Wednesday, October 14, 2009

தமிழ்க் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றம்

பாதுகாப்பு அமைச்சில் நடந்த விசேட கூட்டத்தில் தீர்மானம் 10 சட்டத்தரணிகளை நியமித்து செயற்பட முடிவு
சிறைகளில் விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ்க் கைதிகள் தொடர்பாகத் துரிதமாக விசாரணை நடத்தவென விசேட நீதிமன்றமொன்றை
அமைக்க அரசாங்கம் நேற்று (14) தீர்மானித்துள்ளது.

கைதிகளின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களின் விடுதலைக்கு விரைவில் தீர்வொன்றைக் காணும் நோக்கில் இந்த நீதிமன்றம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நேற்று (14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

இதேநேரம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு ஏற்ப 10 சட்டத்தரணிகளை நியமித்து கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் சிறைகளில் உள்ள தமிழ் கைதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக நீதி சட்ட மறுசீரமை ப்பு பிரதி அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.

நன்றி தினகரன்

Read more...

நிசாந்த முத்துகெட்டிகம விற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை.

நிசாந்த வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்.
தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட வேட்டபாளரும், கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சைகளை கிளப்பியிருந்தவருமான நிசாந்த முத்துகெட்டிகம, காலி மாவட்டத்தில் 71000 இற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தபோது, கட்சியின் உயர் பீடத்தின் உத்தரவின் பேரில் தேர்தலில் தனக்கு அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நிசாந்த சிரச தொலைக் காட்சியில் தோன்றி நேரடியாக தெரிவித்திருந்தார். அத்துடன் தனக்கு வழங்கப்பட்ட விருப்பு வாக்குகளில் மோசடி இடம்பெற ஒத்தாசை புரிந்தாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கும் பிற அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் தொலைக் காட்சியில் மேலும் கூறியிருந்தார்.

அதே நேரம் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், தனக்கு நிசாந்த முத்துகெட்டிகம கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், தனது அதிகாரிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளர் சம்பந்தப்பட்டவர்ளை பணித்துள்ளார்.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிசாந்த முத்துகெட்டிகம விற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்வுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிசாந்த தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சில் 20 வருடங்கள் அங்கம் வகிப்பதாகவும், அக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்த தனது தந்தை கட்சியின் ஆரம்ப உறுப்பினர் எனவும் தெரிவித்த அவர் ஒழுக்காற்று நடவடிக்கையை எவ்வாறு கையாள்வது என்பது தனக்கு தெரியும் எனவும், எவ்வாறன நடவடிக்கையையும் தான் எதிர் கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

நிசாந்த முத்துகெட்டிகம சிரச ரிவி க்கு பேட்டி வழங்கி சில மணித்தியாலயங்களில் அவர் கட்சின் உயர் பீடத்தின் நடவடிக்கை ஒன்றுக்கு உட்பட்டுள்ளதாகவும், அவர் கொழுப்பு கொண்டு செல்லப்பட்டு கலதாரி ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டள்ளதாகவும் இணையத்தளச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. எம்எஸ்டி எனப்படும் மந்திரிகள் பாதுகாப்பு பிரிவினரால் கொழும்பு கொண்டுவரப்பட்ட அவர் மேற்படி 5 நட்சத்திர ஹோட்டலில் 208 இலக்க அறையில் தடுத்த வைக்கப்பட்டுள்ளதாகவும், அவ் அறைக்கு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும் அவருக்கு எம்எஸ்டி யினர் பாதுகாப்பு வழங்குவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என நிசாந்த பல ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டவேண்டியதாகும்.

Read more...

வாதத்துக்காக பேசாமல், வாழ்க்கையை பேசுவோம். ( வருந்துகின்றோம் ) -யஹியா வாஸித் –

08-10-2009 நாம் வெளியிட்ட வாதத்துக்காக பேசாமல் வாழ்க்கையை பேசுவோம் என்ற கட்டுரையில் குறிப்பிட்ட, மிதிவெடிக்கு காலை இழந்ந அந்த இளைஞன் ஏற்புவலி காரணமாக நேற்று இறந்து விட்டார். அவரது உடலை இன்று கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு எடுத்துச் செல்கின்றார்கள் என்பதையும், இரண்டு தினங்களுக்கு முன் அவரது 16 வயது மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்ததென்பதையும் ரொம்ப மனவருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.

அந்த இளைஞன் மே 14ம் திகதி, அரசின் அழைப்பை ஏற்று, அரசகட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் போது, விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த மிதிவெடியில் காலை இழந்ததாக பேசிக் கொள்கின்றார்களே. இது யார் குற்றம் இறைவா. யார் குற்றம். அரசின் குற்றமா. விடுதலைப்புலிகளின் குற்றமா. மூணு வேளையும் மூச்சுவிடுவோம் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்த அந்த மகாத்மாக்களின் குற்றமா. யாமிருக்கப் பயமேன் என்று சொல்லி எங்களுடன் காலம், காலமாக திருவிளையாடல் நடாத்திக் கொண்டிருக்கும் பரப்பிரம்மாவான உனது குற்றமா. புரியலையே இறைவா.

பெண்குழந்தையை. விடுதலைப்புலிகள் பயிற்சிக்காக அழைத்து சென்றுவிடுவார்களே என்ற பயத்தில், அவசர அவசியமாக அந்த பாலகிக்கு 16 வயதில் திருமணம் நடாத்தி முடித்தார்களே. அய்யகோ. இது யார் குற்றம் கடவுளே. தாய் தந்தையரின் குற்றமா. உற்றார் உறவினரின் குற்றமா. வாழ்க்கையை தொலைத்துவிட்ட மொத்த தமிழனின் குற்றமா. எங்கள் அரசியல் வக்கற்ற தனத்தின் குற்றமா. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவழிப்போம் எனக்கூறிக் கொண்டு இன்னும் கல்லாகவே இருக்கும் அந்த வெங்கடாசலபதியான உனது குற்றமா. பொறுக்க முடியலையே நாயனே.

காலையிழந்த அப்பா பிணமாக, மூக்கை பிடித்தால் வாயை ஆ என்று திறக்கத் தெரியாத அம்மா 16 வயதில் அபலையாக, ஒண்ணுமே தெரியாமல், புரியாமல் மூன்று நாள் குழந்தையொன்று இந்த சூனியத்தை விறைத்துக்கொண்டு. என்ன கடவுளே இது. ஆழிக் கூத்து, ஊழிக் கூத்து, சுனாமிக் கூத்து, வன்னிக் கூத்து, என ஆயிரம் கூத்து நடாத்தியும் உனது நரபலி ஆசை முடியலையா. போதும் கடவுளே. போதும். மூச்சு முட்டுகின்றது தெய்வமே. உணவு தொண்டை குழியை கடக்க மறுக்கின்றது பிரம்மனே. அடிவயிற்றை யாரோ பிராண்டுகின்றார்கள் சக்தியே. அப்பா இல்லாத குழந்தைகள். அம்மாவைத் தொலைத்த குழந்தைகள். இரண்டும் இருந்தும் குழந்தைகளை தேடிக் கொண்டிருக்கும் முதியோர்கள். எல்லாம் இருந்தும் எதையோ தொலைத்துவிட்ட தமிழன். புரியலை. ஒண்ணுமே எங்களுக்கு புரியல. கோட் இஸ் கிறேட் என்கின்றார்கள். அதன் அர்த்தம் கூட தெரியாமல் செத்து விடுவோமோ என்ற ஆதங்கம் மொத்த புலம் பெயர் தமிழனின் இதயத்தை சம்மட்டி கொண்டு விளாசுகின்றது அப்பனே.

கடவுள் மனிதனைப் படைத்து பூமிக்கு அனுப்பும் போது, நான் உன்னை மனிதனாக பூமிக்கு அனுப்புகின்றேன். நீ திரும்பி இங்கு வரும் போது தெய்வமாக வர வேண்டும் என்று சொன்னாராம் என்று பெரியவர்கள் பேசிக்கொள்கின்றார்கள். கடவுளே, பரம்பொருளே, நீ இப்படி எங்களை வதைத்தால் எப்படி ஐயனே எங்களால் தெய்வமாக வர முடியும். சக்தியே உடனடியாக எங்களுக்கு, அந்த வாழ்க்கையை வெற்றி கொள்ளும் சூட்சுமத்தை கற்றுத்தா. இல்லையென்றால் நாங்கள் அங்கு மிருகமாகத்தான் வர வேண்டியிருக்கும் பிதாமகனே. பிளீஸ் வாழ்க்கையை வெற்றி கொள்ளும் அந்த சூட்சுமத்தை எங்களுக்கு கற்றுத்தா.

காட்சி - 1

அந்த சகோதரி முந்தா நாளுக்கு முதல்நாள்தான் சிறிலங்கா என்கின்ற அந்த கந்தக பூமியை தரிசித்துவிட்டு வந்திருந்தார். அவருடைய கணவரின் ஒரேயொரு சகோதரர் வன்னியில் ஏற்பட்ட மிதிவெடி மிதிப்பில் காலை இழந்ததால் அவரை கொழும்பு ஆசுபெத்திரியில் வைத்திருப்பதாக செய்தி கசிந்து “ சிங்களவன் கொன்றால் கொண்டு போடட்டும்” என்ற ஒரு மன அழுத்தத்தில் அண்ணனைப் பார்க்க கணவனும், மனைவியும் பதின் மூன்று வருடத்தின் பின், கைகுழந்தையுடன் சிறிலங்கா சென்று வந்திருக்கின்றனர்.

