Wednesday, September 18, 2019

வறுமையும் சமூக சமத்துவமின்மையும் கொலையாளிகள் என அமெரிக்க ஆய்வு காட்டுகிறது. Patrick Martin

ஏழை அமெரிக்கர்கள் வயதாகும் போது இறப்பது பணக்கார அமெரிக்கர்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். இதுதான், அமெரிக்காவில் வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வுகள் விரிவடைவதன் தாக்கம் பற்றி காங்கிரஸின் புலனாய்வு அமைப்பான, அரசாங்க பொறுப்புக்கூறல் அலுவலகம் (Government Accountability Office - GAO) இந்த வாரம் வெளியிட்ட ஒரு ஆய்வின் கொடிய முடிவாகவுள்ளது. இந்த ஆய்வு, சமூக பாதுகாப்பு நிர்வாகத்தால் 1992 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரம் மற்றும் ஓய்வூதியங்கள் பற்றிய விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, 1992 இல் 51 மற்றும் 61 வயதிற்கு இடைப்பட்டவர்கள் அடங்கிய மக்கள்தொகையின் உபதொகுப்பை ஐந்து படிநிலைகளாக பிரித்து ஆய்வு செய்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள ஒரு தெருவில், பணியாளர் குழு ஜூலை 1, 2019 திங்களன்று சுத்தம் செய்ய தயாரான போது அங்கிருந்து வீடற்ற ஒருவர் தனது உடமைகளை எடுத்துச் செல்கிறார்

(ஏபி புகைப்படம் / ரிச்சார்ட் வோஜெல்)

உடன் வரும் விளக்கப்படம் காண்பிப்பது போல, ஏழைப் பிரிவினரில் பாதி பேர் (48 சதவிகிதத்தினர்) 2014 ஆம் ஆண்டிற்கு முன்னர் அவர்களது 73 மற்றும் 83 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் இறந்து விட்டிருப்பதையும், அதேவேளை செல்வந்தப் பிரிவினரில் கால் பகுதியினர் (26 சதவிகிதத்தினர்) மட்டுமே இறந்திருப்பதையும் GAO கண்டறிந்தது.

வருமானம் மற்றும் இறப்பு விகிதங்களுக்கு இடையிலான தொடர்பு அச்சுறுத்துவதாகவும் மறுக்கமுடியாததாகவும் இருந்தது: அதாவது படிநிலைக்கு படிநிலை வருமானம் குறைகின்ற நிலையில், இறப்பு விகிதங்கள் உயர்கின்றன. ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட வயது தொகுப்பினரில் ஐந்து படிநிலைகளில் இரண்டாவது ஏழ்மை நிலையினர், 2014 வாக்கில் 42 சதவிகித இறப்புடன் கூடிய இரண்டாவது படுமோசமான இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர். ஐந்து பிரிவினரில், நடுநிலை வயதினரும், இரண்டாவது அதிகபட்ச வயதினரும் முறையே 37 சதவிகித மற்றும் 31 சதவிகித இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர்.

ஏழைகள் எப்போதுமே பணக்காரர்களை விட முன்னதாகவே கல்லறைக்குச் சென்றிருந்தாலும், தொடர்புடைய ஏற்றத்தாழ்வு இப்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த தலைமுறையில் மருத்துவத்தில் அனைத்து முன்னேற்றங்களும் இருந்தபோதிலும், சமீபத்திய பல ஆய்வுகளின் படி, 40 சதவிகித ஏழைப் பெண்கள் அவர்களது தாய்மார்களை விட குறைவான ஆயுட்காலத்தையே கொண்டிருக்கின்றனர்.

