Sunday, July 5, 2020

புலிகளால்_கொல்லப்பட்ட_தங்கத்துரை. By பாலசுகுமார்

தங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படியே உள்ளது. இதே நாளில்தான் (05.07.1997) தங்கத்துரை அண்ணன் உட்பட சண்முகாவித்தியாலய அதிபர் இராஜேஸ்வரி, கூனித்தீவின் மூத்த அதிபர் ஜீவரத்தினம் என பல கல்வியாளர்களும் புலிகளால் படுகொலை செய்யப் பட்டனர்.

அண்ணன் தங்கத்துரை அடிப்படையில் இடதுசாரி கொள்கையில் நாட்டம் கொண்டவர். கொழும்பில் வேலை செய்கிறபோது சமஜமாஜி தொழிற்சங்கத்துடன் இணைந்து பணியாற்றியவர். இலங்கையின் பல இடது சாரி தலவர்களுடனான நட்பு அவருக்கிருந்தது.

மூதூர் தொகுதி அரசியல் பிரதிநிதித்துவம் தங்கதுரை அண்ணனுக்கு முன்பு மூதூரை சாராதவர்களாலேயே ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. 1970ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் மூதூர் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவராக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் இயங்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் அண்ணன் தங்கத்துரை என்றால் அது மிகையன்று.

மூதூர் தொகுதியில் இன்று வரை அவர் சாதனையை மிஞ்சியவர் எவருமிலர். மூதூர் தொகுதியின் படித்த இளைஞர்கள் அவர் காலத்திலேயே பெருமளவில் அரச உத்தியோகங்களை பெற்றுக்கொண்டனர். பல அபிவிருத்தி திட்டங்கள் அவர் காலத்திலேயே மேற் கொள்ளப்பட்டன.

1977ல் புதிய தேர்தல் தொகுதி வரைவில் முல்லைத்தீவு தொகுதியை வடமாகாணத்தில் பெற்றுக் கொண்டு மூதூர் தொகுதியயை தாரை வார்த்தது தமிழர் கூட்டணி.இரட்டை அங்கத்த்கவர் முறை நீக்கப் பட்டு சேருவில தொகுதி உருவாக்கப் பட்டிருந்தது.

திருகோணனலை மக்களின் ஏகோபித்த எதிர்பையும் மீறி சம்பந்தருக்கு வேட்பாளர் நியமனம் கொடுக்கப் பட்டது. சொல்லப் பட்ட காரணம் சம்பந்தர் அப்புக்காத்து என்பது. பின்னாளில் அதே நெஞ்சுரத்துடன் படித்து சட்டத்தரணியாகிறார் அண்ணன் தங்கத்துரை.

1970ம் ஆண்டு நான் 10ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம் அண்ணன் தங்கத்துரை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்துக்கு சேனையூர் வருகிறார் அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என தேசியக் கட்சிகள் தமிழ் பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தன. ஆனாலும் மூதூர் தமிழ் மக்கள் தங்கத்துரை அண்ணன் பின்னாலேயே அணி திரண்டனர்.

சேனையூர் பிள்ளையார் கோயில் முன்றலில் முதல் கூட்டம் பல முன்னணி தலைவர்களுடன் தந்தை செல்வாவும் கலந்து கொள்கிறார் நானும் அக்கூட்டத்தில் பிரசார உரையாற்றுகிறேன். கட்டைபறிச்சான் கனகசிங்கம் ஆசிரியர், என் ஆசிரியர் செ.விபுணசேகரம் , அண்ணன் கெங்காலிங்கம் ஆகியோர் பிரசார களத்தில் அணிசேர்கின்றனர் அத்தோடு என் மாமா நாகேஸ்வரன், நண்பன் இரா.இரத்தினசிங்கம் என அண்ணன் தங்கத்துரைக்காக பல மேடைகளில் பேசுகிறோம்.

சம்பூரில் குழந்தவேல் மாஸ்ரர், மணி, சித்திரவேலாயுதம், மூதூரில் பூபா. மதுரநாயகம், புண்ணிய மூர்த்தி, குலேந்திரன், அன்ரனி டொக்டர் பள்ளிக்குடியிருப்பில் இரத்தினசிங்கம், மல்லிகைத்தீவில் பாலசிங்கம் ,சிற்றம்பலம், நடேசபிள்ளை, பட்டித் திடலில் யோகேந்திரம், கவிஞன், மேங்காமத்தில் கிருபை, கிளிவெட்டியில் தவகுமார், துரை, கணேஸ் என மூதூர் தொகுதி எங்கும் அண்ணன் தங்கத்துரையின் வரவு அரசியலில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

என் அப்புச்சி தீவிர தமிழரசுக் கட்சி வெறியர் என்று சொல்லலாம் அண்ணன் தங்கத்துரைக்காகாக மிக தீவிரமாக செயல் பட்டார் எங்கள் வீட்டுக்கு நன்றி சொல்ல வந்த போது அப்புச்சி கையைப் பிடித்து நன்றி சொன்ன காட்சி பசுமை நினைவாய் உள்ளது.

1972ல் குடியரசு யாப்புக்கு எதிரான உண்ணாவிரத போராட்டங்களுக்கு தலைமை தாங்கி மூதூர் தொகுதியெங்கும் இளைஞர்களை அணி திரட்டியவர், அண்ணன் தங்கத்துரை. அவர் மூட்டிய கனலே பின்னாளில் இயகங்கள் மூதூர் பிரதேசத்தில் வெற்றிகரமான செயல் பாட்டிற்கு தளம் அமைத்தன எனலாம்.

1981 மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் அண்ண் மிகப் பெரிய வெற்றி பெறுகிறார். அந்த நாட்களில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் பிரச்சாரத்துக்காக அவருடன் பயணித்த நாட்கள் மறக்க முடியாத நினைவுகள்.

மூதூர் பிரதேசத்தில் ஆரம்ப நாட்களில் ஈழ விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியில் முக்கிய ஆதரவு தளமாக அவர் இருந்தார் குறிப்பாக ஈழப்புரட்சி அமைப்பின் தோழர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இறுதி வரை எத்தனை இடர்கள் வந்த போதும் தன் கட்சிக்கு விசுவாசமாயிருந்த ஒருவர். கொண்ட கொள்கை மாறா தலைவர் அவர்.

அவர் காட்சிக்கு இனியன் கடும் சொல் பேசா பண்பாளன் , எப்போதும் சிரித்த முகம். அவர் வாயில் முடியாது என்ற வார்த்தை வரவே வராது. எல்லோருடனும் சகஜமாக பழகும் சுபாவம். அகம்பாவமற்ற அரசியல். மற்றவரை மதிக்கும் பண்பு அதிகாரத் தொனியற்ற தோழமை அரசியல் .

இறுதியாக 1995ல் தோழர் பற்குணத்தின் மரண வீட்டில் சந்தித்தமை நீண்ட உரையாடல் திருகோணமலையில் தனி பல்கலைக் கழகம், மூதூரில் ஒரு தொழில் நூட்ப கல்லூரி என பல கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.
கொட்டியாரத்தின் அரசியல் தலை மகனுக்கு தோழமை மிக்க அஞ்சலிகள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com