Saturday, November 27, 2021

மாவீரர் நாள் உரை – விண்ணிலிருந்து பிரபாகரன்

என் நேசத்திற்குரிய பூலோகத்து தமிழ் மக்களே!

நேற்று பூலோகத்தில் நான் பிறந்தநாள் ... இன்று மாவீரர் நாள். என்னை தமிழ் தேசியத் தலைவனாக்குவதற்கு தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நன்நாள்.. தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் ஆக்குவதற்கு தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை ஆகுதியாக்கிய விரப்போராளிகளை எம் மனதில் நிறுத்தும் பெருநாள். புலம்பெயர்ந்துள்ள என் விசுவாசிகளின் புனித வியாபாரங்களை பெருக்குவதற்காக தங்களை தற்கொடை செய்த புனிதர்களை போற்றிப்புகழும் புனிதநாள். இந்த புனித நாளை பூலோகம் எங்கும் பரந்து வாழுகின்ற தமிழர்கள் தங்கள் களியாட்ட நாளாக கொண்டுள்ளனர். இக்களியாட்ட நாளில் புலோகத்து மக்களுடன் நீண்ட நெடிய இடைவெளிக்கு பின்னர் மனம் திறந்து பேச வழியமைத்துத்தந்த ஏற்பாட்டுக்குழுவினரே!

என் பேச்சை செவிமடுப்பதற்காக இங்கு வந்திருக்கின்ற

புலிகளளால் படுகொலை செய்யப்பட்ட மதகுருக்களுக்கான சங்கத்தலைவர் செல்லையா பரமேஸ்வரக்குருக்கள் ஐயா அவர்களே!


புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கான சங்கத்தின் இணைத்தலைவர்களான: பெருமதிப்புக்குரிய அண்ணன் அல்பிரட் துரையப்பா அவர்களே!
அன்றும் இன்றும் என்றும் என் அன்பிற்குரிய அண்;ணன் அமிர்தலிங்கம் அவர்களே!

எம்மினத்தால் பூவுலகில் இனியொருபோதும் பெற்றுக்கொள்ள முடியாத அறிவுஜீவி அண்ணன் நீலன் திருச்செல்வம் அவர்களே!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என எங்கள் குற்றங்குறைகளை உலகிற்கு எடுத்துக்கூறி எம்மை நல்வழிக்கு கொண்டுவர அயராதுழைத்த அண்ணன் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களே!

திருமலை மக்களின் மனங்களில் நிறைந்திருக்கின்ற அண்ணன் தங்கத்துரை அவர்களே!

மட்டக்களப்பு மக்களின் பிரதிநிதி அண்ணன் ராஜன் சத்தியமூர்த்தி அவர்களே!

புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவ வெறிக்கு பலியான ஈழ விடுதலைப்போராளிகளுக்கான சங்கத்தின் இணைத்தலைவர்களான: அண்ணன் பத்மநாபா அவர்களே,

அண்ணன் சிறிசபாரட்ணம் அவர்களே,

அண்ணன் விசுவானந்த தேவன் அவர்களே!

அண்ணன் ஒபரோய் தேவன் அவர்களே,

அண்ணன் ரெலி ஜெகன் அவர்களே!

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட புத்திஜீவிகளுக்கான சங்கத்தலைவி சகோதரி ராஜினி திரணகம அவர்களே!

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அரச உயரதிகாரிகளுக்கான சங்கத்தலைவர் அண்ணன் பஞ்சலிங்கம் அவர்களளே!

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான சங்கத் தலைவர் அண்ணன் சுந்தரம் அவர்களே!

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கலைஞர்களுக்கான சங்கத் தலைவி தங்கை செல்வி அவர்களே!

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமை காவலர்களுக்கான சங்கத்தலைவி சகோதரி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களே!

புலிகளின் உள்வீட்டு படுகொலைகளுக்கு பலியானோர்களுக்கான சங்கத் தலைவர் அண்ணன் மைக்கல் அவர்களே!

