Saturday, January 26, 2019

புதிய அரசியல் யாப்பு இத்தருணத்தில் தேவையற்றது. உலக இலங்கையர் பேரவையினரிடம் மகாநாயக்கர்கள்.

இன்று காலை மாகா சங்கத்தினரைச் சந்தித்துள்ள உலக இலங்கையர் பேரவையினரிடம் இத்தருணத்தில் புதிய அரசியல் யாப்பொன்று இலங்கைக்கு அவசியமற்றது என மாகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தின் பிரதம பீடாதிபதி வறக்காகொட ஸ்ரீ ஞானரட்ண தேரர் மற்றும் மெதகம தம்மானந்த தேரர் ஆகியோரை சந்தித்து நாட்டின் நிலைமைகள் தொடர்பில் பேசியுள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த தேரர்கள், நாட்டில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவருவதற்கான அவசரம் ஒன்று தற்போது இல்லை. செய்யவேண்டியுள்ளது யாதெனின் வேலைகளாகும். இந்நாட்டின் சில பகுதிகளில் நாம் எமது விகாரைகளைக்கூட புனரமைக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். ஆனால் அவர்கள் அந்தப் பகுதியில் எதுவேண்டுமோ அதைச் செய்து கொள்கின்றார்கள்.

இன்னுமொரு தரப்பினர் சில நாட்களுக்கு முன்னர் புத்தரின் சிலைகளை உடைத்து மிதவாத நோக்குடன் எம்மை ஆத்திரமூட்டினார்கள். இவர்கள் இந்த நாட்டில் ரத்த களரி ஒன்றை உருவாக்க நினைக்கின்றார்கள்.

அண்மையில் வடக்கிற்கு நியமனமாகியிருந்த ஆளுனர் கூட விகாரைகளை புனருத்தாருனம் செய்ய முடியாது என்று கூறியிருக்கின்றார். இந்நாட்டிலே சங்கைக்குரிய தேரர்களால் தங்களது வழிபாட்டு ஸ்தலங்களை புனருத்தாருனம் செய்யமுடியாது என்றால், சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக எம்மால் திருப்தியடைய முடியாது என்று தெரிவித்துள்ளனர் அஸ்கிரிய பிடத்தினர்.

மேலும் புதிய அரசியல் யாப்பு ஒன்றை பற்றி பேசுகின்றார்கள், அதை அவர்களால் செய்ய முடியுமாக இருந்தால் நல்லது. ஆனால் அவர்கள் அதை பக்கசார்பாக செய்கின்றார்கள் என்பது பிரச்சினையாகும் என மல்வத்து பீடத்தின் திம்புல்கும்புரே விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com