Saturday, October 24, 2009

ஊடகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கோத்தபாய உத்தரவு.

இராணுவ அதிகாரிகளின் பெயர்களை தவறான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் ஊடகங்கள், சுயலாப நோக்கம் கொண்டு அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸருக்கும் சம்பந்தப்பட்ட உத்தியோகித்தர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரச்சாரங்களுக்காக இராணுவ உயரதிகாரிகளின் பெயர்களை பாவிப்பது சட்டவிரோதம் எனவும் அவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடும் ஊடகங்களுக்கு எதிராக சட்டநடிவடிக்கை எடுக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டதிட்டங்களின் படி இராணுவ அதிகாரிகள் சேவையில் இருக்கும் போது அரசியலில் ஈடுபடுதல் மற்றும் அரசியல் கட்சி ஒன்றுக்கான பிரச்சார வேலைகளில் ஈடுபடுதல் குற்றமாகும்.

Read more...

நீங்கள் வாழ்க்கையின் புதியதோர் ஆரம்பத்திற்கான நுழைவாயிலில் நிற்கின்றீர்கள்

இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு சனாதிபதி
வாழ்க்கையின் புதியதோர் ஆரம்பத்திற்கான நுழைவாயிலில் நீங்கள் நிற்கின்றீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையை உங்களுக்கேற்ற வகையில் ஆக்குவதற்காக எனது அரசாங்கம் நிறையவே செய்துள்ளது. மனிதர்களாக உங்களது கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில் தரமான வாழ்க்கைக்கான எல்லாத் தேவைகளையும் வழங்கியுள்ளது என சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கின் முல்லைதீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்படும் இடம்பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் சனாதிபதி அனுப்பிவைத்துள்ள செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு சனாதிபதி அனுப்பிவைத்துள்ள செய்தி வருமாறு:

அன்புடையீர்,

வாழ்க்கையின் புதியதோர் ஆரம்பத்திற்கான நுழைவாயிலில் நீங்கள் நிற்கின்ற இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நான் இதனை உங்களுக்கு எழுதுகின்றேன். இன்று நீங்கள் உங்கள் முன்னைய வீடு அமைந்திருந்த உங்களுக்கு மிகவும் பரிச்சயமான சூழலுக்கு அல்லது அதற்கு சமீபமாக வந்துள்ளீர்கள்.

உங்கள் குடும்பம் நீண்ட காலமாக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியது என்பதை நான் அறிவேன். இவை ஈவிரக்கமற்ற ஒர் அமைப்பு அதன் குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உங்கள் மீதும் ஏனைய தமிழ் மக்கள் மீதும் திணித்த கஷ்டங்களாகும். இப்பயங்கரவாத அமைப்பு தமிழ் சமூகத்தின் ஏக விடுதலை வீரர்கள் தாங்களே என்றும் கூறிக்கொண்டனர். அவர்களின் உபாயங்கள் தோல்வியுற ஆரம்பித்ததும், நீங்கள் இடத்திற்கிடம் அலைந்து திரியவேண்டியதாயிற்று. உங்களுக்காக அனுப்பப்பட்ட உணவு, மருந்து உட்பட ஏனைய அத்தியாவசியப் பொருட்கள்கூட உங்களுக்கு மறுக்கப்பட்டன. உங்கள் பிள்ளைகளிடமும் முதியோர்களிடமும் ஆயுதங்கள் திணிக்கப்பட்டு இப்பயங்கரவாதப் படையில் சேருமாறு கட்டாயப்படுத்தப்பட்டது.

இது எமது நாட்டு தமிழ் மக்களின் அபிலாஷையாக இருக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். இறுதியாக, உங்களுக்காக என்று கூறிக்கொண்டு உங்கள் மக்களின் இரத்தத்தையே சிந்தவைத்தவர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் மனிதக்கேடயங்களாகவும் பணயக்கைதிகளாகவும் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் உங்களது சொந்த தாய் நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களாக ஆக்கப்பட்டீர்கள்.

அந்த இருள்சூழ்ந்த காலம் மறைந்து, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் என்றவகையில் நீங்கள் எதிர்நோக்கிய தற்காலிக கஷ்டங்களும் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. உங்கள் குடும்பம், நண்பர்கள் சகிதம் புதியதோர் வாழ்க்கைக்கு மீண்டுவந்துள்ளீர்கள். நீங்கள் எதிர்காலத்தின் புதியதும் சாதகமானதுமான சவால்களை எதிர்நோக்குவீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையை உங்களுக்கேற்ற வகையில் ஆக்குவதற்காக எனது அரசாங்கம் நிறையவே செய்துள்ளது. மனிதர்களாக உங்களது கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில் தரமான வாழ்க்கைக்கான எல்லாத் தேவைகளையும் வழங்கியுள்ளது.

