Showing posts sorted by relevance for query புன்னியாமீன். Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query புன்னியாமீன். Sort by date Show all posts

Wednesday, March 13, 2013

இலங்கையில் நிகழ்ந்த சாதனைமிகு தமிழ் நூல் வெளியீட்டு விழா: என். செல்வராஜா

இலங்கையின் புகழ்பூத்த ஹிப்னாட்டிச- மனோதத்துவ -உளவளவியலாளர்களுள் ஒருவரான யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளையும் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய நூலொன்றினை கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் அண்மையில் எழுதியிருந்தார். யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றின் பின்னணியில் அவர் வாழ்வில் கண்ட அரிய பல அனுபவபூர்வமான உளவியல் கருத்துக்களை அனுபவரீதியில் இந்நூலில் புன்னியாமீன் விளக்கியுள்ளார்.

கலாபூசணம் புன்னியாமீன் எழுதிய ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா’ என்ற இந்நூல் வெளியீட்டுவிழா கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் 2013 பெப்ரவரி 25ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பொதுவாக இலங்கையில் நடைபெறும் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் பொறுத்தவரையில் ஒரு கூரையின்கீழ் நூறு பேரைத் திரட்டுவது என்பது பெரிய காரியம். ஆயின் இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் 550 பேருக்கும் மேல் கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகும். கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் 400 ஆசங்களே உள்ளன. வெளியில் இருந்து 150 கதிரைகள் வாடகைக்குப் பெறப்பட்டு பிரதான மண்டபத்துடன் இணைந்த மண்டபத்திலும் போடப்பட்டதாகப் புன்னியாமீன் எனக்குத் தெரிவித்திருந்தார். மண்டபத்தில் பாரிய தொலைக்காட்சித் திரையிலும் நிகழ்வுகள் பெருப்பித்தும் காட்டப்பட்டன. விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா– சுவடுகள் எனும் 48 பக்க நூல் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி நிரலுடன் சிந்தனை வட்டத்தினதும் அதன் தாபகர் புன்னியாமீனினதும் பணிகளை சுவடுகள் உள்ளடக்கியிருந்தது. பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களின் போது முதல் பிரதி சிறப்புப் பிரதி என்று நூல் பெறுவோர் பட்டியல் நீண்டிருக்கும். ஆனால் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா வெளியிட்டு விழா அழைப்பிதழில் இத்தகைய பட்டியல்களைக் காணமுடியவில்லை. இருப்பினும் விழா நடைபெற்ற நேரத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் நூலின் அச்சிடப்பட்ட பிரதிகளின் அரைவாசிக்கும் மேல் அன்றைய விழாவிலேயே விற்பனையானதும் ஈழத்து வெளியீட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க ஒன்று.

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்று இலங்கைக்குப் பெருமை தேடித்தந்த மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல் துறையில் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, இலங்கையில் சிரேஸ்ட மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு எந்தவொரு அரசியல்வாதியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது. பேராசிரியர்களும் கல்விமான்களுமே அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

விழாவில் நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் இலங்கையில் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவரான அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன் திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.

மனோதத்துவ நிபுணரான யூ.எல்.எம்.நௌபர் அவர்கள் தன்னலமற்ற ஒரு உளவளவியலாளராவார். சுமார் நான்கு தசாப்த காலமாக இலங்கையில் இன மத பேதம் பாராது சுமார் 2500 மேற்பட்டோரை உளவியல் சிகிச்சை மூலமாக குணப்படுத்தியுள்ளார். சுனாமி அனர்த்தத்தின் பின்பும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்பும் வடமாகாணத்திலும் இவர் கணிசமான சேவையாற்றியுள்ளார். இவர் சேவைக்காக ஒரு சதமேனும் பணமோ அல்லது அன்பளிப்புகளோ பெறுவதில்லை என்பது வியப்புக்குரிய உண்மை. இத்தகைய சேவைகளை மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் புன்னியாமீன் இந்நூலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன் பொதுவாக உளவியல் பற்றியும் விரிவாகவும் சுவையாகவும் அனுபவ வெளிப்பாட்டுடன் எழுதியுள்ளார். இவ்விழாவிற்கு அதிகளவில் பார்வையாளர் கலந்து கொண்டமைக்கு இன மத வேற்றுமையற்ற தன்னலம் பாராத யூ.எல்.எம்.நௌபர் அவர்களது சேவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த விழாவின் போது நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்களை பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் வாழ்த்தினார். உலகிலேயே அச்சுப்பதிவில் சிறிய அளவு கொண்டதாக 1998 கின்னஸ் சாதனைவரிசை நூலில் இடம்பெற்றிருந்த முக்கியத்துவமான குர்ஆன் பிரதியொன்றை தேடிப்பெற்று அன்பளிப்பாக வழங்கியும் அவரை மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமாரன் -இருமொழி வித்தகர் என்ற பட்டம் வழங்கப்பெற்றார். தொழிலதிபரும் பரோபகாரியுமான ஏ.ஆர்.எஸ். அரூஸ் ஹாஜி, தொழிலதிபரும் பரோபகாரியுமான அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் – சேவைச்செம்மல்கள் என்று பட்டம் வழங்கப்பட்டனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் – இதழியல் வித்தகர் என்ற பட்டத்தையும், உளவியல்துறை விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல்கள் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டனர்.

‘ஓர் ஈர நெஞ்சனின் உலவியல் உலா’ நூலானது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப் பணிப்பாளராக கொண்டியங்கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட 185 வது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 572 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 880 ஆகும்.



Read more...

Friday, October 15, 2010

இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம் : செல்வி எம்.ஐ.எப் நபீலா தமிழ்த்துறை இறுதியாண்டு,
சப்பிரகமுவை பல்கலைக்கழகம்.

இணையத்தள பாவனை சர்வதேச அளவில் வெகு தீவிரமாக வளர்ச்சி கண்டு வருகின்ற போதிலும்கூட, எமது இலங்கையில் அதன் வேகம் மந்தகரமான நிலையிலேயே அமைந்துள்ளது. இலங்கையில் இணையத்தளம் பற்றிய அறிவு அல்லது விளக்கம் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதும் இணையத்தள சேவைகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக 20ஆம் நூற்றாண்டுகளில் இறுதிக்கட்டங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் இணையத்தள இணைப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட, டவுண்லோட் - தரவிரக்கத்திற்கேற்ப கட்டணங்கள் அறவிடப்பட்டமையினால் பாவனையாளர்களுக்குப் பெருந்தொகையான பணத்தினை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக புரோட்பேண்ட் இணையத்தள இணைப்பு வசதியை ஸ்ரீலங்கா டெலிகொம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரதான நகரங்களை மாத்திரம் மையப்படுத்தியிருந்த இவ்விணைப்பானது தற்போது அகில இலங்கை ரீதியில் வியாபிக்கப்பட்டு வருகின்றது. புரோட்பேண்ட் இணையத்தள சேவைக் கட்டணம் நிலையான கட்டணத்தைக் கொண்டிருப்பதினால் தரவிரக்க பரப்பளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. இதன் காரணத்தினால் தற்போது படிப்படியாக இணையத்தள பாவனையாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தொகை பல மடங்குகளாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்க முடியும். அதேநேரம், இலங்கையில் போட்டியாக செயல்படும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் எஸ்.எல்.ரி. சிட்டிலிங்க், மொபிடெல், மற்றும் சன்டெல், லங்காபெல், டயலொக், எடிசலாட், எயாடெல், ஹட்ச், டயலொக் சீ.டி.எம்.எ. போன்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் இச்சேவையினை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருவதை அவதானிக்கின்றோம்.

மத்திய காலத்தில் உருவான அறிவியல் எழுச்சியுடன் படிப்படியாக ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால் அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology) தோன்றியது. அதற்கு தமிழ்மொழியும் ஈடுகொடுத்தது, அதன் விளைவாகவே இன்றைய தமிழ் உயர்ந்த நிலையில் உள்ளது. தொடர்தேர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியில் 20ம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம் இன்றைய கணனியுகம் (Age of Computer) ஆகும். இந்த யுகத்தையும் தமிழ் மொழி மிகவும் நுட்பமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.

இன்று தட்டச்சு செய்தல், கணக்குகள் பதிதல், விபரங்களை சேகரித்தல் போன்ற சிறிய தேவைகள் முதல், விண்வெளியில் செயற்படுகிற ஏவுகணைகளை மாத்திரமல்லாமல் விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கூட பூமியிலிருந்து கட்டுப்படுத்தி, செயற்படுத்தக்கூடிய உயர்மட்டப் பணிகள் வரை இயக்கும் கருவியாக கணனி மாறிவிட்டது. இன்றைய கணனி யுகத்தில் தனி மனிதராக இருக்கட்டும் அல்லது பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இருக்கட்டும் கணனியின்றி அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான தகவல்களைத் தரவுகளாகச் சேமித்துவைத்தல் (Database Development), தேவைப்படும்போது தகவல்களைத் தேடியெடுத்தல் (Information Extaction and Retrieval), மின்னஞ்சல் அனுப்புதல் (e-mail)வினாடிகளில் உலகெங்கும் இணையத்தளம் (Internet and Web) மூலம் தொடர்பு கொள்ளுதல், இணையத்தளம் மூலம் தொழில் மற்றும் வணிகத் தொடர்புகளை மேற்கொள்ளுதல் (E-commerce) என்று கணனியின் பயன்பாடுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இன்றைய காலகட்டத்தில செய்திப் பரிமாற்றத்திலும் இணையம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.

இலங்கையில் பெரும்பாலான பிறமொழி தேசிய அச்சு ஊடகங்கள் இணையங்களை பயன்படுத்துவதைப் போல தமிழ்மொழி மூல தேசிய பத்திரிகைகளும், இணையத்தில் தமிழ் தளங்களினூடாக செய்திகளை உடனுக்குடன் தரவேற்றம் செய்கின்றன. உதாரணமாக இலங்கையின் முன்னணித் தேசிய தமிழ் பத்திரிகைகளான தினக்குரல், வீரகேசரி, தினகரன், சுடர் ஒளி போன்ற (தேசிய நாளிதழ்களும், வாராந்த இதழ்களும்) தத்தமது இணையத்தளங்களினூடாக செய்திகளை தரவேற்றம் செய்து வருகின்றன. இங்கு செய்திகளை கள எழுத்துருவில் மாத்திரமல்ல பத்திரிகைகளை முழுமையாக (ஈ - பேப்பர்) மின் பத்திரிகை மூலமாகவும் வாசிக்கக்கூடியதாக இருக்கும். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகங்கள் ஒலி, ஒளி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதினாலும் அவை வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வருகின்றன.

