Monday, April 25, 2016

ஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி. செ.கார்கி

அரசியலில் நாம் எவ்வளவோ வக்கிரம் பிடித்த பேர்வழிகளை எல்லாம் பார்த்திருக்கின்றோம். எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை அவர்களின் கடந்த கால செயல்பாடுகளைச் சொல்லி சில பேர் விமர்சிப்பார்கள், சில பேர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாக்கி விமர்சனம் செய்வார்கள். ஆனால் யாரும் தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை இழிவுபடுத்த மாட்டார்கள். ஒரு கட்சியின் பலம் என்பதே அந்தத் தொண்டர்கள் தான்.

ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தரும் நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை நம்பி தொண்டர்கள் இந்த முறையாவது தமது வாழ்க்கையில் நல்லது ஏதும் நடக்காதா என எதிர்பார்ப்போடு வாக்களிக்கின்றனர். வழக்கம் போல அவர்கள் ஏமாற்றப்படும் போதும் கட்சியின் மீது கொண்ட தீவிர விசுவாசத்தால் தன்னுடைய தலைவரின் பெயர் கெட்டு விடக்கூடாதே என தான் ஏமாந்தாலும் தலைவனின் மானத்தைக் காப்பாற்ற மல்லுக்கட்டும் பல தொண்டர்களை இன்னமும் நீங்கள் பார்க்கலாம். தொண்டர்களின் இந்த வெள்ளந்தியான மனம் தான் அரசியல் தலைவர்களை இன்னமும் இங்கு செல்வாக்கோடு வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது.

நம்மைப் போன்ற குறைந்த பட்ச அரசியல் அறிவு உள்ளவர்கள் தலைவன் தப்பு செய்தான் என்றால் அவனை ஏகத்துக்கும் எடுத்து எறிந்து பேசிவிடுவோம். ‘போடா நீயும் உன் கட்சியும்’ என தூக்கி எறிந்துவிட்டு ஒத்துவரும் கட்சியில் ஐக்கியம் ஆகிவிடுவோம். ஆனால் காலங்காலமாக தலைவனின் முகத்திற்காகவும் அவன் எப்போதோ செய்த ஏதோ ஒரு நல்லதிற்காகவும் அவனை இன்னும் அன்போடு நினைத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான அரசியல் அற்ற மக்கள், தலைவன் என்னதான் ஊழல் செய்தாலும் ஊதாரித்தனம் செய்தாலும் அதை பெரிது படுத்தாமால் அதே கட்சியிலேயே கடைவரை தன்னுடைய உயிர் மூச்சு அடங்கும் வரை காலத்தை தள்ளுகின்றனர். இது போன்ற மக்களை உலகின் வேறு பகுதியில் எங்காவது பார்க்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் தமிழ்நாட்டில் நாம் பார்க்க முடியும்.



தனக்குப் பிடித்த தலைவியின் பேச்சைக் கேட்க மாட்டோமா, அவரை நேரில் ஒருமுறையேனும் வாழ்க்கையில் பார்க்க மாட்டோமா என தன்னுடைய குடும்பப் பிரச்சினை, வேலை என அனைத்தையும் ஒரு நாள் தள்ளிவைத்துவிட்டு கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்துதரும் மினி ஆட்டோக்களிலும், லாரிகளிலும் ஆட்டு மந்தைகளைப்போல ஏறிக்கொண்டு மகிழ்ச்சியில் ஏதோ சுற்றுலாவுக்குப் போகும் மனநிலையில் வரும் அந்தத் தொண்டனை ஒரு கட்சியின் தலைவி எப்படி நடத்தியிருக்க வேண்டும்? ஒன்றுமே இல்லாமல் அன்னக்காவடியாக, ஆட்டக்காரியாக தமிழகம் வந்த தன்னை இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக்கிய அந்த அரசியலற்ற அற்பப் பிறவிகளை, உள்ளங்களையில் வைத்தல்லவா தாங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் அவர்களை ரத்தமும் சதையும் உணர்ச்சிகளும் உள்ள ஒரு மனிதப் பிண்டமாகவேனும் கருதியிருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் நாம் இதையெல்லாம் யாரிடம் இருந்து எதிர்பார்க்க முடியும்? குறைந்த பட்ச நேர்மையையாவது தம்வாழ்நாளில் கடைபிடிக்கும் ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால் ஆண்டாண்டு காலமாக ஊறிப்போன பார்ப்பனத் திமிரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மிருகத்திடம் இருந்து இதை நாம் எப்படி எதிர்பார்க்க முடியுமா? சுயமரியாதை அற்ற, முதுகெலும்பற்ற கூழைக்கும்பிடு போடும் ஒரு அடிமைக் கூட்டத்தை தன்னுடைய பரிவாரமாகக் கொண்டிருக்கும், சாமானிய மக்களை தான் கொடுக்கும் நூறு ரூபாய்க்கும், பிரியாணிக்கும், ஆசைப்பட்டுவரும் பஞ்சை பராரிகளாக பார்க்கும், கொழுத்துப்போன பணத்திமிரில் ஆட்டம் போடும் ஒரு மனநோயாளியிடம் இருந்து இதை நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த உலகத்தில் தான் மட்டுமே வாழ்வாங்கு வாழ்வதற்குத் முழுத் தகுதியானவள்; மற்ற அனைவரும் தான் அப்படி வாழ்வதற்காக குற்றேவல் புரிய கடவுளால் படைக்கப்பட்டவர்கள் எனக் கருதும் ஒரு சுயமோகிதான் இந்த மனநோயாளி ஜெயலலிதா. அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அனைவரும் அதற்காக வேதனைப்பட வேண்டும்; அவர் சிறைக்குச் சென்றால் அவரது தொண்டர்கள் தீக்குளிக்க வேண்டும்; பொதுமக்களை கடைகளை மூடச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும்; பேருந்துகளை எரிக்க வேண்டும்; முடிந்தால் உள்ளே இருக்கும் மாணவிகளையும் சேர்த்தே எரிக்க வேண்டும்; கோவிலில் பால்குடம் எடுக்க வேண்டும்; அலகு குத்திக் கொள்ள வேண்டும்; மண்சோறு தின்க வேண்டும்; மொட்டை போட்டுக் கொள்ள வேண்டும்; மீசை எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கெல்லாம் ஜெயலலிதாவிற்குத் தொண்டர்கள் வேண்டும்; கழகக் கண்மணிகள் வேண்டும். மற்றபடி தன்னுடைய வேலை முடிந்துவிட்டதென்றால் அவன் எக்கேடு கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன என்பதுதான் ஜெயலலிதாவின் மனுநீதி!

தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் அடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தன்னுடைய தேர்தல் பரப்புரையை வேண்டுமென்றே மதியம் 3 மணிக்கு ஜெயலலிதா வைக்கின்றார் என்றால், தன் தொண்டர்களைப் பற்றி என்ன மாதிரியான எண்ணத்தில் ஜெயலலிதா இருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். வெயில் 104 டிகிரி முதல் 106 டிகிரி வரை இருப்பதால் மதியம் 12 மணி முதல் 3 மணிவரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பல மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். தினமும் நாளிதழ்கள் கூட படிக்காத, நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத, யாரோ எழுதிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல அப்படியே பேசும் ஜெயலலிதாவிற்கு இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்?

தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை மறந்து ஒரு மகாராணியைப்போல ஹெலிகாப்டரில் வந்து, குளுகுளு வசதி செய்யப்பட்ட மேடையில் அமர்ந்து, அதுவும் மனுதர்ம சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட மேடையில் அதாவது பார்ப்பனன் உயர்ந்த இடத்திலும் சூத்திரன் கீழ்நிலையிலும் உள்ளது போன்று அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து ‘மக்களுக்காக நான்’, மக்களால் நான்’ என ஏதோ சினிமா பட பாணியில் பிதற்றும் இந்த சர்வாதிகாரியின் பேச்சுக்கு உச்சி வெயிலில் மண்டையைப் பிளக்க அரைமயக்கத்தில் அமர்ந்துகொண்டு மக்கள் கைதட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடுமை வேறு எங்காவது நடக்குமா?




ஜெயலலிதாவின் இந்த கேவலமான கேடுகெட்ட பேச்சை கேட்பதற்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்த தொண்டர்கள் ஏறக்குறைய ஐந்துபேர் இதுவரை இறந்துள்ளனர். விருத்தாசலத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பரப்புரையின் போது மூன்று பேரும், 20-ம் தேதி சேலத்தில் நடந்த பரப்புரையின் போது இரண்டுபேரும் வெயிலின் கடுமை தாங்காமல் இறந்துள்ளனர். ஆனால் இந்த மரணங்கள் எல்லாம் ஜெயலலிதா என்ற பாசிச மனநோயாளியின் மனதை மாற்றிவிடப் போதுமானவை அல்ல.

ஜெயலலிதாவைப் பொருத்தவரை அடுத்தவனின் உயிரை எல்லாம் கிள்ளுக்கீரையாக நினைப்பவர். 1992 ஆம் ஆண்டு மகா மக குளத்தில் ஜெயலலிதா குளிக்கச் சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 60 பேர் பலியானார்கள். அப்போதும் அதே அலட்சிய மனநிலையில்தான் ஜெயலலிதா இருந்தார்; இப்போதும் அதே அலட்சிய மனநிலையில் தான் இருக்கின்றார். அதனால் தான் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இறந்தவர்கள் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டார்கள் என அவரால் பேச முடிகின்றது.

தமிழ்நாட்டில் 2011 முதல் 2015 வரை 9948 கொலைகள் நடந்துள்ளன; மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான கொள்ளையும் மற்றும் திருட்டுச் சம்பவங்களும் நடந்துள்ளன என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஜெயலலிதவோ தமிழ்நாடு ‘அமைதிப் பூங்காவாக’ இருப்பதாக சொல்கின்றார். ஜெயலலிதா போன்ற பாசிச வக்கிரம் பிடித்த மனநோயாளி இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டார் என்றால் நிச்சயம் தமிழ்நாடு முழு ‘அமைதிப் பூங்காவாக’ மாறிவிடும். ஆம் நிச்சயம் ‘அமைதிப் பூங்காவாக’ மாறிவிடும்.

- செ.கார்கி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com