இந்த புள்ளிவிபரங்கள் வறுமை மற்றும் சமத்துவமின்மை காரணமாக அதிர்ச்சிதரும் வகையிலான நீண்டகால மனித இழப்பு பற்றிய நுண்ணறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந்த அறிக்கை, உணர்ச்சிவசப்படாத, அதிகாரத்துவ மொழியில், “GAO இன் பகுப்பாய்வு… வருமானம், செல்வம் மற்றும் மக்கள்தொகை பண்புகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள், நீண்ட ஆயுளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்புபட்டவை என்பதைக் காட்டுகிறது” என்று கூறுகிறது. இதில், வறுமையும் சமத்துவமின்மையும் கொல்கின்றன என்று எளிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட பிற புள்ளிவிபரங்கள் அமெரிக்காவில் மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியின் மேலதிக அறிகுறிகள் பற்றி தெரிவிக்கின்றன. GAO அறிக்கையும் கூட, 1989 முதல் 2018 வரை, 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தொழிலாளர் சக்தியின் பங்களிப்பு விகிதம் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்ந்திருந்ததை, அதாவது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருந்ததை கண்டறிந்தது. இது, தேக்கமடைந்து வரும் வருமானங்களின் விளைவுகளையும் மற்றும் பாரம்பரிய ஓய்வூதிய திட்டங்களின் உண்மையான மறைவு ஆகியவற்றைக் காட்டுகிறது. வயதான தொழிலாளர்களிடம் தொடர்ந்து வாழ்வதற்கு போதுமான பணம் இல்லாத நிலையில், நீண்ட காலம் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், ஓய்வு பெறுவதும் தாமதமாகியது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் அறிக்கை, 2018 இல் வறுமை விகிதத்தில் ஒரு சிறிய சரிவைக் காட்டியது, ஆனால் பிற சமூக குறிகாட்டிகள் சாதகமானதாக இல்லை. அமெரிக்காவில் வறுமையில் வாடும் மொத்த மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் 38 மில்லியனாக இருந்தது.

சராசரி வீட்டு வருமானம் 63,200 அமெரிக்க டாலர்கள், இதனால் 2018 உடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மாறாமல் இருந்தது. நீண்ட வரலாற்று காலத்தில், 1999 முதல், வாழ்க்கை செலவினங்களின் உயர்வினால் ஊதிய உயர்வு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக உண்மையான ஊதியங்களில் கிட்டத்தட்ட எந்தவித அதிகரிப்பும் நிகழவில்லை என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு கண்டறிந்தது.1992 இல் 51 முதல் 61 வயதிற்கு இடைப்பட்ட ஏழ்மையான ஐந்தாவது பிரிவு மற்றும் பணக்கார ஐந்தாவது பிரிவு அமெரிக்கர்களின் உயிர்வாழ்வு விகிதத்தை இந்த விளக்கப்படம் காட்டுகிறது. 2014 ஆம் ஆண்டளவில், ஏழைக் குழுவில் 48 சதவிகிதம் பேர் இறந்து போயிருந்ததுடன் ஒப்பிடுகையில், பணக்காரக் குழுவில் 26 சதவிகிதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