அக்கா எப்படி அக்கா சிறிலங்கா இருக்கின்றது. வவுனியாயில் சிங்கள இராணுவம் கொடுமை புரிகின்றதாமே ? எப்படி அக்கா போய் தப்பி வந்தீர்கள். கொழும்பு போய் ஆறுநாட்கள் தங்கியிருந்தோம். எயார்போர்ட்டில் எங்கள் பெட்டிகளை திறக்கவேயில்லை. நேரடியாக அங்கிருந்து கொழும்பு போய் ஒட்டலில் றூம் எடுத்து தங்கினோம். யாரும் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. ஆறுநாட்களும் தொடர்ந்து ஆசுபெத்திரிக்குப்போய் அண்ணனைப் பார்த்தோம். ஆட்டோவில்தான் சென்றோம். ஒரே ஒரு நாள் மட்டும் ஆட்டோவை ராணுவத்தினர் நிறுத்தி எங்கே போகின்றீர்கள் எனக்கேட்டனர். ஆசுபெத்திரிக் கென்றதும் பாஸ்போட்டுகளைக் கூடப்பார்க்காமல் போகச் சொன்னார்கள்.

( கொழும்பில் என்னன்னவோ கொடுமைகள் தமிழ்பேசும் தமிழருக்கு நடப்பதாக இங்கு பழைய பஞ்ஞாங்கக்காறர்கள் கூப்பாடு போடுகின்றார்களே என்ற வாதத்தை நான் அந்த தாயிடம் வைக்கவில்லை. அவர், அந்த தாய் வாழ்க்கையைப் பேசினார் )

14-10-2009

Read more...

பகிடி வதையில் ஈடுபட்ட மாணவர்கள் பொலிஸில் சரண்.

பேராதனை பல்கலைக் கழகத்தில் பகிடி வதையினால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தினுடன் தொடர்புபட்ட சிரேஸ்ட மாணவர்கள் 13 பேரும் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளனர். இவர்கள் நாளை நீதி மன்றில் ஆஜர் படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read more...

இரு கால்களையும் இழந்த படைவீரனை மாகாண சபை உறுப்பினராக்கியுள்ளளோம்.

30 வருட கொடிய யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்ட படையினரை தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அவர்களை அரசியல் அனாதைகள் ஆக்கவேண்டாம் என ஊடகத்துறை அமைச்சர் அயேவர்த்தன யாப்பா கேட்டுக்கொண்டுள்ளார். எமது இராணுவத் தளபதி ‘Salvation Army’ க்கு பொருத்தமற்றவர் என தெரிவித்தவர்கள், இன்று அவரை தேர்தலில் முன்னிறுத்தி தாம் வெற்றி கொள்ள நினைக்கின்றனர். ஆனால் நாம் அவ்வாறில்லை இரு கால்களையும் இழந்த இராணுவ வீரர் ஒருவரை மாகாண சபை உறுப்பினர் ஆக்கி இருக்கின்றோம்.

அத்துடன் நாம் படைவீரர்களை அரசியலுக்கு கொண்டுவந்துள்ள போதிலும் அவர்களை நாம் கைவிடவில்லை, மேலும் அமைச்சு ஒன்றின் செயலாளர் என்பது இலங்கை நிர்வாக சேவையில் உள்ள உயர்ந்த பதவியாகும். அவ்வாறான பதவி ஒன்றிற்கு ஒருவரை நியமிப்பது பதவி உயர்வே அன்றி பதவி இறக்கம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

கருணாவை நிராகரித்த இந்திய பாராளுமன்றக் குழு.

இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நியமன எம்பி முரளிதரனை சந்திக்க மறுத்துவிட்டாக இந்தியத் தரப்புச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு(TNA), தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(நாபா அணி)(EPRLF), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), தமிழ் மக்கள் மக்கள் விடுதலைப் புலிகள்(TMVP) மற்றும் மலையக அரசியல் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதகள் உட்பட இலங்கயில் உள்ள சில உள்ளுர் பிரதிநிதிகளையும் இந்திய பாராளுமன்ற குழுவினர் சந்தித்துள்ள நிலையில் கருணாவை சந்திப்பதை அவர்கள் தவிர்த்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ய பாராளுமன்ற குழுவினர் திட்டமிட்டிருந்தாகவும், அவர்கள் கருணாவை சந்திக்க மறுத்ததையடுத்து அவர்களது பயணம் அரசாங்கத்தினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

அல்கொய்தாவை அழிப்பது தான் என் லட்சியம்: ஒபாமா

என் ஆட்சியின் முதல் லட்சியம் அல்கொய்தாவையும், இதர தீவிரவாத இயக்கங்களையும் ஒடுக்குவது தான் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். ஆனால் ஆப்கானிஸ்தான் பற்றி என்ன மாதிரியான கொள்கை முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை இப்போது தெரிவிக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

