Monday, October 26, 2009

இலங்கை ஜிஎஸ்பி வரிச் சலுகையை கேட்க முடியாது. Bernard Savage

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களின் வழி இலங்கை செயற்படாத போது அது, ஐரோப்பிய ஒன்றித்தின் வரிச் சலுகையை கேட்கவோ அன்றில் வைத்திருக்வோ முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான பிரதிநிதி Bernard Savage தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி சலுகைகளை பெறுகின்ற நாடுகள், ஐரோப்பிய ஒன்றித்தின் மனித உரிமைச் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் தேவை ஏற்படின் நியாமான விசாரணைகளுக்கு இடம்விடவேண்டும் எனவும் வேண்டப்பட்டுள்ளனர். ஆகவே மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு இசைவாக செயற்படாதபோது ஜிஎஸ்பி வரிச்சலுகையை வைத்துக் கொள்வதற்கு இலங்கைக்கு உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையே ஜிஎஸ்பி வரிச் சலுகைக்கு விண்ணப்பித்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு அதன் நிபந்தனைகளும் சட்டதிட்டங்களும் நன்றாக தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

நாகர் கோவிலில் தற்கொலைதாரி கைதாம்!

நாகர் கோவில் பிரதேசத்தில் நேற்றிரவு தற்கொலைதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரைம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

நான் அரசியலில் இறங்குவது குறித்து எனது பெற்றோரிடம் எவ்வித முடிவும் இல்லை. நாமல்

"இளையோருக்கு நாளை" எனும் அமைப்பின் தலைவரும் ஜனாதிபதி மஹிந்து ராஜபக்ச வின் புதல்வருமான நாமல் ராஜபக்க தான் அரசியலில் இறங்குவது குறித்து எனது பெற்றோரோ, நானோ இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதத்திரக் கட்சியின் இளையோருக்கு நாளை எனும் அமைப்பின் வருடாந்த நிகழ்வு கேகாலை நகர மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய அவ்வமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச, தான் இவ்வமைப்பினூடாக அரசியலினுள் நுழையவுள்ளதாக வதந்திகளை பரப்பியும், பரப்ப முயன்றும் வருகின்றனர். ஆனால் எனது அரசியல் பிரவேசம் தொடர்பாக நானும் எனது பெற்றோரும் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

Read more...

60 க்கு மேற்பட்ட புலிகள் இடைத்தங்கல் முகாம்களிலிருந்து இனம்காணப்பட்டுள்ளனர்.

திருமலையில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கடந்த மாதத்தில் 60 க்கு மேற்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் விசாரணைகளின் பின்னர் அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

தீர்வு விடயமாக பேசுவதற்கு பசில் தலைமையிலான உயர்மட்ட குழு டெல்லி விரைகின்றது:

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும், நாடாளு மன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று வெகு விரைவில் புதுடில்லி செல்கின்றது.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த தி.மு.க, காங்கிரஸ் எம்.பிக் கள் குழு கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தங்களின் இலங்கைப் பயணம் தொடர்பாக விளக்க மளித்தனர்.

அவர்கள் அப்போதே பஸில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் டில்லிக்கு செல்லவுள்ளது. குறித்து பிரதமரிடம் தெரிவித்தனர். பஸில் ராஜபக்ஷ எம்.பி. தலைமை யிலான தூதுக் குழுவினர் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீளக்குடியேற்றம் உட்பட தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக ளக்கு அரசியற் தீர்வு காண்பது குறித்து பேசுவார்கள் என்றும் அவர்கள் பிரதமருக்குத் தெரியப்படுத்தினர்.

Read more...

Sunday, October 25, 2009

மௌலவி கடத்தல் தொடர்பாக அதாவுல்லாவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு நீண்டநேர அறிவுறுத்தலின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட மௌலவி எஸ்.எல்.எம் ஹனிபா (மாதனி), அமைச்சர் அதாவுல்லா உட்பட மூவருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார்.

