Wednesday, February 24, 2010

பராளுமன்றருகே உருக்குலைந்த சடலம் கண்டெடுப்பு!

ஜெயவர்த்தனபுர கோட்டை பாராளுமன்றருகே சபாநாயகரின் வீடமைந்துள்ள பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெயந்திபுர வீதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காணப்படும் வாய்காலின் கீழே கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடலம் மிகவும் சீர் குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அது இருவாரங்களுக்கு முன்னரானதாக இருக்கவேண்டும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் தொடரும்..

Read more...

ஜெனரல் பொன்சேகா வேட்பாளர் மனுவில் கையொப்பமிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்காக ஜெனரல் பொன்சேகா வேட்பாளர் மனுவில் கையொப்பம் இட்டுள்ளதாக ஜேவிவியின் முக்கியஸ்தர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 1:30 மணியளவில் ஜெனரல் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தளத்திற்குச் சென்ற சட்டத்தரணி சுனில் வத்தளை அவரிடம் வேட்பு மனுவில் கையொப்பம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவின் நிலைமைகளை அவதானிக்க சர்வதேச குழுக்கள் வருகை.


ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை இலங்கை அனுப்புமாறு அனோமா பொன்சேகா அவ்வமைப்புக்களை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் மேற்படி அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்ததாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

Read more...

ஐ.தே.முன்னணியின் அழைப்பை ஜெனரல் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பிரச்சாரச் செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அன்னப்பறவைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுப்புத் தெரிவித்ததை தொடர்ந்து ஜெனரல் பொன்சேகா தலைமையில் தமது கட்சி கிண்ணம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா, மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா ஆகியோரை ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு நேற்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் ஐக்கிய தேசிய முன்னணி இன்று கலந்துரையாடியதாகவும் அவர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read more...

கண்டியில் ரவூப் ஹகீம் போட்டியிட எதிர்ப்பு : பொன்சேகாவின் முன்னணியில் இணைந்து போட்டி?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில்போட்டியிட இடமளிக்கக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருவாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கண்டி மாவட்டத்தலைவர் காதர் ஹாஜியார், உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இரு முஸ்லிம் வேட்டபாளர்கள் இடம்பெறும் தருணத்தில் மூன்றாமவருக்கு சந்தர்ப்பம் கொடுத்தல் உசிதமான விடயம் அல்லவென்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று நள்ளிரவுவரை ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் கண்டி மாவட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் எந்த தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதென்ற முடிவு இதுவரை எட்டப்பட்டிராத நிலையில், அவருக்கு கண்டியில் போட்டியிடவேண்டிய அவசியம் ஏற்படின் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான முன்னணியுடன் இணைந்து கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.

Read more...

சிட்னியில் மலேசியர் தாக்கப்பட்டு கொலை

சிட்னியில் வசித்து வந்த மலேசியர் ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் சுத்தியலால் கடுமையாகத் தாக்கி கொலை செய்ததாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய தூதரக ஊழியரான 43 வயதான அந்த மலேசியர், சிட்னியில் உள்ள அவரது வீட்டுக்கு முன் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக துப்பறியும் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஷேன் வூல்பேங்க் கூறினார்.

சிட்னியில் மேரியன் தெருவிலுள்ள அவரது வீட்டுக்கு வெளியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். காரிலிருந்து அவர் இறங்கியதும் அவரை இருவர் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாகத் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட அந்த மலேசியர் முகம்மது ஷா சைமின் என்று ஆஸ்திரேலியப் போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிட்னியில் வசித்து வந்ததாகவும் அவர் அண்மையில்தான் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

அவர் தாக்கப்படுவதற்கு முன்பு சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் அவர் ஓட்டி வந்த கார் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலிசார் கருதுகின்றனர். அவரது காரை இருவர் காரில் துரத்தி வந்தததை சிலர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த அந்த இடத்தில் சுத்தியல் உள்ளிட்ட சில ஆயுதங்களை போலிசார் கைப்பற்றியுள்ளனர். காரில் தப்பிச் சென்ற கொலைகாரர்களை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அத்தாக்குதலை நேரில் பார்த்தவர்களை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சைமின் தாக்கப்பட்டபோது அதை நேரில் பார்த்த ஒரு பெண் தைரியமாகத் தலையிட்டு அவரை காப்பாற்ற முயன்றிருக்கிறார். அந்தப் பெண் தற்போது போலிசாரின் புலன் விசாரணைகளுக்கு உதவி வருவதாக போலிஸ் இன்ஸ்பெக்டர் வுல்பேங்க் கூறினார். சிட்னியில் கொலை செய்யப்பட்ட சைமின், மலேசிய தூதரக ஓட்டுநராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் என்று மலேசிய தூதரக அதிகாரி முகம்மது நசீர் அபு ஹசன் கூறினார். இந்த துயரச் செய்தி தங்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Read more...

அமெரிக்காவில் தாக்குதல்: அல் - காய்தா புதிய மிரட்டல்

அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக அல் - காய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஏமன் பிரிவு மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்க விமானத்தை தகர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததது. அதற்கு அல் - காய்தாவின் ஏமன் பிரிவுதான் பொறுப்பேற்றிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக அல் - காய்தாவின் ஏமன் பிரிவு தளபதி காஸிம் அல் - ராய்மி மிரட்டல் விடுத்துள்ளார்.