இன்று உங்களிடமுள்ள மிக உயர்ந்த சொத்து உங்களால் மிகச்சிறந்த முறையில் பேணிப்பாதுகாக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளே. உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இப்புதிய வசதிவாய்ப்புகளில் இருந்து பயனடையும் வகையில் உங்களால் வழிகாட்டப்படுவதையும் மேலும் அவர்கள் மீண்டும் ஒருபோதும் போலியான தூதுவர்களாலும் இரட்சகர்களாலும் பிழையாக வழிநடாத்தப்படுவதை அனுமதிக்காதிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டிய தருணம் இதுவாகும். நீங்கள் ஒன்றுசேர்ந்து புதியதோர் வாழ்க்கையைக் கட்டியெழுப்பி சமாதானமும் நட்புறவும் நிலவும் இச்சூழலில் கிடைக்கின்ற பல வாய்ப்புக்களிலிருந்தும் பயனடைய முடியும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லாசியுடனான வளமான எதிர்காலம் கிடைக்க வேண்டுமெனவும், உங்கள் வெற்றிக்கனவுகள் நனவாக வேண்டுமெனவும், எமது தாய்நாட்டில் ஒரே குடும்பமாக நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து வாழவேண்டுமெனவும் நான் பிரார்த்திக்கின்றேன்.

உண்மையுள்ள,

மஹிந்த ராஜபக்ஷ

Read more...

சரத்பொன்சேகா அரசியலில் குதிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு தீவிர முயற்சி. லங்கா இரிதா

முன்னாள் இராணுவத் தளபதியும் முப்படைகளின் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலினுள் நுழைவதை தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக லங்கா இரிதா எனும் சிங்களப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

அச்செய்தியில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா களமிறங்குவதை தடுக்கும் பொருட்டு அவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நியமன எம்பி யாக பாராளுமன்றத்தினுள் உள்வாங்க அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் அதன் பொருட்டு அரசின் உயர் மட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினிமா செய்ய இருந்தபோதும் ஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி முயற்சி தோல்வி கண்டதையடுத்து அவருக்கு அமெரிக்கா அல்லது பிரித்தானியாவில் பாதுகாப்பு ஆலோசராக நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசின் முக்கிய புள்ளி ஒன்று முயற்சித்தாகவும் அம்முயற்றி நிறைவேறவில்லை எனவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

Read more...

கப்டன் அலி விவகாரம் முடிவுக்கு வந்தது. பொருட்கள் வவுனியாவைச் சென்றடைந்தன.

புலம் பெயர் தமிழ் மக்களினால் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட கப்டன் அலி எனும் நிவாரணக் கப்பலில் உள்ள பொருட்கள் 5 மாத கால தாமதத்தின் பின்னர் நேற்று வவுனியா சென்றடைந்தது. நீண்ட நாட்கள் கொழும்பு மற்றும் இந்திய துறைமுகங்களில் தேங்கிக் கிடந்த இப்பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் பாரமெடுத்துள்ளனர். இக்கப்பலில் கொண்டுவரப்பட்ட 884 மெற்றிக்தொன் பொருட்களும் ஐ.சி.ஆர்.சி இனரால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Friday, October 23, 2009

கப்பலில் கனடா சென்றுள்ள சிலரின் உடலில் புலிச் சின்னம் (பச்சை) பொறிக்கப்பட்டுள்ளது.

கப்பல் கம்போடியாவில் பதிவுசெய்யப்பட்ட Princess Easwary (பிரின்சஸ் ஈஸ்வரி) என இனங்காணப்பட்டுள்ளது.
76 இலங்கையர்களுடன் கனடா கடற்பரப்பைச் சென்றடைந்த கப்பல் கடந்த மாத முற்பகுதியில் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளமை சர்வதேச கப்பல் போக்குவரத்து பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. Ocean Lady (ஓசியன் லேடி) எனும் பெயருடன் கனடியக் கடற்பரப்பை அடைந்த குறிப்பிட்ட கப்பலின் உண்மைப் பெயர் Princess Easwary (பிரின்சஸ் ஈஸ்வரி) எனவும், இக்கப்பல் தனது கடற்பயணத்தின் போது கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மும்பாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றுள்ளதுடன், அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவின் வடமேற்கேயுள்ள முந்திரா (Mundra) எனும் துறைமுகத்தை செப்படம்பர் மாதம் 8ம் திகதி அடைந்த இரு பதிவுகளே சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பதிவாகியுள்ளதாகவும், அதன் பின்னர் எவ்வித தரவுகளும் பதிவாகவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஆனால் கப்பல் எங்கிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் இதுவரை புலனாக வில்லை.

