கற்றலைத் தூண்டிய மாதத்தில் நூல் வெளியிடப்படுவதானது போற்றுதலுக்குரியதே! – தீனுல் ஹஸன் (பஹ்ஜி)
‘கற்றலைத் தூண்டிய மாதத்தில் இவ்வாறான மார்க்க நூல்கள் வெளியிடப்படுவதானது அபூர்வமானதும் போற்ற்ற்குரியதுமாகும்’ என சென்ற சனிக்கிழமை (13) வெலிகம, புதியதெரு, கொஹுனுகமுவ வீதியில் அமைந்துள்ள ரௌலத்துல் அத்பால் மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்ற பன்னூலாசிரியர் கலாபூசணம் வெலிகம எம். ஏ. ஹபீபுர் ரஹ்மான் தொகுத்த ‘அருள்மழை பொழியும் ரமழான்’ நூல் வெளியீட்டு விழாவின் போது சிறப்புரையாற்றிய காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபர் டப்ளியூ. தீனுல் ஹஸன் குறிப்பிட்டார்.
வெலிகம ஹப்ஸா மகளிர் அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘இக்ரஃ’ என்ற சொல் ஓதுவீராக, கேட்டு ஓதுவீராக, செவிமடுப்பீராக என்ற பலபொருள்களைத் தரக்கூடியது. இந்த இறைவசனம் தோன்றிய மாதம் இந்த ரமழான் மாதமாகும். இந்த மாதத்தில் நூலாசிரியர் இவ்வாறானதொரு புத்தகத்தை எங்களுக்குத் தந்திருப்பதாலும், மார்க்க அறிஞர்களை மையப்படுத்தி அவர்களின் பெரும்பாலானவர்களை மரியாதைப்படுத்தி அவர்களை இங்கு வரவழைத்திருப்பதும் நூலாசிரியரின் நன்னோக்கை நமக்கெல்லாம் எடுத்துக் காட்டுகின்றது.
நோன்பின் சிறப்புக்கள் பற்றி நாங்கள் பலரிடமும் கேட்டுள்ளோம்... பலரிடம் கேட்டுத் தெளிந்துள்ளோம்... இணையவழி நிறைய படிக்கின்றோம்... ஆனாலும் அவை அனைத்தும் எங்களுக்குள் களஞ்சியப்படுத்தப்படுவதில்லை. ஓரிரு நாட்களிலேயோ அல்லது ஓரிரு மாதங்களிலேயே அவை மறக்கடிக்கப்பட்டு விடும். அவற்றை மீண்டும் தேடுவது என்பது சிரம்மான காரியம். இங்கு அவை அனைத்தையும் ஒரு தொகுப்பு நூலாக்கி எம் கரங்களில் நூலாசிரியர் தந்திருக்கின்றார்.
எங்களது வீடுகளில் பல்வேறு நூல்கள் மேசைகளில் தேங்கி அடுக்கடுக்காய்க் கிடக்கின்றன. அவற்றில் ஒன்றையேனும் இங்கு வந்திருக்கின்றவர்களில் ஒருவரேனும் முழுமையாக வாசித்திருக்கின்றீர்களா? என்று உங்களுக்குள் சுய கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.... என்னிடமும் வாசிக்கப்படாத நூல்கள் உள்ளன.
வாசிப்பின் பால் ஆர்வமில்லாதவர்கள் இருக்கின்றார்கள்... வாசிப்பதையே மூச்சாக்க் கொள்பவர்கள் இருக்கின்றார்கள்.... பிறர் வாசிப்பதை மட்டும் கேட்பவர்களும், ஒலிப்பேழைகள் மூலம் கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். என்றாலும் நாங்கள் வாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். பிறரை வாசிக்கத் தூண்ட வேண்டும்.
ரமழான் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் கொடுக்கும் மாதமாகவே எங்களில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்... இல்லை நல்ல காரியங்களில் எங்களது பணத்தைச் செலவளிக்கலாம். நூலொன்றைப் படைப்பதென்பதும், தொகுப்பதென்பதும் பிரசவ வேதனை போன்றது. அதைப் படைப்பவனுக்குத்தான் அதன் வழி தெரியும்.
ஒரு நூலாசிரியனைத் தூக்கிவிடுவது மேலும் மேலும் நல்ல அறுவடைகள் வெளிவரக் காரணமாக அமையும். எனவே அவன் படைக்கின்ற நூல்களில் ஒன்றையே பலவற்றையோ நாம் கொள்வனவு செய்து அவனுக்கு அவனது பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பிச்சைக்கார்ருக்குக் கொடுக்கவென நம் செல்வந்தர்கள் வைத்திருக்கின்ற பணத்தில் ஒரு பகுதியை இவ்வாறான நூல்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தினால் அதனால் நிறைய நன்மைகள் கிடைக்கும். மார்க்கத்தைப் பரவச் செய்தலுக்கும் அது உதவும். அதுவும் தர்ம்மாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.
இனியேனும் வாசிப்பின்பால் ஆர்வமில்லாதவர்கள் வாசிப்பதற்கும், பிறருக்கு நூலின் பயன்கிடைக்கச் செய்வதற்கும் ஒவ்வொருவரும் நூலாசிரியரிடமிருந்து நூலைக் கொள்வனவு செய்து அவரின் மேலான பணியில் பங்கெடுக்குமாறு வேண்டுகிறேன். இறைவன் இவரது நற்பணியை அவனுக்காகச் செய்த பணியாக ஏற்றுக் கொள்வானாக’ எனக் குறிப்பிட்டார். விசேட கௌரவ அதிதிகளாக மார்க்க அறிஞர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் நூல் அறிமுகவுரையை காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் சிரேட்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.எம். ளபர் (பஹ்ஜி, மதனி) நிகழ்த்தினார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment