Sunday, February 3, 2019

வடக்கில் 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க, நிதி ஒதுக்க முடியாது – அரசாங்கம் திட்டவட்டம்.

வடக்கில் ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்க, நிதி ஒதுக்க முடியாது என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு, செங்கலினாலான 25,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு, மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தால் வடக்கிற்கான வீடமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த திட்டத்தின் செலவிற்கு ஐக்கிய நாடுகள் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் திறை சேரியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் அடுத்து வரவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் கொங்கிரீட்டிலான 7 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு, அரசாங்கம் 8 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, அண்மையில் ஒரு உள்ளூர் நிறுவனமும் இணக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, வடக்கு மற்றும் கிழக்கில் முதற்கட்ட வீடுகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவை இடைநிறுத்தப்பட்டன.

அந்த வகையில் தனித் தனியாக, 10,000 க்கும் மேற்பட்ட செங்கல் வீடுகளை தற்காலிகமாக அமைப்பதற்கு, இடைக்கால கணக்கு அறிக்கை மூலம் பணம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இதற்கான ஐ.நா.வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனத்தின் ஆரம்ப முயற்சியை அமைச்சரவை அங்கீகரித்தது. இருப்பினும், ஒப்பந்த கைச்சாத்து தாமதமானது.

இவ்வாரத்திற்கு முன்னதாக, பிரதமரின் அலுவலகம் இரண்டு அமைப்புகளின் தலைவர்களை அழைத்து திட்டத்திற்கான நிதிக் கருவூலத்தில் இருந்து, பணத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் கசிந்தன.

குறிப்பாக, இந்த திட்டமானது உள்ளூர் வங்கியிலிருந்து நிதியுதவி பெறப்பட்டு, மூன்று வகையாக வீடமைப்பு திட்டங்களை கொண்டதாக அமைந்தது. குறிப்பாக முதல் வீட்டிற்கு 1,099,500 ரூபாயும், இரண்டாவது 1,117,700 ரூபாயும் மூன்றாம் 1,116,800 ரூபாயும் என வகுக்கப்பட்டது.

இவ்வாறு வேறுபட்ட வகையை அறிமுகப்படுத்தினால், அது பயனாளிகளிடையே தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் குற்றம் சுமத்தியிருந்தார்.

கடந்த சில வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாதிரி வீடுகளை ஆராய்ந்து, வேறு வகையான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே குறித்த அபிவிருத்தித் திட்டதிற்கு ஏற்ற நிதி, தம்மிடம் இல்லையென, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com