றம்ஸான் மாதமான செப்டம்பர் மாதம் 16ம் திகதி மௌலவி நோம்பிருந்த சமயத்தில் அவரது வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்த அமைச்சர் அதாவுல்லாவின் ஆட்கள் என நம்பப்படும் ஆயுததாரிகள் மௌலவியை பலவந்தமாக கடத்திச் சென்றனர்.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் மௌலவியால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோது அக்கரைப்பற்று பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மௌலவியினால் கூறப்படுகின்றது.

இதையடுத்து சட்டத்தரணி ஜெயம்பதி விக்ரமரட்ண அவர்கள் மௌலவி ஹனிபா சார்பாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கின் பிரதிவாதிகளாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அமைச்சர் அதாவுல்லா, பொலிஸ் மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவில் தனது கட்சிக்காரார் கடத்தப்பட்டது (1) அடிப்படை மனித உரிமை மீறல் என நீதி மன்று தெரிவிக்கவேண்டும் எனவும் (2) கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் (3) கட்சிக்காரருக்கு நஸ்ட ஈடு (4) வழக்கு மற்றும் ஏனைய செலவுகளும் வழங்கப்படவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.

Read more...

கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் குறைந்த விலையில் பொருட்கள்

‘பால்மா’ நிர்ணய விலையை விடவும் ரூ. 10 குறைவு
யாழ்ப்பாணத்தின் அனைத்து கடைகளிலும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையிலேயே வழங்கப்படுகின்றன. குறிப்பாக சகல பால்மா பக்கற்றுக்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் 10 ரூபா குறைந்தே விற்கப்படுவதனை காணக்கூ டியதாகவுள்ளது.

அரிசி, சீனி, மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொழும்பில் விற்கப்படும் அதே விலையிலோ அல்லது அதைவிட குறைவான விலையிலோ யாழ்ப்பாணத்தின் அனைத்துக் கடைகளிலும் பெற்றுக் கொள்ள கூடியதாகவுள்ளது.

யாழ். சந்தையில் உற்சாகமான வியாபாரம் நடைபெற்று வருவதுடன் பொருள் கொள்வனவில் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதையும் காணக் கூடிதாகவுள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் இங்கே ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. பொருள் கொள்வனவில் மக்கள் காட்டும் ஆர்வம் குறித்தும் வியாபார முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் வியாபாரிகள் பூரண திருப்தியை தெரிவிக்கின்றனர்.

வீதிகளிலிருந்த பெரும்பாலான வீதித் தடைகள் அகற்றப்பட்டிருப்பதனால் இரவு 11 மணி வரை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதுடன் சனநடமாட்டமும் அதிகமாக உள்ளது. இம்முறை தீபாவளிக்கு வியாபாரம் களைகட்டியிருந்ததாகக் கூறி வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். யாழ் வியாபாரிகள் சங்கத்தினரின் தீர்மானத்தின்படி அனைத்து பால்மா பக்கற்றுக்களும் 10 ரூபா விலைக் குறைத்தே இங்கு விற்கப்பட்டு வருகின்றன.

Read more...

காத்தான்குடி பிரதேசத்தில் புதிய புத்தர் சிலை நிறுவப்படுகின்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு புத்தர் சிலை வைபவரீதியாக வைக்கப்படவிருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதேச மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஒலி பெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி புத்தர் சிலை நாவற்குடா பிரதான வீதியிலிருந்து ஊர்வலமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துவரப்படும். இதற்காக காத்தான்குடி நாவட்குடா பிரதான வீதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.

Read more...

இலங்கையில் போர் குற்றத்தை விசாரிக்க சர்வதேச அமைப்புகளுக்கு அனுமதி: அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போதும் போருக்குப் பின்னரும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. இது குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

ஆனால் தற்போது முதல் முறையாக அங்கு நடைபெற்ற அத்துமீறல்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி செய்தியாளர்களிடம் கூறியது:

முதலில் அகதி முகாம்களில் உள்ள மக்களை சர்வதேச அமைப்புகள் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். இலங்கையில் போரின்போதும் போருக்குப் பின்னரும் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். போர் குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த 73 பக்க அறிக்கை தயாரிப்பதற்கு என்னென்ன அடிப்படை காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும் அதற்குரிய தீர்வுகளையும் இதில் குறிப்பிட்டு அவற்றை இலங்கையிடம் தெரிவித்துள்ளதாக கெல்லி கூறினார்.

இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், அதாவது போரின்போது மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகமோ, மறு சீரமைப்பு நடவடிக்கைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையான காலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்நாட்டு போர் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போதிலும் அது தீவிரமடைந்தது 2009 ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரைதான். இந்த காலகட்டத்திற்குள் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டனர்.

ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் ராணுவத்தில் 12 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியர்களை ஈடுபடுத்தினரா?. மேலும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி அப்பாவி மக்கள் மீது ராணுவம் நடத்திய அத்துமீறல் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவம் பல விதிமீறல், கொலைகளைப் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் பலதரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கெல்லி கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது, பலர் சரணடைய முன்வந்தபோதிலும் அவர்களை ராணுவம் கொன்றுள்ளது. சரணடைந்த சில விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் கொன்றதோடு, அப்பாவித் தமிழர்களையும் கொன்றுள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கொன்றதாக புகார்கள் வந்துள்ளன.

சில தமிழ் இளைஞர்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்காமல் அடையாளம் தெரியாத இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு சென்றுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.
சோதனைச் சாவடி மற்றும் முகாம்களில் உள்ளவர்கள் மிகவும் கொடுமைப் படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அகதி முகாம்களில் ராணுவத்தினர் காவல் புரிவதால், சர்வதேச அமைப்புகள் அங்குள்ளவர்களைச் சென்றடைய முடியவில்லை.

ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் உயிரிழப்பு குறித்த விவரம் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட கெல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 6,170-பேர் உயிரிழந்ததாகவும் 15,102 பேர் காயமடைந்ததாகவும் ஒரு தனியார் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என கருதுவதாக கெல்லி கூறினார்.
இதனிடையே மனித உரிமைகள் அமைப்பு, இலங்கையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சர்வதேச தனியார் அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனியார் விசாரணை அமைப்பை அனுமதிப்பது ஒன்றுதான் தற்போது உள்ள வழி என்று மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.

Read more...

அணுநிலையத்தை பார்வையிடுவதற்காக ஐ.நா. அணுசக்தி நிபுணர்கள் ஈரான் சென்றனர்

ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாடுகளின் அச்சம் சரியானது தானா என்பதை கண்டறிவதற்காக ஐ.நா. அணுசக்தி நிபுணர்கள் 2 பேர் ஈரான் சென்றனர். இந்த தகவலை ஈரான் அணுசக்தி கழகத்தின் அதிகாரி அலி ஷிர்சடியான் தெரிவித்தார். இந்த நிபுணர்கள் டெக்ரானுக்கு தெற்கே 160 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டு வரும் ïரேனியம் செறிவூட்டுவதற்கான 2-வது ஆலையில் அவர்கள் ஆய்வு நடத்துவார்கள். இந்த இடத்தை கடந்த 3 ஆண்டுகளாக ஈரான் ரகசியமாக வைத்து இருந்தது. கடந்த மாதம் தான் இந்த இடத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது.

Read more...

நாடு திரும்ப மறுத்த இலங்கை பெண்ணால் பரபரப்பு

கோர்ட் உத்தரவுப்படி, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க அழைத்து வரப்பட்ட இளம் பெண் ஒருவர், நாடு திரும்ப மறுத்து, ஆவணங்களை கிழித்து ஆர்பாட்டம் செய்தார். இதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து, விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்தவர் நிஷாராணி (25). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், துபாய் சென்ற இவர், சமீபத்தில் போலி இந்தியன் பாஸ்போர்ட் மூலம் ஐதராபாத் வந்தார். இது குறித்து நடந்த வழக்கில், நிஷாராணியை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நிஷாராணிக்கு தற்காலிக விசா மற்றும் ஆவணங்கள் ஆந்திர போலீசாரால் தயார் செய்யப்பட்டன. பின், அவரை நேற்று சென்னையில் இருந்து கொழும்பு புறப்படும் ஜெட்லைட் விமானம் மூலம் அனுப்பி வைக்க ஒரு எஸ்.ஐ., இரண்டு போலீசார் அழைத்து வந்தனர்.

