Thursday, October 29, 2009

வட கிழக்கில் அடை மழை ஆரம்பம்

வடகிழக்கில் வழமையாக பெய்துவரும் பருவ மழை இவ்வருடம் கிடைக்காமையால் குடி தண்ணீர் உட்பட தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வந்தது விபசாய நிலங்கள் வறண்டு காணப்பட்டது விபசாய உற்பத்திகள் விலை உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில் நேற்று முதல் வட கிழக்கில் பருவமழை ஆரம்பித்துள்ளது இதனால் மக்களின் முகங்களில் மலர்ச்சி காணப்படுகின்றது.

பருவ மழை பெய்வது சொந்த வீடுகளில் வாழும் மக்களுக்கும் விபசாயிகளுக்கும் மகிழ்ச்சி என்றாலும் அகதிகளாக முகாம்களில் வாழும் மக்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் இரட்டிப்பாகப் போகின்றன. தொற்று நோய்கள் முகாம்களில் பரவும் அபாயமும் உள்ளது.


கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.

Read more...

Wednesday, October 28, 2009

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் அலறி மாளிகை அருகே நிறைவுற்றது.

மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் தலைவர்களை விடுதலை செய்யக்கோரியும், பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிடக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊரணி அலறி மாளிகைக்கு அருகில் முடிவடைந்தது.

கொள்ளுப்பிட்டி சந்தியில் பாரதூரமான அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் முடிவடைந்த இவ்வார்ப்பாட்ட பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி எரியூட்டப்பட்டதுடன் அரசிற்கு எதிரான பலத்த கோஷம் எழுப்பப்பட்டதையும் காணமுடிந்தது.

பாதுகாப்பு வலயத்தினுள் நுழையும் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நோக்கில் விசேட பொலிஸார் காவல்கடமையில் ஈடுபட்டிருந்தபோதும் மாணவர்கள் எவரும் எல்லை தாண்டிச் செல்லாமையால் அங்கு கைதுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

ரிபிசியின் நாளைய அரசியல் கலந்துரையாடலில் ஜெயலத் ஜெயவர்த்தனா மற்றும் நஜாமுகமட்

ரிபிசி வானொலியின் வாரந்த அரசியல் கலந்துரையாடலின் நாளைய நிகழ்வில் ஜக்கிய தேசிய கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்தனா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஒன்றியத்தின் பிரித்தானியா கிளையின் முன்னாள் தலைவர் திரு நஜாமுகமட் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

வியாழக்கிழமை (29.10.2009) மாலை 8மணி முதல் 10 மணி வரை இடம்பெறும் இந்நிகழ்வில் 00 44 208 930 5313 என்ற இலக்கதினூடாக நேயர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.


Read more...

நிசாந்த முத்துஹெட்டிகம தலைமையில் புதிய அரசியல் கட்சி உதயமாகின்றது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 20 வருடகால உறுப்பினரும், கடந்த தென்மாகாணசபைத் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியில் போட்டியிட்டு மிகவும் சர்சைக்குரிய நபராகவும் விளங்கிய நிசாந்த முத்துஹெட்டிகம Senior Citizens General United Front எனும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் பல வகையான சர்ச்சைகள் கிளப்பப்பட்டிருந்த நிலையிலும் தான் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்லப்போவதில்லை என நிசாந்த தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தபோது தனது கட்சியின் உயர் பீடத்தின் உத்தரவின் அடிப்படையில் தனக்குரிய விருப்பு வாக்குகளில் மோசடிகள் இடம்பெற்றதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்திருந்தது. இத்தீர்மானத்தை தொடர்ந்து தனது உயிருக்கு அரசினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கனடா, சுவிற்சர்லாந்து, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் கோரப்போவதாவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு புதிய அரசியல் பாதையை நோக்கி நகரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பொருட்டு தான் புதிய கட்சியொன்றை நிறுவப்போவதாக தெரிவித்துள்ள நிசாந்த, கட்சியை நிறுவுவதற்கு நாட்டில் உள்ள மிகவும் உயர் தகமைகொண்டுள்ள சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டோரும் உழைத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது கட்சி காலி மாவட்டத்தில் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் எதிர்வரும் பொது தேர்தலில் பங்கெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக விசாரணை நடாத்த ஜனாதிபதி உத்தவிட்டுள்ளாராம்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் அரச படைகள் பாரிய அளவில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாக வெளிவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நாடாத்த விசேட குழுவொன்றை நியமிக்க அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் வடக்கின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக பேசிய அவர், குற்றச்சாட்கள் எழுகின்றபோது அது தொடர்பாக விசாரணைகளை நாடாத்துவது ஜனநாயக நாடொன்றின் கடமையாகும். அந்த வகையிலேயே அரச அதிபர் இவ்வாறான ஒரு முடிவை எடுத்திருக்கின்றார். குறிப்பிட்ட குழுவினர் தமது விசாரணை அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளித்ததும் அவர் அது தொடர்பான முடிவை எடுப்பார். நான் ஜனாதிபதியின் தீர்மானத்தை அமெரிக்க தூதுவருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். தூதுவர் மிகவும் மகிழ்சியடைந்தார் என மேலும் தெரிவித்தார்.

