Friday, April 26, 2019

மைத்திரிக்கு கம்பியை நீட்டிவிட்டாரா பூஜித ஜெயசுந்தர

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு போதிய தகவல்கள் இருந்தும் அது குறித்து செயற்படாது அனர்தத்திற்கு வழிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர் அரச மற்றும் பாதுகாப்பு தரப்பினர்.

இது விடயத்தில் ஆழும் மற்றும் எதிர்கட்சியினர் நேரடியாக பொலிஸ் மா அதிபர் மீது குற்றஞ்சுமத்தியுள்ளதுடன் அவர் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் அவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்றும் வேண்டுதல் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலரை பதவிகளை ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டிருந்தார்-

இதன் பிரகாரம் பாதுகாப்பு செயலர் ராஜனாமா செய்து கொண்டுள்ளார்.

அத்துடன் இன்று பூஜித ராஜனாமா செய்வார் என ஜனாதிபதி ஊடகங்களின் பிரதானிகளிடம் தெரிவித்திருந்ததுடன், ஜனாதிபதி செயலகமும் அத்தகவலை உறுதி செய்திருந்தது.

இந்நிலையில் இதுவரை பொலிஸ் மா அதிபர் ராஜனாமா செய்து கொண்டுள்ளதாக உத்தியோக பூர்வமான அறிவித்தல் வெளிவரவில்லை.

மாறாக அததெரண ஊடகம் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு வினவியபோது, இதுவரை அவ்வாறான முடிவு எதையும் தான் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபரிடமிருந்து வாய்மூலமான உறுதிமொழியேனும் இன்றி இன்று காலை அவ்வாறானதோர் அறிவிப்பை விடுத்திருக்க மாட்டார் என நம்பமுடியும்.

எனவே ராஜனாமா கடிதத்தை அனுப்புகின்றேன் என தெரிவித்து விட்டு கம்பியை நீட்டிவிட்டாரா என்ற சாதாரண சந்தேகம் ஒன்று இங்கே எழுகின்றது.

இதேநேரம் பூஜித ராஜனாமா செய்ய முயற்சித்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செய்யவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.

பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவ்வாறு அவரை பதவி நீக்குவதானால் பொலிஸ் சேவைகள் அணைக்குழு அல்லது பாராளுமன்றில் பெரும்பாண்மை வேண்டும்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் பல பாரளுமன்ற உறுப்பினர்கள் பூஜித பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், எதிர்கட்சியினர் பாராளுமன்றில் அதற்கான கோரிக்கையை விடுத்து வாக்கெடுப்புக்கு செல்வார்களாயின் ஐக்கிய தேசியக் கட்சியினரின் பொலிஸ் மா அதிபர் மீதான அதிருப்தியாளர்களின் வாக்குகளுடன் பிரேணை நிறைவேற்றப்படும் என்பது உறுதியானது.

எனவே அவ்வாறு விரட்டியடிக்கப்படும் வரை ஆசனத்தை பிடித்துக்கொண்டு இருக்கப்போகின்றாரா கௌரவமாக செல்லப்போகின்றாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com