புலிகளால் புறமுதுகில் சுடப்பட்ட புலிகளுக்கான சங்கத்தலைவர் அருமை நண்பன் செல்லக்கிளி அம்மான் அவர்களே!

புலிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டோர்களுக்கான சங்கத்தலைவரும் என்னால் என்றும் மறக்கமுடியாத எனதருமைக்குருவுமான அண்ணன் குட்டிமணி அவர்களே!

புலிகளால் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான சங்கத் தலைவன் தம்பி விஜிதரன் அவர்களே!

புலிகளால் கொலை செய்யப்பட்ட கிழக்குப்புலிகளுக்கான சங்கத் தலைவர் அருமைத்தம்பி ரெஜி அவர்களே!

புலிகளால் நயவஞ்சகமாக நஞ்சூட்டிக்கொலை செய்யப்பட்டோருக்கான சங்கததின் இணைத்தலைவர்கள் தம்பி குமரப்பா அவர்களே! தம்பி புலேந்திரன் அவர்களே! தம்பி குகநேசன் அவர்களே!

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பெண்ணகளுக்கான அமைப்புத் தலைவி பரமேஸ்வரி அவர்களே!

புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டு பலிகொடுக்கப்பட்டோருக்கான சங்கத்தலைவர் கப்டன் தமிழ் பிரியன் அவர்களே!

பலவந்தமாக படையில் இணைக்கப்பட்டு பலிகொடுக்கப்பட்ட 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான அமைப்பின் தலைவர் வீரவேங்கை அன்பு அவர்களே!

கப்பம் கட்ட முடியாமையால் புலிகளால் கொல்லப்பட்டடோருக்கான சங்கத்தலைவர் சச்சிதானந்தன் அவர்களே!

பலிப்பாசிஸ்டுக்களின் தனிப்பட்ட கோபம் காரணமாக கொல்லப்பட்டோருக்கான சங்கத்தலைவர் அடங்காத்தமிழன் அண்ணன் வன்னியசிங்கம் அவர்களே!

13 வருடங்களுக்கு பின்னர் எனது அன்புக்குரிய பூலோகத்து மக்களுடன் பேசவேண்டுமென வேண்டியபோது அதற்கான ஏற்பாட்டுக்குழுவில் இணைந்து, இங்கிருக்கக்கூடிய மக்கள் என்மீது செருப்புகளை எறிந்து இங்கிருந்தும் விரட்டிவிடக்கூடாது என்ற கருசனையில் சிறப்புப்பாதுகாப்புகளுடன் இம்மேடையை அமைத்து என்முன்னே மேடையின் வலதுபக்கமூலையில் பாதுகாப்பிற்காக கம்பீரமாக நின்றிருக்கும் தம்பி புளொட் மோகன் அவர்களே!

இடதுமூலையில் காவற்கோபுரமாக நின்றிருக்கும் தம்பி ஈபிஆர்எல்எப் ராசிக் அவர்களே!

நான் பெயர் குறிப்பிட தவறிய பெருந்ததைகளே!

அலையலையென திரண்டிருக்கும் பெற்றோர்களே! பெரியோர்களே! விசேடமாக பாடசாலைக்கு நிரந்தர விடுமுறை பெற்றுவந்திருக்கும் சிறார்களே!

உங்கள் அனைவருக்கும் மாவீரர் நாள் வணக்கங்கள், அயுபோவன், அஸ்ஸலாமுவலைக்கும்!