" அமெரிக்கர்களே ! உங்களது காலடியில் உள்ள பூமியை தகர்க்கப் போகிறோம்" என அல் - ராய்மி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த அமைப்பின் பத்திரிகை இணையதளத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

மட்டக்களப்பு சிறுமி கற்பழிப்பு : 41 படையினர் நீதிமன்றில் அடையாளம் அணிவகுப்பில்.

மட்டக்களப்பு திகிலவட்டை பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடுசென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள முகாமொன்றைச் சேர்ந்த படையினர் மூவரால் கற்பழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் மற்றும் இராணுவப் பொலிஸார் குறிப்பிட்ட தினம் அப்பகுதியில் கடமையிலிருந்த 41 இராணுவத்தினரை இன்று மட்டக்களப்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பிற்காக நிறுத்தவுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியுடன் பாடசாலையிலிருந்து திரும்புகையில் படையினர் துரத்தியபோது ஓடித்தப்பிய வேறுசில சிறுமிகள் உட்பட வேறுபலரும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டதாக நிருபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடும்தண்டனை வழங்கப்படும் எனவும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் நேற்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாககும்.

Read more...

தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். வேறு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு ‘ரிக்கற்’ வழங்காததால் ஒதுங்கியுள்ளனர்.

தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கு ‘ரிக்கற்’ வழங்குவது யாருக்கு வழங்குவதில்லை எனத் தீர்மானிப்பதற்குக் கூட்டமைப்பின் தலைமைக்கு உள்ள உரிமையைக் கேள்விக்கு உட்படுத்தும் நோக்கம் எமக்குச் சிறிதளவேனும் இல்லை.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘ரிக்கற்’ வழங்காததற்குக் கூட்டமைப்புத் தலைமை கூறிய காரணம் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவான விடயமாக இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழ்த் தேசியம் பற்றிப் போது மான அளவு பேசாததாலேயே ‘ரிக்கற்’ மறுக்கப்பட்டதெனக் கூட்டமைப்புத் தலைமை கூறியதெனச் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறினார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது கூட்டமைப்பினரது ஏகபோக உரித்தான பதமல்ல. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் எழுந்த கருத்துருவமே தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஐம்பதுகளிலேயே உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது. அதன் பின் வேறு பல அரசியல் கட்சிகளும் குழுக்களும் தேசிய இனக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டடன.

ஒரு இனத்தைத் தேசிய இனமாக அங்கீகரித்துச் செய ற்படும் அரசியல் தலைமை அந்தத் தேசிய இன அந்தஸ்தை உறுதிப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே யொழிய, வாக்குகளுக்காகத் தேசிய இனக் கோட் பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் முன்னோடிக் கட்சிகளும் வாக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்பட்டதால் இன்று தமிழினம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. தேசியம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலும் தூரநோக்கற்றும் கூட்டமைப்பு செயற்பட்டதன் விளைவாகத் தமிழ் மக்கள் இன்று தங்கள் வரலாற்று ரீதியான வாழ்புலங்களிலிருந்து இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் தேசிய இன அந்தஸ்தை உறுதிப்படுத்துவதற்கான வளர்ச்சிப்போக்கல்ல.

கூட்டமைப்புத் தலைவர்கள் புலிகளின் செயலாணைக்கு உட்பட்டுச் செயற்படத் தொடங்கிய பின்னரே தேசியம் என்ற பதத்தை அடிக்கடி பயன்படுத்தினார்கள். புலிகளின் அகராதியில் தேசியம் என்பது தனிநாடு. கூட்டமைப்பினரும் அந்த அர்த்தத்திலேயே இப்பதத்தைப் பயன்படுத்தினார்கள். இப்போது மீண்டும் அவர்கள் தேசியம் பற்றிப் பேசுவதைப் பார்க்கும் போது தனி நாட்டு மாயையிலிருந்து விடுபடவில்லை என்றே தோன்றுகின்றது.

தனிநாட்டுக் கொள்கை காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளும் அழிவுகளும் இனி மேல் தொடரக் கூடாது. இந்த அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் காரணமான தலைவர்களை மக்கள் இனங்காண வேண் டும். பிரச்சினைகளின் தீர்வுக்காக ஆக்கபூர்வ மாகச் செய ற்படுபவர்களையே தலைவர்களாக ஏற்க வேண்டும்.

Read more...

Tuesday, February 23, 2010

டக்களஸ் தேவானாந்தாவிற்கு சத்திய சோதனை.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என்றுமே பிரியாத வடகிழக்கு என்கின்ற சுலோகங்களைக் கொண்டுள்ள ஈபிடிபி கட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதற்கு இணங்க வடகிழக்கில் சுயமாகவும் , முடிந்தால் மத்தியில் கூட்டாகவும் தேர்தலில் போட்டியிடவேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் தனித்துப்போட்டியிடுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என ஈ.பீ.டீ.பீ செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மிரர் இணையதளத்துக்கு தெரிவித்திருந்தார்.

இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என அவரால் தமிழ் மிரர் இணையதளத்துக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதி நள்ளிரவு 12 மணிவரை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்தலில் ஈபிடிபி தனித்தே போட்டியிடப்போகின்றது என கடந்த காலங்களில் தெரிவித்திருந்த கட்சியின் தலைவர் டக்களஸ் தேவானந்தாவிற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் யாழ் மாவட்டத்தில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும், தற்போது அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் அரசியல் எதிர்காலம் ஒன்று இல்லாது போகும் அபயாம் தோன்றியுள்ளதாகவும், அதன் நிமிர்த்தம் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.

ஆனால் அரசாங்கம் யாழ் சமுகத்தில் இருந்து புதிய முகங்களை உள்வாங்கியுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலில் இடம்கள் ஒதுக்குவதில் பாரிய சிக்கல் உருவாகியுள்ளதாகவும், இவ்விடயத்தில்கூட பேரம்பேச முடியாதவராக அமைச்சர் சிக்கலில் மாட்டியுள்ளதாக தெரியவருகின்றது. தான் தனித்து போட்டியிடப்போகின்றேன் என கடந்த காலங்களில் அமைச்சர் காட்டிய மவுசே (ஸ்ரண்ட்) இந்நிலைக்கு காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையில் இடம்பெறப்போகும் வன்முறைகளற்ற இத்தேர்தலில் ஈபிடிபி தனித்து போட்டியிட்டு தமது மக்கள் பலத்தை நிருபித்துகாட்டவேண்டும் என்பதே மக்களில் வேண்டுதலாக அமைந்துள்ளது.

Read more...

இடைத்தங்கல் முகாம் மக்களை மீள்குடியேற்ற அரசாங்கத்திடம் காலக்கெடு இல்லை.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் தமிழர்களது மீள் குடியேற்றம் தொடர்பாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நலன்புரி நிலைய மக்களை மீள் குடியேற்றுவதாக இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக மீள் குடியேற்ற துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் கேட்ட போது, மீள் குடியேற்றம் தொடர்பாக காலக்கெடு எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறினார்.

முகாம்களில் உள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், எனினும் அதற்கான கால எல்லைகளை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

திருமலை , வன்னி மாவட்டங்களில் ரிஎம்விபி வேட்பாளர் மனுக்களை பாரமளித்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் திருமலை, வன்னி மாட்டங்களுக்கான தமது வேட்டபாளர் மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சர் பிள்ளையானின் இணைச் செயலாளர் யூடி தேவதாசன் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஈபிடிபியில் இருந்து பிரிந்து சென்றவரும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் முன்னாள் ஆலோசகருமான டாக்டர் விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி யும் ரிஎம்விபி யுடன் இணைந்து வள்ளம் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

ரிஎம்விபி யின் பேச்சாளர் அசாத் மௌலானா , கட்சியின் முன்னாள் தலைவர் (கொலைசெய்யபபட்ட) ரகு எனப்படும் நந்தகோபனின் சகோதரர் நலினகாந்தன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவருகின்றது.

Read more...

புளொட்-தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையேயான பேச்சு இதயசுத்தியுடனானதா?

இலங்கையில் தேர்தல்கள் என அறிவிக்கப்பட்டால் கூட்டுக்கள் என்ற விடயம் சூடுபிடிக்கும். தேர்தல் முடிவடைந்தவுடன் அவ்வாறு ஒரு கூட்டு இருந்ததா என்பதற்கு அடையாளம்கூட தெரியாது போய்விடும். புலிகளின் ஆயுதஅச்சுறுத்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டை சில வருடங்கள் பேணுவதற்கு வழிவகுத்திருந்தது. புலிகளின் வன்செயல் கலாச்சாரத்தை நியாயப்படுத்துவதும் , புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக உலகிற்கு சொல்வதுமே அக்கூட்டமைப்பின் கடமையாக இருந்தகாரணத்தால் அங்கு முரண்பாடுகள் உருவாவதற்கும் பிளவுகள் ஏற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை.

மக்கள் நலன்சார்ந்து நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமற்ற கட்சிகளின் தலைமைகட்கு புலிகளின் மேற்படி கூட்டு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. தமிழ் மக்களுக்கான விடுதலைக்கான போர் எனும் பெயரால் ஆயுதப்போராட்டம் எனும் புளுடா காட்டிவந்த புலிகள், அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் கிடைத்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காக மேற்படி கூட்டை அமைத்ததுடன் , அக்கூட்டிற்கு மேற்படி இரு விடயங்களுமே தங்களுக்கான கடமை என கட்டளையிட்டிருந்தது. அக்கடளையினுள் அடங்கியிருந்த கருப்பொருளை நன்கு உணர்ந்து கொண்ட கூட்டில் அங்கம் வகித்த கட்சிகள் தாம் இலங்கையில் புலிகள் உள்ள வரை தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகளாக வலம்வரமுடியும் என புலிகளின் தாளத்திற்கு ஆடிவந்தனர். புலிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளை நிராகரித்தபோது அவற்றுக்கு தாளம்போட்டு வந்ததுடன், புலிகளின் அநீதிகளை நியாயப்படுத்தியும் வந்திருந்தனர்.