தமிழகத் தூதுக்குழுவினை கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு

கிழக்கு நிலவரம் குறித்து எடுத்துரைப்பு.
இலங்கையில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் வாழ்வாதாரம் குறித்து ஆராயும் பொருட்டும் உண்மை நிலைகளை கண்டறியும் முகமாகவும் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரி.ஆர் பாலு தலைமையிலான இந்திய
குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 06 மணியளவில் இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக்குழுவினரிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்தும் முதலமைச்சரினால் தெழிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் குறித்தும் விளக்கினர், அத்துடன் இந்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சில வேலைத்திட்டங்கள் குறித்தும் தனது நன்றியினை தெரிவித்ததுடன் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வான உறுதியான அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கும் மாகாண சபை முறைமையை பலப்படுத்துவதற்கும் இந்தியா பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின்போது இந்திய தூதுக்குழுவுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் ஆலோக் பிரசாத்தும், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அஷாத் மௌலானா, மற்றும் முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் டொக்டர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more...

Tuesday, October 13, 2009

திருப்தியான மனோநிலையில் தாயகம் திரும்புகின்றோம்.


தமிழக எம்.பிக்கள் குழு ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
வடக்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் கண்டறிவதற்காக இலங்கை வந்திருக்கும் தமிழக எம்.பிக்கள் குழு நேற்று (13) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியது.

வடமாகாணத்தின் நிலை குறித்து பல்வேறு சிந்தனைகளுடன் வந்த தாம், அப்பகுதிகளுக்கு விஜயம் செய்ததன் மூலம் உண்மை நிலைகளை நேரில் கண்டறிந்து திருப்தியான மனோநிலையுடன் மீண்டும் நாடு திரும்புவதாக இந்த எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கூறினர்.

வடக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து பார்வையிடுவதற்காக தம்மை இலங்கைக்கு அழைத்தமைக்காக அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்திய தமிழக எம்.பிக்கள் குழு அதற்காக அரசாங்கத்தினால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விடயங்களுக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்தது.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் செயற்திட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். கொழும்பில் 65 சதவீதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

பருவபெயர்ச்சி மழை ஆரம்பமாகும் போது நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழக எம்.பிக்கள் எடுத்துக் கூறினர். இதன்போது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டதும், தமிழக எம்.பிக்கள் திருப்தி தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி எதிர்வரும் இரு தினங்களுக்குள் நிவாரணக்கிராமங்களிலுள்ள பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை வந்து வடக்கின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தமைக்காக ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

Read more...

ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் குதிக்கின்றாரா?

இலங்கை இராணுவத்தின் 60 வது ஆண்டு நிறைவை ஒட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஜெனரல் பொன்சேகா நிகழ்த்திய பேச்சு, அவர் அரசியலினுள் நுழைவற்கான சாத்தியத்தை எதிர்வு கூறுவதாக த இந்து பத்திரிகை தெரிவிக்கின்றது.

வன்னியில் யுத்தம் முடிந்த கையுடன் இராணுத் தளபதியாக செயற்பட்டுவந்த ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் அப்பதவியில் இருந்து விலத்தப்பட்டு புதிய தளபதியாக லெப்.ஜென்ரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டிருந்தார். அக்கால கட்டங்களில் ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் குதிக்கும் சாத்தியம் இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இராணுவத்தின் 60 ஆண்டு நிறைவை ஒட்டி 40 இராணுவ அதிகாரிகள், 1700 படை வீரர்கள் ஒன்றிணைந்து நடத்திய அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு கூட்டுப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் பேசுகையில், இந்நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதம், இராணுவ ரீதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு உயர் மட்டத்திலான அடைவுகளை சந்தித்தவனாக இராணுவ சேவைக்கான அர்ப்பணிப்புமிக்க எனது கடமையினை சரிவர நிறைவு செய்துள்ளேன் எனவும் இத்தகையதொரு நிகழ்வில் உரையாற்றுவது இதுவே எனது இறுதி சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் பயங்கரவாதம் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ள இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்காத வகையில் நீங்கள் எதிர்காலத்தில் செயற்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் பொறுப்புணர்வுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளினால் உருவாக்க முயற்சிக்கப்படுவதாக கூறப்படும் கூட்டணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக நிறுத்த சரத் பொன்சேகாவை இழுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கை அரசிற்கு ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துவருவதாக பேசப்படுகின்ற இத்தருணத்தில் அவருடைய மேற்படி பேச்சு அவர் அரசியலினுள் நுழைவதாக வெளிவந்த செய்திகளில் உண்மை உள்ளதாக தோன்றுகின்றது.

அதே நேரம் சரத் பொன்சேகாவுக்கு அரசு வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவியை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் கூட்டுப்படைத் தளபதியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியிலும் அவர் நீடிக்க விரும்பவில்லை என தெரியவருகின்றது. ஜெனரல் சரத்பொன்சேகாவில் பதவி நீடிப்புத் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், பேச்சுவார்த்தைகளின் போது தான் பதவி நீடிப்பு ஒன்றினை எதிர்பார்க்க வில்லை என்ற செய்தி சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நம்பகமாக தெரியவருகின்றது.

