Tuesday, May 21, 2019

நீர்கொழும்பிலிருந்து விரட்டப்பட்ட வெளிநாட்டு அகதிகளை வவுனியாவிலிருந்தும் விரட்டக்கோரும் தேரர்கள்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளின் 1600 இற்கும் அதிகமான அகதிகள் சிறிலங்காவில் புகலிடம் கோரியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயரிஸ்தானகத்தில் தங்களை பதிவு செய்துள்ள அவர்கள் நீர்கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளின் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றினர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட அவர்கள் அங்கிருந்த பொது இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.

அந்த நபர்கள் அவ்வாறு பொது இடங்களில் தங்கவைக்கப்படுவதற்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இரவு முதல் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் 35 வெளிநாட்டு அகதிகள்; குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அவர்களை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார்,

இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். ஐஎஸ் மற்றும் தௌபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் என சந்தேகமுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையில் புதிய பிரச்சனை இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடாது. அதனால் வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைக்க அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற ஆணையாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பிக்குமார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், வவுனியா அரச அதிபர், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் மனு ஓன்றினை கையளித்தனர்.

இக் கலந்துரையாடலில் பௌத்த குருமார், போதகர், இந்து மதகுரு, வவுனியா நகர சபை தலைவர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர், நகரசபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இச்செயற்பாடானது முற்றிலும் மனித உரிமைகளை மீறுகின்ற மிலேச்சத்தனமாகும். குறித்த நபர்கள் பயங்கரவாதிகளாக இருந்தால் அவர்களை கண்காணிப்பதற்கும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பதற்கும் இலங்கையில் போதியளவு பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கான வளங்களும் உண்டு. அவ்வாறானவர்களை அவர்களின் செயற்பாடுகளை கண்டறிவது படையினரின் கடமையாகும். மாறாக தஞ்சம் கோரி வந்தவனை விரட்டியடிப்பது, ஒட்டுமொத்த இலங்கையையும் உலக அரங்கில் நிர்வாணமாக்கும் என்பதை குறிப்பிட்டேயாகவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com