Monday, September 28, 2009

கல்லடிக் கரையில் ஒரு இலட்சம் மக்கள் குதுகலிப்பு.

எவ்வித பாதுகாப்புக் கெடுபிடிகளும் இல்லாது மட்டக்களப்பில் கல்லடிக் கரையில் நேற்று (26-09-2009) திரண்ட ஒரு இலட்சம் மக்கள் கிழக்கின் முழக்கம் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு தமது இராப்பொழுதைக்கழித்து குதுகலித்தனர். கடந்த சுமார் 30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறானதோர் நிகழ்வு இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் மனங்களில் புதிய சிந்தனையில் தோற்றம் பெறுகின்ற இந்நேரத்தில் இன ஐக்கியங்களுடன் கூடிய நல்லுறவு களியாட்ட கலை நிகழ்ச்சிகளை நடாத்தி மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துவதும் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறக்க வைப்பதுமே இந் நிகழ்ச்சியின் நோக்கங்களாகும்.

அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள் முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு வாழ் மக்களுடன் ஒன்றித்து நீணட காலத்தின் பின்னர் அளவளாவும் வாய்ப்புகளும் கிடைத்தன. யுத்த பீதியிலும் மரண ஓலத்திலும் இறுகிக்கிடந்த மனித மனங்கள் இந்நிகழ்வின் ஊடாக விடுதலை அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.

காலையில் ஆரம்பித்த நீச்சலோட்டத்துடன் கலந்த மரதன் ஓட்டம் மட்டக்களப்பு நகர் காந்தி சிலையடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்லடி கடற்கரையில் நிறைவடைந்தது. மட்டக்களப்பு வாவியைக் கடந்து நீச்சல் அடித்து ஓடிச்சென்ற மரதன் ஓட்டம் பார்ப்போர் மனதை கொள்ளைகொண்டது.

கல்லடிக் கடலோரத்தில் இடம்பெற்ற படகுச் சவாரி ஒரு புறமும் கடற்கரையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப்போட்டி இன்னொரு புறமுமாக பகல்வேளையில் நிகழ்வுகள் களைகட்டியது. மாலை பொழுதிலிருந்து ஆரம்பித்து கலை நிகழ்ச்சிகளும் வானவேடிக்கைகளும் இரவு ஒரு மணிவரை நீடித்தது.

இசைக்கச்சேரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு சோதனைகள் ஏதுமின்றி அங்கு வந்திருந்த ஒரு இலட்சம் மக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மற்றைய அரசியல் முக்கியஸ்த்தர்களும் அளவளாவி மக்களோடு மக்களாக இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கழித்தனர்.

இறுதியில் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் நிலை வகித்த வீரர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் ரொக்கமும் இந்தியா சென்று வருவதற்கான விமானச் சீட்டுக்களும் பரிசளிக்கப்பட்டன. பெண் வீராங்கனைகளின் வரிசையில் பரிசு பெற்ற அனைவரும் மட்- ஜீவயோதி இல்ல மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் கடந்த கால கசப்புணர்வுகளை மறக்கச் செய்து மகிழ்ச்சிகளை விதைத்து புதிய உலகை நோக்கி எமது மக்களை அழைத்துச் செல்ல கிழக்கில் முழங்கிய இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சிறி ரிவி நிறுவனத்தினரும் கிழக்கு மாகாண சபையும் ஏற்பாடு செய்திருந்தனர்.




Read more...

Sunday, September 27, 2009

சுவிஸ்வாழ் தமிழ்மக்களே ஏமாறாதீர்கள்!! 'மீண்டும் புறப்பட்டு விட்டான் 'புங்குடுதீவு சுரேஸ்'..!!!

முள்ளிவாய்கால் பிரதேசத்தில் ரணகளத்தில் சிக்குப்பட்டு இரத்தமும் சதையுமாய் குற்றுயிராய் கிடந்தவர்களையும், பிணங்களாய் கிடப்பவர்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து, மரண ஓலமிடும் மனிதர்களை கூட நின்றுகூட பார்க்க நேரமில்லாமல் ஒவ்வொருவரும் தமது உயிர்களை கையில் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் உயிர்போகின்ற நிலைமையிலிருந்து மீண்டு, எங்கோ ஓர் திக்குதிசை தெரியாமல் ஓடி, யாரோ நமது உயிர்களை காப்பாற்ற போகிறார்கள் என்றெண்னி ஒடிவந்த மக்கள் இன்று.. வெறும் உயிருடன் மனம் வெதும்பி துன்பம் மிகவுழன்று, துயர் நிறைந்த வாழ்கையில் மீண்டும் சிக்குப்பட்டு முள்ளுக்கம்பிகுள் முடங்கி போயியிருக்கிறார்கள்.

'ஆத்திரத்தை அடக்கலாம் மூத்திரத்தை' அடக்க முடியாது என்பார்கள் அதைபோன்று இயற்கையின் உபாதைகளை கூட அடக்கிக் கொண்டு, வசதியாக பலவளங்களுடன் வன்னியில் வாழ்ந்த மக்கள் இன்று சேரிக்குடியிருப்புகளில் வாழ்வது போன்று வவுனியா உள்ள மினிக்காம்புகளில் வன்னி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வன்னிமக்களை வைத்துத்தான் கிட்டதட்ட 15வருடங்களாக புலித்தலைமையும், புலம்பெயர் புலி முகவர்களும் பிழைப்பு நடத்தினார்கள்.