இந்நிலமையில் ஜெனரல் சரத் பொன்சேகா மாற்றம் ஒன்றின் பொருட்டு அமெரிக்கா செல்லாம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது இரு மகள் மாரும் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதுடன் சரத்பொன்சேகாவிற்கு அமெரிக்க நிரந்தர வதிவிட அனுமதி உண்டு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பாரிசில் கைதுசெய்யப்பட்டிருந்த 22 புலிச் சந்தேக நபர்களுக்கும் நீதிமன்றில்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் (ஏப்ரல் 2007) anti-terrorism unit - SDAT (Sous-direction Antiterroriste) of the French Interior Ministry, இனரால் பாரிஸில் கைது செய்யப்பட்டிருந்த புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர்களான றேகன், மேத்தா, உட்பட 22 பேர் நேற்று பிரான்ஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் கழகம் எனும் பெயரில் இயங்கிவந்த இவர்கள், பிராண்ஸ்வாழ் 75000 தமிழ் மக்களிடம் மாதாந்தம் 5 மில்லியன் யூரோக்களை கப்பமாக பெற்று வந்துள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாரிய குற்றங்களை புரிந்தமை, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி புரிந்தமை, பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்காக நிதிசேசரித்தை போன்ற குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, Gilles Piquois அவர்கள் தமது கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டபோது, புலிகள் இயக்கம் 2007ம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்டிருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு நிதி சேகரிப்பு, அவ்வியக்கத்திற்கு நிதி வழங்கியுள்ளமை, அவ்வியக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணை நின்றமை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாலேயே, சட்டத்தரணி, தனது கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்டபோது புலிகள் இயக்கம், பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்டிருக்கவில்லை என்ற வாதத்தை முன்வைத்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.

Read more...

41 ஆண்டுகளுக்கு பிறகு விமானம் கடத்தியவர் கைது

அமெரிக்காவை சேர்ந்தவர் லூயிஸ் ஆர்மன்டோ பெனா சோல்ட்ரன். கடந்த 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் நியூயார்க்கில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை கடத்தினார். அந்த விமானம் மீட்கப்பட்டது. ஆனால், இவர் தலை மறைவாக இருந்தார். இந்த நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நியூயார்க்கில் உள்ள ஜான் எப். கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தில் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்த இவர் கைது செய்யப்பட்டார். இன்று (13-ந்தேதி) இவர் மங்கட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றார்.

Read more...

கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் யூனிஸ்கான்

பாகிஸ்தான் அணி கேப்டன் யூனிஸ்கான் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நீïசிலாந்து அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் சூதாட்டம் நடந்ததாக கூறப்பட்டது. இதுதொடபாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் தனது கேப்டன் பதவியை யூனிஸ்கான் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அவருடைய ராஜினாமாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

Monday, October 12, 2009

மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்ததும் வடக்கில் மாகாணசபைத் தேர்தல்

வடக்கில் பனையும் தெற்கில் தென்னையும் இணையும் காலம் விரைவில் - ஜனாதிபதி

வடக்கில் மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டதும் ஏனைய மாகாணங்களைப் போன்று அங்கும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைக்கு ஐ.ம.சு.மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் சொந்த இடம் செல்ல மிகுந்த விருப்பதுடன் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னர், அப்பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அதற்குத் தேவையான பெருமளவிலான இயந்திரங்களை நாம் வரவழைத்துள்ளோம். இவையனைத்தையும் நாம் பணம் கொடுத்தே பெற்றுக் கொண்டுள்ளோம்.

கண்டபடி குரலெழுப்பும் சர்வதேச சமூகத்திற்கு ஏன் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியாது? எனது மக்களுக்கு அநியாயம் இடம்பெறக் கூடாது. அவர்களை பாதுகாப்பது எனது பொறுப்பு மட்டுமல்லாமல் கடமையும் கூட. வடக்கிலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றோம்.

இதேவேளை, அவர்களது வாழ்வாதார தொழில்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்,

உங்களுடைய யாழ்ப்பாணம் மாநகர சபையானது இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. யாழ். மக்கள் பல ஆண்டுகளாக இம்மாநகர சபையினூடாக பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபையின் வாசிகசாலையானது தெற்காசியவிலேயே சிறந்த வாசிகசாலையாக பெயர் பெற்றது. மிகவும் அரிதான பல நூல்கள் அதில் இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எரியூட்டினர். இது எதிர்கால பரம்பரையினருக்கே இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும்.

கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக யாழ். மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். எல். ரி. ரி. ஈ.யினரால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை எல்லோரும் அறிவர். யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இன்று எமது மக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை.