Lloyds MIU (The world's premier source of maritime information)எனப்படும் கப்பல் நகர்வுகளை பதிவு செய்யும் கம்பனியின் தகவல்களின் அடிப்படையில் பிரின்சஸ் ஈஸ்வரி கம்போடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், 2008 ம் ஆண்டில் குறிப்பிட்ட கப்பல் இந்தோனேசியா, தாய்வான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட கப்பல் கம்பனியின் பதிவில் பதியப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் விலாசங்களும் பாவனையில் இல்லை என தெரியவருகின்றது.

குறிப்பிட்ட கப்பல் விடயத்தில் கடல் பிரயாணம் தொடர்பான சகல சர்வதேச நிறுவனங்களையும் ஆர்சிஎம்பி (Royal Canadian Mounted Police) யினர் தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டிவருகின்றனர். திரட்டப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக ஆர்சிஎம்பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், குறிப்பிட்ட கப்பல் எவ்வாறு கடத்தல் காரர்களின் கைகளில் வீழ்ந்தது என்ற விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள 76 பயணிகளும் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை அரசினால் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என தேடப்படும் கார்த்தீபன் மாணிக்கவாசகர் அடையாடம் காணப்பட்டுள்ளார். 26 வயதுடைய இவரது பெயர் சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) தேடப்படுவோர் பெயர்ப்பட்டியலில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கப்பலில் காணப்பட்ட 76 பேரில் சிலரது உடலில் புலிகளின் சின்னம் குத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக கனடிய பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் புலிகள் இயக்கத்தின் உண்மையான உறுப்பினர்கள் முடிந்தவரை தமது அடையாளத்தை வெளிகாட்டாமல் பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பது பொதுவான விடயம்.

அதேநேரம் கனடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர்களின் ஒருவரான Jason Kenney அவர்கள், குற்றச் செயல்களில் தொடர்புடையதாக பதிவுகளைக் கொண்டுள்ளோர் மற்றும் கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தரப்படுத்தப்பட்டுள்ள புலிகளியக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவர் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புலிகளின் எல்லை கடந்த நவீன ஆட்கடத்தல் தொடர்பாக சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் தமது முழுநேர பார்வையை திருப்பியுள்ளதுடன், இக்கட்டமைப்பில் உள்ள பலருக்கும் வலை விரித்துள்ளனர். அந்த வகையில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா, துருக்கி, பர்மா போன்ற நாடுகளில் இருந்து செயற்படும் பலர் குறிப்பிட்ட நாடுகளின் உள்ளுர் புலனாய்வு நிறுவனங்களினதும், அங்கு செயற்படக்கூடிய சர்வதேச புலனாய்வு நிறுவனங்களினதும் வலைகளில் மாட்டியுள்ளதுடன் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.

புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நவீன ஆட்கடத்தல் வியாபாரம் சர்வதேச சமுகத்தின் பார்வையை ஈர்த்துள்ளதுடன், இவ்வியாபாரம் மேற்குலகின் பாதுகாப்புக்கு கூட அச்சுறுத்தாலாக அமையும் என நம்பப்படுகின்றது. சர்வதேசம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டுவருகின்ற நிலையில் சகல பயங்கரவாத அமைப்புக்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிவரும் புலிகள் தமது இராணுவப் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள தற்கொலைதாரிகளை மேற்குலக நாடுகளுக்குள் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அந்நாடுகள் தமது எச்சரிக்கை மணியை அசைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது எனலாம். அவ்வாறான ஓர் நிலை தோன்றும் போது கடந்த காலங்களில் புலிகளின் உள்நோக்கம் புரியாமல் அவ்வியக்கத்தின் செயற்பாடுகளுடன் தங்களை இணைந்து தம்மை இனம் காட்டிக்கொண்ட பலரும் சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்வர் என்பது கவலைதரும் விடயமாகும்.

Read more...

வவுனியாவில் நான்கு முன்னாள் புலிகள் கைது.

