உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப் பிரிவின் உருவாக்கத்தில் என்ன தவறு? ஏன் இந்த இழுத்தடிப்பு?
கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது,
" கல்முனை உபபிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்த வேண்டும்" என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக திங்கட்கிழமை, மார்ச் 11, 2019வீரகேசரியில் (பக்கம் 02) செய்தி வெளியாகியுள்ளது.
இச் செய்தியை முழுமையாக படித்தபோது அதன் உள்ளடக்கம் அம்பாறை மாவட்ட தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக கல்முனை பிரதேச தமிழர்களைப் பொறுத்தவரை "இனிப்பு தடவிய பாகற்காய்" ஆகும்.
உண்மையில் இந்த விடயத்தில் நிலத்தொடர்பின்மை என்ற பிரச்சனையோ அல்லது எல்லை மீள் நிர்ணயம் என்ற சிக்கலோ இல்லை.
உத்தேச கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகப்பிரிவின் நிலத்தொடர்போடு கூடிய வரையறுக்கப்பெற்ற தெளிவான எல்லைகள் வருமாறு
வடக்கு : மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லை (பெரியநீலாவணைக் கிராமம்)
தெற்கு : கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதி
கிழக்கு: வங்காள விரிகுடாக் கடல்
மேற்கு : கிட்டங்கி வாவி
மேற்கூறப்பெற்றவாறு எல்லைகள் வரையறுக்கப்பெற்ற நிலப்பரப்புக்குள் கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் உள்ளடங்குகின்றன.
அப்படியாயின் இதில் நிலத்தொடர்பின்மை, எல்லைகள் மீள் நிர்ணயம் என்ற சிக்கல்கள் எழத்தேவையில்லை. ஆனால் அமைச்சர் ஏன் அவ்வாறு கூறியுள்ளார் என்பதை வைத்துப் பார்க்கும் போது 1989ம் ஆண்டிலிருந்து தமிழர்கள் விடுத்துவரும் இக்கோரிக்கையின் நிறைவேற்றத்தை மேலும் இழுத்தடிப்பதற்கான அல்லது இக் கோரிக்கையைத் தமிழர்களுக்குப் பாராபட்சமான முறையிலே நிறைவேற்றி வைப்பதற்கான தந்திரோபாயமோ என சிந்திக்க வேண்டியுள்ளது.
முன்பு நிர்வாக அலகுகளாக இருந்த பிரிவுக் காரியாதிகாரி முறைமை (D.R.O'S Division) க்குப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ஏற்படுத்தப்பெற்றபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் " கரவாகுப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு" எனும் ஒற்றை நிர்வாக அலகாக உருவாக்கப்பெற்று இந்த ஒற்றை நிர்வாக அலகுக்குள் சாய்ந்தமருது,கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு,மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கிட்டங்கி,மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய கிராமங்கள் அடங்கியிருந்தன.
கல்முனைத் தமிழர்களை பொறுத்த வரை இந்த ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஏற்படுத்தப்பெற்ற காலத்திலிருந்தே இதனை கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாக கொண்டு இரண்டு நிர்வாக அலகுகளாக (உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாகப்) பிரித்து கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது கிராமங்களை உள்ளடக்கிய தெற்குப்பகுதியை கரவாகு தெற்கு அல்லது கல்முனைத் தெற்கு எனும் பெயரில் முஸ்லீம் பெரும்பான்மை நிர்வாக அலகாகவும் (100% முஸ்லீம்) கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,கிட்டங்கி, மருதமுனை, பெரியநீலாவணை கிராமங்களை உள்ளடக்கிய வடபகுதியை கரவாகு வடக்கு அல்லது கல்முனை வடக்கு எனும் பெயரில் தமிழ் பெரும்பான்மை அலகாகவும் (தமிழர்கள்,முஸ்லீம்கள், சிங்களவர்கள் உள்ளடக்கியது) ஆக்கித்தரும்படி அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களிடமும் அரசாங்க உயர் அதிகாரிகளிடமும் தமிழர்தம் அரசியல் தலைமையான தமிழர் விடுதலைக்கூட்டணியிடமும் (தற்போது தமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு) கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் பின்னர் பிரதேச செயலகப் பிரிவுகளாக தரமுயர்த்தபெற்றன அல்லது பெயர் மாற்றப்பெற்றன.