ஆனால் அதிஸ்டவசமாக கடந்த மே மாதம் 17 ம் திகதியுடன் கற்பனைகள் யாவும் முடிவுக்கு வந்தது. கூட்டுச் சிதறியது. தாம் துரோகிகள் , ஒட்டுக்குழுக்கள் என வர்ணித்தவர்களுடனும் பேசவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது. பேச்சுக்கள் இடம்பெற்றது. ஆனால் இதயசுத்தியுடன் பேசினார்களா என்றால் இல்லை. கூட்டமைப்புக் கூத்தாடிகள் இதய சுத்தியுடன் பேசமாட்டார்கள் இவர்களுடன் பேசுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், இவர்கள் கபடநோக்குடனேயே வருகின்றார்கள் என விசேடமாக புளொட் தலைவர் சித்தார்த்தனுக்கு பல தரப்பும் கூறியிருந்தபோதும் அவர் எற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவில்ல.

இவ்விடயத்தில் சித்தார்த்தன் மீது மாத்திரம் குறைகூறிவிடமுடியாது. புலம்பெயர்ந்து வாழுகின்ற தன்னம்பிக்கையில்லா முன்னாள் புளொட் உறுப்பினர்களின் நப்பாசையும் காரணமாக அமைந்திருக்கின்றது. தமது தரப்பு நியாத்தையும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால துரோகங்களையும் மக்களுக்கு எடுத்துக்கூறி, மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்கச்செய்ய திராணியற்ற மேற்படி கும்பல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கதிரைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என கருதினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தமிழ் கட்சிகளை பேச்சுக்கு அழைப்பதும் , பேசுவதுபோல் பாசாங்கு செய்வதும் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்காகவே என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். இவ்வாறு போலிப்பேச்சுக்கு அழைக்கும் கூட்டமைப்பு எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் தாயாரில்லாத நிலையில் இதயசுத்தியுடன் பேசாமல், ஏனைய கட்சிகள் மீது நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை விதிக்கின்றது. மறுபுறத்தில் தாம் சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறுகின்றது. கூட்டமைப்பின் இச்செயற்பாட்டின் நோக்கம் தாம் சகல தமிழ் கட்சிகளையும் இணைந்துக்கொள்ள முயல்வதாகவும். ஆனால் அக்கட்சிகள் ஒருமைப்பாட்டிற்கு இணங்கவில்லை என்ற தவறான கருத்தினை மக்களுக்கு சொல்வதுமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இக்கபட நோக்கங்கள் தமிழ் மக்களுக்கு தோலுரித்துக் காட்டப்பட்டு எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும். ஏது எவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வண்டவாளங்கள் அவர்களில் இருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியுடன் இணைந்து கொண்ட முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிகாந்தா , சிவஜிலிங்கம் ஆகியோரால் வெளிவரும் என நம்பப்படுகின்றது.

அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு பல்முனைப்போட்டி ஒன்று உருவாகிவருகின்ற நிலையில், தேர்தல் பிரச்சாரங்களும் அரசியல் கட்சிகளின் கடந்தகாலச் செயற்பாடுகளுமே தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கப்போகின்றது. புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கடந்த காலங்களில் தெரிவித்திருந்த கருத்துக்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளமையை உணர முடிகின்றது. தமிழ் இயக்கங்கள் யாவுமே கடந்தகாலங்களில் தவறுகளை விட்டிருக்கின்றது எனவும் தமது கரங்களிலும் இரத்தக்கறைகள் படிந்துள்ளது எனவும் அவற்றை எதிர்காலத்தில் திருத்திக்கொள்வோம் எனவும் கூறுமளவிற்கு அவரது பக்குவம் வழர்ச்சியடைந்துள்ளது.

ஆனால் இவ்விடயத்தினை வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரா இருக்கின்றார்களா என்ற கேள்வியும், அத்துடன் இங்குள்ள புளொட் இயக்க உறுப்பினர்களால் மக்களுக்கு விளங்கப்படுத்தக்கூடிய சக்கி உண்டா என்பதும் கேள்விக்குறியே. எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் இலங்கை வந்து இக்கடமையினை செய்ய தயாராகவுள்ளனரா?

இம்முறைத் தேர்தல் பிரச்சாரங்கள் என்பது இலங்கையில் கடந்த 50 வருடகால வரலாற்றில் கண்டிராத ஒன்றாகவே அமையப்போகின்றது. அத்துடன் இத்தேர்தல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நாட்டில் வன்முறைகள் அற்றதோர் தேர்தலாகவே அமையப்போகின்றது. அரசியல் கட்சிகளினதும் , கூட்டுக்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் தருணத்தில் , இத்தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது பெற்றிராத கட்சி ஒன்றுக்கு எதிர்காலமில்லை என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டும். சுமார் 30 வருடகால அனுபவம் கொண்டதாக கூறப்படும் புளொட் அமைப்பினால் ஒரு ஆசனத்தை தன்னும் கைப்பற்ற முடியாமல் போனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் சென்று நாம் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தங்களை அறிமுகம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்.

Read more...