ஜெட் லைட் விமானம் நேற்று பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், அந்த விமானத்தில் ஏறுவதற்காக நிஷாராணி காத்திருந்தார். இந்நிலையில், அவரிடம் இருந்த தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை நிஷாராணி கிழித்து எறிந்தார். "இலங்கையில் யாரும் இல்லை. நான் அங்கு போகமாட்டேன்' என்று கூச்சலிட்டார். இந்த தகவல் அறிந்த ஜெட் லைட் விமான பைலட், நிஷாராணியை விமானத்தில் ஏற்ற மறுத்து விட்டார்.

கோர்ட் உத்தரவை எப்படியும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நிலையில், நிஷாராணியின் இந்த செய்கையினால் அதிர்ச்சியடைந்த ஆந்திர போலீசார், அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் அழைத்து வந்தனர். அங்கு, நிஷாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிஷாராணிக்கு மீண்டும் ஒரு தற்காலிக விசா உள்ளிட்ட ஆவணங்களை பெறுவது என்றும், அதன்பின் அவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது என்றும் முடிவாகியது. சென்னை விமான நிலைய பன்னாட்டு புறப்பாடு முனையத்தில் நடந்த இந்த சம்பவத்தால், நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


நன்றி தினமலர்

Read more...

மட்டக்களப்பிற்கு படகொன்றில் வந்திறங்கியவர்கள் மாயம். எஞ்சிய புலிகளா?

மட்டக்களப்பு கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து பாரிய படகொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேச மக்களின் தகவல்களின் அடிப்படையில் நேற்று பிற்பகல் இப்படகு கரையை வந்தடைந்ததாகவும், அதில் வந்திறங்கியவர்கள் தமிழில் பேசியதாகவும், பின்னர் படகினை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் தெரியவருகின்றது.

படகில் வந்திறங்கியவர்களை தேடி வலைவிரித்துள்ள பொலிஸார், அவர்கள் சட்டவிரோ குடியேற்றக்காரர்கள் அல்லது எஞ்சியிருந்த புலிகள் என சந்கேகிக்கின்றனர்.

Read more...

அக்கரைப்பற்றில் பெண் புலி உறுப்பினர் ஒருவர் கைது: கொழும்பில் இருவர்.

அக்கரைப்பற்று 5ம் மைல்கல் பிரதேசத்தில் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். பிரதேச மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பில் இரு புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வழங்கிய தகவல்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

அமைச்சர்களை நான் எங்கே சந்திக்கின்றேன் என எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாது.

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன். ஆனால் நான் அவர்களை எங்கே சந்திக்கின்றேன் என்பது எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாது என எதிர்கட்சித் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற அமர்வில் பேசிய அவர் தான் எங்கே அமைச்சர்களைச் சந்திக்கின்றேன் என்ற விடயத்தை விசேட பொலிஸ் பிரிவினர் ஆராய்து வருவதாகவும் அவர்கள் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முனைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், பொலிஸார் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பாக வினாவுவதை விடுத்து தன்னிடம் கேட்டிருந்தால் சரியான தகவல்களை வழங்கியிருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் விசேட பொலிஸ் பிரிவினர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததான குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் கூரே யை நான் சந்திதுள்ளேனா எனவும் எனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் கேட்டுள்ளனர். ஆனால் அரசின் அமைச்சர்கள் பலருக்கும் இக்கேள்வி பொருத்தமானதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கரன்ஸி புலி’யின் மர்ம முகங்கள் : பொறியில் சிக்கிய ராஜ் ராஜரத்தினம்

