவித்தவுடன், மக்கள் சகலவற்றையும் நம்பிவிடுவார்கள் என்பது கோமாளிகளின் கருதுகோள்.

Read more...

ஜெனரல் சரத் பொன்சேகா நேர்காணலை நிராகரித்துவிட்டு நாடு திருப்புகின்றார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது அமெரிக்க கிறீன் காட்டை புதுப்பிக்கும் முகமாக அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை இன்று அமெரிக்க நேரம் பிற்பகல் 4.30 மணிக்கு நேர்காணல் ஒன்றுக்கு வருமாறு Homeland Security பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

குறிப்பிட்ட நேர்காணலில் பங்குபற்ற மறுத்த ஜெனரல் சரத்பொன்சேகா அமெரிக்க நேரப்படி நேற்று பின் இரவு 11.30 மணிக்கு அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாகவம், அவர் நாளை அதிகாலை 4.00 மணிக்கு இலங்கை விமான நிலையத்தை வந்தடைவார் எனவும் நம்பகரமாக தெரியவருகின்றது.

Read more...

Tuesday, November 3, 2009

மலேசியாவில் இலங்கையர்களை கடத்தி கப்பம் வாங்கிய குழு கைது. பிரதானி பிரான்ஸில்

மலேசியாவில் உள்ள காடையர்களின் உதவியுடன் தமிழர்களை கடத்தி கப்பம் வாங்கும் புலம்பெயர் தமிழர்.
மலேசியாவில் உள்ள வெளிநாட்டவர்களான இலங்கைத் தமிழர்களை கடத்தி கப்பம் பெற்று வந்த ஒரு சர்வதேச வலையமைப்பை கொண்டுள்ள குழு ஒன்று பிடிக்கப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களை கொடுத்து இவர்கள் குறித்த இலங்கைத் தமிழர்களை கடத்தி வந்துள்ளனர்.

இக் கடத்தல் வியாபாரம் பதினாறு வயதுடைய ஒரு இளைஞர் கடத்தப்பட்டு அவனுடைய தந்தையார் பாரிஸிலுள்ள இக் குழுவின் தலைவரிடம் RM 25000 ஐ கொடுத்து தனது மகனை விடுவித்து கொண்டதை அடுத்து வெளிச்சத்திற்கு வந்தது. இளைஞனது பெற்றோர் இலங்கைப் பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். தகவலை பெற்றுக்கொண்ட இலங்கைப் பொலிஸார் மலேசிய மாநில சி.ஐ.டி. தலைவரை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டும் வேண்டியுள்ளனர்.

மேற்படி தகவல்களின் அடிப்படையில் கோலாலம்பூர் பொலிஸின் தீவிர குற்றத் தடுப்பு பிரிவினர் Setapak கிலுள்ள ஒரு வீட்டை சோதனை செய்து 4 பேரை கைது செய்தனர். அத்துடன் அவ்விடத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இருபது வயதையுடைய இரண்டு இலங்கை இளைஞர்களும் மீட்கப்பட்டனர். இவ் இளைஞர்கள் கடத்தப்பட்ட நாளிலிருந்து அங்கேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தாக நம்பப்படுகின்றது. இளைஞர்கள் தங்களை கடத்தியோர் தம்மை சித்திரவதை படுத்தியதாகவும், கடத்தல் காரர்கள் கப்பம் பெற்றுக்கொள்ள தமது உறவினர்களை தொடர்பு கொண்டார்களா, பணம் பெற்றுக்கொண்டுள்ளனரா என்பது பற்றி எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அறுவருடைய கைதைத் தொடர்ந்து பிரான்ஸிலுள்ள பாரிஸ் பொலீஸார் இதனுடன் தொடர்புடைய நாலு இலங்கையர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்த மானில குற்றத் தடுப்பு பிரிவின் பிரதான அதிகாரி Datuk Seri Bakri Zinin கடத்தல்காரர்கள் நால்வரும் 30 வயதையுடையவர்கள் எனவும் அவர்களுக்கு கடத்தல் குழுவுடன் நேரடித் தொடர்புள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர இதுவரையும் மலேசியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ இது தவிர்ந்த எந்தக் கைதுகளும் இடம்பெறவில்லை என்பதுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மலேசியாவினுள் நுழைவதற்கான சகல ஆவனங்களையும் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவம் அதிகமாக களாங் வெளியில் இடம் பெற்று வந்ததுடன் கடத்தியவர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் அல்லது வேறு நாடுகளில் உள்ள அவர்களது உறவினர்களிடம் கப்பம் பெற்று வந்தனர். இந்தக் குழுவின் தலைவர் பிரான்ஸிலுள்ள பாரிஸில் வசிப்பதாகவும் அவர் கடத்தப்பவர்களின் குடும்பத்தவர்களை தொடர்பு கொண்டு பணம் பெறுவதாகவும் வெளிவந்துள்ளது.