சிறிலங்கா அரசும் சிங்களப்பேரினவாதமும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை முடுக்கிவிட்டபோது, வன்செயல்களை கட்டவிழ்த்தபோது தமிழர் தேசம் எங்கும் அஹிம்சாவழிப் போராட்டங்கள் ஆரம்பித்திருந்தது. அப்போராட்டங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் நான் எமது பிரதேசத்தில் கொடிகட்டிப்பறந்த கள்ளக்கடத்தல் மன்னர்களான குட்டிமணி , தங்கத்துரை , செட்டி தனபாலசிங்கம் போன்றோரின் சீடனாக செயற்பட்டுக்கொண்டிருந்தேன். சிறிலங்கா அரசின் காவல்துறையினர் எங்களை கள்ளக்கடத்தல், கொள்ளை போன்ற குற்றச்செயல்களுக்காக வலைவிரித்து தேடிக்கொண்டிருந்தனர். பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக தமிழ் மக்களின் வீடுகளினுள் தஞ்சம்கோரி நுழையும்போது நாயை அவிட்டுவிடும் மனநிலையில் இருந்த மானமுள்ள மக்களாகிய நீங்கள், நான் விடுதலைப்போராட்ட வீரனாக உங்களிடம்வந்தபோது, மனித கேடயங்களாக மாறி என்னை காத்துவந்தீர்கள். என்முன்னால் மனித வெடிகுண்டுகளாக மாறிநின்று என்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தினீர்கள். எனக்கு தமிழ் மக்களின் தேசியத் தலைவர் என்ற உயரிய அந்தஸ்த்தை தந்தீர்கள். என் பாசத்துக்குரிய பூலோகத்து தமிழ் மக்களே என்வாழ் நாளில் என்றென்றும் உங்களுக்கு கடமைப்பட்டவனாக உள்ளேன்.

என்றென்றும் என் நன்றிக்குரித்தான பூலோகத்து தமிழ் மக்களே! தமிழ் மக்களாகிய உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பல தீர்வுகளை நான் தவறவிட்டுவிட்டதாக இன்று என்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இதற்கு அப்பாலும் உண்மைகளை மறைத்து வைக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. இந்த கசக்கும் உண்மைகளை நீங்கள் பெரும் தன்மையுடன் ஏற்று என்னை தொடர்ந்தும் உங்களில் ஒருவனாக காப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு.

தமிழ் மக்களாகிய உங்களுக்கான தீர்வுகளை தவற விட்டதற்கான முழப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன். இருந்தபோது அவ்வாறானதோர் நிலை உருவாகியதற்கான காரணத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். எம் மக்களுக்கான அரசியல் தீர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாக ஆராயுமாறு எனது அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களிடம் கோரினேன். அப்போது பாலா அண்ணை என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினார் அந்தக்கேள்வி யாதெனில். „ தம்பி நீ பொலிஸாரால் தேடப்படுகையில் அடைக்கலம்கோரிச் சென்றபோது நாயை உசிக்காட்டிய தமிழர்கள், இன்று உன்னை தேசியத் தலைவர் என்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் நீ சுதந்திரம் பெற்றுத்தரப்போகின்றாய் என்பதுதான். ஆனால் இந்த தமிழர்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு தஞ்சம் கோரிச் சென்றாயானால் நாயை மீண்டும் அவிட்டுவிடமாட்டார்கள் என்பதற்கு உன்னிடமுள்ள உத்தரவாதம் என்ன?' என்ற கேள்வியை கேட்டார். அந்த கேள்விக்கான பதில் என்னிடம் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல கேள்வியையும் சரியாக புரிந்து கொள்ளமுடியாத நிலையிலேயே நின்றேன். பாலா அண்ணை என்ன கூற வருகின்றீர்கள் என அவரிடமே கேட்டபோது „ தம்பி தமிழர்கள் சரியான சந்தர்ப்பவாதிகள். இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டால் உன்னை தூக்கி குப்பையில் போட்டுவிடுவார்கள். நீ தமிழனுக்கு தலைவனாக இருக்கவேண்டுமென்றால் இந்த போராட்டம் தொடரவேண்டும். போராட்டம் தொடரும் வரைதான் நீ தமிழர்களுக்கு தலைவன். ஜனநாயகம் எல்லாம் எல்லோருக்கும் உரியதல்ல. முதலில் மக்கள் செல்வாக்குள்ள அனைத்து தலைவர்களையும் புலிகளை ஏற்க வைக்கவேண்டும். மறுப்போரை போட்டுத்தள்ளவேண்டும். பின்னர் ஜனாநாயகம், சோசலிசம், இடதுசாரியம் என்று புறுபுறுத்துக்கொண்டு திரியிறவையளை ஒதுங்கிப்போய் ஒரு பக்கத்திலை குப்புறப்படுக்க சொல்லவேண்டும். கேட்கவில்லையென்றால் ஒருவர் இருவருக்கு மண்டையிலை வைக்க மற்றவை ஓடிப்போய் படுத்துவிடுவார்கள். அதன் பின்னர் நாங்கள்தான் தமிழ் மக்களின் ஏகப்பரதிநிதிகள் என்ற கோரிக்கையை முன்வைத்து மாற்று இயக்கங்கள் அனைத்தையும் அடித்து நொருக்கவேண்டும். பின்னர் இலங்கை அரசோ சர்வதேசமோ எங்களிடம்தான் பேச்சுக்கு வருவார்கள். அப்பேச்சுக்களில் அளாப்பி எவ்வாறு காலத்தை கடத்துறது என்ற வித்தை எனக்கு தெரியும்' என்றார்.

