Thursday, March 19, 2020

வடக்கில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பம்!

உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் முன்னெடுத்து வருகிறார். இலங்கையிலும் கொரோனா வைரஸ்ஸின் தொற்று தொடர்பிலான தகவலை அவதானிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கான பரம்பலை ஏற்படுத்தியவர்கள் என்று அவதானிக்கபட்டுள்ளது.

இதன்பொருட்டு வடமாகாணத்திற்கான நிலமைகளை கருத்திற்கொண்டு இங்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்புரையில் ஆளுநர் செயலகம் உரிய அமைச்சுக்கள் திணைக்களங்களூடாக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக வடமாகாணத்தில் உள்ள சுற்றுலா விடுதிகளை கண்காணிப்பதும் பராமரிப்பதும் அவற்றினூடாக தகவல்களை பெற்றுக்கொள்ளவதும் அவசியமானதென கருதி 17.03.2020 அன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது குறித்த சுற்றுலாவிடுதிகளின் உரிமையாளர்கள் முகாமையாளர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கடந்த பங்குனி முதலாம் திகதியிலிருந்து பதினைந்தாம் திகதிவரை சராசரியாக 200 வெளிநாட்டு உல்லாச பயணிகள் ஒவ்வொரு சுற்றுலா விடுதிளிலும் தங்கி சென்றுள்ளனர். தற்போது சுற்றுலா விடுதிகளில் தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரஜைகள் தமது நாடுகளுக்கு திரும்பி செல்வதையே அதிகம் விரும்புகிறார்கள். அத்துடன் கடந்த வாரங்களில் அதிக திருமணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி காரணமாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு அது வெளிக்காட்டப்படுவதற்கு 14 நாட்கள் செல்ல வேண்டிய நிலையில் சுற்றுலா விடுதிகளில் வேலை செய்பவர்கள் எத்தனைபேர் தொற்றுக்கு உள்ளானார்கள் என்பது சந்தேகமாக உள்ளது அதேபோன்று சுற்றுலா வழிகாட்டிகளாக செயற்படுவோரிலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் கேள்விகுறியாக உள்ளது. ஆகவே மேற்குறித்த நிலமையினை கருத்திற் கொண்டு சுற்றுலா விடுதிகளில் வேலை செய்பவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சுற்றுலா விடுதிகளிற்கு பல்வேறு நோக்கம் கருதி வருபவர்களது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டிய தேவை இருப்பதால் அதற்கான உபகரணங்களை நியாயமான விலையில் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். அதேபோன்று சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தும் முகக்கவசங்கள் வழமைக்கு மாறாக அதிக விலைக்கு விற்கப்படுவது சுட்டிகாட்டப்பட்டு அவற்றை நியாய விலையில் போதியளவு பெற்றுகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கபடல் வேண்டும். மேலும் தொற்று நீக்கி திரவம், சவர்காரம், கழிப்பறை காகிதாதிகள், போத்தலில் அடைக்கப்பட்ட நீர் என்பவை இவ்வாறே தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஹொட்டேல்களில் நாளாந்தம் சேரும் திண்மக் கழிவுகள் மிகவும் அதிகம் என்பதனால் அவை உரிய முறையில் தாமதமின்றி அகற்றப்பட வேண்டும். எனவும் விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதை சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார திணைக்களம் ஊடாக உறுதிசெய்தல் வேண்டும் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன

இதன்போது புகையிரத நிலையத்திலுள்ள சுற்றூலா பயணிகளுக்கான தகவல் மையம் செயல்படுவது உறுதிசெய்யப்படல் வேண்டும் எனவும் ஹொட்டேல்களில் கடந்த 01.01.2020 இலிருந்து தங்கியவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதோடு வைரஸ் தொற்றினை இனங்காண்பதற்காக அரசினால் முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுமாறும் ஆளுநர் செயலகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com