Friday, January 11, 2019

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்ட பிரதான இடம் நீக்கப்படுமா ? - விளக்குகிறார் பிரதமர்.

புதிய அரசியல் யாப்பின் மூலமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த பயன்கள் கிட்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ அல்லது பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ, புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணய சபை இன்று காலை 10 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் தலைமையில் கூடியது. இந்த சபையில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார்.

நாட்டின் ஒற்றையாட்சியை, பாதுகாப்பதற்கு அதன் புதிய அரசியல் யாப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒரே நாட்டிற்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது, தேர்தல்முறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசியல் யாப்பின் மூலமாக பௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு எந்தவித யோசனைகளும் இல்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக, சிலர் முன்வைக்கும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெகு விரைவில், நாட்டு மக்களுக்கு புதிய அரசியல் யாப்பின் மூலம் பல பயன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com