இது விடயமாக முன்னாள் உள்ளுர் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண, முன்னால் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமரர் . கே. டபிள்யூ. தேவநாயகம் , பொத்துவில் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.ரங்கநாயகி பத்மநாதன் ஆகியோர் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியின் விளைவாக12.04.1989 தனியான தமிழ் பெரும்பான்மை உதவி அரசாங்கப் பிரிவு உப அலுவலகமாகத் திறக்கப்பெற்றும் பின்னர் 28.07.1993 ல் அமைச்சரவை தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பெற்ற 28 உப அலுவலகங்களுள் கல்முனைத் தமிழ் பிரிவும் அதாவது கல்முனை வடக்கு (தமிழ்)உள்ளடக்கப்பட்டது.
ஆனால் நாடளாவிய ரீதியில் தரமுயர்த்தப்பெற்ற 28 உப அலுவலகங்களுள் கல்முனை தமிழ் பிரிவு தவிர்ந்த ஏனைய 27 உப அலுவலகங்களும் நிறைவேற்றப்பெற்ற சமகாலத்தில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் அரசியல்வாதிகளினால் குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் முன்னால் தலைவர் அமரர். எம். எச் . எம் அஸ்ரப் அவர்களின் அரசியல் தலையீடு காரணமாக கல்முனை தமிழ் பிரிவு நிறைவேற்றப்பெறாமல் பின்னர் வந்த முஸ்லீம் அரசியல்வாதிகளின் விருப்பமின்மை காரணமாக இன்று வரை உப அலுவலகமாகவே வெறுமனே கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகம் எனும் பெயர்ப்பலகை மட்டும் மாட்டிக் கொண்டு இயங்கி வருகின்றது.
கடந்த முப்பது வருட காலமாகக் கல்முனைத் தமிழ்ப்பிரிவு விடயம் கிடப்பில் போடப்பட்ட சமகாலத்தில், முஸ்லிம் பெரும்பான்மை சம்மாந்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப் பெற்று புதிதாகத் தனியான இன்னுமொரு முஸ்லிம் பெரும்பான்மை இறக்காமம் பிரிவும், அதேபோல் கரவாகு (கல்முனை ) உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்மபட்டு புதிதாக தனியான இன்னுமொரு முஸ்லிம் பெரும்பான்மை சாய்ந்தமருதுப் பிரிவும் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளின் முயற்சியாலும் செல்வாக்கினாலும் ஏற்படுத்தப்பட்டன. இவை அவர்களது தேவை. இதைக் குறைகூறத் தேவையில்லை.
இவை தேவை கருதியும் மக்களின் அபிலாஷை கருதியும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போது கல்முனைப் பிரதேசத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையான கல்முனைத் தமிழ்ப்பிரிவை தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தத் தடை ஏன்? நியாயமான இக்கோரிக்கைக்கு இப்போது வயது 30 ஆகிறது.
எனவே, உத்தேச கல்முனை வடக்கு(தமிழ் ) பிரிவின் உருவாக்கம் அல்லது தரமுயர்த்தல் என்பது புதிதாக எடுத்த கோரிக்கை அல்ல என்பதுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுவது போல இதனை நிறைவேற்றி வைப்பதில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ அல்லது எல்லைகள் மீள் நிர்ணயச் செயற்பாட்டுப் பிரச்சினையோ எதுவுமில்லை. இவை வேண்டுமென்றே இழுத்தடிப்பதற்காக அல்லது கல்முனைத் தமிழர்களுக்குப் பாதகமான வகையிலே நிறைவேற்றி வைப்பதற்காகச் செயற்படும் சக்திகளின் தந்திரோபாயம் ஆகும். இந்த விடயத்தில் தமிழர் தரப்பு கல்முனைப் பிரதேசத் தமிழர்கள் மிகவும் விழிப்பாகவும் நுட்பமாகவும் செயலாற்ற வேண்டியது அவசியம்.