'யானை இருந்தாலும் ஆயிரம் பொன் பெறும்' 'இறந்தாலும் ஆயிரம் பொன் பெறும்' என்பது போல அன்று புலிகள் வைத்து கொண்டு பிழைப்பு நடத்திய வன்னி மக்களை, இன்று மகிந்த அரசாங்கமும், ஐ.நா. மன்றத்தினரும் வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவது ஒரு புறமிருக்க.. அவர்களின் அத்தியாவசிய, அடிப்படை தேவைகளை பெரும் சிரமத்துக்கு மத்தியில் அரசாங்கம், ஐ.நா உலக உணவு அமைப்பினரும் ஒன்றுசேர்ந்து நிவாரண முகாம்களில் வாழும் மக்களுக்கு முடிந்தளவு, ஓரிரு குறைபாடுகள் இருந்தாலும் சீரான முறையில் செய்து கொண்டு தான் இருக்கிறது.

'ஆனால், அந்த மக்களுக்கு எந்தவித உதவியுமே செய்யாமல், அவர்களை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்கள் மீண்டும் அவர்கள் படும் அவலங்களை மட்டுமே மையபடுத்தி புலம்பெயர் நாடுகளில் வாழும் சில புலிபினாமி பிழைப்பாளர்கள் தங்கள் பிழைப்பை நடத்துவதற்கு தொடங்கியுள்ளார்கள். 'ஆடு நனைகிறது என் ஓநாய் ஊளையிட்ட மாதிரி' வன்னி மக்கள் படும் அவலத்தை நினைத்து ஊளையிட்டு (பாடி) இறுவட்டு ஒன்றை வெளியிட்டு அதில் ஊழையிடுபவர்கள் தங்கள் படத்தையும் தமிழீழத்தையம் பதிவு செய்து தங்களை தாங்களே வன்னி மக்களுக்க உதவிபுரிபவர்களாக பறைசாற்றிக் கொண்டு வன்னி மக்களின் அவலங்களை புலம்பெயர் மக்களிடம் புலம்பியழுது புதிதாய் பணம்சேர்க்க புறப்பட்டு வருகிறார்கள்.

முள்ளுக்கம்பிக்களுக்குள் முடங்கிப் போய்யிருக்கும் மக்களின் அவலத்தை பயன்படுத்தி நாம் கொஞ்ச அவலாக(காசை) அள்ளலாமா? என்றெண்னி எல்லோரையும் ஏய்க்கும் நோக்கம் கொண்டு எம்மிடையே வருகிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல புலிகள் உயிருடன் இருக்கும் பொழுது புலம்பெயர் தமிழர்களின் இரத்தத்தை ஒட்டுண்ணிகள் போல் உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தவர்கள் 'மேமாதம் 19ம்திகதிக்கு' பிறகு கொஞ்ச நாளாக இறந்து போய் கிடந்தவர்கள் மீண்டும் உருத்திரகுமாரன் தலைமையில் உயிர்தெழுந்து முள்ளுகம்பிக்குள் முடங்கிப் போயிருக்கும் மக்களை முன்னிறுத்தி முகாரி ராகம் பாடிக்கொண்டு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து எதையாவது புடுங்கலாமா? என்றெண்ணி புலம்பெயர் புலிமுகவர்கள் புறபட்டு மீண்டும் வருகிறார்கள்..

இந்த புலிமுகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவை சேர்ந்தவரான சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக சொல்லிக் கொண்டு 'முகாரி ராகம்' பாடிக்கொண்டு புறப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இவர், முன்னர் புலிகள் உயிருடன் இருந்த போது அவர்களின் ஆதரவுடனும் அவர்களுக்கு உதவி புரிவதற்காகவும், புங்குடுதீவு வாழ் மக்களுக்கு உதவப்போவதாக கூறிக்கொண்டும் 'புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்' என்ற பெயரில் (இவருடன் கொஞ்சபேரும் சேர்ந்து) ஓர் அமைப்பை தொடங்கி புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றியவர் என்பது சுவிஸ் வாழ் புங்கையூர் மக்கள் யாவரும் நன்கு அறிந்ததே.

இவர் புங்குடுதீவு மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களையும் ஏமாற்றியவராவார். 'மேல் மருவத்தூர் அம்மன் கோயில' என்ற ஒரு கோயிலை நிலம் வாங்கி தான் சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலச்சம் பிறாங்குகளை சுவிஸ் வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டுள்ளார். இவர் கோயிலை அமைக்கப் போவதாக சொல்லி சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் வாங்கிய காசுக்கு கோயிலையும் கட்டவில்லை குளத்தையும் கட்டவில்லை.