இலங்கை அரசின் போக்கில் அமெரிக்காவிற்கு திருப்தி இல்லையாம்

சரத் பொன்சேகா விடயத்தை இலங்கை அரசு, தனது நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கையாள வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. பிபிசி- க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் ராபர்ட் பிளேக், பொன்சேகா விடயத்தை ராஜபக்ச அரசு கையாளும் விதம் தங்கள் நாட்டுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் கூறினார்.

பொன்சேகா மீது சரியான முறையில் குற்றம்சாற்றப்பட்டுள்ளதாக இலங்கை அரசு கருதினால், அந்நாட்டின் சட்டவிதி முறைகளுக்கு உட்பட்டு அப்பிரச்னையை கையாள வேண்டும் என அந்த பேட்டியில் ராபர்ட் பிளேக் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு, தேசிய மீள் இணக்கம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் பேட்டியில் அவர் கூறினார்.

Read more...

மட்டு – ஐ.ம.சு. முன்னணியினர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி , அமைச்சர் முரளிதரன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குகொண்டுள்ளனர்.


Read more...

ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்பு.

இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராவும் போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என அவரது மனைவியால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், மனுவில் ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்படும்வரை அவரை தற்காலிகமாக நீதிமன்று விடுதலை செய்யவேண்டும் எனவும் கேட்க்கப்பட்டிருந்தது.

அவ் வழக்கினை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்று அவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் அவரைச் சென்று பார்வையிடலாம் என தீர்ப்பளித்துள்ளது. மேலதிக விபரங்கள் தொடரும்....

Read more...

7 வயது மகளை கற்பழித்து கொன்ற தந்தை கைது.

7 வயதுடைய மகளை கற்பழித்து கொலை செய்த தந்தையை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது குழந்தை மீது படுபாதக செயலை புரிந்த நபர் உடலை தீயிட்டு கொழுத்திவிட்டு விடயத்தை எவருக்கும் சொல்லக்கூடாது என மனைவியை அச்சுறுத்தி வந்துள்ளார். விடயம் ஒருவாறு வெளிவந்தபோது பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு ஆனமடுவ மஜிஸ்ரேட் கேசான் டி மெல் உத்தரவிட்டுள்ளார்.

Read more...

இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது: பிரிட்டன் அமைச்சர்

இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸில் வேண்டுமானால் 'பர்கா'வுக்கு தடை விதிப்பது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அதற்கு இங்கு (இங்கிலாந்து) தடை விதிப்பது சாத்தியமில்லை

Read more...

வேட்பாளர் பட்டியலில் இடம்தேடி அலையும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடம்தேடி அலைவதாக தெரியவருகின்றது. முன்னாள் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர அவர்கட்கு ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் இறுதி நேரத்தில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விடயத்தில் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் பொலிஸ் பேச்சாளர் தனது பிரதேச மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் சிலருடன் அலறிமாளிகை சென்று தான் போட்டியிட விரும்பும் குருநாகல் மாவட்ட பொல்காவல பிரதேசத்திலிருந்து பிரதிநிதித்துவம் ஒன்று தேவை என்ற அவசியத்தை விளக்க முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

அதே நேரம் பொலிஸ் திணைக்களத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கொட்டகதெனிய அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இடம்தேடுவதாக தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் மாகாண சபை ஒன்றின் உறுப்பினராகவுள்ள அவர் கம்பஹா மாவட்டத்தில் மிரிகம தேர்தல் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரியவருகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினூடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் இடம்கிடைக்காததை அடுத்து ஜேவிபி யிலிருந்த பிரிந்து சென்ற விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்படும் இடத்தில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுக்கள் இடம்பெறுவதாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

Read more...

ஐ.தே.கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். புதிய ஜாதிக ஹெல உறுமய.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட எடுத்துள்ள முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சரத் மானமேந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி எனும் பெயரில் இணைந்து கொண்ட 16 கட்சிகளும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி ஐக்கிய தேசியக் கட்சி சுயலாபநோக்கில் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ஐக்கிய தேசியக் கட்சி சந்தர்ப்பவாதத்திற்காக யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் , சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை காட்டிக்கொடுக்குமுகமாக தாம் எதேச்சையாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

ஹைதி தீவில் பூகம்பத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்தது

அமெரிக்கா அருகே உள்ள ஹைதி தீவு நாட்டில் கடந்த மாதம் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 லட்சம் பேர் பலியானதாக அன்றைய நிலவரப்படி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான போது மீட்பு பணிகள் நிறைவு அடையாமல் இருந்தது. மீட்பு பணிகள் இப்போது தான் முழுமையாக முடிந்தது. கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி பிணமானவர்களின் உடல்களை அகற்றும் பணி சமீபத்தில் தான் முடிவு அடைந்தது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள். இப்படி இறந்தவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்த போது இந்த பூகம்பத்துக்கு 3 லட்சம் பேர் பலியானதாக அந்த நாட்டின் அதிபர் ரெனே பெர்வால் தெரிவித்தார்.

Read more...

மாவையுடன் கட்சி முக்கியஸ்தர்கள் வாக்குவாதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிடையில் நேற்று முன்தினரவு வவுனியாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவு தொடர்பாக வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பில் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கடும் ஆட்சேபம் வவுனியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்.பி.க்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் முன்னாள் மன்னார் மாவட்ட எம்.பி. எஸ். சூசை தாசனின் பெயரும் இடம்பெற்று ள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங் கள் தெரிவித்தன.

