Sunday, February 2, 2014

7 கொலைகளை செய்து ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிக்கு மாலை சூடிய பெண் வக்கீல்.

அவர் கைதியாக இருக்கலாம். அவரைத்தான் நான் காதலிக்கிறேன். கல்யாணமும் பண்ணிக்க போறேன். திருமணத்துக்காக அவருக்கு ஒரு நாள் மட்டும்தான் விடுமுறை வழங்கி இருக்கிறார்கள். கல்யாணத்துக்கு ஒரு நாள் போதுமா? ஒரு மாதமாவது வேண்டாமா? இவ்வாறு இந்திய நீதி மன்றில் மன்றாடியிருக்கின்றால் 30 வயதுடைய வக்கீல் அருணா.

அருணாவுக்காக வக்கீல் ராதாகிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் அருணாவின் குரலாக ஐகோர்ட்டில் வாதிட்டனர்.

நிமிர்ந்து பார்த்த நீதிதேவன், (நீதிபதி) கைதியின் டைரியை ஆராய்ந்தார். காதல் வயப்பட்டு கெஞ்சி நிற்கும் இளம்பெண் வக்கீலின் கோரிக்கையையும் கனிவுடன் பார்த்தார்.

திருமணத்துக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்குவது போதாது என்று முடிவு செய்கிறோம். 10 நாள் விடுமுறை வழங்குகிறோம் என்றார். தீர்ப்பை கேட்ட அருணாவுக்கு இதயம் இனித்தது. கோர்ட்டு உத்தரவுப்படி புழல் சிறையில் கைதியாக இருந்தவர் புது மாப்பிள்ளையாக பறந்து வந்தார்.

வியாசர்பாடியில் மாப்பிள்ளை வீடு களை கட்டியது. வீட்டை சுற்றி போலீஸ்... வழக்கமாக மாப்பிள்ளை வீட்டார் இப்படி போலீசை பார்ப்பது புதிதல்ல.

அடிக்கடி போலீசார் தாட்... பூட் என்று வருவார்கள். வீட்டுக்குள் புகுந்து ‘எங்கே அவன்...?’ என்று ஆக்ரோஷத்தில் மிரட்டி கேட்பார்கள். ‘திக்... திக்...’ என்ற பதட்டத்துடனேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழிப்பார்கள்.

ஆனால் நேற்று அவர்களுக்கு எல்லாம் புதுமையாக தெரிந்தது. கைதி, மாப்பிள்ளை தோரணையில் வீட்டுக்குள் இருக்க... அவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் வீட்டை சுற்றி காவலுக்கு நின்றனர்.

மாப்பிள்ளை ‘ஸ்மார்ட்டாக’ இருக்க வேண்டும். அடிதடிக்கு போகாமல், தண்ணியடிக்காமல், கண்ணுக்குள் வைத்து நம்மை காப்பவனாக... மொத்தத்தில் அவர் ஒரு மன்மதன் போல் இருக்க வேண்டும் என்பதுதான் இளம்பெண்களின் கனவாக இருக்கும்.

ஆனால் சட்டம் படித்த, உலகம் புரிந்த அருணாவுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு ஆசை வந்தது...?

காதல்!

அதுதான் ரவுடி, வக்கீல் என்ற போர்வைகளை தாண்டி இருவரது இதயங்களுக்குள்ளும் புகுந்து விட்டது. அதுதான் மணமேடை வரை இழுத்தும் வந்துள்ளது.

சோமு என்ற சோமசுந்தரம் (48). இவர் பெயரை கேட்டாலே சென்னையே சும்மா அதிரும்!

வியாசர்பாடி பி.வி. காலனி 9–வது தெருவை சேர்ந்த சோமுவுக்கு சின்ன வயதிலேயே அடி–தடி என்றால் அலாதி ஆசை.

அந்த ஆசையால் பிரபல ரவுடி சேரா கூட்டத்தில் இணைந்து கொண்டார். அரிவாள், கத்தியுடன் எதிரிகளை வெட்டுவது குத்துவது இவருக்கு தனி ‘ஸ்டைல்’.

இதனால் எதிரிகளின் தலை உருண்டது. சிலரது உடல் ரணமானது. இப்படி அரங்கேறிய தாக்குதல் விளையாட்டால் எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, செங்குன்றம், எண்ணூர், நுங்கம்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் சோமுவுக்கு தனி ‘பைல்’ உருவாக்கப்பட்டது. 7 கொலை வழக்கு, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வெடி குண்டு வீச்சு என்று ஒவ்வொரு வழக்கும் ‘திரில்’ நிறைந்ததாக அமைந்தது.