என் நேசத்திற்குரிய தமிழ் மக்களே! அண்ணன் அன்ரன் பாலசிங்கத்தின் ஆலோசனையை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. இதனை அமைப்பின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியபோது அவர்களில் பலரும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளபவர்களாகவே இருந்தனர். அவர்களது விருப்பிற்கும் ஏற்பவே இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற பெருந்தகைகளயும் அவர்களது சகாக்களையும் சமாதானத்தை வலியுறுத்திய பலரையும் பாதுகாப்பாக இங்கு அனுப்பி வைத்தேன். அச்செயலுக்கு மக்களாகிய நீங்களும் எனக்கு பேருதவி புரிந்தீர்கள் என்பதை நான் மறக்கவில்லை என்பதையும் இங்கு வீற்றிருக்கின்ற அண்ணன் அல்பிறட் துரையப்பா அவர்களை நான் முதன்முதலாக எனது கரங்களாலேயே சுட்டுக்கொன்றபோது நீங்கள் என்னை சிறிலங்கா இராணுவத்திடம் பிடித்துக் கொடுத்திருந்தாலோ அன்றில் இன்று நீங்கள் உலகெங்கும் போராட்டத்தில் ஈடுபடுவதுபோல் அன்று எனக்கெதிராக அணிதிரண்டிருந்தாலோ நானும் இவர்களும் இன்றும் உங்களுடன் வாழ்ந்திருப்போம். இந்த மேடையின் முன்னே நின்றிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான சிறார்களையும் சிறுமியர்களையும் பார்கின்றபோதும் இவர்களை இங்கே அனுப்பிவிட்டு அங்கே பரதவிக்கின்ற பெற்றோர் பெரியோரை நினைக்கின்றபோது என் மனம் படபடக்கின்றது.. வெதுவெதுக்கின்றது.