(கே.பத்மநாபன் (கே.பி.) மூலமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி வலைப் பின்னல்களை விசாரித்து வரும் இலங்கை அரசுக்கு, கே.பி. மூலம்தான் ராஜ் ராஜரத்தினம் தொடர்பாகச் சில விவரங்கள் கிடைத்ததாகவும்... அதை அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு போனதும்தான் இந்த கைது)
நியூயார்க்கில் வசிக்கும் அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்! நியூயார்க் பங்குச் சந்தை ஏறுவதிலும் - இறங்குவதிலும் இவரது கண்ணசைவுக்கும் பங்குண்டு என்று கூறுவார்கள். இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் படித்த அமெரிக்க பிரஜை. 'ஹெட்ஜ் பண்ட்' எனப்படும் பங்குச் சந்தை வியாபாரத்தில் உலக மகா கில்லாடி. இவரை கடந்த 16.10.09-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ (FBI) கைது செய்துள்ளது. 'பங்குச் சந்தை தொடர்பான மோசடி செய்தார்' என்று ராஜரத்தினம் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், விசாரணை வேறு திசையிலும் பயணிப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனுடன் தோளில் கை போட்டுப் பேசக் கூடியவர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனின் தேர்தல் செலவுகளுக்கு கோடிகளை நன்கொடையாக வழங்கியவர் என்று நியூயார்க்கையே அதிசயத்துடன் தன் பக்கம் நிமிர்ந்து பார்க்க வைத்தவர் ராஜ் ராஜரத்தினம். இவர் விடுதலைப்புலிகளுக்கும் பணத்தை அனுப்பியதாகவும் அதிகாரிகள் துருவி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைக் கலங்கடித்த 'அக்னி' ராஜரத்தினம் அல்ல இவர். ராஜ் என்று அன்போடு அழைக்கப்படும் ராஜரத்தினம் சென்னைக்கு 'விசிட்' அடித்ததோடு சரி. போர்பஸ் மாத இதழ், ராஜ் ராஜரத்தினம் உலகின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவர் என்று கூறுகிறது.

இன்டெல். ஐ.பி.எம்., மெக்கின்ஸி ஆகிய பெரும்புகழ் கொண்ட நிறுவன பங்குகளை சுமார் 20 மில்லியன் டாலர்கள் வரையில் (சுமார் 92 கோடி ரூபாய்), 'இன்ஸைடர் டிரேடிங்' முறையில் வாங்கி 100 மில்லியன் டாலர்கள் வரை தவறாக பங்குச்சந்தையில் லாபம் பார்த்தார் என்று எப்.பி.ஐ. தனது முதல் குற்ற அறிக்கையில் கூறியிருக்கிறது. இவரை பொறி வைத்துப் பிடித்தவர், அதிபர் ஒபாமாவினால் சமீபத்தில் நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட ப்ரித் பராரா என்ற பஞ்சாபி - இந்தியர்தான்!

இலங்கையில் நடைபெற்று வந்த ஈழப் போரில், தனது வியாபாரத் தொடர்புகள் கருதி நடுநிலை எடுத்து வந்த ராஜ், 2000-ம் ஆண்டு முதல் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கமான TRO எனும் 'தமிழர் மறுவாழ்வு அமைப்பு' மூலம், இலங்கையில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்புக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு 2001-ம் ஆண்டு எழுந்தது. 2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது.

இலங்கையின் அரசியல்வாதிகளை இவர் நன்கு கவனித்து வந்ததாலோ என்னவோ... ஈழப்பகுதிகளில் இவர் செய்த உண்மையான மனிதாபிமான செயல்களை பாராட்டியே வந்தனர். அதேசமயம், 'இவர் ஈழப்பிரச்னையில் தலையிடுகிறார்' என்று உளவு அமைப்புகள் இலங்கை அரசை எச்சரித்து வந்தன. வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலேந்து மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்க அரசினால் கைது செய்யப்பட்ட தலைவர் கருணாகரன் கந்தசாமி, போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில் 'மிஸ்டர் பி' என்பவர் ஒரு மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் போலீஸ் கைப்பற்றியது. 2000, 2004 ஆண்டுகளில் தலா ஒரு மில்லியன் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் இலங்கை வங்கியில் இருந்து சேகரித்தது. யானையிறவு போரில் புலிகள் வெற்றிபெற இந்த நன்கொடைகள் பெருமளவு உதவியதாகவும் இலங்கை போலீஸார் அரசுக்குத் தகவல் தந்தனர். மொத்தத்தில், 2000-ம் ஆண்டு முதலே போலீஸாரின் பார்வையில் வந்த ராஜ், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார் என்று தெரிகிறது.