இணையங்களில் செய்திகள் மாத்திரமல்ல, இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் போன்ற இலக்கியப் படைப்புகளையும் பிரசுரித்து வருகின்றன. இதற்கென தனி வளையமைப்புக்களும் உள்ளன. திரட்டிகளின் உதவி கொண்டு தேடல்கள் மூலம் எமக்குத் தேவையானவற்றை அடைந்து கொள்ள முடியும். மேலும், குறித்த ஆக்கங்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கூட, வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீன தொழில்நுட்ப மாற்றத்துடன் இணையங்களும் பல புதிய பரிமாணங்களை பெற்று வருகின்றன. இணையத்தளத்தின் மூலம் மின்னணுக் கல்வி (E-learning) மின்னணுக் கருத்தரங்கம் (E-conference) ஆகியவைகூட இன்று நடைமுறையில் உள்ளன. பல்லூடகக் கருவியாகவும் (Multi media) கணனி இன்று பரிணமித்துள்ளது. எனவே எழுத்து, பேச்சு, படம் என்று பலவகைப்பட்ட ஊடகங்கள் வழியே ஒருவர் உலகெங்கும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பிரமாண்டமான வளர்ச்சி இன்று ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம்மினது பதிவுகளுக்கமைய உலக வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2010 முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையில் இணையத்தள பாவனையாளர்கள் 1,776,200 என அறிய முடிகின்றது. இது மொத்த சனத்தொகையின் 8.3% ஆகும். 2000ஆம் ஆண்டு முதல் இலங்கையின் இணையத்தளப் பாவனை குறித்த அறிக்கை பின்வருமாறு

ஆண்டு பாவனையாளர்கள். சனத்தொகை வீதம்
2000 121,500 19,630,230 0.5 %
2007 428,000 19,796,874 2.2 %
2008 771,700 21,128,773 3.7 %
2009 1,163,500 21,324,791 5.5 %
2010 1,776,200 21,513,990 8.3 %
http://www.internetworldstats.com/asia/lk.htm


மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டின் பிறகு இணையத்தள பாவனை வேகமாக அதிகரித்துள்ளமைக்கான பிரதான காரணியாக புரோட் பேண்ட் இணையத்தள இணைப்பு அறிமுகமானதை குறிப்பிடலாம். 2015 ஆம் ஆண்டு ஆகும் போது இணையத்தளப் பாவனை 30% மாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் இன்று இணையத்தளப் பாவனையாளர்கள் தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள இணையங்களின் துணையினையே நாடியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இணையப் பாவனை செய்திப் பரிவர்த்தனை இலக்கிய பரிமாற்றம் என்பவற்றை விட கல்வித் துறை அபிவிருத்திற்கும் விசாலமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. உலகளாவிய இணையத்தள பாவனைப் பற்றிய கணிப்பீட்டுப் புள்ளி விபரம் வருமாறு

WORLD INTERNET USAGE AND POPULATION STATISTICS

உலக வலயங்கள் சனத்தொகை டிச.31, 2000 நிகழ்காலம் வீதம்
Africa 1,013,779,050 4,514,400 110,931,700 10.9 %
Asia 3,834,792,852 114,304,000 825,094,396 21.5 %
Europe 813,319,511 105,096,093 475,069,448 58.4 %
Middle East 212,336,924 3,284,800 63,240,946 29.8 %
North America 344,124,450 108,096,800 266,224,500 77.4 %
Latin America
/Caribbean 592,556,972 18,068,919 204,689,836 34.5 %
Oceania
/ Australia 34,700,201 7,620,480 21,263,990 61.3 %
WORLD TOTAL 6,845,609,960 360,985,492 1,966,514,816 28.7 %


இங்கு சனத்தொகை எனும் போது 2010 ஆம் ஆண்டின் உத்தேச சனத்தொகையாகும்.
டிச.31, 2000 வரை இணையத்தளப் பாவனையாளர்கள். நிகழ்காலம் எனும் போது செப்டம்பர் 2010 வரை கணிப்பிடப்பட்டுள்ளது. http://www.internetworldstats.com/stats.htm

உலகில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் முகவரி info.cern.ch அதன் சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். 2010 செப்டெம்பர் மாத கணக்குப்படி இணைய உருண்டையின் மொத்தப் பாவனையாளர்களின் எண்ணிக்கை 1966,514,816 ஆகும். இணையதளங்கள் உருவாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட ஒரு முக்கிய காரணமாய் அமைவது கூகிளின் அட்சென்ஸ் (Google Adsense) என்றால் மிகையாகாது. ஆனாலும் அன்றைக்கு Tim Berners-Lee; முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். அதன் முகவரி வருமாறு http://www.w3.org/history/19921103-hypertext/hypertext/ www/theproject.html

உலக அளவில் 28.7 வீதமாக இணையத்தளப் பாவனை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இலங்கையில் 8.3 வீதமாகவே இணையப்பாவனையே காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி மூலம் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை இதனை விட வெகுவாகக் குறைந்திருக்கலாம். செப்டம்பர் 2010இல் இலங்கையின் வட பகுதிக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் புரோட் பேண்ட் இணைய இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதிகளிலும் இணையப்பாவனை அதிகரிக்கப்படலாம் எனக் கருத இடமுண்டு.

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே அதிகளவில் நாட்டம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் விட்டால் வேறு ஊடகங்களில்லை என்று கூறுமளவிற்கு மரபு ரீதியான அணுகுமுறைகளிலேயே இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக மரபு ரீதியான வழிமுறைகளைப் பேணி வந்த பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இன்றும் அதே முறைகளை கடைபிடித்து வருவதினால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மாத்திரமே எழுத்துலகில் சோபித்து வர முடியும். இணையத்தள ஊடகங்களின் வளர்ச்சி ஏற்படும்போது இத்தகைய கட்டுப்பாடுகள் தகர்த்தப்படுவதினால் புதிய எழுத்தாளர்கள் வளர்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உருவாகின்றது. சிலநேரங்களில் எழுத்துக்கள் தரமின்றிப் போய் விடலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட, இதுவொரு புரட்சிகரமான மாற்றமாக அமைய இடமுண்டு.

இத்தகைய பின்னணிகளின் மத்தியில் இலங்கையில் இணையத்தளங்களின் ஊடாக தமது படைப்புகளை முன்வைப்பதில் இலங்கை தமிழ் எழுத்தாளர் புன்னியாமீனின் பங்களிப்பு விசாலத்துவமிக்கதாக அமைகின்றது. இதுவரை இவரின் 300க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சர்வதேச ரீதியிலான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இதனால் சர்வதேச ரீதியில் தமிழ் இணையத்தள வாசகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு பெயராகவே இவரின் பெயர் பிரபல்யம் பெற்றுள்ளது. அண்மையில் புன்னியாமீன் இணையத்தளங்களில் பிரசுரமான 70 கட்டுரைகளை தொகுத்து சர்வதேச நினைவு தினங்கள் எனும் பெயரில் 03 பாகங்களை வெளியிட்டிருந்தார். இம்முயற்சி பற்றி இந்தியாவில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “…உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் (புன்னியாமீன்) இணையத்தளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்…". இதிலிருந்து இணையத்தளங்களில் புன்னியாமீனுக்குள்ள ஈடுபாடு பற்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களின் பெயர் பதிந்திருப்பதற்கு இணையத்தளங்களில் வெளிவரும் அவரது ஆக்கங்களே ஒரு பிரதான காரணியாக அமையலாம். இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், விஞ்ஞானம், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக சர்வதேச நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவரின் எழுத்துக்கள் முத்திரை பதித்து வருகின்றன. இலங்கை எழுத்தாளர்களிடையே இணையங்களில் எழுதுவதில் தற்போதைய நிலையில் இவர் முதன்மை இடத்தில் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டங்களில் இவரின் ஆக்கங்கள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா, நோர்வே, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா, கனடா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் தீவுகள் போன்ற நாடுகளை தளமமைத்துக் கொண்டு இயங்கும் நூற்றுக்கணக்கான இணையத்தளங்களில் இவருடைய பல ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. கூகூல் http://www.google.lk, Yahoo http://www.yahoo.com, எம்.எஸ்.என்.http://www.msn.com திரட்டிகளிலிருந்து இணையத்தள தேடல்களின் அடிப்படையில் இதுவரை 183 இணையத்தளங்களில் இவரின் ஆக்கங்களையும், இவர்பற்றிய ஆக்கங்களையும் காண முடிகின்றது. இவரின் ஆக்கங்கள் பிரசுரமான இந்த இணையத்தள முகவரிகளின் ஆங்கில அகரவரிசைப்படி கீழ்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