இன்று எமது நாட்டு மக்கள் எந்தவொரு பயமோ சந்தேகமோயின்றி சுதந்திரமாக வாழ முடியும். யுத்தம் முடிவடைந்ததும் நாம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நகர சபைக்கான தேர்தலை நடத்தினோம்.

வடக்கைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டதும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாகாணங்களில் போன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.

ஜனநாயகம் மீளவும் நிலை நாட்டப்பட வேண்டும். இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

அன்று தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். யாழ். தேவி ரயில் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தது.

நாமும் அந்தக் காலத்தில் யாழ். தேவியில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளோம். எமது தமிழ் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருந்துள்ளோம்.

யாழ். தேவி மீண்டும் தொடர்ச்சியான சேவையில் ஈடுபடுவதைப் பார்ப்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வடக்கின் பனை மரமும் தெற்கின் தென்னை மரமும் எப்படியாவது மீண்டும் ஒன்றிணையும். யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்திகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலைதூக்காத வகையில் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, விவசாயம், மீன்பிடி அபிவிருத்தி, சுகாதாரம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகி ன்றன.

இளைஞர்களுக்கு நாளை வேலைத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கின் வசந்தம் வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.

வடக்கே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேந்திரன் ஸ்ரீகாசன் எனும் மாணவன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்று இரண்டாவதாக வந்துள்ளார். அம் மாணவனுக்கு எனது வாழ்த்துக்கள். ஜாதி, இன, மத, குல பேதமின்றி நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல ஒற்றுமையாக வாழ வேண்டும்.

தென் மாகாண சபைத் தேர்தலில் நாம் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம்.

நாம் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே இந்த பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

யாழ்ப்பாண மக்களுக்காக சேவையாற்றுவதற்கு உங்களனைவருக்கும் திறமையும் சக்தியையும் கிடைக்கப்பெற வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.


யாழ். மேயர்


பல தசாப்தங்களாக சோகத்தில் வாழ்ந்து வந்த எமது மக்களுக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு மக்களுக்காக சேவையாற்ற நாம் தயாரென்றும் ஜனாதிபதி முன்னிலையில் யாழ். மாநகர சபையின் 23வது மேயராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பற்குணராஜா யோகேஸ்வரி தெரிவித்தார்.

நன்றி தினகரன்


Read more...

மகின்த சகோதரயாவுக்கு. யஹியா வாஸித் – ( பாகம் – 1 )

எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி கனடாவாழ். சிறிலங்காவைச் சேர்ந்த பழம் தின்று கொட்டை போட்ட வியாபாரிகள், இன்வெஸ்டர்கள், வர்த்தக ஆலோசகர்களை சந்திக்க உள்ளதாக இன்றைய ( 10-10-2009 ) டெய்லி மிரர் செய்தி கூறுகின்றது.

Lankan expatriates invited to meet the President next month

The government has invited Sri Lankan expatriate intellectuals, entrepreneurs, professionals and all others who are willing to contribute to the development the country to meet President Mahinda Rajapaksa next month.

An invitation issued by the Sri Lankan High Commission in Canada to Sri Lankan expatriates in the country said the meeting with the President will take place on 14th November at Temple Trees.

“His Excellency the President of Sri Lanka has expressed his keen interest and desire to meet with and address Sri Lankan expatriate intellectuals, entrepreneurs, professionals and all others who are willing to contribute to the development of our mother land. This invitation is in keeping with the pledge made by His Excellency in the immediate aftermath of the country’s liberation from terrorism and the speech made on the 61st Independence Day commemorations to provide an opportunity to those who left the country due to terrorist atrocities,” the invitation said.

At the scheduled meeting all attendees will be provided with an opportunity to meet and discuss with the representatives of the Banking, Financial Investment, Tourism as well as various other State and private institutions. (RR)


நல்லது. ஏற்கனவே இவ்வாறு பலர் வந்து போனதாகவும், அமைச்சர்களும், அமைச்சு செயலாளர்களும் அந்த முதலீட்டாளர்களையும், வர்த்தக ஆலோசகர்களையும், வியாபார ஆர்வமுள்ளவர்களையும் சந்தித்ததையும் நாம் அறிவோம். நம்மவர்களும் அறிவார்கள். ஆனால் இவை பாரிய வெற்றியளிக்கவில்லை என்பதையும் காற்றுவாக்கில் கேள்வியுற்றோம்.

