Saturday, June 7, 2014

கண்டி திகனயில் புதிய விமான நிலையம் !!!

கண்டி திகன பிரதேசத்தில் ஓடுபாதையுடனான விமானதளம் ஒன்று அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படையின் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். இலங்கையின் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கியதாகவே விமானத்தளங்கள் அனைத்தும் உள்ளன. மலையக பிரதேச த்தில் இது வரை எந்த ஒரு விமான தளமும் கிடையாது. இந்தக் குறையை நிவர்த்தி செய்து மலையகப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தில் அதன் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தலைமையில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் விமானப் படை பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்- இலங்கையில் மொத்தமாக 15 விமானங்கள் உள்ளன அவற்றுள் வவுனியா மற்றும் பாலாவியை தவிர்ந்த ஏனைய 13 தளங்களுக்கும் விமானப்படையின் விமானங்களுக்கு மேலதிகமாக பொது மக்களின் நலன் கருதி தனியார் விமான சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.

சிவில் விமான சேவைகள் ஊடாக உள்ளுர் விமான சேவைகளை மேம்படுத்தி பொது மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் நன்மையளிக்கும் நோக்குடன் விமானத் தளங்கள் விஸ்தரிக்கப்பட்டும் புதிதாக உருவாக்கப்பட்டும் வருகிறது. நாட்டிலுள்ள சகல விமான தளங்களுக்குமான வான் போக்குவரத்து வசதிகளை சிவில் விமான சேவைகள் அதிகார சபையே மேற்கொண்டு வருகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை விமான ஓடு பாதை உட்பட நிர்மாண பணிகளை மேற்கொண்டு வருவதுடன் விமானப் படை முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன. அதன்ஓர் அங்கமாகவே திகனயில் விமான தளத்தை அமைக்கும் பணிகளை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

எம் ஏ. 60 ரக விமானங்களை தரையிறக்கும் வகையிலேயே 1200 மீற்றர் நீளமான திகனயில் விமான ஒடுபாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்றே மட்டக்களப்பு விமானத் தளமும் விஸ்தரிக்கப்பட்டு வருவதுடன் இவ்வாண்டு செப்டம்பர் மாதமளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மட்டக்களப்பு மற்றும் பாசிக்குடா பிரதேசத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் நன்மையடையவுள்ளனர். அரசுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன் சிவிலியன்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என்று விமானப் படைப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com