இவர், தற்பொழுது பேர்ன் மானிலத்தில் புறுக்டோப் (கீர்க்பேர்க்) எனும் இடத்தில் ஒரு மேல் மருவத்தூர் அம்மன் கோயில் ஒன்றை தற்காலிகமாக அமைத்து அந்த கோயிலுக்கு தானே பூசகராகவும் இருக்கிறாராம். கடவுளுக்கு பூசை செய்பவர்களுக்கு வேதாகமங்கள், மந்திரங்கள் என்று ஏதாவது கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படையாகும். ஆனால் இந்த மேல் மருவத்தூர் அம்மன் கோயில் பூசாரிக்கு மந்திரமும் தெரியாது ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது அவருக்கு தெரிந்தது எல்லாம் 'தந்திரம்' மாத்திரமே. அதாவது தமிழர்களை வைத்து எப்படியெல்லாம் பிழைக்கலாம் என்கிற தந்திரத்தை மட்டுமே அவர் கற்று தெரிந்து கொண்டவர்.

புலிகள் உயிருடன் இருக்கும்போது புலம்பெயர் தேசங்களில் வாழும் புலிமுகவர்கள் பல ஆயிரக்கணக்கான அமைப்புகளை பல்வேறு பெயரில் தோற்றுவித்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை அள்ளினார்கள். அதில் ஈடுபட்ட புலம்பெயர் புலிப்பிரமுகர்கள் எப்படியாவது இந்த அமைப்புகளிடையே புகுந்து தமிழர்களிடையே பிரபலமாகலாம் என்பதோடும், தமிழர்களின் காசுகளை ஏமாற்றி வாங்கிக் கொள்ளலாம் என்ற கள்ள நோக்கத்தோடும் 'தமிழனை ஏமாற்றி பிழைப்பதற்காக உருவாக்கப்பட்ட' இவ்வமைப்புகளில் புகுந்து கொண்டு நல்ல வருமானத்தை கடந்த காலத்தில் ஈட்டி, வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றையும் வாங்கி தங்கள் வாழ்வையும் வளத்தையும் பெருக்கிக் கொண்டார்கள். அவர்களில் இவரும் ஒருவர்தான் நாம் மேலே குறிபிட்ட 'தந்திரம்' மட்டுமே தெரிந்த மேல் மருவத்தூர் அம்மன் கோயில் பூசாரியான புங்குடுதீவை சேர்ந்த சுரேஸ் என்பவராவார்.

இவர் புலிகளின் ஆதரவு அமைப்புகள் பலவற்றில் தன்னை இணைத்துக் கொண்டு பல வழிகளிலும் காசை சம்பாதித்தவர். இப்பொழுது புலிகளின் உயிர் பிரிந்தவுடன், வன்னியில் முள்ளுக்கம்பிகளுக்குள் வாழும் மக்களை நினைத்து 'முகாரி' ராகம் பாடி காட்டி புங்கையூர் மக்களிடமிருந்து காசு புடுங்குவதற்கு புறபட்டு வாராராம்.. வெகுவிரைவில் இவர் தமிழ்நாட்டிலிருந்து யாரையோ சில பிரமுகர்களை அழைத்து வந்து ஒரு விழா நடத்தி புங்குடுதீவு மக்கள் எல்லோரையும் அழைத்து தனது 'முகாரி ராகத்தை' பாடி காட்டி புங்குடுதீவு மக்களுக்கு பரவசம்மூட்டி அவர்கள் பரவசமடைந்திருக்கும் போது அவர்களின் பைகளிலில் இருக்கும் பணத்தை பறிப்பதற்கு வருகிறாராம்..

வன்னியில் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய, மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் உணவு வழங்கள் போன்வற்றை ஐ.நா வின் அகதிகள் அமைப்பும், அரச அத்தியாவசிய சேவைகள் திணைகளமும் சேர்ந்தே செய்து வருகின்றன. அத்தோடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறிபிட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களை தவிர வேறு யாரும் வன்னியில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்கவோ அல்லது அரச அனுமதியின்றி வன்னி முகாம்களில் உள்ள மக்களை பார்வையிடவோ முடியாத நிலை காணப்படுகிறது.

குறிப்பாக ஐ.நா. உலக உணவுத்திட்டதின் மூலமே வன்னி முகாமில் உள்ள மக்களுக்கான உணவு வினியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அகதி முகாம்களில் உள்ளவர்கள் யாராவது பட்டினியால் இறந்தால் அதற்கு ஐ.நா மன்றமே பொறுப்பு என கடந்த காலத்தில் அரசுகூட அறிவித்திருந்தமையையும் நாம் அறிவோம். சர்வதேசத்தால் அறியப்பட்ட அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனங்கள், இலங்கையில் இருக்கும் முக்கிய எதிர்கட்சிகளான ஐ.தே.கட்சி, JVP, தமிழ்தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காஙகிரஸ் மற்றும் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளே அகதி முகாம்களுக்கள் போய் அந்த மக்களை பார்வையிடவோ அவர்களுக்கு உதவி செய்யவோ முடியாத நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் தடுத்து வைத்திருக்கிறது. நிலமை இப்படியிருக்கையில்..
புங்குடுதீவை சேர்ந்தவரான சுரேஸ் என்பவர், முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஏதோ அவருடைய அவலக்குரலில் 'முகாரி ராகம்பாடி' அதை இறுவட்டு மூலம் வெளியிட்டு புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க போவதாக நாம் அறிகிறோம்.