Read more...

Tuesday, October 27, 2009

பொது வேட்பாளர் தொடர்பாக அரசாங்கம் கவலைப் படுகின்றது. ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பாக நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளரின் பெயர் இதுவரை வெளிவிடப்படவில்லை. ஆனால் அவ்வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய முப்படைகளின் பிரதான அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவாக இருக்க கூடுமா என அரசாங்கம் கவலை கொண்டுள்ளதை உணர முடிகின்றது என எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்று கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு கூறிய எதிர்கட்சித் தலைவர், வேட்பாளர்கள் தொடர்பாக ஊகங்களை தெரிவிக்க ஊடகங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசு ஊடகங்களை கட்டுப்படுத்த முனைகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

Read more...

யாழிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இம்மாத முடிவுக்குள் மீள் குடியேற்றம்

துணுக்காயில் விரைவில் 8000 பேர் குடியமர்த்தப்படுவர்
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியே ற்றும் நடவடிக்கைகள் இந்த மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப் பட உள்ளன. இது தவிர எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் மேலும் 8 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த மாத முடிவுக்குள் 58 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாக இந்திய எம்.பிக்களிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதும் அதனைவிட கூடுதலான மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக நேற்று (27) அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு அந்த மக்கள் தினமும் கட்டம் கட்டமாக சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த 25ஆம் திகதி 2955 பேரும் 26ஆம் திகதி 2874 பேரும் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். வவுனியா நகரில் இருந்து இடம்பெயர்ந்த 2144 பேர் நேற்று மீள்குடியேற்றப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சகல மக்களும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசம், வவுனியா தெற்கு சிங்களப் பகுதி, செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். வவுனியா வடக்கு பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை.

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 15 ஆயிரம் பேர் இதற்காக விண்ணப்பித்துள்ளதோடு அவர்களை மீள் குடியேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகள் மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிற போதும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் எம்மீது அழுத்தங்கள் பிரயோகித்தது கிடையாது. ஆரம்ப முதலே மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்தியா உதவி வருகிறது. மேலும் 500 கோடி உதவி வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயம் மூலம் அவர்களின் முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Read more...

இலங்கை கடற்படையில் சீனர்களும் இருக்கிறார்களாம். வை.கோ அதிர்ச்சி தகவல்.

பிரபாகரன் தலைமையில் போராட்டமும் ஆரம்பமாகுமாம்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 3 நாள் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் ஆரம்பமானது. இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்து பேசிய கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியா கட்டுப்பணத்தை இழந்துவரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இலங்கை கடற்படையில் சீனர்களும் இருக்கிறார்கள். நமது மீனவர்களை சிங்களர்களுடன் சேர்ந்து சீனர்களும் தாக்குகிறார்கள். ஏற்கெனவே, வடக்கிலும் கிழக்கிலும் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் சீனா, தற்போது ராமேஸ்வரத்திலும் தாக்குதல் நடத்தி பெரும் நெருக்கடி தரத் தயாராகிவிட்டது என கூறினார்.

ஆத்துடன் இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும் அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆனால் வைகோ கூறும் பிரபாகரன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அல்ல என்பது ஊர்ஜிதமாகியுள்ள நிலையில், வைகோ கைதாகி ஆயுதக் கிளர்சி ஒன்றை முன்னெடுக்கவுள்ள பிரபாகரன் யார் என விசாரிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது:

Read more...