www.24dunia.com/tamil, www.360news.in, www.abc.net,www.ads.clicksor.com, www.alaai.co.cc, www.alaikal.com, www.amalathaselroy.blogspot.com, www. andamansaravanan.blogspot.com, www.anonasurf.com, www.aruvi.com, www. asafardeen.blogspot.com, www.athirady.info, www.bestestsite.info, www. Best queen12.blogspot.com, www.bit.ly, www.blogcatalog.com, www.blogcop. com, www.blogger-index.com, www.blogs.oneindia.in, www.bogy.in, www. bname.ru, www.chat.oneindia.in, www.cmr.fm, www.comedy fans.wordpress. com, www.content.usatoday.com, www.dazy.sk, www. deccannetwork.com, www.de-de.facebook.com, www.dekrizky.us, www.dillee pworld.blogspot.com, www.thedipaar.com, www.eelamtoday.com, www.eera anal.org, www.encyk. fotelikisamochodowe.net, www.engaltheaasam. com, www.en.wordpress. com,www.ethamil.blogspot.com www.facebook.com, www. faroo.com, www. fetna.org ,www.firmy24.podhale.pl, www.flexalution. com, www.freer.info, www. friendfeed.com. www.google.com, www.geotamil. com, www.groups. google.co.in, www.groups.google.com, www.groups. google.dk, www.groups. google.fr, www.groups.google.ge, www.groups. google.gr, www.groups. google.to, www.ikmahal.com, www.ilakkiyainfo.com, www.ilankainet.com, www.ilayamalar.blogspot.com, www.ilbts.org , www.india everyday.com, www. indiantoday.com, www.infokarirterkini.co.cc, www.inioru. com, www.kalai mahan.blogspot.com, www.kalanjiam.com, www.kannadi puthagam.blogspot. com, www.karuthurimai.net, www.kattankudi.info, www.kavi mathy.wordpress. com, www.kevins.nl, www.kingwebnewspaper .blogspot.com, www.komsc. com, www.koodal1.blogspot.com, www.kopi-welcomemyblog.blogspot.com, www.kulantamil.com, www.lakehouse.lk, www.lankamuslim.org, www.linux 24web.info, www.live.athirady.org, www. maatru.net, www.manitham.net, www.masdooka.wordpress.com, www.meel parvai.net, www.meettal.blogspot. com, www.mixx.com, www.mnmanas. blogspot.com, www.muelangovan. blogspot.com, www.mulaggam.com, www.mullivikkaal.com, www.mykathi ravan.com, www.mytoday.com, www.namathu.blogspot.com, www.nayanaya. mobi, www.nerudal.com, www.neruppu.com, www.newathirady.com, www. news.writeka.net, www.news.thiratti.com, www.nkl4u.in, www.noolaham.org/, www.ns3.greynium.com, www.onlineinet.com, www.oodaru.com, www.ottran. com, www.penniyam.com, www.puhali.com, www.push2check.com, www. puzha.com, www.radio.ajeevan.com, www.ragil.info, www.rammalar. wordpress.com, www.ramnadinfo.com, www.rasigancom.blogspot.com, www. rizardview.blogspot.com, www.sangamamlive.com, www.search.webdunia.com, www. singakkutti.blogspot.com, www.sitedossier.com, www.shaseevanweblog. blogspot.com, www.shakthienews.com, www.space2world.com, www.spider. com.au, www.srisagajan.blogspot.com, www.sumanasa.com, www.supperlinks. blogspot.com, www.surfblocked.net, www.sri.lanka.asia, www.ta.indli.com, www.tamil10.com, www.tamilalai.org, www.tamilauthors.com, www.tamil. bingra.com, www.tamil.com, www.tamilalai.org, www.tamilexpress. webnode.com, www.tamilkudumbam.com, www.tamilnirubar.org, www.tamil newsnetwork.com, www.tamilnews.cc, www.tamil.net, www.tamilsguide.com, www.tamilish.com, www.tamilmanam.net, www.tamilsguide.com, www.tamil velibkp.blogspot.com, www.tamil.webdunia.com, www.ta.wikipedia. org, www. taweet.com, www.ta.wordpress.com, www.techtamil.in, www. teleindia. comm, www.thakval.info, www.thatstamil.oneindia.in, www.thaynilam. com, www.thedipaar.com, www.theendlessinfo.com, www.thenee.com, www.thenee. eu, www.thesamnet.co.uk, www.thinakaran.lk, www.thinakaran. lk/vaaraman jari, www.thinakkural.com, www.thiru2050.blogspot.com, www. thoora.com, www.tmpolitics.net, www.twitter.com, www.twurl.nl, www.ubervu. com, www. udaru.blogdrive.com www.usa-learning.blogspot.com, www.ustamil. blogspot. com, www.valaipookkal.com, www.vallinam.com, www.viyapu.com, www. wap.orlingo.com, www.webjosh.com, www.webmanikandan.blogspot.com, www. worldub.blogspot.com, www.xna.no, www.yarl.com

செப்டம்பர் 26. 2010இல் சுவிஸ் அரசின் கலாசார வானொலியான கனல்கா சர்வதேச வானொலி நிகழ்ச்சியில் குறுந் திரைப்பட இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான அ. ஜீவன் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது “…தான் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையத்தளத்திலும், சங்கமம் லைவ் இணையத்தளத்திலும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற், தமிழ்நிரூபர் போன்ற இணையளத்தளங்களிலும், பிரான்ஸை மையமாகக் கொண்டியங்கும் இலங்கைநெற் இணையத்தளத்திலும் மூலமாக எழுதுவதாக குறிப்பிட்டார். அதேநேரம், அதிரடி, புதிய அதிரடி, முழக்கம், எங்கள் தேசம், நெருப்பு, கண்ணாடி, ஊடரு, பெண்ணியம் போன்ற பல இணையத்தளங்களும் இவரின் ஆக்கங்களை முதன்மையாக பிரசுரித்துள்ளன.

இணையத்தளங்களிலுள்ள ஒரு பொதுவான பண்பு ஒரு இணையத்தளத்தில் வெளிவரக்கூடிய தரமான ஆக்கங்கள் வேறும் இணையத்தளங்களில் மீள் பிரசுரம் செய்யப்படுவதனை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீனின் அண்மைக்கால சில ஆக்கங்கள் 20 தொடக்கம் 30 வரையிலான இணையத்தளங்களில் மறுபிரசுரமானதை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக 2010 செப்டம்பரில் பிரசுரமான அன்னை தெரேசா நூற்றாண்டுவிழா எனும் கட்டுரை 24 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல 14 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த உலகிலே தரையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் எனும் கட்டுரை 20 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. 24 ஆகஸ்ட் 2010ல் வெளிவந்த அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம் எனும் கட்டுரை மொத்தம் 16 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன. அதேபோல சர்வதேச இளைஞர் ஆண்டைப் பற்றி இவரால் ஆகஸ்ட் 2010ல் எழுதப்பட்ட கட்டுரையும் 34 இணையத்தளங்களில் பிரசுரமாகியுள்ளன.

இவ்வாறாக ஒரே ஆக்கம் உலகளாவிய ரீதியில் காணப்படக்கூடிய பல நாடுகளை தளமாக அமைத்து இயங்கும் இணையத்தளங்களில் பிரசுரமாகும்போது எழுத்தாளரின் முக்கியத்துவம் அதிகமாகின்றது. அதேநேரம் மேற்குறிப்பிட்ட உதாரணப்படி மீள்பிரசுரம் செய்துள்ள இணையத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பல நாடுகளை தளமாகக் கொண்டு இயங்குபவை என்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

இணையத்தளங்களில் காணப்படக்கூடிய மற்றுமொரு சிறப்பம்சமாக வாசகர்களின் பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். குறித்த கட்டுரை தொடர்பில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்கள் மூலமாக இணையத்தளத்துக்குத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும். இந்த அடிப்படையில் புன்னியாமீனின் ஆக்கங்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள பின்னூட்டங்களை அவதானிக்குமிடத்து இவரது எழுத்துக்குக் சர்வதேச மட்டத்தில் காணப்படும் வரவேற்பினை அவதானிக்க முடிகின்றது.

அதேநேரம், தற்போதைய நிலையில் இலங்கை எழுத்தாளர்களிடையே இணையத்தள பயன்படுத்தல்கள் குறைவாகக் காணப்பட்ட போதிலும்கூட, 2007 முதல் 2010 வரை தமிழ் மொழி மூல இணைய எழுத்துக்களை ஆராயுமிடத்து புன்னியாமீனின் பெயர் தனியிடத்தில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உசாத்துணை:

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 1, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-43-6

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 2, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-44-3

கலாபூசணம் புன்னியாமீன் - சர்வதேச நினைவு தினங்கள். பாகம் 3, சிந்தனை வட்டம். தபால் பெட்டி இலக்கம் 1 பொல்கொல்லை கண்டி. ஜுலை 2010. ISBN: 978-955-1779-45-0

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை சிறப்பு மலர் 2010. தமிழ் நாட்டு அரசு


Read more...

Wednesday, November 16, 2011

பீ.எம்.புன்னியாமீன்: மௌனமாய்ப் பெய்யும் பெருமழை! : என்.செல்வராஜா.

உலகெங்குமுள்ள ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் திரட்டித் தனது சொந்த முயற்சியினால் நவமணி, தினக்குரல் போன்ற ஊடகங்களிலும், பின்னர் அவற்றைத் தொகுத்து பல்தொகுதிகளாக நூலுருவிலும் வெளியிட்டு வந்தவர் பி.எம்.புன்னியாமீன். அண்மையில் மற்றுமொரு சாதனையாளராக அவர் தன்னை இனம்காட்டிக் கொண்டிருக்கிறார். கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளிலும், பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இச்சாதனை 2010ம் ஆண்டு, நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு, நவம்பர் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவரால் நிகழ்த்தப்பட்டது. இதனை உலகளாவிய ரீதியில் தமிழ் மின்-ஊடகமொன்றில் தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதனையாகக் கருதுகின்றேன்.

1970ம் ஆண்டுகளில் இலக்கியத்துறையில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்த திரு பீ.எம்.புன்னியாமீன் இதுவரை 166 சிறுகதைகளையும், ஒரு நாவலையும், கல்வி, கலை, இலக்கியம், ஆய்வியல், அரசியல், விளையாட்டு, சமூகவியல்; ஆகிய பல்வேறு துறைகளில் 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவராவார். இவர் இதுவரை 176 தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆரம்ப காலங்களில் இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் வெளிவரும் தமிழ் இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிவந்த இவர் அண்மைக்காலமாக இலத்திரனியல் ஊடகங்களில் அதிகமாக எழுதி வருகின்றார்.

அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ்த்துறையின் இறுதியாண்டு மாணவியான செல்வி எம்.ஐ.எப் நபீலா என்பவர் “இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களும் இணையப் பாவனையும்” எனும் தலைப்பில் தமிழ் ஜேர்னலிஸ்ட் எனும் இணையத்தில், 2010 டிசம்பர் 29ம் திகதி எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையில் உலகளாவிய ரீதியில் செயல்படும் 183 இணையத் தளங்களில் பீ.எம்.புன்னியாமீனின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்துடன், திரு புன்னியாமீனது கட்டுரைகள் இடம்பெற்ற அந்த 183 இணையத்தளங்களின் முகவரிகளையும் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இறுதியிலிருந்து விக்கிப்பீடியாவுடன் திரு புன்னியாமீனுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. உலகளாவிய ரீதியில் விக்கிப்பீடியா 282 மொழிகளில் வெளிவருவதும், அதிக வாசகர்களால் வாசிக்கப்படும் இணையத் தளங்களின் வரிசையில் 5வது இடத்திலிருப்பதும் தெரிந்ததே. விக்கிப்பீடியா குழுமத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் இவர் 2010 நவம்பர் 14ம் திகதி இணைந்து ஆரம்பகாலத்தில், இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆகியோரை அங்கு அறிமுகம் செய்துவந்தார். பின்னாளில் தொடர்ந்து இலங்கை அரசியல், பொருளாதாரம், வரலாறு, கலைத்துவ அம்சங்கள் மற்றும் இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் ஆகியவற்றை பதிவு செய்ததுடன், அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியும் எழுதிவருகின்றார். மேலும் இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா (மியன்மார்) போன்ற நாடுகளில் உள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள்; பற்றியும் தமிழ்பேசும் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட சிற்றிதழ்கள் பற்றியும் எழுதிவருகின்றார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரின் கட்டுரையாக்கம் தொடர்பான பதிவில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14, 2010 முதல் மார்ச்சு16, 2011 வரையிலான காலகட்டத்தில் இவர் முதலில் 500 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொடர்ந்து இவரால் நவம்பர்14, 2010 முதல் ஏப்ரல் 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 1000 கட்டுரைகளும், ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரையிலான காலப்பகுதியில் 2000 கட்டுரைகளும், மே 6, 2011 முதல் ஜுன் 22, 2011 வரையிலான காலப்பகுதியில் 3000 கட்டுரைகளும், ஜுன் 23, 2011 முதல் ஓகஸ்ட் 22 2011 வரையிலான காலப்பகுதியில் 4000 கட்டுரைகளும், ஓகஸ்ட் 23, 2011 முதல் செப்டம்பர் 30 2011 வரையிலான காலப்பகுதியில் 5000 கட்டுரைகளும், அக்டோபர் 1 , 2011 முதல் அக்டோபர் 19 2011 வரையிலான காலப்பகுதியில் 6000 கட்டுரைகளும் அக்டோபர் 20 2011 முதல் நவம்பர் 6 2011 வரையிலான காலப்பகுதியில் 7000 கட்டுரைகளும் நவம்பர் 07, 2011 முதல் நவம்பர் 13, 2011 வரையிலான காலப்பகுதியில் 7500 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

பல்வேறு சமூக, பொருளாதாரப் பணிகளுக்குள்ளும், இடைக்கிடையே வலிந்து வாட்டி வைத்தியசாலை வரை கொண்டுசென்ற நீரிழிவின் பாதிப்புகளுக்குள்ளும் தடம்புரளாமல், மனம் சோர்வடையாமல், இவருக்கு இத்தகைய சாதனைகளைத் தொடர்ந்து செய்யும் மன வலிமையையும், தன்னம்பிக்கையையும் வழங்கிய இறைவனின் அருளை மேலும் வேண்டி அவரை உளமார வாழ்த்திமகிழ்வோம்.

அவரது மின்னஞ்சல் முகவரி: pmpuniyameen@gmail.com
14.11.2011

என்.செல்வராஜா,
நூலகவியலாளர்,
லண்டன்.

Read more...

Wednesday, December 24, 2014

சிறுகதைப் போட்டியில் மஸீதா புன்னியாமீன் முதலிடம்!

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் ​இற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் செத்சிறிபாய நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் எச்.டி..எஸ்.மல்காந்தி, அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரபல சிங்கள எழுத்தாளர் மடுலுகினிய விஜேரத்ன, தமிழ், சிங்கள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் கதை, சித்திரம், குறுநாடகப் பிரதியாக்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள், சான்றிதழ்கள், புத்தகப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழி மூல தமிழ் போட்டியில் உடத்தலவின்னையைச் சேர்ந்த மஸீதா புன்னியாமீன் சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் ஆக்கங்களின் தொகுப்பாக 'பிரகாசம்' என்ற நூலும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Friday, November 6, 2009

சுய கட்டுப்பாடு இருப்பின் நீரிழிவு நோயைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. - புன்னியாமீன்-

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். நீரிழிவு நோயாளி ஒருவரைப் பொருத்த வரையில் சுயகட்டுப்பாட்டுடன் எந்நேரமும் அவதானத்துடன் செயற்பட்டால் தேகாரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடிகிறது.

நீரிழிவு நோய் குறித்து பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் கூட, இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனேடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது. இன்சுலினை கண்டுபிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்" என்ற விஞ்ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின்" பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் திகதியை, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது. முதன் முதலில் இது 1991 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படத் தொடங்கியது, தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

வயது வித்தியாசம், தகைமை, தராதரம், பால் இன பேதம், செல்வம், வறுமை, நகரம் கிராமம் மட்டுமன்றி தயவு தாட்சண்யம் கூட காட்டாது நீரிழிவு நோய் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகின்றது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரச்சாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தபடியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-ல் 36 கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1) இந்தியா 2) சீனா 3) அமெரிக்கா 4) இந்தோனேசியா 5) ஜப்பான் 6) பாகிஸ்தான் 7) ரஷ்யா 8) பிரேஸில் 9) இத்தாலி 10) பங்களாதேஷ் என்பனவாகும். முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் தற்போது சுமார் 2 கோடியே 50 இலட்சத்திலிருந்து 3 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2 கோடிப் பேருக்கு தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு நோயைப்பற்றி தெரிந்து கொள்ளாதோர் இந்தியாவில் மாத்திரமல்லாமல் மூன்றாம் உலக நாடுகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

நீரிழிவு தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்க டாக்டர் ஒருவர் 'நீரிழிவு உள்ள ஒருவர் தனக்கு நீரிழிவு உள்ளதென்று தெரிந்து கொண்டால், நீரிழிவு என்பது அவருக்கு ஒரு நோயல்ல." என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அர்த்தம் நீரிழிவு நோய் உள்ள ஒருவர் தனது கட்டுப்பாட்டின் மூலம் நோயைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகும். நாம் நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு, முதலில் அந்நோயைப்பற்றி முழுமையாக நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நீரிழிவு நோய் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது மனித உடலை எந்த வகையில் பாதிக்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்திருத்தல் வேண்டியது இன்றியமையாதது.

முதலில் நீரிழிவு என்றால் என்ன என்பது பற்றி சிறிய விளக்கம் ஒன்றை எளிமையான முறையில் பெற்றுக் கொள்வோம். எமது இரத்தத்தில் இனிப்புச்சத்து (குளுக்கோசின் அளவு) வழமையாக இருப்பதிலும் பார்க்க அதிகரிப்பதினாலேயே நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இக்குளுக்கோசானது நாம் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் சமிபாடடைந்து குளுக்கோசாக மாற்றப்பட்டு குருதியால் அகத்துறிஞ்சப்படுகிறது. சாதாரண மனிதனின் 100ml குருதியில் 80-120mg குளுக்கோசு காணப்படுகிறது. எமது உடல் இயக்கத்திற்குத் தேவையான குளுக்கோசு எமது உடற் கலங்களுக்குள் உடைக்கப்பட்டுப் பெறப்படுகிறது. குருதியில் உள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்ல உதவுவது உணவுப்பாதையுடன் தொடர்பாக இருக்கும். சதையி (Pancreases) எனும் சுரப்பியால் சுரக்கப்படும். "இன்சுலின்" (Insulin) எனப்படும் ஓர் ஓமோன் ஆகும். இவ் இன்சுலின் உடலில் தொழிற்படாது விடுவதால் அல்லது இன்சுலின் சுரக்கும் அளவு குறைவதால் குருதியிலுள்ள குளுக்கோசு உடற்கலங்களுக்குள் செல்வது தடைப்படும். இதனால் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுகிறது. சாதாரணமாக சிறுநீரகங்கள் (Kidney) குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுவதில்லை.

குருதியில் குளுக்கோசின் அளவு கூடும் போது அதாவது 100ml குருதியில் குளுக்கோசின் அளவு 180mg ற்கு மேலாகக் கூடும் போது சிறுநீரகங்கள் மேலதிக குளுக்கோசை சிறுநீருடன் வெளியேற்றுகின்றன. இதனை சிறுநீரில் சீனி (Sugar) இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு சிறுநீருடன் குளுக்கோசு போகும் போது உடலிலிருந்து அதிகம் நீரும் சேர்ந்தே வெளியேறும். இதனால் வழமையிலும் பார்க்க அதிகளவு சிறுநீர் உண்டாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனாலேயே இதை நீரிழிவு என்கிறோம். அதிகளவு நீர் வெளியேறுவதால் மிதமிஞ்சிய தாகமும் ஏற்படுகிறது.

சிலரின் உடலில் நீரிழிவு நீண்டகாலங்களாகக் காணப்பட்டாலும் கூட நோயாளியின் அறியாத்தன்மை காரணமாக தனக்கு நீரிழிவு உள்ளது என்பதை நோயாளி உணர்ந்து கொள்வதில்லை. இதனால் பல பாரதூரமான விளைவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே நீரிழிவு நோயின் மூலமான அறிகுறிகள் சிலதை நோக்குவோம்.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல், வழமைக்கு மாறாக இரவிலும் பல தடவை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படல்.
2 அடிக்கடி தாகம் ஏற்படல்.
3. அசாதாரண பசி ஏற்படல்.
4. உடல் சோர்வாக இருத்தல்.
5. உடல் நிறை குறைந்து கொண்டு போதல்.
6. தலை சுற்றுதல்,மயக்கம் போன்றன அடிக்கடி ஏற்படல்.
7. கை, கால்களில் விரைப்புத் தன்மை ஏற்படுதல்.
8. தேகத்தில் பருக்களும், கட்டிகளும் தோன்றல்.
9. ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளில் ,கூடிய அழற்சி ஏற்படல்.
10. கண் பார்வை குறைவடைதல்.
11. புண்கள் ஏற்படின் அவை ஆறுவதற்கு வழமையிலும் கூடிய நாட்கள் எடுத்தல்.
12. எளிதில் கோபமடைதல்.


மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் சிலவற்றை சிலகாலமாக நீங்கள் அவதானித்தால் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிறுநீர்ப்பரிசோதனை செய்வதன் மூலம் அந்நோய் இருக்கின்றதா?, என்பதை அறிந்து கொள்ளலாம். பின்பு இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலமே இந்நோயை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். நீரிழிவு நோய் காணப்படுமிடத்து டாக்டரை அணுகி உரிய சிகிட்சை முறைகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.

பொதுவாக நீரிழிவு நோயினை நான்காக வகைப்படுத்தலாம். அதாவது, முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய், கர்ப்பகால நீரிழிவு நோய், சதையியில் (Pancreases) ஏற்படும் கற்களால் உருவாகும் நீரிழிவு நோய் என்ற அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நோய்களே தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை பாதிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் நீரிழிவு நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது எனப்படுகின்றது.

இந்த முதல் பிரிவு நீரிழிவு நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று சதையியியைத் (Pancreases) தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் சுரப்பிகளை அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை சதையி இழந்துவிடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி கலங்கள் , இன்னொரு பகுதிக் கலங்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக அண்மைக்கால கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அதனால், இந்த முதல் வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, இது ஒருவருக்கு வந்தால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிறந்த வழியாகக் கூறப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது வகை நீரிழிவு நோயாகும். இந்த இரண்டாவது வகை நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.

பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது தவிர கூடுதல் உடல் பருமன், அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணிகள், ஒருவருக்கு நீரிழிவு நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வகையான கர்ப்பகால நீரிழிவு நோய். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு நீரிழிவு நோய் இல்லாது போய்விடும்.

நான்காவது வகையான நீரிழிவுநோயை பொறுத்தவரை, சதையியில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. இது உருவாவதற்கு போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இதற்கான பிரதான காரணி எது என்பது குறித்து இன்னமும் ஆய்வுகள் தொடர்கின்றன.

நீரிழிவினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளி நோயைக் கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது குறைவடைந்தால் அவர் பாராதூரமான பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். இது காலப்போக்கில் உடலில் பல்வேறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1. குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைவதனால் மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றலாம்.
2. குறைந்த குருதி விநியோகம் மற்றும் பல காரணங்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு உடலின் புலனுணர்வு பாதிக்கப்படும்.
3. விழித்திரையில் மாற்றத்தினால் (Retinopathy) கண்வில்லையில் ஏற்படும் மாற்றத்தினாலும் (Cataract) கண்பார்வை இல்லாது போகும் அபாயம் ஏற்படல்.
4. பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படலாம். பிரதானமாக இந்நோய்களில் Candida எனப்படும் பங்கசு நோய் ஏற்படும்.
5. சிறுநீரகத்தில் சிக்கல் ஏற்படலாம் அல்லது இயங்க மறுக்கலாம். குறைந்த குருதி விநியோகம் நரம்புப் பாதிப்புகளால் பிரதானமாக கால்களில் பாதிப்புகள் ஏற்படல். குறைந்த புலனுணர்வால் நடப்பதில் கஸ்டம் ஏற்படுவதுடன் பாதப்பகுதியில் நோயாளர்கள் உணர முடியாமலேயே புண்கள் தோன்றலாம். இவ்வகைப் புண்கள் குணமடையாது போகின் பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.

நோயைக்கட்டுப்படுத்தும் முறைகள்
1. சில நோயாளர்களுக்கு இந்நோயை உணவுக்கட்டுப்பாடுகளின் மூலமும்.
2. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுடன் மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமும்
3. சிலருக்கு உணவுக்கட்டுப்பாடுகளுடன் இன்சுலின் ஊசி ஏற்றுதல்; மூலமும் கட்டுபாட்டில் வைத்திருக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% மக்கள் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% மாத்திரைகளும் 17% இரண்டும் உபயோகிக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. .

நீரிழிவு நோய்களுக்காகச் சிகிட்சை பெற்றுக் கொண்டிருப்போர் கவனிக்க வேண்டியவை:

1. வைத்தியரின் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
2. வைத்திய ஆலோசனைப்படி குளிசையை அல்லது இன்சுலின் ஊசியை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
3. மருந்து எடுத்து அல்லது ஊசி ஏற்றி அரைமணி நேரத்திற்குள் (30 நிமிடம்) உணவை உட்கொள்ளுதல் வேண்டும்.
4. சில சந்தர்ப்பங்களில் மருந்த எடுத்த பின் உணவு உட்கொள்ளத்தவறினால் அல்லது மேலதிகமாக மருந்தை உட்கொண்டாலோ களைப்பு, பசி, மயக்கம், தலைச்சுற்று, நெஞ்சுப்படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடல் குளிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் குளுக்கோசு அல்லது வேறு இனிப்பு வகைகள் உடனடியாக உட்கொள்ளல் அவசியமாகும். இதனால் சிறிதளவு இனிப்பு வகைகளோ அல்லது குளுக்கோசோ எந்த நேரமும் உங்களுடன் வைத்திருத்தல் நன்று. (குறிப்பாக இன்சுலின் அதிகளவில் உடலில் ஏற்றிக் கொள்பவர்கள்) மேலும் நீரிழிவு நோயாளிகள் வெளியிடங்களுக்குத் தனியே செல்லும் போது தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கும் விபரமடங்கிய குறிப்பொன்றை தன்னுடன் வைத்திருத்தல் பாதுகாப்பு மிக்கதாகும்.
5. தினமும் தேகாப்பியாசம் செய்தல் வேண்டும்.
6. உடல் சுத்தத்தைப்பேணல் வேண்டும். பிரதானமாக பாதங்களைச் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் பேண வேண்டும். நீரிழிவு நோயுள்ளவர்கள் தனது கால்களையும், கால் நகங்களையும் தினம் தோறும் அவதானித்து கொள்ளல் வேண்டும்.
7. உணவுக்கட்டுப்பாடின்றி உண்பதன் மூலமோ அல்லது மருந்துகளை ஒழுங்கீனமாக பாவிப்பதன் மூலமாகவோ குருதியில் குளுக்கோசின் அளவு அதிகமாகி வயிற்றுப் புரட்டல், நாவரட்சி, மயக்கம் போன்றன ஏற்படலாம். அப்படி ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளவர்கள், எச்சந்தர்ப்பத்திலும் மிகவும் அவதானமான முறையில் தமது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வதுடன், உணவு முறைகளையும் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.VIII

Read more...

Monday, June 14, 2010

உலக இரத்ததான தினம் World Blood Donor Day - புன்னியாமீன்

உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்ததானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும், பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள்.

விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே இரத்ததானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக இரத்ததானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை இரத்ததானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்ததானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் ‘இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் இரத்ததானத்தை ஊக்குவிப்பதாகும்’. வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை இரத்ததானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே இரத்ததானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க இரத்ததானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் இரத்ததானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் இரத்ததானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 - 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் இரத்ததானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.

இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது. இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்ததானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை இரத்ததானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் இரத்ததானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

இரத்ததானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக இரத்ததான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் இரத்ததானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விடயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இரத்ததானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

Read more...

Monday, July 19, 2010

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம். (Nelson Mandela International Day) - புன்னியாமீன்

முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் 2010 ஜூலை 18ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்பட்டது. தென்னாபிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது நிலைத்து நிற்கவேண்டியவர்களுள் மண்டேலாவும் ஒருவராவார். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் ஒளிக்கு .இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

2010 ஜூலை 18 இல் இடம்பெற்ற முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தில் “மண்டேலா ஆபிரிக்காவின் மைந்தன் / தேசத்தின் தந்தை என்ற திரைப்படமொன்றும் திரையிடப்பட்டுள்ளது. அத்துடன், மண்டேலாவை கௌரவித்து ஐ.நா. பொதுச் சபையில் உத்தியோகபூர்வமற்ற அமர்வொன்றும் இடம்பெற்றுள்ளது. நெல்சன் மண்டேலா "மக்களின் மனிதர்" என்ற புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றதாக ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார். ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜுலை 18 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிற வெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மாமனிதரான நெல்சன் மண்டேலாவின் 92வது பிறந்த தினமான 2010 ஜூலை 18 இல் முதலாவது நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாடுவதென 2009 நவம்பரில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. மோதலுக்குத் தீர்வு, சமாதானத்தை முன்னெடுத்தல் மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவளித்தல் போன்றவற்றுக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியமைக்காகவே இத்தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபை நிறைவேற்றியிருந்தது.

இதேவேளை முன்நகர்வாக ஜூலை 18 இல் நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தைக் கொண்டாட வேண்டுமென கியூபா பாராளுமன்றம் தீர்மானித்தது. அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான அமர்வில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதத்துவத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்த நெல்சன் மண்டேலாவை கௌரவித்து கியூபா பாராளுமன்றம் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தவர் நெல்சன் மண்டேலாவாகும்.

நெல்சன் மண்டேலா (Nelson Mandela International Day), ஜூலை 18, 1918 இல் பிறந்தவர். இவர் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.

இதற்கு ஓர் உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியது கூடக் கிடையாது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை. நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.

மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. 2010 இல் உதைபந்தாட்ட உலக கிண்ணத்துக்கான போட்டியும் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்தது.

மண்டேலா சிறுபராயத்தில் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டார். இவரது குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம்பராயத்திலே கல்வியைப் பெறுவதில் கூடிய ஆர்வம் கொண்ட மண்டேலா, பின்பு இலண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு: அராஜக நடவடிக்கைகளை கட்டழ்த்தது. இனவாதமும் அடக்கு முறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டன.

மண்டேலா தனது பல்கலைக்கழகத் தோழன் ஒலிவர் ரம்போவுடன் இணைந்து இன ஒதுக்களுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். இதன் விளைவு பயங்கரமாக மாறியது. 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் சுமார் 150 தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோல்வியுறும் போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென இவரால் உணரமுடிந்தது. வேறுவழியின்றி ஆயுதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவராக மண்டேலா மாறினார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை முன்னெடுத்தார்.

1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அப்போதும் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது" என வற்புறுத்தி நின்றார்.

இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடைசெய்யப்பட்டது. இத்தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது.

தென்னாபிரிக்காவில் பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க்கைத் தொடர்ந்து 10 மே 1994 இல் அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 14 ஜூன் 1999 வரை பதவி வகித்தார். மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். இவரைத் தொடர்ந்து தென்னாபிரிக்கத் தலைவராக பதவியேற்றவர் தாபோ உம்பெக்கியாவார். 3 செப்டம்பர் 1998 முதல் 14 ஜூன் 1999 அணிசேரா இயக்கப் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

இவரின் முதலாவது வாழ்க்கைத் துணைவி எவெலின் மாசே (1944–1957). பின்பு 1957 இல் வின்னி மண்டேலாவைக் கரம்பற்றி 1996 வரை வாழ்ந்தார். 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவிட்டு மண்டேலா விடுதலையாகி வெளியே வந்ததும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 1998 இல் கிராசா மாச்செலை மணம் புரிந்த இவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மெதடிசம் சமயத்தவரான இவர் தற்போது ஹூஸ்டன் எஸ்டேட்டில் வாழ்ந்து வருகிறார். 1993இல் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஜெயிலில் இருந்த போது, ஜெயில் அதிகாரியாக இருந்த டிகிளார்க்குடன் சேர்ந்து இந்த விருது வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இனஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அதிகாரத்துக்கு வந்த பின்னர் தனது கறுப்பின மக்களை அதுகாலவரை ஒடுக்கு முறைக்குள்ளாக்கிய வெள்ளையர்களை மன்னித்து நல்லிணக்கப்போக்கினைக் கடைபிடித்தார். தென்னாபிரிக்காவில் இனஒதுக்கல் ஆட்சியின் முடிவுக்குப் பின்னரான காலகட்டம் அனர்த்தங்கள் மிகுந்ததாகவே இருக்கும் என்று உலகம் நினைத்தது. ஆனால், இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதிவழிச் செயற்பாடுகளில் வெள்ளை ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துச் செயற்பட்ட நெல்சன்மண்டேலா 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்லின ஜனநாயகத் தேர்தலின் பின்னர் அமைத்த ஆட்சி உலகத்தின் நினைப்பைப் பொய்யாக்கியது. மண்டேலா ஆட்சியின் அடிநாதமாக நல்லிணக்கக் கோட்பாடே அமைந்தது.

Read more...

