வானதி சீனிவாசனை கூப்பிட்டு தமிழியல் விழா நடத்தும் புலம்பெயர் அறிவாளிகள்
முத்தமிழ் ஆறு, தமிழியல் மலை வானதி சீனிவாசனை கனடாவிற்கு கூப்பிட்டு தமிழியல் விழா நடத்தியிருக்கிறார்கள் சில புலம்பெயர் அமைப்புக்கள். தமிழ், தமிழீழம் என்று சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த புலம்பெயர் வியாபாரிகளிற்கு வானதி சீனிவாசனுக்கு தமிழ் மொழியின் அரிச்சுவடி தெரியுமா என்பது பற்றிக் கவலையில்லை. இந்துத்துவம் பேசி மக்களை பிரிக்கும் பாசிச பாரதிய ஜனதா கட்சியில் அம்மையார் உறுப்பினராக இருப்பது பற்றி கவலையில்லை. தமிழ் மொழியை புறக்கணித்து சமஸ்கிருதத்தை முன் தள்ளும் பார்ப்பனியத்தின் அடிமையாக வானதி சீனிவாசன் இருப்பது குறித்து அக்கறை இல்லை. இந்தியா முழுமையையும் ஒடுக்கும் , குறிப்பாக தமிழ்நாட்டை திட்டமிட்டு அழிக்கும் நரேந்திர மோடியின் அரச பயங்கரவாதத்தை அவர் வரிந்து கட்டிக் கொண்டு நியாயப்படுத்துவது பற்றி எள்ளளவும் கவலையில்லை.
கீழடி ஆய்வுகளின் போது தமிழ் மொழியினதும், தமிழ் மக்களினது பண்பாடுகளினதும் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதற்கான அகழாய்வு ஆதாரங்கள் வெளிவந்தன. தமிழ் சமூகத்தின் வாழ்வியலில் சாதி, வருணம், தீண்டாமை போன்ற கயமைத்தனங்களை பரப்பிய சனாதன பார்ப்பனிய மதத்தின் எந்தவிதமான அடையாளங்களும் கீழடியில் கிடைக்கவில்லை என்றதும் ஆய்வுகளை பார்ப்பனிய பாரதிய ஜனதா கட்சி அரசு நிறுத்த திட்டமிட்டது . கீழடி ஆய்வினை தலைமை ஏற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மோடி அரசினது இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி பல கூட்டங்களில் பேசினார். தமிழ் மொழியினதும், தமிழ் பண்பாட்டினதும் தொன்மையை மண்ணுக்குள் புதைக்க திட்டமிட்ட அந்த அயோக்கியத்தனத்தை கூட நியாயப்படுத்தி பேசியவர் தான் இந்த வானதி சீனிவாசன்.
ஆனால் இந்த புலம்பெயர் தமிழியல் தலைகளுக்கு பார்ப்பனிய, பாசிச அடிமையாக தானைத் தலைவி வானதி சீனிவாசன் இருப்பது ஒரு விடயமே இல்லை. ஏனெனில் இந்த விழாவை நடத்தியவர்களும் வானதி சீனிவாசனைப் போன்ற வியாபாரிகள் தான். அவர்களது அமைப்புகளான கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils), நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) போன்றவை பாசிச பாரதிய ஜனதா கட்சியினரைப் போன்ற வலதுசாரி மக்கள் விரோத அமைப்புகள். அதனால் தான் தமிழ் பற்றிய எந்த விதமான புலமையும் இல்லாத ஒருவரை, பார்ப்பனிய அடிமையை, மக்கள் விரோத அரசை தனது பிழைப்புக்காக ஆதரிக்கும் வானதி சீனிவாசனை எந்த விதமான கூச்சங்களும், தயக்கங்களை இன்றி வர்க்க பாசத்துடன் அழைத்திருக்கிறார்கள்.
கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils) நடத்திய இந்த தமிழியல் கூத்தில் அதன் கிளை அமைப்புகளான கனடாத் தமிழ் கல்லூரி, அறிவகம் கனடா போன்ற தமிழ்ப் பாடசாலைகளும் கலந்து கொண்டன. இந்த பாடசாலைகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களில் சிலர் வானதி சீனிவாசன் என்ற பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழலை விழாவிற்கு அழைத்ததை எதிர்த்திருக்கிறார்கள். கனடியத் தமிழர் தேசிய அவையின் அறிவுக்கொழுந்துகள் "உங்களுக்கு அரசியல் தெரியாது. இந்தியாவை ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவரை கூப்பிட்டு அவரைக் கொண்டு இந்திய அரசிடம் பேசி பல நன்மைகளை எங்களது மக்களுக்கு செய்யவிருக்கும் எங்களது "மாஸ்டர் பிளான்" இது. இதை எதிர்கிறீர்களா?. எதையும் பிளான் பண்ணித தான் செய்ய வேணும்" என்று விஞ்ஞான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
இது தான் இவர்களது பிழைப்புவாத துரோக அரசியல். உலக வரலாற்றில் மிகப் பெரும் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமான அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இலங்கை அரசை பணிய வைத்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருவார்கள் என்று இவர்கள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பராக் ஒபாமா போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது "ஒபாமாவிற்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பைத் தொடக்கி தமிழ் மக்களிடையே பரப்புரை செய்தார்கள். தங்களை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்ட இந்த புலம்பெயர் அறிவாளிகள் விடுதலைப் போராட்டங்களை உலகம் முழுவதும் ஒடுக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனாதிபதி வேட்பாளருக்காக இயக்கம் தொடங்கியது போன்றதொரு அயோக்கியத்தனத்தை உலக வரலாற்றில் எங்கு தேடினாலும் கிடைக்காது.
பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாத அரசுகளினால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இந்து மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி அரசு குடியுரிமை வழங்கும். ஆனால் சிங்கள, பவுத்த இனவாத இலங்கை அரசினால் ஒடுக்கப்படும் இலங்கை தமிழ் மக்களுக்கு அந்த சட்டத்தில் இடமில்லை. இப்படி தமிழ் மக்களை புறக்கணித்து ஒதுக்கும் பாசிச பார்ப்பனிய கும்பலிடம் அவர்களின் அடிமையான வானதி சீனிவாசன் இவர்களுக்காக புடுங்குவாராம் என்று இந்த கைப்பிள்ளைகள் கதையளக்கிறார்கள்.
இலங்கை அரசு என்னும் கொலைகாரர்களால் ஒடுக்கப்பட்டு இந்தியாவிற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய நாட்டு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் நாட்டின் பொதுமக்களும், தமிழ் உணர்வாளர்களும், ஜனநாயக முற்போக்கு அமைப்புக்களும் போராடுகிறார்கள். வீட்டை விட்டு வெளி வராத பெண்கள் கூட பாசிச நரேந்திர மோடியின் அரசை எதிர்த்து வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஆனால் ஈழம் என்பதை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த வியாபாரிகள் மக்கள் விரோதிகளான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு கைக்கூலியை, பார்ப்பன அடிமையை கூப்பிட்டு தமிழியல் விழா நடத்துகிறார்கள். இலங்கை அரசுடன் சேர்ந்து நின்று எமது மக்களைக் கொன்ற இந்தியாவையும், மேற்கு நாடுகளையும் நம்பச் சொல்லும் இந்த வஞ்ச மனத்தவர்களை எமது மக்கள் இனியாவது இனம் கண்டு கொள்ள வேண்டும்.
விஜயகுமாரன்
28/01/2020
பூவரசு இணைத்திலிருந்து..
0 comments :
Post a Comment