இவர், இப்படி அழுது குழறி புங்குடுதீவு மக்களிடம் ஏமாற்றி வாங்கும் பணத்தை எப்படி வன்னியில் முகாம்களில் உள்ள மக்களுக்கு கொடுப்பார்??; என்பதையிட்டு கொஞ்சம் விழிப்படைந்து புங்குடுதீவு மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான் ஆனால் இது மிகவும் வருந்ததக்கதும், மோசமான மோசடியுமாகும். ஏன்எனில் வன்னி முகாம்களில் இருப்பவர்கள் படும் துன்பங்களும், துயரங்களும் வார்தைகளில் சொல்ல முடியாதவைகள் என்பது ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல ஐ.நாடுகள் அமைப்பினரிலிருந்து உல நாடுகளே கவலைப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்த அறிக்கையானது ஒரு தனிப்பட்ட 'சுரேஸ்' என்ற மனிதரின் மேல் கொண்ட காழ்ப்புணர்சியில் இந்த அறிக்கையை நாம் வெளியிடவில்லை மாறாக 'தமிழ் சமுதாயமே, புங்குடுதீவு மக்களே, கொஞ்சமேனும் உங்கள் இதயத்தை திறந்து பாருங்கள் மனிதர்களின் படும் துன்பத்திலேயே பிழைப்பு நடத்துபவர்கள் மனித ஐன்மங்களே கிடையாது. இந்த வன்னிமக்களின் அவலத்தை காட்டி பிழைப்பு நடத்துவது எப்படிபட்ட பிழைப்பு என்றால் யாரோ பெத்த ஒரு ஊனமுற்ற ஒரு பிள்ளையை வாடகைக்கு வாங்கி அந்த பிள்ளையை பொதுமக்களிடம் காட்டி இந்தியாவில் சிலபெண்கள் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். அந்த மாதிரியான பிழைப்புத் தான், இந்த சுரேஸ் என்பவரால் வெகுவிரைவில் 'வன்னி மக்களுக்காக' எனச்சொல்லி நடத்தப்படவிருக்கின்ற 'இறுவெட்டு வெளியீட்டு விழா' நிகழ்ச்சியாகும்.

சுவிஸ்வாழ் தமிழ்மக்களே இதையிட்டு மிகவும் விழிப்பாயிருங்கள் கடந்த காலங்கள் போல் திரும்பவும், திரும்பவும் ஏமாறாதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவரின் லீலைகள் பற்றியதான சில தரவுகளை நாம் உங்களுக்கு கீழே அறியத் தருகிறோம்..

இவர் ஏற்கனவே, சுவிஸ் வாழ் மக்களிடமிருந்து மேல் மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கட்டுவதாக பல இலச்சக்கணக்கான பிறாங்குகளை சேர்த்து மக்களை ஏமாற்றியதோடு, புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் என்ற பெயரில் புங்குடுதீவுக்காக காசு சேர்ப்பதாக சொல்லி கொண்டு இந்தியாவிலிருந்து கவிஞர் வைரமுத்துவை கூப்பிட்டு பெருவிழா எடுத்து புங்குடுதீவு மக்களிடம் பல இலச்சம் சுவிஸ் பிறாங்குகளை கையாடல் செய்தவர்களில் ஒருவர். (இவாகள் -புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முன்னாள் முக்கியஸ்தர்கள்- புங்குடுதீவு அபிவிருத்திக்கென சேர்த்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் பிராங்குகளில் புங்குடுதீவு சாட்டிவீதி அபிவிருத்திக்கென இரண்டாயிரம் சுவிஸ் பிராங்கும் புங்குடுதீவில் உள்ள ஐந்து பாடசாலைகளுக்கு ஒன்பதினாயிரத்து ஐநூறு சுவிஸ் பிராங்கும் புங்குடுதீவு வைத்தியசாலைக்கென பதினையாயிரம் சுவிஸ் பிராங்குமாக மொத்தம் இருபத்தாறாயிரத்து ஐந்நூறு சுவிஸ் பிராங் மட்டுமே இதுவரை (பதினைந்து வருடங்களில்) புங்குடுதீவுக்காக செலவழிக்கப் பட்டுள்ளது.

ஆனால் கவிஞர் வைரமுத்துவை சுவிஸ் வரவழைத்து காலில் விழுந்து கொண்டாடிய களியாட்டத்திற்கு செலவழித்த செலவோ (மொத்த செலவு) 24675பிராங் 40ராப்பன்! (அதிலும் வைரமுத்துவின் தங்குமிட -ஓட்டல்- செலவு மட்டும் 2617பிராங், விமானச்சீட்டு 1310பிராங், நினைவுப்பரிசு 550பிராங், விளம்பரம் 1144பிராங், நடனஇசைக்குழுக்களின் செலவு 4000பிராங் இப்படிப் பலதரப்பட்ட செலவுகளின் மொத்தமாக வைரமுத்துவுக்காக செலவழிக்கப்பட்டது மட்டும் 24675பிராங் 40ராப்பன்!) தமிழீழக் கலைஞர் சாந்தன் உட்பட்ட கலைஞர்களுக்கான நிகழ்ச்சிச் செலவு 8300பிராங் 80ராப்பன் செலவு! இவ்விரண்டினதும் மொத்தச் செலவே 32976பிராங் 20ராப்பன்!! இதுபோன்று பல களியாட்ட, அஞ்சலி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது. அதன் செலவெல்லாம் எவ்வளவு?? இதுவெல்லாம் தேவையா??? புங்குடுதீவு மக்களே சிந்தியுங்கள்!! ஆனால் புங்குடுதீவுக்காக மொத்தம் இருபத்தாறாயிரத்து ஐந்நூறு சுவிஸ் பிராங் மட்டுமே இதுவரை (பதினைந்து வருடங்களில்) செலவழிக்கப் பட்டுள்ளது.

