Friday, June 28, 2019

அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம் ஆபத்தானது! எச்சரிக்கின்றார் பாலித ஹோகன்ன

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், பாதுகாப்பு உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடிய உடன்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் கலாநிதி பாலித கொஹன்ன.

கொழும்பில் நேற்று எலிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

“சிறிலங்காவுக்குப் பயனளிக்காத, சோபா போன்ற உடன்பாடுகளில் ஏன் கையெழுத்திட வேண்டும்?

எமது அரசியல் தலைமை என்ன நினைக்கிறது? உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுடன், அமெரிக்கா சோபா உடன்பாடுகளை செய்து கொண்டுள்ளது என்றா?

இந்த உடன்பாட்டின் மூலம், அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறிலங்காவுக்கு ஆயுதங்களுடன் வந்து எதையும் செய்ய முடியும். உள்ளூர் சட்டங்களின் கீழ் அவர்களை எதுவும் செய்ய முடியாது.

அமெரிக்க படைகள் பிலிப்பைன்சில் ஒரு தொகை வல்லுறவுக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளன. அந்த நாட்டில் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவில்லை.

இத்தகைய உடன்பாடுகளை விவாதிப்பதில் நாடாளுமன்றத்துக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும். ஏனெனில் இவை நாட்டின் இறைமை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கக் கூடியவை.

இத்தகைய உடன்பாடுகளில் நுழைவதை, நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுடன் நாம் நல்ல உறவைப் பேண வேண்டும், அதற்காக, எமது சுதந்திரத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை.

2007இல் கையெடுத்திடப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு, சிறிலங்கா- அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவ ஒத்துழைப்பை வழங்குகிறது.

இராணுவ தளவாட ஆதரவு, விநியோகம், சேவைகள் மற்றும் “எதிர்பாராத சூழ்நிலைகளில்” விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இது உள்ளடக்கியது.

அத்துடன் அந்த உடன்பாடு அமெரிக்க இராணுவ கப்பல்கள் சிறிலங்கா துறைமுகங்களுக்குள் ஒன்று வெளியேற மற்றொன்று நுழையவே அனுமதி அளிக்கிறது.

ஆனால், 2017இல் புதுப்பிக்கப்பட்ட உடன்பாட்டில், அந்தப் பிரிவு திறந்து விடப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com