Friday, February 22, 2019

30 வருட யுத்த தாக்கத்தில் இருந்து, இன்னும் மீண்டு வரவில்லை - சுரேன் ராகவன்

இலங்கையில் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் தாக்கத்தை, நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று, வட மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவத்தின் காலடிகள் அமைப்பினால் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நெகிழ்வுத் தன்மையுடைய செயற்கைக்கால்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, ஆளுநர் சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார்.

''நாங்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியடைந்தாலும், இன்னொரு விதத்தில் மகிழ்ச்சியடைய முடியாத ஒரு நிகழ்வாக இது இருப்பது எங்களுக்கு புரிகின்றது. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த போரில் ஏற்பட்ட அனேக வேதனைகள் சித்தமாக நாங்கள் இன்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் மொழியை சேர்ந்தவர்கள், எங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த சிலரை இந்த நிலையில் பார்ப்பதற்கும், அவர்களின் வாழ்க்கை கதையை கேட்பதற்கும் கட்டாயப்பட்டுள்ளோம்.

எனவே தான் இந்த நிகழ்ச்சி என்னை பொறுத்த வரையில் சந்தோசம் கொடுக்கும் நிகழ்ச்சியாக அல்லாமல், ஓர் நம்பிக்கையை கொடுக்கும் ஒரு நிகழ்வாக உள்ளது. ஏனெனில் நீங்கள் திரும்பவும் வாழ்க்கையை பெற வேண்டும்.

அந்தளவுக்கு தைரியமாக ஒரு காரியத்தை குறித்து உங்களை அர்ப்பணித்து இருந்த காலம் இருக்கிறது. அந்த காலத்தை போலவே திரும்பவும் வாழ்க்கையை சீர்செய்து கொள்வதற்கான நம்பிக்கை வரவேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக நான் இதனை கருதுகின்றேன். ஏனெனில் யுத்த தாக்கத்திலிருந்து இன்னும் எவரும் மீண்டு வரவில்லை.

ஒரு சமுதாயத்தின் நாகரீகமென்பது அந்த சமுதாயத்தில் இருக்கின்ற வலுவற்றவர்களை, அது எந்தளவிற்கு தாங்கிக் கொள்கின்றது, எந்தளவிற்கு அது உள்வாங்கிக் கொள்கின்றது என்ற விடயமாகும்.

இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டது வெறுமனே ஒரு செயற்கையான பாதணி மட்டுமல்ல, ஒரு புதிய வாழ்க்கையின் அத்தியாயம் என்று நீங்கள் எண்ண வேண்டும்..

நான் ஆளுநராக வர வேண்டும் என்று கனவு காணவுமில்லை, சண்டைபோடவுமில்லை. நான் தற்செயலாக ஆளுநராக மாறினேன் என்று தான் சொல்ல வேண்டும் .

ஆனால் நான் ஆளுநராக இருக்கும் காலம் எவ்வளவோ, அதுவரை சமுதாயத்தின் விளிம்பிலே உள்ள மக்களுக்காக சேவை புரிய நான் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன்” என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com