Sunday, January 3, 2010

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 03

புன்னியாமீன் B.A (cey), Dip in Journ (Ind), S.L.T.S

கடந்த வாரத் தொடர்ச்சி….

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணி வரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

திரு. ஜே.ஆர். ஜயவர்தன (ஐக்கிய தேசியக் கட்சி)
திரு. ஹெக்டர் கொப்பேகடுவ (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
திரு. ரோஹன விஜயவீர (மக்கள் விடுதலை முன்னணி)
திரு. கொல்வின் ஆர்.டி. சில்வா (லங்கா சமசமாஜக் கட்சி)
திரு. வாசுதேவ நாணயக்கார (நவ சமசமாஜக் கட்சி)
திரு. குமார் பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)


இத்தேர்தலில் 1) ஹேவாலயாகே கீர்த்திரத்தின 2) முதியான்சே தென்னகோன் 3) திருமதி நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.

1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவியபோதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது. காரணம்:

1) இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பரிச்சயமற்றவராகவே இவர் இருந்தமை.

2) 1970-77க் கிடைப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோஸலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும், 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற மக்களின் பய உயர்வும், (1982 ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கைகளை திட்டவட்டமான முறையில் முன்வைக்காமையும் ஒரு குறையாகவே கூறல் வேண்டும்)

1982-10-20ம் திகதி நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 995 ஆகும். (ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட, 6, 522, 147 (79.84 %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். திரு. ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1982 ஜனாதிபதித் தேர்தலில் 50சதவீதமான வாக்குகளை விட (3, 261, 074) மேலதிகமான 189, 737 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற திரு. ஹெக்டர் கொப்பேகடுவையை விட 902, 373 மேலதிக வாக்குகளையும் திரு. ஜயவர்தனா அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மாகாண ரீதியில் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 436,290 (57.71%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 276,476 (36.57%)
ரோஹன விஜயவீர (J.V.P) 28,580 (3.78%)
குமார் பொன்னம்பலம் (T.C) 3,022 (0.40%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 9,655 (1.28%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 2,008 (0.26%)

பதியப்பட்ட வாக்குகள் 972,196
செல்லுபடியான வாக்குகள் 756,031 (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,990 (1.04%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 764,021 (78.59%)

கம்பஹா மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 365,838 (52.50%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 301,808 (43.31%)
ரோஹன விஜயவீர (J.V.P) 23,701 (3.40%)
குமார் பொன்னம்பலம் (T.C) 534 (0.88%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 3,835 (0.55%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 1,122 (0.16%)

பதியப்பட்ட வாக்குகள் 835,265
செல்லுபடியான வாக்குகள் 696,838 (99.15 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,992 (0.85 %)
அளிக்கப்பட்ட வாக்குகள் 702,830 (84.14 %)

களுத்துறை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 211,592 (50.15%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 185,874 (44.06%)
ரோஹன விஜயவீர (J.V.P) 14,499 (3.44%)
குமார் பொன்னம்பலம் (T.C) 443 (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 8,613 (2.04%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 871 (0.20%)

பதியப்பட்ட வாக்குகள் 499,215
செல்லுபடியான வாக்குகள் 421,892 (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,548 (1.07%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,440 (85.42%)

கண்டி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 289,621 (59.82%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 178,493 (36.87%)
ரோஹன விஜயவீர (J.V.P) 12,493 (2.58%)
குமார் பொன்னம்பலம் (T.C) 562 (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 2,256 (1.46%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 718 (0.15%)

பதியப்பட்ட வாக்குகள் 564,767
செல்லுபடியான வாக்குகள் 484,143 (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,702 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,845 (86.6%)

மாத்தளை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 94,031 (58.11%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 59,299 (36.66%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,169 (4.43%)
குமார் பொன்னம்பலம் (T.C) 253 (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 866 (0.54%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 196 (0.12%)

பதியப்பட்ட வாக்குகள் 187,276
செல்லுபடியான வாக்குகள் 161,814 (99.13 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,414 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,228 (87.1%)

நுவரெலியா மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 109,017 (63.10%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 57,093 (33.05%)
ரோஹன விஜயவீர (J.V.P) 4,069 (2.35%)
குமார் பொன்னம்பலம் (T.C) 558 (0.32%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,201 (0.70%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 831 (0.48%)

பதியப்பட்ட வாக்குகள் 201,878
செல்லுபடியான வாக்குகள் 172,769 (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,048 (1.17%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 174,817 (86.6%)

காலி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 211,544 (50.23%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 180,925 (42.96%)
ரோஹன விஜயவீர (J.V.P) 20,962 (4.98%)
குமார் பொன்னம்பலம் (T.C) 425 (0.10%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 6,301 (1.50%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 981 (0.23%)

பதியப்பட்ட வாக்குகள் 512,489
செல்லுபடியான வாக்குகள் 421,138 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,198 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,336 (83.19%)

மாத்தறை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 164,725 (49.32%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 144,587 (43.29%)
ரோஹன விஜயவீர (J.V.P) 22,117 (6.63%)
குமார் பொன்னம்பலம் (T.C) 474 (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,571 (0.47%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 509 (0.15%)

பதியப்பட்ட வாக்குகள் 399,888
செல்லுபடியான வாக்குகள் 333,983 (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,091 (0.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 337,074 (84.29%)

அம்பாந்தோட்டை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 90,545 (45.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 76,402 (38.73%)
ரோஹன விஜயவீர (J.V.P) 28,835 (14.62%)
குமார் பொன்னம்பலம் (T.C) 275 (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 877 (0.44%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 344 (0.17%)

பதியப்பட்ட வாக்குகள் 241,956
செல்லுபடியான வாக்குகள் 197,278 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,804 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 199,082 (82.28%)

யாழ்ப்பாண மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 44,780 (20.54%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 77,300 (35.46%)
ரோஹன விஜயவீர (J.V.P) 3,098 (1.42%)
குமார் பொன்னம்பலம் (T.C) 87,263 (40.03%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 3,376 (1.55%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 2,186 (1.00%)


பதியப்பட்ட வாக்குகள் 493,705
செல்லுபடியான வாக்குகள் 218,003 (95.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,610 (4.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 228,613 (46.30%)

வன்னி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 32,834 (46.42%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 23,221 (32.83%)
ரோஹன விஜயவீர (J.V.P) 2,286 (3.23%)
குமார் பொன்னம்பலம் (T.C) 11,521 (16.29%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 584 (0.82%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 292 (0.41%)

பதியப்பட்ட வாக்குகள் 119,093
செல்லுபடியான வாக்குகள் 70,739 (96.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,447 (3.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 73,186 (61.5%)

மட்டக்களப்பு மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 48,094 (40.05%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 21,688 (18.06%)
ரோஹன விஜயவீர (J.V.P) 1,287 (1.07%)
குமார் பொன்னம்பலம் (T.C) 47,095 (39.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,294 (1.08%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 618 (0.52%)

பதியப்பட்ட வாக்குகள் 172,480
செல்லுபடியான வாக்குகள் 120,076 (97.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,876 (2.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 122,955 (71.29%)

திகாமடுல்லை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 90,772 (56.39%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 53,096 (32.98%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,679 (4.78%)
குமார் பொன்னம்பலம் (T.C) 8,079 (5.02%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 967 (0.60%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 377 (0.23%)

பதியப்பட்ட வாக்குகள் 204,268
செல்லுபடியான வாக்குகள் 160,970 (98.71%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,101 (1.29%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,071 (79.83%)

திருகோணமலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 45,522 (48.63%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 31,700 (33.87%)
ரோஹன விஜயவீர (J.V.P) 5,395 (5.76%)
குமார் பொன்னம்பலம் (T.C) 10,068 (10.76%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 635 (0.69%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 276 (0.29%)

பதியப்பட்ட வாக்குகள் 133,646
செல்லுபடியான வாக்குகள் 93,596 (98.12%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,795 (1.88%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 95,391 (71.37%)

குருனாகலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 345,769 (55.77%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 248,479 (40.08%)
ரோஹன விஜயவீர (J.V.P) 21,835 (3.52%)
குமார் பொன்னம்பலம் (T.C) 509 (0.08%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 2,594 (0.42%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 792 (0.13%)

பதியப்பட்ட வாக்குகள் 717,505
செல்லுபடியான வாக்குகள் 619,978 (99.13%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,431 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 625,409 (87.16%)

புத்தளம் மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 128,877 (59.12%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 80,006 (36.70%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,001 (3.22%)
குமார் பொன்னம்பலம் (T.C) 817 (0.37%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,040 (0.48%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 239 (0.11%)

பதியப்பட்ட வாக்குகள் 267,675
செல்லுபடியான வாக்குகள் 217,980 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,995 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 219,975 (82.18%)

அனுராதபுர மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 117,873 (49.84%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 102,973 (43.54%)
ரோஹன விஜயவீர (J.V.P) 13,911 (5.88%)
குமார் பொன்னம்பலம் (T.C) 222 (0.09%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,148 (0.48%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 396 (0.17%)

பதியப்பட்ட வாக்குகள் 278,594
செல்லுபடியான வாக்குகள் 236,523 (99.04%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,294 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 238,817 (85.72%)

பொலநறுவை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 59,414 (56.24%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 37,243 (35.26%)
ரோஹன விஜயவீர (J.V.P) 8,138 (7.70%)
குமார் பொன்னம்பலம் (T.C) 228 (0.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 451 (0.43%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 141 (0.13%)

பதியப்பட்ட வாக்குகள் 127,624
செல்லுபடியான வாக்குகள் 105,615 (99.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,064 (1.00%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 106,679 (83.59%)

பதுளை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 141,062 (58.62%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 88,642 (36.84%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,713 (3.20%)
குமார் பொன்னம்பலம் (T.C) 625 (0.26%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 2,115 (0.89%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 463 (0.19%)

பதியப்பட்ட வாக்குகள் 280,187
செல்லுபடியான வாக்குகள் 240,620 (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,802 (1.15%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 (86.88%)

மொனராகலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 51,264 (49.38%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 44,115 (42.49%)
ரோஹன விஜயவீர (J.V.P) 7,171 (6.91%)
குமார் பொன்னம்பலம் (T.C) 163 (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 882 (0.84%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 226 (0.22%)

பதியப்பட்ட வாக்குகள் 126,558
செல்லுபடியான வாக்குகள் 103,821 (98.53%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,553 (1.47%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 105,374 (83.26%)

இரத்தினபுரி மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 175,903 (50.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 152,506 (44.13%)
ரோஹன விஜயவீர (J.V.P) 11,283 (3.26%)
குமார் பொன்னம்பலம் (T.C) 422 (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 1,996 (0.58%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 3,494 (1.01%)