மேலும், முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசப் பிரிவு என்பது 100%முஸ்லிம்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை. அதேபோல் தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவு என்பது 100% தமிழர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதியோ தேவையோ இல்லை.
தற்போது நடைமுறையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வட்டிவெளி, குண்டுமடு, தாமரைக் குளம், இன்ஸ்பெக்டர் ஏத்தம், ஊறணி,கனகர் கிராமம், கோமாரி, சங்கமன்கண்டி போன்ற தமிழ்க் கிராமங்கள் அடங்கியுள்ளன.
அதேபோல் முஸ்லிம் பெரும்பான்மை அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் திராய்க்கேணி எனும் தமிழ்க் கிராமம் அடங்கியுள்ளது. அதேபோல் நிந்தவூர்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் எனும் பழந்தமிழ்க்கிராமம் அடங்கியுள்ளது.
அதேபோல் முஸ்லிம் பெரும்பான்மை சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வீரமுனை, மல்வத்தை, கலைதி நகர் புதுநகர், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு போன்ற தமிழ்க்கிராமங்கள் அடங்கியுள்ளன.
மறுதலையாக தமிழ்ப் பெரும்பான்மை காரைதீவுப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் மாவடிப்பள்ளி எனும் முஸ்லிம் கிராமம் உள்ளது. தமிழ்ப் பெரும்பான்மை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கணிசமான முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவு2001 இல் ஏற்படுத்தப்படும் வரை இப்பிரதேசம் முஸ்லிம் பெரும்பான்மைச் சம்மாந்துறைப் பிரதேசப் பிரிவின் கீழேதான் நிர்வகிக்கப்பட்டது.
1989இலிருந்து பார்த்தாலும் கடந்த 30வருடமாக முஸ்லிம் பெரும்பான்மைக் கரவாகுப் பிரதேச செயலகப் பிரிவின் ஆளுகையின் கீழேதான் கல்முனை ,பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக் குடியிருப்பு ,கிட்டங்கி , பெரிய நீலாவனை வாழ் தமிழர்கள் இருந்தனர். ஆனாலும் கல்முனைப் பிரதேசத் தமிழர்களுக்கென தனியானதொரு தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகை கடந்த 30வருடகாலமாக அவர்கள் கோரி வருகிறார்கள் என்றால் அது அவர்களது சமூக , பொருளாதார , அரசியல் அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்டதே என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உணராவிட்டாலும் கூட முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே உத்தேச கல்முனைத் தமிழ்ப் பிரிவின் கீழ் கல்முனை நகர், நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு , மருதமுனை வாழ் முஸ்லிம்கள் கணிசமான அளவில் அமைவது தவறற்றதும் தவிர்க்க முடியாததுமாகும்.
கரவாகு ( கல்முனை ) பிரதேச செயலகப் பிரிவிலிருந்து சாய்ந்தமருது தனியான பிரதேச செயலகப் பிரிவாக உருவானது நியாயம் என்றால், சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து இறக்காமமும், நாவிதன்வெளியும் தனியான பிரதேச செயலகப் பிரிவுகளாக உருவானது நியாயம் என்றால் தற்போது நடைமுறையிலுள்ள கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மேற்கூறப்பட்டவாறு கல்முனைத் தரவைப் பிள்ளையார் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு அதன் வட பகுதி தனியான பிரதேச செயலகப் பிரிவாக (கல்முனை வடக்கு தமிழ்ப் பிரிவு ) உருவாவதும் நியாயம்தானே. இதில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ எல்லை மீள் நிர்ணயச் செயற்பாட்டுப் பிரச்சினையோ எழ நியாயமில்லை.
28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின் அமுலாக்கமே இன்றும் வேண்டப்படுவதாகும்.
செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் - அரங்கம்
0 comments :
Post a Comment