என் பேரன்புக்கினிய புலம்பெயர் மக்களே! ஈழ தேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களை தேடிவந்த தீர்வுகளை பற்றி உங்களுடன் மனம்திறந்து பேச விரும்புகின்றேன்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை சிறிலங்காவின் அன்றைய மேன்மை தங்கிய ஜனாதிபதி பிறேமதாஸ அவர்கள் தந்த பணத்தையும் ஆயுதங்களையும் வாங்கிக்கொண்டு செயலிழக்க செய்தேன். அந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு தமிழீழமே கிடைக்கக்கூடும் என்றும் அதற்கு ஆணிவேராக செயற்பட்ட அண்ணன் அமிர்தலிங்கத்தை போட்டுத்தள்ளுமாறும் என்னிடம் அண்ணன் பிறேமதாஸவே கேட்டுக்கொண்டார் என்ற உண்மையை உங்களிடம் இனியும் மறைக்க விரும்பவில்லை. சந்திரிக்கா அம்மையார் முன்மொழிந்த மகத்தான தீர்வுப்பொதியை எரியூட்ட வழிசெய்தேன். அந்த தீர்வுத்திட்டத்திற்காக இராப்பகலாக உழைத்த அறிவுஜீவி அண்ணன் நீலன் திருச்செல்வம் அவர்களை அவ்வாறானதோர் முயற்சியை ஒருகாலத்திலும் மேற்கொள்ளக்கூடாது என்பதற்காக இங்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன். அவரை இங்கு அனுப்பி வைத்த அந்த கரும்புலிவீரனை நான் இங்கு முதல்முதலாக சந்தித்தபோது என்னை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து ஒரு மாதகாலத்திற்கு அடித்தார் என்பதையும் உங்களிடம் வெட்கத்தை விட்டு பகிர்ந்து கொள்கின்றேன்.

சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்தத்தில் ரணிலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை போராளிகள் சற்று ஓய்வெடுப்பதற்கும், புதியவர்களை படையில் இணைப்பதற்கும், ஆயுதங்களை கொள்வனவும் செய்யவும், ஏ9 பாதையில் வரி அறவிடவும், புலம்பெயர் மக்களிடம் பெருந்தொகை நன்கொடை பெறவும், அமைப்புக்கு எதிரானவர்களை முடித்துக்கட்டுவதற்கும் பயன்படுத்தவே நான் மேற்கொண்டிருந்தேன். ஆனால் சர்வதேச சமூகம் என்னை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் பற்றுறுதியுடன் செயற்பட முற்பட்டார்கள். முன்மொழிவுகளுக்கு மேல் முன்மொழிவுகளை வைத்தார்கள். எதையாவது ஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு என்னை தள்ளினார்கள். அதன் ஆபத்தை உணர்ந்தேன் உடனடியாக ரணிலை ஆட்சியிலிருந்து இறக்க முடிவு செய்தேன். யதார்த்தவாதியான அதிமேதகு மஹிந்த ராஜபக்சவை அரியாசனம் ஏற்றும்பொருட்டு உங்கள் வாக்களிக்கும் உரிமையை தியாகம் செய்யுமாறு அழைப்பு விடுத்தேன். நீங்கள் வாக்குரிமையை தியாகம் செய்ததால் மேதகு மஹிந்த ராஜபச்ச அரியாசனம் ஏறினார். நான் யதார்த்தவாதி என எண்ணிய என்நம்பிக்கைக்குரியவரான மேதகு மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகையில் அரைப்பங்கையே வழங்கினார். அந்த நம்பிக்கை துரோகத்திற்கு சிறந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக எழிலனிடம் மாவிலாறிலிருந்து மேதகு மஹிந்த ராஜபக்சவிற்கு செல்லும் தண்ணீரை தடுத்து விடுமாறு கட்டளையிட்டேன். தண்ணீர் மறிக்கப்பட்டது. தண்ணீரை மீட்கச்சென்ற சிங்கள இராணுவம் முழுக்கிழக்கு மாகாணத்தையும் பறித்துக்கொண்டது. எதிர்ப்பை காட்டி மரணத்தை தழுவி விடாது அனைத்து போராளிகளையும் வன்னிக்கு எனது பாதுகாப்பிற்காக அழைத்துக்கொண்டேன்.