ஒரு பெண் உட்பட முன்னாள் புலிகள் நால்வர் இன்று அதிகாலை வவுனியா விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியாவில் கடத்தல் கப்பம் வாங்குதல் உட்பட பல நீதிவிரோத செயல்களில் ஈடுபட்டுவந்தாக தெரிவிக்கும் பொலிஸார், இவ்வாறான 28 சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் அவைதொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

ராஜரட்ணம் புலிளுக்கான முன்னணி நிதி வழங்குனர்களில் ஒருவர். கேபி

பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க FBI இனரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கோடீஸ்வரர் ராஜரட்ணம், புலிகளியக்கத்திற்கு நிதிவழங்கி வந்த முன்னணி நபர்களில் ஒருவர் என புலிகளியக்கத்திற்காக 3 தசாப்தங்கள் ஆயுதங்கடத்திலில் ஈடுபட்டவரும், பிரபாகரன் மறைவிற்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவருமான கேபி என பலராலும் அறியப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜரட்டணம் புலிகளியக்கத்திற்கு நிதிவழங்கியதான கேபி யின் சாட்சியம் தொடர்பான இரு ஆவனங்கள் அமெரிக்க புலனாய்வுத்துறையின் கையில் உள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Read more...

Thursday, October 22, 2009

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பிரதேசத்தில் முதலாவது அணி மீள் குடியேற்றம்.

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களுள் மக்களை மீள் குடியமர்த்தும் பணி ஆரம்பித்துள்ளதாகவும் அதன் முதற்கட்டமாக இன்று 1000 மக்கள் முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாலிநகர் பிரதேத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வுவனியா செட்டிக்குளம் முகாமில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்களில் ஒருதொகுதியினரே இன்று முல்லைத்தீவு பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் பொருட்டு இன்று துணுக்காய் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விசேட சம்பிரதாயபூர்வ ஆரம்ப நிகழ்வில் பிரதேச சபைத் தலைவர் மற்றும் இரு அமைச்சர்கள் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.

இவ்வாறு மீள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது சொந்த வீடுகளில் குடியமர்த்தப்பட்டனரா அன்றில் அங்கும் முகாம்களிலே தங்க வைக்கப்பட்டுள்ளனரா என்பது இது வரை தெளிவாகவில்லை. இது தொடர்பாக அனர்த்த நிவாரண அமைச்சை தொடர்பு கொண்டபோது பதிலளிக்கவல்ல அதிகாரிகள் எவரையும் அணுகமுடியவில்லை.

Read more...

ஓய்வூ பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மீண்டும் சேவையில்! கல்வி அமைச்சு நடவடிக்கை

ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களை இன்னும் இரண்டு வாரங்களில் கோர இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இவ்வாறு நியமனம் பெறுகின்றவர்கள் பாடசாலைகளில் உயர் தரத்திற்கான கலை மற்றும் வர்த்தக பாடங்களைக் கற்பிப்பதில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. உறுப்பினர் ஆர். பீ. ஏ. ரணவீர பத்திரன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வாய்மூலம் பதில் அளித்தபோதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

பட்டதாரிகள் உருவாகும்வரை, தற்போது ஓய்வு பெற்றுச் சென்றிருக்கும் பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

Read more...

இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவைச் சந்தித்தார்.

இந்திய இராணுவத்தின் தேசிய இராணுப் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனர் லெப். ஜெனரல் R.K Karwal இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவை சந்தித்தார். இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் தனது துணைவியார் சகிதம் இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவப் பயிற்சி நிலையங்களில் இடம்பெற்றுவரும் பல விசேட நிகழ்வுகளில் பங்கு பற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இராணுவத் தளபதியுடன் பேசிய லெப். ஜெனரல் R.K Karwal இலங்கையில் போர்முடிவந்துள்ள நிலையில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்ததாகவும், இருவரும் ஞாபகச் சின்னங்களை பரிமாறிக்கொண்டதாகவும் மேலும் தெரியவருகின்றது.

Read more...

கிழக்கில் தொடர் வரட்சி! குடி நீருக்கும் தட்டுப்பாடு.

கிழக்கில் வடகிழக்கு பருவக்காற்றினால் கிடைக்கும் மழை இவ்வருடம் கிடைக்காமையால் தொடரும் வரட்சி காரணமாக கிணறுகள் வற்றிக் காணப்படுகின்றன இதனால் குடி நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது அத்துடன் ஒரு வகையான காய்ச்சலும் சிறு குழந்தைகளுக்கு பரவுவதை அவதானிக்க முடிகிறது. தொடர் சத்தியுடன் கூடிய இக்காய்ச்சலால் கிழக்கில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் கஸ்டப்படவேண்டிய நிலை ஏற்படும் அபாயமுள்ளது. அத்துடன் தற்போது பெருமளவான பொதுமக்களால் பாவிக்கப்பட்டுவரும் 40 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரிலும் ஒரு வகையான வாசனை வீசுகின்றது. இது குடிப்பதற்கு தகுதியானதா? என்பதை தெரியாமலேயே பொதுமக்கள் தற்போது இந்த கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரை அருந்தி வருகின்றனர். இத்தகைய வசதிகள் ஒரளவு நகர்புற மக்களிடமே உள்ளது கிராமப்புற ஏழைகள் மிகவும் நீருக்காக கஸ்டப்படுகின்றனர்.

