Saturday, January 12, 2019

மேலும் மூன்று வீதிகள் வெகு விரைவில் கையளிக்கப்படும் - நிஹால் சூரியஆரச்சி

இந்த வருடத்தில் தெற்கு அதிவேக வீதியின் மூன்று வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் அதிவேக வீதிக்கட்டமைப்பில் மேலும் 145 KM அதிகரிக்கப்படவுள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான 96 KM பகுதி, இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் 30 KM நீளம் கொண்ட மாத்தறையிலிருந்து பெலிஅத்த வரையான பகுதி, எதிர்வரும் ஜூலை மாதம் மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது. சீனாவை சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிவேக வீதியில், ஹம்பாந்தோட்டை வரையான பகுதியில் 6 பிரதான நுழைவாயில்கள் அமையப்பெற்றுள்ளன. கடந்த 2016 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி அமைப்பு தொடர்பான பணிகளின் தொடர்ச்சியாக, கொழும்பு வெளியேற்றத்திற்கான சுற்றுவட்ட வீதிக்கட்டமைப்பின் நிர்மாணப்பணிகள், இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதன் இறுதிக்கட்டமாக கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையான 9.63 KM பகுதி எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் நிறைவு செய்யப்படவுள்ளது. அத்துடன் இந்த சுற்று வட்ட நிர்மாண பணிகள் நிறைவடைந்ததன் பின், தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதி ஆகியன இணைக்கப்படவுள்ளன. மேலும் மத்திய அதிவேக வீதியின் கடவத்தை நுழைவாயிலும் இதற்கமைய நிறைவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட பணிகளாக மீரிகமவிலிருந்து குருநாகல் வரையுள்ள 40 KM வீதியின் நிர்மாணப்பணிகள், இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. 140 பில்லியன் ரூபா செலவில் நடைபெறும் இந்த நிர்மானப்பணிகளை 15 உள்நாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம், இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும், முதற்கட்டம் நிறைவு செய்யப்படும் காலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com