சோமுவின் மீதான வழக்குகளை நடத்தி வரும் வக்கீலிடம் தான் அருணா (30) ஜூனியர் வக்கீலாக பணியாற்றுகிறார். வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், விவாதிக்கவும் அருணா அடிக்கடி ஜெயிலுக்கு சென்று சோமுவை சந்தித்தார்.

அப்போது, அவர் ரவுடியான கதை, ஒவ்வொரு வரையும் போட்டுத்தள்ள காரணம், வழக்குகளில் சிக்கி வாழ்க்கையை தொலைத்த கதை அனைத்தையும் அருணாவிடம் மனம் திறந்து பேசினார்.

ரவுடி என்ற போர்வைக்குள் மறைந்து இருந்த இதயம் அருணாவை ஈர்த்தது. அதுவே காதலாக மலர்ந்தது.

காதலுக்கு கண் இல்லை என்பது இவர்கள் வாழ்க்கையில் ஒரு வகையில் உண்மையே!

சோம சுந்தரத்தை ஒரு சுந்தர புருஷனாக மாற்றி காட்டுவேன் என்று அருணா மனதுக்குள் சபதம் ஏற்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைப்பறவையாக அடைந்து கிடந்த சோமுவை காதல் பறவை அருணா கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்.

பத்து ஆண்டுகளாக சிறைக்குள் இருக்கும் சோமு சிறைக்குள் எந்த விதமான வம்பு தும்பிலும் ஈடுபடவில்லை. ‘நல்லபிள்ளை’ என்ற பட்டம் ஜெயிலுக்குள் கிடைத்தது.

இந்த பட்டம்தான் திருமணத்துக்கு 10 நாள் விடுமுறையை பெற்று கொடுத்தது.

விடுமுறையில் வீட்டுக்கு வந்த சோமுவிடம் ஏற்பட்டு இருந்த மாற்றத்தை பார்த்து உறவினர்கள் அதிசயித்து போனார்கள். நம்ம சோமுவா இப்படி...? என்று நெற்றியில் கை வைத்து பெண்கள் தனக்கு தானே திருஷ்டி கழித்து கொண்டார்கள்.

எப்போதும் ரவுடிகள் மிரட்டல்... போலீஸ் தொந்தரவு என்று சோகங்களை கட்டி காணப்படும் சோமுவின் வீடு நேற்று அலங்கார மின்விளக்கு வெளிச்சத்தில் எல்லோருக்கும் சுகமான அனுபவத்தை கொடுத்தது.

இன்று காலையில் பொழுது புலர்ந்ததும் முதல் முறையாக பட்டு வேட்டி கட்டி மாப்பிள்ளை கோலம் பூண்டார் சோமு.

போலீஸ் பாதுகாப்புடன் வியாசர்பாடி பி.வி.காலனியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர்– அங்காளேஸ்வரி கோவிலுக்கு வந்தார். மணப்பெண் அருணாவும் பட்டு சேலை சரசரக்க மண மேடைக்கு வந்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் மணமேடையை சுற்றி நிற்க... வேத மந்திரங்கள் முழங்க காலை 8.50 மணிக்கு அருணா கழுத்தில் சோமு தாலி கட்டினார்.

போலீஸ் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கெடுபிடியால் பத்திரிகையாளர்கள் மணமேடையை நெருங்க முடியவில்லை.

திருமணம் முடிந்த பிறகும் யாரும் புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காக குடைகளை கொண்டு முகத்தை மறைத்த படி புதுமண தம்பதிகள் காரில் ஏறி பறந்து சென்றனர்.

இன்னும் 10 நாளில் சோமு மீண்டும் ஜெயிலுக்கு செல்ல இருக்கிறார். இரண்டரை ஆண்டுகளில் தண்டனை காலம் முடிந்து புதுவாழ்வை தொடங்க வெளி வருவார்...

‘‘கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானது. கலைமகளே நீ வாழ்கவே! அவனே நினைத்தான் உறவை வளர்த்தான். இரண்டும் ஒன்றானது. திருமகளே நீ வாழ்கவே! ஆயிரம் காலமே வாழவே திருமணம்!’’.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com