Saturday, January 25, 2020

நெதர்லாந்து உதவி திட்டத்தில் தரகு பணம் பெற்ற ராஜித மற்றும் சத்தியலிங்கம்!!

வவுனியா வைத்தியாசாலைக்கு கிடைக்கப்பெற்ற நெதர்லாந்து உதவி திட்டத்தில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்களும் தரகு பணம் பெற்றமை தற்பொழுது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக மேலும்தெரியவருவதாவது

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி உதவியை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைக்கான ஆரம்ப நிகழ்வு பிரதமர் தலைமையில் அண்மையில் வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தின மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நெதர்லாந்து நிதி உதவி திட்டம் தொடர்பாக நாம் ஆராய்ந்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன அதவாது இவ் நெதர்லாந்து உதவி திட்டத்தின் மூலம் 15 வீதத்திற்கும் மேற்பட்ட தரகு பணம் சத்தியலிங்கத்திற்கும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்களுக்கும் பரிமாறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோல் தரம் குறைந்த மருத்துவ உபகரணங்களை வடக்கு
மாகாணத்திற்கு வழங்கிவிட்டு அவ் உபகரணங்கள் தரமான கொள்வனவு போல் காட்டி நிதி மோசடிகளில் இவ் இருவரும் ஈடுபட்டிருந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அத்துடன் சத்தியலிங்கம் அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபொழுது வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கென கொள்வனவு செய்யப்பட்ட இரத்த சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றிருந்தது. இவ் ஊழல் மோசடி தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் சத்தியலிங்கத்தை பதவி நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்த முனைந்தபோது சம்பந்தன் அவர்கள் விக்கினேஸ்வரனுடன் தொடர்பு கொண்டு சத்தியலிங்கம் அவர்கள் மீது விசாரணை நடத்தவேண்டாம் அவர் இராஜினாமா செய்வார் என கூறியதை அடுத்து அவ் விசாரணை அறிக்கை முழுமையடைவதற்கு முன் கிடப்பில்போடப்பட்டது.

மேலும் இவ் இரத்த சுத்திகரிப்பு இயந்திர கொள்வனவிற்காக ஆஸ்ரேலியாவிலிருந்து சேகரிக்கப்பட்ட நிதியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருந்தது. இதனால் தரம் குறைந்த இயந்திரம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் இவ் இயந்திரம் தரமானதா இல்லையா என்பதை உயிர் மருத்துவ பொறியியலாளர்கள் (Bio Medical Engineer’s) மூலம் தர நிர்ணயம் செய்து உன்மை நிலையை அறிந்து கொள்ளமுடியும் என வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அண்மைக் காலங்களில் வவுனியா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு செய்த சிறுநீரக நோயாளர்கள் உட்பட பலர் குறுகிய காலத்தில் இறப்பதாகவும் இதன் மூலம் இவ் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் தரம் குறைந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அத்துடன் சத்தியலிங்கத்திற்கும் ராஜிதசேனாரத்தினவுக்கும் உள்ள நல்லுறை பயன்படுத்தி அரசாங்கமானது இலங்கையில் நடந்த இன அழிப்பின் உண்மை தன்மையை உலகிற்கு மறைத்துள்ள செயற்பாடும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சத்தியலிங்கம் அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபோது வடக்கு மாகாண ரீதியில் குடும்பநல உத்தியோகத்தர்களை கொண்டு யுத்தகாலத்தில் இடம்பெற்ற இழப்புகளை திரட்டும் பணி நடைபெற்றது. இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் தகவல் திரட்டும் போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அதாவது யுத்தகாலத்தில் இறந்தவர்கள்
காயப்பட்வர்கள்; சொத்தழிவுகள் விசேடதேவைக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை என்பன அரசாங்கம் கூறியதை விட இரண்டு மடங்காக காணப்பட்டுள்ளது இதை சத்தியலிங்கம் அவர்கள் ராஜித அவர்களுக்கு தெரிவித்த பொழுது அரசாங்கத்திற்கு இவ் விடயம் பாரிய சவாலாக இருக்கப்போகின்றது என கருதிய ராஜித தன்னுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அப்போதைய வடமாகாண சுகாதார அமைச்சராக இருந்த சத்தியலிங்கத்தை கொண்டு அவ் செயற்திட்டத்தை நிறுத்தியுள்ளார். இதற்காக இருவருக்கும் இடையில் பல பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக நம்பதகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாழும் தமிழ் மக்கள் சொல்லனாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்நிலையில் உயிரைபாதுகாக்கும் இவ் மருத்துவ துறையில் மலிந்து காணப்படும் ஊழலை செய்யும் இவ்வாறன ஊழல் பேர்வழிகளை அரசியல் அரங்கில் இருந்து அகற்ற மக்கள் முன்வரவேண்டும் என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேற்படி செய்தியானது கடந்த செப்டம்பர் மாதம் இணையத்தளம் ஒன்றில் பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரையின் உண்மைத்தன்மை தொடர்பில் இலங்கைநெட் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் செய்திக்கான எந்த பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றது.

நாட்டு மக்கள் அடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்;வதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை எவ்வித தணிக்கை அல்லது மாற்றம் செய்யாது இலங்கைநெட் மறுபிரசுரம் செய்கின்றது.

தேர்தலொன்றை மக்கள் எதிர்கொள்ளவுள்ள நிலையில் கடந்த காலங்களில் எமது அரசியல்வாதிகளின் மோசடிகள் தொடர்பாக வெளிவந்திருந்த செய்திகள் யாவற்றையும் மக்களின் ஞாபகமூட்டலுக்காக மீள்பிரசுரம் செய்யவுள்ளோம்..


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com