எப்.பி.ஐ - கோர்ட்டில் உத்தரவு பெற்று இவரது தொலைபேசி,கைபேசிகளை ஒட்டுக்கேட்டது. இவரது பிஸினஸ் கோஷ்டியில் ஒரு ரகசிய உளவாளியை நுழைத்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற வட அமெரிக்க சங்கப் பேரவையின் ஆண்டு மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய தலைவர் திருப்பூரைச் சேர்ந்த நடராஜன் ரத்தினத்திடம் 'ப்ளாங்க் செக்' கொடுத்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்' என்றாராம் ராஜ். இதற்காக ராஜ் வைத்த ஒரே கண்டிஷன், புலிகளின் ஆதரவு பெற்ற மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் கேரன் பார்க்கரை அழைத்துப் பேச வைக்கவேண்டும் என்பது என்றும் கூறப்படுகிறது. பிறகு, பலமுறை புலிகளின் ஆதரவுக் கூட்டங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்றும் அதையெல்லாம். எப்.பி.ஐ தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்தது என்றும் சொல்கிறார்கள் இப்போது.

ஆனால், ராஜரத்தினத்தின் நண்பர் வட்டமோ, ‘அவர் தமிழ் ஆர்வலர். ஆகவே பேரவைக்கு நன்கொடை கொடுத்தார். பல்வேறு சேவை மையங்களுக்கும்தான் வாரி வாரி வழங்கியுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் புலி ஆதரவாளர் என்று கூறுவது தவறு. சிறிய வயதில் கஷ்டப்பட்ட ராஜ், ஏழைகளுக்கு உதவினார். சுனாமி தாக்கிய கிராமங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இதை அன்றைய இலங்கை அதிபரே பாராட்டினார்!’ என்று கூறுகிறார்கள்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனை தலைமை டிரஸ்டியாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க - இந்திய பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தில் ராஜ் டிரஸ்டியாக செயல்படுகிறார். இந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பெரும் கொடை வள்ளல் ராஜ்தான். இதனால், இவர் புகழ் அமெரிக்காவெங்கும் பரவியது. இவரது கம்பெனியின் மதிப்பு 5 பில்லியன் டாலர்கள். செல்வச் செழிப்பில் வளைய வந்த ராஜ், ஒரு சமயம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து அதில் சுமார் 500 விருந்தினர்களை களிப்பூட்டினார். பங்குச் சந்தை முதலாளிகள், வங்கித் தலைவர்கள், முதலீட்டாளர்கள் என்று அந்த கப்பலில் மிதந்தனர். மிக உயரிய ஒயின், புளூ லேபிள் விஸ்கி ஆறாக ஓடியது. விருந்தினர்களோடு அந்த கப்பல் நியூயார்க் மாநகரை சுற்றி வந்தது. பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாலும், புலிகளின் ஆதரவுப் பழியும் ராஜ் மீது இறங்கியிருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து புலிகள் ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில், புலிகளின் ஆதரவு பிரமுகர்கள் மீது அமெரிக்கா வழக்குகளை தூசி தட்டி எடுப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த கைது நடந்ததா என்ற கேள்வியும் இதனால் எழத் துவங்கியுள்ளது.

(உலக பணக்கார்களின் வரிசையில் 587 வது இடத்திலிருக்கும் ஒருவரை முதல் 100 பேர்களில் ஒருவரென கதையளக்கின்றார். அத்தோடு நிறுத்தாமல் “2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது“. என்று அடுத்த புழுகையும் அவிழ்த்து விடுகின்றார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில தமிழர்களுக்கு மட்டும் யுனிசெவ் அமைப்பே சில வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இலங்கை அரசோ அல்லது விடுதலைப்புலிகளோ அல்லது தனிநபர்களோ ஒரு குடிசை கூட அந்த மக்களுக்கு போட்டுக் கொடுக்கவில்லையென்பதே உண்மை. ஆனால் விடுதலைப்புலிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குதவவென பல நாடுகளிடமிருந்தும் நேரடியாக பல மில்லியன் டாலர்களை பெற்றுக் கொண்டனர் ராஜ் ராஜரத்தினம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென புனர்வாழ்வக்கழகத்திற்கு வழங்கிய நிதியை புனர்வாழ்வுக்கழகம் புலிகளுக்கே கொடுத்தது. இதனாலேயே புனர்வாழ்வுக்கழகத்தை இலங்கை அரசு தடை செய்தது. ராஜ் ராஜரத்தினம் நிதி வழங்கிய கால கட்டத்தில் புனர்வாழ்வுக்கழகம் தடைசெய்யப்பட்டிருக்காததால், ராஜ் ராஜரத்தினம் மீது இலங்கை அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது.- கிருபானந்தன்))