Read more...

தாய்லாந்தில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து .

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்படுமா, இல்லையா என்பது பற்றி அந்நாட்டு நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு தக்சினுக்கு பாதமாக இருந்தால் அவரின் ஆதரவாளர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரதமர் அபிசித் விஜஜீவாவுக்கும் கூடுதல் பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேங்காக்கிலும் தக்சின் ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் கூடுதலாக 20,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Read more...

Monday, February 22, 2010

பொலிஸ் காவலில் இருந்த கைதி தண்ணிக்குள் குதிச்சிட்டாராம்.

பொலநறுவை இங்கினியாகல பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இங்கினியாகல சமுத்திரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என எழும் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முற்றாக மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், குறிப்பிட்ட சந்தேக நபர் மொறகஹாபாலம் பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையில் கிளர்ச்சியை வன்செயலை தூண்டியமை , விகாரையின் பிரதான பிக்குவை அச்சுறுத்தியமை போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தாகவும், மேலதிக விசாரணைகளின் பொருட்டு அழைத்துச் சென்றபோது அவர் சமுத்திரத்தில் குதித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இம்மரணம் தொடர்பாக பிரதேசத்தில் பலத்த பதட்ட நிலைமை உருவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இறந்தவரின் மனைவி கதறி அழுவதை படத்தில் காண்கின்றீர்கள்

Read more...

‘இணைய ஊடுருவலில் எங்களுக்கு சம்பந்தமில்லை’

இணையத்தில் தேடல் சேவை வழங்கி வருப் பிரபல கூகல் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் சீனா ஊடுருவியதாக கூகல் சென்ற மாதம் அறிவித்திருந்தது. சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும் ஆகவே சீனாவிலிருந்து வெளியேறப்போவதாகவும் கூகல் அண்மையில் கூறியது.

இணைய ஊடுருவலில் சீனாவில் உள்ள இரு கல்வி நிலையங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவ்விரு பள்ளிகள் பயன்படுத்திய கணினிகள் மூலமாகவே இணைய ஊடுருவல் நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் தகவல் கூறியது.

ஆனால் இணைய ஊடுருவல் விவகாரத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஷங்காய் ஜியோடோங் பல்கலைக்கழகமும் லான்ஜியாங் தொழில் கல்விக்கூடமும் தெரிவித்துள்ளன. அவ்விரு கல்வி நிலையங்களுக்கும் சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதையும் அந்த கல்வி நிலையங்கள் மறுத்துள்ளன.

Read more...

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்.

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் நிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "ஐஎன்எஸ் சுகன்யா" என்ற இந்தப் போர்க்கப்பல், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் கமாண்டர் பரீஷ் சௌனி தலைமையிலான 110 க்கும் அதிகமான கடற்படையினர் பணியாற்றுகின்றனர். இந்தியப் போர்க்கப்பலுடன், மாலத்தீவுக் கடற்படையின் கடலோரக் காவல் கப்பல் ஒன்றும் கொழும்புக்கு வந்துள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க,நேற்று இந்தியப் போர்க்கப்பலான சுகன்யாவை பார்வையிட்டு அதன் கட்டளை அதிகாரியுடன் பேச்சு நடத்தியிருந்தார். இவருடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும், இந்தியத் தூதரகத்திலுள்ள பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் பிரதீப் சிங்கும் இந்தப் போர்க்கப்பலுக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களுக்கு சுகன்யா போர்க்கப்பலில், இந்தியக் கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கியிருந்தனர்.

இந்தியப் போர்க்கப்பலும், மாலத்தீவுக் கடலோரக் காவல் கப்பலும் இன்று கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. அப்போது இலங்கை கடற்படையின் நான்கு அதிகாரிகள்,கூடுதல் பயிற்சிகளுக்காக இந்தியப் போர்க்கப்பலில் புறப்பட்டுச் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

அணுவாயுதச் செய்திகளை மறுத்தார் ஈரானின் உச்சத் தலைவர்

ஈரான் அணுவாயுதங்கள் தயாரிப்பதாக வெளிவந்த செய்தியை ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மறுத்திருக்கிறார். ஈரானியர்களின் நம்பிக்கைகள் “இத்தகைய ஆயுதங்களின் உபயோகத்தைத் தடை செய்வதால்”, ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்ற அச்சம் “ஆதாரமற்றது” என்று அவர் சொன்னார்.

ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக அணுசக்தி ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறியது. அதைத் தொடர்ந்து, பல உலக நாடுகள் கவலை தெரிவித்தன.

இந்த அறிக்கை “பீதியளிப்பதாக” ரஷ்யா கூறியது. ஈரான் அதன் அனைத்துலகப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. ஈரானின் யுரேனிய, அணுசக்தி நடவடிக்கைகள் பற்றிய தங்களது “மிகப்பெரிய கவலைகளை“ இந்த அறிக்கை வலுப்படுத்தியதாக பிரிட்டனும் ஜேர்மனியும் கூறின.

அனைத்துலக அணுசக்தி ஆணையத்திற்கு ஈரான் அளிக்கும் ஒத்துழைப்பு குறைந்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. இதனால், ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்து ஐயம் எழுவதாக அறிக்கை கூறியது.