எனவே கிழக்கின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படபோகும் நீர் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொது மக்களுக்கான நீர் வினியோக நடவடிக்கைகளையும் மேட்கொள்வார்களா?

மட்டக்களப்பு விசேட தொடர்பாளர்.

Read more...

Wednesday, October 21, 2009

புலிக் குழந்தைகள் கொழும்பில் தமது கல்வியை தொடர ஏற்பாடு.

கடந்த யுத்தத்தின் போது சரணடைந்த, கைது செய்யப்பட்ட புலிகளுக்கு புனருத்தாபனம் அளிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக 168 குழந்தைப் புலிகள் தமது கல்வியை கொழும்பில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா பூந்தோட்டம் முகாமில் இருந்து கொழும்பு கொண்டுவரப்பட்டு ரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுளனர்.

8ம் வகுப்பு முதல் உயர்தரம் வரையான மாணவர்கள் இவர்களுள் அடங்குகின்றனர். இவர்களுக்கான தங்குமிடம் பாடசாலை விடுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக மேலும் 100 மாணவர்கள் இங்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இவர்களில் பலர் தாம் புலிகளின் இராணுவப் பயிற்சியை பெற்றுக்கொண்டவர்கள் என்பதையும் பல தாக்குதல்களில் ஈடுபட்பவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்:

Read more...

எதிர்கட்சி எம்பிக்களை விட இந்திய அரசை நாம் நம்பகின்றோம். மைத்திரிபால

இலங்கையில் உள்ள எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட அரசு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை நம்புவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழி நாழிதளான "தினமின" விற்கு வழங்கிய பேட்டியொன்றில், இலங்கை அரசாங்கம் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினகளிலும் பார்க்க இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிய காரணத்தினாலேயே அவர்களை இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்ல அனுமதித்தாகவும், எதிர்கட்சி உறுப்பினர்கள் இடைத்தங்கல் முகாம் மக்களின் விவகாரங்களை அரசியலாக்க முற்பட்டு வருவதாகவம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அதன் அதன் பூரண பங்களிப்பை செய்துள்ளது. இந்தியாவிலே 5 கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசியல் சிக்கல்களை எதிர்நோக்குகின்றபோது அவர்களுடன் எமக்கு ஒத்துழைக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

அரச துறை வெற்றிடங்கள் 2010 இல் நிரப்பப்படும்: அமைச்சர் சியம்பலாப்பிட்டிய சபையில் தகவல்

அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்கள் யாவும் 2010 ஆம் ஆண்டு நிரப்பப்படுவதுடன் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடு க்கப்படும் என அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவது எவ்வகையிலும் நிறுத்தப்படவில்லை. அத்துடன் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டாம் என்ற சுற்று நிருபம் வெளியிடப்படவும் இல்லை எனவும் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளின் பின்னர் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்து பேசியதுடன் அரச துறையில் வேலைவாய்ப்பு, மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு பதிலளித்தார்.

2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை 57,764 பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேலையின்மை 2005 ஆம் ஆண்டில் 7.7 வீதமாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு 5.2 வீதமாக குறைவடைந்தது. நாட்டிலுள்ள வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச துறையால் மட்டும் முடியாது என் பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரச துறையில் நிலவும் பட்டதாரி களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பாக விசேட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் 2010ஆம் ஆண்டு அரச துறையில் நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

மேலும் இவற்றுக்கு ஏற்ப தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் செய் யப்படுகின்றன. வரவு-செலவு திட்ட பிரிவுடன் கலந்தாலோசிக் கப்பட்டு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய துறைக்கும் மேலதிக நிதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்படும் என்றும் அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Read more...

மேலும் ஒரு தொகுதி மக்கள் மட்டக்களப்பு வருகை

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தொகுதியினர் நேற்று அதிகாலை மட்டக்களப்பு அழைத்துவரப்பட்டனர். 298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் அழைத்து வரப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com