Saturday, March 9, 2019

வறட்சியால் குறைவடைந்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்

வறட்சியான வானிலையால் நாட்டின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடும் வறட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 40.7 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகளவிலான வறட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களினூடாக 20 வீதமான மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். இந்தநிலையில் மேல் கொத்மலை அணைக்கட்டினை பரிசோதனை செய்வதற்காக மார்ச் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை, நீர் வெளியேற்றப்பட்டதாக சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குப்பைகள் சேருவதால் அதனை அகற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக புதிய வலைகளை பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்தார். நிலவும் வறட்சியுடனான வானிலையை பயன்படுத்தி, நீர்த்தேக்கங்களில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com