கிழக்கை மீட்ட மேதகு மஹிந்த ராஜபக்ச, வடக்கில் வைக்கப்போவதில்லை என்றும் ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறும் என்னை சீண்டினார். உள்ளே விட்டு அடிப்பதற்கு முடிவு செய்தேன். முள்ளிவாய்கால் வரை எனது அறிவுக்கெட்டிய சகல யுத்த வியூகங்களையும் பயன்படுத்தினேன். முடிந்தவரை சிங்களப்படையை உள்ளே விட்டேன். அத்துடன் இறுதியுத்தமாகையாலும் அமெரிக்ககப்பலை எதிர்பார்த்திருந்ததாலும் ஒருபோதுமில்iலாதவாறு சிறார்கள், திருமணமானோர், வயதுவந்தோர், அங்கவீனர்கள் என எவரையும் விட்டு வைக்காது அனைவரையும் பிடித்து யுத்தத்தில் ஈடுபடுத்தினேன். முன்னணியில் நின்ற சிறார்கள் ஆக்கிரமிப்பு படையினரை அதிகம் உள்ளே விட்டுவிட்டதால் சிறிலங்கா அரசு மக்களுக்கு அனுப்பியிருந்த அரிசி, மா, பருப்பு மூடைகளை கொண்டு அணைகளையும் பங்கர்களையும் அமைத்து போரிட்டேன். அமெரிக்ககப்பல் தமதமாகியதால் சினமடைந்த சில போராளிகள் மற்றும் தளபதிகளிடம் சிறிது மனமாற்றத்தை கண்டேன். போராளிகள் தளபதிகள் மனமாற்றமடைந்தால் அமைப்பு சீர்குலைத்துவிடும் என்ற காரணத்தினால் அவர்களை இறுதி நேரத்தில் எதிர்ப்பை காட்டிய மக்களுடன் சேர்த்து போட்டு தள்ளினேன்.

என் தேசத்து மக்களே! தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எனது அமைப்பை முப்படைகளையும் கொண்ட பிரமாண்டமான இராணுவ அமைப்பாக நிலைநிறுத்துவதற்கும் அத்துடன் கூடிய நிழல் அரசொன்றை நிறுவுவதற்குமாக தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வுக்கான பொன்னா சந்தர்ப்பங்களையும் , 60 ஆயிரம் மாவீரர்களின் விலை மதிப்பற்ற உயிர்களையும் லட்சக்கணக்கான் பொதுமக்களையும் மாத்திரம் நான் பலி கொடுத்திருக்கவில்லை.

தமிழ் மக்களின் 4 தலைமுறையினரின் கல்வியை சீர்குலைத்திருக்கின்றேன்

தமிழ் மக்களின் பேச்சு சுதந்திரத்தை மறுத்திருக்கின்றேன்,

வாசிப்பு சுதந்திரத்தை தடை செய்திருக்கின்றேன்,

நடமாறும் சுதந்திரத்தை தடை செய்திருக்கின்றேன்.

சுயமாக சிந்திக்கும் சுதந்திரத்தை தடுத்திருக்கின்றேன்.

தான் விரும்பிய அரசியல் கட்சியொன்றை ஆதரிக்கும், அதில் பங்கெடுக்கும் உரிமையை முற்றாக தடை செய்திருக்கின்றேன். எத்தனையோ நவீன சித்திரவதைமையங்களையும் சிறைக்கூடங்களையும் நடாத்தி வந்திருக்கின்றேன்.

மக்களிடம் அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட கப்பங்களை கோரியிருக்கின்றேன். தர மறுத்தவர்களை கொலை செய்திருக்கின்றேன்.

மக்கள் பாவனைக்கான பாலங்களையும் , வீதிகளையும், தண்டவாளங்களையும் , குளக்கட்டுக்களையும், மின்மாற்றிகளையும் உடைத்திருக்கின்றேன்.

ஆலயங்களின் புனிதங்களை கெடுத்திருக்கின்றேன். நல்லூர் முருகன் ஆலயமுன்றலில் பிணங்களை குவித்திருக்கின்றேன்.