மலேசியா மெயில் தெரிவிக்கையில் இதுபோன்ற பல கடத்தல்களை மலேசியா போலிஸ் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஸ்டெபக்கில் கைது செய்யப்பட்ட நாள்வருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகள் உள்ளதாக கண்டீர்களா எனக் கேட்டதற்கு அவ்வாறான எதனையும் காணவில்லை என்றார்


Read more...

ஐ. தே. க. சபையில் கூச்சல், குழப்பம்; இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்ப்பு

அரசாங்கம் 2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் விளைவித்தனர்.

தங்களது மேசைகள் மீதிருந்த கோவைகளை மேசை மீது தட்டியபடி ஐ. தே. க. எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் எழுப்பினர். கடும் வாதப் பிரதிவாதங்களில் ஆளும் தரப்பினருடன் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடங்கள் இந்நிலைமை சபையில் நிலவியது.

ஐ. தே. க. எம்.பிக்களின் கூச்சல், குழப்பத்திற்கு மத்தியில் சபாநாயகரின் அனுமதியுடன் இடைக்கால கணக்கறிக் கையை சபையில் சமர்ப்பித்து, அதன் மீதான விவாதத்தை பிரதி நிதியமைச்சரும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம ஆரம்பித்து வைத்தார்.

சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து சபாநாயகரின் அனுமதியுடன் பிரதமர் சார்பில் அமைச்சர், கலாநிதி சரத் அமுனுகம இடைக்கால கணக்கறிக்கையை சபையில் சமர்ப்பிக்க எழுந்தார். அப்போது நேரம் முற்பகல் 10.40 மணியாகும்.

இச்சமயம் ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி. இந்த இடைக்கால கணக்கறிக்கை எந்த சட்டத்தின் கீழ் சபைக்குக் கொண்டு வரப்படுகின்றது என்பதை சபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டார்.


அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம :-

இது இச்சபைக்குப் புதிய இடைக்கால கணக்கறிக்கை அல்ல. இதற்கு முன்னர் 10 இடைக்கால கணக்கறிக்கைகள் இச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசியல் யாப்பின் 150 ஷரத்தின் 2வது பிரிவின் கீழேயே இக்கணக்கறிக்கை சபைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இப்படியான கணக்கறிக்கைகள் இந்திய பாராளுமன்றத்திலும் பல சந்தர்ப்பங்களில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாம் இந்த இடைக்கால கணக்கறிக்கையை சபைக்குக் கொண்டு வர முன்னர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளோம். அதன் பின்னரே பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்திலும் இது உள்ளடக்கப்பட்டது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக ஊடகங்களிலும் நிறைய செய்திகள் வெளியாகியுள்ளன.