ஏன். அமைச்சரும், அமைச்சு அதிகாரிகளும் அவர்களைச் சந்தித்து, நீங்கள் நமது நாட்டில் முதலிடுங்கள், உங்களுக்கு பல ஏற்று மதி வரிச்சலுகை, மூலப்பொருள் இறக்குமதி வரிச்சலுகை, உங்கள் பணத்தை எமது நாட்டுக்கு தருவிப்பதற்கு வரிச்சலுகை, உங்களுக்கு சிறிலங்கா பிரஜையாக மாறுவதற்குரிய அனுமதி, முதலீட்டுச் சபையில் ( பீ.ஓ.ஐ ) உங்களை நிரந்தர உறுப்பினராக மாற்றுவதற்குரிய இலகு வழி, உற்பத்தி இயந்திரங்களை இறக்குமதி செய்ய உடனடி அனுமதி என நிறைய விடயங்களை சொல்லியுமுள்ளனர்.

ஆனால், அப்படி வருபவர்களிடம், ஏற்றுமதி லைசன்ஸ் எடுப்பது எப்படி, பீ.ஓ.ஐ ( போர்ட் ஒப் இன்வைஸ்ட்மென்ட் ) அனுமதி எடுப்பது எவ்வாறு, சிறிலங்காவில் எத்தனை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றது, மன்னாரில் இருந்து மீன் இறக்குமதி செய்ய விரும்புகின்றோம் எப்படி ஆரம்பிப்பது, உடனடியாக எங்களுக்கு வாசிங்கடனில் உள்ள ஒரு கம்பனிக்கு மாதத்துக்கு தலா ஆயிரம் மெற்றிக் டண் பலாப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம் இறக்குமதி செய்ய விரும்புகின்றோம் அதன் புறசீஜர் என்ன, சிறிலங்காவில் கார்கோ ( எயார் கார்கோ / சீ கார்கோ ) கட்டணங்கள் எவ்வாறு இருக்கின்றது, சிறிலங்காவில் இருந்து மரத்தளபாடங்கள் இறக்குமதி செய்ய முடியுமா எனக்கேட்டால், ஈ.டி.பி ( எக்ஸ்போர்ட் டெவலப்மென்ட் போர்ட் ), ஐ.டி.பி ( இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் போர்ட் ), பீ.ஓ.ஐ ( போர்ட் ஒப் இன்வெஸ்ட்மென்ட் ) போன்றவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என வெகு ஈசியாக சொல்லி விட்டு மறைந்து விடுகின்றனர்.

அப்புறம் ஒரு கெட்ருகதர், பார்ட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுத்தல் என ஒரு சம்பிரதாயமும் அரங்கேறுகிறது.

போதாது, இது எங்களுக்கு போதாது, இந்த விளக்கம் எங்களுக்கு போதவே போதாது. நாங்கள் இங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், உங்களை திட்டினாலும், புகழ்ந்தாலும் ஒவ்வொரு வினாடியும் அங்கு நல்லது நடக்க வேண்டும், நல்ல படியாக நாடும், நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் மூச்சு விட வேண்டும், அதை இந்ந மகின்த சகோதரயாவாவது எங்களுக்கு செய்து காட்ட வேண்டும் என இறைவனை மன்றாடிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு இந்த இன்டலக்சுவல், என்டர்பிரீனியஸ், புறபோசனலிஸ்ட், இன்வெஸ்டர் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. நாங்களெல்லாம் மூன்றாம் கிளாஸ்காறர்கள். எங்களிடம் பணம் இருக்கின்றது. வியாபாரிகளிடம் முதலீட்டாளர்களிடமும் தொடர்பு இருக்கின்றது. என்ன பொருளை எங்கு விற்கலாம், சிறிலங்காவில் உள்ள உற்பத்தி பொருட்களை அதி கூடிய விலைக்கு எந்த கம்பனிகளுக்கு விற்கலாம் என்ற விபரமும் விரல்நுனிகளில் இருக்கின்றது.

ஆனால் இங்கு புலம் பெயர்நாடுகளில் இருந்து கொண்டு எவ்வாறு நாங்கள் இவைகளை செய்வது என்பதில்தான் பாரிய சிக்கல்களே இருக்கின்றது. உதாரணமாக அண்மையில் ஐரோப்பாவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு, மாதத்துக்கு நான்கு கன்டய்னர்கள் வீதம் ஜெக்கட் தேவையேற்பட, அக்கம்பனியில் பேர்ச்சசிங் ஒபீசராக இருக்கும் நம்மவர், இதை நமது நாட்டில் இருந்து தருவிக்கலாமே என்ற நப்பாசையில், தூதுவராலய கொமர்சியல் டிவிஷனை தொடர்பு கொண்ட போது, அவருக்கு அங்கு உரிய அங்கீகாரமோ, பதிலோ கிடைக்கவில்லை. அடுத்த நாள் அவர் பங்களாதேஷ் தூதுவராலய கொமர்ஷியல் டிவிஷனை தொடர்பு கொண்ட போது, அவருக்கு அங்கு ராஜமரியாதை கிடைத்ததுடன், இரண்டே வாரத்தில் பொருட்களையும் சப்ளை பண்ண தொடங்கியுள்ளார்கள். எனவே,