2010 இல் ஒபாமா பாதுகாப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக 2018 இல், சுகாரதார காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 25.6 மில்லியனிலிருந்து 27.9 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதற்கு, மருத்துவ உதவி மற்றும் குழந்தைகளின் சுகாதார காப்பீட்டு திட்டம் (CHIP) ஆகியவற்றால் பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதே முக்கிய காரணமாக இருந்தது. மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் பின்வரும் இரண்டு கொள்கை மாற்றங்களும் இந்த வீழ்ச்சிக்கு பங்களித்தன: மருத்துவ உதவிக்கான தகுதியைக் கட்டுப்படுத்தும் புதிய அரசு விதிமுறைகளை ஊக்குவித்தல், மற்றும் மருத்துவ உதவி அல்லது CHIP க்கு விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு "பொதுச் செலவுதாரர்கள்" ஆகிவிட்டார்கள் என்ற அடிப்படையில் கிரீன் கார்ட் (ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் மற்றும் சலுகைகள் பெறவும் அனுமதிக்கும் பத்திரம்) மறுக்கப்படுவதாக அச்சுறுத்துவது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் அறிக்கை, அமெரிக்காவின் பொருளாதார சமத்துவமின்மையின் பேரழிவுகரமான பரிமாணங்களையும் உறுதிப்படுத்தியது. ஆண்டு வருமானம் 25,600 டாலர் வரை கொண்ட கீழ்நிலை ஐந்தாவது பிரிவு குடியிருப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த வீட்டு வருமானத்தில் 3.1 சதவிகித வருமானம் மட்டுமே உள்ளது என்றாலும், முதல்நிலை ஐந்தாவது பிரிவினர் 130,000 டாலருக்கு அதிகமான ஆண்டு வருமானத்துடன், பாதிக்கு மேற்பட்டவர்களாக, அதாவது 52 சதவிகிதமாக உள்ளனர். முதல் 5 சதவிகிதத்தினர், 248,700 டாலர் ஆண்டு வருமானத்துடன் மொத்தத்தில் 23.1 சதவிகிதமாக உள்ளனர்.

அதிகரித்துவரும் சமத்துவமின்மை, தொடர்ச்சியான வறுமை, உழைக்கும் மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருதல், வசதியான ஓய்வு பெறுவது பற்றிய கனவு மறைந்து போதல்: இதுவே, அமெரிக்காவை மீண்டும் “உயர்ந்தது” ஆக மாற்றுவதற்கான பாதை என்று ட்ரம்ப் மீண்டும் பாராட்டியதன் உண்மை நிலையாகவுள்ளது. கேள்விக்குரிய காலப்பகுதியின் பாதியில் வெள்ளை மாளிகையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஜனநாயகக் கட்சியினரும் எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை. வாஷிங்டனில் உள்ள இரு கட்சிகளும் ஒரே ஆளும் உயரடுக்கிற்குள் போட்டியிடும் கன்னைகளாக இருக்கின்றன, அவை இரண்டும் இந்த சமூக தீமைகளுக்கு மூல காரணமான அமெரிக்க முதலாளித்துவத்தை பாதுகாக்கின்றன.

GAO அறிக்கை என்பது உண்மையில், வறுமைக்கும் அகால மரணத்திற்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்த காங்கிரஸால் நியமிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, இந்த “உரிமை” திட்டங்களுக்கான செலவை நீண்ட காலத்திற்கு குறைப்பதற்கு, இரு கட்சிகளின் ஆதரவுடனான காங்கிரஸின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பு ஆகியவற்றால் உருவான ஆயுட்கால மாற்றங்களின் தாக்கத்தை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.

GAO அறிக்கை வறுமைக்கும் அகால மரணத்திற்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய காங்கிரஸால் வடிவமைக்கப்படவில்லை. மாறாக, அதன் நோக்கம் சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார காப்பீட்டில் ஆயுட்காலம் மாற்றங்களின் தாக்கத்தை ஆராய்வதாகும். மக்கள்தொகை உரிமையுள்ள இந்த திட்டங்களுக்கான நீண்டகால செலவினங்களைக் குறைப்பதற்கான இரு கட்சிகளின் காங்கிரஸின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்த அறிக்கை கருதப்பட்டது.

அறிக்கையின் ஆசிரியர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் காங்கிரஸில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சங்கடமாக இருக்கக்கூடும் என்பதை நன்கு அறிவார்கள். “வருமானம் அல்லது செல்வம் எந்த அளவிற்கு நீண்ட ஆயுளில் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் பகுப்பாய்விலிருந்து தீர்மானிக்க முடியாது” [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது] என்பதை சேர்த்துக் கூறி, வறுமைக்கும் அதிக இறப்பு விகிதங்களுக்கும் இடையில் ஒரு “புள்ளிவிபர இணைப்பை” மட்டுமே அவர்கள் கண்டறிந்ததாக அறிவிக்க அவர்கள் விரைகிறார்கள்.