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க :-


இடைக்கால கணக்கறிக்கையை அரசியல் யாப்புக்கும், நிதி முகாமைத்துவ சட்டத்திற்கும் உட்பட்டுத்தான் கொண்டு வர முடியும். தனியே அரசியல் யாப்பின் 150 வது ஷரத்தை மாத்திரம் வைத்து இதனை கொண்டு வர முடியாது. 2003ம் ஆண்டின் 3ம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டம் 2003ம் ஆண்டில் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இச்சட்டத்தின் 26வது பிரிவின்படி இச் சட்டத்திற்கு அப்பால் செல்லவென தனியொரு பிரேரணையை சபைக்குக் கொண்டுவந்து சபையில் நிறைவேற்றி இருக்க வேண்டும். அது இங்கு செய்யப்படவில்லை.


சபாநாயகர் டப்ளியு. ஜே. எம். லொக்குபண்டார :-

இந்த கணக்கறிக்கை பிரேரணையாகவே சபைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. 26வது ஷரத்தின் முதலாம் பிரிவின் கீழ் அவசர வேளைகளில் இவ்வாறு கொண்டுவர முடியும் என்றார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமைச்சர் கலாநிதி அமுனுகம இடைக்கால கணக்கறிக்கையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றத் தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சில ஐ. தே. க., எம்.பிக்கள் எழுந்து நின்றும், ஏனைய எம்.பிக்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்தபடியும் மேசை மீது தட்டி கூச்சல் குழப்பம் விளைவித்தனர்.

இந்நிலை சுமார் 40 நிமிடங்கள் சபை யில் நீடித்தது.

Read more...

தமிழக இலங்கை அகதிகள் வசதிக்கு ரு.12 கோடி ஒதுக்கீடு : கருணாநிதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் துயர் துடைக்கும் அவசர நடவடிக்கையாக, அவர்களது வசதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் கருணாநிதி திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழகத்திலே உள்ள 115 முகாம்களுக்கும் உடனடியாக அமைச்சர்கள் சென்று நேரிலே நிலைமைகளை அறிந்து நவம்பர் 10-ம் தேதிக்குள் முதலமைச்சருக்கு அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், அந்த அறிக்கையின் அடிப்படையில் மேலும் இந்த முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவிடும் வகையில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காக 12 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் உடனடியாக செலவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

அந்த தொகையை எவ்வாறு செலவழிப்பது என்பது பற்றி நவம்பர் 10-ம் தேதிக்கு பிறகு அமைச்சர்களின் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகளை எடுப்பது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Read more...

ஆண் நண்பருடன் உல்லாசம்: 11 வயதில் தாயான மாணவி

பல்கேரியா நாட்டை சேர்ந்த பள்ளி மாணவி கோர்டசா (வயது 11). இவர் சிறு வயதிலேயே பருவம் அடைந்துவிட்டார். கோர்டசாவுக்கு ஜெலிஸ்கோ (19) என்ற ஆண் நண்பர் இருந்தார். இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர். அடிக்கடி உல்லாசத்திலும் ஈடுபட்டனர். இதில் கோர்டசா கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவருக்கும் காலையில் திருமணம் நடந்தது. சிறிது நேரத்தில் கோர்டசாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது.

திருமண கோலத்தில் இருந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியோடு காணப்பட்ட கோர்டசா நான் இதுவரை பொம்மைகளை வைத்து விளையாடி வந்தேன். இப்போது எனக்கே ஒரு பொம்மை (குழந்தை) வந்துவிட்டது. எனவே இனி எனக்கு விளையாட்டு பொம்மைகள் தேவை இல்லை என்றார்.

ஆனால் குழந்தையின் தந்தை ஜெலிஸ்கோதான் வேதனையுடன் இருக்கிறார். ஏன் என்றால் அந்த நாட்டில் மைனர் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டால் 6 வருடம் ஜெயில் தண்டனை எனச்சட்டம் உள்ளது. எனவே ஜெயிலுக்கு செல்லும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

பல்கேரியா நாட்டில் 13 வயது பெண்கள் குழந்தை பெற்று கொள்வது சாதாரண விஷயம். ஆனால் 11 வயதில் குழந்தை பெற்று இருப்பது இதுதான் முதல் முறை.