பள்ளிவாயல்களுள் கொலை புரிந்திருக்கின்றேன். யாழ்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை ஒரு சில மணித்தியாலயத்தில் விரட்டியடித்திருக்கின்றேன். மதகுருக்களை கொன்றொழித்திருக்கின்றேன்.

சகலவிதமான போக்குவரத்துக்களையும் சீர்குலைத்திருக்கின்றேன். உணவுக் கப்பலுக்கு குண்டுவைத்து பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றேன். விமானத்தை சுட்டுவீழ்த்தி தமிழ் பயணிகளை கொன்றொழித்திருக்கின்றேன். புகையிரதங்களிலும் பேருந்துகளிலும் பயணித்த பயணிகளை குண்டுவைத்து உடல்களை சிதறவைத்திருக்கின்றேன்.

தமிழ் சிறார்களை தங்கள் பெற்றோர் முன் கதறக்கதற இழுத்துச் சென்று படையில் இணைத்திருக்கின்றேன். அவர்களை பலியிட்டிருக்கின்றேன்.

மாற்று இயக்க உறுப்பினர்களை உயிருடன் ரயரில்போட்டு எரித்திருக்கின்றேன். சுட்டுக்கொன்றிருக்கின்றேன். சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்திருக்கின்றேன். வடகிழக்கை விட்டு ஒடும்படி விரட்டியிருக்கின்றேன். ஏன் அவர்களின் உறவினர்களைக்கூட கொன்றொழித்திருக்கின்றேன்.

எனது இயக்கத்திற்கு எதிரானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் தொடர்புகளை பேணிய பெண்களை அவர்களின் குழந்தைகளின் முன்பே சுட்டுகொன்றிருக்கின்றேன்.

காடு நாடெங்கும் மிதிவெடிகளை புதைத்து ஆயிரக்கணக்கான மிருகங்களை கொன்றொழித்திருக்கின்றேன்.

எனது இயக்கத்திலிருந்து அங்கவீனர்களாகவிருந்தவர்களைக்கூட பாதுகாப்பாக வெளியேற்ற முடியாது அவர்களை இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பலரை குப்பியடிக்ககொடுத்து புதைத்திருக்கின்றேன் சிலரை பேருந்திலேற்றிவிட்டு குண்டுவைத்து கொன்றொழித்திருக்கின்றேன்

இத்தனை செயற்பாடுகளையும் நான் மேற்கொண்டது எனது தனிப்பட்ட நன்மைக்காக என்ற குற்றச்சாட்டு என்மீது சுமத்தப்படுகின்றது. அக்குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். இலங்கையில் இன்றுவரை வாழுகின்ற தமிழ் மக்களாகிய உங்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் தீர்வுகள் அத்தனையும் குளப்பியதையிட்டு வருத்தத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். ஆனால் இத்தனை கைங்கரியங்களையும் சாகாசங்களையும் நான் மேற்கொண்டது புலிக்கொடியை வன்னிக்காட்டினுள் உயரப்பறக்க விடுவதற்காகவே. வன்னிக்காட்டில் புலிக்;கொடி உயரப்பறந்ததால்தான் புலம்பெயர் வாழ் மக்கள் அந்த நாடுகளில் நிரந்தரமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது என்பதை நீங்கள் மறக்கக்கூடாது என எச்சரிக்கின்றேன்.

அவ்வாறானதொரு மகிமை பெற்றிருந்த புலிக்கொடி இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக காணப்படுகின்றது. புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களே! புலிக்கொடியின் மகிமையை காக்க நான் அதனை நாள்தோறும் இரத்தத்தால் தோய்த்து வந்திருக்கின்றேன். அவ்வாறான அந்தக்கொடியை உங்களுடைய சுயலாபங்களுக்காக பயன்படுத்துவதை நிறுத்துமாறு கடுமையாக கோருகின்றேன்.