Read more...

சிறிகாந்தா தலைமையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆரம்பமாகுமாம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்பளிக்கப்படாத முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் இருவர் இணைந்து புதிய கட்சி ஒன்றை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். ரெலோ இயக்கத்தினை சேர்ந்த சிறிகாந்தா , சிவாஜிலிங்கம் ஆகியோர் இணைந்து இக்கட்சியை ஆரம்பிக்வுள்ளதாக தெரியவருகின்றது. கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றொரு பெயரும் சூட்டவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டவுடன் இலங்கையில் இயங்கி வருகின்ற தமிழ் அமைப்புக்கள் , அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள தேசியம், ஈழம், விடுதலை போன்ற உணர்சியூட்டக்கூடிய சொற்பதங்கள் நீக்கப்படவேண்டும் என அரச தரப்பினரால் உடனடி அழுத்தம் ஒன்று பிரயோகிக்கப்பட்டிருந்தது. ஜெனரல் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் தென்னிலங்கை அரசியலில் ஏற்படுத்திய ஸ்திரத்தன்மையினை அடுத்து மேற்படி விடயத்தில் அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட கவனம் திசை திருப்பப்பட்டது அல்லது தற்காலிகமாக பிற்போடப்பட்டது எனலாம். இவ்வாறான நிலையில் மேற்படி கட்சியின் பெயர் அங்கீகாரம் பெறுமா என்பதும் , அவ்வாறு அங்கீகாரம் பெற்றால் அதன் அரசியல் பின்னணி என்னவென்பதை உணரக்கூடியதாக இருக்கும் என பலரும் பேசிக்கொள்கின்றனர்.

Read more...

நான் யாரையும் அடித்ததில்லை : பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், அவரது அலுவலக ஊழியர்களைக் கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்படும் வேளையில் அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். “என் வாழ்நாளில் நான் யாரையும் அடித்ததில்லை,” என்றும் திரு பிரவுன் கூறினார்.

பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது :

சில சமயங்களில் தனக்கு கோபம் வரும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் தான் என்றுமே வன்மையாக நடந்து கொண்டதில்லை என்று அவர் சொன்னார். “எனக்கு கோபம் வரும்போது அதை என்னிடமே காட்டிக்கொள்வேன். பத்திரிகைகளைத் தரையில் வீசுவது போன்ற செயல்களில் எனது கோபத்தை வெளிப்படுத்துவேன். மற்றபடி யாரிடமும் வன்மையாக நடந்து கொண்டதில்லை,” என்றார் அவர்.

பிரதமரைப் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தீய எண்ணத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவை என்றும் பிரதமரின் பேச்சாளர் கூறினார்.

பிரதமர் பிரவுன் அவரது அலுவலக ஊழியர்களைக் கொடுமைப்படுத்துவதாக அமைச்சரவைச் செயலாளர் சர் குஸ் டோனலுக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து அவர் தனிப்பட்ட முறையில் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக பத்திரிகைத் தகவல் கூறியது ‘ஆப்சர்வர்’ பத்திரிகையின் ஆண்ட்ரு ரவுன்ஸ்லி எழுதிய புத்தகத்தில் திரு பிரவுனைப் பற்றிய புகார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திரு பிரவுனின் நடத்தையும் அவரது கடும் கோபமும் அவரது ஊழியர்களை அச்சம் அடையச் செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அரசாங்கச் சேவைத் தலைவர் டோனல், திரு கார்டன் பிரவுனை கடுமையாக எச்சரித்திருப்பதாகவும் அப்பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

திரு பிரவுன் அவரது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று டோனல் எச்சரித்திருப்பதாகவும் கூறப்பட்டது. திரு பிரவுனின் கோபத்தால் யார், யார் பாதிக்கப்பட்டார்கள் என்ற விவரங்களையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பிரவுன் மீது இத்தகைய புகார்கள் கூறப்பட்டுள்ளன.

மேலும் ஒரு தவணைக் காலத்திற்கு திரு பிரவுன் போட்டியிடுவார் என்று தொழிற்கட்சி அறிவிக்கவிருந்த நேரத்தில் அவர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுகளால் திரு பிரவுன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகளும் திரு பிரவுனை எதிர்ப்பவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளக்கூடும் என்று தெரிகிறது. மேலும் 5 ஆண்டு காலத்திற்குப் பதவியில் நீடிக்க பிரவுன் தகுதியற்றவர் என்று அவர்கள் குரல் எழுப்பக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Read more...

மொரோக்கோ பள்ளிவாசலில் தூபி இடிந்து பலர் மரணம்

மொரோக்கோவின் மெக்னஸ் நகரப் பள்ளிவாசலின் தூபி இடிந்து விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று தொழுகை நேரத்தில் பெர்டியின் பள்ளிவாசலில் நடந்த இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மொரோக்கோ தொலைக்காட்சி தெரிவித்தது.