தமது பெயருக்கும் புகழுக்காகவும் மட்டுமல்ல தாம் சொந்த வீடும் சொகுசு காருமாக சுகபோகமாக வாழ்வதற்காக 'புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்' எனும் பெயரில் புங்குடுதீவு மக்களின் தலையில் மிளகாய் அரைத்த சிலரில் இந்த சுரேசும் ஒருவர். இவர் மக்களை ஏமாற்றி பிழைப்பதில் கைதேந்தவர் என்பதை புங்குடுதீவு மக்கள் நன்கு அறிவார்கள். இப்போ பெரிய, பெரிய கட்சிகள், வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் போன்றனவே வன்னி மக்களை பார்வையிடவோ அல்லது உதவி செய்யவோ முடியாமல் அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், சுரேஸ் என்பவர் வன்னியில் உள்ள அகதி முகாம்களில் வாழும் மக்களுக்காக என காசுசேர்த்து எப்படி உதவுவார் என்பதை சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் சற்றேனும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பார்களா???

சுரேஸ் என்பவரும் கடந்த காலங்களில் பல்வேறு வகையில் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைத்துள்ளார் என்பதை அனைவரும் அறிவோம். மீண்டும் மீண்டும் நம்மை ஏமாற்றுவதற்கு புதிய திட்டத்துடன் வருகிறார். இதையிட்டு மிகுந்த அவதானத்துடன் புங்குடுதீவு மக்கள் மட்டுமல்ல சுவிஸ்வாழ் தமிழ் மக்களாhகிய நாம் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அகதி முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கை என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத நரக வாழ்க்கையாகும். அவர்களின் வாழ்வின் அவலத்தில் சுரேஸை போன்ற பிழைப்புவாதிகள் குளிர்காய முற்படுகிறார்கள் என்பதே நமது ஆதங்கமாகும்..!!

நன்றி. -சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்.

Read more...

Saturday, September 26, 2009

அமைச்சரவையில் மாற்றங்கள் : பசில் வெளிவிவகார அமைச்சராகலாம்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாகவும், அதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச வெளிவிகார அமைச்சராக நியமனம் பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிறிலங்கா சுதந்திர முன்னணிக்குத் தாவிக்கொண்ட அமைச்சர் போகல்லாகம தொடர்பாக ஊடகங்கள் கடந்த சில காலங்களாக பல குற்றச்சாட்டுக்களை சுமந்தி வந்த நிலையில் அவர் ஜனாதிபதி யினால் பாதுகாக்கப்பட்டிருந்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுப் பதவியைப் போகல்லாகம பெற்றுக்கொண்டதில் இருந்து அரச செலவில் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தனது மகளின் பிறந்த நாளுக்காக 45 லட்சம் ரூபா அரச பணத்தை செலவிட்டிருந்தாகவும் செய்திகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாககும்.

Read more...

Thursday, September 24, 2009

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரான்சு ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கவேண்டும் என்று பிரான்சு அதிபர் சர்கோசி வலியுறுத்தி இருக்கிறார். 100 கோடி மக்கள் தொகையுடன் உள்ள இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் கொடுக்காமல் விட்டுவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. பொதுச்சபையில் பேசியபோது அவர் இதை குறிப்பிட்டார்.

Read more...

நீதி அமைச்சரின் வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தல்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள வரிவிலக்கு விற்பனை நிலையம் ( Duty Free shop) ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக சாராயப் போத்தல்களைக் கடத்திச் சென்ற நீதி அமைச்சுக்குச் சொந்தமான வாகனம் ஒன்று சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமைச்சகத்திற்கு சொந்தமான 63-2558 எனும் இலக்கத்தை உடைய வாகனமும் அதன் சாரதி எச்.எம். பண்டார வும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், உயர் மட்டத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக சாரதி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வாகனம் சுங்க அதிகாரிகளால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வரி விலக்கு விற்பனை நிலையங்களில் வெளிநாட்டு பிரஜைகளே பொருட்களை வாங்கமுடியும். ஆனால் குறிப்பிட்ட நிலையங்களில் இருந்து மேற்படி வியாபாரம் பன்நெடுங்காலங்களாக இடம்பெற்று வருவதாக கைது செய்யபட்டிருந்த சாரதி தெரிவித்ததாக சுங்கத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட சட்டவிரோத செயல்தொடர்பாக சுங்க அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். சுங்கத் திணைக்களத்தின் சார்பாக சட்தத்தரணி லலித்த வீரசிங்க இவ் வழக்கை பதிவு செய்துள்ளார்.

Read more...