400 கிலோகிராம் அதிசக்கிவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு.

முல்லைத்தீவு, கரையாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கி.கி அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வவுனியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வில்லி அபயநாயக்க அவர்களின் தலைமையில் செயற்பட்ட பொலிஸ் குழுவொன்று 50 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 250 கி.கி ரிஎன்ரி ரக வெடிபொருட்களையும், 25 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சி4 ரக வெடி மருந்துக்களையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

Read more...

போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்கின்றது ஐ.நா.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான சுயாதீனான விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

30 வருடகால பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் இறுதி கட்டத்தில் என்ன நடந்தது என்ன நடக்கவில்லை என்ற விடயம் மிகவும் ஆழமாக விசாரிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான உயரிஸ்தானிகர் பயங்கரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தம் தொடர்பாக விடை காணப்படாத வினாக்கள் மிகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் உயரிஸ்தானிகத்தை மேற்கோள் காட்டிய அமெரிக்காவின் குரல் (Voice of America) இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள், கடுமையான மனித உரிமை மீறல்கள் என்பன இடம்பெற்றதாக இல்லையா என்பது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Read more...

பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெறலாம். அரசாங்கம்.

எதிர்வரும் பாரளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை ஒரே நாளில் நாடாத்த அரசு அலோசித்து வருவதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தலை ஜனாதிபதி எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் இடம்பெறவிருக்கும் சுதந்திரக் கட்சியின் கூட்டத்தொடரணியில் தெரிவிக்கவுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட ஊரணி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அரசாங்கம் தமது வேலையில்லை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த வேலையில்லாப் பட்டதாரிகள் ஊர்வலமாக கொழும்பு கோட்டை முன்பாக வந்தபோது அவர்கள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சார்பாக சிலர் தமது மகஜரை நிதி அமைச்சுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Read more...

பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெறுகின்றார். புதிய நியமனத்திற்காக ஆணைக்குழு.

பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்ரமரட்ண எதிர்வரும் மாதம் 3 ம் திகதியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என அனைவரும் எதிர்பார்த்த போது அது சாத்தியமில்லை எனவும் நவம்பர் 3 அவர் ஒய்வு பெறுகின்றார் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றது.

அதே நேரம் பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதிவாய்ந்த பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பலர் காணப்படுவதாகவும் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு அரசின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய ஆணைக்குழு ஒன்றை நியமித்து அவர்களின் சிபார்சின் பெயரில் நியமனத்தை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

பிள்ளையானது வாகனம் விபத்தில் சிக்கியது. மூவர் பலி

முதலமைச்சர் பிள்ளையானது பாதுகாப்பு வாகனத்தொடரணியில் சென்ற வாகனம் ஒன்று இன்று காலை குருநாகல் பிரதேசத்தில் வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் மோதியதில் அவ்வாகனத்தில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்திற்கு உள்ளான வாகனத்தில் முதலமைச்சர் இருக்க வில்லை என தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட வாகனம் அதிவேகமாக சென்று அதன் கட்டுப்பாட்டை இழந்தே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read more...

Monday, October 26, 2009

ஜெனரல் பொன்சேகா, ரணில் சிங்கப்பூரில் சந்திப்பு.

முப்படைகளின் பிரதான அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கரமசிங்க ஆகிய இருவரும் சிங்கப்பூரில் சந்தித்ததாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

கடந்த 24ம் திகதி அமெரிக்கா செல்வதாக புறப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா சிங்கப்பூரில் உள்ள Crown Plaza Hotel லில் நேற்று முன்தினம் (25ம் திகதி) இரவு இச்சந்திப்பை மேற்கொண்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் கூட்டணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதே நேரம் அவர் நாட்டை விட்டு வெளியேறுதற்கு சற்று முன்னர் ஜாதிக்க ஹெல உறுமயவின் பாராளுன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் உடுவ தம்மாலோக தேரர் ஆகியோரையும் சந்தித்து பேசியதாக தெரியவருகின்றது.

எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படும்போது தாம் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக ஜேவிபி உட்பட பல கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் இச்சந்திப்பு பலரையும் விழிக்க வைத்துள்ளது.

அதே நேரம் அமெரிக்காவில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றிற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் அது இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதன் பின்னணியிலும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com