Saturday, March 21, 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 30 பேர் கைது

இன்று மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி காலை 6 மணி வரை நாடு பூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தங்காலை, கட்டுநாயக்க, வலஸ்முல்ல, நல்லதண்ணி மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் நேற்று இரவு மற்றும் இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் மற்றும் மூன்று மோட்டார் சைக்கள்களில் பயணம் செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளையில் மதுபானம் அருந்தி மைதானத்தில் ஒன்று கூடியிருந்த எட்டு பேர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலஸ்முல்லை நகரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி வலஸ்முல்லை நகரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி, சிவனொளிபாதமலை வீதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது உணவகம் ஒன்றை திறந்தது தொடர்பில் அப்புத்தளை பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க நகரை அண்மித்த வீதியில் நடந்து சென்ற இரண்டு நபர்களும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை வீதியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவரும் மற்றும் அம்பாறை பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் தம்புள்ளை, பண்டாரவளை, தங்காலை. ஹட்டன் மற்றும் மினுவாங்கொடை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலங்களில் அதனை மீறுபவர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com