ஸ்னைப்பருடன் வந்த புலி உறுப்பினர் ஓமந்தையில் கைதாம்.

ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றுடன் ஒமந்தைப் பிரதேசத்தில் வைத்து புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. கைது செய்யப்பட்டுள்ள நபர் புலிகளின் ராதா படையணியைச் சேர்ந்தவர் எனவும், அவர் கிளிநொச்சி பளை பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வந்துள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

"பிரேம்ஜீ கட்டுரைகள்" நூலரங்கு

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜீ ஞானசுந்தரத்தின் "கட்டுரைகள்" நூலரங்கு எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் ஸ்காப்ரோ வில் இடம்பெறவிருக்கின்றது.


Read more...

பிரதி அமைச்சரின் மகன் தாக்கியதில் பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில்.

அனுராதபுரப் பிரதேசத்தில் பிரதி அமைச்சர் எக்கநாயக்க வின் மகன் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து நீதிமன்று அமைச்சரின் மகன் ரசிக்க எக்கநாயக்கவின் வீட்டினை சோதனை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

பொலிஸாருக்கும் அமைச்சரின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே இச்சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.

Read more...

Wednesday, September 23, 2009

புலிகளின் பணமும், சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிரான பயன்பாட்டில்

2வது சவாலையும் முறியடிக்கும் முயற்சியில் அரசு
பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக ஒழிக் கும் முதலாவது சவாலுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த எமது அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்கும் இரண்டாவது சவாலை முகம்கொடு க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறிய தாவது,

இலங்கையில் புலிகளின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்பட்ட போதும் 29 வருடங்களாக புலிகள் திரட்டிய பெருமளவு பணம் இன்னும் காணப்படுகிறது.

இது தவிர புலிகளின் சர்வதேச தொடர்பாடல் வலையமைப்பும் இன்னும் ஒழிக்கப்பட வில்லை. இதனால் எமது நாட்டுக்கு எதிரான சர்வதேச அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகிறது.

புலிகளின் அழுத்தம் காரணமாக அமெரி க்க செனட் சபையில் இலங்கைக்கு எதி ராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட் டுள்ளது. யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி அடங்கலான இராணுவ தளபதிகள் அனைவரையும் சர்வதேச யுத்த நீதிமன் றத்தின் முன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட போதும் புலிகளின் அச்சுறுத்தல் முழுமையாக ஓயவில்லை. புலிகளின் பணமும் சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது.

சர்வதேச ரீதியான சவால்களை முகம் கொடுக்கத் தான் தயாராக இருப்பதாகவும் யுத்த நீதிமன்றத்தின் முன்செல்ல நேரிட்டால் அனைவர் சார்பாகவும் தான் செல்வ தாகவும் சட்டத்தரணிகளுடான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலிகளை ஒழித்ததால் பெற்ற சுதந்திரத்தை முழு நாடும் இன்று அனுபவிக்கிறது. பெற்ற வெற்றியை தொடர்ந்து பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே தென்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. சகல தரப்பினரும் ஒன்று பட்டு பெற்ற வெற்றியை பாதுகாக்க வேண்டும்.

யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு பணம் இன்று நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. சகல துறைகளிலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டு வருகிறது. வெளிநாட்டு வீதிகளின் தரத்திற்கு அம் பாந்தோட்டையிலுள்ள வீதிகள் அபிவிரு த்தி செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆஸ்பத்திரிகள் என்பனவும் சிறந்த நிலையில் உள்ளன.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் முன்னரை விட அதிகமாக அபிவிருத்தி பணிகள் இட ம்பெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ள னர். பின்தங்கிய பகுதிகள் யாவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி 2/3 பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் 3/4 க்கு நேருக்கமான வாக்குகளை பெற்றது. அதனைவிட கூடுதல் பெரும்பா ன்மையுடன் தென்மாகாண சபைத் தேர் தலில் வெற்றிபெறுவதே எமது நோக்கமாகும்.

இறுதியாக நடைபெறும் தென்மாகாண சபைத் தேர்தல் ஏனைய இரு பிரதான தேர்தல்களுக்கும் சிறந்த அடித்தளமாக இருக்கும். யுத்தம் முடிவடைந்துள்ளதால் பெருமளவு வெளிநாட்டவர்கள் இலங்கை யில் முதலீடு செய்து வருவதோடு வெளி நாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித் துள்ளது.

இதனால், தொழில்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பிரான்ஸிலுள்ள பல முக் கிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன என்றார்.

இங்கு உரையாற்றிய தெஹிவளை- கல் கிஸ்ஸ மாநகர சபை பிரதி மேயரும் தெஹி வளை சு.க. அமைப்பாளருமான தனசிரி அமரசேகர கூறியதாவது,

நான் பெலியத்தை பிரதேசத்தில் பிராச ரப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டுள்ளேன். அம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மன்னணி மகத்தான வெற்றியீட்டும். தென் மாகா ணத்தில் நாம் 85 வீத வாக்குகளை பெறு வோம் தென் பகுதி மக்கள் அரசாங்கத்துட னேயே உள்ளனர். இப்பகுதிகளில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.

