Friday, September 6, 2019

தமிழ் முஸ்லீம் சமூகம் கோத்தபாயவிற்கு ஆதரவளிப்பார்கள்! அடித்துக் கூறுகின்றார் புர்கான்.

2010ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்வரும் தேர்தலில் பொது ஜனபெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சீ பிரீட்ஸ் தனியார் விடுதியில் வியாழக்கிழமை(5) இரவு 9.30 மணியளவில் கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டு குழு தெரிவு இடம்பெற்ற பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :

கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு இருந்த மக்கள் ஆதரவைக்காட்டிலும் தற்போதைய மகிந்த சார்பு அணியினரை எதிர்வரும் சனாதிபதி தேர்தலிலே வெற்றியடைய செய்ய வேண்டுமென்பதில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். குறிப்பாக அதிகாரத்திலுள்ள அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகள் உரிமைகளை நிறைவேற்றக் தவறியுள்ளது. அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் இன்னும் பின்னோக்கியே செல்கின்றது.

இந்தக்காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை செவிமடுத்து தீர்க்கக்கூடிய தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். 30 வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து மாபெரும் வரலாறு காணாத அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தும் இன்றைய சூழலில் சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகள் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்ததாக பல வகையான குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக்ச தரப்பிடம் பலரும் முன்வைத்துள்ளார்கள். ஆனால் அதற்கான சான்றுகள் இல்லாமலே குற்றச்சாட்டுக்களை அரசியல் ரீதியாக அவர்கள் முன்வைக்கின்றனர். வடகிழக்கு மாகாண மக்கள் கடந்த கால ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய இராணுவ தளபதியை ஆதரித்தார்கள்.

அதே போன்று எமது ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஸவினையும் வடகிழக்கு மக்கள் ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுகருத்து இல்லை. இதில் முஸ்லீம் கட்சிகள் அரசியல் ரீதியாக எமது வேட்பாளர் மீது முன்வைக்கும் போலியான குற்றச்சாட்டுக்களை முஸ்லீம் மக்கள் நம்ப வேண்டாம். இந்த காலம் நவீன ஊடக காலமாகையினால் எவரும் யாரையும் எமாற்ற முடியாது. தற்போது தமிழ் பேசும் மக்கள் நடப்பு அரசாங்கம் மீது அதிருப்தியில் உள்ளனர். முஸ்லீம் கட்சிகள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எல்லா முஸ்லீம் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறான கட்சிகள் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது முன்வைக்கின்ற குற்றச்சாட்டிற்கு எதுவித ஆதாரங்களும் இல்லை. எனவே எமது முஸ்லீம் தமிழ் மக்கள் முன்னரை விட அரசியலில் தெளிவாக உள்ளதை தெரிவிக்க விரும்புகின்றேன் என கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com