எனது அன்புக்குரிய மக்களே! புலிக்கொடியின் ஒளியினை பேணுவதற்காக தங்கள் உதிரத்தை உதிர்த்த ஆயிரக்கணக்கானோர் இங்கிருந்து தமிழீழ தேசத்தில் தங்கள் உறவுகள் ஒரு நேர உணவிற்கு வழியின்றி தவிப்பதையும், உறங்க உறைவிடமின்றி அலைவதையும் கண்டு கண்ணீர் வடித்தவர்களாக உள்ளனர். அதேநேரத்தில் இந்த புலிக்கொடியில் பட்ட அழுக்குகளை கழுவுவதற்கு உதிரம் தந்த எத்தனையோ உறவுகளின் மனைவியரும் சகோதரிகளும் தெருக்களில் ஒரு நேர உணவுக்காக தங்கள் உடல்களை விற்கும் நிலைகண்டு ஓலமிடுகின்றனர்.

புலிக்கொடியின் தூய்மைகாக்க தங்களின் அவயங்களை தந்த போராளிகள் இன்று ஈழ தேசத்து ஆயலங்களின் முன்றலில் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்பதை பார்க்கையில் என்மனம் வெடித்துச் சிதறப்பார்கின்றது.


புலம்பெயர் தேசத்து மக்களே! என்னால் இதற்கு மேலும் பேசமுடியவில்லை. இறுதியாக கேட்கின்றேன். புலிக்கொடியை கிழே வைத்துவிட்டு என்தேசத்து மக்களின் வாழ்கைத்தரத்தை உயர்த்த முன்வாருங்கள்.

நான் வந்தபின்புதான் கணக்கு காட்டுவோம் என மக்கள் பணத்தை வைத்திருக்கும் என் விசுவாசிகளே! உங்களிடம் உள்ள பணத்தில் அரைவாசியையேனும் என்னை காத்த போராளிகளின் குடும்பங்களுக்கான பொது நிதியத்துக்கு வழங்குங்கள். எனது மக்களுக்குரிய அந்த பணம் எனது மானத்தை கப்பலேற்றிய சீமானுக்கு செலவிடப்படுவதை நான் கண்டிக்கின்றேன்.

நான் வாழ்ந்த அந்த தேசத்தை கட்டியெழுப்புங்கள். நான் அங்கு வாழும்வரை அத்தேசத்தை சிவப்பாக காட்டிய இரத்த ஆறுகளும் குளங்களும் வற்றியுள்ளது. நீங்கள் என்பெயரால் நன்நீர் குளங்களையும் ஆறுகளையும் புனரமையுங்கள். மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுங்கள். யூதர்கள் பாலைவனத்தை பச்சை பசேலென்ற இஸ்ரவேல் தேசமாக்கியது போன்று நான் நேசித்த ஈழ தேசத்தை மாற்றுங்கள். உலகில் சிறந்த உழைக்கும் மக்களாக எம்மக்களை மாற்றி அமையுங்கள்! ஈழ தேசத்தில் கைகட்டி நின்று வாங்கி உண்ணும் சமூகத்தையும் , புலம்பெயர் தேசத்தில் உண்டியல் குலுக்கி வாழ்க்கை நடத்தும் சமூகத்தை இல்லாதொழியுங்கள்.

இறுதியாக ஒரே ஒரு தாழ்மையான வேண்டுதலை விடுத்து எனது பேச்சை முடித்துக்கொள்கின்றேன். கந்தன் கருணையில் மாற்று இயக்கத்தினரை சுட்டுக்கொன்ற அருணாவிற்கு நான் வழங்கிய தண்டனையை நீங்கள் எனக்கு வழங்கியுள்ளீர்கள். அடுத்த மாவீரர் நாளிலாவது என்னை மாவீரர் பட்டியலில் இணையுங்கள் என மன்றாடிக்கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி விண்ணிலிருந்து உங்கள் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.

1 comments :

Arya ,  November 30, 2021 at 5:26 AM  

Super Ilankainet

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com