பதியப்பட்ட வாக்குகள் 402,202
செல்லுபடியான வாக்குகள் 345,604 (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,407 (0.98%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 (86.8%)

கேகாலை மாவட்டம்
ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 195,444 (57.02%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 126,538 (36.92%)
ரோஹன விஜயவீர (J.V.P) 13,706 (4.00%)
குமார் பொன்னம்பலம் (T.C) 376 (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 6,184 (1.80%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 514 (0.15%)

பதியப்பட்ட வாக்குகள் 406,548
செல்லுபடியான வாக்குகள் 342,762 (98.69%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,537 (1.31%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 347,299 (85.4%)

முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982 இறுதித் தேர்தல் முடிவுகள்


ஜே.ஆர். ஜயவர்தன (U.N.P) 3,450,811 (52.91%)
ஹெக்டர் கொப்பேகடுவ (S.L.F.P) 2,548,438 (39.07%)
ரோஹன விஜயவீர (J.V.P) 273,428 (4.19%)
குமார் பொன்னம்பலம் (T.C) 173,934 (2.67%)
கொல்வின் ஆர்.டி. சில்வா (L.S.S.P) 58,531 (0.90%)
வாசுதேவ நாணயக்கார (N.S.S.P) 17,005 (0.26%)

பதியப்பட்ட வாக்குகள் 8, 144,995
செல்லுபடியான வாக்குகள் 6, 522,147 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 80,470 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,602,617 (81.06%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளின் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
3,261,074

குறைந்த பட்ச வாக்குகளை விட ஜே. ஆர். ஜயவர்தனா அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
189,737

இரண்டாம் இடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களைவிட திரு ஜே. ஆர் அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
902,373

தொடரும்.........

Read more...

Saturday, May 22, 2010

சர்வதேச ‘உயிர்ப் பல்வகைமை தினம்’ - புன்னியாமீன்

இன்று மே 22 சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day) தினமாகும். உயிரியல் சம்பந்தமான பல்வகைமை பற்றிய சர்வதேச தினம் மே 22ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. உயிரியல் என்பது ‘உயிர் வாழ்வன’ பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், உயிரினங்களின் தோற்றம், அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங்களை ஆராய்வதும் அவை எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் கவனத்திற் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும், விளக்கங்களையும் முன்வைப்பதாகும்.

‘உயிரியல்’ விரிவுபட்ட அதேநேரம், தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்விச் செயற்பாடுகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த அடிப்படையில் உயிர்வாழ்வன பற்றி ஆய்வு செய்கின்றன.

இத்தகைய ஆய்வுகள் அணு மற்றும் மூலக்கூறுகள் மட்டத்தில், மூலகூற்று உயிரியல், உயிர்வேதியியல் ஊடாகவும், களங்கள் (cell) மட்டத்தில் களங்கள் உயிரியல் ஊடாகவும், கள மட்டத்தில் உடற்கூற்றியல், மற்றும் கள அமைப்பியல் ஊடாகவும், தனிப்பட்ட உயிரினத்தின் விருத்தி அல்லது ontogeny மட்டத்தில் விருத்தி உயிரியல் ஊடாகவும், பெற்றோர், offspring இடையிலான பரம்பரைத் தொடர்புகள் மட்டத்தில் பரம்பரையியல் ஊடாகவும், குழு நடத்தைகள் மட்டத்தில் நடத்தையியல் ethology ஊடாகவும், முழு population மட்டத்தில் தொகை மரபியல் population genetics ஊடாகவும், பல்வகை உயிரினங்களில் lineages மட்டத்தில் முறைப்பாடியல் ஊடாகவும், ஒன்றிலொன்று சார்ந்துள்ள populations மற்றும் அவைகளின் வாழிடங்கள் மட்டத்தில், இயற்கை இயல் மற்றும் பரிணாம உயிரியல் ஊடாகவும், பூமிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்தில், xenobiology ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இது ஒரு விரிவான துறையாகும்.

இத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து 1993ஆம் ஆண்டில் ஐ. நாடுகள் பொதுச் சபையின் இரண்டாம் குழுவினால் இத்தினம் பிரகடனப்படுத்தட்டதிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை டிசம்பர் 29ஆம் திகதிகளிலேயே அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. 2000ஆம் ஆண்டு நடை பெற்ற ‘ரயோ ஏர்த”; மகாநாட்டின்போது “டிசம்பர் மாதத்தில் விடுமுறைகள் அதிகமாக இருப்பதால்” சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day) தினத்தை மே 22ல் அனுஸ்டிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட “மிலேனியம் எக்கோ சிஸ்டம்” (M.A) மதிப்பீட்டின்படி இந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உயிர்ப் பல்வகைமை Biological Diversity (or World Biodiversity) இழப்புக்கு காலநிலை மாற்றமானது நேரடிப் பாதிப்பினை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

2100 ஆண்டளவில் வெப்பநிலையனாது 1.4 பாகை செல்சியஸிலிருந்து 5.8 பாகை செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கால நிலை மாற்றமானது விநியோக மாற்றங்கள், அழிவு அதிகரிப்பு விகிதங்கள், இனப் பெருக்கத்தில் பாதிப்பு போன்றவற்றுடன் தாவரங்களின் வளர்ச்சியில் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

இம்மாற்றங்களின் காரணமாக ஒரு மில்லியனுக்கு கூடிய இனங்கள் அழிவுறும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தாவர இனங்களின் அழிவையும், காலநிலை மாற்றத்தையும் முறைப்படி எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்குச் செயற்படின் அடுத்து வரும் காலங்களில் இந்நிலையை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும்.

இவ்விடத்தில் பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக சிறிது ஆராய்தல் அவசியம்.

பூகோலத்தின் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)] எனும் அறிஞர் “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. புவியின் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டிப்படைந்துள்ளது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார். எதிர்பார்த்ததை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.” - கிரிஸ்டொபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

மேலும், “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவி அதிகமாக வெப்பமடைந்ததால் மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினங்கள் கூட அழிந்தன என்றும், அதே நேரத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது. அது 10,000 - 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை ஏற்படுகின்றது.” மேற்படி கருத்துக்களைப் பார்க்குமிடத்து புவி வெப்பமடைவதும், இதனால் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் எம்மால் தீர்மானிக்கக்கூடியதே.

“உலகத்தின் சனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது’. அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுண்டு.

சில தசாப்தங்களுக்குள் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவுமில்லாமல் போகலாம் எனவும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேநேரம், சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன, அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின, அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிமலைகள் உருகிக் கரைந்து விட்டன, நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மக்களை புலப்பெயர்ச்சி செய்து விட்டது, வன்முறைகளுக்கும் யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை கால நிலையும் அதைவிடப் பயங்கரமானதே.

இவ்விடத்தில் புவிச் சூடேற்றம் என்றால் என்ன என்பதையும் சிறிது விளங்கிக் கொள்ள வேண்டும்.

புவி என்று நாம் கூறும்போது மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பை [Temperature Range] ஏற்படுத்திக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி வெப்ப அதிகரிப்பு இடம் பெற்று விடும். வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் அனைத்துமே பாதிக்கப்படும்

பச்சை வீட்டு வாயுக்கள் (கார்பனீர்ஒக்சைட், மீதேன் போன்ற வாயுக்கள்) பூமியில் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன. ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணை போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் பச்சை வீட்டு வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூமியின் வெப்பம் வேகமாக உயர்கின்றது.

அண்மையில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டு காலமாக பனிப்படலங்களிலிருந்தும் சேமிப்பாய் உள்ள மீதேன் புவியின் வெப்ப நிலை அதிகரிப்பினால் அதிகமாக வெளியேரலாம் என எச்சரித்துள்ளது. மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்பட்டுள்ளது. புவிச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பனீர் ஒக்சைட்டை விட 23 மடங்கு அதிகம் எனப்படுகின்றது. உலகில் அதிகமான விஞ்ஞானிகள் புவிச் சூடேற்றத்தை உண்மையென ஏற்றுக் கொண்டாலும் அம்மாறுதலை ஏற்றுக் கொள்ளாத அறிஞர்களும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புவிச் சூடேற்றத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் உண்மையாகவே உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் காலநிலைக் கோர விளைவுகளை கண்ணூடாகக் காண்கின்றோம். துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகள், நில அதிர்வுகள்,எரிமலை வெடிப்புகள், போன்றவற்றைக்காண்கின்றோம். நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் ஐயம் இன்று ஏற்பட்டு விட்டது. உதாரணத்திற்காக அண்மைக்காலங்களாக காலநிலைமாற்றத்தால் ஏற்பட்ட சில கோர விளைவுகளை நோக்குவோம். கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5] எண்ணிக்கை இரட்டித்துள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன, குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன, 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

மேலும் தொடர்ந்தும் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் கீழ்க்காணும் அபத்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு, அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும், கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம், 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம், 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம், வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம், நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் எழுகின்ற இந்த பிரச்சனைகளை நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமையாகவும் உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் இப்போது வந்துவிட்டது. புவிச் சூடேற்றத்தை நாங்கள் கட்டுப்படுத்தாவிடின் இன்னும் சில தசாப்தங்களில் பாரிய உயிரின இழப்புகள் ஏற்பட இடமுண்டு. இதனை இத்தினத்தில் நினைவிற் கொள்வோம்.

Read more...

Saturday, March 31, 2012

இன்றிரவு 8.30க்கு விளக்குகளை அணையுங்கள் - புன்னியாமீன்

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை தினத்தன்று அனுஸ்டிக்கப்படும் புவி நேரம் என்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட வேண்டும் .என்பது இந்நிகழ்வின் எதிர்பார்க்கையாகும் .

2007ம் ஆண்டு முதல் இந்த புவி நேரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குகளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.

புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக உலகம் முழுவதும் இந்தப் புவி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் கோடிக்கணக்கணக்கானோல் கலந்து கொண்டதாகவும தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு புவி நேரம், இன்று சனிக்கிழமை இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது. இம்முறை பல கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Read more...

Wednesday, April 18, 2012

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் - புன்னியாமீன்

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினம் (International Day for Monuments and Sites) ஆண்டு தோறும் ஏப்ரல் 18ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டில் டுயுனீசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக மாநாட்டின் தீர்மானப்படி 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22வது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவமிக்க உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவினை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்ணியப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளிலும் வரலாற்று முக்கியத்துவமிக்க மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த மரபுரிமைச் சின்னங்கள் நாட்டின் வரலாற்றுச் சான்றுகளை பதிவுகளாக்குகின்றன.