(இன்ஸைடர் டிரேடிங் என்றால் என்ன என்று முதலீட்டு ஆலோசகர் நாகப்பனிடம் கேட்டபோது, 'பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியே அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலையேற்றத்தை முன்கூட்டி தெரிந்துகொண்டு, பங்குகளை வாங்கிப் போட்டு விலையேற்றத்துக்குப் பிறகு விற்று லாபம் பார்ப்பதுதான் இன்ஸைடர் டிரேடிங்!

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலை குறையப்போகிறது என்று தெரிந்து கொண்டு, முன்கூட்டியே பங்குகளை விற்பதும் இதில் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர், தன் பெயரில் பங்கு பரிவர்த்தனை செய்யாமல், மறைமுகமாக தன் உறவினர் பெயரிலும் செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் 'செபி' மாதிரியான அமைப்புகள் இன்ஸைடர் டிரேடிங்கைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்து விட்டது. பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய உறவினர்களின் லிஸ்ட்டைக்கூட அந்த நிறுவனம் கேட்டு வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று 'செபி' வலியுறுத்தத் துவங்கியிருக்கிறது. காரணம், இந்த உறவினர்கள் யாரேனும் அதே நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கிறார்களா என்பதை 'செபி' கண்காணித்து வருவதுதான்!'' என்றார் நாகப்பன்.

ஏற்கெனவே தங்கள் வசம் கிடைத்திருக்கும் கே.பத்மநாபன் (கே.பி.) மூலமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி வலைப் பின்னல்களை விசாரித்து வரும் இலங்கை அரசுக்கு, கே.பி. மூலம்தான் ராஜ் ராஜரத்தினம் தொடர்பாகச் சில விவரங்கள் கிடைத்ததாகவும்... அதை அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு போனதும்தான் இந்த கைது என்றும் ஒரு செய்தி உள்ளது. டி.ஆர்.ஓ. எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு மாற்றுப் பெயரில் மில்லியன் டாலர் நிதி அளித்ததோடு, அதன் ஒருங்கிணைப்பாளராகவும் அவரே செயல்பட்டு வந்தாரா என்று தற்போது எஃப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. புலிகளின் மிகப் பெரிய தாக்குதல்களான ஓயாத அலைகள் 1, ஓயாத அலைகள் 2 போன்ற போர்களின் போதெல்லாம் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க நிதி கொடுத்தது ராஜ் ராஜரத்தினம்தான் என்று புலிகள் ஆதரவு ஆட்களே சொல்லத் துவங்கியுள்ளனர். அதோடு, இலங்கையில் போர் கடுமையாக நடந்த சமயத்தில் அந்நாட்டின் பங்கு மார்க்கெட்டை ஆக்கிரமித்திருந்த டாப் 10 கம்பெனிகளையும் ராஜ் ராஜரத்தினம் கட்டுப் படுத்தி வந்ததாக இலங்கையில் தற்போது பேச்சு எழுந் துள்ளது.

போர் முழுவதுமாக முடிந்த பிறகு புலிகளின் குழந்தைப் போராளிப் பிரிவுக்கான மறுவாழ்வு ஏற்பாடுகளுக்கு ஒரு மில்லியன் டாலர்களை இலங்கை அரசிடம் வழங்க முன்வந்திருக்கிறார் ராஜ் ராஜரத்தினம். இம்முறை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரான ரோஹித்த பொகல்லகாம இந்தப் பணத்தை வாங்கவிடாமல் தடுத்துவிட்டார்!

- மு.தாமரைக்கண்ணன்)

(நன்றி: விகடன்)

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com