Tuesday, November 26, 2013

ரோந்துப் பணிகளை மேற்கொள்ள இன்னும் பல கடற்படைப் படகுகள் தேவை: காலி கருத்தரங்கில் கோத்தபாய

கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நீலக்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள இன்னும் பல கடற்படைப் படகுகள் இலங்கை கடற்படைக்குத் தேவைப்படுவதாக, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று காலை ஆரம்பமாகிய, கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கரையில் இருந்து இன்னும் தொலைவில் செயற்படவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீலக்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் இன்னும் பல கடற்படைக் கப்பல்களை இலங்கை பெறவேண்டியுள்ளது.

ஏற்கனவே பல செல்வந்த நாடுகளிடம் இருந்து இத்தகைய கப்பல்களை தருமாறு கேட்டிருக்கிறோம்.

இந்தநிலையில், அடுத்த ஆண்டில் இரண்டு பே வகை ரோந்துப் படகுகளை அன்பளிப்புச் செய்யும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் முடிவை நன்றியுடன் வரவேற்கிறேன்.

இதன் மூலம், சட்டவிரோத ஆட்கடத்தல்களைத் தடுப்பதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும் முடியும்.
இலங்கை தனது தற்போதைய வெளிவிவகாரக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வர்த்தக நோக்கிலேயே சீனா உதவியுள்ளது.

அதனை, முத்துமாலை வியூகத்தின் கோர்ப்பாக தவறாக எடைபோடக் கூடாது. இலங்கை எப்போதுமே அணிசேராத- வெளிநாட்டுக் கொள்கையை கொண்டுள்ள நாடு.

நாம் தொடர்ந்து எமது துறைமுகங்களுக்கு வரும் எந்தவொரு நாட்டினதும், கடற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்களுக்கும் தேவையான விநியோக மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில், வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இலங்கைவுக்கு கிடையாது. இந்தியா எமது மிகப்பெரிய அண்டை நாடு. பிராந்தியத்தின் மிகவும் முக்கியமான நாடு.

எமது. கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் உறவுகள் வரலாற்று ரீதியானவை. அதேபோல சீனாவுக்கும் இலங்கைவுக்கும் இடையிலான உறவும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை.

இந்த இரண்டு நாடுகளுடனும், மிகப்பெரிய பரஸ்பர உறவுகளையும், நட்புறவையும் இலங்கை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இலங்கையின் அபிவிருத்தியின் முக்கிய பங்காளியாக சீனா விளங்குகிறது.

சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றிலும் வர்த்தக நோக்கிலானதே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com