எனவே இந்த மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் அவற்றின் இருப்புகள் வரலாற்று பின்னணிகள் பற்றிய அறிவும் விளக்கங்களும் மக்களுக்கு தேவைப்படுகிறது. இத்தினத்தில் மக்களுக்கு இது பற்றிய தெளிவை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இச்செயற்திட்டத்தை நினைவுச் சின்னங்களுக்கும் அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) மிகச்சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக சபை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை அதாவது கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய ஒர் அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப் பெயரால் இந்தச் சபை அழைக்கப்படுகிறது. பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களை கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களை பராமரிப்புச் செய்வதில், ஈடுபட்டுள்ள, சர்வதேச மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனமும் இதுவேயாகும்.

1964ம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய மாநாட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், அமைவுத் தளங்களையும் பரிபாலனம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது.

உலக மரபுத் தளங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலகளாவிய ரீதியில் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாப்பதில் இந்த அமைப்பு மிகத்திறம்பட செயற்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், பரிபாலனம் செய்வதிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18ம் தேதியை நினைவுச் சின்னங்களுக்கும், அமைவுத் தளங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது

இன்று கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய அறிவினை தொல்பொருளியல் (Archaeology) ஊடாக பெற முடிகிறது.

தொல் பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச் சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். ஆக இத்துறைகள் ஊடாக நினைவுச்சின்னங்களுக்கும், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களுக்கும் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வை வழங்கி அவற்றைப் பேணி பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
உசாத்துணை:

* http://en.wikipedia.org/wiki/International_Day_For_Monuments_and_Sites

* http://18april.icomos.org/

* http://international.icomos.org/18thapril/2007/index.html

* http://www.unesco.org/new/en/natural-sciences/environment/water/single-view-fresh-
water/news/18_april_international_day_for_monuments_and_sites_2011_cultural_heritage_of_water/

Read more...

Friday, May 21, 2010

இன்று மே 21 உலக பண்பாட்டுத் தினம் (World Culture Day - May 21) - புன்னியாமீன்

பண்பாடென்பது மக்கள் குழுவொன்று தமது சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிப் படிகளினூடாக உருவாக்கிக் கொண்ட பெளதிகப் பொருட்கள், ஆன்மீகக் கருத்துக்கள், மத அனுஸ்டானங்கள், சமூக விழுமியங்கள் என்பவற்றினை ஒன்றிணைத்த ஒரு பல்கூட்டுத் தொகுதி எனலாம். நம்பிக்கைப் பெறுமானம் கலைகள் விஞ்ஞானம் கல்வி உற்பத்தி முறைகளும் உறவுகளும் தொழினுட்ப வளர்ச்சி முறை என்பவற்றை உள்ளடக்கியதாக ஒரு இனத்தின் பண்பாடு இனங்காட்டப்படுகின்றது.

உலக பண்பாட்டு வளர்ச்சிக்கான துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் கூடிய அக்கறைகாட்டி வருகின்றது. உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பொருளாதாரமும் பண்பாடும் மூலம் என்பர். மானிடவர்க்கத்தின் மேம்பாட்டுக்கான ஆணிவேரான பண்பாடு – கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகளாவிய ரீதியில் உலக பண்பாட்டுத்தினம் சர்வதேச ரீதியாக ஒவ்வோர் ஆண்டும் மே 21ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது

யுனெஸ்கோவின் பல்வேறு வகைப்பட்ட கலாசாரம் பற்றிய சர்வதேச பிரகடனம் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ள அதேநேரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 57/249(3) ம் பிரேரணை இத்தினத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச மட்டத்தில் உணர்த்தியுள்ளது. 2001.09.11ஆம் திகதி அமெரிக்காவில் தீவிரவாத தாக்கத்தின் பின்னர் இத்தினத்தின் முக்கியத்துவம் பலமாக உணரப்பட்டுள்ளது.

ஒரு சமுதாய உறுப்பினன் என்ற முறையில் மனிதன் ஈட்டுகிற மரபு வழியாலும் அனுபவத்தாலும் கற்றுக் கொள்கிற பழக்கவழக்கங்கள், திறன்கள், மக்கள் குழு உருவாக்குகின்ற உலகாயதப் பொருட்கள் அனைத்தையும் தழுவியதுதான் பண்பாடு. இன்று அனைத்துலக சமுதாயம் முன்னேற்றம் எனக் கருதுவது பொருளாதாரக் கூறுகள், சமூகவியல் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் பிணைந்த முன்னேற்றத்தையே. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மக்கட் கூட்டத்துக்கும் அவரவர் தம் பண்பாட்டைப் பொறுத்தே சிறப்பு அமைகிறது.

எனவே, மனிதனின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் பண்பாடு உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. கலைப் படைப்புகள் மட்டுமன்றி அறிவுத்திறன். உண்ணும் உணவு, உடை, உறையுள், குடும்ப உறவுகள், சமுதாய உறவு போற்றும் நெறிமுறைகள், கல்வி முறை, சிந்தனை, எதிர்கால எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், புதியவர்களுடன் பழகுதல் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் பண்பாடு வெளிப்படுகின்றது. ஓர் இனத்தின் உயர்வு அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களிலேயே தங்கியுள்ளது. இதனால் இனங்களின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவரவர் தம் பண்பாடுகள் பேண இடமளிக்கப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பண்பாடுகளின் தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் குறைகூறப்படுகின்றது. அதாவது புதிய உலக தொடர்புகள், தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி, செய்திப் பரிமாற்றம் என்பன உலக பண்பாடுகளை அவற்றின் தனித்துவத்தைக் கடந்து ஒன்றோடொன்று நெருங்க வைத்துள்ளன. மக்களின் சுவை, சிந்தனை, கருத்துக்கள், வாழ்க்கை முறை, போக்கு, உடை, உணவு, இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றில் பல்லின – பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே பொதுப் பண்பாட்டம்சங்களும், புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றன. பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பண்பாடுகளின் தனித்துவத்தைச் சிதைப்பாகக் குறை கூறப்பட்டினும் உண்மையில் அப்படி மரபு சிதையாது என்பதற்கு ஜப்பான் உதாரணமாக விளங்குகின்றது. அதேபோல சீனாவில் அண்மைக்கால துரித வளர்ச்சிகளும் எடுத்துக் காட்டுகின்றன.

இனவொதுக்கல் கொள்கைகளை மேற்கு நாட்டவர் ஆதரிக்கின்றனர்;. தென்ஆபிரிக்க மானிடவியல் அறிஞர் கிளக்மேன் கூற்றுப்படி ‘இன ஒதுக்கல் கொள்கையை ஆதரிக்கும் மேற்கு நாட்டவர்கள் தாம் ஆபிரிக்காவின் உள்நாட்டு இனங்களின் பண்பாடுகள் அந்த மக்களுக்குப் பொருத்தமானவை என்றும், அவற்றைப் பேண அம்மக்களுக்கு உரிமை உண்டு’ என்றும் ஆதரித்துள்ளார்கள்.

ஆனால், மரபு பிறழாமல் அம்மக்களுடைய பண்பாடுகள், வாழ்க்கை வசதிகளில் நவீனத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. பட்டினி வறுமைக் கோடு பிணி எழுத்தறிவின்மை சிசு மரணம் மகளிர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் அரசியல் அறிவின்மை பொருளாதார சமச்சீர் இன்மை போன்றவற்றை அகற்றி மேன்மையை உருவாக்க நவீனத்துவம் கைக்கொள்ளப்படவேண்டும் எனக் கருதப்படுகிறது.

மொழியானது சகல இனங்களினதும் பண்பாட்டுக் காவியாகும். மக்கள் உணர்வுகள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள் என்பன அவர் தம் தாய் மொழியிலேயே பொதிந்துள்ளன. தேசியப்பண்பாட்டின் உயிர் நாடியாக மட்டுமன்றி, பண்பாட்டை வளர்க்கக்கூடிய சாதனமாகவும் மொழி விளங்குகின்றது. தாய்மொழியானது ஒரு இனத்தின் பண்பாட்டில் முக்கியம் பெறுகின்றது. ஒரு நாட்டில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் மொழியை ஒதுக்கிவிட அல்லது நசுக்கிட பெரும்பான்மையின மக்கள் நினைப்பது தவறாகும். அது துரோகமும் ஆகும். நம்பிக்கைகள் சிந்தனைகள் உணர்வுகள் மரபுகள் போன்றன இனங்களின் தாய்மொழியிலேயே சங்கமிக்கின்றன. பண்பாட்டை வளர்க்கக் கூடியதாகவும் தேசிய பண்பாட்டின் ஊற்று மூலமாகவும் மொழி அமைகின்றது. சிறுபான்மை இனங்களின் மொழியும் பண்பாடும் பாதுகாக்கப்படுவதன் மூலமே நாட்டின் பண்பாட்டுப் பெருமை மேலோங்கும். பொதுமொழி அல்லது பெரும்பான்மையின மொழியை பலவந்தமாக திணிக்கக்கூடாது. அது தாமாகவே ஈர்க்கப்பட வேண்டும். பல்வேறு சிறுபான்மை இன, மொழிகள் இருந்தும் ரஸ்ய மக்கள் ரஸ்ய மொழியைப் பொதுமொழியாக ஏற்றனர். ரஸ்ய மொழியின் பண்பாட்டம்சங்கள் மக்களை தாமாகவே ஈர்த்துக் கொண்டது.

பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட நாடுகளில் இனப் பிரச்சினை, மொழிப்பிரச்சினை என்பன ஏற்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் பெரும்பான்மையின மக்களின் மனப்பாங்கு ஆகும். பேரினவாத சிந்தனைகளே இந்நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு யாப்பில் சிறுபான்மை, இனங்கள், மொழிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

இனங்களின் தனித்துவப் பண்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி செய்திப் பரிமாற்றங்களின் துரிதம் என்பன தாக்கமடையச் செய்துள்ளன எனச் சிலர் கூறினாலும் உலகத்தினை ஒரு கிராமமாக்கி சர்வதேச ரீதியிலான பண்பாட்டுக்கோலங்கள் சகலரும் அறிந்தொழுக இவை பூரணமாக உதவி வருகின்றன என்பதை மறுதலிப்போர் இல்லை எனலாம். உலகப் பண்பாடுகளுடன் உலக மக்கள் ஒன்றித்திளைத்திட தகவல் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மூன்றாம் உலக நாடுகளில் சமயக் குழுக்கள், இனக்குழுக்கள், மொழிக்குழுக்கள் என்பன பரஸ்பர உறவைப் பேணுவதோடு பற்கூட்டு அம்சங்களான கலை இலக்கியம் பண்பாடு மொழி போன்றவற்றில் ஒரு தொடர்பினை உருவாக்கி அதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பும் பொதுப்பண்பாடும் மலர வித்திடலாம்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com