நீங்கள் முதலிட ஆர்வமுள்ளவர்களை அங்கு அழைக்கும் போது, உங்களுடன்

ஏற்றுமதி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் ( ஈ.டி.பீ ) இருந்து ஒரு அதிகாரியை அழைத்து வாருங்கள். சிறிலங்காவில் இருந்து என்ன பொருட்கள் ஏற்று மதியாகின்றது, எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது, அக்கம்பனிகளின் விபரங்கள், எந்தெந்த மூலப் பொருட்கள் சிறிலங்காவில் விழைகின்றது, இதற்கு எவ்விதமான ஆதரவினை ஈ.டி.பி, வளங்குகின்றது என்ற சகல விபரங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளவராக அவர் இருக்க வேண்டும்.

இன்டஸ்ரியல் டெவலப்மென்ட் போர்ட்டிலிருந்து ஒரு அதிகாரியை அழைத்து வாருங்கள். சிறிலங்காவில் உள்ள தோல் லெதர் பெக்டறிகள், செரமிக் பெக்டறிகள், கைத்தறி,கைப்பணி பெக்டறிகள், ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்து தயாரிப்பாளர்கள் பற்றிய முழுவிபரம், எவ்வகையான இயந்திரங்களை வைத்து தங்கள் கம்பனிகளை இயக்குகின்றார்கள், அவர்களுக்குரிய சிறிய பாரிய இயந்திரங்களை எங்கிருந்து தருவிக்கின்றார்கள், சிறிலங்காவில் இவற்றுக்குரிய இயந்திர தயாரிப்பாளர்கள் உள்ளார்களா, அவ்வாறு இயந்திங்கள் தயாரிப்பவர்களுக்கு எவ்வித உதவிகளை இன்டஸ்ரியல் டெவலப்மென்ட் போர்ட் வழங்குகின்றது. றீஎக்ஸ்போர்ட்டுக்காக நாங்கள் பொருட்களை அனுப்பினால் அவைகளை பினிசிங் புறடக்ட்டாக மாற்றும் வல்லமை சிறிலங்கன் இன்டஸ்ரியலிஸ்ட்டுகளுக்கு உண்டா என்ற விபரங்களை நாக்குநுனியில் வைத்துள்ளவராக அவர் இருக்க வேண்டும்.

எயார் கார்கோ, சீகார்கோ சந்பந்தப்பட்ட ஒரு அதிகாரியை அழைத்து வாருங்கள். இதில் எங்களுக்கு நிறைய சந்தேக கேள்விகள் இருக்கின்றது. அன்னாசிப்பழம் அனுப்ப ஒரு விதியும், மீன் அனுப்ப இன்னொரு சட்டமும், துணிவகைகள் அனுப்ப வேறொரு புறசீஜரும் இருப்பதாக ஒவ்வொரு கார்கோ காறரும், ஒவ்வொரு கதையாக சொல்லி எங்கள் ஏற்றுமதி / இறக்குமதி ஆசைக்கு சங்கூதி விடுகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு பூரண விபரம் தேவை.

கனடா மட்டுமல்ல. அனைத்து நாடுகளிலுமுள்ள ஆர்வமுள்ள அனைவரையும் அழையுங்கள். அரபுநாடுகளில் நமது இளைஞர்கள் பல மில்லியன் டாலர் புரளும் வியாபார நிறுவனங்களில் பேர்ச்சசிங் அதிகாரியாக இருக்கின்றனர். உதாரணமாக கட்டாறில் கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்ட பாரிய நிறுவனங்களில், சிறிலங்கன் இளைஞர்கள் கொள்வனவு உயரதிகாரிகளாக இருக்கின்றனர். அவர்கள் நினைத்தால், புடலங்காயிலிருந்து மாணிக்கக் கற்கள் வரை நம் நாட்டிலிருந்தே இறக்குமதி செய்யலாம்.

போதாது, போதாது, எதுவுமே போதாது. முதலீட்டாளர்களே வாருங்கள் என்ற விளம்பரம் போதாது, முதலிடுவதால் நமது நாட்டுக்கு, நமது எதிர்கால சந்ததிக்கு என்ன பயன் என்ற அறைகூவல் போதாது, முதலிட வாருங்களேன் என்ற கோஷம் காதும், காதும் வைத்தது போல் இருக்கின்றது. அது போதாது. உலகம் முழுவதும் உள்ள நமது தூதுவராலயங்களூடாக ஒவ்வொரு சிறிலங்கனின் காதிலும் இச்செய்தி பரவ வேண்டுமே என்ற சிறிலங்கா அரச நிர்வாகத்தின் சங்கொலி போதாது.

உங்களை கைபிடித்து வழிநடக்க நாங்கள் தயார்

எங்களை கை கொடுத்து வழி நடாத்த நீங்கள்தயாரா ?


( தொடருவேன்....)


12-10-2009

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com