ஏழைகளின் ஆயுட்காலம் குறைவாக இருந்தாலும், “அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால், தனிநபர்கள், அதிலும் குறைந்த வருமானம் அல்லது கல்வி போன்ற குறைந்த ஆயுளுடன் தொடர்புடைய காரணிகளைக் கொண்ட தனிநபர்கள் கூட நீண்டகாலம் நீண்டகாலம் வாழக்கூடும், ஓய்வு பெறுவதில் குறைவான நன்மைகளைப் பெறுபவர்கள் சமூக பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு நிகர திட்டங்களை முதன்மையாக நம்ப வேண்டியிருக்கும்” என அறிக்கை எச்சரிக்கிறது. இதை எளிமையாகச் சொல்வதானால: இந்த திட்டங்களை நீக்குவதற்கான திட்டங்கள் பரவலான எதிர்ப்பை உருவாக்கக்கூடும், ஏனென்றால் மில்லியன் கணக்கானவர்கள் அதிகரித்தளவில் நம்பியிருக்கும் உயிர்நாடியாக அவை இருக்கின்றன.

இந்த அடிப்படை சமூக முரண்பாடுகளே தொழிலாளர் வர்க்கம் வரலாற்றுப் போராட்டங்களுக்குள் நகர்ந்து கொண்டிருப்பதன் பின்னணியாகும். ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் மற்றும் ஃபியட் கிறைஸ்லரின் 155,000 தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் போன்ற எந்தவொரு பெரிய தொழில்துறை வேலைநிறுத்த நடவடிக்கையும் 1930 களில் இருந்து அமெரிக்காவில் காணப்படாத அளவிலான வர்க்க மோதல் வெடிப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம்.

அமெரிக்க முதலாளித்துவம் பல தசாப்தங்களாக இத்தகைய அரசியல் வெடிப்புக்கான மூல ஆதாரங்களைக் குவித்து வருகின்றது. தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தேக்க நிலையில் உள்ளது. உலகின் பணக்கார நாட்டில் டஜன் கணக்கான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர். குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் பணிபுரியும் இளைஞர்கள், பெற்றோர்களையும் தாத்தா பாட்டிகளையும் விட மோசமாக வாழும் அமெரிக்கத் தொழிலாளர்களின் முதல் தலைமுறையாக உள்ளனர். GAO அறிக்கை காட்டுவது போல், இந்த பழைய தலைமுறையினரின் உயிர்வாழ்க்கையும் பெருகிய முறையில் கடினமாக இருக்கும்.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் தடுக்க ஆளும் உயரடுக்கு பயன்படுத்தும் பழைய அமைப்புக்களிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளவதே தீர்க்கமான கேள்வியாகும். இதன் அர்த்தம், பெருநிறுவன முதலாளிகளின் ஊழல் மோசடிகளால் நடத்தப்படும் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்வதும், மற்றும் தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படும் குழுக்களை அமைத்தல் என்பதுமாகும். மேலும், உலகெங்கிலுமுள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராக அமெரிக்கத் தொழிலாளர்களை தூண்ட முற்படும் தொழிற்சங்கங்களால் வழிநடத்தப்படும் தேசியவாத கண்ணோட்டத்திலிருந்து உடைப்பதும் இதன் அர்த்தமாகும்.

முதலாளித்துவம் என்பது ஒரு உலகளாவிய அமைப்பாகும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இல்லாமல் எந்தவொரு நாட்டிலும் முதலாளிகளை திறம்பட எதிர்த்துப் போராட முடியாது. எனவே, இந்த போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாள வர்க்கத்திற்கென ஒரு சொந்த கட்சியை சர்வதேச அடிப்படையில் ஒழுங்கமைத்து, ஒவ்வொரு நாட்டிலும் சோசலிசத்திற்காக போராட வேண்டியது அவசியமாகும்.
0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com