உலகிலேயே 11 வயதில் குழந்தை பெற்ற முதல் பெண் கோர்டசாதான் என்று பல்கேரியா நாட்டு பத்திரிகைகள் குறிப்பிட்டு உள்ளன.

நன்றி மாலைமலர்

Read more...

புலிகளுக்கு ஆயுதம்: சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுத்து உதவியவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிங்கப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஓங்கி இருந்த காலத்தில் அந்த அமைப்புக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க ராகவன் (47) என்கிற பால்ராஜ் நாயுடு என்பவர் முயற்சி செய்தாராம். இவர் சிங்கப்பூரில் ஒரு கட்சியை தொடங்கி அதன் தலைவராக உள்ளார்.

புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து கொடுப்பதற்காக இவர் சிங்கப்பூர் தொழிலதிபர் ஹனிபா உஸ்மான் (57) என்பவரை உடந்தையாக வைத்துக் கொண்டு செயல்பட்டாராம். மேலும் இவரிடம் ஏராளமான வெடிபொருள்களும் இருந்ததாக போலீஸôர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் இவரை போலீஸôர் செப்டம்பர் 22ம் தேதி கைது செய்தனர்.

Read more...

ஆஸ்திரேலியா தூதரை பிஜித்தீவு வெளியேற்றியது

பிஜி நீதித்துறையில் ஆஸ்திரேலியா நியுசிலாந்து நாடுகள் தலையிடுவதாக கூறி அவர்கள் 2 பேரையும் 24 மணி நேரத்துக்குள் வெளியேறவேண்டும் என்று ராணுவ ஆட்சி தலைவர் பைனிமராமா உத்தரவிட்டார். இதை அவர் டெலிவிஷனில் பேசிய போது குறிப்பிட்டார். இதற்கான தகவலை தெரிவிக்கும்படி வெளிநாட்டு இலாக மந்திரிக்கு நான் உத்தரவிட்டு இருக்கிறேன் என்றும், ஆஸ்திரேலியாவில் உள்ள நம் தூதரையும் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

பர்மாவிலிருந்து ஏற்றுமதி இறக்குமதிக்கு வரிச் சலுகை

மியன்மார் எனப்படும் பர்மாவிலிருந்து இலங்கைக்கு தேவையான அரிசியையும் ஏனைய விளை பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளவும் இலங்கையிலிருந்து அந்த நாட்டுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அரசு தீர்மானித்துள்ளது இதன் படி இனி பர்மாவிற்கான ஏற்றுமதி இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

Read more...

வெளிநாடு செல்லும் பெற்றோருக்கு புதிய சட்டம்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்புக்காய் செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் புதிய சட்டம்
இனி வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பை அந்தந்தப் பிரதேசத்தில் உள்ள நீதவான்கள் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல முடியும் என நீதி அமைச்சு அறிவித்துள்ளது

இந்தச் சட்டம் வெளிநாடுகளில் பெற்றோர் வேலை வாய்ப்புக்காக செல்வதனால் அவர்களின் பிள்ளைகள் உரிய பாதுகாப்பு இன்மையினால் உடல் உள அசேளகரியங்களுக்கு ஆளாவதாகவும் இதனை கட்டுப்படுத்தவே புதிய சட்டம் அமுலுக்கு வருவதாகவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த பெற்றோர் தாங்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்புக்காக செல்ல விண்ணப்பித்தால் அந்தந்தப் பகுதியிலுள்ள நீதி மன்றங்களில் தங்களின் பிள்ளைகளுக்காக பாதுகாவல்களை நியமித்து அதனை உறுதிப்படுத்திய சான்றிதழை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிக்கத் தவறும் பெற்றோர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நீதி மன்றங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அந்த பாதுகாவலர்களை குறித்து உறுதி செய்யதுகொள்ள அதிகாரம் உடையன என நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com