Monday, August 19, 2019

புதிய இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா! அமெரிக்கா அவதானிக்கின்றார்களாம்!

இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

கெடெட் அதிகாரியாக 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் சேர்ந்த ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.

புலிகளை தோற்கடித்த வன்னி யுத்தத்தில் 58 ம் பிரிவுக்கு தளபதியாக செயற்பட்டு யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் என பிரபல்யமானவர். அவருக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பல பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும்.

குறிப்பாக, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாக காணப்படும் இந்த தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலிதற்றதாக்குவதாக அமைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com