ஐ.தே.க. வுக்கு தென்பகுதி மக்கள் இம் முறை நல்ல பாடம் புகட்டுவர். ஐ.தே.க. வின் ஓரிரு கூட்டங்களே நடைபெறுகின் றன. ஐ.தே.க. கூட்டங்களில் பங்குகொள்ள எவரும் முன்வருவதில்லை என்றார்.


Read more...

இடைத்தங்கல் முகாம் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும். தயான்

ஐ.நா விற்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்டு வந்த கலாநிதி தயான் ஜெயதிலக அவர்கள் டெய்லி மிரர் பத்திரிகையின் கொட்சீற் எனப்படும் நேர்காணலில் இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்ப்படவேண்டும் எனவும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவ்வாறு தடுத்து வைக்க முடியாது எனவும் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என மிகவும் தெளிவாக கூறுகின்றார்.

அனைவராலும் 13ம் திருத்தச்சட்டம் நாட்டின் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. இவ்விடயத்தை நன்கு கவனிக்கவேண்டும். பிரபாகரன் 13ம் திருத்தச் சட்டத்தினை எதிர்த்திருந்தார். அதன் ஏற்பாட்டாளர்களான இந்திய அமைதிகாக்கும் படையினருடன் போர் ஒன்றை தொடுத்திருந்தார். அவ்வாறு 13ம் திருத்தச் சட்டம் நாடுபிரிவதன் முதற்கட்டமாக இருந்திருந்தால், பிரபாகரன் அதை ஏற்றிருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கை மீது போர் குற்றங்களை சுமத்த முற்படுகின்றனர். நாம் எமது படையினரை பாதுகாக்கவேண்டும். அதற்கு இரண்டு வழிகள் உண்டு. இங்கு இடம்பெற்றிருப்பது நியாயமான போர். கொடியபயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் அன்று கூறிவந்த விடயங்களை தொடர்ந்தும் கூறமுடியாது. தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். இன்று இடைத்தங்கல் முகாம்மக்களின் மீழ்குடியமர்வு, அரசியல் தீர்வு இரண்டும் போர் குற்றங்களுடன் ஒன்றிணைகின்றது. ஆனால் அனைவரும் எதிர்பார்க்கும் இடைத்தங்கல் முகாம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்போது போர் குற்றம் என்பது இல்லாமல்போகும்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக மீண்டும் அமரர் கதிர்காமர் அவர்களை கொண்டுவர முடியாதுபோனாலும் எமது அமைச்சரவையில் அந்த பதவிக்கு பொருத்தமானவர்கள் இருக்கின்றார்கள். கலாநிதி சரத் அமுனுகம, கலாநிதி ஜி.எல் பீரிஸ் போன்றவர்களால் ஓர் சிறந்த வெளிநாட்டு உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும், என்பதன் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோகித்த போகல்லாகம அப்பதவிக்கு பொருத்தமற்றவர் என கூறுகின்றார்.

இவ்வாறு இலங்கையின் இன்றைய நிலைமைகள் தொடர்பாக தனது தெளிவான கருத்துக்களை மிகவும் துணிவுடன் கூறியிருக்கும் அவரது நேர்காணலின் முழுவடிவம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Read more...

நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நளினி தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். நளினிக்கு ஆதரவாத மேலும் 12 கைதிகள் அவரது விடுதலைவேண்டி உண்ணாவிரதத்தில் குதித்திருந்தனர்.

இந்நிலையில், நளினியின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் உறுதியளித்ததையடுத்து நளினி உண்ணாவிரதத்தை இன்று காலை முடித்துக் கொண்டார்.

இந்திய பிரதமர் ரஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 24, 2000 தேதியன்று தமிழக அரசு அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிட்டிருந்தது.

ஆயுள் தண்டனைக் காலமான 14 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் செப்டம்பர் 11ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

பூந்தோட்ட இடைத்தங்கல் முகாமில் பதட்டம்.

வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள முகாம் ஒன்றில் தங்கியுள்ள பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதங்களைத் தொடர்ந்து அங்கு பதட்ட நிலைமைகள் காணப்படுவதாகவும் முகாமுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளதாவும் தெரியவருகின்றது.

குறிப்பிட்ட முகாமில் தங்கியிருந்த நபர் ஒருவர் முகாமை விட்டு தப்பிச்சென்றிருந்து, மீண்டும் முகாமின் வேலியின் ஊடாக உள்நுழைய முற்பட்டபோது படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் படையினரின் பிடியில் இருந்து தப்பியோட முற்பட்டபோது அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதை தொடர்ந்து அங்குள்ள மக்கள் அவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு விட்டார் என படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் மீண்டும் முகாம்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அவர் கடத்தப்படவோ, கொலை செய்யப்படவோ இல்லை என முகாம் மக்களுக்கு காண்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு மக்களின் பதட்டம் தணியவில்லை என தெரியவரும் அதேநேரம் முகாமில் இருந்து அந்நபர் தப்ப முற்பட்டதன் பின்னணி தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

Read more...

பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது .

இந்திய ராணுவத்தில் சிப்பாயாக, 5 ஆண்டுகள் வேலை செய்து வந்தவர், சுதான் சுதாகர். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர், 2007-ம் ஆண்டு, ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் பாட்னா அருகே உள்ள கான்கர் பாக் என்ற இடத்தில் பதுங்கி இருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்து, போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர் பாகிஸ்தானின் உளவு நிறுவனத்துக்கு (ஐ.எஸ்.ஐ.) ஏஜெண்டாக செயல்பட்டது உறுதிப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இந்திய ராணுவம் பற்றிய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Read more...

Tuesday, September 22, 2009

மன்மோகன், சோனியாவிடம் தி.மு.க., - காங்., எம்.பி.,க்கள் முறையீடு :

எம்.பி.,க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை.
"முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை, அவரவர் சொந்த இருப்பிடங்களில் உடனடியாக குடியமர்த்தும்படி இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும், தமிழர்களின் இன்றைய நிலை குறித்து நேரில் அறிந்து வருவதற்கு எம்.பி.,க்கள் குழு ஒன்றையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, பிரதமர் மற்றும் சோனியாவிடம் தமிழக எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து நேற்று டில்லியில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தனித்தனியே முறையீடு செய்யப்பட்டது. ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று காலை 10.30 மணிக்கு தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எம்.பி.,க்கள் குழு சந்தித்தது. இச்சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும் உடன் இருந்தனர்.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் உள்ள, 2.6 லட்சம் தமிழர்களை மீண்டும் அவரவர் இருப்பிடங்களிலேயே குடியமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசிடம் வலியுறுத்தும்படி பிரதமரை கேட்டுக் கொண்டனர். மத்திய அரசு 500 கோடி ரூபாய் வரையிலும், தமிழக அரசின் சார்பில் எண்ணற்ற உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டிருந்தும், இவை அனைத்தும் உரிய முறையில் அளிக்கப்பட்டனவா என்பதை தெரிந்து கொள்வதற்கும், உண்மையில் அங்கு என்னதான் சூழ்நிலை உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வாறு அனுப்பப்படும் குழுவுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்காமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சுதந்திரமான முறையில் செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் இந்த குழு கூறியது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டு வருகின்றனர். கச்சத்தீவு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதி. இங்கு மீன்பிடிக்கும் மீனவர்களை தாக்குவதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர் அங்கிருந்து சோனியாவின் இல்லத்திற்கு சென்ற இந்த குழு, அவரை சந்தித்துப் பேசியது. அவரிடம் பேசிய டி.ஆர்.பாலு, "வன்னி பகுதியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஐந்தாயிரம் பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளிவருவது கவலையளிக்கும்படி இருக்கிறது' என தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் சோனியாவிடம் வழங்கப்பட்ட எட்டுப்பக்க கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த எட்டு மாதங்களுக்கு முன் என்ன கோரிக்கை வைத்தோமோ அதையேதான் இப்போதும் வைக்கிறோம். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள் குறையவே இல்லை. கடந்த 19ம் தேதி கூட கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது கடுமையான தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியது. 2006ம் ஆண்டிலிருந்து 36 தாக்குதல் சம்பவங்கள் நடந்து விட்டன. ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், 27 பேர் கடுமையான காயப்பட்டுள்ளனர், 513 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். கச்சத்தீவு, தமிழகத்தின் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதி. கச்சத்தீவை மீண்டும் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தீவை குத்தகைக்கு எடுத்தாவது தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். தான் அளித்த வாக்குறுதிபடி இலங்கை அதிபர் நடந்து கொள்ளவில்லை. இலங்கையில் திறந்த வெளியில், முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைமை கவலையளிக்கும்படி உள்ளது. மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் அவர்களின் நிலைமை மேலும் மோசமாகும். அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலை கவலையளிக்கும்படி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூட வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரவர் ஏற்கனவே வசித்த இருப்பிடங்களில் குடியமர்த்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களைச் சந்தித்த எம்.பி.,க்கள் குழுவிடம், பிரதமரும், சோனியாவும் தங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

Read more...

வேலூர் பெண்கள் சிறையில் நளினி உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் திங்கள்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் திங்கள்கிழமையோடு 5 நாள்களைக் கடந்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் பெண்கள் சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, "தன்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்; நீதிமன்ற உத்தரவுபடி இதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்' எனக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாக பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ஜெயபாரதியிடம் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கடிதம் கொடுத்தார்.

இதையொட்டி, சிறையில் காலையில் வழங்கப்பட்ட சிற்றுண்டியைப் புறக்கணித்த அவர், பிற்பகல், மாலை நேரங்களில் வழங்கப்பட்ட உணவையும் புறக்கணித்து, உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இவரிடம் சிறைத்துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி ராபர்ட் பயஸ் 5-வது நாளாகத் தனது உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை தொடர்ந்தார்.

இருவருமே, சிறையில் வழங்கப்படும் உணவை மறுத்து, தண்ணீர் மட்டுமே குடிப்பதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

ஆயுள் தண்டனை பெற்ற 5 பேருமே 14 ஆண்டுகளைக் கடந்து, தற்போது 18 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளவர்கள். தங்களை விடுவிக்கக்கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், இன்னமும் குழு அமைக்கப்படாமல் இருப்பதால், அடுத்தடுத்து இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி தினமணி

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com