மெக்னஸ் நகரில் கடந்த சில நாட்களாகக் கனத்த மழை பெய்ததாகவும், அதன்பிறகே தூபி இடிந்து விழுந்ததாகவும் தொலைக்காட்சி செய்தி குறிப்பிட்டது. பள்ளிவாசலின் தூபி நான்கு நூற்றாண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

இடிந்து விழுந்த தூபிக்குக் கீழே ஏராளமானோர் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதிய நேரத் தொழுகைக்காகப் பள்ளிவாசலில் சுமார் 300 பேர் கூடியிருந்தபோது தூபி இடிந்து விழுந்ததாக கலீது ரஹ்மோனி என்பவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மொரோக்கோவில் கவனிப்பாரின்றி கிடக்கும் கட்டடங்கள் சில அடிக்கடி இடிந்து விழுவதுண்டு. ஆனால் தூபி இடிந்து விழுவது அரிது என்று கூறப்படுகிறது. இடிந்து விழுந்த தூபியை மறுபடியும் கட்டுமாறு மன்னர் முகம்மது VI உத்தரவிட்டிருக்கிறார். யுனெஸ்கோவின் உலக மரபுடைமைப் பட்டியலில் மெக்னஸ் நகரமும் இடம்பெறுகிறது

Read more...

போர்த்துக்கல் தீவில் வெள்ளம், மண் சரிவு

போர்த்துக்கல் நாட்டில் உள்ள மெடிரா தீவில் தொடர்ந்து பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் மண் சரிவினாலும் அத்தீவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்திலும் மண் சரிவிலும் சிக்கி அங்கு குறைந்தது 32 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மெடிரா தீவுக்கு போர்ச்சுகல் ராணுவம் இரு கப்பல்களையும் ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளது. மீட்புப் பணிகளுக்கு உதவ கூடுதலாக மீட்புக் குழுவினரும் தீயணைப்பாளர்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியது.

பல வீடுகளும் கட்டடங்களும் மண்ணுக்குள் புதைந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டன. பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

போர்ச்சுகல் பிரதமர் ஜோஸ் சாக்கிரேட்ஸ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மெடிரா தீவை நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பிரபலமான இடம் மெடிரா தீவு. 1993-ம் ஆண்டுக்குப் பிறகு அத்தீவை இயற்கைப் பேரிடர் வாட்டுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

Read more...

மாநாயக்க தேரர்களிடையேயான பனிப்போர் தொடர்கின்றது.

மல்வத்து பிடத்து மாகாநாயக்கர் சங்கைக்குரிய திப்போட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், ஜாதிக்க ஹெல உறுமயவின் தேரர்களைச் சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜெனரல் பொன்சேகாவின் கைதினை தொடர்ந்து நான்கு பீடங்களையும் சேர்ந்த பௌத்த பிக்குகள் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் தமது கண்டனத்தை தெரிவிப்பதற்குமாக கடந்த 18ம் திகதி கண்டியில் ஒன்றுகூடவிருந்தனர். ஆனால் அவ் ஒன்றுகூடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணத்தை நான்கு பீடங்களையும் சேர்ந்த பிக்குகள் தெரிவித்திருக்காதபோதும் அவர்கள் மிரட்டப்பட்டதாக பல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மல்வத்து பீட மகாநாயக்கரை சந்திக்க ஆழும் ஆரசாங்கத்தின் தீவிர ஆதரவாளரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான எல்லாவெல மேதானந்த தேரரின் தலைமையில் பிக்குகள் குழுவொன்று தாயாரானபோதும், அச்சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.

ஜெனரல் பொன்சேகா நாட்டின் இராணுவத்தினுள் பிளவுகள் ஏற்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவும் அதே நேரத்தில் நாட்டில் பௌத்த பிக்குகளை மஹிந்த ராஜபக்ச பிளவுபடுத்தியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகள்.

ரணவிரு சேவையின் 2010 ம் ஆண்டிற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யுத்தத்தில் அங்கவீனர்களான படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்கும் திட்டத்தின் முதற்கட்டம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆராம்பித்து வைக்கப்பட்டது. இராணுவ விளையாட்டு மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் 100 முச்சக்கர வண்டிகள் சிபார்சு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. நிகழ்வில் முப்படைத் தளபதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்காவும் கலந்து கொண்டனர்.



Read more...

ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டி. அருஜூணாவும் இணைவு.

ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணி எனும் கூட்டணிக்கு ஜெனரல் பொன்சேகாவே தலைவர் என ஜேவிபி அறிவித்துள்ளது. இக்கூட்டணியில் ஜேவிபி உட்பட சுமார் 8 கட்சிகள் அங்கம் வகிப்பதாக தெரியவருகின்றது. இக்கூட்டணின் சின்னமான வெற்றிக் கிண்ணச் சின்னத்திலேயே அனைவரும் போட்டியிடுவதென்ற ஏகமனதாக முடிவை எட்டியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் விஜித கேரத் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கிண்ணச் சின்னத்தில் முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கட் சபைத் தலைவருமான அருஜூனா ரணதுங்கவும் போட்டியிடவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது முடிவு தொடர்பாக ஊடகங்களுக்கு கூறுகையில், இந்நாட்டினை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த தலைவருடன் இணைந்து போட்டியிடுவதில் மகிழ்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரம் தென்மேல் மாகாணசபையில் உள்ள அருஜூனாவின் சகோதரன் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com