Monday, August 19, 2019

ரணில் விக்கிரமசிங்க குள்ள நரியாம், தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டாராம்! கூறுகின்றார் கருணா அம்மான்.

இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத்பொன்சேகாவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறியிருந்தார்கள். அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் எனின் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏன் வாக்களிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு கூட்டம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கட்சி காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தலைமையில் நேற்று (18) இடம்பெற்றது

இதில் கலந்துகொண்ட கட்சி தலைவர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) கட்சியின் பெண்கள் அணிதலைவி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞர்அணி தலைவர், தேசிய அமைப்பாளாகளுக்கான பதவிகளை உத்தியோக பூர்வமாக வழங்கிவைத்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜனபெரமுன கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம். அதன் தெளிவாக்கல் கூட்டம் இன்று இடம்பெற்றதுடன் இறுதி தீர்மானமாக வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துள்ளோம்.

கடந்த 21 ஆம் திகதி முஸ்லிம் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலினால் 200 க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் முதலாவதாக எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது போன்ற அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாப்பது எங்களது முக்கிய கடமையாக இருக்கின்றது. இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பல வாக்குறுதிகளை அள்ளிவீசியதால் மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர் ரணிலானாலும் ஜனாதிபதி மைத்திரியானாலும் வழங்கிய வாக்குறுதியில் ஒரு அரசியல் கைதியைக்கூட விடவில்லை. ஆனால் மாறாக அரசியல் யாப்பு திருத்தப்படும் வடக்கு கிழக்கிற்கான உரிமைகள் வழங்கப்படும் என கூறிக் கொண்டார்களே தவிர எதுவித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை

இவ்வாறான அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து எமது தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர். இந்த ஏமாற்றிய அரசாங்கத்திற்கு இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சி இன்று வரை வேட்பாளரை தெரிவு செய்யவில்லை. இருந்தபோதும் சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்வதாக தெரிவிக்கின்றனர். இந்த சஜித் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான தலைவராக தான் இருப்பார்.

அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று இடம்பெறும் கூட்டங்களிலே பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ஆகவே தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலிலே வெற்றியடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முஸ்லிம் முதலமைச்சரை உருவாக்கினர். இந்த முதலமைச்சர் காலத்தில் தான் கூடுதலான நிலங்கள் பறிபோகியுள்ளது. அதேவேளை தமிழ் மக்கள் வேலைவாய்ப்பையும் இழந்தார்கள்.

அதேபோல இன்றும் ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து கொண்டு மீண்டும் முஸ்லிம்களிடம் கிழக்கு மாகாணத்தை கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கங்கனம் கட்டி நிற்கின்றனர்.

இன்று இதற்கு பல வியாக்கியானங்கள் கூறலாம். கோட்டாபய யுத்ததிலே ஈடுபட்ட யுத்தகுற்றவாளி என கூறலாம். ஆனால் யுத்தம் முடிந்து ஒரு வருடத்தில் இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த சரத் பொன்சேகாவிற்கு எதுவித முன் நிபந்தனையும் இல்லாமல் வாக்களிக்கச் சொன்னவர்கள் இதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க முடியாதா? யாராக இருந்தாலும் ஒரு சிங்களவர் தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார். எனவே தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நான் அன்ரன் பாலசிங்கத்துடன் கலந்துகொண்ட காலத்தில் அன்ரன் பாலசிங்கம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டிலே வெளிப்படையாக தெரிவித்தார். ரணில் ஒரு குள்ள நரி என்று எனவே ரணில் ஒருபோதும் தமிழர்களுக்கு எதையும் செய்யமாட்டார்.

அவர் அந்த நரித்தனத்தை தான் தற்போது காட்டிவருகின்றார். அவரின் பின்னால் நாங்கள் அணி திரள்வோமாக இருந்தால் மீண்டும் எங்கள் தமிழ் பிரதேசங்கள் இழந்த பிரதேசங்களாக மாற்றப்படும் முஸ்லிம் அரசியல் ஆதிக்க வெறியாட்டம் அதிகரிக்கும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து தெளிவாக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

(மட்டக்களப்பு நிருபர் சரவணன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com